Corona- யாருக்காக அழுவது..?

 


கொரோனாவே சொல்லு, யாருக்காக அழுவது..?

(குரு அரவிந்தன்) 

(நன்றி : ஞானம் யூன் 2020)


(‘எனக்கொரு அசை இருக்கு, என்னவென்றால் உங்களைப் போலவே நானும் படிச்சு ஒரு வைத்தியராக வரவேணும்!’)


டாக்டர் உமாவின் கண்கள் பனித்தன. தேசம் விட்டுத் தேசம் வந்து இந்த மண்ணிலே ஊர்பேர் தெரியாத யாரோ எல்லாம் வந்து நன்றி செல்லிவிட்டுச் சென்றபோது, அப்படியே உறைந்து போய் சற்று நேரம் வாசலில் நின்றாள்.

அப்பொழுதான் கடமை முடிந்து களைத்துப்போன நிலையில் வீட்டுக்கு வந்திருந்தாள். சிறிது ஓய்வெடுக்கலாம் என்று நினைத்த போதுதான் அந்த செல்பேசி அழைப்பு வந்தது. எடுத்துப் பார்த்தாள், மெடிக்கல் சுப்பிரிண்டனிடம் இருந்துதான் அந்த அழைப்பு.

‘சொல்லுங்க சார்’ என்றாள்.

‘டாக்டர் நீங்கள் ரெஸ்ட் எடுக்கிற நேரத்தில தொந்தரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும். உங்க அயலவங்களும், நகரமக்களும் சேர்ந்து உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புறாங்க, அதனாலே ஆறு மணிபோல உங்க வீட்டுக்கு முன்னால் வண்டிகளில் வந்து நன்றி சொல்ல இருக்கிறார்கள். இந்த சூழ்நிலை காரணமாக, நேரடியாக சந்திக்க வாய்ப்பு இல்லாதபடியால் இதை உங்களுக்கு அறிவிக்கச் சொன்னார்கள்.’ என்றார் அவர்.

சற்று நேரத்தால் உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதியிடம் இருந்து அதே செய்தி வந்தது. மறுக்க முடியவில்லை, எனவே அவள் உடை மாற்றி அதற்குத் தயாராக இருந்தாள்.

அவர்கள் சொன்ன நேரத்திற்கு அவள் வந்து வீட்டு வாசலில் நின்றாள். முதலில் பொலீஸ்வண்டி ஒன்று நீலமும் சிகப்பும் கலந்த வர்ணவிளக்குகள் போட்டபடி மெதுவாக வந்தது, தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டி, தீயணைப்பு வண்டி, பொதுமக்கள் வண்டி என்று ஒவ்வொன்றாக மெதுவாக நகர்ந்தன. ‘நன்றி டாக்டர்’ என்று சிலர் வண்டிக்குள் இருந்தபடியே பதாதைகளை பிடித்திருந்தனர். சிலர் வண்டியின் யன்னலைத் திறந்து அதற்குள்ளால் உரக்கக் கத்தி ‘உங்கள் தன்னலமற்ற சேவைக்கு நன்றி’ என்று சொன்னார்கள். வண்டியில் வந்த எல்லோரும் கொரோனா முகக் கவசம் அணிந்திருந்தனர். சுயதனிமைப்படுத்தல் இடைவெளியைக் கடைப்பிடித்திருந்தனர். ஒரு பிக்கப் வண்டியில் வந்தவர்கள் நன்றி தெரிவித்து அவளுடைய பெயரைத் தாங்கிய பெரியதொரு பதாதையை வீட்டுக்கு முன்னால் உள்ள புற்றரையில் தடி ஒன்றை நன்றாக ஊன்றி, அதில் பதாதையை இணைத்து வைத்து விட்டுச் சென்றார்கள். ‘தாங்யூ டாக்டர் உமா’ என்று பெரிதாக எழுதப்பட்டிருந்தது.

மனிதரிடம் இருந்து மனிதருக்குத் தொற்றக் கூடிய கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, அருகே செல்ல முடியாது, கை குலுக்க முடியாது எனவே எட்ட நின்றபடியே அவர்களது நன்றியைக் கையசைத்து ஏற்றுக் கொண்டாள் டாக்டர் உமா. 

கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக இருந்த இடத்தில்தான் அவள் வேலை செய்த வைத்தியசாலை இருந்தது. அந்த வைத்திய சாலையில் சில வைத்தியர்களும், தாதிகளும் ஏற்கனவே பாதிப்புக்குள்ளானதால் இவள் அதிக நேரம் கடமையாற்ற வேண்டி வந்தது. தன்னுயிரைப் பற்றிக் கவலைப்படாமல், எந்த ஒரு தயக்கமும் இன்றி அவள் கடினமாக உழைத்தாள். அவள் மருத்துவக் கல்வியை இந்தியாவில்தான் கற்றிருந்தாள். திருமணம் செய்ததால் கணவருடன் அமெரிக்கா வரவேண்டி இருந்தது. இந்த வைத்திய சாலையில் மருத்துவராக வேலைகிடைத்ததால் எல்லோருடனும், நட்பாகவும், அன்போடும் பழகினாள். கல்வி கற்கும்போது, ‘எந்த விருப்பு வெறுப்பும் இல்லாமல் ஒரு வைத்தியராக உனது கடமையைச் செய்ய எப்பொழுதும் தயாராக இரு’ என்று அவளது ஆசான் சொன்னதையே கடமையின்போது தேவவாக்காக இதுவரை ஏற்றிருந்தாள்.

வரிசையாக மெதுவாக வந்த எல்லா வண்டிகளும் மெதுவாக நகர்ந்திருந்தன. வண்டிகளில் இருந்த தெரிந்த, தெரியாத முகங்களை அவளால் அவதானிக்க முடிந்தது. கடைசியாக வந்த பொலீஸ் வண்டி மட்டும் வெளிச்சவிளக்கோடு வீதியில் வந்து வீட்டு வாசலுக்கு நேரேநின்றது. 

அந்தப் பெண் பொலீஸ் அதிகாரி தனது காரில் இருந்து இறங்கி இவளை நோக்கி நடந்து வந்தாள். இவளை நோக்கி விறைப்பாக நடந்து வந்தவள், சுமார் பத்தடி தூரத்திற்கு அப்பால் சட்டென்று நின்றாள். மறுகணம் தனது வலது கையை உயர்த்தி இவளை நோக்கிச் சலியூட் ஒன்று அடித்தாள், அப்புறம் தனது தொப்பியைக் கழற்றி, நெஞ்சுக்கு நேரே வைத்தபடி ஒரு கணம் தலைகுனிந்து மௌனமாக நின்றாள். என்ன நடக்கிறது என்று புரியாமல், இமை மூடாது டாக்டர் உமா அவளையே பார்த்தபடி அப்படியே வாசலில் உறைந்து போய் நின்றாள்.

அழுதிருக்கலாம், இங்கிருந்து அந்த ஆபிஸாரின் கண்களைத் தெளிவாகப் பார்க்க அவளால் முடியவில்லை. ஆனால் ஆபிஸாரின் உடம்பு மெல்லக் குலுங்கியதில் இருந்து அவள் அழுதிருக்கலாம் என்று இவள் ஊகித்தாள். அப்புறம் ஆபிஸார் திரும்பி தனது வண்டியை நோக்கி நகர்ந்த போதும் இவள் அசையாமல் அப்படியே நின்றாள். 

பொலீஸ் அதிகாரி லாவொன்றியா அழுதாளோ இல்லையோ, அதை அவதானித்த டாக்டர் உமா மெல்ல விசும்பினாள். அந்த நிகழ்வு அவளைக் கண் கலங்க வைத்தது. எத்தனையாயிரம் உயிர்களைக் கொரோனா பலியெடுத்த இந்த நிலையில் யாருக்காக அழுவது என்று தெரியாமல் அவள் அழுதாள். ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணமாவது இருக்கும், இரண்டு வாரத்திற்கு முன் நடந்த அந்த சம்பவம் சட்டென்று அவளுக்கு நினைவில் வந்தது.

