Valentine-காந்த(ள்)மலர்
காந்த(ள்)மலர்
(குரு அரவிந்தன்)
அவன் தடியை ஊன்றிக் கொண்டு மெல்ல நடந்தான். மாவீரர் துயிலும் மண்டபவாசல் படிகளில் ஏறும்போது அவள், அவனுக்குக் கைகொடுத்து உதவி செய்தாள்.
மாவீரர் குடும்பம் என்பதால் கூடிநின்றமக்கள் விலகி வழிவிட்டார்கள். ஆனாலும் அவர்கள் முன்னே செல்லாமல் வரிசை ஒழுங்கின் படியே, ஒழுங்காய் நின்று, உள்ளே சென்றார்கள். இருவர் கையிலும் நிறைய கார்த்திகைப்பூ வைத்திருந்தனர். உள்ளே சென்று முழங்காலில் மண்டியிட்டு பூக்களால் மாவீரரை அர்ச்சித்தனர்.
அவள் மாவீரராகிவிட்ட தனது உடன்பிறப்பையும் நினைத்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். சுதனோ, பெரிதாக குலுங்கி அழுததாகத் தெரியவில்லை. மனதைக் கல்லாக்கிக் கொண்டு இருந்திருக்கலாம். ஆனாலும் கண்களில் நீர் பனித்திருந்தன. கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு இருவரும் மெல்ல எழுந்து வாசலை நோக்கி நடந்தனர்.
பனிக்குளிரில் உடம்பு மெலிதாய் சில்லிட்டது. சுதன் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இரவு, பகல் பாராது மழை, வெய்யில், பனி என்று இப்படி எத்தனை சக்திகளோடு, மண்ணைக் காப்பதற்காக தமிழீழமண்ணில், கொண்ட கடமை ஒன்றே கண்ணாய் அவன் போராட்டம் நடத்தியிருக்கிறான். ஒரு போராளிக்குரிய ஒழுக்கம், கட்டுப்பாடு போன்றவை இன்னமும் அவனிடம் குடியிருந்தன.
கையிலே வைத்திருந்த கார்த்திகைப் பூவைப் பார்த்து அதன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவன்,
‘காந்தள்..!’ என்று வாய்க்குள் முணுமுணுத்தான்.
‘என்ன..? கூப்பிட்டீங்களா..?’ என்றாள் அவள் ஆச்சரியமாய்!
அவன் சட்டென்று நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
‘இல்லை, இந்த அழகான பூவைச் சொன்னேன்’ என்றான்.
‘அதுதானே பார்த்தேன்..!’ என்பதுபோல அவள், அவனை ஒரு பார்வை பார்க்க, அவன் சிரித்தவிட்டு, கையிலே வைத்திருந்த அந்த மலரை அவளிடம் நீட்டினான். அவள் ஆசையோடு அந்த மலரை வாங்கிக் கொண்டாள்.
சின்ன வயதிலிருந்தே அவன் அவளைக் ‘காந்தம்’ என்றுதான் அழைப்பான். அவன் வேடிக்கையாக அவளை அப்படி அழைத்தாலும், அவளது முழுப்பெயர் காந்தமலர். ஏன் பெற்றோர்கள் அவளுக்கு அந்தப் பெயர் வைத்தார்கள் என்பது அவனுக்குத் தெரியாது.
அவனுக்கு அவள் முறைப் பெண், அதாவது அத்தைமகள். முறைப் பெண் என்பதால் மட்டும் அவன் அவளைத் திருமணம் செய்யவில்லை, அதைவிட மேலான ஒரு காரணமும் அவனிடம் இருந்தது.
‘ஆயிரக்கணக்கில் கார்திகைப் பூக்களை குறுகிய காலத்தில் இங்கே எடுப்பிப்பதென்பது பெரியசாதனை இல்லையா காந்தம்? இதையே தமிழீழமண்ணில் பயிரிட்டால், அவர்கள் அன்னிய செலவாணியை அங்கே மிச்சம் பிடிக்கலாமே!’ அவன் கேட்டான்.
‘ஆமாம்..!’ என்று தலையசைத்தவளுக்கு கார்த்திகைபூ என்றதும் பழைய நினைவுகள் வந்தன. சின்னவயதிலே இவர்கள் எல்லோரும் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள். சுதனின் பக்கத்து வீட்டில்தான் இவர்கள் இருந்தார்கள். அவளுக்கு ஒரு அண்ணா, பெயர் மாறன், அப்புறம் ஒரு தம்பி. இவள் ஓரே பெண்குழந்தை என்பதால், வீட்டிலே கொஞ்சம் செல்லம் அதிகம். அண்ணா மாறனுக்கும் சுதனுக்கும் ஒரே வயது என்பதால், அனேகமாக எப்பொழுதும் ஒன்றாகவே திரிவார்கள்.
பக்கத்திலே இருந்த ஈச்சங்காட்டிற்கு ஒருநாள் ஈச்சம்பழம் பறிக்கச் சென்றபோது இவளும் அவர்களுடன் சென்றாள். நீண்ட தடி ஒன்றில் கொக்கிச்சத்தகத்தைக் கட்டி, மிகவும் கவனமாக சிவந்து கறுத்த, பதமான ஈச்சங்குலையை வெட்டவேண்டும். இயற்கையாய்க் கனிந்திருந்தால் அதன் ருசியே தனி! கள்ளிப் பற்றைக்கு அருகே உள்ள ஈச்சமரத்தில் இவர்கள் ஈச்சங்குலையை வெட்டிக்கொண்டிருக்க, அந்தப் பற்றைக் குள்ளிருந்து எட்டிப்பார்த்த மிக அரிதாகப் பூக்கும் கார்த்திகைப்பூ அவள் கண்ணில் பட்டது. அந்தப்பூவைக் கண்டதும் அதைப் பறித்துத் தரும்படி அவள் அண்ணனிடம் அடம்பிடித்தாள்.
அண்ணன் மாறன் மறுத்துவிடவே, சுதன், அந்தப்பூவைக் கொஞ்சம் பறித்துக் கொடுக்கிறியா..? சுதனிடம் ஆசையோடு கேட்டாள்.
சுதனோ கள்ளிமுள்ளு கீறாமல் மிகவும் கவனமாக அந்தப் பூவைப்பறித்து அவளிடம் கொடுத்தபோது அந்த மலர் தற்செயலாக அவளின் கண்ணுக்குள்ளே பட்டுவிட்டது.
கார்த்திகைப்பூவின் மகரந்தம் கண்ணிலே பட்டால் பார்வை போய்விடும் என்று யாரோ அவளுக்குப் பயம் காட்டியிருந்ததால், காந்தமோ கண்ணைக் கசக்கி, ‘எனக்குக் கண்தெரியவில்லையே..!’ என்று பெரிதாகப் புலம்பி, ஆர்பாட்டம் பண்ணி ஓவென்று அழத் தொடங்கிவிட்டாள்.
பயந்துபோன மாறன் ‘அழாதே..!’ என்று எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் அவள் கேட்பதாயில்லை. வீட்டிற்குப்போய் கண்ணைக் கழுவிவிட்டால் எல்லாம் சரியாகிடும்..! என்று சொல்லி, வேறுவழியில்லாமல், அடம்பிடிக்கும் அவளது கையைப்பிடித்து, சுதன்தான் அவளை வீடுவரை அழைத்துச் சென்றான்.
வீட்டு வாசலில் வந்ததும் அவள் சுதனின் கையை உதறித் தள்ளிவிட்டு ‘ஏமாந்து போனியா மச்சான், கையைப் பிடிச்சிட்டியே..?’ என்று சொல்லி பெரிதாகச் சிரித்துக் கொண்டு வீட்டிற்குள்ளே ஓடிவிட்டாள்.
தன்னை அவள் ஏமாற்றிவிட்டாள் என்றதும் சுதனுக்கு கோபம் பொத்திக் கொண்டு வந்தது. ‘என்றைக்காவது ஒரு நாள் என் கையைப் பிடிச்சு மணக்கோலத்தில் அக்கினி சாட்சியாய் சுற்றி வருவாய்தானே சுதன்..!’ என்று அவள் அவனைப் பார்த்து முன்பு ஒருநாள் கேலிசெய்தது அவனுக்கு ஞாபகம் வந்தது.
எப்போதாவது ஒருநாள் வழமாய் மாட்டிக் கொள்வாள், அப்போது பார்த்துக் கொள்கிறேன் என்று கறுவியபடி திரும்பினான் சுதன்.
சிவமலர், அரியமலர் போல காந்தமலர் என்றால் அதுவும் ஒரு பெண்ணின் பெயர் என்றுதான் அவன் அப்போது நினைத்துக் கொண்டிருந்தான். ஒருவேளை எல்லோரையும் காந்தம்போல் கவர்ந்திழுக்கும் சக்தி கொண்ட அவளுடைய விழிகளும், எப்பொழுதும் சிரித்தபடியே இருக்கும் அவளது சிவந்த முகமும் அந்தப் பெயர் நிலைத்ததற்கொரு காரணமாய் இருந்திருக்கலாம்.
அவளை இவன் காந்தம் என்று அழைக்கும்போதெல்லாம் அவளுக்குக் கோபம் பொத்திக் கொண்டுவரும்.
‘நீ மட்டும் என்னவாம், உமாசுதன்! உமா என்று பெட்டைச்சிப் பெயரைத்;தானே முன்னாலே வைத்திருக்கிறாய்..!’ என்று அவள் ஒருநாள் திருப்பிக் கேலிசெய்ததில் இவன் உடைந்து போனான்.
அன்றிலிருந்து, யார் கேட்டாலும் தனது பெயரை ‘சுதன்’ என்றுதான் அவன் சொல்லப் பழக்கப்படுத்திக் கொண்டான். அவளை எப்படியாவது ஏட்டிக்குப் போட்டியாய் பழிவாங்க வேண்டும் என்று அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் அவனுக்குக் கிடைக்கவே இல்லை.
அந்த சம்பவத்திற்குப் பிறகு சிலநாட்களாக அவள் வீட்டைவிட்டு வெளியே வரவேயில்லை. என்ன காரணம் என்று சுதனுக்கும் புரியவில்லை. அவளைப்பற்றி மாறனிடம் கேட்கத் துணிவும் இல்லை. வீட்டிலே அவளின் பெயர் அடிபட்டது. அவள் வயதிற்கு வந்து விட்டதாகப் பேசிக் கொண்டதும் அவன் காதில் விழுந்தது!
அப்புறம் முதன் முதலாய் சுதனைக் கண்டபோது அவள் நிறையவே வெட்கப்பட்டாள். முகத்தில் ஒரு பொலிவு தெரிந்தது. அடக்கமாய், அமைதியாய் நடந்தாள். இது நம்ம காந்தமா..? என்று சுதன் ஆச்சரியப்பட்டான்.
ஒருநாள் காந்தத்தின் அண்ணன் மாறனைக் காணவில்லை என்று சுதனின் வீட்டிற்கு அவள் தேடி வந்தபோது, அங்கே சுதனும் தொலைந்து போயிருந்தான். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்கள் என்று ஊரிலே கதை பரவியது.
சிலநாட்களின்பின் இராணுவத்தின் தேடுதல் நடவடிக்கையின் போது இராணுவத்தினர் காந்தமலரின் தம்பியையும் பிடித்துச் சென்றுவிட்டார்கள். எங்கே கொண்டு சென்றார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. முதலையின் வாயில் அகப்பட்ட இரைபோல, அப்புறம் தம்பி வீடு திரும்பி வரவேயில்லை.
தொலைந்து போனவனை இராணுவ முகாம்முகாமாய் தேடித்தேடிக் காந்தமலரின் பெற்றோரும் களைத்துப் போயினர். இரண்டு பிள்ளைகளையும் இழந்த நிலையிலே, எந்தக் குழியில் மகன் புதைக்கப்பட்டானோ என்ற விடைதெரியா அவலநிலையில் மனமுடைந்து போயிருந்த அவர்களும் நோய்வாய்ப்பட்டு சீக்கிரமே இறந்து போயினர்.
பட்டகாலில் படும் என்பதுபோல காந்தமலரின் குடுபத்தில் ஏற்பட்ட இழப்புகளால், பருவப்பெண்ணான அவள் தனித்துப் போயிருந்தாள். ஆனாலும் மனம் தளராது, அண்ணன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில் காலத்தை ஓட்டினாள்.
ஒருநாள் தற்பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, இராணுவத்திற்கும் போராளிகளுக்கும் ஏற்பட்ட சண்டையில் காந்தமலரின் அண்ணன் மாறன் மாவீரனாகிவிட்டான்.
சுதனோ காலில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களோடு உயிர் தப்பிக் கொண்டான். உண்மையிலேயே சுதனை நோக்கித்தான் எதிரி சுட்டான். சுதனை நோக்கிப் பறந்த துப்பாக்கி ரவையை, அருகே நின்ற மாறன் சட்டென்று குறுக்கே பாய்ந்து தன் மார்பிலே வாங்கிக் கொண்டான். கண்மூடி முழிக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்தவிட்டன. உடுக்கை இழந்தவன் கைபோல, சுதனின் உண்மையான நட்பிற்காக மாறன் தன்னையே பலி கொடுத்தபோது, அந்தநட்பின் வலிமையைச் சுதன் புரிந்து கொண்டான். காலில் ஊனமுற்றிருந்தாலும் மாறனின் குடும்பத் திற்குத் தன்னாலான உதவியைச் செய்யவேண்டும் என்று அப்போதே அவன் முடிவெடுத்துக் கொண்டான். முடிவெடுத்தது மட்டுமல்ல, சந்தர்ப்பத்திற்காகவும் அவன் காத்திருந்தான்.
கடைசியாக இருந்த ஒரு உறவையும் இழந்த நிலையில் காந்தமலர் செய்வதறியாது திகைத்தாள். உதவியின்றித் தனித்துப்போன அவளை, அண்ணன் மாறனின் மரணம் மேலும் விரக்;தி அடையவைத்தது.
கார்த்திகை மாதத்தில் ஒருநாள் காலில் காயத்தோடு படுக்கையில் இருந்த சுதனைத்தேடி காந்தமலர் வந்தாள். பொறுப்பதிகாரியோடு பேசிக்கொண்டிருந்தபோது, ‘சுதன் விரும்பினால் அவளுடன் ஊருக்கு திரும்பிச் செல்லலாம்’ என்று பொறுப்பதிகாரி சொல்லவே, காந்தமலர் சுதனைப் பிடிவாதமாய் ஊருக்கு அழைத்துச் சென்றாள்.
மழை விட்ட வானம், சற்று வெளித்திருந்தது. பேருந்து வண்டியை விட்டு இறங்கி ஒற்றையடிப் பாதைவழியாக அவர்கள் கிராமத்தில் உள்ள வீடு நோக்கி நடந்து சென்றார்கள். அங்காங்கே பாதையில் தண்ணீர் தேங்கி நின்றது. நீண்ட நாட்களின்பின் பிறந்த மண்ணைத் தரிசித்த சந்தோஷத்தில் இருந்த சுதன், திடீரென பாதிவழியில், ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு அருகே இருந்த கள்ளிப்பற்றையை நோக்கி மெல்ல நெண்டிக் கொண்டே நடந்தான்.
பற்றைக்கருகே சென்றவன், தனது ஊன்றுகோலால் அங்கே மலர்ந்திருந்த கார்திகைப்பூவைப் பறித்து, அந்த மலரை அவளிடம் கொண்டு வந்து பக்குவமாய் நீட்டினான்.
காலிலே காயப்பட்டு நடக்க முடியாத நிலையிலும் அவளுக்குப் பிடித்தமான கார்த்திகைப்பூவை அவன் கஷ்டப்பட்டு பறித்துக் கொண்டு வந்து அவளுக்கு நீட்டியபோது, கல்லுப்போல் இருக்கும் அவனது இதயத்திலும் ஈரம் இருப்பதை நினைத்து அவள் உணர்ச்சி வசப்பட்டுப்போனாள்.
‘சுதன், என்ன இது..?’ என்றாள் இன்ப அதிர்ச்சியில்!
‘உனக்கு இந்த மலர் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்..!’ சிரித்துக் கொண்டே சுதன் அந்த மலரை அவளிடம் நீட்டினான்.
‘இது என்ன வலன்டைன் பூவா?’ ஏக்கத்தோடு கேட்டாள்.
‘அப்படியே நினைச்சுக் கொள்ளேன்!’ என்றான் மாறன்.
நீ எதைக் கொடுத்தாலும் எனக்கு அது வலன்டைன்தான் சுதன்..! எனக்கு நீ எப்பொழுதுமே துணையாய் இருப்பாய் என்ற நம்பிக்கையில்தான் நான் இப்போ உயிர்வாழ்கிறேன்! கண்கள் பனிக்க அவனை நன்றியோடு பார்த்தாள்.
என்ன சொல்கிறாய் காந்தம்.? உனக்கென்ன பைத்தியமா? நான் ஊனப்பட்டவன்! அவன் அதிர்ச்சியோடு தயங்கினான்.
அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை சுதன், உன்னைத் தவிர வேறு யாரையுமே நான் திருமணம் செய்யப்போவதில்லை! தடுமாற்றம் எதுவும் இல்லாமல், தீர்க்கமாய் பதிலளித்தவள், தாய்மண்ணையே தாங்கி நின்ற இந்தக் கைகளை நான் தாங்கமாட்டேனா?
அருகே வந்து அவன் கைகளை எடுத்து தன் தோளிலே தாங்கிக் கொண்டு நடந்தாள்.
வேறு யாரையுமே திருமணம் செய்ய அவள் மறுத்து விட்டதால், அப்புறம் அவளுக்கு அவன், அவனுக்கு அவள் என்று ஒருவருக்கு ஒருவர் துணையானார்கள். தினமும் மலரும் காந்தள் அவனுக்குத் துணையானத்தில் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
காதல் உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதை எங்கே, எப்போ, எப்படி வெளிக்காட்டுகிறார்கள் என்பதில்தான் அதன் வெற்றி தோல்வி தங்கியிருக்கிறது.
ஊனம் என்பது உடலுக்கு இல்லை, உள்ளத்தில்தான் இருக்கிறது. புரிந்துணர்வு இருந்தால், மனிதரை மட்டுமல்ல தாய்மண்ணைக்கூட உங்களால் நேசிக்கமுடியும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டால் எல்லோருக்கும,; எல்லா நாட்களும் காதலர் தினமே!
Comments
Post a Comment