Corona - அணிலாடும் முன்றில்கள்..!

 



காதலர் உழையராகப் பெரிது உவந்து

சாறு கொள் ஊரின் புகல்வேன் மன்ற - குறும்தொகை


………………………………………………………………….

அணிலாடும் முன்றில்கள்..!


பறவைகளின் கீச்சுச் சத்தம் அதிகாலையில் கேட்டதில் மெல்லக் கண்விழித்துப் பார்த்தேன். நீண்ட நாட்களின்பின் இந்தச் சத்தம் வித்தியாசமாயும், ஆச்சரியம் தருவதாயும் இருந்தது. நான் எங்கே இருக்கிறேன், மீண்டும் பழைய கிராம வாழ்க்கை முறைக்குத் திரும்பி வந்து விட்டோமோ என்ற சந்தேகத்தையும் அது கிளப்பிவிட்டது. எழுந்து யன்னல் வழியாக வெளியே பார்த்தேன்.

சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே எங்கள் வீடு இருந்ததால், வழமையாக விமானங்களின் இரைச்சல்தான் காலையில் எனது தூக்கத்தைக் கலைப்பதுண்டு. அதற்கு மாறாக குருவிகள், பறவைகள் இணைதேடி அழைத்த அந்த ஓசையும், தாய்க்காகப் பசியோடு காத்திருக்கும் குஞ்சுகளின் அழைப்பும் பல நாட்களின் பின் இயற்கையின் இன்னிசைபாய்ச் செவிகளில் தேனாய்ப் பாய்ந்தது. 

வானம் வெளித்திருந்ததால், இயற்கையன்னையின் முகத்தில், விடியலை நோக்கிய மெல்லிய வெளிச்சம் தெரிந்தது. தொலைத்து விட்ட பழைய வாழ்க்கை திரும்பி வந்து விட்டது போன்று மனதில் மிகவும் மகிழ்வாக இருந்தது. 

கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாற்றங்கள் எல்லாம் வெகு விரைவாகவே நடந்தன. தொடக்கத்தில் வேடிக்கையாக எடுத்தவர்களைக்கூட மரணபயம் பிடித்துக் கொண்டது. எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல், களியாட்டம் என்று சொல்லி மேடைகளில் கொஞ்சிக் குலாவிக் கூத்தடித்தவர்கள் கூட மௌனமாகி விட்டிருந்தனர். 

நம்பிவந்தவர்களை நோயாளியாக்கிப் படுகுழியில் தள்ளிவிட்டு இவர்கள் தப்பிக் கொண்டனர். கொரோனா வைரஸ் எல்லோருக்கும் ஒரு பாடம் கற்பிக்கத் தொடங்கியிருந்தது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாடுகளாகப் பரவத் தொடங்கியது. வைரஸ் காவிகளாக மனிதர்களே செயற்பட்டு, தங்கள் சமூகத்திடமும் அதைக் கொண்டு சேர்த்தார்கள்.

 நவீன சாதனங்களான கப்பல்களும், விமானங்களும் விரைவாக நோய்களைப் பரப்ப உதவியாக இருந்தன. இதையெல்லாம் அலட்சியம் செய்தவர்களுக்கு சீனாவிலும் ஸ்பெயினிலும் இத்தாலியிலும் நடந்த தொடர் மரணங்கள் ஒரு பாடமாக அமைந்தன. 

இன்று விமானங்களின் இரைச்சல் அடங்கிப் போயிருந்ததால் வானம் மகிழ்ந்திருந்தது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், காற்றும், நீரும் மாசடையாமல் தப்பிக் கொண்டன. இவை எல்லாவற்றுக்குமே கண்ணுக்குத் தெரியாத கொரோனா என்று மூன்றெழுத்து வைரஸ்சுகள்தான் காரணமாக இருந்தன.

ஊரிலே சாமக்கேழி கூவும், அப்புறம் விடியல் கோழி கூவும், அதிகாலையில் காகங்கள் கரையும், குருவிகள் கீச்சிடும், தூக்கத்தில் இருக்கும் எங்கள் கிராமத்திற்கு இந்த ஓசைகள் தினமும் பழகிப் போனவை மட்டுமல்ல, வீட்டுக்குள் இருப்பவர்களுக்கு நேரத்தை சொல்வனவாகவும் இருந்தன. விடியல் கோழி கூவித் துயில் எழுப்பியதும் விவசாயிகள் வயல் வரம்பு நோக்கிச் செல்வார்கள். 

காலையில் காகம் கரையும் போது பெண்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு உணவு கொண்டு செல்வார்கள். இரவில் யாராவது புதியவர்களின் நடமாட்டமிருந்தால் ஆட்காட்டிக் குருவி சத்தமெழுப்பும், காலையில் எழுந்து வெளியே வந்தால் அணில்கள் மகிழ்வோடு முற்றத்தில் ஓடி விளையாடும், புலுனிகள் அங்குமிங்கும் இரை தேடும், காகங்கள் ‘காகா’ என்று கரைந்து ஒன்றாக உணவு உண்ணும். கொல்லையில் வண்ணத்துப் பூச்சிகள் புல்நுனி மேய, தொழுவத்திலிருந்து ‘ம்மா’ என்ற அழைப்புக் கேட்கும். கோடை, மாரி, இரவு, பகல் மாறிமாறி வந்தன. சூரியன், சந்திரன், வானத்து நட்சத்திரங்கள் இயற்கையாய் வழிகாட்டின. 

இயற்கைச் சூழலில் எல்லாமே தானாகவே நடந்து கொண்டிருந்தன. மனிதமனங்களை ஆற்றுப்படுத்தவென்று, எங்களைச் சுற்றியிருந்த இயற்கை தந்ததையெல்லாம் நாங்களே தொலைத்திருந்தோம். இயற்கையைப் புரிந்து கொள்ளாமல், நவீனயுகம் என்றும், நாகரிகம் என்றும் சொல்லிக் காற்றிலும், நீரிலும், நிலத்திலும், உணவிலும் நஞ்சைக் கலந்து கொண்டிருந்தோம். அதன் பலனை இப்போது அனுபவிக்கின்றோம்.

மனிதனால் விலங்கிடப்பட்ட இயற்கையன்னை சில காலம் எல்லாவற்றையும் பொறுமையாக வேடிக்கை பார்த்தாள். அவள் சொன்ன மொழி இவர்களுக்குப் புரிவில்லை. இயற்கை தந்த மரங்களை அழித்தார்கள், மழை பொய்த்தது. வானத்திலே துவாரம் போட்டார்கள், வெய்யில் கொதித்தது. காற்றிலும், நீரிலும் நஞ்சைக் கலந்தார்கள், பறவைகள், மிருகங்கள், மீன்கள் என்று உயிரினங்கள் அழிந்தன. அதற்கும் மனிதன் அசையவில்லை. 

அன்னை பொறுக்க முடியாமல் புவியதிர்வை ஏற்படுத்தி, எரிமலையை வெடித்துப் பார்த்தாள் ம்..கூம்.. ஆழிப்பேரலைகும் மனிதன் அசையவில்லை. மாறிமாறி இவ்வளவும் நடந்தும் கூட மனிதன் இறுமாப்புடன் இருந்தானே தவிர இயற்கையைப் புரிந்து கொள்ளவில்லை, நீயா, நானா என்ற ஆதிக்க வெறி போட்டி போட்டு மனிதநேயத்தைக் காலடியில் போட்டு மிதித்தது. இயற்கை தந்த கொடைகளை அழித்தால் என்ன நடக்கும் என்பதை காத்திருந்து உணரவைத்தாள் அன்னை. ஆக்குவான், காப்பான், அழிப்பான், அருள்தருவான், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்பதை எல்லாம் சொல்லாமல் சொல்லி நின்றன இறைவன், இறைவி; என்கிற மகாசக்திகள். பொறுமைக்கும் எல்லை இருந்தது, மனிதன் மாட்டிய விலங்கை உடைத் தெறிந்திருந்தாள் இயற்கையன்னை. 

கணவர் மருத்துவர் என்பதால் மருத்துவமனையிலேயே தங்க வைத்துவிட்டார்கள். நோயின் தாக்குதல் பாரபட்சம் காட்டாமல் வேகமாகப் பரவியது. இப்படியான நேரங்களில் மற்றவர்களுக்கும் நோய் பரவும் என்பதால் எங்களை வீட்டிலே இருந்து வேலை செய்யச் சொன்னார்கள். இரண்டு வாரமாகக் கணவனைப் பிரிந்து இருப்பது மனதை வருத்திக் கொண்டே இருக்கிறது. அவர் அருகே இருக்கும் போது மகிழ்ச்சியாக இருந்த மனசு அவரது பிரிவால் துயருற்று இருக்கிறது. அவ்வப்போது செல்பேசியில் அவர் பேசினாலும் இப்படியான அவசரகாலத்திற்கு அவரது சேவை முக்கியம் என்பதால் அவரது பிரிவைப் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டி இருக்கின்றது. மடிக்கணனியை திறந்து வைத்து வேலையை ஆரம்பித்தேன். போக்குவரத்து நேரத்தை வீட்டில் இருந்து வேலை செய்வதால் மிச்சம் பிடிக்க முடிந்தது. 

வேலை முடிந்ததும் பொழுது போக்குவதற்காக தொலைக்காட்சி பார்த்தேன். நெடுஞ்சாலைகள் எல்லாம் வெறிச்சிட்டுக் கிடந்தன. தொலைந்துபோன டல்பின்கள் மீண்டும் கூட்டமாக இத்தாலி நாட்டின் கரையோரத்தில் மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருப்பதைக் காட்டினார்கள். விமான நிலையம் மூடப்பட்டதால், வாத்துகள் குஞ்சுகளுடன் குடும்பமாக ஓடுபாதையை கடந்து சுதந்திரமாக அன்னநடை நடந்து கொண்டிருந்தன. ஒட்டர்கள் அங்குமிங்கும் ஓடிக் கண்ணாமூச்சி விளையாடின. வானத்தில் பறவைகள் சுதந்திரமாகப் பறந்து திரிந்தன. கொல்லையில் குருவிகள் கிளைகளில் ஆரவாரமாகத் தாவித்திருந்தன. அணில்கள் மரம் மரமாய்த் தாவிக் கொண்டிருந்தன. இயற்கை மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தது. 

இன்னொரு செனலில் கைகுலுக்கும் பழக்கத்தை அறிமுகப்டுத்திய பிரித்தானியா நாட்டின் இளவரசர் சார்ள்ஸ், ஏற்கனவே அவருக்கு நோய் தொற்றியிருந்தது தெரியாமல், சென்ற இடமெல்லாம் எல்லோரையும் பார்த்துக் கரம் கூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண்டிருந்தார். அன்றொருநாள் இந்திய பிரதமர் கைகூப்பி வணக்கம் சொன்னபோது, ‘தேர்ட்வேள்ட் பட்டிக்காடுகள்’ என்று சொல்லிச் சிரித்து ஏளனம் செய்தவர்கள் எங்கே ஓடி ஒளிந்தார்களோ தெரியவில்லை. தமிழ்நாட்டு காவல்துறை அதிகாரி வாய்க்கு கவசம் அணிந்து தெருவிலே நின்று ‘தயவு செய்து வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம், உங்க கால்ல விழுந்து வேணும்ணா கெஞ்சிக் கேட்கிறேன்’ என்று வேண்டுகோள் விடுக்குமளவிற்கு மக்கள் அலட்சியமாக இருந்தார்கள். 


முகத்தை மறைத்து, கையிலே கையுறை போட்ட பெண் வைத்தியர் ஒருவர் திரையில் வந்து ‘கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. நோயாளியின் அருகே இருந்தால் காற்றிலும் பரவும், தொட்ட இடத்தில் இருந்தும் பரவும் எனவே தயவு செய்து தேவையில்லாமல் வெளியிடங்களில் திரிய வேண்டாம். உங்கள் கையை அடிக்கடி சோப்போட்டுக் கழுவிக் கொள்ளுங்கள். உங்களுக்காக நாங்கள் உயிரைப் பணயம் வைத்து மருத்துவமனையில் இருக்கிறோம், எங்களுக்காக நீங்கள் வீட்டில் இருந்தால் அதுவே இந்த நாட்டுக்கு நீங்கள் செய்யும் பேருதவியாக இருக்கும்.’ என்று வேண்டுகோள் விடுத்தார். 

ஊரிலே நாங்கள் வெளியே சென்று வந்தால் கைகால் கழுவித்தான் உள்ளே வந்தோம். மஞ்சள் பூசித்தான் குளித்தோம், கோமயத்தை தெளித்துத்தான் கோலம் போட்டோம், வீடு மெழுகினோம், வேப்பமர நிழலில்தான் விளையாடினோம், ஆலும் வேலும் தான் எங்களுக்குப் பல் துலக்க உதவியது. 

எல்லாவற்றையும் இயற்கையே எங்களுக்குக் கொடையாய்த் தந்திருந்தது. அவற்றைப் பாதுகாக்கத் தெரியாமல், எல்லாவற்றையும் இழந்துவிட்டு இன்று தவியாய்த் தவிக்கின்றோம்.

கும்மாளமடித்தவர்கள் பொதுசன ஊடகங்களுக்குள் நுழைந்திருந்தார்கள். அடுத்த தலைமுறையை மூளைச் சலவை செய்து வைத்திருந்ததால், போட்டோசொப்பில் வெட்டி அரைகுறை ஆடையோடு எடுத்த சில பதுமவயது சிறுமிகளின் படத்தைப் போட்டு ‘என்ஜோய்’ என்று ஒருவர் எழுதி இருந்தார். 

போதாக் குறைக்கு அந்த சிறுமியை இறுக அணைத்தபடியும் போஸ் கொடுத்ததற்கு இருவர் லைக் போட்டிருந்தார்கள். ‘நான் இவ்வளவு நிறமாக அழகாக இருக்கிறேனா, தாங்ஸ் அங்கிள்..!’ என்று தானும் லைக் போட்டு கருத்தும் எழுதி இருந்தாள் அந்த அப்பாவிச்சிறுமி. 

ஒரு நாளுமே கணவனுக்கு ஒருகப் காப்பியே கொடுக்காத மனைவி ஒருத்தி, ‘வீட்டிலே இருக்கிறோம் என்பதற்காக அடிக்கடி தேனீர், காபி கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம்’ என்று எழுதியிருந்தாள். 

வீட்டுக்குள் தொடர்ந்து அடைந்து கிடந்ததால் சிலர் மனநோயாளர்போல மாறியிருந்தனர், தங்கள் பழைய படங்களைப் போட்டு அதற்கு விமர்சனமும் தாங்களே எழுதியிருந்தார்கள். அழகுசாதன நிலையங்கள் மூடியிருந்ததால், சிலர் செல்பி எடுத்துப் போடுவதை நிறுத்தியிருந்தனர். 

இவை எதிலுமே மனம் ஒட்ட மறுத்தது.

இயற்கைக்கும் மனிதனுக்குமான போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. மனிதன் அடங்க மாட்டான், இது பனிப்போர் என்கிறான். இயற்கையை உடைத்தெறிவோம் என்று மார்தட்டுகின்றான். அதனாலே இயற்கையன்னையின் இந்த மகிழ்வு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கப் போகிறது என்பது தெரியாத விடையாகத்தான் இருக்கிறது. இதையெல்லாம் அலட்சியம் செய்ததால் மனிதன் பட்ட அவலம் இப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.

சமையல் முடிந்ததும் வழமைபோல, ‘கையை கழுவிட்டுச் சாப்பிட வாங்கோ’ என்று குரல் கொடுத்தேன். 

அன்று தொட்டு தினமும் பாட்டி சொன்னதையே, இதுவரை காலமும் அம்மாவும் சொன்னாள். நானும் ஏதோ ஞாபகத்தில் அதைச் சொல்லித்தான் அழைத்தேன்.

பிள்ளைகள் கையலம்பிவிட்டு ஓடி வந்து சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தார்கள். அவரைக் காணவில்லையே என்று ஒரு கணம் தயங்கினேன்.

சாப்பிட வருவதற்கு, மருத்துவ மனையில் தன்னுயிரைப் பணயம் வைத்து நோயாளிகளோடு கடந்த இரண்டு வாரமாகப் போராடிக் கொண்டிருக்கும் அவர் எப்படி வருவார்? அவர்தன் இங்கில்லையே! 

காலையில் குட்மோனிங் சொல்லி குசலம் விசாரிக்கும் அவரது போன்கோல் இன்னும் ஏன் வரவில்லை என்பது மனசுக்கு என்னவோபோல இருந்தது. போதாக்குறைக்கு ஆம்புலன்ஸ்களின் சத்தம் வெளியே வீதியில் இருந்தே பயம் காட்டிப் பிரிவுத்துயருக்கு உரமூட்டிக் கொண்டிருந்தன.

மீண்டும் தொலைக்காட்சித் திரையில் வந்த அழகிய இளம்பெண் ஒருத்தி, கொரோனா வைரஸ்ஸில் இருந்து உங்களைப் பாதுகாக்க, எப்படிச் சுத்தமாகக் கையலம்ப வேண்டும் என்று கமெராமுன் குனிந்து மிகவும் நளினத்தோடு செய்து காட்டிக் கொண்டிருந்தாள். ஆனாலும் எல்லோருடைய பார்வையும் அதில் நாட்டம் கொள்ளாது வேறெங்கோ நிலைத்து நின்றது!



Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper