Valentine- கண்ணாடிக் காதல்

 

கண்ணாடிக் காதல்


(குரு அரவிந்தன்)


அவளைக் கண்ட நாளில் இருந்து அவள் மீது ஏதோ ஒரு வகை ஈர்ப்பு எனக்குள் ஏற்பட்டிருந்தது. அவள் பாடசாலைச் சீருடையில், காலையில் மலர்ந்த புத்தம் புதிய ரோஜாபோல அழகாக இருந்தாள். 

அழகு மட்டுமல்ல, அந்த சிரித்த முகத்தில்கூட ஒருவித வசீகரமும், செல்வச்செழிப்பும் இருந்தது. நான் படித்த பாடசாலையிலே, எனது வகுப்பிற்கு அவள் புதிய மாணவியாக வந்து சேர்ந்தபோது எனக்குள், என்னை அறியாமலே ஒருவித புத்துணர்வு ஏற்பட்டிருப்பதை நான் உணர்ந்தேன். 

என்னில் ஏற்பட்ட மாற்றத்தை மற்றவர்களும் அவதானித்து இருக்கிறார்கள் என்பதுகூட எனக்குக் காலம் தாழ்த்தித்தான் அவர்கள்மூலம் தெரியவந்தது. 

என் காதலை எப்படி அவளிடம் தெரிவிப்பது என்று எனக்குள் எப்பொழுதும் தயக்கமாகவே இருந்தது. அடிக்கடி பாடம் சம்பந்தமாக எழும் சந்தேகங்களை நாங்கள் இருவரும் சந்திக்கும்போது கேட்டுத் தெளிந்து கொள்வோம். 

காலம் தழ்த்தாது எப்படியாவது அவளிடம் என்காதலைச் சொல்லிவிடும்படியும், காலம் தாழ்த்துவதால் அவளை இழந்துவிடும் மிகப்பெரியதொரு ஆபத்து இருப்பதாகவும் எனது நண்பன் விளக்கம் கொடுத்தான். அதனால் என்னை நானே தயார் படுத்திக் கொண்டிருந்தேன். 

ஒரு நாள் இப்படித்தான் சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட்டு பொது விடயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது, 

‘உங்களுக்கு பாய்பிரண்ட் இருக்கா?’ என்று அசட்டுத்துணிவில், திடீரென அவளிடம் கேட்டுவிட்டேன்.

என்னுடைய அதிரடிக் கேள்வியை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 

அவள் முகம் சட்டென்று சிவந்தது. எதிர்பாராத எனது கேள்வி, அவளைப் பெரியதொரு சங்கடத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். பதில் எதுவும் சொல்லாது மௌனம் சாதித்தாள்.

‘சொறி, கேட்கவேண்டும்போல இருந்திச்சு, அதுதான் அவசரப்பட்டுக் கேட்டுவிட்டேன்!’ என்று சொல்லிச் சமாளித்தேன்.

‘ஏன் கேட்கிறீங்க..?’ என்றாள், சிறிது நேர மௌனத்தின்பின்.

‘இல்லை ஒரு ஆர்வத்தில் கேட்டேன். அவ்வளவுதான். இப்போ நான் கேட்டதை எல்லாம் மறந்திடுங்க, நாங்க வேறு ஏதாவது பேசுவோமே! என்றேன்.

‘என்னிடம் என்ன பதிலை எதிர்பார்த்து நீங்க இப்படிக் கேட்டீங்க?’ என்று நிதானமாக அவள் கேட்டதில் எனக்குள் ஒருவிததெம்பு வந்தது.

‘இருக்கு என்று சொன்னால் எட்டநிற்பேன், இல்லை என்றால் கிட்டவருவேன்!’ என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினேன்.

வானத்தை உலுப்பி விட, சிதறும் பூம்பனிபோல அவள் கலகலவென்று சிரித்தாள். ஏன் சிரிக்கிறாள் என்பது புரியாமல் எனக்குள் தவித்த நான்,

‘ஏன் சிரிக்கிறீங்க..?’ என்றேன்.

‘இல்லை, நீங்க ரொம்ப முன் ஜாக்கிரதையாக இருக்கிறீங்க!’ என்றாள்.

‘ஆழம் தெரியாமல் காலை விடக்கூடாதல்லவா, அதுதான்!’ என்றேன்.

‘உங்களுடைய துணிவை நான் பாராட்டுகின்றேன், ஆனால் எனக்கு ஏற்கனவே  ஒரு பாய்பிரன்ட் இருக்கிறார்!’ என்று சொல்லிவிட்டு சாதாரணமாய் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.

காதலன் இருக்கிறானா? கற்பனையில் நான் கட்டிவைத்த கண்ணாடி மாளிகை, சட்டென்று உடைந்து சிதறிவிட்ட உணர்வு எனக்குள் ஏற்பட்டது.

‘என்ன இது, உங்க முகம் இப்படி மாறிப்போச்சு..? எனக்குப் பிடித்தமான ஒருவரை நான் காதலிக்கிறேன், அது தப்பா?’ என்று கேட்டாள்.

‘இல்லை, இல்லையே! தாராளமாய் காதலிக்கலாம்!’ நான் அவசரமாக என்னைச் சமாளித்துக் கொண்டு மறுத்தேன். 

காதல் ஒன்றுதான் இலவசமாக, மற்றவரின் விருப்பம் இல்லாமலே செய்யக்கூடியது! 

என்னுடைய முகம் போன போக்கை அவள் கவனித்திருக்கலாம்.  மேற்கொண்டு அவளிடம் என்ன பேசுவது என்று எனக்குப் புரியவில்லை. ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகக் கேட்டேன்,

‘உங்க பாய்பிரண்ட்டும் இங்கேதான் இருக்கிறாரா?’

‘ஆமா!’ என்றாள்.

‘ஸ்மாட்டாய், அழகாய் இருப்பாரா..? கொஞ்சம் பொறாமைப்பட்டேன்.

‘ஆமா!’ என்றாள்.

எனக்கே, அவளிடம் முட்டாள் தனமான கேள்விகள் கேட்பதுபோல இருந்தது. எனவே மேற்கொண்டு கேள்விகள் கேட்பதை நிறுத்திக் கொண்டேன்.

ஆனாலும் மனம் சஞ்சலப்பட்டது. இந்த அழகி விரும்பும் அந்த அதிஸ்டசாலி யாராய் இருக்கும்? நான் அழகு என்று நினைத்த, எனக்குத் தெரிந்த ஒவ்வொரு பையன்களையும் மனக்கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்திப்பார்த்தேன்.

 அவளது தெருவில் வசிக்கும், நடிகர் சாருகான் போன்ற தோற்றமுடைய சுந்தரா, எங்கள் வகுப்பில் படிக்கும், எல்லாப் பாடத்திலும் நிறையப் புள்ளி வாங்கும் ஸ்ரீராமா, அல்லது தினமும் ஆடம்பரமாய் உடையணிந்து, புள்ளட்டில் பாடசாலைக்கு வந்து இறங்கும் மோகனா? இவர்களில் யாராய் இருக்கும்? நான் யோசனையில் ஆழ்ந்தேன்.

‘என்ன யோசிக்கிறீங்க?’ என்றாள்.

‘உங்க பாய்பிரண்டோட படத்தைக் கொஞ்சம் காட்டுங்களேன்! இனிமேலும் என்னால் பொறுக்கமுடியாது என்ற நிலையில் அவளிடம் ஆர்வத்தோடு கேட்டேன். 

‘எங்க வீட்டிலே தெரிந்தால் ரகளையாய்ப் போயிடும், அதனாலே படத்தைக் கையோடு கொண்டு திரியறதே இல்லை. அடுத்த முறை உங்களைச் சந்திக்கும்போது கொண்டு வந்து காட்றேனே!’ என்றாள். 

‘மறந்திடாதீங்க, கட்டாயம் காத்திட்டிருப்பேன்! என்றேன்.

‘ஆமா, இவ்வளவு கேள்வியும் என்னிடம் கேட்கிறீங்களே, உங்களை நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?’ என்றாள்.

‘கேளுங்களேன்..!’ என்றேன்.

‘உங்களுக்கு கேள்பிரண்ட் இருக்கா?’ சிரித்துக் கொண்டே கேட்டாள்.

எனக்கு ரோஷம் பொத்திக்கொண்டு வந்தது. அவளுக்கு பாய்பிரண்ட் இருக்கலாம் என்றால் எனக்கேன் கேள்பிரண்ட் இருக்கக்கூடாது? 

அவளைவிட நான் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை என்று அவளுக்குக் காட்டவேண்டும் என்ற வைராக்கியத்தில் தயங்காமல் ‘ஆமா..!’ என்றேன்.

‘நான் நம்பமாட்டேன்..!’ என்றாள்.

‘ஏன்?’ என்றேன்.

‘கேள்பிரண்ட் வைத்திருக்கிற மூஞ்சி மாதிரித்தெரியலையே!’ என்று சொல்லி விட்டுப் பலமாகச் சிரித்தாள். 

என்னைச் சீண்டுகிறாள் என்பது எனக்குப் புரிந்தது.

‘நாம்பாவிட்டால் விடுங்க!’ என்றேன் சற்றுக் கடுமையாக.

‘எனக்கும் உங்க கேள்பிரண்ட் படத்தைப் பார்க்க ஆசையாய் இருக்கு, கொண்டு வந்து காட்டுவீங்களா?’ என்று தயவாகக் கேட்டாள்.

‘சரி!’ என்று தலை அசைத்துவிட்டு இருவரும் பிரிந்தோம். 

இல்லாத கேள்பிரண்டின் படத்திற்கு நான் எங்கே போவது?

ஏதாவது சொல்லிச் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கையோடு சென்றேன். அவள் என்னிடம் படத்தைக் கேட்குமுன், நானே முந்திக்கொண்டு அவளிடம் பாய்பிரண்டின் படத்தைக் காட்டும்படி கேட்டேன்.

‘படத்தைக் காட்டுவேன் ஆனால் ஒரு கண்டிஷன்’ என்றபடி அவள் கைப்பையில் உள்ள தனது பர்சை எடுத்தாள்.

‘என்ன சொல்லுங்க..?’ படத்தைப் பார்க்கும் ஆவலில் கேட்டேன்.

‘காட்றேன், இதைப்பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது, உங்களுக்குத் தெரிந்தவர்தான், அவரை உங்களக்குப் பிடிக்குமோ, பிடிக்காதோ எனக்குத் தெரியாது. இதனாலே எங்க பிரண்ட்ஷிப் எந்தக் காரணம் கொண்டும் பாதிக்கப்படக்கூடாது, சரியா?’ என்றாள்.

இவள் என்ன பெரிதாய் பீடிகை போடுகிறாள் என்ற எண்ணத்தோடு தலையசைத்தேன்.

‘இவர்தான் என்னுடைய பாய்பிரண்ட!’ என்றபடி பார்சைத் திறந்து எனது முகத்திற்கு முன்னால் நீட்டினாள். யாராய் இருக்கும்? எனக்குக் கிடைக்காத அந்த அதிஸ்டம் யாருக்குக் கிடைத்திருக்கும்? என் ஊகம் சரிதானா? பொறாமையில் நெஞ்சம் படபடத்தது.

ஆவலோடு எட்டிப் பார்தேன். ஒரு கணம் குழம்பிப்போனேன்.

போடடோவிற்குப் பதிலாக, பாதரசம் பூசிய முகம் பார்க்கும் சிறிய கண்ணாடி ஒன்று பர்சுக்குள்ளே இருந்தது. அதிலே எனது முகம் குளோசப்பில் பளபளத்தது.

வார்த்தைகள் வராமல் தடுமாற, அதிர்ச்சியோடு அவளை நிமிர்ந்து பார்த்தேன்.

‘இவர்தான் என்னோட பாய்பிரண்ட்! பிடிச்சிருக்கா..?’ என்றவளின் முகம் குங்குமமாய்ச் சிவந்துபோகச் சட்டென்று தலை குனிந்தாள்.

ஒன்றும் சொல்லாமல் பர்சை மூடி, அவளிடம் திருப்பிக் கொடுத்தேன். எனக்கு வியர்த்துக் கொட்டியது. அதிர்ச்சியில் இருந்து மீளச் சிறிது நேரம் எடுத்தது.

பர்சை என்னிடம் வாங்கியவள்,

‘இது ஒருதலைக்காதல்தான், நான்தான் அவரை விரும்பிறேனேதவிர அவர் என்னை விரும்பிறாரோ எனக்குத் தெரியாது! என்று சொல்லிக் கொண்டே என்னை ஏக்கத்தோடு பார்த்தாள். 

என்னிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால், தன்னைச் சமாளித்துக்கொண்டு,

‘எங்கே உங்க கேள்பிரண்டோட படத்தைக் கொடுங்களேன் பார்ப்போம்’ என்றாள்.

‘படமா, இப்ப உங்ககிட்டக் கொடுத்தேனே!’ என்றேன்.

‘எப்போ..?’ என்றாள்.

‘பார்கலையா? அந்தப் பர்சில் வைத்துக் கொடுத்தேனே, கொடுங்க!’ என்று அவளிடம் பர்சை வாங்கி பிரித்துக் காட்டினேன்.

பார்த்தவளின் விழிகள் ஆச்சரியத்தோடு விரிய, மெல்லச் சிரித்தாள். அவளது முத்துப் பற்கள் அதே கண்ணாடியில் பளபளத்தன.

‘நானா..?’ என்றாள். 

‘ஆமா.!” என்றதும், அவள் மகிழ்ச்சி தாங்கமுடியாமல் கண்ணாடியைத் திருப்பித் திருப்பிப்பார்த்தாள். 

கவனம்..! என்றேன்.

‘ஏன்..?’ என்றாள்.

‘காதல் எங்கேயும், எப்படியும், யார்மீதும் வரலாம்! இது கண்ணாடிக் காதல் என்பதால் உடைந்து போகாமல், கவனமாகப் பாதுகாக்கும் பொறுப்பு எங்கள் இருவருக்குமே உண்டு!’ என்றேன்.

அதை ஆமோதிப்பதுபோல் அவள் அழகாய்ச் சிரித்தாள்.


 

 

Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper