இரவில் தெரியும் சூரியன் குரு அரவிந்தன் ‘இந்த விடுமுறைக்கு அலஸ்கா போவோமா?’ என்று வீட்டுக்குள் அடைந்து கிடைந்த மனைவி கேட்ட போது நான் அதைப் பெரிதாக எடுக்கவில்லை. கோவிட் - 19 முடக்கமும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது. கண்டபடி வெளியே திரிவதைத் தவிர்த்திருந்தோம். ஆனாலும் இரண்டு தடுப்பூசிகளும் போட்டுக் கொண்ட தைரியத்தில், ‘போனால் என்ன’ என்று உள்மனசு தவித்தது. மூடியிருந்த அமெரிக்க – கனடிய எல்லை திறந்ததால் கனடியர்கள் அமெரிக்காவுக்குச் செல்லலாம் என்ற அறிவிப்பும் அப்போதுதான் வந்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணம் அலஸ்காதான் என்பதால் அதைப்பற்றி அறிந்து கொள்ளக் கணனியில் தேடிப்பார்த்தேன். கனடாவின் வடமேற்குப் பகுதியில்தான் அலாஸ்கா இருந்தது. இன்னுமொரு விடயம் எனது கவனத்தைக் கவர்ந்தது. அது என்னவென்றால் இப்போது ஒரு ஆடம்பரமான வீட்டை வாங்கக்கூடியளவு பணத்தைவிடக் குறைவான விலையில்தான் அந்தப்பெரிய நிலப்பரப்பை 7.2 மில்லியன் டொலர்கள் மட்டுமே கொடுத்து ரஸ்யாவிடம் இருந்து அமெரிக்கா அன்று வாங்கியிருந்தது. இன்னும் சில காரணங்களுக்காக, அதாவது பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவம், இரவில் தெரியும் சூரி...