கொரோனா வைரசின் தாக்கத்தால் உலகமே அதிர்ச்சியில் இருந்தது. எழுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே வேறு நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தவர்களும் அதிகம் பலியாகினார்கள். 

இளம் பிள்ளைகள் எவருமே அந்த நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகத் தகவல் இருக்கவில்லை. ஆனால் அந்த ஐந்து வயதுச் சிறுமியைக் கொண்டு வந்தபோது, வேறு ஏதாவது சாதாரண ஜ+ரம் என்றுதான் டாக்டர் உமா நினைத்தாள். சிறுமி அடிக்கடி தலைவலி இருப்பதாகச் சொன்னாள். 

‘இரண்டு நாளாகத் தூக்கமில்லை டாக்டர், அடிக்கடி தலையிடிப்பதாகச் சொல்லி அழுகிறாள்.’ என்றாள் தாயார்.

‘டாக்டரிடம் காட்டினீங்களா?’ என்று கேட்டாள்.

‘ஆமா காட்டினோம், ஆண்டிபயட்டிக் என்று சொல்லி உயிரியெதிர்ப்பி தந்தாங்க, அது வேலைசெய்ய 48 மணித்தியாலம் எடுக்கும் என்றும் சொன்னாங்க, ஆனால் இவளால தாங்க முடியல்லை. அதுதான் அவசர சேவைப்பிரிவுக்குக் கொண்டு வந்தோம்’ என்றாள் தாய்.

சிறுமியைச் சோதித்துப் பார்த்தபோதுதான் தொண்டை வறண்டிருந்தது மட்டுமல்ல, கொரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும் தெரிந்தது. காய்ச்சலும், தலையிடியும் கொரோனா வைரஸின் பக்கவிளைவாக இருக்கலாம் என்று நினைத்தார்கள். 

சிறுமியின் தந்தைக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இருந்தது. அவருக்கும் இருமலும், சுவாசிப்பதற்குக் கஷ்டமாகவும் இருந்தது. எனவே அவரையும் சுயதனிமைப் படுத்தி இருந்தனர். அவர்கள் குடியிருந்த பகுதி மிகவும் மோசமாகக் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது. உலகிலேயே கொரோனா வைரஸின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்காதான் இருந்தது.

மருந்து கொடுத்ததில் தலையிடி குறைந்திருந்தது. இரண்டு மூன்று நாட்களில் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. கொரோனா வைரஸின் பாதிப்பில்  இருந்து அவளைக் காப்பாற்றி விட்டதாக மகிழ்ந்த போது, அவளுடைய உடல் நலத்தில் திடீரென வேறு பல சிக்கல்கள் ஏற்பட்டன. சோதித்துப் பார்த்த போது மூளைப்படல அழற்சி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. மூளைப் பகுதியில் வீக்கம் இருந்தது. அதற்கு மாத்திரை கொடுத்த போது மூளையில் இரத்தம் உறையத் தொடங்கியிருப்பது தெரிந்தது. செயற்கை முறையில் பிராணவாயு செலுத்திப் பார்த்தார்கள். முன்னேற்றம் எதுவும் தெரியவில்லை. கொரோனா வைரஸின் பாதிப்பால், மூளைப்பகுதி செயலிழந்து போயிருந்தது. மருந்தே இல்லை என்ற நிலையில், இத்துறையில் உள்ள விசேட வைத்தியர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. எதிர்பாராமல் எல்லாமே டாக்டர் உமாவின் கையை மீறிப்போனது.

‘என்னாச்சு டாக்டர்..?’

‘ஐயாம் சொறி..!’ அதைத் தவிர வேறு எந்த சமாதானமும் சொல்ல அவளுக்கு வாய் வரவில்லை. காலனோடு போராடியதில் அந்தச் சிறுமி மட்டுமல்ல, இவளும் தோற்றுப் போயிருந்தாள். 

ஒரே ஒரு பெண்ணை இழந்து விட்ட தாயாரின் அதிர்ச்சியும், அதன்பின் அவள் வீரிட்டு அழுததும் டாக்டர் உமாவின் கண்ணுக்குள் அப்படியே நின்றன. ஐந்து வயதுச் சிறுமியைக்கூட கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

தாயாரின் பரிதாப நிலையைப் பார்த்துக் கலங்கிய கண்களைகூடத் துடைக்க முடியாமல் தவித்த அவளுக்கு, அதை மறைப்பதற்கு முகத்தில் அணிந்திருந்த மாஸ்க்தான்; அன்று உதவிசெய்தது. 

ஏப்ரல் மாதம் வெளிவந்த தொற்று நோய்களுக்கான சர்வதேச மருத்துவ இதழில் கொரோனா வைரஸின் பாதிப்பால், பாதிக்கப்பட்ட சிலரது மூளையோடு தொடர்புடைய நரம்புகள் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது பற்றிய ஆய்வுகளின் முடிவோ அல்லது கொரோனா வைரசுக்கான மருந்துகளோ, தடுப்பு மருந்துகளோ ஆறு மாதங்களாகியும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது பெரிய குறையாக இருந்தது. புதிய ஆட்கொல்லி வைரஸ் என்பதால், தடுப்பு மருந்துகள் எப்போது கிடைக்கும் என்று உலகமே ஏக்கத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.

இதற்கான மருந்துகள் இருந்திருந்தால் அந்தச் சிறுமியைக் காப்பாற்றி இருக்கலாம் என்று டாக்டர் உமாவின் உள்மனசு தவித்தது. அந்தச் சிறுமியோடு கடைசியாக நடந்த உரையாடலை நினைத்துப் பார்த்தாள்.

‘உன்னுடைய பெயர் என்னவென்று சொன்னாய்?’; கிளவ்ஸ் அணிந்த கைகளால் அந்தச் சிறுமியின் கைகளைப் பற்றிக் கொண்டு டாக்டர் உமா கேட்டாள்.

‘ஸ்கைலர் ஹேபேர்ட்’ என்றாள் சிறுமி.

‘ஓ, மிஸ்டர் எபி ஹேபேர்ட் அவர்களின் மகளா?’

‘ஆமா, எங்க அப்பாதான் இந்த சிற்ரி தீயணைப்புப் படைக்குப் பொறுப்பாக இருக்கிறார், உங்களுக்கு அவரைத் தெரியுமா?’ என்றாள் பெருமையாக. 

‘தெரியுமே! உங்கப்பா எபி 18 வருடமாய் தீயணைப்பு பிரிவில் இங்கே எமக்காகச் சேவையை செய்கிறார். உங்கம்மா லாவொன்றியா அதற்கும் மேலாய் 25 வருடமாக பொலீஸ் ஆபிஸராக எமக்காகச் சேவை செய்கிறார். இக்கட்டான இந்த நேரத்தில் தளத்தில் நின்று பாடுபடும் இந்த இரண்டு பேரும் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானவங்க தெரியுமா, அவங்களை நினைச்சா எங்களுக்குப் பெருமையாக இருக்கின்றது?’

பெற்றோரைப் பற்றி உயர்வாக டாக்டர் சொன்னதைக் கேட்ட சிறுமி ஸ்கைலருக்குப் பெருமையாக இருந்தது. வேதனையிலும் அவளது உதடுகள் விரிந்து சின்னதாய் ஒரு புன்சிரிப்பு வெளிப்பட்டது.

‘ஆமா, உனக்கு என்னவாக வரணும் என்று ஆசை?’ என்றாள் டாக்டர் உமா.

‘எனக்கா, எனக்கொரு அசை இருக்கு, என்னவென்றால் உங்களைப் போலவே நானும் ஒரு வைத்தியராகப் படிச்சு வரவேணும். அப்புறம்..!’ அணையப்போகும் தீபம் கடைசி நேரத்தில் பிரகாசிப்பது போல, அந்தச் சிறுமி சொல்லிக் கொண்டே வேதனை தாங்க முடியாது மெல்ல மெல்லக் கண்களை மூடினாள். அவள் எதிர்காலம் குறித்த கற்பனையில் மூழ்கி விட்டாள் என்றுதான் டாக்டர் உமா முதலில் நினைத்தாள். ஆனால் ஸ்கைலர் பேசிய கடைசி வார்த்தைகளும் அவைதான்!


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper