Valentine- நீ என் காதலியானால்....!
நீ என் காதலியானால்....!
(குரு அரவிந்தன்)
விநோத்திற்கு நிதிக் கட்டுப்பாட்டாளருக்கான நேர்முகப் பரிட்சைக்கு வரும் படி அழைப்பு வந்திருந்தது.
மிகவும் பிரபல்யமான தனியார் நிறுவனமாகையால் நேர்த்தியாக உடை அணிந்து நேர்முகப் பரிட்சைக்கு வந்திருந்தான். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நேர்முகப் பரிட்சையில் எப்படியும் இந்த முறை இவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் புத்திசாலித் தனமாய்ப் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
குளிரூட்டப்பட்ட வரவேற்பு அறையில் தனது முறைக்காகக் காத்திருந்த போது அவள் எம்.டியின் அறையில் இருந்து ஒய்யாரமாய் நடந்து வருவது அவனுக்குத் தெரிந்தது. இவனுக்கருகே அவள் வரும் போது அப்பாவி போல இவன் தலை குனிந்து கொண்டிருந்தான்.
‘ஆழகாகத்தான் இருக்கிறாள்’ என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டான். தன்னைக் கடந்து போனதும் அவள் நடை அழகை மீண்டும் பார்த்து ரசிக்கலாம் என நினைத்தான்.
காலடிகள் தொடர்ந்து நகரும் என்று எதிர் பார்த்துக் குனிந்திருந்தவனுக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. அவனருகே வந்ததும் காலடி ஓசை சட்டென்று நின்றது.
"நீங்க மிஸ்டர் வினோத்தா?"
இனிய குரல் ஒன்று அவன் செவிகளில் தேனாய் இனித்தது.
அவன் தன்னைச் சமாளித்துக் கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.
அவள் கையிலே அவனால் அனுப்பி வைக்கப் பட்ட பயோ டேட்டா இருந்தது.
''ஆமாம் நான் தான் வினோத்" என்றான்.
''உள்ளே வர்றீங்களா?"
அவள் அறையை நோக்கி முன்னே செல்ல அவன் அவளைப் பின் தொடர்ந்தான்.
மேகவர்ண நீல நிறத்தில் விலை உயர்ந்த அழகான சேலை அணிந்திருந்தாள். அவள் நடக்கும் போது சேலை இடையை விட்டு நழுவி விடுமோ என்பது போல மேலும் கீழும் ஏறி இறங்கியது. சேலைக்குள்ளால் கிடைத்த இடைவெளியில் மெல்லிய அழகிய இடை அவளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ எட்டிப் பார்த்து இவனுக்குக் கிளுகிளுப்பூட்டியது. கடலலைகள் மெதுவாக வந்து வெண்மணற் பரப்பில் மோதிச் செல்கிறதோ என்று அவன் கொஞ்சம் கற்பனை செய்து பார்த்தான்.
அவளது இடை அழகை ரசித்தபடி பின்னால் சென்றவனுக்கு அந்தப் பாடல் வரிகள் நினைவிற்கு வர அதை வாய்க்குள் முணுமுணுத்தான்.
சட்டென்று அவனுக்கு குறுக்குச் சிறுத்தவளே என்று கவிஞர் எதைக் குறிப்பிடுகின்றார் என்பதில் ஒரு சந்தேகம் வந்தது.
குறுக்கு என்றால் இடையா அல்லது அதற்குச் சற்று மேலேயா? பெண்கள் குறுக்குக்கட்டு கட்டுவது எந்த இடத்தில் என்று நினைத்துப் பார்த்துக் கவிஞரில் பிழைபிடித்தான்.
அவள் எதேச்சையாக திரும்பி அவனைப் பார்க்க அவன் உடனே தனது பார்வையைத் தாழ்த்திக் கொண்டான்.
எதிரே இருந்த சோபாவைக் காட்டி அவனை உட்காரச் சொல்லிவிட்டு அவனுக்கு எதிர்த்தாப் போல அவளும் உட்கார்ந்தாள்.
அவன் கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தான். நேர்முகப் பரிட்சைக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன.
உள்ளே எம்டியின் அறையில் எம்.டி யாருடனோ பேசிக் கொண்டிருப்பது கண்ணாடித் தடுப்பிற்கூடாகத் தெரிந்தது. இந்த எம்.டிக்கள் ரொம்பக் கெட்டிக்காரர்கள். தங்கள் பி.ஏ வாக எப்படித்தான் இந்த அழகான பெண்களைத் தேடித் தேர்ந்து எடுக்கிறார்களோ?
அவள் புன்னகையோடு அவனிடம் சினேகமாய்ப் பேசினாள்.
"இந்த நிறுவனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?" என்று அவனிடம் கேட்டாள்.
''மிகச்சிறந்த நிறுவனம். இப்படி ஒரு நிறவனத்தில் வேலைசெய்யக் கொடுத்து வைக்க வேண்டும், அந்த வகையில் யூ ஆ லக்கி!" என்றான்.
‘அப்படித்தான் நானும் நினைக்கின்றேன்’ என்றாள்.
அதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களிடம் எப்படிப் பழகுவீர்கள் என்பது போன்ற பல கேள்விகளையும் அவள் கேட்டாள்.
அவனும் அலுத்துக் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே அவள் கேட்ட கேள்விகளுக்கு தமாஷாய்ப் பதில் அளித்தான்.
‘கடைசியாக உங்களிடம் ஒரே ஒரு கேள்வி’ என்றாள்.
‘கேளுங்க." என்றான்.
‘நீங்க நிதிக் கட்டுப் பாட்டாளருக்கு மனுப்போட்டிருக்கிறீங்க, ஆனபடியால் கணிதம் சம்பந்தமான ஒரு கேள்வி கேட்கலாமா?"
"தாராளமாகக் கேளுங்க!"
"ஒன்றும் ஒன்றும் எத்தனை?" என்றாள்.
அவன் சிரித்தான். இதுவும் ஒரு கேள்வியா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு என்னை மடக்கப் பார்க்கிறாளோ?
இந்தக் கேள்விக்கு புத்திசாலித் தனமாய்ப் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்தபடி மெல்லச் சிரித்துச் சமாளிக்கப் பார்த்தான்.
"சிரிக்காதீங்க, நான் சீரியஸாய் தான் கேட்கிறேன்!"
"இந்தக் கேள்வியை அவர்கள் நேர்முகப் பரிட்சையில் கேட்டிருந்தால் அவர்களுக்கு ஒன்றும் ஒன்றும் என்னவாக இருக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களோ அது தான் எனது விடையும் என்று அவர்களுக்குச் சொல்லியிருப்பேன். ஆனால் நீங்கள், அதுவும் ஒரு அழகான பெண் இந்தக் கேள்வியை இப்போது இங்கே கேட்டபடியால் எனது விடை வித்தியாசமானது"
'வித்தியாசமானதா? எப்படி?"
''ஒன்றும் ஒன்றும் ஒன்றுதான்!"
'ஒன்றும் ஒன்றும் ஒன்றா? அதெப்படி?" அவள் ஆச்சரியமாய்க் கேட்டாள்.
"அந்தப் பாடலை நீங்க கேட்டதில்லையா?"
"இல்லையே...! எந்தப் பாடல்...?"
"எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்!"
"சரி எது என்று சொல்லுங்க!"
அவன் தன்னைச் சுட்டிக் காட்டிவிட்டு அப்புறம் அவளையும் சுட்டிக் காட்டி,
"ஒன்றும் ஒன்றும் ஒன்றேயாகும்....!" சொல்லி முடிக்காமல் தயங்கினான்.
"எப்படி என்று சொல்லுங்களேன்..?" அவள் ஆர்வமாய் கேட்டாள்.
''....நீ என் காதலியானால்....!" என்றான்.
அவள் முகம் சட்டென்று குங்குமமாய்ச் சிவந்தது.
எதிர்பாராத அந்தப் பதிலைக் கேட்டதும் அவள் கொஞ்சம் தடுமாறினாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் தன்னைச் சமாளித்துக் கொண்டு,
"இனஃப்...! என்ன பேசிறீங்க? போதும் நீங்க போகலாம்." என்றபடி கோபமாக எழுந்தாள்.
"அதெப்படி இன்டவியூ இன்னும் முடியவில்லையே?" என்றான் அவன் அப்பாவி போல.
"முடிஞ்சு போச்சு நீங்க போகலாம்" என்றவளின் குரலில் கண்டிப்பு இருந்தது.
வேடிக்கை வினையாய் முடிஞ்சு போச்சே என்று அவன் தயங்கியபடி அமர்ந்திருந்தான்.
"ஆஷா" என்று அவள் ரிசப்~னில் இருந்த பெண்ணைப் பாhத்துக் குரல் கொடுத்தாள்.
"எஸ் மேடம்" என்றாள் அந்தப் பெண்.
"இவரை வெளியே கூட்டிட்டுப் போங்க"
வேறு வழியில்லாமல் அவன் ஆஷாவோடு வெளியேறினான்.
"ஆமா யார் அந்தப் பெண்ணு? பட்டுப் பட்டென்று பெரிசாய்க் கோபம் வருது?"
"தெரியாதா?"
"இல்லையே!"
"இவங்க தான் எங்க புது எம்.டி, இவங்க அப்பா போனவாரம் தான் ஓய்வு எடுத்திட்டாரு!"
'தப்புப் பண்ணிட்டோம்' என்று தலையில் அடித்துக் கொண்டான்.
வேலை கிடைக்காவிட்டாலும் ஒரு அழகான பெண்ணைப் பார்த்து
"நீ என் காதலியானால்!" என்று கேட்டு விட்டோமே என்ற ஒரு வித இன்பக் கிளுகிளுப்பு அவனை ஆட்கொண்டது.
இந்த வேலையை நம்பியா கணக்காளருக்குப் படித்தோம் என்று தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டான். இது இல்லாவிட்டால் வேறொன்று!
இரண்டு நாட்களின் பின் அந்த நிறுவனத்தில் இருந்து அவனுக்கு கடிதம் ஒன்று வந்திருந்தது.
"எங்கள் நிறுவனத்தின் நிதிக் கட்டுப்பாட்டாளராக நீங்கள் தோந்தெடுக்கப் பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்!"
புதிய எம்டியின் முத்து முத்தான கையெழுத்தைப் பார்த்து விட்டு
"உன் நிழலுக்கெல்லாம் குடைபிடிப்பேன்" என்று சந்தோஷ மிகுதியால் துள்ளிக் குதித்தான் விநோத்;.
Comments
Post a Comment