History - தென்குமரி தேம்புகின்றாள்
தென்குமரி தேம்புகின்றாள்
(குரு அரவிந்தன்)
படுக்கையில் கிடந்த அப்பா அதிர்ச்சியோடு என்னைப் பார்த்தார். இப்படி ஒரு கேள்வியை அவர் என்னிடம் எதிர்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல இப்படி ஒரு கேள்விக்கு இப்போ என்ன அவசியம் என்பதையும் அவரது பார்வை உணர்த்தி நின்றது.
‘அப்பா நாங்கள் யார்?’ என்றுதான் நான் அவரிடம் கேட்டிருந்தேன்.
புலம்பெயர்ந்த மண்ணில், முகவரி இழந்த நிலையில் அல்லற்படும் எனக்கு இந்தக் கேள்வி அவசியமாகப் பட்டது.
அப்பாவிற்குத் திடீரென ஏதாவது ஆகிவிடலாம் என்ற பயமே என்னைக் கேள்வி கேட்கவைத்தது. எனது அடுத்த தலைமுறைக்கு நாங்கள் யார் என்பதைத் தெளிவு படுத்த வேண்டிய கடற்பாடும் இந்தத் தலைமுறையில் இருந்த எனக்கிருந்தது.
எனது கவலையீனத்தால் இனி வரும் தலைமுறையினர் முகவரி அற்றவர்ளாகி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.
எனது அதிர்ச்சிக்குக் காரணமிருந்தது. தமிழர் பாரம்பரியமாக வாழ்ந்த நூற்றுக்கணக்கான இடங்களின் பெயர்கள் இலங்கை அரசு வெளியிட்ட புதிய வரைப்படத்தில் மாற்றப்பட்டடிருந்தன.
அப்பா தானும், தனது மூதாதையரும் வாழ்ந்ததாகக் குறிப்பிட்ட மாவிட்டபுரம் என்ற ஊருக்கு என்ன நடந்தது என்று என்னால் அறிய முடியவில்லை. அந்த ஊரின் பெயரே அந்த வரைபடத்தில் இருக்கவில்லை. சோழ இளவரசியான மாருதப்புரவீகவல்லியின் குதிரைமுக நோய் மாறி அழகான முகம் வந்ததால் மா விட்ட புரம் என்ற பெயரை இந்த ஊர் சூடிக்கொண்டது. ஆனால் இலங்கையின் வடமேற்கே யாழ்ப்பாணக் குடாநாட்டில், மாவிட்புரத்திற்கு அருகே சற்றுத்தள்ளி இருந்த மாதகல் என்ற இடத்தின் பெயர் புரியாத சிங்கள் மொழிப் பெயராக்கப்பட்டிருந்தது.
தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் இராணுவக்கட்டுப்பாட்டில் அதிபாதுகாப்பு வலையமாக இருந்ததால் ஆங்காங்கே பௌத்த விகாரைகள் எழுந்திருந்தன. அதனால் இடங்களின் பெயர்கள், தெருக்களின் பெயர்கள் எல்லாம் சிங்கள மயமாக்கப்பட்டிருந்தன. தமிழர்கள் இந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டதால் அந்த மண்ணில் என்னதான் நடக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாமலிருந்தது.
எண்பது வயதைத் தாண்டியிருந்தாலும் அப்பா இதுவரை காலமும் மிகவும் ஆரோக்கியமாகவும், உஷாராகவும் தான் இருந்தார்.
ஆனால் முள்ளிவாய்க்கால் சம்பவத்தின்பின் அவரது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் கனவாய்ப் போனதில், அப்பா உடைந்துபோய் மொனமாகிப் போயிருந்தார். யார்விட்ட தவறு, யாரை நோவது, யாரை நம்புவது என்று தெரியாத நிலையில், மனம் குழம்பிப் போன அவர் தன்னைத்தானே மௌனித்துக் கொண்டார்.
காந்திய வாதியாய் வாழ்ந்த அவருக்கு இன்றைய அரசியலோடு உடன்பாடு கொள்ள முடியவில்லை. அதனால் மனம் விட்டுப்பேச நம்பிக்கையானவர்கள் யாரும் கிடைக்காததால், தனக்குள்ளே குமைந்து கொண்டிருந்தார். அதுவே அவரை நோயாளியாய்ப் படுக்கையில் கிடத்தி விட்டிருந்தது.
அப்பாவிடம் நான் கேட்டபோது அவர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், எனது கேள்வி மெல்ல மெல்ல அவரை வியப்பில் ஆழ்த்தியிருந்தது. தாய் மண்ணைப் பற்றியே இதுவரை காலமும் வாய் திறக்காத, வேடிக்கையும் விளையாட்டுமாகத் திரிந்த நானா இத்தனை ஆர்வத்துடன் விசாரிக்கின்றேன் என்பதில்தான் அவருக்கு வியப்பாக இருந்தது.
ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை அலட்சியப் படுத்த அவர் விரும்பவில்லை. அவரது கண்களில் நிறையச் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் தெரிந்தது.
அப்பா படுக்கையில் இருந்தபடியே தனது புத்தக அலுமாரியைத் திறந்து சில புத்தகங்களை எடுத்துத் தரச்சொன்னார்.
தொல்காப்பியம், அகநாநூறு, புறநாநூறு, சிலப்பதிகாரம் என்று பெரிய பெரிய புத்தகங்கள் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவர் குறிப்பிட்ட படியே சில புத்தகங்களைத் தேடி எடுத்து அவரிடம் கொடுத்தேன். தமிழரின் வரலாற்றை எடுத்துக் காட்டும் நூல்கள் என்பதால் அவற்றை அவர் சேகரித்து வைத்திருக்க வேண்டும். மிக ஆர்வத்தோடு சில புத்தகங்களில் குறிப்பிட்ட சிலபக்கங்களைக் கவனமாகத் தேடி எடுத்து அவற்றில் சிலவற்றைப் பற்றிய விளக்கங்களைத் தந்தார்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் இந்துமாசமுத்திர பகுதியில், புவியதிர்வு ஏற்பட்டதன் காரணமாகத் தென்னிந்திய நிலப்பரப்பில் சிறிய பகுதி கடல் மட்டத்திலிருந்து தாழ்ந்து போயிருந்தது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல்கோள் காரணமாக சுமார் பதினெட்டு மைல் அகலமான அந்தப் பகுதி கடல் நீரில் முழ்கிவிட்டது. அதுவே பாக்குநீரணை என்று பின்நாளில் அழைக்கப்பட்டது.
அதனால்தான் தென்னிந்தியாவோடு ஒட்டியிருந்த இந்த நிலம் கடல் நீரினால் மட்டும் தனியே பிரிந்துவிட்டது. அதாவது நீரால் பிரிக்கப்பட்டதே தவிர, நிலத்தால் பிரிக்கப்படவில்லை. பாரம்பரியமாக பரம்பரை பரம்பரையாகத் தமிழர்களிடையே சொல்லி வரப்பட்ட இந்தச் சம்பவம் அப்பாவிடமும் சொல்லப்பட்டிருந்தது.
‘அது எப்படியப்பா, கடல்தான் இலங்கைத்தீவைத் தனியாகப் பிரித்திருக்கிறதே?’ என்றேன். கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதுபோல, அப்பாவின் முகத்தில் ஒரு பிரகாசம் ஏற்பட்டது.
‘இல்லை, இங்கேதான் தவறான சிந்தனை இருக்கிறது. தண்ணீருக்கடியிலும் நிலம் தொடுத்தபடிதான் இருக்கிறது. நிலத்தால் மட்டுமல்ல தமிழ் நாட்டின் அதே பண்பாடு கலாச்சாரம் மொழி எல்லாவற்றாலும் ஒன்றுபட்டுத்தானே இலங்கைத் தீவும் இருக்கிறது. நாங்களும் அப்படியான அதே பாண்பாட்டோடுதானே அந்த மண்ணில் இதுவரைகாலமும் வாழ்ந்தோம்,’ என்றார் அப்பா.
‘யாருக்காவது இதைப் புரியவைக்க இந்த ஆதாரம் போதாதே அப்பா?’ என்றுகூறி அவரிடம் மேற்கொண்டும் விபரங்களை எதிர்பார்த்தேன்.
‘சரி, சங்க இலக்கியத்தில் வடவேங்கடம், தென்குமரி மலை என்று சொல்லப்படுகின்றதே அது எங்கே இருக்கிறது தெரியுமா? தென்குமரி என்றால் இந்தியாவின் தெற்குப் பக்கத்தில் தான் இருக்கவேண்டும் அதாவது தமிழ் நாட்டின் தென்பகுதியில் இருக்க வேண்டும். அப்படி ஒரு மலை அங்கே இருக்கிறதா?’ என்று கேட்டார்.
நான் புவியியல் மாணவனாக இருந்தபடியால் அப்பாவின் கேள்வியைச் சட்டென்று புரிந்து கொண்டேன்.
‘தமிழ் நாட்டில் உயர்ந்த மலைகள் எதுவும் இல்லையேப்பா’ என்றேன்.
‘அதனால்தான சொல்கிறேன் தென்குமரி மலை என்று குறிப்பிடப்பட்டது இலங்கைத் தீவில் இருக்கும் சிவனொளிபாத மலையாக இருக்கலாமல்லவா. தெற்கே இருந்த பகுதி கடல் நீரால் மூடப்பட்டபோது, மறுபகுதி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இல்லாததால் முழுவதுமே கடலால் மூடப்பட்டு விட்டதாகதான் அன்று எண்ணினார்கள்.
ஆனால் தரையால் உயர்ந்த பகுதி ஒன்று மறுபக்கம் தப்பியிருந்தது அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அதாவது போக்குவரத்து வசதிகளோ அல்லது நவீன வசதிகளோ அந்தக் காலத்தில் இல்லாததால் மறுபக்கத்தில் தப்பியிருந்த நிலப்பரப்பு இவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் தென்பகுதி முற்றிலும் அழிந்துவிட்டதாகவே நம்பினார்கள். காலப்போக்கில் படகுகள் மூலம் தெற்கு நோக்கிச் சென்றவர்கள்தான் தென்பகுதியில் தப்பியிருந்த நிலத்தைக் கண்டுபிடித்தனர். அதுதான் நாங்கள் வசித்த இலங்கைத் தீவு.’
சரித்திரக் கதை சொல்வதுபோல அப்பா ஆழ்ந்த சிந்தனையோடு கடந்தகாலத் தென்குமரியின் கதையைச் சொல்லிக் கொண்டே போனார். நானும் கதைகேட்கும் ஆவலில் கதையோடு ஒன்றிப் போனேன்.
'வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று தொல்காப்பியர் தமிழகத்தின் நில எல்லையைக் குறிப்பிட்டுள்ளார். தென்குமரி என்பது இன்றைய குமரிமுனையா அல்லது கடல்கோளால் பிரிக்கப்பட்ட இலங்கைத்தீவா என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது.
கலித்தொகை பாடல் 104:1-4, சிலப்பதிகாரம் 20:17-22, பஃறுளி ஆறும் பல குன்றும் சூழ்ந்த குமரிக்கோடும் சினங்கெழு கடலுள் ஆழ்ந்தன, என்று குறிப்பிடுகிறது. எனவே தொல்காப்பிய பாயிரத்தில் குறிப்பிடப்படும் "குமரி" என்ற சொல், தமிழகத்தின் தற்கால எல்லையாக உள்ள குமரிமுனை அல்ல. சங்க காலத்தில் கடல்கோளால் அழிந்துபோனதாகத் தவறாகக் கருதிய குமரிக்கண்டத்தையே குறிக்கிறது என்பது பல ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்தாகும்.
உண்மையிலே ஒரு பகுதி கடலில் ஆழ்ந்தும், அதற்கு அப்பாற்பட்ட உயர்ந்த தென்நிலப்பகுதி தப்பியுமிருந்தன. நவீன வசதிகள் அற்ற அந்தக்காலத்தில் குமரிக்கண்டம் அழிந்து விட்டதாகவே எண்ணியிருந்தனர். ஆனால் புவியதிர்வால் நடுவில் ஒரு பகுதியில் மட்டும் கடல் புகுந்ததே தவிர எஞ்சியதில் உயர்ந்த நிலம் தப்பியிருந்தது. அதுவே இலங்கைத் தீவாக மாறியிருந்தது.
இது கருதியே தமிழக வரலாற்றை ஆய்வு செய்து ஆங்கிலத்தில் தமிழக வரலாறு எழுதிய வி.கனகசபை (ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - தமிழில்:- கா.அப்பாதுரை) ஹரப்பா நாகரிகத்தை ஆய்வு செய்த ஹெரஸ் பாதிரியார் தமது ஆய்வில் குறிப்பிட்டுள்ளது போல தொல்காப்பியம் படைப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே லெமூரியா கண்டம் அல்லது பண்டைய தமிழகம் பரந்த நிலமாக இருந்தது என்பது தெரிய வருகிறது.
‘இராமன் இலங்கைக்குப் பாலம் அமைத்துச் சென்றான் என இராமாயாணம் கூறுகிறது. ராமன் வாழ்ந்த காலம் சுமார் 2.16 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திரேதாயுகம். நாசா விண்வெளி மையம் வெளியிட்ட புகைப்படத்தில் தமிழ் நாட்டின் தெற்கே கடலுக்குள் பாலம் போன்ற மணல் திட்டுகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்துகின்றது. இதன்மூலம் 2.16 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் தென்பகுதியான தற்போதைய குமரிக்குத் தெற்கு கடல் சூழ்ந்ததாகவும் இலங்கை அதன் ஒரு பகுதியாக இருந்து பின் ஒரு சிறிய தீவாக மாறியதாகவும் தெரிய வருகின்றது.
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி, ‘செந்தமிழியற்கை சிவணிய நிலம் எனத் தொல்காப்பியரும், பனம்பாரனாரும் கூறிய ‘செந்தமிழ் நிலம்’ என்பது முதலிடைச் சங்கங்கள் இருந்த நிலப்பகுதியாதலே தகுதி என்பது மு.இராகவையங்காரின் கருத்தாகும் என்று அப்பா இப்படியாக ஒவ்வொரு நூலாக எடுத்து அதை ஆய்வு செய்தவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டார். இவ்வளவு அரிய பொக்கிஸங்களை அப்பா ஏன் சேகரித்து வைத்திருந்தார் என்பது அப்போதுதான் எனக்கு விளங்கியது.
‘எப்படியப்பா இவ்வளவு அரிய நூல்களைப் புலம் பெயர்ந்த இந்த நாட்டில் சேகரித்து வைத்திருந்தீர்கள்?’ என்று ஆச்சரியத்தோடு கேட்டேன்.
‘யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோதே எங்கள் ஆவணங்கள் திட்மிட்ட முறையில் அழிக்கப்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டேன். அதனால்தான் விலை அதிகமாயிருந்தாலும் என்னால் முடிந்தளவு அவற்றை வாங்கிச் சேகரித்து வைத்திருக்கிறேன். என்றாவது ஒருநாள் நாங்கள் யார் என்ற கேள்வி எழும்போது அடுத்த தலைமுறைக்கு இது உதவும் என்பது எனக்குத் தெரியும்.' ஒரு சாதனை வீரன்போல அப்பாவின் சிரிப்பு இருந்தது.
என் தேடலுக்குத் தீனி கிடைத்ததால், ‘தாழுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்’ என்ற அமுதவாக்கியம் அவருக்கானது போல நான் மகிழ்ந்தேன். அப்பாவோ விடுவதாக இல்லை, தனது மனசில் இதுவரை அடக்கி வைத்திருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தார்.
முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றிப்பாடும் காரிக்கிழார் என்ற புலவர் தமிழ் ஆட்சிப் பரப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது,
"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும். (புறம் - 6)
அழிந்துபட்ட குமரிக்கண்டத்தை சங்ககால மற்றும் காப்பியக்கால இலக்கியங்கள், தற்காலக் குமரிமுனையையே தமிழகத் தென்பகுதியாகப் பாவித்து வந்துள்ளன. இளங்கோவடிகள் (சிலம்பு-8:1-2) திருமால் குடிகொண்டிருக்கும் திருப்பதி, குமரிக்கடல் ஆகியவற்றை தமிழ்நாட்டின் வட - தென் எல்லைகளாக குறிப்பிட்டாலும், அதையும் தாண்டி நடுவே கடல் புகுந்ததால் ஒரு பகுதி எஞ்சி நின்றதை யாரும் கவனத்தில் கொள்ளவில்லை. இப்பொழுது இலங்தைத் தீவில் இருக்கும் சிவனொளி பாதமலைத் தொடர்களே தென்குமரி என்பதை நிருபிக்க யாரும் பெரிதாக முன்வரவில்லை.
தொல்காப்பியர் காலம் கி.மு. முதலாம் நூற்றாண்டு எனக்கொண்டால், அதற்கு முன்பே தற்போதைய குமரிக்குத் தெற்கே கடல் பரப்புதான் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, பாயிரத்தில் குறிப்பிட்டுள்ள தென்குமரி என்பது தற்போதைய குமரி என்பது தெளிவாகிறது.
வரலாற்றின்படி, தொல்காப்பியர் காலம் எனக் கருதப்படும் கி.மு. முதலாம் நூற்றாண்டுக்குச் சிலகாலம் முன்னர் இந்தியாவின் வடபகுதி மெüரிய ஆட்சியாகவும், தென்பகுதி ஏறத்தாழ கிருஷ்ணா நதிவரை தமிழ் மன்னர்களின் ஆட்சியாகவும் இருந்தது. வட இந்தியாவில் அசோகர் ஆட்சியில் (கி.மு.273-236) புத்தமதம் தழைத்தும் பாலி மொழி பயன்பாட்டிலும் இருந்தது. இவ்வரலாற்றின்படி தற்போதைய திருமலை எனப்படும் வேங்கடமலைக்கு வடக்கே பாலி மொழி வழக்கத்தில் இருந்தது எனவும் அறிய முடிகிறது. இதனால் பாயிரத்தில் கூறிய வடவேங்கடம் என்பது தற்போதைய திருப்பதி என்பது தெளிவாகிறது.
இதிகாசம், பூகோள அறிவியல், வரலாறு இவற்றின் மூலம் தொல்காப்பியப் பாயிரத்தில் பனம்பாரனார், வடவேங்கடம் என்று திருமலையையும் தென்குமரி என்று தற்போதைய குமரியையும் குறிப்பிட்டுள்ளார்.
'நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பறுத்த தண்புனல் நன்னாட்டு' என்கிறது சிலப்பதிகாரம். நெடியவனான திருமாலின் திருவேங்கட மலையும் குமரிப்பெண்ணின் கடலும் தமிழுக்கு வரம்பு என்று இதற்குப் பொருள் சொல்வார்கள் என்று அப்பா மேலும் விளக்கம் தந்தார்.
எனக்கு எல்லாமே குழப்பமாக இருந்தாலும் ஓரளவு புரிந்தது போலவும் இருந்தது. இதுவரை கேள்விப்படாத பல புத்தகங்கள் அப்பாவின் சேகரிப்பில் இருந்தன. சரித்திரம் மாற்றப்படலாம் என்பதால் அப்பா முன்னெச்சரிக்கையோடு அவற்றைச் சேகரித்து வைத்திருந்தார்.
அப்பா கொடுத்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். வெட்ட வெட்ட முழைக்கும் துளிர்போல எப்படியாவது நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை ஆவணப்படுத்திவிட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது.
‘என்ன நீங்கள் பூதம் புதையல் காத்த மாதிரி இவ்வளவு காலமும் அப்பா தன்னோட வைத்துக் கட்டிக்காத்த புத்தகங்களை இப்ப நீங்கள் எதுக்கு எடுத்துக் கொண்டு வர்றீங்கள்?’ என்றாள் மனைவி.
‘வீட்டிலே குப்பை சேர்க்கவா?’ என்ற தொனியில் அவளது கேள்வி இருந்தது.
‘இப்படி ஆவணங்கள் எதுவம் இல்லாததால்தானே நாங்கள் இப்பவும் நாடுநாடாய் அகதிகளாய் அலைந்து கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறையாவது சொந்த மண்ணில் நிம்மதியாய் வாழவேண்டும், எங்கள் மண் எமக்காக வேண்டும், அதற்காகத்தான் இதை எடுத்துச் செல்கிறேன்’ என்றேன்.
என் கண்கள் கலங்கியதை அவள் கவனித்திருக்க வேண்டும். என் உணர்வுகளைப் புரிந்தவளாய், அவளது கரங்கள் ஆதரவாய் என் தோளில் பதிந்ததை என்னால் உணரமுடிந்தது.
Comments
Post a Comment