Kankesanturai- Malini Aravinthan - Nov 2025

 




காங்கேசந்துறை

மாலினி அரவிந்தன்.

நான் யாழ்ப்பாணம், சுண்டுக்குளியில் பிறந்தாலும் நான் புகுந்த, கணவரின் ஊரான காங்கேசந்துறை பற்றி எழுதுகின்றேன். இது இலங்கையின் வடக்கே உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் உள்ள ஒரு துறைமுக நகரமாகும். ஆறு வட்டாரங்களைக் கொண்ட இந்த நகரம் வடக்கே பாக்குநீரிணை, கிழக்கே பலாலி விமான நிலையம், தெற்கே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், மேற்கே கீரிமலை நகுலேஸ்வரர் கோயில் போன்ற புகழ்பெற்ற இடங்களை எல்லையாகக் கொண்டது.

இலங்கையின் காங்கேசந்துறை நகரம் விமான, கப்பல், தொடர்வண்டி, பேருந்துப் போக்குவரத்தின் முக்கிய மையமாக விளங்குகின்றது. வடக்குத் தெற்காக யாழ்ப்பாணம்- காங்சேந்துறை வீதியையும் கிழக்கு மேற்காகக் கீரிமலை - பருத்துறை வீதிகளையும் கொண்டது. தலைநகர் கொழும்பு வரையிலான 256 மைல் கொண்ட தொடர்வண்டிப்பாதைச் சேவை இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது. காங்கேசந்துறையின் வடக்கே உள்;ள இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு 45 நிமிடத்தில் படகில் செல்லக்கூடியதாக இருக்கின்றது. காங்கேசந்துறைப் பகுதியில் புராதன கோயில்கள் அதிகமாக இருந்ததால், இந்த நகரத்தைச் சங்ககாலத்தில்; ‘கோயிற்கடவை’ என்றும், இங்கு முக்கியமான இறங்குதுறை இருந்ததால் ‘காசாத்துறை’ என்றும் அழைத்தார்கள். 

காங்கேசந்துறையின் கரையோரப்பகுதிகளில் மீனவர் குடும்பங்களும், மத்திய பகுதியில் அரசாங்க பணியாளர்களும், தெற்கு, கிழக்குப் பகுதிகளில் விவசாயிகளும் அனேகமாக வசிக்கிறார்கள். மேற்குப் பகுதி சுண்ணக்கல் நிறைந்த பிரதேசமாகையால் ‘காங்கேயன் சீமெந்து’ என்ற பெயரில் சீமெந்துத் தொழிற்சாலை ஒன்று இங்கே இயங்கியது. எல்லா இனத்தவர்களும், மதத்தவர்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பிரதேசமாகக் காங்கேசந்துறை இருக்கிறது. காங்கேசந்துறை பிரதான வீதியில் மாவிட்டபுரத்தில் பழமைவாய்ந்த ஒரு சுமைதாங்கியும், நாச்சிமார் கோயில் கேணிக்கு அருகே ஆவுரஞ்சிக்கல் ஒன்றும் இருந்தது. மாவிட்டபுரம் வெற்றிலைக்குப் பெயர் பெற்றது.

உள்நாட்டு யுத்தத்தின் காரணமாக 1983 ஆம் ஆண்டு இப்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டதால், இங்கு அமைதியாக வாழ்ந்த சுமார் 25,000 குடும்பங்கள் இதனால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்கள். சுமார் 6000 ஏக்கர் நிலம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சுமார் 40 வருடங்களாகக் காங்கேசந்துறையின் பெரும்பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் அவர்களின் மத வழிபாட்டுப் பௌத்த ஆலயங்கள் ஆங்காங்கே புதிதாகக் கட்டப்பட்டிருப்பதை இப்போது அவதானிக்க முடிகிறது.

காங்கேசந்துறையில் உள்ள 72 அடி உயரமான எண்கோண கலங்கரைவிளக்கம் 1893 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. காங்கேசந்துறையின் பழைய துறைமுகம் கலங்கரைவிளக்கின் கிழக்குப் பக்கத்தில் போத்துக்கேயரின் கோட்டை அத்திவரத்திற்கு நடுவே இருந்தது. இராணுவத்தால் நடத்தப்படும் ‘தல்சேவன’ என்ற ஹோட்டல் இங்கிருந்த பழைய விருந்தினர் விடுதியை இடித்து 2010 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கின்றது. 1950 ஆண்டு கட்டப்பட்ட சீமெந்துத் தொழிற்சாலை இலங்கை இராணுவத்தின் பிரசன்னம் காரணமாக 1990 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனால் சுமார் 2500 பணியாட்கள் தொழிலை இழந்தார்கள். 

8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியால் புனருத்தாரணம் செய்யப்பட்ட மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயிலும், நகுலமுனிவரால் வணங்கப்பட்ட பஞ்ச ஈசுவரங்களில் ஒன்றான நகுலேஸ்வரமும், கண்டகித் தீர்த்தமும், மாருதப்புரவீகவல்லியால் அமைக்கப்பெற்ற ஏழு பிள்ளையார் கோயில்களும் வரலாற்றுப் புகழ்மிக்கன. சோழ இளவரசி மாருதப்புரவீக வல்லியின் குதிரைமுகநோய் நீங்கிய தலம் என்பதால்  மா - விட்ட- புரம் என்று இத்தலம் பெயர் பெற்றது. இங்கு அருள் பாலிக்கும் கந்தசுவாமி (காங்கேயன்) வந்து இறங்கிய துறை என்பதால், ‘காங்கேசந்துறை’ என்ற பெயர் பெற்றது. 

மாருதப்புரவீகவல்லியால் கட்டப்பட்ட கோயிற்கடவை கந்தனின் இராஜகோபுரம் போத்துக்கேயரால் இடிக்கப்பட்டு காங்கேசந்துறையில் கோட்டை கட்டுவதற்கு அத்திவாரமிடப்பட்டது. ஊர் மக்களின் கடுமையான எதிர்ப்புக் காரணமாக அவர்களால் இங்கே கோட்டை கட்ட முடியாமல் போனது. மீண்டும் 17 ஆம் நூற்றாண்டில் இப்போது இருக்கும் இராஜகோபும் அதேபோலக் கட்டப்பெற்றது. இப்பகுதியில் இருந்த இந்துக் கோயில்கள் எல்லாம் விமானப்படையால் குண்டுவீசித் தாக்கப்பட்டபோது இந்தக் கோபுரமும், நகுலேஸ்வரர் கோபுரமும், இங்குள்ள புராதனகாலத்து ஆலயமான குருநாதசுவாமி கோயிலும், நாச்சிமார் கோயிலும் பாதிப்புக்கு உள்ளாகினாலும், தற்போது மீண்டும் கட்டி எழுப்பப்பட்டிருக்கின்றன.

இதைவிட நரசிம்ம வயிரவர், கசாத்துறை பிள்ளையார், நாச்சிமார் கோயில், கூத்தியவத்தை பிள்ளையார், செல்லப்பிள்ளையார், மாங்கொல்லை ஞானவைரவர், கிருஸ்ணர் கோயில், காளி கோயில், அம்மன் கோயில், வைரவர் கோயில் போன்ற பல இந்துக் கோயில்களும் இங்கே உண்டு. கீரிமலையைப் போலவே, கடற்கரை ஓரத்தில் கிருஸ்ணர் கோயிலுக்கு அருகே அமைந்துள்ள ‘சடையம்மா மடம்’ பிதிர்க்கடன்களை நிறைவேற்றுவதற்கு மிகவும் பிரபலமானது. 

இங்குள்ள 125வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நடேஸ்வராக் கல்லூரி மிகவும் பிரபலமானது. சுமார் 1500 மாணவர்கள் கல்விகற்ற உயர்தர வகுப்புகளைக் கொண்ட நடேஸ்வரக்கல்லூரியும் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து, மீண்டும் பழைய இடமான கல்லூரிவீதிக்கே திரும்பி வந்துவிட்டது. இதைவிட ரோமன் கத்தோலிக்க பாடசாலை,  தையிட்டி கணேச வித்தியாலயம், வீமன்காமம் மகா வித்தியாலயம், நகுலேஸ்வரா வித்தியாலயம் போன்ற பள்ளிகளும் இங்கே இயங்கின. 

‘திருவள்ளுவருரைத்த செய்யுட் பயனைப்

பெருகநினைந் தச்சமறப் பேசி முருகுமலர்ச்

சோலைப் பசுங்கிளியே சொல்லுங் குருநாதர்

மாலைதனை நீவாங்கி வா.’

என்று ஒல்லாந்தர் காலத்தில், அதாவது 1656 ஆம் ஆண்டு சுண்ணாகத்தில் பிறந்த வரதபண்டிதர் ‘குருநாதர் கிள்ளைவிடு தூது’ என்ற தனது நூலில் வரலாற்றுப் புகழ் பெற்ற குருநாதர் சுவாமி கோயிலைப் பற்றிப் பாடியிருக்கின்றார். 

எங்கள் ஊரில் ‘என்ன பறையிறாய்?’ உவன், உவள், உவர், உது, உவை, உங்கை  போன்ற சில முன்னிலைச் சுட்டுச் சொற்களும் கேளுங்கோ, கதையுங்கோ, கதிரை, ஒழுங்கை, பேந்து, திகதி போன்ற சில சொற்களும் பேச்சுவழக்கில் இருக்கின்றன..

காங்கேசந்துறை – நாகபட்டினம் கப்பல் சேவை ஆரம்பித்ததால் இப்பொழுது கடல் வழியாகப் பயணிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதே போல பலாலி விமான நிலையத்தில் இருந்து இரத்மலானை, சென்னை, திருச்சி ஆகிய இடங்களுக்கும் விமான சேவைகளும் இடம் பெறுகின்றன.

யாழ் திரையரங்கு, இராசநாயகி திரையரங்கு என்று இரண்டு திரையரங்குகள் இங்கே இருந்தன. நீண்ட காலமாக இயங்கிவந்த அரச மருத்துவமனை சீமெந்துத் தொழிற்சாலைச் தூசு காரணமாக தெல்லிப்பளைக்கு மாற்றப்பட்டது. டாக்டர் நிற்சிங்கம், டாக்டர் இராசேந்திரா, டாக்டர் சீனிவாசகம், டாக்டர் வரப்பிரசாதம், பரியாரிமாமி போன்றோரது தனியார் மருத்துவ மனைகள் தொடர்ந்து இயங்கின. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகமும் விரிவாக்கம் செய்யப்பட்டது. 

கலை, இலக்கிய, ஊடகத்துறையைச் சேர்ந்த பலர் பிரபலமாக இருந்தனர். எனக்குத் தெரிந்த சிலரை மட்டும் இங்கே குறிப்பிடுகின்றேன். எழுத்தாளர் குறமகள் வள்ளிநாயகி இராமலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தன், நாடக கலைஞர் வி.வி. வைரமுத்து, இசைக்கலைஞர் நாகமுத்து. நா. ரகுநாதன், கீதவாணி இராஜ்குமார், செந்தாமரை ராஜி அரசரத்தினம், வீணை மைந்தன் தெ. சண்முகராஜா, கோதை அமுதன், பூங்கொடி அருந்தவநாதன், ரூபவாகினி கலைஞர் பி. விக்னேஸ்வரன், பி. ஞானேஸ்வரன், கனி விமலநாதன், திரையிசைப்பாடகி சுமங்கலி அரியநாயகம், நடனக் கலைஞர்களான பத்மினி, மல்லிகா நாகலிங்கம், கௌசல்யா, முருகையா அருள்மோகன், நாதஸ்வரக் கலைஞர் உருத்திராபதி, எழுத்தாளர் தையிட்டி இராசதுரை, கவிஞர் உதயகுமார், எழுத்தாளர் முரளிதரன், நாடகக் கலைஞர் கருணானந்தசிவம், பண்டிதர் மகாலிங்கசிவம், புலவர் பார்வதிநாதசிவம், தமிழருவி த. சண்முகசுந்தரம், திருமதி சிங்கராசா, நவநீத கிருஸ்ண பாரதி, இராஜேஸ்வரன் முத்துக்குமாரு, கவிஞர் ராகவன் குமாரகுலசிங்கம் ஆகிரோரைக் குறிப்பிடலாம். எங்கள் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய பல மாவீரர்களைத் தந்து தியாகம் செய்த பெருமை எங்கள் ஊருக்கு உண்டு.



 





Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper