Novel - Urunkumo Kathal Nenjam
உறங்குமோ காதல் நெஞ்சம்
குரு அரவிந்தன்
நீண்ட வரிசை மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வெருவராக வரிசையில் வந்து பயபக்தியோடு விளக்கேற்றி மாவீரரின் கல்லறைகளில் வைத்து, மலர் தூவி வணங்கினார்கள். இருண்டும் இருளாத அந்த மாலை நேரத்து மங்கிய வெளிச்சம் மௌனமாக ஏதோ சோகக் கதை சொன்னது.
""விடியலை நோக்கிப் போகிறோம்"" என்று அவர்கள் மிகுந்த நம்பிக்கையோடு சொன்ன கடைசி வார்த்தைகளின் அர்த்தம் என்ன என்பது இப்பொழுது, இந்தக் கணத்தில் தான் இவர்களுக்குப் புரிந்தது!
சுமதி விளக்கை ஏற்றும் போது கைகள் மெல்ல நடுங்கின. விளக்கை இறுக்கிப் பிடித்து,நடுங்கும் கைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
உதடுகள் துடிக்க மனசு வெம்பி வெடித்து விடுமோ என்ற பயத்தில் "கூடாது...நான் அழக்கூடாது" என்றுதிரும்பத் திரும்ப தனக்குள்ளே வேண்டிக் கொண்டாள். ஆங்காங்கே சிலர் ஓவென்று கத்தி அழுது இதுவரை தங்கள் மனதுக்குள் அடக்கி வைத்திருந்த பிரிவுத் துயரத்தை வெளியே கொட்டிக் கொண்டிருந்தார்கள்.
அவள் மெதுவாக அந்தக் கல்லறைக்கு அருகே வந்து, தான் ஏற்றி வந்த விளக்கை அதன் மேல் வைத்து விட்டு முழங்கால்களை மடித்து அருகே உட்கார்ந்து கொண்டாள். கண்களை வெட்டாது அந்தக் கல்லறையையே உற்றுப் பார்த்தவள் அவை ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல, மனசு உடைந்து போய், தன்னையே மறந்து ""சிவா......"" என்று மெல்லச் சிணுங்கினாள்.
உடல் சில்லிட்டு, உடம்பு குலுங்கி உள்ளம் துயரத்தில் வேதனைப்பட, இது வரை அடக்கி வைத்திருந்த சோகத்தை, நெஞ்சு வெடிக்க வார்த்தைகளால் கொட்டினாள்.
""வேண்டாம்......சிவா.....உனக்கு இந்தக் கொடுமை வேண்டாம்.....நீ இல்லாமல் என்னாலே இந்த உலகத்தில் வாழமுடியாது!.......பிளீஸ் ...எனக்காக ஒரே ஒரு தடவை எழும்பி வந்து விடேன்!....இந்தப் பாவியே உனக்கு யமனாகிப் போய்விட்டேனே.....சிவா!....உன்னைக் கோழையாக்கி அந்த மிருகங்களுக்கு என் கண் முன்னாலேயே பலி கொடுத்து விட்டேனே! நீ.....வேண்டும்....எனக்கு நீ வேண்டும்! எனக்காக இல்லா விட்டாலும் இந்த மண்ணுக்காக நீ மீண்டும் எழுந்து வரவேண்டும். இந்த வெறிபிடித்தவர்களை எங்கள் மண்ணில் இருந்து விரட்டி அடிக்க உன்னைப் போன்றவர்களால் தான் முடியும்! இந்த மண்ணில் நாங்கள் சுதந்திரமாய் மூச்சு விடவேண்டும். சுதந்திரக் காற்று இங்கே வீசவேண்டும். நாளைய தலைமுறை தலை நிமிர்ந்து தமிழனாய் மீண்டும் வாழவேண்டும். ......வருவாயா? ......சிவா.......சிவா........!
அவள் வேதனையின் சுமை தாங்க முடியாமல் தேம்பித்தேம்பிக் குழந்தை போல அழுதாள். துணை இழந்த நிலையில் துயர் துடைக்க யாருமின்றி மனமுடைந்து இரண்டு கைகளாலும் தன் தலையிலே திரும்பத் திரும்ப அடித்துக் கொண்டாள்,
இதைத் தாங்க முடியாத நீலவானமும் சோகத்தில் முகம் கறுத்துக் கண்கள் குளமாக மெல்லக் கண்ணீர் விட்டது. காற்றுக் கூட ஈரமாய் சோககீதம் பாடியது. தனிமை என்கிற உணர்வு அவளது மனதை வருத்த, பெருமூச்சால் துயர் துடைத்தாள்.
காதல் வாழ்விலே அவள் மனதிலே ஏற்றி வைத்த தீபம் இவ்வளவு விரைவில் அணைந்து விடுமென்று அவள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டாள். இந்த மண்ணில் யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? ஒவ்வொரு வீட்டிலும் சோக காவியங்கள்.இந்த மண்ணுக்கு யார் போட்ட சாபம்?
குளிர் காற்றில் ஏற்றி வைத்த அந்தத் தீபச் சுடர் அங்குமிங்கும் ஆடி அசைய, மழைத் துளிகள் பொட்டுப்; பொட்டாய்ப் பன்னீர் தெளிக்க, மாலை நேரச்சூரியன் இவளது சோகத்ததை; தாங்க முடியாது கண்களை மூட, அவள் தன்னையே மறந்து, சிவாவின் கல்லறையில் தலை சாய்த்து மெல்ல மெல்ல நினைவிழந்தாள்.
அன்று அவள் ஒரு கணம் தவிர்த்திருந்தால், இன்று இந்தத் துயர் பொய்யாகி வெறும் கனவாய்ப் போயிருக்குமோ?
"சிவா என்னாச்சு உங்களுக்கு? ஏன் ஒரே மௌனமாய் இருக்கிறீங்கள்? "என்ன?" என்பது போல அவன் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான்.
""நான் கேட்டதற்குப் பதில் சொல்லுங்களேன்! என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?""
அவள் என்ன கேட்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தாலும், புரியாதது போல அவளை வியப்போடு பார்த்தான். நேரடியாகவே கேட்டுவிடும் இந்தத் துணிவு எப்படி இவளுக்கு வந்தது?
""நான் தான் கேட்கிறேனே.....பிளீஸ்.... பதிலைச் சொல்லுங்களேன்! டூ,,,யூ....லவ்...மீ.....? .....என்னை......நீங்கள்......விரும்புகின்றீர்களா?""
வெட்கத்தால் முகம் சிவக்க அவனைப் பார்த்துக் கேட்டாள். எப்படியாவது இன்று அவனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டுவிட வேண்டும் என்ற முடிவோடு தான் அவள் வந்திருந்தாள்.
""சுமதி என்னிடமிருந்து என்ன பதிலை நீ எதிர் பார்க்கிறாய்?""
""எது சரி சொல்லுங்க, எனக்கு பதில் தான் வேண்டும்!ஆமா, இல்லையா?""
""பதில் தானே வேண்டும்....? சரி எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு! நான் உயிருக்குயிராக உன்னையும் இந்த மண்ணையும் விரும்புகின்றேன்!""
எதிர் பாராத அவனது சம்மதத்தில் அவள் முகம் சட்டென்று நாணத்தால் சிவக்க, அந்த இன்ப அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் கலகலவென்று வாய் விட்டுச் சிரித்தாள்.
""புரியுது....நீங்கள் என்னை விரும்புகின்றீர்கள் என்பது உங்களோடு பழகும் போதே எனக்குத் தெரியும்! ஆனால் அதை நீங்களே உங்கள் வாயாற் சொல்ல வேண்டும் என்று தான் இது நாள் வரையும் காத்திருந்தேன். காத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது."" அவனைப் பார்த்து மகிழ்ச்சியில் பூரித்துச் சொன்னாள்.
""அப்போ....காதலர் இருவர் கருத்தொருமித்த இன் நன்னாள், நம்மால் மறக்க முடியாத பொன்நாள்!....அப்படித்தானே?""
அவள் உணர்ச்சி வசப்பட்டு விழிகளை உயர்த்தி அவனை ஏக்கத்தோடு பார்த்து சொண்டுக்குள் சிரித்துக் கொண்டு,
""போதும்....போதும்........உங்க.......அறுவை! இந்தத் தமிழ் எல்லாம் நமக்குப் புரியாது சார்! நான் இலக்கியம் படிக்கலை!""
""புரியாது எதுவுமே புரியாது!இந்தப் புத்தகப் பூச்சிக்கு வேறு என்ன தான் புரியுமோ? இந்த மண்ணிலே என்ன நடக்கிறது என்றாவது தெரியுமா?""
"'இந்த மண்ணைப் பற்றி நாமேன் கவலைப்பட வேண்டும்? நம்ம உலகத் தைப் பற்றிக் கொஞ்சம் கதைப்போமா?ஆமாம் உன்னைப் பிடிக்குமென்று சொன்னீங்க, புரியுது! வேறு ஏதோ சொன்னீங்களே .....ம் மண்ணைப் பிடிக்குமென்று...அதுதான் என்ன என்று எனக்குப் புரியவில்லை?
""அதுவா...? அது உன்னோட சக்களத்தி! சுத்த சூனியம். கடவுளே எனக்கேன் இந்தப் பெண் உருவத்தில் இப்படி ஒரு சோதனை?....... ஆமா....உனக்குச் சமையலாவது தெரியுமா?""
""சமையலா.....? என்ன சார் மனசிலை நினைச்சுக் கொண்டிருக்கிறீங்க? அந்தக் காலமெல்லாம் மலை ஏறிப் போச்சு! இப்படி ஒரு கேள்வியை பட்டப் படிப்புப் படித்த நீங்களே கேட்கலாமா சார்? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை....!""
அவள் விரல்களை மடித்து வலது கையை உயர்த்தி ஆவேசமாக ஏதோ சொல்ல வர,
""போதும்.... போதும்..... அம்மாடி..... தெரியாமற் திருவாய் மொழிந்து விட்டேன்! அதற்காக மன்னிக்க வேண்டுகிறேன்!"" அவன் தன் வாயை வலது கையால் பொத்திப் பயந்தது போலப் பாசாங்கு செய்தான்.
அவனது சேட்டையைப் பார்த்த சுமதி பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். காதல் வசப்பட்டால் ஒவ்வொரு செய்கையும் இப்படித்தான் வேடிக்கையாக இருக்குமோ? ஒவ்வொரு வார்த்தையும் இன்பத் தேனாய் நெஞ்சுக்குள் இனிக்குமோ?
""பாசாங்கு செய்தது போதும்........ இப்போ நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்க!முதலில் நீங்கள் நல்ல ஒரு அரசாங்க உத்தியோகம் தேட வேண்டும். அப்புறம் எங்க வீட்டிற்கு வந்து என்னை முறைப்படி பெண் கேட்க வேண்டும். எல்லோருடைய சம்மதத்தோடும் நம்ம கல்யாணம் நடக்க வேண்டும். இது தான் என்னுடைய விருப்பம். எனக்காக இதைச் செய்வீங்களா?"".
தன்னுடைய எதிர் காலமே அவனது பதிலில் தான் தங்கியிருப்பதாக அந்தப் பேதை நினைத்து அவனது முகத்தை ஏக்கத்தோடு பார்த்தாள்!
""நீங்க ஒரு வேலை தேடி எடுக்கணும் அப்புறம் எங்க வீட்டிற்கு வந்து என்னை முறைப்படி பெண் கேட்கணும்"" என்று சுமதி தன்னுடைய விருப்பத்தை மெல்லத் தெரிவித்த போது சிவா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மௌனமானான்.
'உன்னை விரும்புகின்றேன்' என்று சொல்லி வாய் மூடு முன் இது என்ன கட்டளை?
""உத்தியோகமா?....அதுவும் அரசாங்க உத்தியோகமா?முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமா?" என்றான் சிவா விரக்தியோடு.
""அப்போ....வேலை இல்லாத ஊதாரிக்கு எங்கள் வீட்டில் பெண் தரமாட்டார்கள். இந்தக் கலியாணம் நடக்கவே நடக்காது."" என்றாள் அலட்சியமாக. அவளது வார்த்தைகள் அவனைச் சுட, அவன் அவளை முறைத்துப் பார்த்தான்.
""ஏன்சுமதி இப்படிஅபசகுணம் மாதிரிச் சொல்கின்றாய்?""
""சொறி......சிவா.... என்னுடைய குடும்பத்தைப் பற்றி எனக்கு நல்லாய்த் தெரியும். அப்பா இறந்த பிறகு எங்க வீட்டிலே அண்ணா சுரேன் வைத்தது தான் சட்டம். அம்மா சம்மதம் சொன்னாலும் எங்க அண்ணா இதற்கு ஒரு போதும் சம்மதிக்க மாட்டான்.""
""நம்ம காதலுக்கும் இந்த வேலைக்கும் என்ன தொடர்பு?""
""உங்களுக்கு ஒரு வேலை கூட இல்லை என்றால் எந்த முகத்தோடு நான் வீட்டிலே போய் நம்ம கலியாணத்தைப் பற்றிக் கேட்பது? எங்க எதிர் காலத்தைப் பற்றி கொஞ்சம் என்றாலும் நீங்க சிந்தித்துப் பார்க்கக் கூடாதா?""
""சுமதி.....உன்னுடைய நிலமை எனக்குப் புரிகிறது. நான் வேலை தேடிக் கொண்டு தான் இருக்கின்றேன். அரசாங்க உத்தியோகம் என்பது தமிழனாய்ப் பிறந்த என்னைப் போன்ற படித்த இளைஞர்கள் கனவிலும் நினைக்க முடியாதது. இந்தப் பட்டப்படிப்பைப் படிப்பதற்கே நான் பெரும்பான்மை இனத்தவரை விட கூடுதலான புள்ளிகள் எடுக்க வேண்டி இருந்தது. படித்தும் வேலை கிடைப்பது பெரும் பாடாக இருக்கிறது.
‘எனக்குப் புரியுது, ஆனால் வீட்டிலதான்..’
விவசாயமாவது செய்யலாமென்றால் எங்கள் காணிகளை எல்லாம் இராணுவம் ஆக்கிரமிப்பு செய்து நிலம் முழுவதும் கண்ணிவெடிகளைப் புதைத்து வைத்திருக்கின்றது. இந்த நிலையில் நான் என்ன செய்ய முடியும்? மேற்கொண்டு படிக்கவோ அல்லது ஒரு வேலை எடுக்கவோ என்னால் முடியவில்லை, சொந்த மண்ணில் நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை! ஏன்? எதற்கு? என்று கேள்வி கூடக் கேட்காமல் ஊமையாய் இருக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
எங்கள் பெற்றோருக்கு எத்தனை நாட்கள்தான் நாங்கள் பாரமாக இருப்பது.ஏன் எங்கள் இனத்திற்கு மட்டும் இந்த சாபக்கேடு? தமிழனாகப் பிறந்ததாலா? ஏன் எங்கள் இனம் யதார்த்தமாகச் சிந்திக்க மறுக்கிறது? மானத்தை இழந்து இப்படியே அடிமை மோகத்தில் எவ்வளவு காலம்தான் வாழப் போகிறோம்? நாங்கள் என்றுதான் இந்த அடிமைவிலங்கை உடைத்து எறியப் போகிறோம்? எப்பொழுது நாங்கள் எங்கள் மண்ணின்; சுதந்திரக்காற்றைச் சுவாசிக்கப் போகிறோம்?
""போதும் நிறுத்துங்கோ! மண்ணும்! மண்ணாங்கட்டியும்;! இதைத் தவிர வேறொன்றுமே உங்களுக்குத் தெரியாதா? கொஞ்சம் பேச விட்டால் கவிதையே பாடிக் கொட்டுவீங்க போல இருக்கு? ஏன் இப்படி விரக்தியாய் இருக்கிறீங்க? முதலில் விரக்தி என்கிற இந்த இருட்டிலை இருந்து வெளியே வாங்கோ. நீங்க ஊருக்காகக் கவலைப்பட்டது போதும். இப்ப எங்களுக்காகக் கவலைப்பட யாருமே வரப்போவதில்லை. எனக்கொன்றும்; தெரியாது! இந்தக் கலியாணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்றால் நீங்கள் வேலை ஒன்று தேடி எடுக்கவேண்டும். அப்புறம் தான் எங்கள் திருமணத்தைப் பற்றி சிந்திக்கமுடியும்!""
சுமதி கோபமாகச் சொல்லி விட்டு, சிவாவிற்கு முன்னால் அழுது விடுவோமோ என்ற பயத்தில் எழுந்து வேகமாக வீடுநோக்கி நடந்தாள்.
"வேலை இல்லா விட்டால் இந்தக் கலியாணமே நடக்காதா?'
""எப்போ வேலை தேடி, எப்போ கலியாணம் செய்து........."" அவன் தனக்குள்ளே மனசைக் குழப்பி எதிலுமே பிடிப்பில்லாமல், வீடு நோக்கி சிந்தனையோடு நடந்தான்.
""அண்ணா சாப்பிட வாங்கோ"" சாந்தி சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தாள்.
""வேண்டாம் எனக்குப் பசிக்க வில்லை!""
""ஏன் வெளியிலே எங்கேயாவது சாப்பிட்டியா?""
""இல்லை.""
""சாப்பாட்டுக் கடைப் பக்கம் போனியா?""
""இல்லை....சாப்பாடு வேண்டாம்!""
""சரி....வாழைப்பழம் இருக்கு, இல்லை மாம்பழமும் இருக்கு வெட்டித் தர்றேன், சாப்பிடுறியா?
""வேண்டாம்""
""ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய்? நித்திரை வருகுதா? கொஞ்சம் பாலாவது குடிச்சுட்டுப் படேன்!
""இல்லை வேண்டாம் என்றால் ஆளை விடேன் ஏன் அலுப்புக் கொடுக்கிறாய்?""
""அதென்ன பசி இல்லை! நித்திரை இல்லை! புதுமையாய் இருக்கு?""
சாந்தி தனது நாடியில் கைவைத்து ஏதோ சிந்திப்பது போலப்பாவனை செய்துவிட்டு,''ஓகோ....இப்பதான் புரியுது!"" என்றாள் அவனைப் பார்த்து.
""என்ன புரியுது?"" என்றான் சிவா எரிச்சலோடு.
""என்னமோ புரியுது!
பாலும் கசந்ததடீ- ஸகியே படுக்கை நொந்ததடீ!
உணவுசெல்லவில்லை-ஸகியேஉறக்கம்கொள்ளவில்லை!""
அவள் வேண்டும் என்றே அந்த வரிகளை வாய்குள் முணுமுணுத்து அவனைச் சீண்டி வேடிக்கை பார்க்க, அவன் எழுந்து அவளைத் துரத்திக் கொண்டோட,
""அம்மா அண்ணாவைப் பாரேன் எனக்கு அடிக்க வாறான்"" என்று கத்திக் கொண்டு ஓடிப் போய்த் தாயின் பின்னால் ஒழித்துக் கொண்டாள்.
""உங்களுடைய பிரச்சனையை விலக்குப்பிடிக்கவே எனக்கு நேரம் போதாது. அப்பா இப்ப பசிக்கிறது என்று சொல்லிக் கொண்டு வரப் போகிறார். அந்த மனிசன் கொஞ்சமும் பசி தாங்காது""
""படிக்கிற நேரத்தில் பாட்டுப் படிச்சுக் கொண்டிருக்கிறாள் அம்மா! அதுவும் சோதனை நடக்கிற நேரம். அது தான் போய்ப் படி என்று துரத்தினனான்.""
""போதும் கோள்மூட்டாதே! அம்மாவிடம் எல்லாம் சொல்லிப் போடுவேன்"" என்பது போலத் தாயின் பின்னால் ஒழிந்து கொண்டு சைகை மூலம் மிரட்டினாள் சாந்தி.
'சரி சரி... போய்ப் படியுங்கோம்மா..... சோதனை நல்லாய்ச் செய்ய வேணுமெல்லே? இந்தப் படிப்பு ஒன்று தான் எங்களுடைய அசைக்க முடியாத சொத்து. இந்த உலகத்தில் நாங்கள் எங்கே போனாலும் எங்களுடன் எடுத்துச் செல்லக் கூடியது இந்தப் படிப்பு ஒன்று தான். இதை எப்பொழுதும் மறந்து விடாதையுங்கோ!""
""சரி அம்மா....... அண்ணாவிற்குப் பசிக்குமே என்று தான் சாப்பிடக் கூப்பிட்டனான். மத்தியானமும் வடிவாய் சாப்பிடவில்லை. இந்த அண்ணா எப்பவுமே இப்படித்தான். இனிமேல் நான் இவருக்கு ஒன்றுமே செய்து கொடுக்க மாட்டேன்."" என்று பொய்யாகக் கோபம் காட்டிக் கெண்டு போய்ப் படிக்கும் மேசையில் அமர்ந்தாள்.
நெஞ்சு சுமந்த நினைவுகள் கனவுகளாய் மாற சிவா தூக்கம்கலைந்து நிம்மதி இழந்தான். ஏனோ படுக்கை நொந்தது. சுமதி கோபமாக எழுந்து சென்றது அவனது மனதைப் பெரிதும் பாதித்தது. அவளது வேண்டுகோளில் நியாயம் இருப்பதாகவே மனதுக்குப் பட்டது. அவளுக்காக மனதால் இரக்கப் பட்டான்.
பாவம்! அவள் என்ன பொன்னும் மணியுமா என்னிடம் கேட்டாள்? ஒரு வேலை தேடித் தானே எடுக்கச் சொன்னாள். எவ்வளவு ஆசைகளோடு, எதிர் பார்ப்புக்களோடு எதிர் காலத்திற்காகக் காத்திருக்கிறாள். அவளை முதன் முதலாகச் சந்தித்த நினைவு பசுமையாய் அவன் கண்முன்னே விரிந்தது.
பல்கலைக் கழக விடுமுறையின் போது அவன் ஊருக்கு வந்திருந்தான். அன்று அப்பாவும் அம்மாவும் உறவினரின் திருமணத்திற்குப் போயிருந்தனர். சாந்தி கோயிலுக்குப் போயிருந்தாள். விறாந்தையில் சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி சுஜாதாவின் 'என்றாவது ஒருநாள்" படித்துக் கொண்டிருந்தான். திடீரென கேற் திறந்து யாரோ ஓடி வரும் சத்தம் கேட்டது!
கேற்ரைத் திறந்து கொண்டு இவ்வளவு அவசரமாய் ஓடி வருவது யாராய் இருக்கும் என்று அவன் நிதானிக்க முன்பே அவள் ""சாந்தி....... சாந்தி"" என்று கூப்பிட்டுக் கொண்டு அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் உள்ளே சென்றாள்.
பதில் வராததால் அப்புறம் 'ஆன்ட்ரி...ஆன்ட்ரி" என்று சமையலறைப் பக்கமிருந்து குரல் கொடுத்தாள். அவனை ஒரு பொருட்டாக மதிக்காமல் அவள் உள்ளே சென்றது அவனது கோபத்தைக் கிளறிவிட்டது. உள்ளே ஒருவரும் இல்லாததால் திரும்பி வந்தவள் அவனைக் கண்டதும் திகைத்துப் போய் ஒரு கணம் நின்றவள் பின் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு,
""நீங்க.....? நான் அங்கிள் என்று நினைச்சுட்டேன்! சாந்தி இல்லையா?"" என்றாள். அவளின் கண்களில் மருட்சி தெரிந்தது.
சந்தன நிற சூரிதாரில் மிகவும் அழகாயிருந்தாள். தினந்தினம் அவன் பார்க்கும் பெண்களைவிட இவள் வித்தியாசமாய் இருந்தாள். ஏதோ ஒரு விதமான கவர்ச்சி அவளிடம் இருந்ததை அவன் அவதானித்தான். யார்இந்த வெண்நிலா?
""சாந்தியா? யாரது?"" வேண்டு மென்றே சீண்டிப் பார்த்தான்.
""அப்போ ஆன்ட்ரி யாவது இருக்கிறாங்களா?""
""உங்க ஆன்ட்ரியா? நீங்க தப்பான விலாசத்திற்கு வந்து விட்டீங்க போல இருக் கிறது""என்றான் அப்பாவிபோல.
அவளோ, அவனை நம்பமுடியாமல், சுற்றுமுற்றும்பார்த்தாள். ஆனால் முன்பின் தெரியாத ஒருவனிடம் மேற்கொண்டு ஏதுவும் பேச விரும்பாமல் அவனது குதர்க்கத் தனமான பதிலால் மனம் நொந்து, வேறுவழி இல்லாமல் சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு திரும்பினாள்.
யார் இவன்? மனசுக்குள்ளே அவனைத் திட்டித்தீர்த்துக் கொண்டு கேற்வரை வந்தவளை அவனது குரல் மீண்டும் தடுத்து நிறுத்தியது.
''ஒரு நிமிஷம்...நில்லுங்க! சாந்தி உங்க ஃபிரெண்டா?''
""ஆமா"" என்று தலையாட்டினாள் பரிதாபமாக. எரிச்சல் தான் வந்தது.
""கோயிலுக்குப் போயிட்டா, என்ன சொல்ல?""
"'நான் தேடி வந்ததாய் சொல்லுங்க.""
""நா என்றால்?"" அவன் கேள்வியில் அர்த்தம் இருந்தது.
பெயரைச் சொல்லலாமா? அவள் ஒரு நிமிடம் மௌனம் சாதித்தாள். அப்புறம் என்ன நினைத்தாளோ, ''சுமதி"" என்றாள்.
""சுமதி"" அவன் அழுத்தம் கொடுத்து அவள் பெயரை உச்சரித்த போது இன்ப அலை ஒன்று காற்றோடு வந்து அவளது ஆத்மாவில் கலந்தது போல அவள் உணர்ந்தாள்.
என்னுடைய பெயரை இவ்வளவு இனிமையாகக் கூட உச்சரிக்கலாமா?
யார் இவன்? யாரென்று உடனே தெரிந்து கொள்ளாவிட்டால் அவளுக்கு மண்டையே வெடித்து விடும் போல இருந்தது!
வீட்டிற்குப் போய் முகம் கழுவி சேலை உடுத்து பொட்டு வைத்து, ஏற்கனவே கட்டிவைத்த மல்லிகைப்பூச் சரத்தைச் சூடிக்கொண்டு கோயிலுக்குப் போனாள். அவள் எதிர் பார்த்த படி சாந்தி அங்கே பூஜைக்காக காத்திருந்தாள்.
பூஜை முடிந்ததும் இருவரும் பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்கள். "யார் அவன்" என்பதை சாந்தியிடம் எப்படிக் கேட்பது என்பதில் தயக்கம் காட்டினாள் சுமதி. ஆனால் சாந்தியே கதையைத் தொடக்கினாள்.
"'நான் வாசிக்காத கதைப் புத்தகம் ஏதாவது இருந்தால் தர்றியா சுமா, எனக்கு பொழுது போகலை!""
""நீயே வந்து தேடி எடுத்துக்கோ. கதைப்புத்தகத்தைக் கொடுத்து உன்னோட படிப்பைக் கெடுக்கிறேன் என்று ஆன்ரியிடம் ஏச்சு வாங்கிக்கொடுக்காதே!""
""சும்மா இரடி, அம்மாவிற்கு என்னை விட உன்னிலைதான் விருப்பம் கூட. சுமதி கண்டியிலே வளர்ந்து அங்கேயே படித்திருந்தாலும் எவ்வளவு அடக்கமாய் இருக்கிறா! எல்லோரோடும் எவ்வளவு அன்பாய்க் கதைக்கிறா என்றெல்லாம் உன்னைப் பற்றி அடிக்கடி சொல்லுவா"".
""உண்மையாவா?ஆன்ரி அப்படிச் சொல்லும் போது உனக்கு என்னிலை எரிச்சல் வராதா? பொறாமைப்பட மாட்டியா?""
""பொறாமையாடி? சுமா, உன்னைப் போல ஒரு நல்ல சினேகிதி எனக்குக் கிடைத்ததற்கு நான்தான் பெருமைப் படனுமடி. ஆனாலும் நான் வீட்டிலே விட்டுக் கொடுக்க மாட்டேன். சுமதி மட்டுமல்ல மலைநாட்டிலே இருப்ப
வங்க யார் கதைத்தாலும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது
ரொம்ப ஆசையாய் தான் இருக்கும் என்று சொல்லி சமாளிச்சுடுவேன்!""
சுமதி கண்கள் கலங்க அவளைப் பார்த்தாள். சாந்தியின் கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டாள்.
""எனக்கு மட்டும் என்னவாம்? உன்னை ஃப்ரெண்டா அடைஞ்சதற்கு நான் தான் கொடுத்து வைச்சிருக்கணும்! போன வருடம் இனக் கலவரத்தில் அப்பாவைப் பலி கொடுத்து விட்டு யாருமற்ற அனாதைகளாய் நாங்கள் பிறந்த மண்ணைத் தேடி வந்த போது எங்களுக்குக் கைகொடுத்து ஆதரவு தந்த முதற் குடும்பம் நீங்கதான். என்னாலே அதை மறக்க முடியுமா சாந்தி?""
சுமதி உணர்ச்சி வசப்பட்டு அழுவதைப் பார்க்க சாந்தியின் கண்களும் கலங்கின. இனக் கலவரத்தில் இறந்து போன அப்பாவின் நினைவுகள் அவளைத் தாக்கியிருக்கலாம்.
வாயில்லா ஜீவன்களைக் கொல்லாதே என்று சொன்ன புத்தபெருமான் மனித உயிர்களையும் வதைக்காதே என்பதையும் சேர்த்துச் சொல்லியிருந்தால் ஒரு வேளை அப்பாவும் சாவிலிருந்து தப்பியிருப்பாரோ எனச் சுமதி நினைத்திருக்கலாம்!
ஆனாலும் சுமதியை அந்தச்சோகமான சூழ்நிலையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்காகச் சாந்தி கதையைத் திசை திருப்பினாள்.
""ஆமா நான் கோயிலுக்கு வந்திருக்கிறேன் என்று எப்படித் தெரியும்?""
""ஒரு கிறுக்கு சொல்லிச்சு""
"'கிறுக்கா? என்ன சொல்கிறாய்?""
"'உன்னைத் தேடி வீட்டுக்குப் போயிருந்தேன்"'
''போயிருந்தியா? அம்மா, அப்பா வந்திட்டாங்களா?""
""இல்லை, அவங்க அங்கே இல்லை""
""இன்னும் வரலையா? அப்போ யார் சொன்னா?""
""யாரோ ஒரு கிறுக்கன்...மடையன்........முட்.......!""
""ஏன்......நிறுத்திட்டாய்?""சாந்தி அவள் முகத்தைப் பார்த்தாள்.
அவள் சொல்ல வந்ததைப் பாதியில் நிறுத்தி விட்டு தெருவையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
""ஏ...ன்? என்னாச்சு உனக்கு?""
""அவன் வர்றான்!........சயிக்கிள்ள வர்றாண்டீ......!"" அவள் முகத்தில் கலவரம் தெரிந்தது. தன்னிச்சையாக சாந்திக்குப் பின்னால் நகர்ந்தாள்.
அவன் அருகே வந்து அவர்களைக் கடந்து அரை வட்டம் போட்டுச் சயிக்கிளை நிறுத்தினான்.
‘திரும்பி வாறாண்டீ..!’
""ஏன் இவ்வளவு நேரம்? அவளைப் போய் கூட்டிக் கொண்டு வா
என்று அம்மா கத்திக் கொண்டு நிற்கிறா? ஏறு சயிக்கிள்ள,""
""அண்ணா இது என்னோட ஃப்ரென்ட் சுமதி!""
சுமதி அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தன்னை மறந்து அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அண்ணாவா? பல்கலைக் கழகத்தில் படிப்பதாகச் சாந்தி சொன்ன அண்ணா இவரா?
""சுமதி இது எங்க அண்ணா சிவா""
திடீரென விழித்துக் கொண்டவள் போல தன்னை மறந்து 'சீ...வா!" என்றாள் சுமதி! ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று நினைத்துப் பார்த்த போது அவளுக்கே வெட்கமாக இருந்தது.
தன் பெயரை அவள் திருப்பிச் சொல்லும் போது அவள் குரலில் வேண்டும் என்றே ஒரு வித சீண்டல் இருந்ததைச் சிவா அவதானிக்கத் தவறவில்லை!
சூரிதாரில் பார்த்த அதே முகம்! மல்லிகைப்பூச் சரம் சூடிய அவளது கூந்தலும், பால் போன்ற அவளது வதனமும், கழுத்திலே கறுப்பு மணி மாலையும், சேலை கட்டி வந்த நிலவோ என்று இப்போ அவனை எண்ண வைத்தது.
சுமதியும் சாந்தியும் கதைப் புத்தகம் எடுப்பதற்காகச் சுமதியின் வீட்டிற்குள் போக சிவா சயிக்கிளோடு வாசலில் காத்திருந்தான்.
அப்போது தான் வெளியே எங்கேயோ போயிருந்த சுமதியின் அண்ணன் சுரேன் சயிக்கிளில் வந்து வாசலில் இறங்கினான். சிவா சயிக்கிளோடு வாசலில் யாருக்காகவோ காத்து நிற்பதைப் பார்த்து விட்டு,
""நீங்க......?"" என்று இழுத்தான்.
""சிஸ்டர் உள்ளே போயிருக்கிறா, அதுதான் பார்த்துக் கொண்டு நிற்கின்றேன்"" என்றான் சிவா.
""ஏன் வாசலில் நிற்கிறீங்க? உள்ளே வாங்களேன்!""
''இல்லை...பரவாயில்லை!""சிவா பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போது சுமதியும் சாந்தியும் ஏதோ சொல்லிச் சிரித்துக் கொண்டு வாசலுக்கு வந்தார்கள்.
வாசலில் சுரேனைக் கண்ட சுமதி இருவரையும் ஒருவருக் கொருவர் அறிமுகப் படுத்திவைத்தாள். இப்போ அவளது குரலில் சீண்டலில்லை,பெண்மையின் அடக்கமும் ஒருவித கனிவும் இருந்தது!
ஏன் இந்தக் கனிவு என்பது புரியாத புதிராகவே இருந்தது. சாந்தியின் அண்ணா என்கிற மரியாதையா? இல்லை அவள் இதயத்தில் அவளுக்குத் தெரியாமலே அவன் புகுந்து விட்டதாலா?
சிவாவின் மனதிலும் ஏதேதோ மாற்றங்கள் தெரிந்தன. அவன் நினைவுகள் கனவுகள் எல்லாம் சுமதி தான் நிறைந்து நின்றாள். ஏன்? ஏனிந்த மாற்றம்? இதுவரை அவனுக்கே என்னவென்று புரியாத மாற்றம்! இது தான் காதலென்பதா?
வீட்டுக்குள் அடைந்திருந்தவன் இப்போதெல்லாம் சயிக்கிளை எடுத்துக் கொண்டு அடிக்கடி சுமதிக்குத் தரிசனம் கொடுக்கத் தொடங்கினான். சில சமயங்களில் மறைந்திருந்து அவளைப் பார்ப்பதிலும்,ஒரு புன்னகை பூத்துவிட்டு அவளைக் கடந்து சயிக்கிளில் போவதிலும் அவ்வப்போது திருப்திப் பட்டான்.
தனிமையில் இருக்கும் போது நினைவுகளில் எத்தனையோ சுமதிகள் தென்றலாய் வந்து அவனைத் தழுவிப் போனார்கள்! சேலையில், சூரிதாரில், பாவாடை சட்டையில், கல்லூரிச் சீருடையில், டெனிம்பான்சில், விதம்விதமாய் கலர் கலராய் வந்து அவனைக் கொஞ்சம் கொஞ்சமாய் பைத்தியமாக்கினார்கள்!
தனது மனதை அவளிடம் பறி கொடுத்த நிலையில் தினந் தினம் அவளுக்காக ஏங்கித் தவித்தான். ஏக்கம்? முடிவு தெரியாத ஏக்கம்!
காத்திருப்பதிலும் சுகமுண்டு! ஆனால் அது கனவாய்ப் போய் விட்டால்? எல்லாமே வெறும் கண்ணீர்க் கதை யாய்ப் போய்விடுமோ?
இனியும் மனசு தாங்காது என்ற நிலையில் தன் எண்ணத்தை அவளிடம் எப்படியாவது தெரிவித்து விட வேண்டும் என்று சிவா சிந்தித்தான். நாகரீகமானமுறையில் அவளி டம் எப்படித் தெரிவிப்பது என்று நினைத்த போது சுமதியிடம் சாந்தி வாங்கிக் கொண்டு வந்த கதைப் புத்தகம் சிவாவின் கண்ணில் பட்டது. அதை எடுத்து விரித்துப் பார்த்தான்.
முதற் பக்கத்தில் 'சுமதி" என்று முத்து முத்தாக எழுதப் பட்டிருந்தது. ஏனோ அன்று கோயிலில் பார்த்த மல்லிகைப்பூச் சூடிய முழு நிலவு போன்ற களங்கமில்லா சுமதியின் முகம் அவன் கண்ணுக்குள் நிழலாட அந்தப் புத்தகத்தில் ஏதோ எழுதி வைத்தான்!
சாந்தி வாசித்து விட்டுத் திருப்பிக் கொடுத்த கதைப் புத்தகத்தை தற்செயலாகத் திறந்து பார்த்த சுமதி முதற் பக்கத்தில் ஏதோ எழுதி இருந்ததைப் பார்த்து அதை வாசித்துப் பார்த்தாள்.
‘மலரே...மலரே....மலரே
மாமன் மனதில் மலராதே!
மயங்கிப்போவாய் என்னைக்கண்டால்
மாட்டிக் கொள்ளாதே!’
நிச்சயமாக இது சாந்தியின் கையெழுத்து இல்லை என்பது அவளுக்குப் புரிந்தது.அப்படியானால் இது சிவாவின் வேலைதான்.
வண்டைப் பார்த்து வா! வா! என்று ஆசைகாட்டி அழைக்கும் மலர்களைத் தான் அவள் பார்த்திருக்கிறாள். நெருங்கிவராதே! வந்தால் மாட்டிக் கொள்வாய்! என்று எச்சரிக்கும் வண்டை இப்போது தான் ஆச்சரியமாய்ப் பார்க்கிறாள்.
இது இந்த மலருக்கு எச்சரிக்கையா? இல்லை "நெருங்கி வந்து தான் பாரேன்" என்று சொல்லாமற் சொல்லும் ஆசை வார்த்தைகளா?
பருவத்தின் மாற்றங்கள் மெல்ல மெல்ல மனதையும் மாற்றுமோ? "வேண்டாம்" என்றால் "வேணும்" என்று அடம் பிடிக்கும் வயது! "வராதே" என்றால் இல்லை "வருவேன்" என்று சவால் விடும் மனசு!
மனதைப் பறிகொடுத்தால் ஏன் தான் அவர்களுக்கு மற்றவர்களின் மறுபக்கம் தெரிவதில்லையோ! சுமதி மட்டும் இதற்கு விதிவிலக்கா?
காதல் என்ற வார்த்தையை மட்டும் தெரிந்து வைத்திருந்த சுமதிக்கு இப்போ அதன் அர்த்தம் என்ன என்பது அனுபவரீதியாக மெல்லமெல்லப் புரியத் தொடங்கியது.
இருந்தால், நின்றால், நடந்தால்,படுத்தால் எல்லாமே சிவாவின் நினைவுதான். தனிமையில் அவள் தனக்குள் அடிக்கடி சிரித்துக் கொண்டாள். குளிக்கும் போதும் தனக்குள் தானே கதைத்துக் கொண்டாள். 'சிவா" என்ற மந்திரத்தை எங்கே கேட்டாலும், பார்த்தாலும் உணர்ச்சி வசப்பட்டாள்! பாடப்புத்தகத்தில், கொப்பியில், மேசையில் ஏன் சாப்பிடும் போது தட்டில் கூட தன்னை மறந்து சிவா என்றே விரலால் எழுதினாள். ஸ்ரீராம ஜெயத்தை மறந்தே போனாள்!
சாந்தியின் அண்ணா என்றமுறையில் சிவாவோடு பழகுவதற்கு சுமதிக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தாலும் அவள் இதுவரை அவனிடம் இருந்து ஒதுங்கியே இருந்தாள். சிவாவின் கம்பீரமான தோற்றம், மென்மையான பேச்சு, நல்ல பண்பு, எதையும் சிறந்த முறையில் கையாழும் திறமை, இவை எல்லாமே அவளை அவன்பால் ஈர்த்தாலும், மனதில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமல் அவளது பெண்மை ஏனோ மௌனம் காத்தது!
காதலின் ஆழத்தையும், வேகத்தையும் பொறுத்து காதல் பொய் சொல்ல வைக்கும், சில நேரங்களில் திருடச் சொல்லும், ஏன் கொலை கூடச் செய்யச் சொல்லும்!
அன்று அவர்கள் இருவரும் வீட்டிலே ஏதோ காரணம் சொல்லிவிட்டு கடற்கரையில் சந்தித்தார்கள். மணல் மேட்டில் கடல்அலைகளைப் பார்த்தபடி சுமதி உட்கார்ந்திருந்தாள். முழங்கால்களை மடித்து கைகளை அதன்மேல் வைத்து இயல்பாக இருந்தாள். சிவா அவளுக்கு எதிர்த்தாற் போல் அமர்ந்திருந்தான்.
எதுவுமே பேசாமல் இருவரும் நீண்ட நேரம் அமர்ந்திருந்தது 'மௌனம் தான் காதலின் மொழியோ' என்று நினைக்க வைத்தது.ஆனாலும் நீண்ட மௌனத்தைக் கலைக்க நினைத்த சிவா முதலில் பேச்சைத் தொடங்கினான்.
""ஏன் சுமதி என்னை இங்கே வரச்சொல்லி விட்டு அலைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?"" என்றான் சிவா.
""இல்லை இந்த அலைகள் கரையில் வந்து மோதிப் போவதைப் பார்த்துக் ரசித்துக் கொண்டிருக்கின்றேன்"" என்றாள்.
""தப்பு! அவை மோதவில்லை. நீருக்கு நிலத்தின் மேல் அழியாத காதல்! அதுதான் அவை அடிகடி வந்து முத்தம் கொடுக்கின்றன!""
அவன் சொன்னதைக் கேட்டு அவளுக்குச் சிரிப்புத் தான் வந்தது.
''நீங்களும் உங்க கற்பனையும்? ஆமா சொல்ல மறந்திட்டேன்! உங்க கவிதை ரொம்ப நல்லாயிருந்திச்சு. கவிதை கூட உங்களுக்கு எழுத வருமா?"" என்றாள் அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே!
""கவிதையா? எதைச் சொல்கிறீங்க?'' என்றான் சிவா.
"'என்னோட கதைப் புத்தகத்திலே நான்கு வரிகளில் ஒரு கவிதை எழுதியிருந்தீங்களே அதைத் தான் சொல்கிறேன்!""
""அது கவிதை அல்ல, என்னுடைய மனசிலே பட்டதை அப்படியே அதில் எழுதிவிட்டேன்! தப்பா? ஏன் பிடிக்கவில்லையா?""
""பிடிச்சிருக்கு! ஆனால் அதற்கு என்னோட புத்தகம் தான் கிடைச்சுதா?""
""யாருக்குத் தெரியணும் என்று நினைத்தேனோ அவங்களுக்காகத் தான் அதை அந்தப் புத்தகத்தில் எழுதினேன்"".
''அப்போ....எனக்காகவா?"" அவள் விழிகளை உயர்த்தி ஆச்சரியமாய் கேட்டாள்,
"'ஆமா"" என்று சொல்லிவிட்டு தலையையும் அசைத்துக் கொண்டு சுமதியின் முகத்தைப் பார்த்தான். அவளது முகத்தில் வியப்பு, ஆச்சரியம், பயம், சந்தோஷம் எல்லாமே மாறிமாறி வந்து போயின!
""அப்போ என்னை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?"" என்றாள்;.
அவள் ஆவலோடு அவனைப் பார்த்துக் கேட்டபோது சிவா எதுவுமே சொல்லாமல் மௌனமாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
இது என்ன கேள்வி? இந்த அழகான நிலவை யாருக்குத் தான் பிடிக்காது?
""ப்ளீஸ்.. சொல்லுங்களேன்! டூ யூ லவ் மீ?"" ஆசையாய் அவன் முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.
""ஆமாம், உன்னையும்...இந்தமண்ணையும் விரும்புகின்றேன்""
சூரியா ஒரே பிள்ளை என்பதால் வீட்டிலே செல்லமாகத் தான் வளர்ந்தான். சின்ன வயதிலிருந்தே அவன் கேட்டதெல்லாம் அவனது வீட்டில் வாங்கிக் கொடுத்தார்கள். தினமும் மடிப்புக் கலையாத ஆடைகள் அணிந்து தான் பாடசாலைக்கு வருவான். விரல்களில் மோதிரங்களும், கழுத்தில் சங்கிலியும், கோல்ட் செயின் ரிஸ்வாச்சும், புத்தம் புதிய 'றலி" சயிக்கிளும் அவனைப் பணக்கார வீட்டுப் பிள்ளை என்று அடையாளம் காட்டின. கையிலே காசிருந்ததால் அவனைச் சுற்றி எப்பொழுதும் ஒரு கும்பல் நிற்கும்.
சிகரட் கையிலே புகைத்தால் தான் "ஃபாஷன்" என்று நினைத்ததாலோ என்னவோ பாடசாலைக்கு வெளியே நிற்கும் போது அவனது விரல் இடுக்கில் சிகரட் புகைத்துக் கொண்டே இருக்கும். சயிக்கிள் மிதித்து அலுத்துப் போன அவன் "ஹொண்டா மோபைக்" வேண்டுமென்று வீட்டிலே கேட்டிருந்தான். வாங்கித் தருவதாகப் பெற்றோர் வாக்குக் கொடுத்திருந்தார்கள்.
அவன் கேட்டதெல்லாம் இலகுவில் கிடைத்ததால் தான் விரும்பியதை எல்லாம் இலகுவில் அடையலாம் என்ற தவறான எண்ணத்தை மனதில் வளர்த்திருந்தான்.
சாந்தியின் விடயத்திலும் அவளை இலகுவில் அடையலாம் என்ற ஒரு தப்பான எண்ணத்தையே இதுவரை வைத்திருந்தான். சாந்தி தன்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை என்று தெரிந்த போது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது. அந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கிக் கொள்ள முடியாமலும் இருந்தது.
சாந்தியின் சினேகிதி ஒரு நாள் கதையோடு கதையாக சூரியா சாந்தியை விரும்புவதாகச் சொன்ன போது சாந்தி சிரித்து விட்டு அவளிடம் ""ஒரு பெண் ஒருவனை விரும்ப வேண்டு மானால் அவனிடம் அவள் எதிர்பார்க்கும் சில தகைமைகளாவது இருக்க வேண்டும். சூரியாவிடம் என்ன "மைனர் செயினையும்" அவன் சிகரட் பிடிக்கும் ஸ்ரைலையும் எதிர்பார்த்து நான் மயங்கிவிடுவேன் என்று நினைக்கிறாயா?""என்றாள்.
இந்த விடயம் சினேகிதி மூலம் சூரியாவிற்குத் தெரிய வந்த போது சாந்தி தன்னை வேண்டுமென்றே அவமானப் படுத்துவதாக நினைத்தான். அவள் விலகி விலகிச் செல்ல அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஆசை அவனிடம் வெறியாக மாறியது. பரீட்சை முடிந்ததும் முதல் வேலையாக அவளிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்தக் காத்திருந்தான்!
""அண்ணா ஆறுமணியாச்சு! எழும்பி முகம் கழுவிக் கோப்பி குடி! இன்னும் படுத்திருந்தால் அப்பாவிடம் பேச்சுத்தான் வாங்குவாய்!""
""அப்பா பேசுவார்"" என்று சாந்தி சொன்னதும் சிவா எழும்பி சோம்பல் முறித்து விட்டு பல்துலக்கி முகம் கழுவிக் கொண்டு வந்தான். அப்பாவிடம் எப்பொழுதுமே மரியாதை வைத்திருந்தான். பாடசாலை ஆசிரியரான அவரை எல்லோரும் "மாஸ்ரர்" என்று மரியாதையோடு அழைக்கும் போது சிவாவிற்கு உச்சி குளிர்வதுண்டு.
சாந்தி அவன் கையிலே கோப்பியைக் கொடுத்து விட்டு பேசாமல் நின்றாள்.
அவள் தயங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்ததும் தன்னிடம் ஏதோ கேட்கப் போகிறாள் என்பது சிவாவிற்குப் புரிந்தது!
""என்ன சாந்தி பள்ளிக்கூடம் போகலையா?""
""போகணும்.....ஆனால் உன்கிட்ட ஒரு விசயம் சொல்லணும் அதுதான்?""
""என்ன விஷயம்? சொல்லேன்"",
""சொல்லுறேன் ஆனால் நீ கோபிக்க மாட்டியே? அம்மா கிட்ட ஒன்றும் சொல்ல மாட்டியே?"" வார்த்தைகளில் தயக்கம் தெரிந்தது.
""சரி......என்ன என்று முதலில் சொல்லேன்!""
அவள் சொல்ல முடியாமல் முதலில் தயங்கினாள். ஆனால் எப்படியும் இதற்கு ஒரு முடிவு காணவேண்டும் என்பதால் தயங்கித் தயங்கிச் அவனிடம் சொன்னாள்,
""உனக்கு என்னோட கிளாஸ்மேட் சூரியாவைத் தெரியும்தானே?
""ஆமா!சிகரட்குடித்துக்கொண்டு ஃபிரெண்ட்சோட சயிக்கிள்ள திரிவானே? பெரிய ஹ{ரோ என்ற எண்ணம்! அவன்தானே?""
""ஆமா! அவனுடைய ஃபிரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து என்னையும் அவனையும் சேர்த்து பகிடி பண்ணுகினம். நேற்று எல்லாருக்கும் முன்னாலே என்னைப் பார்த்து ""ஐ லவ்யூ சாந்தின்னு"" பாட்டுப் படிக்கிறான். எனக்கு ஒரே அவமானமாய்போச்சு"" சொல்லும் போது விசும்பினாள். அவள் கண்களில் நீர் முட்டி கன்னத்தில் மெல்ல வழிந்தது.
சிவாவிற்கு சட்டென்று முகம் சிவந்து கோபம் வந்தது. படிக்கிற தங்கச்சியோட இவங்களுக்கு என்ன சேட்டை?
""அழாதே! ஏன் இப்ப அழுகிறாய்? நான் இருக்கும்
மட்டும் பயப்படாதை! இவங்களுக்கு இரண்டு தட்டுத் தட்டினால் தான் சரிவரும்"" சொல்லிக் கொண்டே சிவா எழும்பினான்.
பயந்து போன சாந்தி அவனது கைகளைப் பிடித்து நிறுத்தினாள்.
""பிளீஸ் அண்ணா சண்டை சச்சரவுக்குப் போகாதே!""
"'அப்ப என்ன தான் செய்யச் சொல்கிறாய்?""
"'அவனிட்டை தன்மையாச் சொல்லிப் பாரேன்.....பிளீஸ்!"" கெஞ்சினாள்.
சிவா முதலில் கோபப்பட்டாலும் பின் நிதானமாகச் சிந்தித்தான்!
அப்பா அம்மாவிற்கு தெரியவருமுன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று சிவா நினைத்துக் கொண்டான். அண்ணன் என்ற முறையில் தங்கையின் எதிர் காலம் அவனுக்கு முக்கியமாகப் பட்டது.
இந்த வயதில் இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று இதைப் பேசாமல் விட்டு விட முடியுமா? எக்காரணம் கொண்டும் சாந்தியின் பெயர் வெளியே அடிபடுவதை சிவா விரும்பவில்லை! இந்த விடயத்தைக் கவனமாகக்கையாள வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.
முள்ளு சேலையிலே முட்டினால் என்ன சேலை முள்ளிலே பட்டால் என்ன சேலைக்குத் தான் நட்டம் என்பது அவனுக்குத் தெரியும்!
சூரியாவிடம் பக்குவமாய் இதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு அவனை மறுநாள் கல்லூரிவாசலில் காத்திருந்து சந்தித்தான். "தங்கைக்கு விருப்பமில்லை எனவே அவள் விஷயத்தில் தலையிடாதே" என்று சொல்லி வைத்தான்.
ஆனால் சூரியாவோ எதையும் கேட்கத் தயாராய் இல்லை.
""நீ சொல்வதைச் சொல் நான் செய்வதைச் செய்வேன்"" என்பது போல அவனது பதில் இருந்தது. ""சிவா உன்னைக் கேட்டு நான் சாந்தியைக் காதலிக்க வில்லை! சாந்தி நேரே வந்து என்னைத் தான் விரும்பவில்லை என்று சொல்லட்டும் நான் பேசாமல் போயிர்றேன்"" என்றான். இதைக் கேட்ட சிவா உடனே பதில் சொல்ல முடியாமல் மௌனமானான்.
""சொல்லுவா நிச்சயமாய் சொல்ல வைக்கிறேன்! என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு வீட்டிற்கு வந்தான்.
பரீட்சைக்கு சாந்தி படித்துக் கொண்டிருந்தபடியால் அவள் படிப்பைக் குழப்பவேண்டாம் சோதனை முடியட்டும் அப்புறம் இது பற்றிக் கதைக் கலாம் என்று பொறுமையாய் இருந்தான்.
சாந்தியோ இது பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் பரீட்சைக்காக மும்மரமாய்ப் படித்துக் கொண்டிருந்தாள்!
இடமாற்ற உத்தரவைப் படித்துவிட்டு வியப்போடு உட்கார்ந்திருந்தார் அந்த இராணுவமுகாம் பொறுப்பதிகாரியான குணத்திலக்கா. நேர்மைக்கும் நியாயத்திற்கும் இப்போ இங்கே இடமில்லை என்பதை அந்த உத்தரவு நிரூபித்து விட்டிருந்தது.
பிரித்தானிய அதிகாரிகளிடம் பயிற்சி பெற்ற படியால் அவர் இராணுவ கட்டுப் பாடுகளை மதித்து வந்தார். சென்ற மாதம் திடீரென இராணுவப் பொலீஸ் அதிகாரிகள் இவரது முகாமிற்கு வந்திருந்தனர். பல மணிநேரம் கேள்விக்கு மேல் கேள்விகளாய்க்கேட்டனர்.
இந்த முகாமைச் சுற்றி வர இருக்கும் மக்கள் எப்படி ஒரு குழப்பமும் இல்லாமல் கட்டுப் பாட்டோடு இருக்கிறார்கள் என்று கேட்ட கேள்விக்கு இராணுவம் கட்டுப் பாட்டோடு இருந்தால் மக்களும் கட்டுப்பாட்டோடு இருப்பார்கள் என்று பதில் சொன்னார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஒன்றுமே அவர் பொறுப்பெடுத்த பின் இங்கு நடக்கவில்லை என்பதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப் பட்டார்கள்.
இவரை மேலிடத்திற்குபரிந்துணர்வு செய்வதாகச் சொல்லி விடை பெற்றார்கள். விடை பெறும் போதுஅவருக்குப் பழக்கமான ஒரு அதிகாரி அவரைத் தனியே அழைத்து "மேலிடம் உங்களிடம் இதை எதிர்பார்க்க வில்லை! உத்தி யோக பூர்வமாக சமாதானம் அமைதி என்றெல்லாம் சொன்னாலும் உண்மையிலே இந்த மண்ணில் குழப்பத்தைத்தான் இராணுவம் எதிர்பார்க்கின்றது. திட்ட மிட்ட முறையில் இன ஒழிப்புச் செய்வதற்கு இது தான் சிறந்த வழி. உலக நாடுகளை சமாதானம் என்ற போர்வைக்குள் ஏமாற்றிக்கொண்டு இந்த இனத்தை
அழித்து ஒழிக்க வேண்டும் என்பது தான் மேலிடத்தின் விருப்பம்"" என்று எடுத்துச் சொன்னார்.
குணத்திலக்கா இடமாற்றம் பெற்றுச் செல்ல அந்த முகாம் பொறுப்பதிகாரியாக ஜெயரட்ணா நியமிக்கப் பட்டான்.
குணத்தில் மட்டுமல்ல அவனது முகத்தைப் பார்த்தாலே குள்ளநரியின் நினைவு தான் எல்லோருக்கும் வரும். பிறப்பிலேயே குரூர எண்ணங் கொண்டவன். துப்பாக்கியைவிடக் கத்தியால் மனித உடல்களைக் கீறிப்பார்ப்பதில் திருப்திப்படுபவன். சிரித்துச் சிரித்துக் கதைத்தாலும் தமிழர்களைப் பூண்டோடு ஒழிக்க வேண்டும் என்பதே இவனது குறிக் கோளாக இருந்தது.
முகாமைப் பொறுப்பெடுத்த உடனேயே நடை முறையில் பல மாற்றங்களைச் செய்தான். முகாமின் பாதுகாப்புக் கருதி முகாமிற்கு முன்னால் சோதனைச் சாவடி ஒன்றை ஏற்படுத்தினான்.
மாலை ஆறு மணி தொடக்கம் மறுநாள் காலை ஏழு மணிவரையும் மக்களின் நடமாட்டத்தை அப்பாதையில் தடை செய்தான். பசி எடுத்த போதெல்லாம் முகாமிற்குப் பக்கத்து வளவில் இருக்கும் புவனாவின் வீட்டிற்குச் சாப்பிடப்போனான். பணத்திற்காக அவள் எதையும் செய்யத் தயாராக இருந்ததால் தனக்குத் தேவையான தகவல்களையும் அவளிடம் இருந்தே பெற்றுக் கொண்டான்.
மதுவும் மங்கையும் அவனுக்குத் தினமும் தேவைப்பட காலப் போக்கில் இராணுவப் பாதுகாப்போடு அங்கேயே நிரந்தரமாகத் தங்கத் தொடங்கினான். சின்ன வயதிலிருந்தே அவன் தமிழர்களைப்பற்றி இரண்டு விடயங்களை அறிந்து வைத்திருந்தான்.
ஒன்று தமிழர்களின் வீட்டில் இருக்கும் இரும்புப் பெட்டி ஒரு தங்கச் சுரங்கம், மற்றது தமிழ்ப் பெண்கள் பத்தரை மாற்றுத் தங்கம்! என்றாவது ஒரு நாள் இவற்றை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறி தினந்தினம் அவனிடம் வளர்ந்து கொண்டே வந்தது.
இவற்றை இலகுவில் அடையவேண்டு மானால் இந்த ஊரைக் குழப்ப வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான்.அவனுக்குத் துணையாக அந்த முகா மைச் சேர்ந்த லெப்டினன்ட் சோமசிறியும் கோப்ரல் பண்டாவும் ஊரைக் கொள்ளை அடிக்க எங்கேயாவது கண்ணிவெடி வெடிக்காதா என்று சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்! உறுமீன் வரும் வரையும் காத்திருக்கும் கொக்குப் போல யாராவது தனது வலையில் சிக்க மாட்டார்களா என்று தினமும் முகாமில் காத்திருந்தான் ஜெயரட்ணா!
சாந்தி ஒரே பதட்டமாக இருந்தாள்.அன்று பரீட்சையின் கடைசித்தினம். எப்படியும் இந்த இரண்டு பாடங்களையும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அதிகாலையிலேயே எழுந்திருந்தாள். இரவு படித்தவற்றை திரும்பவும் ஒரு தடவை மேலோட்டமாகப் பார்த்து விட்டு அவசரமாய்க் குளித்து சீருடை அணிந்து கொண்டாள். சுவாமி அறையில் இருந்து அப்பா பாடிக் கொண்டிருந்த தேவாரம் கணீரென்று அவள் காதில் விழுந்தது. சுவாமி கும்பிட்டு அப்பாவிடம் இரண்டு கைகளாலும் வீபூதி வாங்கிப் பயபக்தியோடு நெற்றியில் பூசிக்கொண்டாள்.
""சுவாமி கும்பிட்டாயாம்மா?""அம்மாவின் குரல் சமையலறையில் இருந்து கேட்டது
""கும்பிட்டேன்"" என்றாள் அங்கிருந்தே.
""கொஞ்சம் சாப்பிட்டுப் போம்மா"" தாயின் குரலில் பரிவு தெரிந்தது!
""வேண்டாம், நேரம் போச்சு"" அவளின் குரலில் அவசரம் புரிந்தது.
""நேரமிருக்கு! ஒரு வாய் என்றாலும் சாப்பிட்டு விட்டுப் போ""இப்போஅம்மாவின் குரல் கண்டிப்போடு வந்தது. ஒரு தட்டில் போட்டு ஊட்டி விட்டாள். இந்த வயதிலும் அவளுக்கு அம்மா ஊட்டி விட்டால் சாப்பிடப் பிடிக்கும். வேண்டாம், போதும் என்று சொல்லிச் சொல்லியே சாப்பிடு வதில் அவளுக்கு
ஒருதிருப்தி.
"'வேலை வெட்டியை விட்டு விட்டு இந்த வயதிலும் உனக்குச் சாப்பாடு தீத்த வேண்டி இருக்கு"" என்று செல்லமாகத் திட்டிக் கொண்டு சாப்பாடு தீத்துவதில் அம்மாவிற்கும் விருப்பம். அண்ணனுக்குப் பிறகு பிறந்த தங்கை என்பதால் வீட்டிலேசெல்லம்அதிகம்.
சாந்தி லேடீஸ் சயிக்கிளை வெளியே எடுத்து வந்தபோது முன்சில்லில்; காற்றுக் குறைந்திருப்பதை அவதானித்தாள். நேரம் போய்விட்டது இப்ப என்ன செய்வது என்று தெரியாமல் அவளுக்கு அழுகையே வந்தது.
""அம்மா சைக்கிள் காற்றுப் போயிடிச்சு, அண்ணாவை எழுப்பி காற்றடிச்சு விடச் சொல்லேன் நான் சீக்கிரம் போகணும்""
""அவன் குறட்டை விட்டுக் கொண்டிருப்பான். எனக்குத் தெரியாது. நீயே போய் அண்ணாவை எழுப்பிக்கேள், நீ கேட்டால் கட்டாயம் செய்வான்""
வேறு வழியில்லாமல் அவள் போய்ச் சிவாவை எழுப்பி முன் சில்லுக்குக் காற்றடித்து விடும்படி கெஞ்சிக் கேட்டாள். நித்திரைத் தூக்கத்தில் தன்னை ஏசுவானோ என்று பயந்தாள். சாந்தி கேட்டு எதையும் அவன் இது வரை மறுத்ததில்லை. அவளைப் பார்க்க அழுது விடுவாளோ என்று பரிதாபமாக இருந்தது. சிவா எதுவும் சொல்லாமல் எழுந்து சயிக்கிள் சில்லுக்குக் காற்றடித்து விட்டான். நேரம் போச்சு என்று அழுதுகொண்டிருந்த அவளை மெல்லத் தேற்றிப் பரீட்சைக்கு போய்வா என்று அன்போடு அனுப்பி வைத்தாள் அந்தப் பாசம் மிக்க தாய்.
பரீட்சை நன்றாக எழுதிய சந்தோஷத்தில் தோழிகள் எல்லோரும் சேர்ந்து நன்றாகச் சிரித்துக் கும்மாளமடித்தனர். மழைமேகம் முட்டி வானம் இருட்டிக் கொண்டு வர சினேகிதிகள் ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். சாந்தியும் தனது சயிக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். முன்சில்லு முற்றாகக் காற்றுப் போயிருந்தது. சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு சயிக்கிள் கடைக்குப் போனாள். கூட்டம் அதிகமாக இருக்கவே முன் சில்லுக்கு காற்றடித்துக் கொண்டு அவசரமாக மிதித்துக் கொண்டு போனாள்.
பொட்டுப் பொட்டாய் விழுந்த மழைத் தூறல் மின்னலும் இடியுமாய் இப்போ சோவென்று கொட்டியது. மழையில் நனைந்தபடி முன்வீட்டு சிறுவன் தினேஷ் சயிக்கிளில் அவளைக் கடந்து வேகமாகப் போனான். ""சாந்தியக்கா கெதியாய் வாங்கோ செக்பொயின்ற் மூடப் போறாங்கள்"" என்று சொல்லிக் கொண்டே விரைவாகப் போனான்.வீட்டிலே ஏச்சு விழப்போகிறது என்பதை விட செக்பொயின்ற் மூடினால் என்ன செய்வது என்ற பயம் இப்போது அவளைப் பிடித்துக் கொண்டது. மங்கிய இருட்டும் மழையும் மட்டுமல்ல சயிக்கிளின் முன்சில்லும் மறுபடியும் முற்றாக காற்றுப்; போய் அவளுக்கு எதிராய்ச் சதி செய்தன!
பரீட்சை முடிந்ததும் எப்படியும் சாந்தியைச் சந்திக்க வேண்டும் என்ற பிடிவாதத்தோடு சூரியா கல்லூரி வளவிற்கு வெளியே வாசலில் சயிக்கிளோடு காத்திருந்தான். நீண்ட நேரம் காத்திருந்தும் சாந்தி வெளியே வராமல் போகவே அருகேஉள்ள கடையில் சிகரட் வாங்கி வரப்போனான்.
சிகரட் வாங்கிக்கொண்டு வந்து நண்பர்களிடம் விசாரித்த போது சாந்தி சிறிது நேரத்திற்கு முன் போய் விட்டதாகச் சொன்னார்கள். அவளைத் தனியே சந்திக்க இன்று தான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்தவன் விரைவாகச் சயிக்கிள் மிதித்தான்.
சில நாட்களின் முன் சிவா அவனை எச்சரித்தது அவனுக்கு அப்போது ஞாபகத்தில் வந்தது. எல்லா அண்ணண்மாரும் இப்படித்தான் வெருட்டுவார்கள், ஏன் சில நேரங்களில் அடிதடி சண்டைக்கும் வருவார்கள். இதற்கெல்லாம் பயந்து கொண்டு ஒதுங்கிப் போயிருந்தால் காதற்கலியாணம் ஒன்றுமே இங்கு நடந்திருக்காது என்று நினைக்க அவனுக்குச் சிரிப்பு வந்தது."'மச்சான்"' என்று சிவா தன்னைஅழைக்கும் நிலை ஒருநாள் வரும்போதுஅவனின் மனநிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான்.
இது கற்பனையல்ல சிவாவை அப்படி அழைக்கவைக்கிறேன் என்ற பிடிவாதத் தோடு விரைவாக மிதித்தவனைச் சயிக்கிள்கடை வாசலில் நின்ற நண்பன் மறித்தான். சயிக்கிளை நிறுத்தி ஒற்றைக் காலை நிலத்திலே ஊன்றியபடி ""என்ன?"" என்றான். நண்பன் அருகே வந்து அவன் காதுக்குள் ஏதோ சொல்ல ""உண்மையாவா?"" என்றான் சூரியா.
""ஆமா இப்போதான் போகிறா கெதியாய்ப் போனால் பிடிக்கலாம்"" என்றான். எப்படியும் இன்று ஒரு முடிவு தெரியவேண்டும் என்ற ஆவலோடு கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது எட்டி விரைவாக மிதித்தான் சூரியா. சனசந்தடி இல்லாமல் தெரு தனித்து நின்றது. மங்கிய இருட்டில் மழைத் தூறலில் நனைந்தபடி சாந்தி தூரத்தில் போவது கண்ணுக்குத் தெரிந்தது. மழைக் குளிரில் உடம்பு சிலிர்க்க, நீண்ட நாள் ஆசையை எப்படியும் நிறை வேற்றும் எண்ணத்தோடு சயிக்கிளை இன்னும் விரைவாக மிதித்தான்!
சிவாவைச் சந்திக்கும் போதெல்லாம் ""டூ யூ லவ் மீ"" என்று கேட்டு வைப்பாள் சுமதி. அவனும் ""உன்னையும் இந்த மண்ணையும் நேசிக்கிறேன்"' என்று சொல்லிக் கொள்வான். என்றாவது ஒரு நாள் ""உன்னை, உன்னை மட்டும் தான் காதலிக்கின்றேன்"" என்று சொல்லமாட்டானா என்கிற ஆதங்கம் அவள் மனதில் இருந்து கொண்டே வந்தது. அன்று மனம் பொறுக்க முடியாமல் சிவாவை நேரடியாகவே கேட்டுவிட்டாள்.
""எப்போபார்த்தாலும் பிறந்தமண்ணை நேசிக்கிறேன் என்று சொல்கிறீர்களே அப்படி என்றால் என்ன அர்த்தம்?""
சிவா அவள் முகத்தை நேரே பார்த்துச் சிரித்தான்.
"'சொல்லுறேன் சுமதி! நான்சொல்வதைக் கவனமாகக்கேட்பாயா?
அவள் ""ஆம்""என்று தலையாட்டினாள்.என்னதான் சொல்லப் போகிறான், கொஞ்சம் கேட்டுத் தான் பார்ப்போமே!""
இந்த மண் எங்கள் இனம் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த மண். எங்கள் மொழியும் இனமும் இன்று திட்டமிடப் பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. கண்முன்னாலேயே எங்கள் மண் பறிபோகி ன்றது. இவற்றை எப்படியாவது நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு முதலில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி எங்கள் உரிமைக்காக நாங்கள் எல்லோரும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும்.""
""போராடமென்றால் ஆயுதமேந்தியா?"" என்று கேட்டாள் சுமதி.
""இல்லை சுமதி! எனக்கு ஆயுதம் ஏந்துவதில் நம்பிக்கை இல்லை!""
""அப்போ என்னதான் செய்யப்போகிறீங்க?கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமா?''
"'ஆமா எங்கள் உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் அமைதியாக, சாத்வீகமாக, ஜனநாயக முறைப்படி இந்தமண்ணில் போராடப்போகிறோம்"".
அவள் ஒன்றும் புரியாமல் "மண்ணையும் மக்களையும் விரும்பும் ஒருவனை" முதன்முதலாகப் பார்ப்பது போல அவனை அதிசயமாய்ப் பார்த்தாள்.
ஜனநாயக முறைப்படிதானே மக்கள் பிரதிநிதிகளைத் தெரிந்து எடுத்தோம். எங்கள் உரிமைகளை வென்றெடுக்கத்தானே அவர்கள் மௌனஊர்வலம் போனார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், சத்தியாக்கிரகம்கூடச் செய்து பார்த்தார்கள் கடைசியில் என்னபலன் கிடைத்தது?
என்ன பலன் கிடைத்த தென்று அவளுக்குப் புரியவில்லை! எது எப்படி இருந்தாலும் சிவாவின் விருப்பம் தான் தனது விருப்பம் என்று தீர்மானித்துக் கொண்டாள். மழைத்தூறல் பலமாக விழத்தொடங்கவே இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வீடு சென்றனர்.
மழையில் நனைந்தபடி சிவா வீட்டிற்கு வந்த போது தாயார் வாசலில் பதட்டத்தோடு நிற்பதைக் கண்டான். சாந்தி இன்னமும் வீட்டிற்கு வந்து சேரவில்லை என்ற செய்தி அவனுக்கு இடியாய் விழுந்தது.
முன்வீட்டுச் சிறுவன் தினேஷ் சாந்தியை வழியில் கண்டதாகவும், சாந்தியைத் தேடித் தகப்பனார் போயிருப்பதாகவும் தாயார் சொல்ல, சிவா உடனே தினேஷின் வீட்டிற்குப் போனான்.
சூழ்நிலையின் இறுக்கத்தைப் புரியாத தினேஷ் ‘சிவாஅண்ணை என்னுடைய சயிக்கிள் பழசு என்றாலும் நான் சூரியண்ணாவையும் சாந்தியக்காவையும் ஃபாஸ்ரா முந்திக்கொண்டு வந்து விட்டேன்’ என்றான்.
சூரியாவைபற்றிச் சொன்னதும் சிவா சூரியாவின் வீட்டிற்கு விரைந்தான்.
‘சூரியா இன்னும் வீட்டிற்கு வரவில்லை’ என்ற செய்தி சிவாவிற்கு தாங்கமுடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது!
தினேஷ் செக்பொயின்ரைக் கடந்து சென்றதும் வீதித் தடையைப் போட்டு விட்டு மழைக்குளிருக்கு சிகரட் ஒன்றைப் பற்ற வைத்தான் கோப்ரல் பண்டா.
மழையில் நனைந்தபடி அப்போது தான் அங்கே வந்த சாந்தி சயிக்கிளில் இருந்து கீழே இறங்கினாள். மங்கிய வெளிச்சத்தில் யாரென்று ரோச்லைட்ரை முகத்தில் அடித்துப் பார்த்தான் பண்டா.
சிகரட் புகையை ஊதிக்கொண்டே ‘பொண்ணு’ என்று அவனது வாய் முணு முணுக்க ‘சின்னப் பெண்ணு’ என்று மனசு சொல்லிற்று.
ரோச்லைட் வெளிச்சத்தை சற்றே கீழே இறக்கியவன் அப்படியே வெறித்துப் பார்த்தான். மழையில் நனைந்த வெள்ளை யூனிஃபோம் உடம்போடு ஒட்டியிருந்தது. விரைவாக சயிக்கிளில் வந்ததால் அவள் மூச்சுவாங்க அவளது மார்பு ஏறிஇறங்கியது.
உடம்பில் ஒருவித சூடேற அவன் சிகரட்டை கீழேபோட்டு பூட்ஸ்ஸால் மிதித்தான். சுற்று முற்றும் பார்த்தான். வேறுயாரும் இல்லை என்று தெரிந்ததும், அவளிடம் தேவையில்லாத கேள்விகள் கேட்டான்.
அவனது வக்கிரமானபார்வையால் பதட்டப் பட்டசாந்தி புத்தகத்தால் மார்பை மறைத்துக் கொண்டு பயந்து போய் பதில்சொன்னாள்.
‘கையிலே என்னகொண்டுபோறது’ என்றான்.
‘படிக்கிறபுத்தகம்’ என்றாள். இந்த நேரம் பாரத்து நாக்கு ஏன் தடக்கிறது.
அவன் புத்தகத்தை வாங்கிப்பார்த்தான்.
இப்போ மறைக்க எதுவும் இல்லாததால் தனது கைகளைக் குறுக்கே கட்டிக் கொண்டு மழைக் குளிரில் நடுங்கினாள்.
‘சட்டைப் பையிலே என்ன இருக்கு’ என்றான் கடுமையான குரலில்.
‘ஒன்றும் இல்லை’ என்று தலையசைத்தாள் கேள்வியின் அர்த்தம் புரியாமல்.
‘கிறனெட்டா?’ என்றவன் அவளின் பதிலுக்குக் காத்திராமல் அவளது மார்பிலே கைவைத்தான். எதிர்பாரத அவனதுசெய்கையால் பதட்டமடைந்த சாந்தி ஒரு கணம் திகைத்துப்போய் உறைந்தவள் மறுகணம் வீரிட்டாள்.
நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு முகாமில் இருந்த ஏனையவர்களுக்கும் அந்த அலறல் கேட்டாலும், தினமும் கேட்டுப் பழகிப்போன இது போன்ற அலறல் என்பதால் அங்கே யாருமே அலட்டிக் கொள்ளவில்லை.
சாந்தியைத் தேடிப்போன தகப்பன் அக்கம்பக்கத்தில் விசாரித்து சாந்தி இராணுவ முகாமைக் கடந்து மறுபக்கம் வரவில்லை என்பதை உறுதி செய்து கொண்டார். இராணுவமுகாமுக்கு முன்னால் வீதித்தடை போடப்பட்டதால் காலை ஏழுமணிவரை அந்தப் பக்கம் போகமுடியா தென்பதும் அவருக்குக் கவலையைக் கொடுத்தது.
ஒரே ஒரு வழிதான் இருக்கிறது அதை முயற்சி செய்து பார்ப்போம் என்று நினைத்தவர் உடனே புவனாவின் வீடு நோக்கிச் சென்றார்.
வாசலிலே நின்ற சென்றி அவரை வழி மறித்தான். ஆபத்திற்குப் பொய் சொன்னால் பாவமில்லை என்று நினைத்தவர் புவனாவின் உறவினர் என்றும், புவனாவைப் படிப்பித்த ஆசிரியர் என்றும் சொல்லி வைத்தார்.
வாசலில் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த புவனா எல்லோராலும் ஒதுக்கப்பட்ட தன்னிடம் மாஸ்ரர் உதவி கேட்டு வந்திருப்பதை எண்ணித் தனக்குள்; பெருமைப்பட்டவள் மாஸ்ரரை உள்ளே அழைத்துச் சென்று என்ன விடயம் என்று விசாரித்தாள்.
‘பாடசாலையால் சாந்தி வீட்டிற்கு வந்து சேரவில்லை, அதுதான்..’ சொல்ல முடியாமல் தடுமாறினார் மாஸ்டர் பதட்டத்தோடு.
‘என்னநடந்திருக்கும்’ என்பதைப் புவனா ஊகித்துக் கொண்டாள்.
அறைக்குள் சென்று மதுபோதையில் படுத்திருந்த ஜெயரட்ணாவிடம் மாஸ்ரருக்கு உதவி செய்யுமாறு கேட்டாள். ஜெயரட்ணாவிற்கு விருப்பம் இல்லாவிட்டாலும் புவனா தினமும் அவனுக்குத் தேவைப்பட்டதால் மாஸ்ரரையும் அழைத்துக் கொண்டு முகாமிற்குப் போனான்.
முகாமின் பின் பகுதியில் இருந்த வதை முகாமுக்குள் நுழைந்த போது ஒரே நிசப்தமாயிருந்தது. அந்த இரவின் நிசப்தத்தின் பின்னணியில் ஏதோ பயங்கரமிருப்பது புரிந்தது. இரத்த வாடையும் மிளகாய்த்தூள் நொடியும் வயிற்றைப் பிரட்டியது.
வாசலில் சாக்கு மூட்டை ஒன்று இரத்த வெள்ளத்தில் தோய்ந்து கிடந்தது. திறந்திருந்த கதவிடுக்குவழியாக அறைக்குள் ஒரு இளைஞன் மயங்கிய நிலையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. வாய்க்குள்ளால் இரத்தம் வழிந்து நெற்றிப் பொட்டில் உறைந்திருந்தது.
மாஸ்ரருக்கு நிலமை மெல்லமெல்லப் புரிந்தது. வரக்கூடாத இடத்திற்கு வந்து விட்டது போன்ற உணர்வு எற்பட்டது.
‘கடவுளே மகளுக்கு ஒன்றும் நடந்திருக்கக் கூடாது’ என்று வேண்டாத கடவுள் எல்லாம் வேண்டிக் கொண்டார். ஜெயரட்ணா எதுவுமே நடக்காதது போலத் தனது அறைக்குள் அழைத்துச் சென்று தனது மேசைக்கு எதிரே உள்ள நாற்காலியில் மாஸ்ரரை உட்காரவைத்தான்.
மாஸ்ரர் மனதில் ஏற்பட்ட பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நுனி நாற்காலியில் வேண்டா வெறுப்பாய் அமர்ந்தார். போதையிலும் ஜெயரட்ணா நிதானமாகப் பேசினான். வார்த்தைகளைக் கவனமாக அளந்து வைத்தான்.
""சொல்லுங்க மாஸ்ரர் என்ன நடந்தது?""
""என்னுடைய மகள் பள்ளிக்கூடம் போனவள் திரும்பி வரவில்லை"".
""அதற்கு நாங்க என்ன செய்யணும் என்று நீங்க எதிர்பார்க்கிறீங்க?""
"'ஒரு வேளை செக்பொயின்ரிலை அவளைச் செக்பண்ணியிருப்பாங்களோ என்று விசாரித்துச் சொன்னால் நல்லது"" மனதில் பட்டதை சொன்னார்.
""செக்பொயின்ரிலே உங்க மகளை கண்டதாக யாராவது சொன்னாங்களா?""
""இல்லை! ஆனால் இந்தப் பாதையால் வந்ததாகச் சொன்னாங்க.""
""சொன்னா நம்பிவிடுவீங்களா?"" குரலில் கடுமை தெரிந்தது.
மாஸ்ரர் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்தார்.
'இந்த இடத்தை விட்டு விரைவாகப் போய்விடு" என்று அவரது உள்மனசு சொல்லிற்று.
அவரைத் திருப்திப்படுத்த ஜெயரட்ணா கோப்ரல் பண்டாவையும் லெப்டினன்ட் சோமசிறியையும் அவருக்கு முன்னால் அழைத்து இதுபற்றி விசாரித்தான்.
‘பெண்ணா?’ அப்படி ஒருவரையும் காம்புக்குள் கொண்டு வரவில்லை என்றார்கள்.
தங்களுக்கு எதுவுமே தெரியாதென்று முற்றாக மறுத்தார்கள். அவர்களின் முகபாவனையில் இருந்து அவர்கள் தன்னிடம் எதையோ மறைக்கிறார்கள் என்பதை மாஸ்ரர் புரிந்து கொண்டார்.
இதற்கு மேல் அங்கே இருப்பதில் பிரஜேசனம் இல்லை என்று நினைத்த மாஸ்ரர் ஜெயரட்ணாவின் உதவிக்கு நன்றி சொல்லி விடைபெற லெப்டினட் சோமசிறி அவரை வெளியே அழைத்து வந்தான்.
வெளியே வரும்போது தீனமான குரலில் யாரோ போராடும் சத்தமும் அதைத் தொடர்ந்து "'அம்மா...அம்மா"" என்று உதவிக்கு அழைக்கும் ஒரு பெண்ணின் அவலக் குரலும் கேட்க மாஸ்ரர் நின்று நிதானித்தார்.
அக்குரல் மெல்ல மெல்ல வலுவிழந்து அடங்கிப் போக மாஸ்ரர் அங்கேயே ஸ்தம்பித்து நின்றார். தாயை அழைக்கும் சேயின் அவலக் குரல்!
திடீரென உணர்வுகள் விழித்துக் கொள்ள ‘அம்மா.....சாந்தீ....’ என்று சத்தம் போட்டவாறு தன்னிச்சையாய் குரல் கேட்ட அறையை நோக்கி ஓடினார். பூட்டியிருந்த கதவில் இரண்டு கைகளாலும் பலம் கொண்ட மட்டும் வேகமாய் அடித்தார். என்னாச்சோ, ஏதாச்சோ என்ற பாசத்தின்பரிதவிப்பு அவரது செய்கையில் தெரிந்தது. சோமசிறி ஓடிவந்து அவரைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளிப்போக முனைந்தான். இதுவரை மறைத்து வைத்த உண்மை எங்கே வெளிவந்து விடுமோ என்று அவன் பயந்தான்.
‘என்னோட மகள்...சாந்....தீ....!’ இரண்டு கைகளையும் கூப்பி அழுது கொண்டே மண்டியிட்டு அவனிடம் யாசித்தார். பாசம், துயரம், மானம், அவலம், ஆற்றாமை எல்லாம் சேர்ந்து அவரை அவனிடம் கைகூப்ப வைத்தன.
இந்த நரகத்தில் இருந்து அவளை விடுவித்தால் போதும் என்று மனம் ஏங்கினாலும் இயலாமையால் அப்படியே கதவோடு சாய்ந்து குழந்தைபோல் அழுதார்.
யாரோ கதவைத் திறந்து வெளியே வரும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தார். வெளியே வந்தவன் நெற்றியில் முத்து முத்தாய்ப் பூத்திருந்த வியர்வைத் துளிகளை துடைத்து விட்டு கலைந்த ஆடையைச் சரி செய்தான்.
சிகரட் ஒன்றைப் பற்றவைத்தபடி திரும்பிப் பார்த்தவன் மாஸ்ரரை அங்கே எதிர்பார்க்காததால் ஒரு நிமிடம் திகைத்துப் போய் நின்றான். மாஸ்ரரும் அவனை நேருக்கு நேர் பார்த்ததும் நம்பமுடியாமல் வாயடைத்துப்போய் நின்றவர் ‘அடப்பாவி நீயா?’ என்று தொண்டை கிழியக் கத்தினார்.
அவனோ அவரை அலட்சியம் செய்து விட்டு ஜெயரட்ணாவின் அறையை நோக்கி நடக்க, மலைத்துப் போய் நின்ற மாஸ்ரரும் அவனைத் தொடர்ந்து ஆத்திரத்தோடு உள்ளே போனார்.
எங்கும் பயங்கர இருட்டு. சுமதியும் சாந்தியும் கையிலே விளக்கோடு கதைத்துக் கொண்டு வரும்போது திடீரென சாந்தி அருகே உள்ள குழியில் விழுந்து விடுகின்றாள். பயந்துபோன சுமதி குழியிற்குள் எட்டிப் பார்க்க எலும்புக் கூடுகளும் இரத்தக்கறை படிந்த ஆடைகளும் உள்ளே கிடக்கின்றன. சாந்தி உதவிக்கரம் கேட்டுக் கையை நீட்ட சுமதி மேலே இருந்து கையை நீட்டுகின்றாள். ஆனால் கையில் உணர்வே இல்லாதது போல உணர்கின்றாள். உணர்வற்ற கையிலிருந்து சாந்தி வழுக்கிப் பாதாளத்தில் விழுகின்றாள். தெருநாய்கள் பயங்கரமாய் ஊளையிட சட்டென்று சுமதி விழித்துக் கொண்டாள்.
கனவிவின் பயங்கரத்தால் உடம்பெல்லாம் வியர்க்க தாயை எழுப்பி ""அம்மா நாய் குலைக்குது என்ன என்று பாருங்கோ"" என்றாள். இருவரும் எழுந்து விறாந்தையில் வந்து பார்த்தனர். யாரோ முற்றத்தில் நடமாடுவது தெரிந்தது.
""போய் அண்ணாவை எழுப்பு"" என்றாள் தாய். சுமதி அண்ணனின் அறைக்குள் போனாள். படுக்கையில் சுரேனைக் காணாமல் அதிர்ந்தாள். ""யாரது?"" என்று தாய் குரல் கொடுக்க ""நான் தான் அம்மா! நாய் குலைச்சுது அதுதான் என்ன என்று எட்டிப் பார்த்தனான்"" என்றான் சுரேன்!
எப்போது விடியும் என்று சிவாவின் வீட்டில் எல்லோரும் காத்திருந்தார்கள். ஒவ்வொரு நிமிடமும் அவர்களுக்கு யுகங்களாய் தெரிந்தன. கிராமசேவகரும் அவ்வூர்ப் பெரியவர்கள் சிலரும் காலையில் செக் பொயின்ற் திறந்ததும் முகாமிற்குச் சென்று பொறுப்பதிகாரியைச் சந்திக்கக் காத்திருந்தார்கள்.
பாடசாலையால் வீடு நோக்கி வந்த சாந்தி எங்கே? அவள் ஏன் வீட்டிற்கு வந்து சேரவில்லை? சாந்தியைக் காணவில்லை என்று தேடிப்போன தகப்பன் எங்கே? அவருக்கு என்ன நடந்தது? எல்லோர் முகத்திலும் கேள்விக்குறிகள் தெரிந்தன. விடை தெரியாத கேள்விகள்!
சிவாவும் தாயும் மனம் உடைந்து செய்வதறியாது பரிதவித்துக் கொண்டு இருந்தார்கள். அம்மாவிற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சிவா மனவேதனைப் பட்டான். சுமதியும் தாயாரும் வீடு தேடிவந்து வந்து அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்கள்.
‘சாந்தியையும் மாஸ்ரரையும் இராணுவ முகாமிலே தடுத்து வைத்திருக்கலாம், எப்படியும் காலையிலே விட்டு விடுவார்கள் பயப்பட வேண்டாம்’ என்று சுமதியின் தாயார் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார்.
விபரமறிந்த ஊர் மக்கள் மாஸ்ரரின் வீடு தேடி வரத்தொடங் கினார்கள். பெண்களைப் பெற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கே ஏதோ நடந்து விட்டது போலப் பதட்டப்பட்டனர்.
இரவு முழுவதும் சாப்பிடாமல் இருந்த சிவாவிற்கும் தாயாருக்கும் சுமதி தேனீர் தயாரித்துஅவர்களை வற்புறுத்தி அருந்தக்;கொடுத்தாள். உயிர்த் தோழியை நினைத்து அவள் மனம் அவதிப்பட்டாலும் அதை வெளியே காட்டிக்
கொள்ளாமல்""ஒன்றும் நடக்காது,பயப்படாமல் இருங்கோ"" என்று சொல்லி அவர்களுக்கு உற்சாக மூட்டினாள்.
ஆனால் இரவு அவள் கண்ட அந்தப்பயங்கரக் கனவு அவளை வதைத்துக் கொண்டே இருந்தது. சிவாவோ ஒரு நிலை இல்லாமற் தவித்தான். சூரியாவையும் காணவில்லை என்றசெய்தி அவனை மௌனம் சாதிக்க வைத்தது. தற்செயலாக அப்படி ஏதாவது நடந்திருந்தால் எந்த முகத்தோடு இனசனத்தைப் பார்ப்பது என்று தேவையில்லாத கற்பனை செய்து பார்த்தான்.
""இருக்காது எனது தங்கை அப்படிப் பட்டவள் இல்லை"" என்று தனக்குள் சமாதானம் செய்து கொண்டான். சூரியாவின் மேல் அவனை அறியாமலே கோபம் வந்தது. சூரியாவின் வீட்டிற்கு மறுபடியும் சென்று அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
காலை ஏழு மணியளவில் ஊர்ப் பெரியவர்கள் சிலர் கிராம சேவகரோடு இராணுவ முகாமிற்குப் போகும் போது அந்தத் தெருவைச் சேர்ந்த குணம் அண்ணை அவசரமாக சயிக்கிளில் வந்து சயிக்கிளை நிறுத்திவிட்டு கிராமசேவகரிடம் ஏதோ காதுக்குள் சொல்ல அவர் அப்படியே திகைத்துப் போய் ""இது என்ன அநியாயம்?"" என்று வாய்விட்டுக் கத்தினார்.
கிராமசேவகரின் முகம் மாறியதை அவதானித்த மற்றவர்களும் ஏதோ அபசகுணம் நடந்திருக்கிறது என்பதை ஊகித்துக் கொண்டனர். வார்த்தைகள் வராமல் தடுமாறிய குணமண்ணை கடைசியில் தட்டுத் தடுமாறி ""மாஸ்ரர் செத்துப் போனார்"' என்று சொல்லி முடித்தார்.
செய்தி கேள்விப் பட்டு சிவா பதறி அடித்துக் கொண்டு கேயில் வீதிப் பக்கம் ஓடிப் போனான். அங்கே வெட்டுக் காயங்களோடு மாஸ்ரரின் உயிரற்ற உடல் கோயில் வீதியில் கிடந்தது. கடைவாயில் இரத்தம் வடிந்து காய்ந்து போயிருந்தது. கழுத்திலும் தொண்டையிலும் வெட்டுக் காயங்கள் தெளிவாகத் தெரிந்தன.
சிவா "'அப்பா"" என்று கத்திக் கொண்டு அவரது தலையைத் தூக்கி தனது மடியில் வைத்துக் கதறி அழுதான்.
""முழுஆண்பிள்ளை நான்இருக்க உங்களை அநாதைப் பிணமாய் கொன்று வீதியிலே போட்டு விட்டாங்களே அப்பா! அம்மாவிற்கு நான் என்ன பதில் சொல்லப் போகிறேன்?"" என்று சொல்லிப் பிதற்றிக் கொண்டிருந்தான்!
விஷயமறிந்த சிவாவின் தாய் மயங்கி விழுந்து விட சுமதியும் தாயும் அவரைத் தாங்கி படுக்கையில் கிடத்தினார்கள்.
விறாந்தையில் மாஸ்ரர் மாலை போடப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருந்தார். தலைமாட்டில் குத்துவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. சந்தன ஊதுவத்தி அருகே புகைத்து மணம் பரப்பிக்கொண்டிருந்தது. உற்றார் உறவினர் அழுவதும்,அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுமாய் இருந்தனர். வெளியேபோடப்பட்ட பந்தலில் ஊர்மக்கள் கூடியிருந்தனர்.
எல்லோருடைய முகத்திலும் அதிர்ச்சியும் சோகமும்;டிருந்தன. மாஸ்ரர் இறந்த வேதனையை விட சாந்திக்கு என்ன நடந்ததோ என்ற யோசனை தான் எல்லோர் மனதிலும் வியாபித்து இருந்தது. இறுதிச் சடங்கிற்கான ஆயத்தங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, மாஸ்ரரின் மனைவி அழுவதற்கே இயக்கமின்றி தலைவிரி கோலமாய் படுக்கையில் தலை சாய்த்திருந்தாள். கணவன் இறந்து விட்டார் என்பதையே நம்பமுடியாமல் எல்லாமே குழப்பமாக இருந்தது. சிவா தகப்பனின் காலைப் பற்றியபடி அழுது கொண்டிருந்தான்.
""அப்பா...அப்பா என்னப்பா உங்களுக்கு நடந்தது? ஏனப்பா எங்களை எல்லாம் அனாதையாய் விட்டு விட்டு, சாந்தியைக் கூடப் பார்க்காமல் போய் விட்டீங்களே அ...ப்..பா..?தந்தையின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியமல் வாய்விட்டுக் கதறினான்.
""அழாதே சிவா, நாங்க இருக்கிறோம், நடக்கக் கூடாதது நடந்து போச்சு, கவலைப்படாதே!"" என்று அவனது பெரியப்பாவின் மகன் கண்ணன் அவனைத் தாங்கி ஆறுதல் கூறினான். சிவா நிமிர்ந்து கண்ணீரினுடே கண்ணனைப் பார்த்தான். அன்று இனக்கலவரத்தில் பெற்றோரை இழந்து, அநாதையாய் பிறந்த மண்ணுக்கு வந்த கண்ணன் அழுதபடி நின்ற காட்சி சிவாவின் கண் முன்னே வந்தது.
அதே கண்ணன் இன்று தனக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவது சிவாவிற்கு வியப்பாக இருந்தது. எப்படிக் கண்ணனால் இப்படி வைராக்கியமாய் நிற்க முடிகிறது? காலம் தான் அவனது வேதனையை மறக்கவைத்ததோ? இல்லை ஒரு போராளி கோழை போல் அழக்கூடாது என்று தனது வேதனைகளை மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டானோ?
சுமதி விறாந்தையில் ஓரமாய் உட்கார்ந்து சிவாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் குழந்தை போல வேதனை தாங்காது விக்கி விக்கி அழும் போதெல்லாம் அவனை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போல அவளது உள்ளம் துடித்தது. அவன் தன்னிடம் வந்து ஏதாவது பேசமாட்டானா என்றும் அந்தப் பேதை மனம் எதிர்பார்த்தது.
அவன் வராவிட்டால் அவனருகே சென்று அவனது கண்ணீரைத் துடைத்து விட வேண்டும் போல அவளுக்கு இருந்தது. இதை எல்லாம் செய்ய எந்த உரிமையும் தனக்கு இல்லையே என்ற ஏக்கமும் அவள் மனதை வாட்டியது. அவள் அங்கே உட்கார்ந்து இருந்தாலும் அவளது எண்ணம் எல்லாம் சாந்தியைப் பற்றியே இருந்தது. தனது உயிர்த்தோழிக்கு என்ன நடந்ததோ என்று நினைத்து எதிலுமே கவனம் செலுத்த முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்தாள்.
இறுதிச் சடங்கெல்லாம் முடிந்து சுடுகாட்டால் திரும்பிவந்த சிவாவிற்கு வீடு வெறித்துக் கிடக்க மீண்டும் அழுகை வந்தது.
இப்போ அன்புத் தங்கை சாந்தியின் நினைவு அவனை வாட்டத்தொடங்கியது. கண்ணன் தான் அவனுக்கு ஆறுதல் கூறினான். ""சிவா உன்னுடைய நிலமை எனக்குப் புரியுது, ஆனால் இந்த நேரத்திலே இப்படிக் கவலைப் பட்டுக் கொண்டிருப்பதை விட நடக்க வேண்டிய காரியத்தைப் பற்றிச் சிந்திப்பது நல்லது"" என்றான் கண்ணன்.
""நான் என்ன செய்யிறது கண்ணா? அப்பாவை மட்டுமல்ல தங்கச்சியையும் பறிகொடுத்திட்டேனே! யரோ விரிச்ச வலையில் ஏன்தான் நாங்கள் மாட்டிக்கிட்டோமோ?"" என்று கண்ணனின் தோளில் முகம்புதைத்து அழுதான் சிவா. மனதில் அடக்கி வைத்த சோகத்தை அழுது தீர்க்கட்டும் என்று காத்திருந்தான் கண்ணன். ""சிவா அழுதது போதும். இப்படியே நீ அழுது கொண்டிருந்தால் அம்மாவிற்கு யார் அறுதல் சொல்வது? நீ தான் அம்மாவின் கவலையைப் போக்க வேண்டும்! முதலில் அம்மாவைக் கவனி"" என்றான் கண்ணன்.
சிவாவை விட கண்ணன் இரண்டு வயது மூத்தவன் என்றாலும் இருவரும் நண்பர்கள் போலவே பழகினார்கள். சிவா உள்ளே போனபோது படுக்கையில் விசும்பிக் கொண்டு இருந்த தாயாருக்கு சுமதி தேனீர்க் கப்பை நீட்டிக் கொண்டிருந்தாள்.
""ஆன்ரி ப்ளீஸ் கொஞ்சம் என்றாலும் குடியுங்கோ! நீங்க இப்படியே அழுது கொண்டிருந்தால் சிவாவிற்கு யார் ஆறுதல் சொல்லுறது? எழும்பிக் கண்ணைத் துடையுங்கோ......ம்.....கொஞ்சம் குடியுங்கோ"' சிவா பின்னால் வந்து நிற்பதைக் கூடக் கவனிக்காமல் தாயாரை வற்புறுத்திக் கொண்டி ருந்தாள் சுமதி.
""அம்மா வாங்கிக் கொஞ்சமென்றாலும் குடியுங்கோ"" என்ற சிவாவின் குரல் கேட்டுச் சுமதி சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள். வாடிப்போன சிவாவின் முகத்தைப் பார்க்க அவளது கண்கள் கலங்கின. தாயாருக்கு முன்னால்எதுவும் சொல்லாவிட்டாலும் அவனைச் சந்தித்த அவளது கண்கள் அந்த ஒரு கணத்தில் ஆயிரம் வார்த்தை களில் அவனுக்கு ஆறுதல் சொல்லிச் சென்றன. சிவா வெளியே வந்தபோது கண்ணன் அவனுக்காகக் காத்திருந்தான்.
"'சிவா நீ இப்போ சயிக்கிளை எடுத்துக் கொண்டு என்னோட வா! நாங்கள் ஒரு இடத்திற்கு அவசரமாய் போகவேண்டும்""என்றான் கண்ணன்.
கண்ணன் சிவாவை அவசரமாய் அழைத்த போது சிவாவிற்கு ஏன் என்று புரியவில்லை. ஆனாலும் சயிக்கிளில் போகும் போது கண்ணனே விஷயத்தைச் சொன்னான்.
""சிவா நீ சொன்னதை ஆராய்ந்து பார்த்தேன். சாந்தியைத் தொடர்ந்து பின்னால் போனது சூரியா தான் என்றால் சூரியாவிடம் இருந்து தான் சரியான தகவலை எடுக்கமுடியும். ஆனால் சூரியாவையும் காணவில்லை என்பது தான் இப்போ சிந்திக்க வைக்கிறது. சாந்தி சூரியாவை விரும்ப வில்லை என்றால் சாந்தியைக் கடத்திக் கொண்டு போகவும் சூரியா தயங்கி இருக்கமாட்டான். அதற்காகத் தான் இப்போ சூரியா வீட்டிற்குப் போகிறோம்"" என்றான் கண்ணன்.
""சூரியாவையும் காணவில்லை என்றால் அங்கே சென்று தேடுவதில் என்ன பிரயோசனம்?"" என்றான் சிவா. "'தாயாரிடம் இருந்து ஏதாவது தகவல் கிடைக்கிறதா என்று பார்ப்போம்"" என்றான் கண்ணன்.
""சூரியா..என்ன படுத்திருக்கின்றாய் எழும்புராசா,கேற்ரடியிலை யாரோ கதைத்துக்கேட்குது. உன்னைத் தேடி தான் வந்திருக்கிறாங்கள் போலஇருக்கு""என்றாள்சூரியாவின் தாய்.
சூரியா கனவுலகில் இருந்து வெளியே வந்து கண்ணைத் திறந்து தாயாரைப் பார்த்து ""என்னம்மா? என்ன சொன்னீங்க? என்றான்.""இல்லை கேற்ரடியிலை 'பெடியங்கள்'வந்து நிற்கிறாங்கள் போல இருக்கு, ஏதும் பிரச்ச னையே?"" சூரியா இதைக் கேட்டதும் சட்டென்று படுக் கையை விட்டு எழுந்திருந்தான். கண்கள் இரண்டும் சிவந்திரு ந்தன. இரவெல்லாம் அழுதிரு ப்பானோ என்று தாயார் நினைத் தார். ""என்னது? அழுதனியா? உனக்குஏதாவது பிரச்சனையா?""
"'இல்லை.... ஒன்றும் இல்லை!""
"'சொல்லுராசா என்ன நடந்தது?என்னட்டை மறைக்காமல் சொல்லு ராசா!""
"'ஒன்றுமில்லை... நீங்க சும்மா இருங்கோ""
"'ஒன்றுமில்லாமல் அவங்கள் வரமாட்டாங்கள்! என்ரைராசா தவம் இருந்தெல்லே உன்னைப்பெற்றனான்!அவங்களோட ஏதேன் பிரச்சனையே?
"'இப்ப ஏன் ஒப்பாரி வைக்கிறீங்கள்.எப்படித்தெரியும் போய்ஸ்தான் என்று?""
""கண்ணன்ரை முகத்தை கண்டனான், சயிக்கிள்ளை வந்திருக்கினம்"".
கண்ணன் என்று சொன்னதும் சூரியாவின் முகம் சட்டென்று மாறியது.
""நீ அறையுக்குள்ளை இரு, நான்போய் என்ன என்று விசாரிக்கிறேன்"".
தாயார் வெளியே வரக் கண்ணன் சிரித்துக் கொண்டு ""எப்படி அம்மா இருக்கிறீங்க?"" என்று சுகம் விசாரித்தான். நெஞ்சிலே பயமிருந்தாலும் ""ஏதோ சுகமாய் இருக்கிறம், என்ன விஷயம் சொல்லுங்கோ""என்றாள் தாய்.
"'சும்மா தான் வந்தநாங்கள், சூரியாவைக் காணவில்லை என்று சொன்னீங்களாம், செத்த வீட்டுப் பக்கமும் வரவில்லை அதுதான் என்ன நடந்ததென்று பார்த்து விட்டுப் போகலாம் என்று தான்......!"" கண்ணன் சொல்ல வந்ததைச் சொல்லாமல் பாதியில் நிறுத்திவிட்டுச் சூரியாவின் தாயின் முகமாற்றதைக் கவனித்தான்.
"'கடவுள் தான் காத்தது ராசா, ஒரு கஷ்டமும் இல்லாமல் என்ரை பிள்ளை சுகமாய் வந்து சேந்திட்டான்"".
""சூரியா வந்திட்டானா?"" சிவாவின் முகத்தில் கேள்விக் குறி எழுந்தது!
""பாதைத்தடையை நேரத்தோடையே போட்டுட்டாங்களாம். என்ரைபிள்ளை என்ன செய்யிறது என்று தெரியாமல் எங்கேயோ எல்லாம் போய் சுற்றுப் பாதையாலை சாமத்திலை நனைந்துதான் வந்து சேர்ந்தான்""
""நல்லாய் களைச்சுப் போய்தான் வந்திருப்பார் என்று நினைக்கிறன்"" என்றான் சிவா எரிச்சலை வெளியே காட்டாமல்.
""ஓ.....நித்திரை இல்லைத்தானே அதுதான் களைச்சுப் போய்ப் படுத்திரு க்கிறான்"". என்றாள் சூரியாவின் தாய் சிவாவின் நக்கல் விளங்காமல்.
''நாங்கள் ஒருக்கா சூரியாவோடு கதைக்கலாமே?"" கண்ணன் கேட்டான்.
தாயின் முகம் ஏனோ சட்டென்று வாடி பயம் குடிகொண்டது.
""ஏன்ராசா ஏதேனும் பிரச்சனையே?"" வார்தைகளில் கெஞ்சல் இருந்தது.
"'இல்லை அப்படி ஒன்றுமில்லை! சும்மா கதைச்சிட்டுப் போகலாமென்று தான் வந்தநாங்கள்"" என்றான் கண்ணன்.
தாயார் குரல் கொடுக்க சூரியா சேட் ஒன்றை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். மனதுக்குள் பயந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ""கண்ணன் அண்ணா வாங்கோ! ஏன் வெளியிலை நிக்கிறீங்க? உள்ளே வாங்களேன்"" என்றான். வேண்டுமென்றே சிவாவின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.
""சூரியா உன்னோட கொஞ்சம் கதைக்க வேண்டும்"" என்று சொன்ன கண்ணன் தாயாரைப் பார்த்து, ""அம்மா நீங்க கொஞ்சம் உள்ளே போங்கோ"" என்றான் மரியாதை கலந்த குரலில்.
""என்ன சூரியா ஒரே சோகமாய் இருக்கிறாய் என்ன நடந்தது?""
""ஒன்றும் இல்லை கண்ணன் அண்ணா மனசு தான் சரியில்லை""
""ஏன் காதலிலே தோல்வியோ?"" என்றான் சிவா மீண்டும் கிண்டலாக.
இப்போ சூரியாவிற்கு சிவா தன்னைச் சீண்டிப் பார்க்கிறான் என்பது புரிந்தது. ஆனாலும் அதற்கு இடம் கொடுக்காமல் ""தோல்வி என்பது என்னுடைய வாழ்கையிலே கிடையாது"" என்று கண்ணனுக்கு பதில் சொன்னான். இதைக் கேட்டதும் சிவாவிற்கு நரம்பெல்லாம் சூடு ஏறியது. ஆனாலும் கண்ணனுக்காக ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்தான்.
இப்போது சூரியாவின் திறந்திருந்த சேட்டுக்குள்ளால் அவனது கழுத்திலே கீறல் காயம் இருப்பதை கண்ணன் அவதானித்தான்.
""என்ன இது சூரியா கழுத்திலே ஏதோ பிறாண்டியது போலக் காயமிருக்கு?"" சாதாரணமாய் கேட்டான் கண்ணன்.
சூரியா இதை எதிர்பார்காததால் ஒரு நிமிடம் திகைத்துப்போய் நின்றுவிட்டு பின் தன்னைச் சமாளித்துக் கொண்டு விரல்களால் கழுத்தை வருடிப் பார்த்தான். ""இராத்திரி சுற்றுப் பாதையால் வந்தேனா, அப்போது ஏதாவது முள்ளுக் கீறி இருக்கும்"" என்று சொல்லிச் சமாளித்தான்.
அவனது பதிலால் கண்ணன் திருப்திப் பட்டாலும் சிவாவிற்கு "இவன் எதையோ மறைக்கின்றான்" என்று தான் எண்ண வைத்தது. ""என்னமாய்க் கதை ஜோடிக்கிறான். எவ்வளவு சாதுர்யமாய்
பதில் சொல்கிறான்"" என்று சிவா நினைத்துக் கொண்டான். இனியும் பொறுத்திருப்பதில் அர்த்தமில்லை என்று நினைத்த சிவா நேரடியாகவே சூரியாவிடம் ""சாந்தி எங்கே?"" என்று கேட்டான்.
சூரியா இந்தக் கேள்விக்கும் தனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்பது போல எங்கேயோ பார்வையை ஓடவிட்டான். சூரியாவின் இந்த அலட்சிய பாவம் சிவாவை மேலும் ஆத்திரமடைய வைத்தது.
""நான் சொல்லுவது கேட்கவில்லையா? சாந்தி எங்கே என்று சொல்லப் போறியா இல்லையா?"" சிவா இப்போ கோபமாக சூரியாவை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டான்.
""என்ன நான் தான் சாந்தியைக் கடத்திக் கொண்டு போன மாதிரி ஏதோ கதை சொல்லுறியள்"" என்றான் சூரியா அலட்சியமாக. "" நீ இல்லாமல் வேறுயார்? இந்தாபார் சூரியா நடந்த தெல்லாம் எங்களுக்குத் தெரியும். இப்ப தான் அந்த மொட்டு மலர்ந்து பூவாகியிருக்கு,
அதை ஏன்டா கசக்கிப் போட நினைக்கிறாய்?""தங்கையின் பிரிவைத் தாங்க முடியாமல் கண்களைத் துடைத்துக்கொண்டு விம்மினான் சிவா.
"'கண்ணன் அண்ணா இவர் என்ன புதுக்கதை சொல்லுறார்""
சூரியாவின் அலட்சியம் சிவாவைக்கோபமடைய வைக்கவே சூரியாவின் சேட்டை எட்டிப் பிடித்த சிவா ""உனக்கு இது எல்லாம் புதுக் கதையாய்த் தானிருக்கும். இப்ப சாந்தி எங்கே என்று சொல்லாட்டி என்னுடைய கை தான் பதில் சொல்லும்"" என்று மிரட்டினான். சூரியா இதற்கெல்லாம் அசையாதவன் போல நிற்க சிவா அவனைத் தள்ளி விட்டான். இதைப் பார்த்துக் கொண்டு நின்ற கண்ணன் சிவாவைத் தடுத்து ""சிவா கோபப்படாதை, நிதானமாய்ச் செயற்படு"" என்றான். ""அடிக்கத் தானே போறீங்க? அடியுங்கோ, உங்கடை ஆத்திரம் தீருமட்டும் அடியுங்கோ"" என்றான் சூரியா சிவாவைப் பார்த்து. சூரியா திருப்பி அடிப்பான் என்று எதிர் பார்த்த சிவா அவன் இப்படிச் சொன்னதும் திகைத்துப் போய் அவனைப் பார்த்தான்.
இவர்களை இப்படியே விட்டால் அடிதடி சண்டையில் தான் முடியும் என்று நினைத்த கண்ணன் சிவாவை சமாதானப் படுத்தி வீட்டிற்குப் போகும்படி சொல்லிவிட்டு சூரியாவிடம் என்ன நடந்தது என்பதை விசா ரித்தான்.
"'கண்ணன் அண்ணா சிவாவோட நிலையில் நானிருந்தால் எனக்கும் கோபம் வரத்தான் செய்யும். சாந்தியை நான் விரும்பியது உண்மைதான். என்னுடைய விருப்பத்தை அவளிடம் சொன்ன முறை ஒரு வேளை தவறாக இருக்கலாம். நாகரீகமாய் அதைச் எடுத்துச் சொல்ல எனக்கு அந்த நேரம் தெரியவில்லை. அது தான் நான் விட்டதவறு!"" என்றான் சூரியா.
சூரியா சொன்னவிடயங்கள் அத்தனையும் உண்மை என்றால் புரியாத புதிருக்கு விடைகாண ஒரு துரும்பு கிடைத்ததையிட்டு கண்ணன் உடனே உஷாரானான்.
வீட்டிற்கு வந்த சிவா தாயார்; அழுதபடி படுக்கையில் இருப்பதைப் பார்த்து மனவேதனை தாங்க முடியாமல் தாயாருக்கு அருகேபோய் ""அம்மா"" என்று மெல்ல அழைத்தான்.
மகனின் குரலைக் கேட்டதும் ""கடவுளே நாங்கள் மனத்தால் கூட யாருக்கும் தீங்கு நினைத்ததில்லை! எங்களை ஏன்தான் இப்படிச்சோதிக்கிறாயோ?""என்று மகனைக் கட்டிப்பிடி த்து வேதனைதாங்காது புலம்பி அழுதாள் அந்த விதவைத்தாய்!
சூரியா தான் சாந்தியை மனதார விரும்பியது உண்மை தான் என்று சொன்னபோது கண்ணன் அவன்மீது கோபப்படவில்லை. மாறுபட்ட கோணத்தில் நின்று சிந்தித்துப் பார்த்தான். ஒருவரை ஒருவர் விரும்பு வது இயற்கை, அதைத் தவறு என்று சொல்ல முடியாது. விருப்பம் நிறைவேறுவது சந்தர்ப்பம் சூழ்நிலையைப் பொறுத்தது.
இவற்றை எல்லாம் விட மனதில் உறுதிவேண்டும். அந்த உறுதி இருந்த படியால் தான் அன்று சூரியா துணிந்து சாந்தியிடம் தன் விருப்பத்தைச் சொல்ல முனைந்து இருக்கின்றான். அதனால் தான் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அவன்மீது எல்லோரையும் சந்தேகப்பட வைத்திருக்கின்றது. சூரியா சொன்ன விடயங்களைக் கண்ணன் மீண்டும் அசைபோட்டுப் பார்த்தான்.
""கண்ணன் அண்ணா சாந்தியைச் சந்தித்து என்னுடைய விருப்பத்தை எடுத்துச் சொல்லத் தான் நான் பின்னாலே போனோன். மழை என்ற
படியால் விரைவாகப் போக முடி யவில்லை. தூரத்தில் போகும் போதேசாந்தியை செக்பொயின்ரில் மறித்து வைத்து ஒரு சிப்பாய் கேள்விகள் கேட்பதையும் பின் பாதைத்தடையைப் போட்டுவிட்டு உள்ளே சாந்தியைக் கொண்டு போனதையும் கவனித்தேன்.
அத னால் பயந்துபோய்; ஒரு மறை வானஇடத்தில்நின்றுகவனித்தேன். எப்படியாவது சாந்தியை விசாரி த்துவிட்டு திருப்பி அனுப்பு வார்கள் என்று காத்திருந்தேன். நேரம் போய்க் கொண்டிருந்ததே தவிர சாந்தி திரும்பி வரவே இல்லை.""""உடனே வந்து சிவா விடம் சொல்லியிருக்கலாமே?"" என்றான் கண்ணன். "'சொல்லியி ருக்கலாம்! பாதைத் தடையைப் போட்டு விட்டபடியால் சுற்றித்
தான் வரவேண்டி இருந்தது. மற்றது சாந்தியை அங்கே தனிய விட்டு விட்டு வர ஏனோ என்மனம் இடம் கொடுக்கவில்லை. அப்படி இல்லை என்று வந்து சொல்லியிருந்தால் இன்றுசிவாவையும் நாங்கள் உயிரோடு பார்த்திருக்க முடியாது."" ""ஏன்? சிவாவிற்கு என்ன நடந்திருக்கும்?"" ஆர்வமாகக் கேட்டான் கண்ணன்.
"'தகப்பனுக்கு என்ன நடந்ததோ அதுதான் சிவாவிற்கு நடந்திருக்கும். கொலை செய்துவிட்டு கோயில் வீதியிலே எறிந்து இருப்பார்கள்.""
"'யார் இந்தக் கொலையைச்; செய்தது என்று உனக்குத் தெரியுமா சூரியா?"". "'தெரியாது! ஆனால் இந்தக் கொலைக்கும் இராணுவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என்று தான் நான் சந்தேகிக்கின்றேன். சாந்திக்காக நான் காத்திருந்த போது மாஸ்ரர் புவனா வீட்டிற்குப் போவதைக்கண்டேன். சிறிது நேரத்தின் பின் மாஸ்ரரும் ஜெயரட்ணாவும் முகாமுக்குள் போவதையும் கவனித்தேன். மாஸ்ரர் உள்ளே போனபடியால் சாந்தியை அவர் அழைத்துக் கொண்டு வருவார் இனிப்பயமில்லை என்று நினைத்துக் கொண்டு நான் சுற்றுப் பாதையால் வந்து விட்டேன்."" என்றான் சூரியா.
""அப்போ அதற்குப் பின் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாதா?"" கண்ணன் வினாவினான்.
"'இல்லை! மாஸ்ரர் சாந்தியை வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போயிருப்பார் என்றுதான் நினைத்தேன். காலையிலே மாஸ்ரர் இறந்து விட்டார் என்று கேள்விப்பட்டதும் எனக்கு ஒரே அதிர்ச்சியாக இருந்தது.
அதை என்னால் நம்ப முடியவில்லை! இப்படி நடக்குமென்று நான் நினைக்கவில்லை. இப்போ என்னுடைய கவலை எல்லாம் சாந்திக்கு என்ன நடந்திருக்கும் என்பதுதான்?""
சூரியா நடந்தவற்றைச் சொல்லச் சொல்ல கண்ணனுக்குச் சிலஉண்மைகள் புரிந்தன. மாஸ்ரரை வெளியே போக விட்டால் நடந்தது எல்லோருக்கும் தெரிய வந்து விடும் என்பதால் தான் அவரை முகாமுக்கு உள்ளேயே வைத்துக் கொலை செய்திருக்கிறார்கள். துப்பாக்கியைப் பாவித்தால் தங்கள் பக்கம் பார்வை திரும்பிவிடும் என்பதால் தான் வெட்டிக்கொலை செய்திருக்கிறார்கள்.
மண்டையிலே உள்ள காயம் மண்வெட்டியால் அடித்து வந்திருக்கலாம். நன்றாகத் திட்டமிட்டே இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். இராணுவத்தோடு முட்டுப் பட்டால் உங்களுக்கும் இதேகதிதான் என்று மறைமுகமாகச் செய்கையில் காட்டி இருக்கிறார்கள். தலைநகரில் இருந்து வரும் தமிழ்ப்பத்திரிகை ஒன்று இப்படித் தலைப்புச்செய்தி வெளியிட்டிருந்து ""தந்தையைக் கொன்றுவிட்டு கல்லூரி மாணவியைக் கதறக்கதறக் கடத்திச்சென்றனர் பயங்கரவாதிகள்!". இச்செய்தியை வாசித்த சிலர் உண்மை என்னவென்று தெரியாமல் போராளிகள் மீது வாய்க்கு வந்தபடி குற்றம் சுமத்தினர்.
தங்களுக்குச் சார்பான செய்தி ஊடகங்கள் மூலமும் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை விதைக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். இதற்கு சமுதாய த்திலும் சில பச்சோந்திகள் துணைபோனார்கள். சுயநலம் அல்லது பழிவாங்கல் காரணமாக மக்களோடுமக்களாக இருந்து அரசாங்கத்திற்கு தகவல் கொடுத்தார்கள்.அரசாங்க உளவுப்பிரிவு கொடுக்கும் பணத்திற்காக இவர்கள் எதையும் செய்யத் துணிந்தார்கள்.
போராளிகள் பணம் கேட்கிறார்கள்,வீட்டைக்கேட்கிறார்கள்என்றெல்லாம் கதைகட்டிவிட்டார்கள். அவர்களின் வீடுகளை இராணுவம் ஆக்கிரமித்தபோது வாய்மூடி மௌனம் சாதித்தார்கள். இப்போ இங்கேநடந்த இந்தச் சம்பவங்களை எல்லாம் தெளிவுபடுத்த வேண்டியபொறுப்பு கண்ணனிடம் தள்ளப்பட்டது. இந்தமுகாம் அங்கே இருந்தால் வெகுவிரைவில் இந்தஊர்மக்களின் புதைகுழியாய் மாறிவிடும் என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டான். ஜெயரட்ணா வந்தபின் தான் இப்படிச் சம்பவங்கள் நடக்கின்றன என்பதைக்கண்ணன் அவதானித்தான்.
இயக்கத்திற்குப் போய்விட்டார்கள் என்று கதைகட்டிவிடப்பட்ட சில இளைஞர்கள் இந்த முகாமின் புதைகுழிக்குள்புதைக்கப்பட்டிருக்கலாம் என்பதையும் எண்ணிப்பார்த்தான். மேற்கொண்டும் அசம்பாவிதம் எதுவும் இங்கேநடக்காமல் இருக்க வேண்டும் என்பதால் இப்பகுதியின் பொறுப்பாளர் என்றமுறையில் கண்ணன் நிதானமாகவும் அதே நேரம் விரைவாகவும் செயற்பட்டான். முதல்வேலையாக அந்தமுகாமின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க வேவுபார்க்கும் "றிக்கிரீம்" ஒன்றை அங்கே அனுப்பிவைத்தான்.
சுமதியும் தாயும் சிவாவின் வீட்டிற்கு காலைச்சாப்பாடு செய்துகொண்டு
வந்திருந்தனர். உயிரோடு நடமாடித் திரிந்த மாஸ்ரர் மாலை போடப்பட்டு சுவரிலே படமாய் சிரித்துக்கொண்டு இருந்தார். குத்துவிளக்கு ஒன்றுஎரிந்து கொண்டிருந்தது. அருகே ஒரு செம்பில் தண்ணீர் வைக்கப்பட்டு சந்தணக்குச்சி புகைத்துக் கொண்டிருந்தது. சிவாவின் தாய் சுவரிலே சாய்ந்தபடி அழுவதற்கே இயக்கமின்றி கணவனின் படத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டி ருந்தார். தலைவிரிகோலமாய் பூவும் பொட்டுமில்லாமல் வெள்ளைப்புடவையில் சிவாவின் தாயைப்பார்த்த சுமதி துயரம் தாங்கமுடியாமல் அழுதபடி அவரின் முன் மண்டி யிட்டு அமர்ந்தாள்.
கணவனையும் சாந்தியையும் பிரிந்த துயரத்தில் கலங்கிப் போயிருந்த தாயாரோ அவளைக்கண் டதும் கட்டிப்பிடித்து இதுவரை அடக்கி வைத்திருந்த துயரத்தை ஓவென்று அழுது கொட்டித் தீர்த்தாள். சுமதியின் தாயார் ஆறுதல்சொல்ல, இரவு முழுவதும் சிவா
அழுது கொண்டிருந்ததாக சிவாவின் தாயார் சொல்லிக் கவலைப்பட்டாள். இதைக் கேள்விப்பட்ட சுமதி சிவாவைத் தேடி முன்பக்கம் உள்ள விறாந்தைக்குப் போனாள். அங்கே இருந்த சாய்மனைக் கதிரையில் சிவா கண்மூடிச் சாய்ந்திருந்தான்.
முதன்முதலாக சிவாவை சந்தித்தது அங்கே தான் என்பது நினைவில்வந்தது. அருகே சென்று அவனைப் பார்த்தாள். கன்னங்கள் வீங்கி இருக்க இரண்டு நாள் தாடி முகத்தில் இருந்தது. இரவு முழுவதும் அழுதிருப்பான் போலத் தெரிந்தது. தூக்கத்தைக் குழப்ப வேண்டாம் என்று எண்ணியபடி திரும்பியவள், "'சுமதி"" என்றகுரல் கேட்டு அப்படியே நின்றாள். இதயத்தை வருடிச் செல்லும் கணீரென்ற அந்தக்குரல் அவளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
சிவா எழுந்து அவளை நோக்கி வந்தான். அவனுக்கு ஆறுதல் சொல்லித் தேற்ற வேண்டும் போல அவளது மனசு துடித்தது. அந்த அளவிற்குத் தன்னிடம் தைரியம் இல்லையே என்று நினைத்த போது நெஞ்சுக்குள் சோகம் முட்டியது. கீழுதட்டைக் கடித்துக் கொண்டு அவனை விழிமூடாமல் ஏக்கத்தோடு பார்த்தாள். தன்னைத் தானே கட்டுப்படுத்த அவள் முயன்று பார்த்தும் முடியாமற் போகவே வெகு இயல்பாக சிவாவிடம் நெருங்கிவந்தாள். விம்மலும் கேவலுமாய் அணைஉடைத்த விழிநீர் கன்னத்தில் விழுந்து தெறித்தது. சிவா அவளருகே வந்து ""அழாதே சுமதி"" என்று ஆதரவாய்க் கண்ணீரைத் துடைத்து விட்டான்.
அவனது ஸ்பரிசத்தில் அவள் தன்னை மறந்து ""சிவா"" என்று கேவியபடி அவன் மார்பில் முகம்புதைத்து விம்மி விம்மி அழுதாள்.ஒருதாய் குழந்தையின் தலையை வருடிவிடுவதுபோல சுமதியின் தலையை தன் விரல்களால் ஆதரவாய்த் தடவிவிட்டான்.
அவள் நெகிழ்ந்து போய் அவன் தோள்களை உலுப்பி ""சிவா எப்படி உன்னால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளமுடிகிறது?""என்றாள். அவளது வார்த்தைகளில் அன்பும் அரவணைப்பும் இருந்தது. ""எனக்காக நீ அழுகிறாயா சுமதி! நாங்க இதையெல்லாம் தாங்கிக்கணும். தமிழனாய்ப் பிறந்திட்டோம் வேறுவழியே இல்லை"" என்றான்.
அவள் இமைகள் படபடக்க அவனை ஆச்சரியமாய் பார்த்தாள். ""சுமதி நீ என்னை விரும்புவது உண்மை என்றால் எனக்கு ஒரு அனுமதி தருவாயா?""என்றான். ""என்ன?"" என்பது போல அவனை சோகத்தோடு பார்த்தாள் சுமதி!
சிவா சுமதியிடம் என்ன விடயம் என்று சொல்லாமல் எதற்கோ அனுமதி மட்டும் கேட்டதும் ஒரு கணம் அதிர்ந்தாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு ""சிவா நீங்க ரொம்பக் குழம்பிப்போய் இருக்கிறீங்க. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். எதற்கு அனுமதி வேண்டும் என்று சொல்லுங்களேன்!"" என்றாள். ""நான் சொல்லப் போவது உனக்கு அதிர்ச்சியாய் இருக்கும். ஆனாலும் சொல்லித்தான் ஆகணும். இனியும்என்னால் பொறுக்கமுடியாது. நான் போராடப்போகிறேன்"'என்றான்.
""அதுதான் அன்றைக்கே தீர்மானித்து விட்டோமே!அமைதிப்போராட்டம்! மக்களுக்குவிழிப்புணர்வை ஏற்படுத்துவது, உரிமைகளை வென்றெடுக்க உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் போன்றவற்றின் மூலம் போராடுவது! சிவா! உங்கள் விருப்பம் தான் என் விருப்பம். என்னுடைய ஆதரவு எப்பொழுதுமே உங்களுக்குஉண்டு!"' என்றாள்.சிவா சோகமாய்ச் சிரித்தான்.
""சுமதி! அப்பாவிற்கும் சாந்திக்கும் என்ன நடந்தது என்று கண்ணன் வந்து சொல்லும் வரையும் நானும் அமைதிப்போராட்டத்தை பற்றித்தான் சிந்தித்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அந்த முடிவை அன்றோடு கைவிட்டுவிட்டேன். இப்போ நான் சொல்வது ஆயுதப் போராட்டத்தை பற்றி. உனக்கு இது அதிர்ச்சியாய் இருக்கலாம்! ஆனாலும் வேறு வழி இல்லை. நானாகவிரும்பி ஆயுதம் எடுக்கவில்லை, அவர்கள் என்னைஎடுக்கவைத்துவிட்டார்கள்!""
""வேண்டாம் சிவா ஆத்திரத்தில்அறி விழக்காதே! உன்னுடைய முடிவை மாற்றிக்கொள்!ப்ளீஸ்!" ஆயுதம்என்று குறிப்பிட்டதும் சுமதி உண்மை யிலேபயந்து போனாள்.அதன் முடிவு என்னவாய் இருக்கும் என்பதை யும் நினைத்துப் பார்த்தாள்.
""சுமதி இழப்பு என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? அதை அனுபவிப்பவனுக்குத் தான் அந்த வலி தெரியும்! இதுவரை அவங்க ஆயுதம் ஏந்தினாங்க. ஆயுதத்தால் பாதிக்கப் பட்டவனின் நிலை எப்படி இருக்கும் என்று கூட அவர்கள் சிந்தித்துப் பார்த்ததில்லை. இனிமேல் நாங்கள் ஆயுதம் ஏந்தப் போகிறோம், பாதிப்பு என்றால் என்ன என்று அவர்களுக்கும் தெரியணும்! அந்த வலியை அவங்களும் உணரணும்!""
""அதற்காக நீயும் அவர்களில் ஒருவனாய் மாறவேண்டுமா சிவா?""
"'மாறித்தான் ஆகணும்! முள்ளை முள்ளால் தான் எடுக்கணும்! மனித உயிர்களின் இழப்பு அவங்க பக்கமும் ஏற்படும் போது தான் இந்த உயிரின் மதிப்பு அவங்களுக்கு விளங்கும்!""
"'யாருமே இந்த ஆயுதக் கலாச்சாரத்தை விரும்பப் போவதில்லை!""
""யாருமே என்றால்?"' புருவத்தை உயர்த்திக் கேட்டான் சிவா.
"'மனித உயிர்களை நேசிக்கும் என்னைப் போன்றவர்கள்"" என்றாள் சுமதி.
""அப்போ நாங்க அடிமையாயே இருக்கணுமா? அடிவாங்கிச் சாகணுமா?""
""அப்படிச் சொல்லலை! இந்தப் பிரச்சனைகளில் இருந்து நாங்க கொஞ்சம் விலத்தித்தான் இருப்போமே!""
""நான் விலத்தித்தானே இருந்தேன். விட்டாங்களா? அப்பா கண்முன்னாலே போயிட்டார். அந்த உயிர் மனிதஉயிராய் அவங்களுக்குத் தெரியலையா? நானும் கோழைபோல அவங்களிடம் அடிபட்டுச் சாகணுமா? அதுதான் உன்னோட விருப்பமா?"' உணர்ச்சி வசப்பட்டுக் கேட்டான் சிவா.
சுமதி என்ன சொல்வது என்று தெரியாமல் வாயடைத்துப்போய் நின்றாள்.
சிவாவின் நிலையில் நின்று பார்த்தால் நானும் இப்படித்தான் முடிவு எடுத்திருப்பேனோ என்று சுமதி நினைத்தாள். சந்தோஷமாக இருந்த ஒரு குடும்பத்தில் ஏனிந்த இடி விழுந்தது? இதற்கெல்லாம் யார் காரணம்?
"'சுமதி இது தான் என்னுடைய முடிவு. இதிலே எந்த மாற்றமும் இல்லை!கண்ணன் அண்ணாவிற்குக் கூட அம்மாவைத் தனியே விட்டு விட்டு நான் இயக்கத்தில் சேர்வதில் உடன்பாடில்லை. எனக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நீ நினைத்தால் அதை எனது தாயா ருக்குச் செய்துவிடு.உன்னுடைய அரவணைப்பிலாவது அம்மா ஆறுதல் அடையட்டும். உன்னைப்போலவே இந்த மண்ணையும் நான் நேசிக்கி றேன்!"'என்றான் சிவா. அதிர்ச்சியால் உறைந்துபோய் நின்றாள் சுமதி!
அவர்கள் காத்திருந்தார்கள். காட்டுப்பகுதியின் பிரதான பாதையின் மறைவான இடத்தில் உளவுப் பிரிவு கொடுத்த தகவலின் அடிப்படையில் நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். இராணுவ அணி ஒன்று அந்த முகாமைப் பலப்படுத்த வரப்போவதாகத் தகவல் கிடைத்ததும் கண்ணன் விரைவாக செய்கையில் இறங்கினான். மிகப் பெரிய ஆரவாரத்தோடு அவர்களின் நகர்வு நடக்கும் என்பது கண்ணனுக்கு தெரியும். படைப்பலம் இல்லாவிட்டாலும் மனப்பலம் அவர்களிடம் இருந்தது.சற்று உயரமான இடத்தில் நாதன் முன்னணியில் சினப்பருடன் காத்திருந்தான். மற்றவர்கள் அரைவட்டமாக வியூகம் அமைத்து மறைந்திருந்தனர். வீதியிலும் அதன் ஓரங்களிலும் சில கண்ணிவெடிகளைப் புதைத்தி ருந்தனர்.
அவர்களாலேயே செய்யப்பட்ட இந்தக் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்கும் வசதிகள் இன்னமும் இராணுவத்திடம் வந்து சேரவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். மேலும் இந்தக் கண்ணி வெடிகள் "றிமூட்கொன்றோள்" மூலம் செயல்படும் திறன் வாய்ந்தவை. பலவகைப்பட்ட ஆயுதங்கள் ஒவ்வெருவரிடமும் இருந்தன. பலநாட் பயிற்சியின் பின் அவர்களுக்குத் தங்கள் திறமைகளைக் காட்டக் கிடைத்திருக்கும் முதற் சந்தர்ப்பம். அவர்கள் வழமையாகப் பாவிக்கும் ஏகே47ஐவிட,அசோல்ட்ரைபிள் கே-2, 32சுற்றுக்கள் சுடக்கூடிய பேக்மன் எம்பி 18.1 எஸ்எம்ஜி, பிஆர்பிமோட்டார், றொக்கற்லோஞ்சர் போன்ற வற்றையும் வைத்திருந்தார்கள்.
அடர்ந்த மரங்களுக்கூடாக காலைச் சூரியனின் வெய்யில் உடம்பில் உறைத்தது. ""வருவார்களா?"" என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவரின் சிந்தனையிலும் இருந்தது.""வரட்டும்! இவர்களுக்கு இன்று நல்ல பாடம் படிப்பிக்க வேண்டும்!"" என்றான் நாதன். ""இது நான் பிறந்த மண். என் தந்தையும் தாயும், பாட்டனும் பூட்டனும் பிறந்து வளர்ந்த மண். எந்த அன்னியனும் ஆயுதத்தோடு என் தாய்மண்ணில் நடமாட விடமாட்டேன்"' என்றான் கண்ணன். இந்த மண் தனக்குள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை அவன்
அடிக்கடி நினைத்துப் பார்ப்பான். அவன் இயக்கத்தில் சேர்ந்த போதும் சரி இன்றும் சரி ""ஏன் சேர்ந்தாய்?"" என்ற கேள்விக்கு அவனிடம் ஒரே பதில் தான் இருந்தது ""இந்த மண்ணில் உள்ள பாசம், ஒரு வித பற்றுதல், இந்த மக்களின் இன்ப துன்பத்தில் எனக்கிருக்கும் பங்கு, மக்களையும் மண்ணையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கம்! அவ்வளவுதான்! வீவில் டூயிற்!"" வலது கைவிரல்களை மடித்து பெருவிரலை மட்டும் உயர்த்தி நம்பிக்கையோடு காட்டுவான்.
திடீரென அந்தச் சத்தம் அவர்களை உலுக்கியது. காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கவனமாகக் கேட்டனர். "'கிர்....கிர்...கிர்..!"" யந்திரத்தின் ஓசை மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டி ருந்தது. அதைத் தொடர்ந்து கனமான பூட்சின் சீரான அசைவின் சத்தம். கண்ணன் பார்வையை ஓடவிட்டான். இராணுவம் காட்டுப் பாதையால் முன்னேறிக் கொண்டி
ருந்தது. இந்த ஒரு சந்தர்ப்பத்திற்காகத் தான் இவர்கள் இத்தனை நாட்கள் காத்திருந்தார்கள். நாதன் சினப்பரைக் கையில் எடுத்துக் கொண்டான். மற்றவர்கள் தங்கள் ஆயுதங்களை தன்னிச்சையாக எடுத்துக் கொண்டு தங்கள் பதுங்கு இடங்களுக்குப் போனார்கள். கண்ணன் ஏகே47ஐ தோளிலே மாட்டிக் கொண்டு செய்தித் தொடர்பு கருவி மூலம் செய்தி பரிமாறிக் கொண்டிருந்தான். றிமூட் கொன்றோள் கருவி கண்ணனிடமே இருந்தது. முதல் சந்தர்ப்பம் நாதனுக்குக் கொடுக்கப்பட்டது.
இராணுவஅணி முன்னேறும் போது அதை வழிநடத்தி வரும் காப்டன் தான் நாதனின் இலக்கு. மிகக் கவனமாக மிகவும் துல்லியமாக சினப்பர் மூலம் தனது இலக்கை அடைவதில் நாதன் கெட்டிக்காரன். சைலன்சர் இணை க்கப்பட்ட சினப்பர் மூலம் நாதன் தனது காரியத்தைச் சாதித்து விட்டான் என்பது முன்னேறும் இராணுவத்தில் ஒருவர் இரத்தம் சிந்தியபடி நிலத்தில் சரியும் போது இவர்களுக்குத் தெரியவரும்.
""எப்படி உன்னால் குறி தவறாமல் அடிக்க முடிகிறது"' என்று கேட்டால் ""இனக் கலவரத்தின் போது என் அக்காவைக் கண்முன்னாலே மானபங்கப் படுத்தியவனின் முகம் தான் கண்ணுக்குள் வரும். அந்த நேரம் வேறு ஒன்றுமே தெரிவதில்லை!"' என்பான். சரியான இலக்கைக் குறி வைத்துக் கொண்டு கண்ணனின் கட்டளைக்காகக் காத்திருந்தான்.""ஃபயர்"" என்ற கண்ணனின் கட்டளையை எதிர்பார்த்ததுக் காத்திருந்தவன் ""ஸ்ரொப் அன்ட் விற்றோ"" என்ற கண்ணனின் கூச்சலைக் கேட்டு அதிர்ந்து போய்த் திரும்பிப் பார்த்தான்.
வெண்ணெய் திரளும் போது இது என்ன கட்டளை என்று அலுத்துக் கொண்டான். எல்லோர் பார்வையிலும் ஏன்? என்ற கேள்விக்குறி இருந்தது. கண்ணன் நிமிர்ந்து வானத்தைக் காட்டினான். மரக்கிளைகளுக்கு மேலே சூரிய ஒளியில் வானத்தில் நட்சத்திரமாய் மின்னியது அந்த உளவுவிமானம். விரைவாகப் பின்வாங்கினார்கள்.
கண்ணன் மனதுக்குள் அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிரு ந்தான் "'எதிரி உன்னைவிடப் பலசாலியானால் பின்வாங்கு!"".; மறுகணம் டாங்கியின் பீரங்கி இவர்கள் பதுங்கியிருந்த பக்கம் திரும்ப அந்த இடத்தில் எரிமலை ஒன்று வெடித்தது! பின்வாங்கிக் கொண்டிருந்த நாதன் திரும்பிப்பார்த்தவன் ""கண்ணன் எங்கே?"" என்றான்.
கண்ணன் பின்வாங்கித் தங்களோடு வரவில்லை என்று தெரிந்ததும் தோழர்கள் திகைத்துப் போய் நின்றனர். அவர்கள் முன்பு பதுங்கியிருந்த இடத்தில் இப்போது தீச்சுவாலை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. கண்ணனுக்குப் பதிலாக கட்டளையிடும் பொறுப்பை இப்போ நாதன் ஏற்கவேண்டி வந்தது. மற்றவர்களைத் தங்கள் நிலை களில் நிற்கும்படி கட்டளையிட்டு விட்டு நாதனும், சுதனும் நிலத்தில் ஊர்ந்த வண்ணம் கண்ணனைத் தேடிச்சென்றனர்.
எங்கேயோ தூரத்தில் மயில் ஒன்று அகவும் சத்தம் கேட்டது. காட்டுக் கோழி ஒன்று பயங்கரமய்ச் சத்தம் போட்டுக் கொண்டு அவர்களைக் கடந்து வேகமாய்ப் போனது. கண்ணனுக்கு ஏதாவது நடந்தால் அது தங்களுக்குப் பெரிய ஒரு இழப்பு என்று நாதன் கவலைப்பட்டான். புகைமண்டலத்திற்குள் அவர்கள் புகுந்தபோது மீண்டும் ஓர் இடிஓசை
அந்தக் காட்டையே அதிர வைத்தது. வீதியில் உள்ள கண்ணிவெடி ஒன்று வெடித்து இராணுவ வாகனம் ஒன்று தூக்கி வீசி எறியப்படுவதை நாதன் கவனித்தான். அப்படி என்றால் கண்ணன் அண்ணா விடம் தான் 'றிமூட்கொன்றோள்" இருக்கிறது. அவர் எங்கேயோ உயிரோடுதான்இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
திடீ ரென பாறை ஒன்றின் பின்னால் மறைந்து இருந்த கண்ணன் சந்தோஷம் தாங்க முடியாமல் எழுந்து நின்று இரண்டு கைகளையும் உயர்த்தி""வீடிற்இற்"" என்று கூவினான். அவனது நெற்றியில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. எதையோ சாதித்து விட்ட
பெருமிதம் அவன் முகத்தில் தெரிந்தது. கண்ணனிடம் இருந்த 'றிமூட்கொன்றோளை" வாங்கிச் சுதனிடம் கொடுத்து விட்டு அவனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான் நாதன். ""என்னஇது? என்னாச்சு கண்ண னண்ணா?"" என்றான் கவலையோடு.
""ஐயாம்..ஓகே உங்களுக்கு ஒன்று மில்லையே?""என்றான் கண்ணன் காயத்தை விரல்களால் மூடிக் கொண்டு தன் வேதனையைத் தாங்கிக்கொண்டே. "'தன்னைப் பற்றிக் கவலைப் படாமல் இந்த நிலையிலும் எங்கள் சுகத்தைப் பற்றி விசாரிக்கின்றானே"" என்று ஆச்சரியப்பட்டான் நாதன்.
இவனது இப்படிப்பட்ட பெருந்தன் மையால் தான் எல்லோர் மனதிலும் நிலைத்து நிற்கிறானோ என்று எண்ணிப்பார்த்தான். ஒருகுழுவிற்கு தலைமை தாங்கக் கூடிய அத்தனை பண்புகளும் அவனிடம் இருப்பதை நினைத்துப் பெருமைப்பட்டான். ""எங்களுக்கு ஒன்றுமில்லை இருங்க ஒருநிமிடம்"" என்று சொல்லி அவனது நெற்றியில்வழிந்த இரத்தத்தைத் துடைத்து விட்டு தனது முதலுதவிப்பெட்டியில் இருந்த பன்டேச்சை எடுத்துக் கட்டிவிட்டான்.
""என்ன இருந்தாலும் நீங்கள் தனியே துணிந்து இதைச் செய்திருக்கக் கூடாது. உங்களுக்கு ஏதாவது நடந்திருந்தால்? நாங்கள் சரியாய்ப் பயந்து போய்விட்டோம்!"" என்றான் சுதன்.
""தெரியும்! ஒரு போராளி இதற்கெல்லாம் பயப்படலாமா?"' என்றான் கண்ணன். ""அப்படியில்லை எங்களுக்கு மட்டும் அன்பு பாசம் இல்லையா?"" என்றான் நாதன். அந்த வார்த்தைகள் அவனைத் தொட அவன் நெகிழ்ந்து போய் அவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டான்.
"'உங்கள் அன்பு எனக்குப் புரியுது! ஆனால் இந்த இராணுவ நகர்வைத் தடுக்க எனக்கு வேறு வழியே தெரியவில்லை! நல்ல காலம் சரியான நேரத்தில் கண்ணி வெடியை வெடிக்க வைத்தேன். இல்லாவிட்டால் நிலமை எங்களுக்குப் பாதகமாய்ப் போயிருக்கும்.""
"'என்ன இருந்தாலும் உங்கள் துணிவை நான் பாராட்டுகின்றேன்"" என்றான் சுதன்.
வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து நிலைகுலைந்த இராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர். இவர்களோ இதற்கெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டுமெல்ல அகன்றுசென்றனர். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் இராணுவம் பல இழப்புக்களைச் சந்தித்து மேலும் முன்னேற முடியாமல் வந்த வழியே பின்வாங்கிச் சென்றது.
அன்றைய பயிற்சியை முடித்துக் கொண்டு தங்குமிடத்திற்கு வந்த சிவாவிற்கு கடிதம் ஒன்று காத்திருந்தது. யாருடைய கடிதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு உறையைக் கிழித்துக் கடிதத்தை எடுத்து வாசித்துப் பார்த்தான். அம்மாவிடமிருந்து தான் கடிதம் வந்திருந்தது. திரும்பவும் ஒரு முறை வாசித்துப் பார்த்தான்.
நெஞ்சுக்குள் ஏதோ கனத்தது. தாயின் பாசமென்றால் என்னவென்று அவனுக்குத் தெரியும். தாயின் மடியுக்குள்ளேயே இருந்தவன் வயது வந்ததும் மெல்ல ஒதுங்கிக் கொண்டான். ஆனால் பாசத்திற்கு அவனால் அணை போடமுடியாமல் போய்விட்டது. அந்தப் பாசம் எல்லாம் தாய் மண்மீது ஒரு விதவெறியாக மாறிவிட்டது. அதனால் தான் பல்லைக்கடித்துக் கொண்டு வீட்டு நினைவுகளுக்கு தடைபோட்டு வைத்திருந்தான். தாயின் அந்தக் கடிதம் அவனை மீண்டும் வீட்டைப் பற்றி நினைக்க வைத்தது.
""சிவா உன்னைப் பெற்றெடுத்த போது உண்மையிலே நான் தாய்மையின் பூரிப்பால் பெருமைப்பட்டு மனம் மகிழ்ந்தேன். வம்சம் தழைக்க, கொள்ளிபோட எனக்கொரு மகன் இருக்கிறான் என்று நினைத்தேன். ஆனால் இன்று உன்னை வளர்த்து விட்ட பாசத்திற்காக நான் தினமும் எனக்குள்ளே அழுகின்றேன். பெற்ற தாயைவிட பிறந்த மண்தான் பெரிதென்று நீ போய்விட்டாய். உன் நிலைப்பாடு அதுதானென்றால் அதில் தலையிட நான் விரும்பவில்லை! இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் உன்னைப்போல எங்கள் மண்மீது பற்றுதல் வைத்திருந்தால் நாங்கள் என்றோ சுதந்திரக் காற்றைச் சுவாசித்திருப்போம். உன்னுடைய தலைமுறையிலாவது அந்தப் பாக்கியம் கிடைக்குமென நம்புகின்றேன். நீ எங்கிருந்தாலும் இந்தத் தாயை மறந்துவிடாதே! எனக்கு ஏதாவது நடந்தால் என்னை மட்டும் அனாதைப் பிணமாய் விட்டுவிடாதே!பெற்றதாய் என்ற முறையில் எனக்கு கொள்ளி போடவாவது வருவாய் என நம்புகின்றேன். இந்த அம்மாவின் கடைசிஆசையை மறுத்துவிடாதே! உன்னுடைய சுகத்திற்காக தினமும்
கடவுளைப் பிரார்த்திக்கும் உனது அருமை அம்மா,"" கடிதத்தைப் படித்து முடிக்கும்போது சிவாவின் கண்கள் அவனை அறியாமலே கலங்கின.தான்சாகும் போது கௌ;ளி போட உயிரோடு நான் இருப்பேன் என்ற அம்மாவின் நம்பிக்கை அவனை ஒருகணம் நிலைகுலைய வைத்தது. தாய்மை எவ்வளவு உயர்ந்தது என்று எண்ணிப் பார்த்தான்.
கண்களை மூடிச்சிறிது நேரம் சிந்தித்தான். அம்மாவிற்குத் துணையாய் சுமதி இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது அவனது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது. மானசீகமாக சுமதிக்கு நன்றி சொல்லிக் கொண்டான். உடனடியாகத் தாயாருக்கு ஆறுதல் கூறிக்கடிதமொன்று எழுதிப் போட்டான். ""அம்மா நீங்கள் தினமும்ஆண்டவனை பிரார்த்திப்பதலோ என்னவோ நான் ஒருகுறையும் இல்லாமல் சந்தோஷமாய் இருக் கின்றேன். லட்சியத்தை அடைந்ததும் மீண்டும்வருவேன்!
தொலைக்காட்சிப் பெட்டியில் ஆங்கிலப் படமொன்று போய் கொண்டு இருந்தது. ஹோலில் புவனாவை அணைத்தபடி ஜெயரட்ணா படம் பார்த்துக் கொண்டிருந்தான். மறுகையில் மதுக்கோப்பை இருந்தது. அவனது மதுக்கோப்பையைப் புவனா அடிக்கடி நிரப்பிக் கொண்டி ருந்தாள். அன்னியமண்ணில் கவலையை மறக்க அவனுக்கு மதுவும் மாதுவும் தேவைப்பட்டது. அவளுக்குப் பசி எடுத்தாலும் பொறுமையாய் அவனுக்குப் பணிவிடை செய்தாள். மதுவின் ஆதிக்கம் அவனைப் பிடித்துக் கொள்ள அரைகுறையாய்ச் சாப்பிட்டுவிட்டு எழுந்து நின்று தள்ளாடினான். புவனா அவனைத் தாங்கிக்கொள்ள ""புவனா உனக்குத் தெரியுமா மதுகுடித்தால் தான் வெறிக்கும் ஆனால் மாது நினைத்தாலே!"
" சொல்லவந்ததைச் சொல்ல முடியாமல் நாக்குளற அப்படியே படுக்கையில் சரிந்தான். இனி விடியும் வரை அவனை அசைப்பதே கஷ்டம் என்று அவளுக்குத் தெரியும்.சாப்பட்டு அறைக்குச் சென்று எல்லா உணவையும் மூடிவைத்து விட்டு மிகுதியை வளர்ப்பு நாயிற்குப் போடுவதற்காக பின் வாசற்கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
கண்களை மூடி இருட்டிற்குப் பழக்கப் படுத்திக் கொண்டு "'பப்பி....பப்பி"" என்று மெதுவாகக் குரல் கொடுத்தாள். வெளியே படுத்திருந்த 'பப்பி' எழுந்து வராமற் போகவே அருகேவந்து குனிந்து பார்த்தாள். சுவாசப்பை மேலும்கீழும் ஏறிஇறங்க 'பப்பி' மயக்கமாய்க்கிடந்தது.
சட்டென்று ஏதோ பொறிதட்ட நிமிர்ந்தவளை யாரோ பின்னால் இருந்து கட்டிப்பிடித்து அவளது வாயைப் பொத்தினார்கள். ""சத்தம் போடாதே!"" என்று ஒரு ஆணின் குரல் காதுக்குள் கரகரத்தது. ""ம்........ விடு என்னை"" என்று புவனா திமிறினாள். சிறிது சத்தம் கேட்டாலும் "சென்றி' உதவிக்கு ஓடிவருவான் என்பதால் திணறிப் பார்த்தாள்.
""சத்தம் போடாதே!"" அவன் மீண்டும் எச்சரித்தான். இப்போது அவன் பிடியைஇறுக்கி கத்திமுனை ஒன்றைக் கழுத்திலே வைத்து மெல்ல நெருடினான். அவள் பயந்து போய் அவன் சொல்வது எல்லாவற்றுக்கும் தலையாட்டினாள். எந்தவித சத்தமும் போடாமல் பின்பக்க மதிலில் சாத்திவைக்கப் பட்டிருந்த ஏணிவழியாக வீதிக்கு வந்தனர். வீதிக்கு வந்ததும் புவனாவின் கண்கள் மறைத்துக் கட்டப்பட்டு சற்றுத் தொலைவில் இருட்டுக்குள் நிறுத்தப் பட்டிருந்த வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டாள்!
கண்கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டு கதிரை ஒன்றில் உட்காரவைக்கப் பட்டாள் புவனா. அறை இருண்டு கிடந்தது. மெல்லிய வெளிச்சம் பக்கத்து அறையின் யன்னலூடாக உள்ளே விழுந்தது. சிந்தனையில் இருந்த புவனா "'கிறீச்"' என்ற சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள்.
பக்கத்து அறைக்கதவைத் திறந்து கொண்டு ஒரு பெண் உள்ளே வந்தாள். புவனாவிற்கு அருகே வந்து கையிலே கொண்டு வந்த தேனீர்க் கோப்பையை அவளிடம் நீட்டினாள். ""என்னை ஏன் இங்கு கொண்டு வந்தீங்க?"' தனிமையின் விரக்தியைப் பொறுக்க முடியாமல் கேட்டாள் புவனா. அந்தப் பெண்ணோ எதுவும் கேட்காதது போல பாவனை செய்து கொண்டு திரும்பவும் தேனீரை அவளிடம் நீட்டினாள்.
"'நான் கேட்பது உனக்கு விளங்கவில்லையா?"" என்றாள் எரிச்சலுடன். அவள் புவனாவை முறைத்துப் பார்த்துவிட்டு ""முதலில் தேனீரைக் குடி""
என்றாள் சற்றுக் கடுமையாக. தாகத்தால் நாக்கு வறண்டு போயிருந்தது. வெறும்தேனீர்தான் என்றாலும் மடமட வென்று குடித்தாள்.மாட்டிக் கொண்டோம் இனித்தப்ப வழியில்லை என்று நினைத்ததும் அவளுக்குப் பயம் பிடித்துக் கொண்டது.
""என்னை என்ன செய்யப்போறீங்க?""என்றாள். ""காலையிலே தெரியும்"" என்றாள் அந்தப்பெண்.""என்னைக்கொல்லப் போறீங்களா?""மரணபயம்முகத்தில் தெரிந்தது.தேனீர் கொடுத்தபெண் வாய்விட்டுப் பலமாய்ச் சிரித்து விட்டு ""ஏன் சாவதற்கு பயமா?"" என்றாள். ''...ம்.!"" என்றாள் புவனா பரிதாபமாக. "'தப்புச் செய்வதற்கு முன்பு இதைப் பற்றி யோசித் திருக்கணும்"". என்று சொல்லி விட்டுப் பக்கத்து அறைக்குள்
போனாள் அந்தப் பெண். ""துரோகம்... இனத்தைக் காட்டிக் கொடுத்த துரோகம்!"" புவனாவிற்கு தான் செய்தது தப்புத்தான் என்பது தெரியும். ஆனாலும் மௌனம் சாதித்தாள். காலம் கடந்து விட்டநிலையில் இனி என்ன செய்யமுடியும் என்று யோசித்துப் பார்த்தாள். அந்தப் பெண் மீண்டும் உள்ளே வந்து ஒரு படுக்கையும் போர்வையும் கொடுத்தாள்.
""படுத்துக்கோ......காலையிலே பார்க்கலாம்"" என்று சொல்லி கதவை வெளிப்பக்கம் பூட்டிக் கொண்டு சென்றாள். முதல் தடவையாக புவனா தான்செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தினாள். புனிதமான ஒரு விடுதலைப் போராட்டத்தில் தான் பங்கு பற்றாவிட்டாலும் தன் இனத்திற்குத் துரோகம் செய்யாமலாவது இருந்திருக்கலாம் என்று நினைக்க அவளுக்கு அழுகையே வந்தது. நாளை என்ன நடக்குமோ என்று இதயம் படபடவென்று துடிக்க உடம்பு சோர்ந்துபோய் கண்கள் செருகினாலும் பயத்தினால் தூக்கம் வராமல் தவித்தாள். இந்த இரவு விடியாமலே இருக்கக் கூடாதா என்று நினைத்தாள். தண்டனை நிறைவேற்றும் குழுவைச் சேர்ந்த ஐவர் துப்பாக்கியோடு தயாராக நிற்க புவனா தெருவிளக்குக் கம்பத்தோடு கட்டப்பட்டாள்.
ஒருவன் அருகே வந்து ""துரோகிகளுக்கு மக்கள் கொடுக்கும் தண்டனை இது தான்! கடைசியாக இந்த மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லு"" என்றான். சாகப்போகிறோம் என்று தெரிந்ததும் உடம்பு உதறலெடுத்தது. எதுவுமே சொல்லமுடியாமல் கோழைபோல விக்கி விக்கி அழுதாள். "'என்னை விட்டு விடுங்கள் இனித்தவறே செய்யமாட்டேன்"' என்று கெஞ்சிப்பார்த்தாள்.
அவனோ இரக்கமே இல்லாதவன் போல கறுப்புத் துணியால் அவளது கண்களைக் கட்டிவிட்டு ""அடுத்த பிறப்பிலாவது நல்லவளாய்ப் பிறக்க ஆண்டவனை வேண்டிக்கொள்"" என்றான். ஒரு நிமிட மௌனத்தின் பின் தண்டனை நிறைவேற்றும் குழுவைப் பார்த்து "'ஃபயர்"" என்று கட்டளையிட ""வீல்;"" என்று கத்திக்கொண்டு புவனா எழுந்திருந்தாள்.
மரணபயத்தில் உடம்பெல்லாம் வியர்த்திருந்தது. ""கடவுளே இது கனவாகவே இருக்கட்டும்'' என்று கடவுளை வேண்டிக் கொண்டாள். அதன்பின் அவளால் தூங்கவே முடியவில்லை. இரவு தூங்கும்போது, அவள் மட்டும் விழித்திருந்தாள்.
சிறிய அறை ஒன்றில் மக்கள்நீதிமன்றம் கூடியிருந்தது. ஆயுதம் தரித்த பாதுகாவலர் வெளியே பாதுகாப்பிற்காக நின்றனர்.
""புவனா! புவனா! புவனா!""என்று மூன்றுதடவை அவளது பெயரைச்சொல்லி அழைத்தனர். பாதுகாவலரால் அழைத்து வரப்பட்ட புவனா விசாரணைக் கூட்டில் நிறுத்தப்பட்டாள். நீதிபதியும் நடுவர் இருவரும் முன்னால் அமர்ந்திருந்தனர். பார்வையாளராக முக்கியமான சிலர் அனுமதிக்கப் பட்டிருந்தனர். புவனாவின் முகம் வெளிறிப்போய் இருந்தது. நித்திரை இன்மையாலும் பயத்தினாலும் அவள் சோர்ந்து போய் இருந்தாள். ""நான் சொல்லப்போவதெல்லாம் உண்மை, பொய் சொல்லமாட்டேன்"" என்று சத்தியம் செய்து கொடுத்தாள்.
அவளுக்கு எல்லாமே வித்தியாசமாகவும் புதிய முகங்களாகவும் தெரிந்தன. பயத்தில் நாக்கு வறண்டு ஒட்டிக் கொண்டது. தண்ணீர்கொடுத்தார்கள். கேள்விகளுக்குப் பதில் சொன்னாள். முடிந்தவரை உண்மையைச் சொன்னாள். தான் செய்தது தப்புத்தான் என்பதை நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்டு மன்னிப்புக்கேட்டாள். பார்வை யாளர்களின் முகங்களில் கோபமும் பழிவாங்கும் எண்ணமும் பிரதி பலித்தன.
''காட்டிக் கொடுத்த துரோகி"" என்று பார்வையாளர்களில் யாரோ முணுமுணுத்தது அவள் காதுகளில் நன்றாக விழுந்தது. ஒவ்வொரு வினாடியும் தூக்குமேடையில் நிற்பது போல அவஸ்தைப்பட்டாள். நடுவர்கள் தங்களுக்குள் கலந்து ஆலோசித்துவிட்டு நீதிபதியிடம் தமது கருத்தை வெளியிட்டனர். ''சுயநலத்திற்காக தன்இனத்தைக் காட்டிக் கொடுப்பது மன்னிக்கமுடியாத குற்றம். மானத்தை விற்று, கால்பிடித்து, வயிறுவளர்ப்பது எமது இனத்திற்கு அவமானம். ஆனாலும் தான்செய்த தவறுக்காக சமுதாயத்திடம் மன்னிப்புக் கேட்டதாலும், எமக்குத் தேவையான சிலமுக்கியமான தகவல்களைக் கொடுத்து உதவியதாலும், இனிவரும் காலங்களில் அரசபடைகளுடன் தொடர்பு வைத்துக்கொள்ள மாட்டேன் என்று உறுதியளித்ததாலும் இந்த நீதிமன்றம் புவனாவை மன்னித்து நன்னடத்தைப் பிணையில் விடுதலை செய்கின்றது.""
நீதிபதி தனது தீர்ப்பை வாசிக்க எதிர்பாராத அந்தத் தீர்ப்பால் உணர்ச்சி வசப்பட்ட புவனா கூண்டுக்குள் நின்றபடி முகத்தைக் கைகளால் பொத்திக்கொண்டு விம்மி விம்மி அழுதாள்.
""மன்னித்து விட்டார்களா? என்னை மன்னித்து விட்டார்களா?"" நம்பமுடியாமல் தலையை உசுப்பிக் கொண்டாள். "'நாங்களும் இதயமுள்ள மனிதர்கள் தான்"" என்பது போல நீதிமன்றத்தைக் கலைத்துவிட்டு நீதிபதி எழுந்து வெளியேபோனார். நன்றி சொல்லக்கூட வார்த்தைகள் வராமல் உதடுகள் துடிக்க இரு கைகளை யும் கூப்பி அவர்களைப் பார்த்துக் கும்பிட்டாள் புவனா.
இரண்டு பெண்பாதுகாவலர் உள்ளே வந்து ""போகலாமா?"" என்றனர். ""ஆம்"" என்று புவனா தலையசைக்க அவளை வெளியே அழைத்துச் சென்றனர். பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த கண்ணனும் அவர்களைத் தொடர்ந்து வெளியே போனான்.
மக்கள்நீதிமன்ற வாசலில் உள்ள மரநிழலில் நின்ற புவனாவை நோக்கிக் கண்ணன் வந்தான். அருகே வந்ததும் ""புவனா அக்கா வணக்கம்"" என்று கைகூப்பினான். அவளுக்குப் புதுமுகமாக இருந்தது. அவளை ""அக்கா"" என்று அன்போடு அவன் அழைத்ததால் ""யார் இது இவ்வளவு உரிமையோடு என்னை அழைப்பது?"" என்று நினைத்த புவனா அவனை விழித்துப் பார்த்தாள். ""என்னை உங்களுக்குத் தெரியாது ஆனால் எனக்கு உங்களைத் தெரியும்"" என்று பீடிகைபோட்டான். புவனா ஒன்றும் சொல்லாமல் "'என்ன?"" என்பது போல அவனைப் பார்த்தாள். ""உங்களோட கொஞ்சம் பேசலாமா.....!"' என்று இழுத்தான் கண்ணன். "'எனக்கு உங்களைத் தெரியாதே!"' என்றாள் புவனா.
"'ஒருவரோடு பேசுவதற்கு அவரைக் கட்டாயம் தெரிந்திருக்கணுமா?"".
""இல்லை ஆனால் தெரியாதவர்களோடு பேசவேண்டிய அவசியம் எனக்கில்லை!"" என்று சொல்லிவிட்டு எங்கேயோபார்வையை ஓடவிட்டாள்.
அவளது பதிலால் தர்மசங்கடத்துக்குள்ளான கண்ணன் வேறு வழி இல்லாமல் ""எனது பெயர் கண்ணன்'' என்று தன்னைப் பற்றி அறிமுக ப்படுத்தினான். கண்ணன் தன்னைப்பற்றி அறிமுகம் செய்ததும் புவனா விற்கு உள்ளே பயம்பிடித்துக் கொண்டது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்"'இப்போ நாங்க பேசலாமே!"' என்று இறங்கிவந்தாள்.
""பேசலாம் அதற்குமுன் நீங்க எங்கே போகவேண்டும் என்று சொன்னால் அங்கே கொண்டு போய்விட்டு விடுகின்றோம்""என்றான் கண்ணன். புவனா திரும்பவும் அந்தஊருக்குப் போகவிரும்பாததால் தனதுஉறவினர் வசிக் கும் பக்கத்து ஊருக்குப் போகவிரும்பினாள். அவளை அங்கே அழைத் துப்போகும் போது கண்ணன் தனது வாக்குச் சாதுரியத்தால் பல தகவ ல்களை அவளிடம் இருந்து பெற்றுக்கொண்டான். அவளை உறவினர் வீட்டிலே இறக்கிவிட்டு தனது இருப்பிடத்திற்கு வந்த கண்ணனுக்கு உளவுப்பிரிவின் அறிக்கை காத்திருந்தது.
அந்த அறிக்கையில் கிராம சேவகரின் பெயரையும் சூரியாவின் பெயரையும் கண்ணன் அவதா னித்தான். இதைவிடப் பட்டியலில் இருந்த இன்னும் ஒரு பெயரும் கண்ணனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இருக்காது, நிச்சயமாக இருக்காது! தவறுதலாக இந்தப்பெயர் குறிப்பிடப்பட்டிருக்கலாம் எனத் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான் கண்ணன்!
இராணுவமுகாமின் நடவடிக்கைகளை கண்காணிக்கும்படி உளவுப் பிரிவுக்கு உத்தரவிட்ட கண்ணன் அங்கே போய்வருபவர்களையும் அவதானிக்கும்படி சொல்லியிருந்தான். அந்தப் பட்டியலில்தான் கிராம சேவகரின் பெயரும் சூரியாவின் பெயரும் இருந்தன. கிராமசேவகரிடம் சென்று விசாரித்த போது உத்தியோக நிமிர்த்தம் தான் அங்கே போய் வருவதாகச் சொன்னார். இராணுவத்திற்கு எந்த ஒரு தகவலும் கொடுக்கக்கூடாது என்று எச்சரித்துவிட்டு வந்தான் கண்ணன்.
அடுத்து கண்ணன் சந்தித்தது சூரியாவை. கண்ணனைக்கண்ட சூரியா ''வாங்கோ கண்ணன் அண்ணா"' என்று வரவேற்று "'அம்மா கண்ணன் அண்ணா வந்திருக்கிறார்"" என்று உள்ளே குரல் கொடுத்தான். கண்ணனை உபசரித்த விதத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்ததைக் கண்ணன் அவதானித்தான். உள்ளே வந்த கண்ணன் ""இல்லை சூரியா
உன்னிடம் இருந்து சில விஷயங்கள் தெரியவேன்டும்.அது தான் இங்கே வந்தேன்"' என்றான். "'என்னவிஷயம்? சொல்லுங்கோ"" என்றான் சூரியா ஆவலோடு. ""இராணுவ முகாமடிக்குஅடிக்கடி போவதாகக் கேள்விப் பட்டேன் உண்மையா?"" கண்ணன் நேரடி யாகவே சூரியாவைப் பார்த்துக் கேட்டான். சூரியாவின் முகம் சட்டென்று மாறியது. ""யார் சொன்னார்கள்?"" என்றான். "'யார் சொன்னால் என்ன, உண்மையா இல்லையா?"" தலை குனிந்து சிறிது நேரம் மௌனமாய் இருந்த சூரியா, பின் உள்ளே திரும்பிப் பார்த்து விட்டு ""உண்மைதான் கண்ணன் அண்ணா"' என்றான். ""ஏன் அந்த முகாமைக் கண்காணிக்கிறாய்
என்று நான் தெரிந்து கொள்ளலாமா?"" ""எனக்கென்னமோ சாந்தி அங்கேதான் உயிரோடு இருப்பதாக உள்மனசு சொல்லுது. அதுதான் என் கண்ணில் தட்டுப்படமாட்டாளா என்று அடிக்கடி வாசல் பக்கம் சென்று பார்க்கிறேன். என்னமோ ஒரு நப்பாசை! அவ்வளவுதான்"" என்றான் சூரியா. கண்ணனுக்கு சூரியாவின் பதில் ஆச்சரியத்தைக் கொடுத்தது. சாந்தி உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது கூடத்தெரியாத நிலையில் இவன் ஏன் இப்படி நடந்து கொள்கின்றான். பைத்தியமா?
ஒருவேளை ஒருதலைக் காதலோ என்று யோசித்தான். சாந்தியின் பின்னால் தொடர்ந்து போனபடியால் தான் சாந்தி பயந்துபோய் முகாமில் மாட்டிக் கொண்டதாக சூரியா ஒரு தப்பான அபிப்பிராயத்தை மனதில் வைத்திருந்தான். அந்த எண்ணம் அவனை எப்போதும் வாட்டிக் கொண்டே இருந்தது. கண்ணனைச் சந்தித்த போதும் இதையே தான் சொல்லி வருத்தப் பட்டான். ""ஏனோ என்னாலே சாந்தியை மறக்க முடியவில்லை! அவள் நினைவுதான் அடிக்கடி வருகிறது. நான் சிகரட் குடிப்பது அவளுக்கு பிடிப்பதில்லை என்பது எனக்குத் தெரியும்! அதனாலே அவள் ஞாபகமாய் நான் சிகரட் குடிப்பதையே விட்டுவிட்டேன்."
" பெரியசாதனை செய்தது போல சூரியா சொன்னான். கண்ணன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான். அவனவன் மண்ணுக்காக உயிரையே கொடுக்கிறான், இவன் என்ன வென்றால் இல்லாத காதலுக்காக சிகரட்டைத் தியாகம் செய்து விட்டானாம். கண்ணன் சொண்டுக்குள் சிரிப்பதை சூரியா அவதானி த்தான். ""கண்ணனண்ணா நான் சொன்னது உங்களுக்குச் சிரிப்பாக இருக்கலாம் ஆனால் நான் படும் வேதனை எனக்குத்தான் தெரியும். அந்த அனுபவம் அவர்களுக்கு வரும்போது தான் புரியும்!"' உண்மை யாகவே சூரியா மனம் வருந்தித்தான் சொன்னான். கண்ணனுக்கு அவனைப்பார்க்க பாவமாக இருந்தது. "'இல்லை சூரியா உன்னுடைய மனதை நோகவைக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. உனக் காகவாவது சாந்தி உயிரோடு இருக்க வேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கின்றேன்!"" கண்ணன் அவனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
இவர்களைத் தொடர்ந்தும் கண்காணிக்க வேண்டும் என்று நினைத்த கண்ணன் புவனாவிடம் மேலும் விசாரித்தால் சில ஆதாரங்கள் கிடைக்கலாம் என்பதால் அவளைத் தேடிச் சென்றான்.
வானம் இருட்டி லேசாக மாலைநேரத்துக் குளிர்காற்று வீச, அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பொட்டுப் பொட்டாய் மழைத் துளி விழத் தொடங்கியது. வெளியே போவதற்கு வெளிக்கிட்ட சுரேன் தாயார் மட்டும் விறாந்தையில் நிற்பதைப் பார்த்துவிட்டு "'அம்மா சுமதி எங்கே?"' என்றான். வீதியைப் பார்த்துக் கொண்டு நின்ற தாயார் "'இன்னும் வரவில்லை அதுதான் பார்த்துக் கொண்டு நிற்கிறேன்"" என்றார். "'எங்கே போனவா? இருண்டு போச்சு1"' என்றான் சுரேன். "'நேரத்தோட வந்திடுவா என்னவோ இன்னும் காணவில்லை"' என்றார் தாயார். ""எங்கே போனவா என்று சொல்லுங்கோ நான் போய்க் கூட்டிக் கொண்டுவாறேன்"". "'சாந்திவீட்டைதான் போனவா, சிவாவும் இல்லைத்தானே அதுதான் தாயைப்பார்க்கப் போனவா!""என்றார் தாயார். "'சாந்தி வீட்டையோ? சாந்தி தான் இல்லையே? இவா ஏன் அடிக்கடி அங்கே போகிறா?"' ""தெரியாதே பழகின தோஷம், வயசுபோனவா தனிய இருக்கிறாவே என்று ஆறுதல் சொல்லப் போகிறவா!""
"'ஏனம்மா அவை என்ன எங்களுக்குச் சொந்தமா? தேவையில்லாமல் சுமதி அங்கே போய் பெயரைக் கெடுக்க வேண்டாம்."" ""ஏன்ராசா சாந்தி இல்லை என்பதற்காக இவ்வளவு காலமும் அந்தக் குடும்பத்தோடு பழகினதை மறக்கலாமா?"' "'அதற்காக ஊருக்குள்ளே எல்லோரும் சுமதியைப் பற்றி கண்டபடி கதைக்க வேணுமா?"" என்றான் சுரேன்.
தாயார் எதுவும் சொல்லாமல் மௌனமானார். யாரோ சுரேனுக்கு தப்பான கதை ஏதாவது சொல்லியிருக்கலாம், ஒரு வேளை சிவாவோடு சுமதியைத் தொடர்புபடுத்திப் பேசியிருக்கலாம். நாளை கல்யாணம் காட்சி என்று வரும்போது பெண்ணைப் பெற்ற நாங்கள் தான் கவனமாக இருக்க வேண்டும் என்று தாயார் நினைத்தார். சுரேன் சொல்வதும் ஒரு வகையில் சரிதான் என்று நினைத்தார். அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது சுமதி உள்ளே வந்தாள். "'ஏன் பிள்ளை இவ்வளவு நேரம் இருண்டதும் தெரியாமல்...?"" "'சிவாவின்ரை தாய்க்கு கொஞ்சம் சுகமில்லை அதுதான் சாப்பாடு செய்து கொடுத்து விட்டுவாறேன்"' என்று
தாயாரின் கேள்விக்குப் பதில் சொன்னாள் சுமதி. சுரேனுக்குப் பிடிக்காவிட்டாலும் ஒன்றும் சொல்லாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு சயிக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே போனான். "'என்னவாம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போறார்?"" என்றாள் சுமதி தாயாரைப் பார்த்து. "'அவனுக்கு சிவாவீட்டை நீ அடிக்கடி போவது பிடிக்க வில்லை"' என்றார் தாயார். ""ஏனாம்....?"" "'தெரியாது சும்மா சத்தம் போட்டுட்டுப் போகிறான்."" "'அவர்மட்டும் சயிக்கிளை எடுத்துக் கொண்டு இரவிரவாய் காட்ஸ் விளையாடப் போகலாம். நாங்கள் போனால்தான் பிடிக்காது"" என்று சொல்லிக் கொண்டே உள்ளேபோனாள்.
தாயாரும் சமையல் அறைக்குள் போய் இரவுச்சாப்பாடு செய்யத் தொடங்கினார். இயந்திரத்தனமாக கைகள் வேலை செய்தாலும் சிந்தனை எல்லாம் மகள்மீது தான் இருந்தது. சில நாட்களாக நிம்மதி இழந்து உறக்கமில்லாமல் அந்தக்காதல் நெஞ்சம்
தவிப்பதும், நடு இரவினில் விழித்திருப்பதும் பெற்ற தாய்க்குத்தெரியும். உயிர்த்தோழி சாந்தியை மட்டுமல்ல காதலன்சிவாவையும் பிரிந்திருப்பதும், அவனுக்கும் தனக்கும் உள்ளஉறவை நினைத்து அவள் ஏங்கிக் கொண்டிருப்பதும் அந்தத் தாய்க்குத் தெரியும். ஆனாலும் இவைஎல்லாம் தனக்குத்தெரியும் என்று இதுவரை மகளிடம் காட்டிக் கொள்ளவில்லை. சுமதி தானாகவே வந்து சொல்லும்வரை காத்திருந்தாள் அந்தத்தாய். முகம் கழுவிச் சுவாமி கும்பிட்டாள் சுமதி.
மனசுக்குள் ஏதோ துறுதுறுத்துக் கொண்டிருந்தது. யாரிடமாவது மனம் திறந்து அதைச் சொல்ல வேண்டும் போல இருந்தது. சமையலறை வாசலில் செல்லப்பூனை அவளது காலைச்சுற்றி முதுகைத் தேய்த்தது. ''கிற்ரி இங்கேவா"' என்று செல்லமாகச்சொல்லி அதைக் கைகளில் எடுத்து சுட்டுவிரலால் அதன் நெற்றியில் தடவிவிட்டாள். அந்தச் சுகத்தை கண்மூடி அனுபவித்தது அந்த வெள்ளைப்பூனை.
கிற்ரியைப் பார்த்து ""உனக்குமட்டும், உனக்குமட்டும் ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை ஒருவரிடம் சொல்லி விடாதே!"' என்று சமையல் அறையில் நிற்கும் தாயாருக்குக் கேட்கும்படி பலமாக அந்தப் பாட்டைப்பாடினாள். மிகவும் சந்தோஷமான நிலையில் இருந்தாள். கிற்ரிக்கு அவள்என்ன சொல்கிறாள் என்று புரியாவிட்டாலும் அவளதுமகிழ்ச்சியில் தானும் கலந்துகொள்வது போலத்தனது முகத்தை அவளது கைகளில் தேய்த்துஅவளை உற்சாக ப்படுத்தியது.
"'கிற்...ரீ யார் வரப்போறாங்க என்று தெரியாதா? அது என்னோட சிவா!"" என்றாள். "'என்னபிள்ளை உன்பாட்டுக்குக் கதைக் கிறாய்?"" என்றார் தாயார் அவள் சொன்னதைக் கேட்டும் கேளாதது போல. "'ஒன்றுமில்லையம்மா கிற்ரியோட செல்லம் கொஞ்சுறேன்""என்றாள் சுமதி. அப்பா இருந்திருந்தால் காலாகாலத்திற்குக் கட்டிவைத்திருக்கலாம். நான் ஒண்டியாய் இருந்து என்னசெய்ய? ஏக்கப்பெருமூச்சுத்தான் தாயாரி டமிருந்து வெளிவந்தது.
சுமதி தாயாருக்கு அருகே வந்து ""அம்மா சிவாவிற்குப் பயிற்சி முடிஞ்சுதாம் தாயைப்பார்க்க விடுமுறையில் வருகிறாராம்"" என்றாள். "'அப்படியா? அந்தக் குடும்பத்தைப் பிடிச்ச கஷ்ட காலம் எப்பதான் தீருமோ?"" என்றாள் தாய். சுமதி தாயாரின் தோள்களில்; இரண்டு கைகளையும் ஆதரவாய் வைத்து தாயின் முகத்தைப் பார்த்து "'அம்மா சிவாவைப்பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?""என்றாள்.
சிவா பயிற்சி முடிந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்தபோது வாசலில் பார்த்துக் கொண்டு நின்ற தாயார் ஆவலோடு அவனைத் தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். தாயைப் பார்த்ததும் அவனுக்கு அழுகை வந்தது. ""என்னம்மா இது கோலம்?"" என்றான் நம்பமுடியாமல். தாயின் உதடுமட்டும் விரிந்து அவனது கேள்விக்குப் பதிலாய்ச் சிரித்தது. அந்தச் சிரிப்பிலும் ஒரு சோகக்கதை தெரிந்தது. குடும்பத்தில் ஒருவரின் இழப்பு எவ்வளவு தூரம் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதற்கு அம்மாவே ஒரு சாட்சி. எப்படி அம்மா உங்களால் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ள முடிகிறது?
கணவனையும் மகளையும் இழந்து நடைபிணமாய்ப் போனாலும் உன்உயிரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றாயே! ஏன் அம்மா? இந்தப் பிள்ளையையும் அனாதையாய் விட்டுவிட்டுப் போகக் கூடாது என்பதற்காகவா? தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை
என்பார்களே அது எவ்வளவு உண்மையம்மா! நான்வணங்கும் தெய்வம் வேறுஎங்கும் இல்லை அது நீ தானம்மா! அவனையும் மீறிக் கண்களில் ஈரம் படர்ந்தது "'அழாதே ராசா எங்களுக்குக் கொடுத்து வைத்ததுஅவ்வளவு
தான்"" சேலைத் தலைப்பால் அவனது கண்களைத் துடை த்து விட்டு "'பசியோட வந்திரு ப்பாய் முகத்தைக் கழுவிவிட்டு வா ராசா சாப்பிட"" என்று சொல்லி விட்டு அவனுக்கு சாப்பாடு எடுக்க சமையலறை க்குச் சென்றார் தாயார். அழக்கூடச் சக்தி இல்லாமல் அம்மாவின் உணர்வுகள் ஊமை யாகிப் போய் விட்டனவோ என்று நினைத்தான். உள்ளே நுழையும் போதே வெறுமையின்
பாதிப்பு பளீச்சென்று அவனுக்குத் தெரிந்தது. எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு இன்று இருண்டு போய்க் கிடக்கிறதே!. ஏன் இப்படியாய் போச்சு? இந்தக் குடும்பம் யாருக்கு என்ன தவறு செய்தது? சுவாமி அறையில் இருந்துவரும் அப்பாவின் கணீரென்ற அந்தக் குரல் எங்கே? அண்ணா என்று பாசத்தோடு ஓடிவந்து கட்டிப்பிடிக்கும் தங்கை சாந்தி எங்கே? எங்கேபோனார்கள்? இதற்கெல்லாம் யார் பதில் சொல்லப்போகிறார் கள்?யாருமே பதில்சொல்லப் போவதில்லை என்பது அவனுக்குத் தெரியும்! தேடவேண்டும்!
நாங்கள் தான் பதிலைத் தேடவேண்டும் என்று மனது க்குள் நினைத்துக் கொண்டான். உயிரோடு நடமாடித் திரிந்த அப்பா அவர்களை விட்டுப் பிரிந்து போய்க் கனநாட்களாகி விட்டன என்பதை அவரது படத்திலே இருந்த காய்ந்துபோன மலர்மாலை எடுத்துச் சொல்லிற்று. அந்தப் படத்திற்கு முன்னால் நின்று கண்களை மூடித் தியானித்தான். வானொலிப்பெட்டிக்கு மேலே உள்ள பிச்சர்ஃபிறேமில் அன்று மலர்ந்த பூப்போல சாந்தி சிரித்தாள். அந்தச் சிரிப்பெங்கே? அப்பாவின் முடிவு என்ன என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் சாந்தியின் முடிவு என்ன என்பது இதுவரை யாருக்குமே தெரியாத புதிராக இருக்கிறது.
புரியாத இந்தப் புதிரைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் கண்ணன் அண்ணாவைச் சந்தித்து விபரம் கேட்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். ஒரு அகிம்சை வாதியாய் இருந்த அவன் இன்று போராளியாய் மாறிவிட்டான். அவனாக மாறவில்லை சந்தர்ப்பம் அவனை மாற்றி விட்டது. இளைஞர்களே ஆயுதம் ஏந்துங்கள் என்று ஆசை வார்த்தை பேசியவர்கள் எல்லாம் இன்று கோழைகளாய் அடிவருடிகளாய் மாறிவிட்டார்கள். அவர்களை நம்பி இவன்; ஆயுதம் ஏந்தவில்லை. தாய்மண்மீது அவனுக்கு இருந்த அளவில்லாத பற்றும் தன்னினம் அழிக்கப்படுகிறதே என்ற ஆதங்கமும் தான் அவனை ஆயுதம் ஏந்தவைத்தது. தன்முடிவு சரியானதே என்பது அவனதுவாதம்.
அந்தவாதத்தின் பின்னால் இருக்கும் வலியும் வேதனை யும் அவனுக்குத்தான் தெரியும். ஏனென்றால் அந்த வலியையும் வேதனை யையும் அவன்அனுபவித்தவன். நீதிக்கும் நியாயத்திற்கும் போராட அவன் என்றுமே தயங்கி நின்றதில்லை. தர்மயுத்தம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெல்லும் என்பது அவனது அசைக்கமுடியாத நம்பிக்கை!
விறாந்தையில் உள்ள சாய்மனைக் கதிரையில் சாய்ந்தபடி புத்தகம் படித்துக் கொண்டிருந்தான் சிவா. "கிறீச்" என்ற கேற்திறக்கும் சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சுமதி உள்ளே வந்து கொண்டிருந்தாள். உள்ளே வந்த சுமதி சிவாவைக் கண்டதும் ஓடிப்போய் அவனைக் கட்டித் தழுவி தனது மனவேதனையை அவனிடம் கொட்டித் தீர்க்க நினைத்தாள். வாசலில் தாயார் நிற்பதைக் கண்டதும் சட்டென்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
""அம்மா எப்படி இருக்கிறீங்க?"" என்றாள் தன்னைச் சமாளித்துக் கொண்டு. ""என்னமோ இருக்கிறன் பிள்ளை சாப்பிட்டுப் போவன்"" என்றார் சிவாவின் தாயார். சுமதி தாயாரோடு கதைத்துக் கொண்டிருந்தாலும் அவளது பார்வையும் எண்ணமும் சிவாவையே சுற்றிவந்தன. தாயார் உள்ளே போக சுமதி சிவாவிடம் ஓடிவந்தாள்.
அவனது கன்னத்தை கைகளில் ஏந்தி ""சிவா எப்படி இருக்கிறே? பயிற்சி எல்லாம் முடிஞ்சுதா? சரியாய்க்கஷ்டப்பட்டியா? ஏன் சரியாச் சாப்பிடுவதில்லையா? என்ன இது இப்படிக் கறுத்துப் போயிட்டாய்? மூச்சுவிடாமல் கேள்விக்கு மேல் கேள்வியாக் கேட்டாள். சிவா எதுவுமே சொல்லாமல் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவளது படபடப்பில் பிரிவின் வேதனை எப்படிப்பட்டது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
சிவா தனது பதற்றத்தை வேடிக்கையாய்ப் பார்க்கிறான் என்று தெரிந்ததும் அவள் வெட்கப்பட்டு சட்டென்று அவனைவிட்டு விலகித் தலை குனிந்தாள். ""ஸாரி சிவா! என்னாலே உன்னைப்பிரிஞ்சு இருக்க முடியல்லே.... அதுதான்....உனக்கென்ன நீ எதையுமே தாங்கிக் கொள் ளுவாய்! என்னாலே முடியாதப்பா!"" இரண்டு கைகளையும் விரித்து இயலாது என்பது போலச் சைகைகாட்டினாள்.
மனசு உள்ளே வெதும் பியது. அவளை உடனே சமாதானப் படுத்தாவிட்டால் "ஓ"வென்று அழுது விடுவாள் போல இருந்தது. சிவா மௌனத்தை கலைத்து ""சுமதி ஏன் ஒரு மாதிரிஇருக்கிறாய் நான் தான் வந்துவிட்டேனே?"" என்றான்அன்பாக.
மகுடி கேட்ட நாகம்போல அவனது ஆதரவான வார்த்தையைக் கேட்டதும் அவள் மெல்ல விசும்பினாள். கண்களில் முட்டிநின்ற நீர் பொசுக்கென்று அவன் பாதத்தில் விழுந்து சிதறியது. அவன் இயல்பாக நெருங்கி வந்து அவளது தோளைத் தொட்டான்.
""அழாதே சுமதி! நீயே அழுதால் எனக்கு யார் தான் ஆறுதல் சொல்வது?"" என்றான். அவன் தன்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் என்று நினைத்துப் பார்த்ததும் விசும்புவதை உடனே நிறுத்திவிட்டு மூக்கை மட்டும் உறுஞ்சினாள். சிவாவுடைய கண்களும் கலங்கியிருப்பதைக் கவனித்தாள். அவனுடைய துயரத்தோடு பாக்கும்போது தன்னுடைய துயரம் அப்படி ஒன்றும் பெரிதில்லை என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு ""ஸாரி"" சொன்னாள். குழந்தைத் தனமான அவளது செய்கையைப் பார்த்துச் சிவா சிரித்தான். ""ஏனாம்?"" என்றாள்
வெட்கப்பட்டு. ""அழுதபிள்ளை சிரிக்குதாம் அதுதான் நானும் சிரிக்கிறேன்"" என்றான். ""நான் அழுகிறது உங்களுக்கு வேடிக்கையாய் இருக்கா?"" என்றவள் பொய்க் கோபத்தோடு அவனது மார்பில் இரண்டு கைகளாலும் மாறிமாறிக் குத்தியபடி அவன் மார்பில் முகம் புதைத்துக் கேவினாள். கோபம் ஓய்ந்ததும் மெல்லத்தலை நிமிர்த்தி அவனைப் பார்த்து ""சிவா இனிமேல் என்னை இப்படித்தனியே விட்டுவிட்டுப் போகாதே?"" என்றாள் விசும்பலோடு. சிவா அதற்குப் பதில் சொல்லமுடியாமல் சங்கடப்பட்டான்.
அவளது சிந்தனையைத் திசைதிருப்ப நினைத்து ""பிரிவு எவ்வளவு கொடுமையானது என்று எனக்குத் தெரியும் சுமதி! அப்பாவையும் சாந்தியையும் பிரிந்த வேதனையை நான் இன்னும் மறக்கவில்லை!"' என்றான். உயிர்த்தோழி சாந்தியை நினைவுபடுத்தியதும் சுமதி மீண்டும் உடைந்தாள்.
""சாந்தி... சாந்தி... உனக்கென்னாச்சம்மா? உன்னை என்னால் மறக்க முடியவில்லையே!"" என்று விசும்பினாள்.""அழக்கூடாது! சுமதி நீ ஒரு கோழைபோல அழக்கூடாது!"" என்று ஆறுதல் கூறினான் சிவா. "'கஷ்டங்களைத் தாங்கிப் பழகணும் சுமதி, எதையுமே தாங்கிற சக்தி உனக்கு வேண்டும். தற்செயலாக எனக்கு ஏதாவது நடந்தால்.....!"" அவன் சொல்லி முடிக்குமுன் அவள் அவசரமாக அவனது வாயைப் பொத்தி னாள். "'என்ன இது அபசகுனம் மாதிரி?"" என்றவள் ""இப்படித் தான் அம்மாவும் அன்று அபசகுனம் மாதிரிச் சொன்னபோது எனக்குக் கோபம் தான் வந்தது"'என்றாள்.
""ஏன் என்ன சொன்னா?"" என்றான் சிவா. ""சிவாவைப் பற்றிஎன்ன நினைக்கிறீங்க"" என்று கேட்டபோது ""போராட்டம் என்று போனவனைப்பற்றி நான் என்ன சொல்லஇருக்கு என்று சொன்னா"" என்றாள். ""அதிலே என்ன தப்பு? ஒரு பெண்ணின் தாய் என்ற நிலையில் இருந்து சொல்லியிருக்கிறா அவ்வளவுதான். ஒரு போராளியின் நிலை என்ன என்பது உனக்குத்தெரியும் தானே சுமதி?"' என்று சொல்ல அவள் பயந்து போய் யோசனையில் மூழ்கினாள்.
அவள் என்ன யோசிக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட சிவா ""எதையுமே தாங்கிக்கொள்ள உன்னைத் தயார்ப்படுத்திக்கொள் சுமதி! சுயநலம் என்ற குறுகிய வட்டத்தை விட்டு வெளியே வந்துவிடு! எங்கள் இனத்திற்கும், தாய் மண்ணுக்கும் ஏற்பட்ட அவலத்தை நினைத்துப்பார்! அப்போது தான் நாங்கள் எப்படி எல்லாம் ஏமாற்றப்பட்டோம் என்பது உனக்குப் புரியும்!"" என்றான்.
ஆற்றங்கரையில் நின்ற ஒரு ஒற்றை மரத்தின் கதை சுமதிக்கு ஞாபகம் வந்தது. சின்னவயதில் அவளுக்குப் பாட்டி சொன்னகதை. குளிர்மையான அந்த ஆற்றுநீரிலே தன்னை வளர்த்துக்கொண்டு எல்லா சுகங்களையும் அனுபவித்ததுக் கொண்டிருந்த ஒரு மரத்தின் கதை அது. இலைதுளிர்த்து மொட்டுவிட்டு பூத்துக்காய்த்து பருவகாலத்திற்கு ஏற்பத்தன்னை மாற்றிக்கொண்டு உல்லாசமாக நிமிர்ந்து நின்றது அந்தமரம். எந்த ஆற்று நீரின் குளிர்மையில் தன்னை வளர்த்துக் கொண்டதோ அதே ஆற்று நீர் மண்ணை அரித்து மூலவேரையே அறுத்துக் கொண்டிருந்ததை அந்தமரம் அறிந்திருந்தும் அதைப் பொருட்படுத்தவில்லை.அந்த நீரின் குளிர்மையில் தன்னை மறந்திருந்தது. தன்னை யாருமே அசைக்க முடியாது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த போது ஒருநாள் பலமான காற்றுவீச அந்தமரம் வேரோடு சரிந்து விழுந்து விட்டது.
அப்போது தான் தனது வேரைத் தாங்கிக் கொண்டிருந்த மண் ணின் அருமை அந்த மரத்தி ற்குப் புரிந்தது. இந்த மரத்தின் கதைபோலவே எங்கள் இனத்தின் கதையும் இருப்பதாக சுமதி நினைத்தாள். சிவா பல விடய ங்களைச் சுமதியிடம் சொன்ன போது அதைக் கவனமாகக் கேட்டது மட்டுமல்ல அவை எல்லாவற்றையும் மீண்டும் ஆராய்ந்து பார்த்தாள்.நல்லகாலம் எங்கள் இனம் மூலவேரோடு சரிந்து விழாமல் விழித்துக் கொண்டதையிட்டுப் பெருமை ப்பட்டாள். எங்கள் மொழியும் இனமும் எப்படி அழிக்கப்படு கிறது, எங்கள் தாய்மண் எப்படி ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதை
எல்லாம் சிவா விபரமாகச் சொன்னபோது அவளால் அதை நம்பமுடியாமல் இருந்தது. ஆதாரபூர்வமாக சிவா பல சம்பவங்களை எடுத்து விளக்கிய போது, உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்ததும் அவள் அதிர்ந்து போனாள். இவ்வளவு காலமும் இனஒழிப்பை எப்படி எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறார்கள். எங்கள் கண்முன்னாலேயே எங்கள் மண்ணைப் பறித்திருக்கிறார்கள். தமிழ் இனத்திற்குச் சரித்திரமே இல்லை என்று பொய்யான பிரச்சாரம் செய்து உலகமக்களைத் தமது பணப்பலத்தால் நம்பவைத்திருக்கிறார்கள்.
எங்கள் இனம் இதை எல்லாம் இதுவரை ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை? எங்களைச் சிந்திக்க விடாமல் தடுத்தது யார்? அரசியல் வாதிகளா? இல்லை ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த எமது இனத்தவரா? எங்கள் உரிமைகளைக் கேட்டால் இவர்கள் ஏன் கொதிக் கிறார்கள்?தங்களுடைய செல்வாக்கும் பதவியும் பறிபோய் விடும் என்பதாலா? இல்லை எங்கள் இனம் என்றென்றும் அடிமைகளாகவே வாழவேண்டும் என்ற பேரினவாதத்தினாலா? சிந்திக்கத் தெரிந்த எவனும் எங்கள் இனத்திற்கு என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்வான். சுமதியும் சிந்தித்தாள்.
சிந்தனையில் இருந்து மீண்டவள் தலையை உலுப்பிக் கொண்டாள். வேண்டாம்! அந்த ஆற்றங்கரை மரத்தின் நிலை எங்கள் இனத்திற்கு வேண்டாம். எங்கள் மொழியும் எங்கள் இனமும் என்றும் அழியக்கூடாது. எங்கள் தாய்மண் அன்னியரிடம் பறிபோகக் கூடாது. இந்த இனத்திற்கு விடிவு வேண்டுமானால் முதலில் ஒற்றுமை ப்படவேண்டும். தியாக உள்ளத்தோடு ஒவ்வொருவரும் விடுதலைக்காக உழைக்க வேண்டும். இந்தத் தியாக வேள்வியில் தன் பங்கு என்ன என்பதைச் சுமதி சிந்தித்துப் பார்த்தாள். இது தான் பிறந்தமண் என்று நினைத்தபோது அவள் உடம்பெல்லாம் புல்லரித்தது.
போராளியாய் மாறி விட்ட சிவாவை காதலனாய் நினைத்து ஒருபக்கம் வேதனைப்பட்டாலும் தாய்மண்ணுக்காகப் போராட அவன்முன்வந்ததை எண்ணி உண்மையிலே பெருமைப்பட்டாள். அவன் மண்மீது கொண்ட பாசத்திற்காகத் தன் காதலையே தியாகம்செய்ய அவள் தயாராகஇருந்தாள். விடுமுறைமுடிந்து சிவா திரும்பிப்போகுமுன் அவனிடம் சிலவிடயங்களைச் சொல்ல வேண்டும் என்று எண்ணியவள் அப்படியே அயர்ந்து தூங்கிப் போனாள்.
கண்ணன் புவனா வீட்டைஅடைந்தபோது முற்றத்தில் படுத்திருந்த நாய் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் சோம்பலாப்படுத்தது. ஒரு மூதாட்டி பாய்விரித்து அதிலே பிளந்த பனங்கிழங்குகளைப் பரப்பிக் கொண்டிருந்தார். வானம் மூடியிருந்ததால் வெய்யில் அதிகம் தெரிய வில்லை. கண்ணனைக் கண்டதும் நிமிர்ந்துபார்த்து ""தம்பி யாரு? உங்களுக்கு என்னவேணும்?"" என்றார். ""பாட்..டீ! புவனா அக்காவைப் பார்க்கணும்,உள்ளே இருக்கிறாவா? என்றான் கண்ணன். மூதாட்டி அவனை மேலும்கீழும் ஒருதடவைபார்த்து மனசுக்குள் ஏதோ கணக்குப் போட்டுவிட்டு தலையாட்டிக் கொண்டு "'உள்ள வந்து உட்காருராசா நான்கூப்பிடுறன்"" என்று சொல்ல ""இல்லை பாட்டி, நான் இங்கேயே நிற்கிறேன் கூப்பிடுங்கோ""என்றான் கண்ணன். "'அப்ப இதை ஒருக்கால் பார்த்துக்கொள்ராசா"" என்று சொல்லிக்கொண்டு உள்ளேபோக கிணற்ற டியில் யாரோ துணிதுவைக்கும் சத்தம் இங்கே கேட்டது.
கோழி ஒன்று முற்றத்துக் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்க கூரையில் இருந்த காகம் கிழங்கை இலக்கு வைத்துப் பறந்து வந்தது. அதை விரட்டி விட்ட கண்ணன் ""நீங்களா?""என்ற குரல்கேட்டுத் திரும்பிப் பார்த்தான். சேலைத்தலைப்பிலே ஈரக்கைகளைத் துடைத்தபடி புவனா அங்கே நின்றாள்.""பாட்டி இந்த வேலையை உங்களுக்குத்தந்திட்டாவா?"" என்றாள் வேடிக்கையாக. ""பொறுப்பெடுத்தா அதைச் சரியாய்ச் செய்யணும்"" என்று சிரித்தபடி கரம் கூப்பி ""வணக்கம்"" சொன்னான். ""உள்ளே வாங்களேன்"" என்ற புவனாஅவனை உள்ளே அழைத்துச்சென்றாள்.
அவனைக் கண்டதும் புவனாவின் மனம் 'திக்' கென்று அடித்துக் கொண்டாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் அவனைவரவேற்றாள். "'இவன் ஏன் திரும்பவும் இங்கே வந்திருக்கிறான்"' என்ற அவளது மனநிலையைப் புரிந்து கொண்ட கண்ணன் ""உங்களைக் கஷ்டப்படுத்துவதற்கு மன்னிக் கணும். எனக்கு உங்களிடம் இருந்து சில தகவல்கள் தேவை"" என்றான். "'என்னவேணும்?தெரிந்தால்சொல்லுறேன்!""அவள்புன்னகை செய்யமுயன்றாள்.
"'இராணுவமுகாமில் நடக்கும் சில விஷயங்களைப் பற்றி நான் தெரிந்து கொள்ளலாமா?"" என்றான். ""எனக்கெப்படித் தெரியும்?"" தற்பாதுகாப்பு உணர்வு அவள் பதிலில் இருந் தது. ""தெரிந்ததைத்தானே சொல்லச் சொல்கிறேன் உதார ணமாய் இரானுவமுகாமிற்கு யாராவது இளைஞர்களை விசாரணைக்குக் கொண்டு வருவார்களா?"" என்றான். அவள் ஒரு நிமிடம் தயங்கிவிட்டு ""ஆமா"" என்று தலையாட்டினாள்.
""என்ன செய்வாங்க?"" அவளுக்கு ஏற்றமாதிரிக் கேள்விகளைக் கேட்டான். ""சிலபேரை விசாரித்து விட்டு திருப்பி அனுப்பிவிடுவாங்க. சிலபேரைச் சித்திரைவதை கூடச் செய்வாங்க."" ""சித்திரவதை என்றால்?"" இடை மறித்துக் கேட்டான். ""தலைகீழாய் கட்டித் தொங்க விட்டு மிளகாய்ச் சாக்கால் முகத்தை மூடுவாங்க, பிளேட்டால் உடம்பெல்லாம் கீறி மிளகாய்த்தூள் போடுவாங்க, முரண்டுபிடித்தால் அடித்து விலா எலும்பை
உடைப்பாங்க அதிலும் திருப்திப்படாவிட்டால் மண்டையிலேபோடுவாங்க"" இவை எல்லாம் கண்ணனுக்கு தெரிந்த விஷயம்தான் என்பதால் இதைக் கேட்டு அவன் அதிர்ச்சி அடையவில்லை. ஆனால் வாசலில் உட்கார்ந் திருந்த பாட்டி திறந்த வாய் மூடாமல் தலையிலே கைவைத்த போது புவனாவிற்க்கு சித்திரவதையின் கொடூரம் புரிந்தது. ""அவங்க செத்துப் போயிட்டா?"" மூதாட்டி பொறுக்க முடியாமல் வாய்விட்டுக்கேட்க, ""முகாமிற்குப் பின்னால் குழிதோண்டிப் புதைச்சிடுவாங்க"" என்றாள் புவனா. ""அக்கா நீங்க அதைப் பார்த்திருக்கிறீங்களா?"" என்றான் கண்ணன்.
""ஆமா எங்கவீட்டு யன்னலுக்கு மேலே உள்ள துவாரத்தால் பார்த்திருக்கிறேன். ஒரு சமயம் ஒரு இளைஞனை துடிக்கத் துடிக்க அரைஉயிரோடு புதைச்சாங்க"" என்றாள். அதைச் சொல்லும்போது உணர்ச்சி வசப்பட்டு அவளது கண்கள் பனித்தன.
""உண்மையாவா? உங்களுக்கு எப்படித் தெரியும்?"" கேட்டான் கண்ணன். "'அவங்க பேசிக்கொண்டது தெளிவாய்க் கேட்டது. மயங்கிக்கிடந்த இளைஞனின் உடம்பு மழைத்துளி பட்டதும் அசைந்திருக்கிறது. அவர்கள் பயந்துபோய் அப்படியே குழிக்குள் போட்டு மூடிவிட்டார்கள்"". என்றாள்.
"'அப்படிஎன்றால் மாஸ்ரருக்கும் சாந்திக்கும் என்ன நடந்ததென்று சொல்லமுடியுமா?"" கண்ணன் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் புவனா ""தேனீர் குடிக்கிறீங்களா?"" என்று அவனைப் பார்த்துக்கேட்டாள். ""கொடுங்க குடிக்கிறேன்"" என்றான்.
எப்படியும் அவளோடு ஒத்துப் போகவேண்டும் என்று நினைத்தான்.. அவன் தேனீர் அருந்தும் போது மாஸ்ரருக்கும் சாந்திக்கும் என்ன நடந்தது என்பதை அவள் விபரமாகக் கூறினாள்.
""நீங்கள் நேரத்தையும் உழைப்பையும் செலவுசெய்து தகவல் எடுக்கிறீங்க அவங்க பணத்தைக் கொடுத்து இலகுவில் அதை எடுத்திர்றாங்க"' என்றாள் புவனா. ""அக்கா இந்தத் துரோகத்திற்குத் துணை போவது யார்என்று சொல்ல மாட்டீங்களா?"' கெஞ்சாத குறையாகக்கேட்டான் கண்ணன்.
""ஊரிலே நடக்கும் முக்கிய நிகழ்சிகளை வீடியோப்படம் பிடிக்கும் ரத்தினமும் அதைப் பணம் கொடுத்து வாங்கி அங்கே கொண்டுவந்து கொடுக்கும் இன்னும் ஒருவரும்"" என்றாள் புவனா. "'என்னக்கா நீங்க புதுக்கதை சொல்லுறீங்க?"" நம்பமுடியாமல் அதிர்ந்தான் கண்ணன்.
புவனா "வீடியோரத்தினம்" என்ற பெயரைப் சொன்னதும் கண்ணனால் அதை நம்பமுடியவில்லை. ஊருக்குள்ளே எல்லோரோடும் நன்றாகச் சிரித்துப் பழகும் ரத்தினமா? திருமணவீடா, பிறந்தநாள் விழாவா, புனித நீராட்டுவிழாவா எதற்குத்தான் ஊர்மக்கள் வீடியோப்படம் எடுக்காமல் விட்டார்கள்.
அப்படி என்றால் இந்த ஊர்மக்களினன் படங்கள் எல்லாம் இராணுவமுகாமில் இருக்கிறதா?மற்றவர்களை விடக்குறைந்த விலையில் ரத்தினம் வீடியோ எடுக்கும் போது "'இவனால் மட்டும் எப்படி முடிகிறது என்று நான் ஏன் சிந்தித்துப் பார்க்கவில்லை"" என்று கண்ணன் தன்னைத்தானே நொந்து கொண்டான்.
இதற்கு இப்படி ஒரு பின்னணி இருக்கும் என்று அவன் நினைத்ததில்லை. நல்லவர்கள் போல் நடித்து ஊர்மக்களை இவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என்று நினைத்ததும் அவனது முகம் சட்டென்று சிவந்தது.அவனது நிலைமையைப் புரிந்து
கொண்ட புவனா ""போராளிகளின் படங்கள் மட்டுமல்ல அவர்களின் வீடுகள், அவர்களுக்கு உணவு கொடுப்பவர்கள்,உதவி செய்பவர் கள்பற்றியஎல்லாத் தகவல்களுமே முகாமில்இருக்கின்றன"" என்றாள் ""நீங்கள்சொல்லுவதைப் பார்த்தால் என்னுடையபடமும்அவர்களிடம் இருக்கும் என்று தான் நினைக் கிறேன்"" என்றான் கண்ணன்.
""உங்களுடைய படம் மட்டுமல்ல மாஸ்ரரின் ஈமக்சடங்குகளில் கலந்துகொண்ட எல்லோருடைய படங்களும் அவர்களிடம் இருக் கின்றன."" என்றாள் புவனா. ""பொதுவாக சந்தோஷமான நிகழ்ச்சிகளைத் தான் வீடியோப் படம் பிடிப்பார்கள், ஆனால் சமீபகாலமாக ஏன் துக்கமான நிகழ்ச்சி களையும் படம்
பிடிக்கிறார்கள் என்று சிலநேரங்களில் நான் நினைப்பதுண்டு. வெளிநாடுகளில் இருக்கும் பிள்ளைகளுக்கு அனுப்புவதற்காகப் படம் எடுக்கிறோம் என்பார்கள். இப்போது தான் புரிகிறது அவர்களுக்குத் தெரியும் ஊரில் நடக்கும் துக்கநிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் போராளிகள் வந்துகலந்து கொள்கிறார்கள்; என்பதால்தான் படம் எடுக்கிறார்கள்"' என்று கண்ணன்சொல்ல இடைமறித்தபுவனா "'நீங்கள்சொல்வது உண்மைதான்! சிவாவின் படத்தைக்கூடப் பெரிதாக்கி அவனைப்பற்றிய எல்லா விபரங்க ளையும் அங்கே வைத்திருக்கிறார்கள்"'என்றாள்.
""சிவாவின் படமா? ஏன்?"" ஆர்வமாய்க் கேட்டான் கண்ணன். "'யாரோ சிவாவைப் பற்றிப் பயிற்சி முகாமிற்குப் போயிருப்பதாகத்தகவல் கொடுத்திருக்கிறார்கள். அதனால்தான் ஜெயரட்னாவின் அறையிலே அவர்கள் குறிவைத்திருப்பவர்களில் ஒருவனான சிவாவின் படமும் இருக்கிறது."' என்றாள் புவனா. ""படம் இருந்தால் அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கிறார்கள் என்ற அர்த்தமா?""கேட்டான் கண்ணன். "'அப்படித்தான் நினைக்கிறேன்! சமீபத்தில் முகாமிற்குக் கொண்டுவந்து சித்திரவதை செய்யப்பட்டவர்களின் படங்களைஎல்லாம் முன்பு ஜெயரட்னாவின் அறையிலே பார்த்திருக்கிறேன்.
ஏமாந்திருக்கும் தருணம் பார்த்து கோழியை அமுக்குவது போல அமுக்கிக் கொண்டு வந்துவிடுவார்கள்."' என்றாள். புவனா சொல்வது உண்மையானால் சிவா இங்கே வந்து நிற்பது பற்றிய தகவல் கட்டாயம் இராணுவமுகாமிற்குப் போயிருக்கும். சிவாவை எச்சரிக்க வேண்டியது தன்னுடைய கடமைஎன்று நினைத்தகண்ணன் புவனாவிற்கு நன்றி சொல்லி விடைபெற்றான். வாசலில் உட்கார்ந்திருந்த பாட்டிக்கு அருகே வந்து ""பாட்டி நான் போயிட்டுவாறேன்.
உடம்பைக் கவனிச்சுக் கொள்ளுங்கோ"" என்றான்ஆதரவாய். உணர்ச்சி வசப்பட்டபாட்டி அவனது கன்னத்தைத்தடவி "'ஓம்ராசா கவனமாய்போய்விட்டு வா"" வார்த்தைகளில் பாசம் பொங்கிவழிந்தது. போராளியாய் மாறிவிட்ட ஊரார் வீட்டுப் பிள்ளை யைக்கூடத் தன்பிள்ளையாய்ப் பாவிக்கும் அந்தப் பாட்டியின்மனப்பான்மை அவனது உள்ளத்தை தொட்டது.பாட்டி மட்டுமல்ல அவர்கள் ஊருக்குள் எங்கே போனாலும் அவர்களுக்கு மக்கள் தரும் ஆதரவைநினைத்து அவன் மனம்நெகிழ்ந்தான். இந்த ஆதரவிற்கு போராளிகளின் கடமை, கண்ணியம்,கட்டுப்பாடே முக்கியகாரணம் என்பது அவனுக்குத் தெரியும்!
சிவா மீண்டும் அந்தக் கடிதத்தை வாசித்துப் பார்த்தான். சுமதியிடம் இருந்து அவளது பக்கத்து வீட்டுப்பையன் கொண்டுவந்து கொடுத்த கடிதம். ""மிகவும் அவசரம். உங்களிடம் முக்கியமான விடயம் ஒன்று சொல்ல வேண்டும். தயவு செய்து உடனேவரவும்-சுமதி"'. ஒரு துண்டுப் பேப்பரில் அவசரமாய் கிறுக்கி இருந்தாள்.
அந்தக் கிறுக்கல் கூட அவனுக்கு அழகாய்தான் தெரிந்தது. ஆனால் அந்தக் கடிதத்தில் இருந்த அவசரத்தால் அதன் அழகை அவனால்; அப்போது ரசிக்கமுடியவில்லை. கட்டாயம் வரவும் என்று சொல்லாமற் சொல்லும் அன்புக் கட்டளை யாகவும் அந்தக்கடிதம் அவனுக்குத் தெரிந்தது. தாயார் எட்டிப்பார்த்து "'என்னராசா கடிதம்?"" என்றார். ""அப்படி என்னஅவசரம்?"" என்ற சிந்தனையில் இருந்த சிவா "'ஒன்றுமில்லையம்மா நான் ஒருக்கால் வெளியே போய்விட்டுவாறேன்"" என்றான்.
""நாளைக்குப் பயணமெல்லேராசா இருட்ட முந்திவந்திடு"' கொஞ்ச நேரமென்றாலும் மகனுடன் கதைத்துக் கொண்டிருக்கலாம் என்ற ஆர்வம் வார்த்தையாய் வெளிவந்தது. "'சரி அம்மா நான் சீக்கிரம்வாறன்"" கடிதத்தை மேசையில் வைத்துவிட்டு சிந்தனையோடு சயிக்கிளில் கிளம்பினான். சுமதியின் வீட்டை அவன் அடைந்து கேற்றைத் திறந்தபோது வெளியே போவதற்காக சுரேன் உள்ளே இருந்து சயிக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். சிவாவைக் கண்டதும் "'என்ன சிவா எப்படி இருக்கிறாய்?"" என்று சுகம் விசாரித்தான்.
""சுகமாய் இருக்கிறேன், சுமதி இருக்கிறாவா?"" என்று தயங்கினான் சிவா. சுரேன் உள்ளே திரும்பி "'அம்மா சுமதியை வரச்சொல்லுங்கோ, சிவா வந்திருக்கிறார்"" என்று குரல்
கொடுத்தான். "'சுமதி உள்ளே இருக்கிறா! உள்ளே போங்கோ சிவா"" என்று சொல்லிவிட்டு கேற்றைத்திறந்து வெளியே போனவன் திடீரெனத் திரும்பிவந்து, "'சிவா என்னுடைய சயிக்கிள்சில்லு காற்றுப் போய்விட்டது. உங்கடை சயிக்கிளை ஒருக்கால் எடுக்கட்டே?"" அனுமதி கேட்டான். சிவா உடனே திரும்ப வேண்டுமென்று நினைத்தாலும் மறுக்கமுடியாமல்
சுரேனுக்கு சம்மதம் சொன்னான். ""நீங்கள் கதைத்துக் கொண்டிருங்கோ நான் சீக்கிரம் வந்திடுவேன்!"" என்று சொல்லிவிட்டுச் சிவாவின் சயிக்கிளை எடுத்துக் கொண்டு போனான் சுரேன். காதலியின் சகோதரர்கள் அனேகமாகத் தங்களுக்குச் சாதகமாக இப்படி ஏதாவது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டு உள்ளே போக ""வாங்கோ தம்பி"" என்று உள்ளேயிருந்து வந்த சுமதியின் தாயார் வரவேற்றார்.
""எப்படி அம்மா இருக்கிறீங்க?"" சிவா சுகம் விசாரித்தான். ""ஏதோ இருக்கிறம், சுமதி கிணற்றடியில் நிற்கிறா போய்ப் பாருங்கோ"" என்று பின் வாசற்கதவைக் காட்டிவிட்டார்.
சிவா பின் வாசற்கதவைத் திறந்து பின்வளவிற்குப் போனான். சுமதி துணி துவைக்கும் கல்லிலே உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். மெல்லிய காற்றிலே அவளது கூந்தல் பறந்து முகத்தை மூட அதை ஒரு
கையால் விலத்திவிட்டு ஆர்வமாய் எதையோ வாசித்துக் கொண்டிருந்தாள். லேசானகாற்றின் மாலைநேரக்குளிர் சிவாவின் முகத்தை இதமாகத் தடவிச்செல்ல தூரநின்று அவள் அழகை ரசிக்கநினைத்தவன் என்ன அவசரமோ என்று நினைத்து அவளுக்கு அருகேபோய் ""சுமதி"" என்றான். புத்தகத்தில் மூழ்கியிருந்த சுமதி திடுக்கிட்டு எழுந்து ""நீங்களா? எப்போ வந்தீங்க? என்றாள்.
""வந்து ரொம்பநேரமாச்சு உங்கடதனிமையைக் கலைச்சிட்டேனா"" என்றான் சிவா. ""தனிமை"' என்ற வார்த்ததையை அனுபவத்தில் உணர்ந்த அவள் அவனைப் பார்த்துச் சோகமாகச் சிரித்தாள். அருகே வந்து பார்த்தபோது அவளதுகன்னத்தில் நீர்வழிந்திருந்தது. ""சுமதி என்ன இது? என்னாச்சுஉனக்கு?"" என்றான் சிவா பதட்டத்தோடு. ""ஒன்றுமில்லை! எங்கே நீங்கள் என்னைப் பார்க்க வராமலேயே போய்விடுவீங்களோ என்று நினைத்தேன்"" தலைகுனிந்தபடி அவள் விம்மினாள்.
"'இல்லை சுமதி காலையிலே போகும்போது இங்கே வந்து சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான் இருந்தேன்."' சிவா அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். "'உங்களுக்கு என்னைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையிருந்தால் தானே? நான் பைத்தியம் மாதிரி உங்களையே நினைச்சு தினமும் அழுதுகொண்டு"" அவள் சொல்ல வந்ததை இடைமறித்த சிவா ""அப்படிச் சொல்லாதே, எனக்கு மட்டும் உன்னைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில்லையா? அம்மாவின் ஆசைகளையும் நிறைவேற்ற வேண்டியது என்னுடைய கடமைதானே சுமதி!"' என்றான்.
"'என்ன வேண்டும் என்றாலும் சொல்லுங்கோ! உங்க ளோடு பழகிய இந்தஉறவு என்றுமே மறக்காது! இந்த உள்ளம் என்றும்; பிரியாது! எங்கேயிருந்தாலும் இதை நீங்கள் புரிஞ்சுகொண்டால்சரி"" என்று சொல்லிவிட்டு அவனை ஏக்கத்தோடு பார்த்தாள். ""சுதந்திர மண்ணிலே நாங்கள் ஒன்றுசேர்வோம், அதுவரை பொறுமையாய் இருந்து அதற்காக நீயும் பாடுபடணும் சுமதி"" என்று சொல்லி அவளைச் சமாதான ப்படுத்தினான்.
ஊடலைக் கைவிட்டு அவள் சகஜநிலைக்குத் திரும்பினாள். ""அவசரமாய் வரச்சொன்னாயே சுமதி ஏன் என்று சொல்ல மாட்டியா?"" கேட்டான் சிவா. ""ஏன்? இல்லாவிட்டால் வந்திருக்க மாட்டீங்களா?"'ஆர்வத்தோடு அவள் கேட்க "'அதுதானே உன்னைக்காண ஓடோடி வந்தேன்"" என்று சொல்லி மெல்லச்சமாளித்தான் சிவா.
கண்ணன் புவனாவிடமிருந்து விடைபெற்றுத் திரும்பும்போது சிவாவின் வீட்டிற்குப் போய் சிவாவை எச்சரிக்கவேண்டும் என்று நினைத்தான். புவனா சொன்ன தகவலின்படி எந்தநேரமும் சிவாவிற்கு அவர்கள் வலை விரிக்கலாம். அப்படி ஒன்று நடந்தால் பயிற்சி பெற்ற ஒரு போராளியின் இழப்பு மிகப் பெரிய இழப்பாகவே இருக்கும். சிவா றிக்கிரீமில் இருப்பதும், முக்கியமான ஒரு தேவைக்காகத்தான் அவன் இங்கே வந்தான் என்பதும் கண்ணனைத் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.
தனக்குத் தேவையான தகவலை எடுப்பதற்காக அவன் உயிரையும் கொடுக்கத் தயங்க மாட்டான் என்பதும் அவனுக்குத் தெரியும். அத்தோடு தன்னுடைய பொறுப்பில் இருக்கும் பகுதியில் இராணுவத்தின் நடமாட்டத்தை இனிமேல் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அதற்குரிய ஏற்பாடுகளைத் தாமதிக்காமல் செய்யவேண்டும்; என்றும் நினைத்துக்
கொண்டான். சிவாவின் வீட்டை அடைந்தபோது தாயார் தான் வாசலில் நின்றார். "'சித்தி என்ன யோசித்துக் கொண்டு இருக்கி றீங்க?"" என்றான் கண்ணன். "'ஒன்றுமில்லை,சிவா வெளியிலை போய்விட்டான் அது தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்."'
என்றார் சிவாவின் தாயார். "'சிவா
இல்லையா?எங்கே போயிட்டான்? என்றான் கண்ணன். ""தெரியவி ல்லை யாரோ ஒரு பையன் கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். அதைவாசித்து விட்டு சயிக்கிளை எடுத்துக் கொண்டு போய்விட்டான்""என்றார் சிவாவின்தாயார். "'கடிதமா யார் கொடுத்தது?"'என்றான் கண்ணன் ""மேசையிலைதான் இருக்கு எடுத்து வாசித்துப் பார் நான்
கோப்பி போட்டுக் கொண்டு வாறேன்"" சொல்லி விட்டு சமையலறைக்குச் சென்றார் சிவாவின் தாயார். கண்ணன் கடிதத்தை எடுத்து வாசித்துப் பார்த்தான். சுமதியின் கையெழுத்து! ""கடவுளே இவன் ஏன் இப்படி பைத்தியம் மாதிரி நடக்கிறான்? புவனா சொன்னது உண்மை என்றால்?'' நினைத்துப் பார்க்கவே உடம்பு நடுங்கியது. உடனே சிவாவைத்தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவனது உள்மனம் எச்சரித்தது. சிவா அவசரப்பட்டிட்டியேடா! முட்டாள் மாதிரி அவங்க விரிச்ச வலையிலே மாட்டிக்கப் போறியே? சிவாவின் தாயார் கோப்பி தயாரித்துக் கொண்டு வந்தபோது கண்ணன் அங்கே இருக்கவில்லை. ""ஒரு நிமிஷம் நிற்க மாட்டான், எப்பவுமே இவனுக்கு அவசரம்! இப்பிடி ஓடியோடி என்னதான் செய்யிறாங்களோ?"" சலித்துக்கொண்டு திரும்பிச் சமையல் அறைக்குப் போனதாயார் தன்னுடைய மகனைக் காப்பாற்றத்தான் கண்ணன் பாய்ந்து போகிறான் என்பது கூடத்தெரியாமல் சிவா திரும்பிப் போகும்போது கொண்டு போவதற்காகப் பலகாரம் செய்யத் தொடங்கினார்.
"'உங்களிட்ட எனக்குத் தெரிந்த ஒரு முக்கிய விஷயம் பற்றிச் சொல்லணும். அதுதான் உங்களை அவசரமாய் வரச்சொன்னேன்"" என்று பீடிகை போட்டாள் சுமதி. "'அப்படி என்ன முக்கியவிஷயம்?"" ஆவலோடு கேட்டான் சிவா. ""இது எவ்வளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது ஆனால் இதை உங்களிடம் சொல்லாமல் இருக்கவும் மனசு கேட்கலை!"" என்றாள் சுமதி. "'அப்படி என்ன ரகசியம்?"" இதற்கு மேலும் பொறுமை இல்லாமல் அவசரப்படுத்தினான் சிவா. இதுவரை மறைத்து வைத்திருந்த அந்த ரகசியத்தைச் சுமதி சொல்லச்சொல்ல சிவாவின் முகம் வியர்த்துச் சிவந்தது.
""உண்மையாவா? ஏன் இதை என்னிடம் சொல்லவில்லை?"" திரும்பவும் நம்பமுடியாமல் சுமதியைப் பார்த்துக் கேட்டான். ""ம்"" என்று அவசரமாய்த் தலையசைத்தவள் ""நேற்றுத்தான் நிச்சயப்படுத்தினேன்"" என்றாள் சுமதி. பல்லைக்கடித்துக் கொண்டு அந்த அதிர்ச்சியைத் தாங்கினான் சிவா. இப்போது என்னசெய்யலாம்? அவசரப்பட்டால் காரியம் கெட்டுவிடும்! நிதானமாகச் செயற்பட வேண்டும்! ஆனால் அதற்காக அவசரப்படாமல் இருக்கமுடியுமா?.
அவனது மன ஓட்டத்தைப் புரிந்த கொண்ட சுமதி ""எனக்குப் பயமாயிருக்கு சிவா இப்ப நாங்கஎன்ன செய்யலாம்?"" என்றாள்.
"'அதைப்பற்றித்தான் நான் யோசிக்கின்றேன். தலைக்குமேல் வெள்ளம் போகுமுன் ஏதாவது செய்தாகணும், இந்த விஷயம் அம்மாவிற்குத் தெரியுமா?"" என்றான் சிவா. "'இல்லை அம்மாவை நினைத்தால் தான் பயமாயிருக்கு தெரியவந்தால் உடைஞ்சு போயிடுவா"' என்றாள் சுமதி.
"'வேண்டாம்! சொல்லவேண்டாம்! அம்மாவிற்கு இதைப்பற்றி இப்போது எதுவுமே தெரியவேண்டாம்!"" சிவா அவசரமாய் சுமதியை எச்சரித்தான். "'சுமதி இந்தவிடயத்தைக் கண்ணன் அண்ணாவிடம் நான் உடனே சொல்லவேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. நான் போய்விட்டு நாளைக்கு வருகிறேன்"' சொல்லிக் கொண்டு வெளிக்கிட்டசிவாவிற்கு சுரேன் இன்னமும் சயிக்கிளைக் கொண்டு வரவில்லை என்பது ஞாபகம் வந்தது.
""இருங்க ஒருநிமிடம் நான் கோப்பி போட்டுக் கொண்டுவாறேன்"" என்று சொல்லிக் கொண்டு கையிலே இருந்த கதைப் புத்தகத்தைச் சிவாவிடம் கொடுத்துவிட்டு சமையலறையை நோக்கிஓடினாள். தனியே விடப்பட்ட சிவா பொழுதுபோகாமல் இருக்கவே அந்தக் கதைப் புத்தகத்தைத் திறந்து தனது பேனாவை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினான். சுமதி நன்றாகக் காய்ச்சியபாலைக் காப்பியில்விட்டு இரண்டுகரண்டி சீனி போட்டுக்கலந்தாள். "'நான் கலக்கும் காப்பிஎன்றால் சிவாவிற்கு ரொம்ப ப்பிடிக்கும்"' என்று தனக்குள் சொல்லிக் கொண்டு பின்வாசற்கதவைத் தள்ளிக்கொண்டு காப்பியோடு வந்தவள் ""என்னஇது?"" என்று ஒருகணம் திகைத்துப்போய் நின்றாள்.
அவள்முகத்தில் சட்டென்று திகில் குடிகெண்டது. மாலை நேரத்து மங்கிய வெளிச்சத்தில் சிவா கைகளை உயர்த்திக் கொண்டு நிற்பதும் அதைத் தொடர்ந்து இரும்புத்தொப்பி அணிந்த இராணுவம் துப்பாக்கியோடு அவனை நெருங்கிக் கொண்டிருப்பதும் ஒரு நிழற்படம் போல அவளுக்குத் தெரிந்தது. என்ன நடக்கிறது? இது கனவா இல்லை நினைவா என்று ஒருகணம் திகைத்தவள் ""சிவா"" என்று வாய் விட்டுக் கத்திப் பார்த்தாள். சத்தம்
வெளியே வராமல் தொண்டைக்குள் அடைத்துக்கொள்ள அவளது கைகள் நடுங்கத் தொடங்கின. தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள அவள் முயன்றாலும் அவளை அறியாமலே கையில் இருந்த காப்பிக் கோப்பை நழுவிக் கீழேவிழுந்து ""படீர்"" என்ற சத்தத்தோடு சிதறியது. சத்தம் கேட்டு இராணுவம் ஒரு வினாடி திகைத்துப்போய் நிற்க அந்த ஒரு வினாடியைச் சிவா தனக்குச்சாதகமாய் பயன்படுத்திக் கொண்டான்.
இராணுவம் பாய்ந்து சிவாவை உயிரோடுபிடிக்க முயன்றபோது வாயிலேவெள்ளையாய் நுரைதள்ள சிவா கீழே சரிந்தான். கண்மூடி முழிக்குமுன் எல்லாமே நடந்து முடிந்து விட்டன. எந்த மண்ணை அவன் நேசித்தானோ அந்த மண்ணை அவன் அணைத்துக் கொண்டான். அவனை உயிரோடு பிடித்து அவனிடம் இருந்து எவ்வளவோ தகவல்களைச் சேகரிக்கலாம் என்று மனக்கோட்டைகட்டிக் கொண்டிருந்த
ஜெயரட்னாவிற்கு சிவாவின் வாய்க்குள் இருந்த உடைந்துபோன சிறியவெற்றுக் குப்பி மட்டும் தான் மிஞ்சியது. கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டேனேஎன்ற ஆத்திரத்தில் ஜெயரட்னாவின்முகம் சிவந்து கோபத்தில் துடித்தது. மரணத்தைக் கழுத்தில் சுமந்த அவனதுஉடலை வேண்டுமென்றே கையிலே பிடித்து தரதர என்று இழுத்துச் சென்று இராணுவவாகனத்தில் போட்டனர்.
தெரு முற்றிலும் வெறிச்சோடிக் கிடந்தது. அக்கம் பக்கத்தவர் யாருமே பயத்தில் வீட்டைவிட்டு வெளி வரவில்லை. இதைஎல்லாம் கண்முன்னாலேயே பார்த்துக் கொண்டிருந்த சுமதி என்னசெய்வது என்று தெரியாமல் உறைந்துபோய் நிற்க கண்ணுக்குள் பூச்சிகள்சுற்ற அவள்அப்படியே மயங்கித்தரையில் சரிந்தாள். அவள் கண்விழித்தபோது தெருநாய்கள் குலைக்கும் சத்தம் எங்கோ தூரத்தில் கேட்டது. இராணுவம் அந்த இடத்தை விட்டு முற்றாகப் போயிருந்தது.
தாயார் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க அயலவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். நடந்ததெல்லாம் பொய்யாய் இருக்கக் கூடாதா என்று நினைத்த சுமதி அடக்கமுடியாமல் விசித்து விசித்துஅழுதாள். ""சிவாவிற்கு என்னநடந்தது என்று பார்த்துக்கொண்டு வருகிறேன்""என்று சொல்லிக்கொண்டு வெளிக்கிட்ட சுரேனை""வேண்டாம் ராசா வெளியிலை போகாதை பெடியளைப் பார்த்துத் தான் சுடுகிறாங்கள்"" என்று கெஞ்சி மன்றாடித் தடுத்து நிறுத்தினார் தாயார்.
நடந்த சம்பவம் காட்டுத்தீபோல ஊரெல்லாம் பரவ பாதிவழியில் இதை அறிந்த கண்ணன் திரும்பவும் பதட்டத்தோடு சிவாவின் வீட்டிற்குச் சென்றான். கத்திக் குழறிக் கொண்டிருந்த சிவாவின் தாயாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அயலவரைத் துணைக்கு விட்டுவிட்டு சுமதியின் வீட்டிற்கு விரைந்தான் கண்ணன். வழியெல்லாம் ஊர்மக்களிடையே ஒருவித பதற்ற நிலையை அவதானித்தான். அவர்கள் அவனைப்பார்த்த பார்வையில் "'உங்களை நம்பித்தான் இருக்கிறோம் இந்த இழப்பிற்கு என்னபதில் சொல்லப் போறீங்க?""என்று கேட்பதுபோல இருந்தது.சுமதியின் வீட்டைக்கண்ணன் அடைந்தபோது சுமதியின் தாயாருக்கு அயலவர்கள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.
சுமதி எங்கே என்று கேட்டபோது""இப்பதான் அழுது கொண்டு பின்பக்கம் போனவா""என்றார்கள். பின்பக்கம்போன கண்ணன் கிணற்று விளிம்பிலே சுமதி நிற்பதைக் கண்டு திகைத்தான்!
சுமதி கிணற்று விளிம்பிலே நிற்பதைக் கண்ட கண்ணன் ஒரு வினாடி அதிர்ந்துபோனாலும் மறுகணம் வேகமாய்ப்பாய்ந்து அவளது கையைப் பிடித்து வெளியே இழுத்தான். இதைச் சற்றும் எதிர்பாராத சுமதி திமிறிக் கொண்டு ""விடுங்க! என்னைச் சாகவிடுங்க"' என்று அவனிடம் இருந்து விடுபட முயன்றாள்.
""உனக்கென்ன பைத்தியமா?அவசரப்பட்டு ஏன் இந்த முடிவிற்கு வந்தாய் சுமதி?"" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் கண்ணன் என்று தெரிந்ததும் அவனது கால்களில் விழுந்து ""கண்ணன் அண்ணா என்னை மன்னிச்சிடுங்கோ நான் தெரியாமல் செய்த தவறாலை என்ரைசிவாவைப் பறிகொடுத்திட்டேன்,
இனி நானிருந்து என்ன செய்ய?"" என்று சொல்லிப் புலம்பினாள். அவளது கண்ணீர் அவன் பாதங்களை நனைக்க மௌனமாய் அவளைத் தூக்கி நிமிர்த்தினான். மனதில் உள்ளதை எல்லாம் அழுது தீர்க்கட்டும் என்று அவளிடம் எதுவுமே
கேட்காமல் சிறிது நேரம் பேசாமலிருந்தான். கண்ணனைக் கண்டதும் சற்று ஆறுதல் அடைந்த சுமதி நடந்ததை எல்லாம் ஒன்றும் விடாமல் அவனிடம்சொன்னாள். ""எனக்குத் தெரியும் சுமதி! அவன் செத்தாலும் மாவீரனாய் தான் சாவான் என்று!"" அவளுக்கு ஆறுதல் கூறினான். மாவீரன் என்ற வார்த்தையைக் கண்ண னிடம் இருந்து கேட்ட சுமதி உணர்ச்சி வசப்பட்டவளாய் கண்ணனை நிமிர்ந்து பார்த்தாள்.
"'சிவாவிற்கு வலை விரித்திருக் கிறார்கள் என்று தெரிந்ததும் அவனை எச்சரிக்கத்தான் நான் இங்கே ஓடிவந்தேன். ஆனால் என்னைவிடக் காலன் முந்தி விட்டான். எந்த ரகசியத்தை சிவாவிடம் நீ சொன்னாயோ அந்த ரகசியத்தை உன்வாயாலே உறுதி செய்யத்தான் அவன் இந்த ஊருக்கேவந்தான். உன் கடிதத்தைப் பார்த்ததும் அவன் ஓடிவந்ததும் அதற்குத் தான். என்னஇருந்தாலும் தன் கடமையைச் செய்து விட்டுத்தான் மரணத்தைத் தழுவியிருக்கின்றான் என்று நினைக்கும் போது எனக்குப் பெருமையாய் இருக்கிறது"' என்றான் கண்ணன்.
""உண்மைதான் நான் அதைச் சொன்னதும் உடனே உங்களிடம் சொல்லவேண்டும் என்றுதான் அவசரமாய் வெளிக்கிட்டார். நான் தான் கோப்பி குடித்துவிட்டுப் போங்கோ என்று தடுத்து நிறுத்தினனான்"' என்று ஒவ்வொன்றாய் நினைத்துச் சொன்னவள் ""எல்லாம் இந்தப் பாவியாலே வந்தவினை"" என்றுசொல்லி மீண்டும் தலையிலே அடித்துக் கொண்டு அழத்தொடங்கினாள்.
அழுதுகொண்டே ""சிவாவை எங்கே கொண்டுபோயிட்டாங்க? என்ன செய்வாங்க?"" என்று கேட்டாள். கண்ணன் அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்லுவது என்று தெரியாமல் ""ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ட்டாங்க"' என்று சொன்னான்.
""செத்துப்போனார் என்று சொன்னாங்களே அப்புறம் ஏன் ஆஸ்பத்திரிக்கு? தப்பிவிடுவாரா?"" கண்கள் அகலவிரிய ஆர்வமாய்க் கேட்டாள். அவளது கேள்விகளில் அவள் குழப்பத்தில் இருக்கிறாள், அவளுக்கு ஆறுதல் வேண்டும் என்பது கண்ணனுக்குப் புரிந்தது.
''அழாதே சுமதி! நீ தற்கொலை செய்யிறதாலே சிவா திரும்பி வந்துவிடப் போவதில்லை. அவசரப்பட்டு எடுக்கும் இந்தமுடிவு சிவாவிற்கு ஒருபோதும் ஆத்மசாந்தியைக் கொடுக்காது. எந்த மண்ணை அவன் நேசித்தானோ அந்த மண்ணை நீயும் நேசிக்கப்பழகிக்கொள். எந்தமண்ணுக்காக அவன் தன்உயிரைக் கொடுத்தானோ அந்த மண்ணுக்காகவே நீ வாழணும்! அவனுடைய ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்றால் அவன் விட்ட பணியை நீ தொடரணும்! நீ அவனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால் இதைத்தான் அவன் உன்னிடம் எதிர் பார்த்திருப்பான்"" கண்ணன் சொன்னதை எல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது.
அவன் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது, நியாயம் தெரிகிறது என்று நினைத்தாள். தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டாள் போலத் தெரிந்தது. "'நீ படிச்சபெண், என்னைவிட உனக்குத்தான் சிவாவைப்பற்றி
நன்றாகத் தெரியும்! எனவே தவறான முடிவு எதுவும் எடுக்கமாட்டாய் என்று நினைக்கிறேன்"" கண்ணன் அவளிடம் வாக்குறுதி வாங்கிக்கொண்டு அவளை உள்ளே கூட்டிச் சென்றான். தாயாரிடம் அவளைக் கவனமாகப் பார்க்கும்படி சொல்லிவிட்டு காலம்தான் அவளது துயரைத் துடைக்க வேண்டும் என்று எண்ணியபடி சிவாவின் உடலைப் பொறுப்பெடுக்க வைத்தியசாலையை நோக்கிச் சென்றான்.
மாஸ்ரரின் படத்திற்குப் பக்கத்தில் சிவாவின் படம் மாட்டப்பட்டு அதற்கு மாலை போடப்பட்டிருந்தது. பெற்றதகப்பனின் திவசத்தைச் செய்யக்கூட மகன் உயிரோடு இருக்கவில்லை. யாரோ போட்ட சாபம் போல எல்லாத் துன்பமும் கஷ்டமும் அடுத்தடுத்து அந்த வீட்டைத் தேடித்தான் வந்தது. கொஞ்ச நாட்களில் எத்தனை துன்பமான சம்பவங்கள். வீட்டுக்குள் இருந்துகொண்டு அனுபவிக்கும் அந்தவேதனை யாருக்கும் புரியப்போவதில்லை. படத்தை வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த சூரியா ""நேற்றிருந்தார் இன்றில்லை"" என்று வாய்குள் முணுமுணுத்துக் கொண்டு பெருமூச்சுவிட்டான்.
எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கும் சிவாவின்தாயை நினைத்துப் பரிதாபப்பட்டான். சாந்திக்காக சிவாவோடு சண்டைபிடித்தது, பின் அவனிடம் மன்னிப்புக் கேட்டது எல்லாமே அவன் நினைவிற்கு வந்துபோயின. தேவையில்லாத சச்சரவுகள், சண்டைகளால் எதைத்தான் சாதித்தோம் என்று நினைக்க மனசு கனத்தது. ""ஆன்ரி தொட்டியில் தண்ணீர் நிரப்பியிருக்கிறேன். பாஸ்கற்ரைத் தாங்கோ மாக்கற்ருக்குப் போயிட்டு வாறேன்"' பாஸ்கற்றை எடுத்துக் கொண்டு சந்தைக்குப் போனான்.
அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சிவாவின்தாயார் "'யாரோ பெற்றபிள்ளை இப்ப என்ரை பிள்ளைமாதிரி எனக்கு எல்லா உதவியும் செய்துதருகிது"' தனக்குள் சொல்லிக் கொண்டு உள்ளே போனார். ""பாவம் வயதுபோன காலத்திலை என்னாலை முடிஞ்ச உதவியைச் செய்து கொடுப்போம்"' என்று சொல்லிக் கொண்டு சூரியா சயிக்கிளை மிதித்தான்.
கண்ணன் அவசரமாகச் செயற்பட்டான். உளவுப்பிரிவின் உதவியோடு இரவிரவாகக் காத்திருந்து வீடியோ ரத்தினத்தை விசாரணைக்காகக் கொண்டுசென்றான். ரத்தினத்தின் வீடு சோதனை இடப்பட்டபோது காணாமற்போன சில இளைஞர்களின் படங்கள் அங்கே காணப்பட்டன. வெளிநாட்டு மதுபானவகைகளும் ஏராளமான பணமும் கட்டுக்கட்டாக கண்டுபிடிக்கப்பட்டன.
ரத்தினம் அவ்வளவு பணத்தையும் தன்வாழ்நாளில் உழைத்திருக்க நியாயமில்லை. தவறான முறையில் இந்தப் பணம் எப்படியோ வந்து சேர்ந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும் ரத்தினம் மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக் கப்பட்டான். அவன் குற்றவாளி என்பதற்குப் போதிய ஆதாரங்கள் இருந்ததால் அவனால் பொய்சொல்லித் தப்பிக்க முடியவில்லை. தான் நேரடியாக இராணுவத்தோடு தொடர்பு கொள்ளாமல் தனக்குத் தெரிந்த ஒருவர் மூலம் தகவல்களைக் கொடுத்துப் பணம் சம்பாதித்ததாகவும் ரத்தினம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டான்.
""உன்னுடைய சுயநலத்திற்காக நீ எவ்வளவு பெரிய தவறைச் செய்திருக்கின்றாய்? எத்தனை உயிர்களைப் பலிஎடுக்கக் காரணமாய் இருந்திருக்கின்றாய்? உன் இனத்தையே காட்டிக் கொடுத்திருக்கின்றாய்? நீ செய்தது சரிஎன்று வாதாடப் போகிறாயா?"" நீதிபதி கேட்க அவன் ஒன்றும் பேசாது தலைகுனிந்து நின்றான்.
ரத்தினத்திடம் இருந்து மேலும் பல தகவல்கள் எடுக்க வேண்டும் என்பதால் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அதேசமயம் ரத்தினத்தின் வீடும் உளவுப்பிரிவால் கண்காணிக்கப்பட்டது.
சிவாவின் மரணம் சுமதியை பெரிதும் பாதித்திருந்தது. யாருடனும் பேசாமல் மௌனமாய் தனக்குள் அழுதுகொண்டே இருந்தாள். கண்ணீர் வற்றிப்போயிருந்தது. சிவாவோடு பழகிய நினைவுகளை அடிக்கடி அசைபோட்டுக் கொண்டிருந்தாள். அவன் விட்டுச் சென்ற ஒவ்வொரு அடையாளத்தையும் ஏக்கத்தோடு பார்த்தாள்.அவன் கடைசியாக தொட்டுச் சென்ற அந்தக் கதைப்புத்தகத்தை எடுத்து தலையணைமேல் வைத்து அவனது நினைவோடு அதன்மேல் கன்னத்தை வைத்துப்படுத்தாள்.
கண்களில்இருந்து அவளைஅறியாமலே கண்ணீர் ஆறாகப் பெருகிப் புத்தகத்தை நனைக்க அவள் பதட்டப்பட்டு அவசரமாய்ப் புத்தகத்தைத் துடைத்தவள் உள்ளே ஏதோ எழுதியிருப்பதை அவதானித்து அதை வாசித்துப்பார்த்தாள். அங்கே சிவாவின் கையெழுத்து முத்து முத்தாகப் பதிந்திருந்தது. கடைசியாக அவன் எழுதிச்சென்ற வார்த்தைகள்.
""மலரே மலரே மலரே.....
மல்லிகை முல்லையாகாதே!
வாடிப்போனால் எந்தன் மனசு
என்றும் தாங்காதே!""
அவள் நெஞ்சம் விம்மி வெடித்தது. "'என்னைமட்டும் வாடிப்போகாதே என்று சொல்லிவிட்டு நீ மட்டும் வாடிப்போனாயே சிவா! என்னுடைய மனசுமட்டும் உன்பிரிவைத் தாங்குமென்று நினைத்தாயா?"' விம்மிவிம்மி அழுதவள் ஒரு முடிவிற்கு வந்தவளாய் ""சிவா உன் லட்சியப் பாதையை நான் தொடர்வேன். உன்முடிவிற்கு யார்காரணமோ அவர்களைப் பழிவாங்காமல் விடமாட்டேன்!"" சபதம்எடுத்துக்கொண்டாள்.
சுமதி எதிலுமே ஈடுபாடில்லாமல் கூடியநேரம் படுக்கையிலேயே படுத்திருந்தாள். அவளது செய்கைகளைக் கவனித்த அண்ணன் சுரேன் தாயாரிடம் "'சுமதி ஏன் இப்படி இருக்கிறாள்? என்ன நடந்தது அவளுக்கு?"" என்று வினாவினான். ""எனக்கு ஒன்றும் தெரியாது! சிவா இறந்ததிலை இருந்து இப்படித்தான் பைத்தியம் பிடிச்சமாதிரி சாப்பாடும் இல்லாமல் படுத்துக்கிடக்கிறாள், ஏன் என்று கேட்கப்போனால் என்னோட எரிஞ்சு விழுகிறாள். நான் என்ன செய்ய? உள்ளேதான் படுத்திருக்கிறாள் நீயே போய்க் கேட்டுப்பார்"" என்றார்.
சுமதியின் அறைக்கு வந்த சுரேன் ""சுமதி என்ன இராப்பகலாய் படுத்திருக்கிறாய் எழும்பு"" என்றான் அதிகாரத் தோரணையில். ஏதோ சிந்தனையில் இருந்த சுமதி திரும்பி அவனைப் பார்த்தாள். அவனைக் கண்டதும் இதுவரை அடக்கிவைத்திருந்த ஆற்றாமை வெடிக்க குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
""இப்பஏன் அழுகிறாய்? யாரோ செத்தால் உனக்கென்ன?சொந்தச் சகோதரம் செத்தாலும் இப்படி அழமாட்டாய் போல இருக்கு, உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?"" என்றான் கோபத் தோடு. 'யாரோ' என்று சுரேன் குறிப்பிட்டதும் சுமதிக்கும் கோபம்தான் வந்தது. ""உனக்கு யாரோவாய் இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படி இல்லை"' என்றாள் சட்டென்று. தன்னை அண்ணன் என்று கூட மதிக்காமல் அவள் முகத்தில் அறைந்தது போலத் தன்னிடம் பதிலளித்தது அவனைச் சினம் கொள்ள வைத்தது. ""இவங்கள் உயிரோட இருந்தால் என்ன செத்தால் என்ன? இந்த அனியாயப்படுவாங்களாலைதானே நாங்கள் இப்படிக்கஷ்டப்படுகிறம். இவங்களாலை தானே எங்கடை அப்பாவைப் பறிகொடுத்தனாங்கள்"' என்றான் உரத்த குரலில்.
சுமதி திகைத்துப் போய் அவன் என்ன சொல்கிறான் என்பது விளங்காமல் அவனை விழித்துப் பார்த்தாள். ""நீ என்ன சொல்லுறாய்?"" என்றாள் கேள்விக்குறியோடு. "'உனக்குத் தெரியாது சுமதி இவங்களாலை தானே அப்பாசெத்தவர். இவங்கள் இராணுவத்திற்கு கண்ணிவெடி வைச்சதாலேதானே இனக்கலவரமே தொடங்கியது"" என்றவனை இடைமறித்த சுமதி ""அதற்கும் அப்பாவின் மரணத்திற்கும் என்ன தொடர்பு?"" என்றாள்.
""நாங்கள் என்ன மாதிரிச் செல்வாக்காய் கொடிகட்டிப் பறந்தனாங்கள். எவ்வளவு சொத்துக்களையும் நண்பர்களையும் இழந்து ஒன்றும் இல்லாமல் வெறும் கையோட இங்கே அகதி மாதிரி வந்ததை மறந்திட்டியா? எங்கடை கஷ்டத்திற்கு எல்லாம் இவங்கள் தான்காரணம், அதை நான் செத்தாலும் மறக்கமாட்டேன்"' என்றான் ஆவேசமாக. ""படிக்காத முட்டாள் மாதிரிக் கதைக்காதை! நண்பர்களாம் நண்பர்கள்! நாங்கள் அடிபட்டு அல்லற்பட்டபோது உதவாதவங்கள் எல்லாம் எப்படி நண்பர்களாக முடியும்? கொஞ்சம் யோசித்துப்பார் இராணுவம் இறந்ததால்தான் இனக்கலவரம் வந்ததென்றால் இப்போ தினமும் இராணுவம் இறக்கும்போது ஏன் இனக்கலவரம் வெடிக்கவில்லை? இதுஎல்லாம் ஒரு அரசியல் தந்திரம். பலநாட்காத்து இருந்தவர்களுக்கு அன்று ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவ்வளவுதான்! எங்களுடைய கஷ்டகாலம் அப்பா அதற்குள் அகப்பட்டுக் கொண்டார்.
உனக்கு ஒன்றுதெரியுமா? போராளிகள் ஆயுதமெடுத்தபின் இந்த நாட்டில் இனக்கலவரமேவரவில்லை. ஏன்தெரியுமா? பயம்! திருப்பி அடிப்பார்கள் என்ற பயம்! என்னதான் நீ வேஷம் போட்டாலும் நீயும் ஒரு தமிழன்தான்! அதை நீ மறந்து போனாய்! ஆனபடியால்தான் இப்படிக் கூத்தாடுகிறாய்!"' என்றாள் சுமதி.
முட்டாள் தனமான அவனது சிந்தனைகளை நினைத்து அவள் வேதனைப்பட்டாள். இதற்கெல்லாம் என்ன காரணம்? விரக்தியா அல்லது அப்பாவின் மரணத்திற்கு யார்மீதாவது பழியைப் போடவேண்டும் என்ற குறுகிய நோக்கமா? முழங்காலுக்கும் மொட்டந் தலைக்கும் முடிச்சுப் போட்டு புனிதமான விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் இவனைப் போன்ற மனநோயாளர்களும் எங்கள் மத்தியில் வாழ்கிறார்களே என்று நினைக்க அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. ""வேஷம் போடாதே!"' என்று சுமதி சொன்ன வார்த்தைகள் அவன் மனதைச்சுட்டன.
""நீ என்ன சொல்லுறாய்?"' என்றான் சுரேன். ""எனக்கெல்லாம் தெரியும்"" என்றாள் சுமதி அலட்சியமாய். அவளது அந்த அலட்சியம் அவனை மேலும் பதட்டம் அடைய வைத்தது. "'உனக்கு என்னதெரியும்?"" என்றான் அவளிடம் இருந்து பதிலை வரவழைக்க. "'கொஞ்ச நாளாய்க் கைநிறையப் பணம் புழங்குதே அதைப்பற்றித் தான் தெரியும் என்று சொன்னேன்"" என்றாள் சுமதி. "'நீ பெட்டியைத் திறந்து பார்த்தியா? வந்து....வந்து அது சீட்டாட்டத்திலை கிடைச்சது!"' என்றான் அவசரமாய்.
""அப்போ நீ பணம் வைத்து சூதாடிறியா?"' என்றாள் சுமதி நம்பமுடியாமல். ""அப்படித்தான் வைத்துக் கொள்ளேன்!"" என்றான் சுரேன் அலட்சியமாய். ""இல்லை! நீ சூதாடவில்லை! எனக்குத் தெரியும் நீ வேட்டையாடுறாய்......... மனித வேட்டை.......! அதற்குக் கிடைத்த பணம் தான் இது, சாக்கடைப் பணம்!"" ஆத்திரத்தில் உடம்புபதற அவனைப்பார்த்து வெறுப்போடு வாய்விட்டுக் கத்தினாள். சுரேனின் முகம் சுருங்கி அதில் கலவரம் தெரிந்தது.
"'உன்னையார் என்னுடைய அலுமாரியைத் திறக்கச் சொன்னது?"" என்றான் கோபத்தோடு. ""திறந்தபடியால் தான் பல உண்மைகள் தெரியவந்திருக்கு!"" என்றாள் சுமதி. ""என்ன? என்னை வெருட்டிப் பார்க்கிறியா? என்றான் கலவரத்துடன். "' குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் தானே! கட்டுக்கட்டாய்......காசு தங்கச்.....சங்கிலி....அப்புறம் முக........மூடி!"" அவள் சொல்லி முடிக்குமுன் அவன் பாய்ந்துவந்து அவளது தலைமயிரைப் பிடித்து இழுத்துக் கன்னத்திலே மாறிமாறி அறைந்தான்.
அவன் இதுவரை போட்ட வேஷம் கலைந்து விட்ட ஆத்திரம் தாங்கமுடியாமல் வெறிபிடித்தவன் போல அவளது முதுகிலே மொத்து மொத்தென்று மொத்தினான். அவள் மூச்சுவிடச் சிரமப்பட்டாலும் அதை வெளியே காட்டாமல் தாங்கிக் கொண்டு "'அடி...அடிச்சுக் கொன்றுபோடு! கேவலம் இப்படி ஒரு அயோக்கியனுக்கு தங்கையென்று சொல்லுறதைவிட மானத்தோட செத்துப் போயிடலாம். உன்னுடைய சுயநலத்திற்காக இப்படி எத்தனைபேரைப் பலிஎடுத்திட்டாய்! எத்தனை குடும்பத்தை அடியோடு குலைச்சிட்டாய்! நீயெல்லாம் ஒருமனுஷனா சீ.....?"' அவள் சுரேனை விரோதமாய்ப் பார்த்து வாயில் வந்தபடி எல்லாம் திட்டினாள்.
""என்னடி சொல்லுறாய்?"" சுரேன் கோபம் தாங்கமுடியாமல் சத்தம் போட்டான். ""என்ன சொல்லுறேன் என்று உனக்கு நல்லாய்த் தெரியும்! எங்களுடைய காதலுக்கு நீ சாவுமணி அடித்திருந்தால் கூட உன்னை நான் மன்னித்திருப்பேன். ஆனால் நீ சாவுமணியடித்தது ஒரு உண்மையான போராளிக்கு! எந்த ஒரு கோழையும் காதலனாய் மாறலாம் ஆனால் போராளியாய் மாறமுடியுமா? காதல் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? தியாகம் என்றால் என்ன என்று
உனக்குப் புரியுமா? இதெல்லாம் உனக்கு எங்கே விளங்கப்போகிறது? நீ மனித உணர்வுகளோடு மனிதனாய் இருந்தால் தானே!"" "அவளுக்கு நடந்ததெல்லாம் எல்லாம் தெரிந்து விட்டது, அதனால்தான் அவள் ஆவேசமாய்த் தன்னை எதிர்க்கிறாள்" என்று விளங்கியதும் அவமானம் தாங்க முடியாமல் மனம் கூனிக்குறுக சுரேன் அந்த இடத்தை விட்டு அவசரமாய் நழுவினான்.
""அவள் சொல்வழி கேட்கிறாள் இல்லை, நான் வெளியே போயிட்டு வாறேன்"' என்று தாயாரிடம் சொல்லி விட்டு சயிக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினான். "'அம்மாவிற்குத் தெரிஞ்சால்...?"" நெஞ்சுக்குள் பயம் பிடித்துக் கொள்ளப் பரபரப்புடன் சயிக்கிளை மிதித்தான். "'மக்களோடு மக்களாய் இருந்து இவங்களுக்குத் தண்ணிகாட்டிக் கொண்டிருந்தால் என்னை யாரென்று கண்டு பிடிக்கமாட்டாங்கள்"' என்று நினைத்துக் கொண்டு வீடியோரத்தினத்தின் வீட்டுக் கதவைத் தட்டினான் சுரேன்.
ரத்தினத்தின் வீட்டிற்கு சுரேன் போவதை வீடியோப் படம் பிடித்த உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவன் பதட்டப்படாமல் கமராவோடு கண்ணனைத் தேடிச் சென்றான். ரத்தினம் அங்கே இல்லாதபடியால் ரத்தினத்திற்கு என்ன நடந்தது என்பதை அறியாத சுரேன் மனநிம்மதியில்லாமல் எங்கேபோவது என்றுகூடத் தெரியாமல் சயிக்கிளை மனம்போன போக்கில் மிதித்தான்.
"'காதல் என்றால் என்ன என்று உனக்குத்தெரியுமா?"' சுமதி சாட்டையால் அடித்தது போல அவனைப் பார்த்துக் கேட்டது திரும்பத்திரும்ப அவனது காதுக்குள் இரைந்து கொண்டிருந்தது. இப்படித்தான் அன்றும் சாந்தியைப் பார்த்து "'ஐ லவ்யூ"' என்று சொன்னபோது ""உன்னோட முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை"' என்றாள் வெறுப்போடு,
இவளோ இன்று ""நீயும் ஒரு மனுஷனா?"" என்கிறாள். நான் என்ன தப்புப் பண்ணினேன்? சாந்தியை நான் விரும்பினது தப்பா? அவளை அடைவதற்கு நான் முயற்சி செய்தது பிழையா? ஒருதலைக் காதல்என்றால் அது என்றுமே நிறைவேறாதா? நிறைவேறும்! நிறைவேற்றிக்காட்டுவேன்! இதை நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைத்தால் என்ன? யாருக்கு வேண்டும் மனசு? எனக்குத் தேவை உடம்பு........!"" நினைக்கவே அவனுக்கு வெறித்தது. வெறிபிடித்தவன் போல இராணுவமுகாமை நோக்கி அவசரமாய்ச் சயிக்கிளை மிதித்தான் சுரேன்! (தொடரும்)
சுரேன் வீட்டை விட்டு வெளியேறியதும் சுமதி அவசரமாய் அவனது அறைக்குள் போய் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்தாள். அவளோடு பேசும்போது சுரேனின் முகபாவனையில் எதிர்பாராதமாற்றங்கள் ஏற்பட்டதும் அவன் அடிக்கடி பதட்டமடைந்ததும் அவளை மேலும் சிந்திக்கத் தூண்டின. சில நாட்களாக அவனது நடவடிக்கைகளில் மாற்றத்தை அவள் அவதானித்தாலும் அவன் மீது அவள் சிறிதளவேனும் சந்தேகப் படவில்லை. அண்ணா என்கிற பாசம் அவளை அப்படிக் கட்டிப் போட்டிருந்தது. அலுமாரியைத் திறந்து ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று உள்ளே குடைந்து பார்த்தாள். உடுப்புகளுக்குக் கீழே உள்ள பேப்பர் மடிப்புக்குள் இருந்த அறுந்து போன சங்கிலியும் "ஓம்" என்ற பென்ரனும் அவளை ஒருகணம் அதிரவைத்தன.
"'என்னடி இது எல்லோரும் தங்கள் இனிஷலைப் பென்ரனாய்ப்
போடுவதுதான் இப்போபாஷன். நீ என்ன என்றால் "ஓம்" என்று போட்டிருக்கிறாய். எனிவேபார்க்க நல்லாயிருக்கு""
"'அதுவா? ஓம் என்றால் ""என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்"' என்ற அர்த்தமில்லை""
"'அப்போ...... பக்தியா?""
""ஆமா....இந்த ஓமிற்குப் பின்னால் என்னோடபெயர் மறைஞ்சிருக்கு""
"'பெயர் மறைஞ்சிருக்கா? எப்படி?""
""ஓம் சாந்தி!""
எதற்குமே சாதுரியமாய்ப் பதில் சொல்லும் சாந்தியை நினைத்து அந்த வேதனையிலும் சுமதி சிரிக்கமுயன்றாள். கடந்து போன சில நாட்களை அவள் நினைவிற்குக் கொண்டுவர முயன்றாள். சாந்தி காணாமல் போன அன்று இரவு சுரேன்
படுக்கையில் இல்லாததும், கேட்டபோது முற்றத்தில் நின்றதாக அவன் சொன்னதையும் நினைவு படுத்திப் பார்த்தாள். அப்படியானால் சாந்தியினன் மறைவிற்கும் சுரேனுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்க வேண்டும். இரவிலே நேரம்சென்று வீட்டிற்கு வருவதும் கேட்டால் சீட்டாடி விட்டு வருவதாகச் சொல்வதெல்லாம் பொய் என்பதும் அவளுக்கு இப்போது விளங்கியது. இராணுவமுகாமோடு தொடர்பு வைத்திருப்பதால் தான் பணம் கட்டுக் கட்டாய் வைத்திருக்கின்றான். முகமூடி அதை உறுதி செய்தது. அப்படி என்றால் சிவாவைக் காட்டிக் கொடுத்ததும் இவனாகத்தான் இருக்க முடியும். அதனால் தான் இராணுவம் எங்களை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டுப் போயிருக்கிறது. ஒன்றோடு ஒன்றைத் தொடர்பு படுத்திப் பார்க்க சுமதிக்குப் பல உண்மைகள் புரியத் தொடங்கின.
எப்படியாவது இதைக் கண்ணனிடம் சொல்ல வேண்டுமென்று அவசரமாய் அவனைத் தேடினாள். கண்ணனையோ அல்லது ஏனைய போராளிகளையோ சில நாட்களாகக் காணக்கிடைக்கவில்லை என்று ஊருக்குள் கதை பரவியது.
சிவாவை உயிரோடு பிடிக்கமுடியா விட்டாலும் அவனைத் தப்பி ஓடும்போது சுட்டுக் கொன்றதாக மேலிடத்திற்கு ஜெயரட்னா அறிவித்திருந்தான். முக்கியமான ஒரு போராளியைச் சுட்டுக் கொன்றதைப் பாராட்டி ஜெயரட்னாவிற்கு மேலிடத்தில் இருந்து பாராட்டுச்செய்தி ஒன்று வந்திருந்தது.
தலைநகரில் இருந்துவரும் பத்திரிகை ஒன்று இச்செய்தியைத் திரிபுபடுத்தி "காதலியோடு சல்லாபம் புரிந்த போராளி இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டான்" என்று முதற் பக்கத்தில் பெரிய எழுத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. எந்த ஒரு செய்தியையும் இப்படிக் கொச்சைப் படுத்துவதன் மூலம் மக்களிடையே போராளிகளைப் பற்றி ஒரு தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்தலாம் என்பது சில பத்திரிகைகளின் தப்புக் கணக்கு.
இப்பொழுதெல்லாம் மக்கள் என்ன நடந்திருக்கும் என்பதைத் தாங்களாகவே ஓரளவு ஊகித்துக் கொள்கிறார்கள் என்பது இப்படியான பத்திரிகையில் எழுதுபவர் களுக்குப் புரிவதில்லை. இந்தச் செய்தியைப் பெரிய சாதனையாக எண்ணி அன்று இரவு இராணுவ முகாமில் பெரிய கொண்டாட்டம் நடைபெற்றது. கடமையில் இருந்தவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தங்களை
மறந்து குடித்து வெறித்து ஆடிப்பாடினர். அன்னிய மண்ணை ஆக்கிரமித்து இராணுவ முகாம்களில் மரணத்தைக்கையில் பிடித்துக் கொண்டிருந்த அக்கூலிப் படையினர் தங்கள் குடும்பத்தைப் பிரிந்த விரக்தியில் எப்போதுவிடுமுறை கிடைக்கும் என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தனர். "'ஏன் இந்த யுத்தம்?"' என்ற கேள்விக்குப் பதில் தெரியாத நிலையில் தனிமை என்னும் விரக்தியை விரட்ட மதுபானம் ஒன்றுதான் அவர்களுக்கு மாற்றுமருந்தாய் இருந்தது.
சிந்தனையோடு இராணுவ முகாமை நோக்கிச் சயிக்கிளை வேகமாகமிதித்த சுரேன் தெருவிலே சென்ற பெண்ணெருத்தி பார்ப்பதற்கு சாந்தியைப் போலவே இருக்கவே சைக்கிளை மெதுவாகமிதித்தான். ஒருநாள் வீட்டிலே யாரும் இல்லாதபோது சுமதியைத் தேடிச் சாந்தி வந்ததும் அவன் அவளிடம் நடந்து கொண்ட விதமும் தான் அவள் தன்னை வெறுத்ததற்குக் காரணம் என்பது அவனுக்கு நன்றாகத்தெரியும்.
""ஐலவ்யூ சாந்து"" என்று அவன் சொன்னதும் ""ஐலவ்யுன்னு சொன்னால் காதல் வந்திடுமா? காதல் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?"" என்று அவள் ஏளனமாய் கேட்டபோது அவளது கையை அவன் எட்டிப் பிடித்ததும், அவள் கையைஉதறிவிட்டு "'உன்னோட மூஞ்சியைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கலை"' என்று சொல்லிக் கொண்டு வெளியே ஓடிப்போனதையும் அவன் நினைத்துப் பார்த்தான். தனியாக அந்த வீட்டிற்கு அவள் வந்தது அன்று தான் கடைசி என்பது அவனுக்குப் பின்புதான் புரிந்தது.
சுமதியிடம் எந்த மாற்றமும் இல்லாதபடியால் நடந்ததைப் பற்றி அவள் சுமதியிடம் சொல்லவில்லை என்பதையும் ஊகித்துக் கொண்டான். சாந்தி அவனை அவமானப் படுத்தினாலும் அவனால் சாந்தியை மறக்கமுடியவில்லை. அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவளது அழகும் அந்தவாளிப்பான உடம்பும் அவனை வெறிகொள்ளச் செய்வதுண்டு. அவள் தன்னை விரும்பினால் என்ன விரும்பா விட்டாலென்ன அவளை அடைந்தே தீருவதென்று கங்கணம் கட்டிக்
கொண்டான். வாசலில் சென்றி நெடுநாள் பழகியவனைப் போலக் கதவைத் திறந்துவிட்டான். சுரேனை அங்கே கண்டதும் ஜெயரட்னா அவனை உள்ளே அழைத்துச் சென்று வெளிநாட்டு மதுபானத்தைக் ஊத்திக் கொடுத்தான். சுமதியால் அவமானப் படுத்தப்பட்ட அவன் அதை மறப்பதற்காக குடிக்கத் தொடங்கினான். குடிபோதையில் ரத்தினத்தை அடியோடு மறந்தேபோனான். தன்னைப் பற்றி சுமதிக்கு தெரிந்து விட்டபடியால் கட்டாயம் தாயாரிடம் நடந்ததைச் சொல்லுவாள் என்று பயந்தது மட்டுமல்ல எந்த முகத்தோடு இனி வீட்டிற்குப் போவது என்பதையும் நினைத்து மனம் சஞ்சலப்பட்டான்.
விரக்தியில் என்ன செய்வது என்று தெரியாமல் ஜெயரட்னா கொடுத்ததை எல்லாம் குடித்தான். வெறி கொஞ்சம் கொஞ்சமாக தலைக்கு ஏற தள்ளாடியபடி எழுந்து நின்று ஜெயரட்னாவைப் பார்த்து ""மச்சான்... எனக்குப் பசிக்குது!""
என்றான். ""சாப்பிடலாமே..! என்ன வேணும்?"" என்றான். ""இப்ப எனக்கு அவள்தான் வேணும்!"' என்றான் வாய் குழற! வெறியிலும் அவள் ஞாபகம்தான் என்று ஜெயரட்னா எண்ணியபடி ""உனக்காகத்தானே அவளை இவ்வளவு நாளும் உயிரோடு வைத்திருக்கிறோம்! இந்தா ஸ்ரோர்ரூம் சாவி...எடுத்துக் கொண்டு போ! என்ஜோய் யுவசெல்வ்"" என்றான்.
சுரேன் சாவியையும் எடுத்துக்கொண்டு முகாமின் பின்பக்கத்தில் இருந்த அந்தச் சிறிய அறையை நோக்கி போதையில் தள்ளாடியபடி நடந்தான். "'முடியலையே! கிட்ட நெருங்க விடுகிறாளில்லையே!"' என்று தன்னுடைய இயலாமையை தனக்குள்ளே சொல்லிக் கொண்டு சாந்தியை அடைத்து வைத்திருந்த அறையின் கதவைத் திறந்தான்.
அறையின் மூலையிலே சுருண்டு படுத்திருந்த சாந்தி சத்தம் கேட்டு உஷாராகி சட்டென்று எழுந்து நின்று இரண்டு கைகளையும் குறுக்கே கட்டிக்கொண்டு பீதியோடு அவனைப் பார்த்தாள். அவளது மருண்ட பார்வை அவனுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அவன் போத்திலைத் திறந்து "'இந்தா நீயும் குடி"'என்று சொல்லி நீட்டிக் கொண்டு அவளுக்கு அருகே போனான். கலவரத்துடன் அவனைப் பார்த்தவள் திடீரெனப் பாய்ந்து அவனது கையிலிருந்த போத்தலைப் பறித்து சுவரிலே தட்டி உடைத்து விட்டு கையிலே இருந்த உடைந்த துண்டை அவனுக்கு எதிரே நீட்டி ""கிட்ட வராதே! வந்தால் குத்திவிடுவேன்"' என்று மிரட்டினாள்.
போதையிலும் அவன் தனது சேட் பட்டனைத் திறந்து மார்பைக் காட்டி ""குத்திவிடுவியா? எங்கே குத்து பார்க்கலாம்?"" என்று சவால் விட்டபடி அவளது கையை எட்டிப்பிடித்தான். அவளோ திமிறிக் கொண்டு அவனிடம் இருந்து விடுபட்டு எதிர்ப்பக்கம் ஓட அவனோ கோபமும் வெறியும் தலைக்கேற அவளைத் துரத்திக் கொண்டுபோய் அந்த மூலையில் மடக்கிப் பிடித்தான்.
அவள் அவனைத் தள்ளிவிட்டு "சதக்கென்று" உடைந்தபோத்திலால் பலம் கொண்டமட்டும் அடிவயிற்றில் குத்தினாள். ரத்தம் சீறி அவனது முகத்திலடிக்க போதையில் என்ன நடந்தது என்று தெரியாமல் அவன் விறைத்துப் போய் நின்றான். வயிற்றைப் பிடித்தபடி சாந்தி கிழே சரிந்தபோது அவன் பயத்தில் வெறி முறிய கத்திக்கொண்டு வெளியேஓடினான். வெளியே ஓடியவனின் மார்பை சினப்பர் ரவை ஒன்று சத்தமில்லாது துளைத்துச் சென்றது! (தொடரும்)
கண்ணன் வீடியோ ரத்தினத்தை விசாரித்த போது பல உண்மைகளை அவனிடம் இருந்து அறிந்து கொண்டான். இராணுவத்திற்குத் தகவல் கொடுப்பது, அவர்களுக்குத் தேவையானவர்கள் பற்றிய வீடியோ, புகைப்படங்கள் எடுத்துக் கொடுப்பது போன்றவற்றை தான் செய்ததாக அவன் ஒப்புக் கொண்டான். இவற்றைச் சுரேனிடம் கொடுத்ததாகவும் இதன் மூலம் தனக்கு ஏராளமான பணத்தை அவன் இராணுவத்திடம் இருந்து வாங்கிக் கொடுத்ததாகவும் வாக்கு மூலம் கொடுத்தான்.
இராணுவமுகாமில் கொண்டாட்டம் நடக்கஇருப்பதையும் அவனோடு பேசியபோது கண்ணன் அறிந்து கொண்டான். எனவேதான் அன்று இரவே அந்த முகாமைத் தாக்கி அழிக்க முடிவெடுத்தனர். ஏற்கனவே போட்டிருந்த திட்டத்தை விரைவாகச் செயற்படுத்துவதிற் சில கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. கனரக வாகனங்களைக் கொண்டு வந்துஅந்த முகாமைப் பலப்படுத்துமுன் அதைத் தாக்கி அழிப்பதுஇலகுவானதுஎன்பதை றிக்கிரீமின்அறிக்கையில் இருந்து தெரிந்து கொண்டனர். எனவே அந்தத் திடீர்த்திட்டத்தின் படி அன்று இரவு போராளிகள் அந்த முகாமை முற்றுகையிடுவதற்குத் தயார் நிலையில் காத்திருந்தனர்.
தகுந்தநேரத்தில் நல்ல சந்தர்ப்பம் கிடைத்ததும் தாக்குதலைத் தொடங்கக் கண்ணணின் தலை மையில் ஒரு குழு காத்திரு ந்தபோது தான் சுரேன் வெளியே ஓடி வருவதைக் கண்டனர். எதிர்பாராத விதமாக சாந்தி தன்னைத்தானே குத்திக் கொண் டதும், அவளது அடிவயிற்றில் இருந்து ரத்தம் சீறிப் பாய்ந்த தையும் கண்ட சுரேன் பயந்து
போய்க் கத்திக் கொண்டு வெளியே ஓடிவந்தபோது முகாமுக்குள் ஏதோ விபரீதம் நடப்பதாக கண்ணன் ஊகித்தான். எனவேதான் ஓடிவருவது யார் என்பது கூடத் தெரியாத நிலையில் சினப்பர்மூலம் சுரேனைச் சுடவேண்டிவந்தது. சுரேன் சூடுபட்டு முகம்குப்புற நிலத்தில் விழுந்தபோது சென்றி ஓடிவந்து சுரேனுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் அவனைத் தூக்கி நிறுத்த முனைந்தான். சுரேனுக்கு அப்பொழுதும் உயி;ர் உடம்பில் இருந்தது. மார்பில் கையைப் பொத்தியபடி "'ரத்தம்1 ரத்தம்1"" என்று நாக்குளறினான்.
அப்போது தான் சென்றி அவனது கைவிரல்களுக்கிடையில் இருந்து ரத்தம் வழிவதைக் கவனித்தான். சின்னதாக மார்பிலே இருந்து ரத்தஊற்று ஒன்று பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. மூச்சுவிடமுடியாமல் சுரேன் சென்றியின் அணைப்பில் திணறிக் கொண்டு "'முடியல்லையே! அவளை அடைய முடியலையே!"' என்று நினைவு தப்பும் போதும் அதையே பிதற்றிக் கொண்டிருந்தான். அதற்கு மேலும் தாக்குப் பிடிக்கமுடியாமல் திறந்த வாய் அப்படியே இருக்க விழிமூடாமல் சுரேன் கிழேசரிந்தான். இப்போ சென்றி விழித்துக் கொண்டு மற்றவர்களை உஷார்ப்படுத்த வாயைத் திறந்தபோது பட்டாசு வெடிப்பது போன்ற சத்தத்தோடு பொட்டுப் பொட்டாய் அவனது உடம்பு துளைக்கப் பட்டது.
வினேதமான சத்தங்களும் அதைத் தொடர்ந்து பலர் ஓடும் காலடிச் சத்தங்களும் கேட்டன. ஜெயரட்னா மது போதையிலும் அந்த வெடிச்சத்தத்தை இனம் கண்டுகொண்டான். நிச்சயமாக இது எதிரியின் துப்பாக்கிச் சத்தம் என்பது அவனுக்கு விளங்கியது. முகாம் ஆவேசமாக தாக்குதலுக்கு உள்ளாகிறது என்பதைப் புரிந்து கொண்டு அவசரமாக உத்தரவுகளைப் பிறப்பித்தான்.
ஆனால் அவனது உத்தரவுகளை ஏற்று வழிநடத்தும் நிலையில் அனேக இராணுவத்தினர் இருக்கவில்லை. கடமையில் இருந்த ஒருசிலரும் காயமடையவே எதிர்ப்பு அதிகம் இல்லாமல் முன்வாசல் காவலரன் இலகுவில் போராளிகளின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கிழக்குப் பக்கத்தில் உள்ள காவலரன் நன்கு பலப்படுத்தப் பட்டிருந்த படியால் அதை உடைப்பது கடினமாகவே இருந்தது. பெண்போராளிகள் அந்தப் பக்கத்தைப் பொறுப்பெடுத்திருந்தார்கள். மணல்மூட்டைகளால்
பாதுகாக்கப் பட்ட பங்கரில் இருந்து கொண்டு இராணுவம் எதிர்த் தாக்குதல் நடத்தியது. இராணுவத்தின் கவனம் அவர்கள் மேல் இருந்தபோது லெப்டினன் துர்க்கா இருட்டிலே மெல்லமெல்ல நிலத்திலே ஊர்ந்து பங்கரை நெருங்கினாள்.
போதிய தூரத்தை அடைந்ததும் எழுந்து நின்று கிரனெட்டின் கிளிப்பை பல்லால் கடித்து எடுத்துவிட்டு "'கெற்லொஸ்"" என்று சொல்லிக் கொண்டே பங்கரை நோக்கிக் கிரனெட்டை வீசினாள். அதேசமயம் தங்களுக்கு மிக அருகே ஒரு போராளியைக் கண்டதும் பதட்டமடைந்த இராணுவத்தின் துப்பாக்கி ஒன்று அவளைநோக்கித் திரும்பிச் சல்லடைபோட்டது. ஒரு உயிரின் தியாகத்தோடு கிழக்குக் காவலரணும் போராளிகளின் கையில் வீழ்ந்தது.
இப்போது இரண்டு பக்கத்தாலும் போராளிகள் பெருத்த ஆரவாரத்தோடு உள்ளே நுழைய மதுபோதையில் என்ன நடக்கிறது என்பதைக் கொஞ்சம் தாமதமாகப் புரிந்து கொண்ட சில இராணுவத்தினர் துப்பாக்கியைக் கூட எடுக்காமல் இருட்டுக்குள் தப்பி ஓடத் தொடங்கினர். தாங்கள் புதைத்த கண்ணிவெடியிலேயே ஒருசிலர் சிக்கிக்கொள்ள வேறுசிலர் போராளிகளிடம் மாட்டிக் கொண்டனர்.
நிலத்திலே ஊர்ந்து கொண்டு வந்த இராணுவத்தினன் ஒருவன் இருட்டிலே அவர்களையும் கடந்து போவதை அவதானித்த நாதன் "'ஓடுறான் ஒருத்தன் தப்பி ஓடுறான் பிடிடா"" என்று சத்தம் போட அவன் எழுந்து ஓடத் தொடங்கினான். சிலர் அவனைப் பாய்ந்து துரத்தி மடக்கிப் போட்டனர். துர்க்காவின் இழப்பால் ஆத்திரமடைந்து இருந்த சிலர் அவனைப் போட்டு மிதிமிதியென்று மிதித்தனர். அடியின்வேதனை தாங்க முடியாமல் அவன் அலறத் தொடங்கினான்.
திடீரென அவனது குரல் அடங்கிப்போகும்போது அங்கே வந்த கண்ணன் "'செத்திட்டானா?"' என்றான். நாதன் டார்ச்லைட்டை அவனது முகத்தில் அடித்துப் பார்த்து விட்டு ""இல்லை மூச்சிருக்கு"" என்றான். அவனது முகத்தை வெளிச்சத்தில் அவதானித்த கண்ணன் ""இவனா? நிறுத்துங்க,
அடிக்கவேண்டாம்"" என்று அவசரமாய் தடுத்தான். "'யாரிவன்?'' என்றான் சுதன். ""ஜெயரட்னா!"". "'இவனா ஜெயரட்னா? எத்தனை பேரை உயிரோடு புதைத்தவன். இவனை விட்டு வைக்கணுமா? கொல்லுங்கடா"' வெறிபிடித்தவன் போலக் கத்தினான் நாதன். "'இல்லை வேண்டாம்! இவன் எனக்கு உயிரோடு வேண்டும்! எப்படியாவது இவனை உயிர் பிழைக்க வையுங்கள்!இது என்னோட கட்டளை"" என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் கண்ணன்.
கட்டளை என்றவுடன் நாலைந்து போராளிகள் ஜெயரட்னாவைத் தூக்கி முதல்உதவி செய்யக் கொண்டோடினர். திடீரென வானத்தில் இரைச்சல் கேட்டது. "'ஹெலி வருகுது"' என்றான் சுதன். "'வரட்டும் கலிப்பர் பதில் சொல்லும்"" என்றான் நாதன். வானத்தில் இருந்து வெளிச்சக் குண்டுகளை வெடிக்கவைக்க பால் நிலவு போல எங்கும்
வெளிச்சம் பரவியது. இரண்டு மூன்றுமுறை வானத்தில் வட்டமிட்ட ஹெலி முகாமில் என்ன நடக்கிறது என்பதை நோட்டம்விட்டது. அதே சமயம் கலிப்பர் ஒன்று ஹெலியை நோக்கிச் சுட ஹெலியின் யந்திரம் விக்கல் எடுக்கும் வித்தியாசமான ஒலி தெளிவாகக் கேட்டது. அதைத் தொடர்ந்து எவ்வளவு வேகமாக ஹெலி அங்கே வந்ததோ அதைவிட வேகமாக திரும்பிப் போனது.
விடிந்தால் குண்டுவீச்சு விமானங்கள் வரலாம் என்ற காரணத்தால் இரவோடிரவாக முகாமில் இருந்த ஆயுதங்களும் வாகனங்களும் வெளியேற்றப்பட்டன. பொதுமக்களும் தொண்டர்களாகக் கலந்து கொண்டு போராளிகளுக்கு உதவி செய்தனர்.
எல்லோரையும் வெளியேற்றிவிட்டு முகாமைக் குண்டுவைத்து தகர்பதற்காக ஆயத்தங்கள் செய்து கொண்டிருந்தபோது கண்ணனைத் தேடி அவசரமாக வந்த நாதன் "'கண்ணன் அண்ணா புவனாஅக்காவின் வீட்டையும் தகர்க்கவா?"'என்றான். "'வேண்டாம்!"" என்று தடுத்த கண்ணனுக்கு சட்டென்று புவனா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.
""முகாமின் பின்பக்கத்தில் உள்ள சிறிய அறை ஒன்றில்தான் சாந்தியை அடைத்து வைத்திருந்தார்கள். உயிரோடு இன்னும் விட்டு வைத்திருந்தால் அதிஷ்டம் தான்!"' கண்ணன் உடனே நாதனை அழைத்து எல்லோரையும் வெளியேற்றி விட்டார்களா என்று விசாரித்தான்.
உயிரற்ற எட்டு இராணுவத்தின் உடல்களைக் கண்டு எடுத்ததாகவும், மற்றும் படுகாயமடைந்த சிலரையும், சரணடைந்தவர்களையும் வண்டியில் ஏற்றி அனுப்பி விட்டதாகவும், வேறு ஒருவரும் உள்ளே இல்லை என்றும் நாதன் தெரிவித்தான். எதற்கும் கடைசியாக ஒரு முறை புவனா குறிப்பிட்ட அந்த அறையைப் பார்ப்போமே என்று எண்ணிய கண்ணன் நாதனையும் அழைத்துக் கொண்டு முகாமின் பின் பக்கம் சென்றான்.
புவனா குறிப்பிட்ட அறைக் கதவு திறந்தபடி இருக்கவே உள்ளே சென்று டார்ச்லைட்டை அடித்துத் தேடிப்பார்த்தனர். திடீரென ""கண்ணனண்ணா இங்கே பாருங்கோ!"" என்று நாதன் பரபரப்புடன் கத்தினான். டார்ச் வெளிச்சத்தை அங்கே திருப்பிய கண்ணன் இரத்தவெள்ளத்தில் அலங்கோலமாய்க் கிடந்த சாந்தியின் உடலைக் கண்டதும் அதிர்ந்து போய் ""அவசரப்பட்டுவிட்டாயே சாந்தி!"' என்று சொல்லிக் கொண்டு அவளருகே மண்டியிட்டான்.
சாந்தியின் அருகே மண்டியிட்டு அமர்ந்த கண்ணன் தனது சேட்டைக் கழற்றி அலங்கோலமாய் இரத்த வெள்ளத்தில் கிடந்த அவளது உடம்பிற்கு மேலே போர்த்தி விட்டான்.
முகம் குப்புற விழுந்து கிடந்த அவளது உடம்பை மெல்லப் பிரட்டிவிட்ட போது உடம்பிலே மெல்லிய சூடு இருப்பதை அவதானித்த கண்ணன் புறங்கையை அவளது மூக்குக்கருகே வைத்துப் பார்த்தான். மெலிதாக மூச்சு வந்து கொண்டிருந்தது. சட்டென்று விழித்துக் கொண்டவன் "'நாதன் சீக்கிரம் இங்கேவா"" என்று அழைத்தான்.
நாதனும் அருகே வந்து பார்த்துவிட்டு ""ஆமாம் மூச்சு வருகிறது. மார்பு லேசாய்த் துடிக்குது"" என்றான். அவசரமாக முதலுதவிப் பிரிவை அழைத்து சாந்திக்கு முதலுதவிகளைச் செய்வித்த கண்ணன் அவளை 'ஸ்ரெச்சரில்" படுக்கவைத்து வைத்திய சாலையின் அவசரசிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைத்தான்.
இராணுவமுகாம் தாக்கி அழிக் கப்பட்டதை அந்த ஊர்மக்கள் ஆரவாரித்து கொண்டாடினா லும் குண்டுவீச்சு விமானங்கள் எந்த நேரமும் திடீரென அங்கே வந்து குடிமனைகள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற பயமும் அவர்களின் முகத்தில் தெரிந்தது.
போராளிகளுக்கு குளிர் பானமும் உணவும் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியையும் ஆதர வையும் வெளிப்படையாய்க் காட்டினர்."'என்னசேதம்அதிகமே?'' யாரோ கேட்ட கேள்விக்கு ""ஓ! ஒன்றும் மிச்சமில்லை,இனிமேல் எங்கடை மண்ணிலை காலடி எடுத்து வைக்கவும் அவங்கள் யோசிக்கமாட்டாங்கள்"" ஊர்மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது கண்ணனின்காதிலும் விழுந்தது.
சுரேன் எங்கே, எப்போ, எப்படிச் செத்தான் என்பதைக் கண்ணன் சுமதியிடம் மட்டுமே சொல்லியிருந்தான். வீடியோரத்தினத்தைப் பற்றியும் இராணுவமுகாமோடு சுரேனுக்கு இருந்த தொடர்புகள் பற்றியும் அவளுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகச் சொல்லியிருந்தான்.
இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் சுரேன் தற்செயலாக நடுவே அகப்பட்டு துப்பாக்கிச் சூடுபட்டு இறந்ததாக ஊரார் நம்பினர். ஒரு நல்ல இதயம் படைத்த தாயின் மனசு புண்படக்கூடாது என்பதற்காக கண்ணனும் அந்த நம்பிக்கையை வீணாக்காமல் அப்படியே ஊரை நம்பவைத்தான். தன்மகன் ஒரு துரோகி என்பதைக்கூட அறியாத அந்தத் தாயார் "'இவங்களாலை தான் என்ரை பிள்ளை அனியாயமாய்ச் செத்துப்போச்சு"' என்று மரணச் சடங்கிலன்று ஒப்பாரி வைத்து அழுததைப் பார்த்த சுமதிக்கு சோகத்தைவிட எரிச்சல்தான் அதிகம் வந்தது.
ஒரு கணம் தாயாரிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா என்று யோசித்தாள். ஆனாலும் தாயின் மனதைப் புண்படுத்த வேண்டாமே என்று அந்த யோசனையைக் கைவிட்டாள். வேதனைமேல் வேதனையை அனுபவித்த சுமதிக்கு சாந்தி உயிரோடு இருக்கிறாள் என்ற செய்தி ஓரளவு மனஆறுதலைக் கொடுத்தது. அவள் சாந்தியைப் பார்க்கப் போனபோது அவள் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி சிறிதளவு குணம் அடைந்திருந்தாள்.
ரவுண்ட்ஸ் போய்கொண்டிருந்த டாக்டரிடம் சாந்தியின் உடல்நிலை பற்றி விசாரித்தபோது விரைவில் குணமடைந்து விடுவாள் என்று அவர் நம்பிக்கையோடு சொல்லிவிட்டு புன்னகையோடு நகர்ந்தார். சாந்தியின் உடம்பு பலவீனமாக இருந்ததால் றிப் பொருத்தியிருந்தார்கள். தனது குடும்பத்திற்கு என்ன நடந்தது என்பதை தாயார் மூலம் ஏற்கனவே சாந்தி அறிந்திருந்தாள்.
சுமதியைக் கண்ட சாந்தியின் கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது. அவளது உதட்டில் முதன்முதலாக ஒருமெல்லிய புன்னகை அரும்பியது. பலவீனமாக இருந்ததால் அவளால் அதிகம் பேசமுடியவில்லை. ஆனாலும் கைகளை மெல்லநீட்டி சுமதியின் கைகளை ஆசையோடு பற்றிக் கொண்டாள். அவர்களது நட்பின் ஆழத்தை அவளது அந்தப் பிடியில் சுமதியால் உணரமுடிந்தது. அவளது கண்களில் கண்ணீர் முட்டி நின்றது. ""யூ ஆர் ஓகே..... சாந்தி!
சின்னப் பிள்ளை மாதிரி அழாதே!"" அவளது தலையைத் தடவி ஆறுதல் சொன்னாள்.
எனக்கு ஆறுதல் சொல்லும் இவளால் எப்படித்தான் சிவாவின் பிரிவை தாங்கிக்கொள்ள முடிகிறதோ என்று எண்ணி வியந்த சாந்தி அவளிடம் அதைப்பற்றி வாய்விட்டும் கேட்டாள். சுமதியிடம் இருந்து அதற்குப்பதில் எதுவும் உடன் வராவிட்டாலும் அவள் சாந்தியைப் பார்த்துச் சோகமாகச் சிரித்துவிட்டு "'சிவா வாழ்நாள் எல்லாம் எனக்குத் துணையாக என்னோடுஇருப்பார் என்றுதான் நான் நினைத்தேன் ஆனால் அவர் நடுவழியில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார்.
ஆனாலும் அவரது லட்சியப்பதையிலே அவரது கனவொன்றே குறியாக அவரது நினைவொன்றே துணையாக நான் தொடர்ந்தும் நடப்பேன்! இது உறுதி!"' என்று சொல்லி சாந்தியின் கைகளைப் பற்றிக்கொண்டு சுமதி நிமிர்ந்தபோது சூரியா உள்ளே வந்தான். ""சுhந்தி யார் வந்திருக்கிறது என்று கொஞ்சம் திரும்பிப்பாரேன்"' என்று சொல்லிக்கொண்டு சாந்தியின் தாயார் எழுந்து மெல்ல வெளியே போனார்.
உள்ளே வந்த சூரியா வெட்கப்பட்டு அவர்களைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தான். சாந்தியின் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை. ஆனால் "'இவன் ஏன் மறுபடியும் என் வாழ்க்கையில் குறுக்கிடுகிறான்?"' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.
"'எப்படி இருக்கிறா?"" என்று சுமதியைப் பார்த்துக் கேட்டான் சூரியா.
"'பயப்படத் தேவையில்லை, ஷிஇஷ் ஓகே!"" என்றாள் சுமதி. தோழிகளின் தனிமையில் குறுக்கிட்டு விட்டேனோ என்று நினைத்த சூரியா சிறிதுநேரம் அங்கே நின்றுவிட்டு அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான்.
""சூரியா இங்கே வந்தது உனக்குப் பிடிக்கவில்லையா?"" சுமதியின் கேள்விக்கு சாந்தி மௌனம் சாதித்தாள்.
""எனக்குத் தெரியும் உனக்குப் பிடிக்கவில்லை என்று ஆனால் சில உண்மைகளை நீ தெரிந்து கொள்ளவேணும். அனாதையாய்ப் போன உனது தாயை தனது தாயைப் போல இவ்வளவு காலமும் கவனித்து வந்தது இந்தச் சூரியாதான். அது மட்டுமல்ல
இன்னுமொரு விஷயம் உனக்குத் தெரியுமா?"" என்றாள். ""என்ன?"" என்பதுபோல சாந்தி விழிகளை உயர்த்திப் பார்த்தாள்.
""உனக்கு சிகரட் புகைப்பவர்களைப் பிடிக்காது என்று சொன்னாயாமே அதனால் சூரியா சிகரட் பிடிப்பதைக் கூடக் கைவிட்டு விட்டான். இப்போ ரொம்ப நல்லபிள்ளை"" என்றாள் சுமதி அவளிடம் சிரித்துக் கொண்டே.
சாந்தி ஏனோ விரக்தியோடு சிரித்தாள். "'இருக்கலாம்! அவன் அன்று விரும்பியது அந்தத் தெளிவான நீரோடையை அதுதான் இன்று சாக்கடையாய்ப் போய்விட்டதே!"' என்றாள் பலவீனமான குரலில்.
""சாந்தி உன்னை நீயே ஏன் தாழ்த்திக் கொள்கிறாய்? நடந்ததெல்லாம் ஒரு கனவாய் நினைத்து அதை மறந்துவிடு. இது நீ எடுத்திருக்கும் புதுப்பிறவி! அதற்கு ஏற்ப உன்னைத் தயார்ப்படுத்தி வாழப் பழகிக்கொள்! இனிமேல் உன்ணுடைய அம்மாவை
மட்டுமல்ல என்னுடைய அம்மாவையும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டியது உன்னுடைய பொறுப்புத்தான்"'.சாந்தியிடமிருந்து பெருமூச்சு தான் வந்தது.
""சுமதி அம்மா நடந்ததெல்லாம் சொன்னா. நான் என்ன செய்ய? விதி என்னோட வாழ்க்கையில் விளையாடிவிட்டது. வாழப்பிடிக்காமல் தான் என்னை நானே அழித்துக் கொள்ளமுயன்றேன். ஆண்டவனுக்கு அது கூடப் பிடிக்கவில்லை!"' என்றாள்.
""இல்லை சாந்தி அப்படி எல்லாம் சொல்லாதே! நீ வாழவேண்டும் என்று தான் கடவுள் உன்னைக் காப்பாற்றி இருக்கின்றார். எங்கள் எல்லோரின் விருப்பமும் அதுதான்!"" என்றாள் சுமதி. ""எல்லோரும் என்றால்? வட் டூயூ மீன்?"" என்றாள் சாந்தி ஆர்வமாக. "'சூரியாவின் விருப்பமும் அதுதான். அவனை நீ விரும்பா விட்டாலும் தயவுசெய்து வெறுக்காதே!"' என்றாள் சுமதி.
அன்று சாந்தியோடு நீண்ட நேரம் பேசிவிட்டு இருண்டு போனதால் பிரியமுடியாமல் பிரிந்து வீடு திரும்பினாள் சுமதி.
திடீரென வானத்தில் இயந்திரத்தின் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து விமானம் ஒன்று தாழ்வாகப் பறந்துவர மாவீரரின் சமாதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தவர்களின் முகத்தில் பயம் தெரிந்தது.
பெண்கள் குழந்தைகள் என்பதைக் கூடப் பார்க்காமல் கண்மண் தெரியாமல் விமானத்தில் இருந்து சுடப்போகிறார்கள் என்று எதிர் பார்த்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
துப்பாக்கிரவைகளுக்குப் பதிலாக வானத்தில் இருந்து பூக்கள் தூவப்பட்டன. "'எங்கடை விமானம்"" என்று யாரோ சந்தோஷக் கூக்குரலிட்டார்கள். சிந்தனையில் செயல்இழந்து சிவாவின் கல்லறையில் தலைசாய்த்திருந்த சுமதியின் கைகளிலும் பூக்கள்விழுந்தன.
திடுக்கிட்டு விழித்தவள் தன்னைச்சுற்றிச்சில பெண்போராளிகள் நிற்பதைக் கண்டு நிமிர்ந்து பார்த்தாள். ""அக்கா இருட்டப்போகுது எழுந்திருங்கோ"" என்றாள் ஒரு போராளி.
""அழாதையுங்கோ அக்கா! மாவீரருக்கு முன்னால் நீங்கள் ஒரு கோழைபோல அழக்கூடாது!"' என்றாள் இன்னொரு போராளி.
ஆதரவோடு அவர்கள் கைநீட்ட அவர்களின் கைகளைப் பற்றிக் கொண்டு எழுந்த சுமதியிடம் ""வாங்கோ அக்கா நாங்கள் உங்களை வீட்டிலே கொண்டுபோய் விட்டு விடுகிறோம்"" என்றாள் ஒரு போராளி.
"'வீடா? நான் அங்கே போகப் போவதில்லை! இனி நீங்கள் இருக்குமிடம் தான் எனக்கும் வீடு"' என்றாள் சுமதி. (தொடரும்)
சுமதி தனது வீட்டிற்குப் போகப்போவதில்லை என்று சொன்னதும் போராளிகள் ஒரு கணம் திகைத்துப் போய் அவளைப் பார்த்தனர். ""ஏன் அக்கா வீட்டிற்குப் போக விருப்பமில்லையா?"" என்று கேட்டாள் ஒருத்தி. "'இல்லை"" என்று தலையாட்டினாள் சுமதி. "'வீட்டிலேஏதும் பிரச்சனையா?""
அதற்கும் இல்லை என்றே தலையாட்டினாள். ""அப்போ என்னதான் பிரச்சனை?"" என்றாள் அலுத்துப்போன போராளி. ""பிரச்சனை ஒன்றும் இல்லை நான் தான் விடுதலைப் போராட்டத்தில் சேரப்போகிறேன்"'. அந்தப் பெண்போராளி சிரித்து விட்டுச் சொன்னாள் ""நீங்க நினைக்கிறமாதிரிக் கண்டவங்க எல்லாம் எங்க போராட்டத்திலே சேரமுடியாது. அதற்குச்சில தகுதிகள் வேண்டும்!"'என்றாள்.
"'அப்படி என்னதகுதி?"" என்று அலட்சிய மாய்க் கேட்டாள் சுமதி. ''முதலில் நம்பிக்கையும் தியாக மனப்பான்மையும் வேண்டும், அப்புறம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு வேண்டும்....""
போராளி சொல்லிக்கொண்டே போக இடைமறித்த சுமதி ""இவை எல்லாம் என்கிட்ட இருக்கு! அதைவிட எனக்கு முக்கியமான ஒரு லட்சியமும் இருக்கு!"' என்றாள். ""லட்சியமா? அது என்ன? என்று கேட்டாள்.
"'அது என் காதலன் விட்டுச் சென்றலட்சியம்.இந்த மண்ணை யும் மக்களையும் காப்பாற்ற தன் உயிரைத் தியாகம் செய்த ஒருவனின் லட்சியம்! அவனது அந்த லட்சியம் நிறைவேறும் வரை நானும் போராடுவேன்! எந்த மண்ணை அவன் உயிரிலும் மேலாய் நேசித்தானோ அந்த மண்ணை மீட்டெடுக்கும் வரைஉறுதியோடு போராடுவேன்! அதுவரை இந்தக் காதல் நெஞ்சம் உறங்காது!"' அவளது
லட்சியத்தைக் கேட்டுப் போராளிகள் திகைத்துப் போய்நிற்க அவள் விடியலுக்காக வீறுநடைபோட்டுப் பயிற்சிமுகாம் நோக்கிநடந்தாள்!
திடீரென இப்படி ஒரு குண்டைச் சூரியா தூக்கிப் போடுவான் என்று பெற்றவர்கள் எதிர்பார்க்கவில்;லை. அவர்களுக்கு முன்னால் சூரியா குற்றவாளி போலத் தலை குனிந்திருந்தான். அப்பா வாய்திறக்காது மௌனமாய் இருந்தது அவனுக்குச் சங்கடமாயிருந்தது. அப்பாவின் மனநிலை என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தான்.
தாயின் பிடிவாதம் அப்படியே அவனிடமும் இருக்கிறது என்று அப்பா நினைத்திருக்கலாம். நினைக்கட்டும்! இவர்களுக்காகத் தனது லட்சியத்தை விட்டுக் கொடுக்க அவனும் தயாரில்லை! அம்மா மட்டும் தான் ஊரைக் கூட்டுவது போல கூச்சல் போட்டுக் கொண்டிருந்தாள்.
"'உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு அவளைக் கலியாணம் செய்ய?"'
"'எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு, இப்ப இல்லை படிக்கிற காலத்திலை இருந்து அவளைப் பிடிச்சிருக்கு!""
"'அப்படியே இருந்திருந்தாலும் அந்தக் குடும்பத்திலை போய்ப் பெண் கேட்டிருக்கலாம். ஆனால் இவ்வளவும் நடந்தபிறகு ஊரெல்லே சிரிக்கும்""
தாயாருக்கு பேசமுடியாமல் மூச்சுவாங்கியது. தனக்கு உதவியாகக் கணவனை இழுத்தாள்.
""என்ன நீங்கள் பேசாமல் இருக்கிறீங்கள். தேவையில்லாத நேரம் அலட்டிக் கொண்டிருப்பீங்கள். இப்பமட்டும் உங்கடை மகன்ரை கூத்தைப் பார்த்துக் கொண்டு வாயைமூடிக் கொண்டிருக்கிறீங்கள்.""
இனியும் மௌனம் சாதித்தால் மனைவியின் கோபம் தன் மேல் திரும்பும் என்பதால் அவர் மெல்ல வாயைத் திறந்தார்.
""சூரியா அம்மா சொல்லுவதையும் கொஞ்சம் கேள். இது உன்னுடைய எதிர்காலப் பிரச்சனை. கலியாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். யோசித்து நல்லதொரு முடிவை எடு!"'
"'என்ன நீங்கள் பிள்ளைக்குப் புத்திமதி சொல்லுங்கோ என்றால் அவனை முடிவெடுக்கச் சொல்லுறீங்கள்.""
"'அதுதான் நல்லாய் யோசித்துச் சொல்லச் சொல்லியிருக்கிறேன். எங்கடை குடும்ப மானம்தான் முக்கியமென்று அவனுக்குத் தெரியும்தானே!""
"'நீங்கள் சும்மா இருங்கோ! எங்களுக்கு இந்தச் சம்பந்தம் வேண்டாம்.
இருக்கிறது ஒரே ஒரு பிள்ளை. இங்கே ஊரெல்லாம் பெண் கொடுக்கத் தயாராக இருக்கினம். அதிலை ஒன்றைப் பார்த்துச் செய்வம்."'
இதுவரை ஒன்றுமே பேசாது இருந்த சூரியா இப்போது வாயைத் திறந்தான்.""அம்மா நான் கலியாணம் செய்வதென்றால் சாந்தியைத் தான் செய்வேன் இல்லாவிட்டாள் எனக்குக் கலியாணமே வேண்டாம்"" அவனது
வார்த்தைகளில் உறுதி தெரிந்தது. ஆனால் அவனது பிடிவாதம் தாயாரின் கோபத்தை மேலும் கிளறிவிட்டது.
"'ஏண்டா எச்சில் இலை பொறுக்கப்போறாய்?"" தாயாரின் வார்த்தைகள் முகத்தில் அறைந்தாலும் சூரியா பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாய் இருந்தான். என்ன வேண்டுமென்றாலும் சொல்லட்டும்!
"'அவள் இராணுவமுகாமில் இருந்தவள் என்றபடியால் தானே அவளை வேண்டாமென்று சொல்லுறீங்கள்"" கேட்டான் சூரியா.
"'ஆமாம்! அவளைக் கட்டிப்போட்டு நாளைக்கும் இந்த ஊரிலை தானே இருக்க வேண்டும். எந்த முகத்தோடை அவளைக் கூட்டிக் கொண்டு திரியப்போகிறாய்? ஊர் சும்மா இருக்கும் என்று நினைக்கிறியா?""
""ஏனம்மா எத்தனை பெடியங்களை பிடிச்சு வைச்சிருந்துபோட்டு பின் விடுதலை செய்திருக்கிறாங்கள். அவங்கள் எல்லாம் கலியாணம் கட்டிச் சந்தோஷமாய் இருக்கவில்லையா?""
"'அவங்கள் எல்லாம் ஆம்பிளைகள்!"' தாயார் நையாண்டி போலச் சொன்னதும் சூரியாவிற்கு சட்டென்று கோபம் வந்தது.
""ஏன் இப்பிடி எல்லாம் ஆண் பெண் என்று பிரிச்சுக் கதைக்கிறீங்கள். இனிமேல் ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி வேண்டாம்! யார் என்ன சொன்னாலும் நான் சாந்தியைத் தான் கலியாணம் செய்யப் போகிறேன். செய்யாத தவறுக்காக அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம். உங்கடை பிள்ளை வாழவேண்டும் என்று விரும்பினால் வந்து வாழ்த்துங்கள்!"' அவன் ஆத்திரம் தாங்க முடியாமல் எழுந்து அறைக்குள் போய் பொத்தென்று கட்டிலில் விழுந்தான். ஒரு பெண்ணின்
அவலத்தை இன்னொரு பெண்ணே பார்த்துச் சிரிப்பதா? தாயாரின் குணத்தை நினைக்க அவனுக்கு எரிச்சல் வந்தது. இவர்கள் திருந்தவே மாட்டார்களா? இந்த சமுதாயம் என்றுதான் திருந்துமோ? என்று நினைத்தவன், வீட்டுக்குள்ளேயே என்னால் திருத்தமுடியவில்லை எப்படித்தான் சமுதாயத்தைத் திருத்தவது என்று எண்ணி யபடி அப்படியே அயர்ந்து தூங்கிப்போனான்.
வைத்தியசாலையில் மருந்து மணத்திற்குப் பழக்கப்பட்டுப் போயிருந்த சாந்தி காலையில் கண்விழித்தபோது நர்ஸ் அருகேவந்து "குட்மோணிங்"' சொல்லிவிட்டு "'மெனிஹப்பி றிட்டேன்ஸ்"" என்றாள்.
சாந்தி "'இன்று என்னுடைய பிறந்தநாள் என்று இவளுக்கு எப்படித் தெரியும்?"' என்று அதிசயத்தாள். "'என்ன? எப்படித் தெரியும் என்று பார்க்கிறீங்களா? உங்க அம்மாதான் சொன்னா"" என்றபடி நகர்ந்தாள் நார்ஸ். சென்றவருடம் பிறந்த நாளன்று அப்பா
அம்மா அண்ணா சுமதி எல்லோரும் வாழ்த்தியது ஞாபகம் வந்தது. இன்று வாழ்த்துக்கூற அன்புஅப்பாவும் ஆசை அண்ணாவும் இல்லையே என்று நினைத்த போது விழிகளில் கண்ணீர் முட்டிநின்றது. சுமதியும் வரமாட்டாள். அவள் கூடத்தன் லட்சியப் பாதையில் சென்று விட்டாள்.
சுமதி அவளைப்பார்க்கக் கடைசியாக வந்தபோது சூரியாவைப் பற்றி அவள் சொன்ன தெல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தாள். "'நீ விரும்பிற ஒருவனைவிட உன்னைவிரும்பிற ஒருவனை நீ திருமணம் செய்து கொண்டால் காலமெல்லாம் உன்னை அன்போடு வைத்துக் காப்பாற்றுவான். சூரியா உன்னை விரும்பிறான். அவனை ஏமாற்றி விடாதே!""கண்களை மூடியவண்ணம் சிந்தனையில் இருந்தவள் காலடிச் சத்தம் கேட்கவே "'அம்மாவாய்இருக்கலாம்"' என்று எண்ணியபடி கண்களைத் திறந்தாள்.
சூரியாவின் உருவம் அவளது கண்ணீருக்குள் குளிக்க கண்களைத் துடைத்து விட்டுப் பார்த்தாள். சூரியாதான்! கைகளைப் பின்னே கட்டியபடி சிரித்துக்கொண்டு ஸ்லோமோஷனில் அருகே வந்த சூரியா அவளருகே வந்து கையில் இருந்த ரோஜா மலரை அவளிடம் நீட்டினான்.
ஒருகணம் என்ன செய்வது என்று தெரியாமல்; திகைத்த அவள் அவனது நல்லமனசை நோகடிக்க விரும்பாமல் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு மெல்லக் கைகளைநீட்டி அந்த ரோஜாமலரை வாங்கிக் கொண்டாள்.
"'பிறந்த நாள் வாழ்த்துக்கள்!"" என்று அன்போடு சொல்லிவிட்டு அவள் முகத்தை நேரே பார்த்தான். அவளோ பதில்சொல்ல வார்த்தைகள் வெளிவராமல் ஊமையாகி உதடுகள் துடிக்க மௌனமாய் அவனைப் பார்த்து மனசுக்குள் விம்மினாள். அந்த விம்மல் விக்கலாகமாற குழந்தைபோல அழத்தொடங்கினாள்.
"'அழட்டும்! உள்ளத்தில் உள்ள உள்ளக்குமுறலை வெளியே கொட்டித் தீர்க்கட்டும்!"' என்று அவன் காத்திருந்தான். அவளது கண்ணீர் ஆயிரமாயிரம் கதைகள் சொல்ல அவன் மெல்லக் குனிந்து அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரை ஆதரவோடு துடைத்து விட்டான்.
அந்த ஸ்பரிசத்தில் நெகிழ்ந்து போன அவள் சட்டென்று அவனது கைகளை ஆதரவாய்ப் பற்றிக் கொண்டு அவனை நோக்கினாள். அவனும் அவளை நோக்கினான்.
அவர்களை அறியாமலே காதல்கவிதை ஒன்று அங்கே மௌனமாய் அரங்கேறிக் கொண்டிருந்தது!
(முற்றும்)
Comments
Post a Comment