Valentine-கண்ணன் என் காதலன்
கண்ணன் என் காதலன்
(குரு அரவிந்தன்)
வெற்றிமணி ஜனவரி 2017
அவனுடைய பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் அவனை முதல் முதலாகப் பார்த்தபோது அவன் மீது எனக்கு ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். காரணம் அவனிடம் ஏதோ ஒருவித கவர்ச்சி இருந்தை மனசு ஏற்றுக் கொண்டதாலோ என்னவோ அவனை இன்னும் ஒரு தடவையாவது பார்க்க வேண்டும் என்பது போலக் கண்கள் அடிக்கடி அவனைத் தேடியது.
ஆனால் அந்த இனிய சுகத்தை நீடிக்க விடாமல் நான் கண்ட காட்சி என் மனதை நோகவைத்தது. அச்சம்பவத்தால் எவ்வளவு தூரத்திற்கு அவனிடம் கவர்ச்சி ஏற்பட்டதோ அதே போல அவனிடம் எனக்கு எரிச்சலும் ஏற்பட்டது. அவனைச் சுற்றி என்னுடைய வயதை ஒத்த இரண்டு மூன்று பதுமவயதுப் பெண்கள் கதைச்சுச் சிரித்து அவனைச் சீண்டிக் கொண்டிருந்ததுதான் அதற்குக் காரணமாக இருக்கலாம் என்று நினைத்தேன்.
ராதையர் கொஞ்சும் ரமணனாக இருப்பானோ என்று நினைக்கத் தோன்றியது. ஆனாலும் புதியவளான நான் எப்படி அவனோடு பழகும் அவர்கள் மீது பழியைப் போடலாம் என்று எனக்குள் சமாதானப் படுத்திக் கொண்டேன்.
எனது சினேகிதியின் நடன அரங்கேற்றத்திற்குச் சென்ற போதுதான் அங்கே அவனைப் பார்த்தேன். இளம் பெண்களுடன் கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தவன் திடீரென மேடையில் தோன்றினான்.
அரும்பு மீசைகூட முளைக்காத சிரித்த முகம், பட்டு வேட்டி அணிந்து தங்க நிறத்தில் குர்த்தா அணிந்திருந்தான். கலைஞர்களின் அறிமுகத்தின் போது அவனது பெயர் ‘கனன்’ என்று சொல்லி சிறந்த வேணுகான இளம் கலைஞன் என்று அறிமுகம் செய்தனர். அவனும் சபையோர்க்கு ஒரு கும்பிடு போட்டு ஏனைய கலைஞர்களுடன் மேடையில் அமர்ந்தான். மேடையில் வண்ணவிளக்கு வெளிச்சம் சுற்றி வந்த போது நீலநிறம் அவன் மீது பட்டுத் தெறித்த போது கோபியர் கொஞ்சும் கண்ணன் போலவே காட்சி தந்தான். அவனுக்கு எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று ஆவலோடு காத்திருந்தேன்.
அவன் புல்லாங்குழலில் பாடலை இசைத்த போது நான் என்னை மறந்து கண்களை மூடி அந்த இசைக்குள் மூழ்கிப் போனேன். ஆனாலும் அவனிடம் இனம் தெரியாத பொறாமை கலந்த ஒருவித வெறுப்பு எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. காரணமே இல்லாமல் ஒருவனைப் பிடிக்கவில்லை என்றால் அதற்கு என்ன காரணமாக இருக்கும்?
அரங்கேற்றம் முடிந்ததும் எல்லா சினேகிதிகளும் அரங்கத்தின் பின் பகுதியில் ஒன்று கூடினோம். அப்பொழுதுதான் ‘மீட் மை பிறேன்ட் கனன்’ என்று அவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள் விதுரா.
ஹாய் என்று பதிலுக்குச் சொல்லிக் கையை நீட்டினேன், அவன் கும்பிட்டான்.
நாகரிகம் தெரியாத அகங்காரம் பிடித்தவனாக இருப்பான் போலும்! ஆனாலும் நான் சமாளித்துக் கொண்டு சினேகிதிகளுடன் கதையைத் தொடர்ந்தேன். அவனை உதாசீனப்படுத்த நினைத்தாலும் என் கண்கள் என்னை அறியாமலே அவனைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தன.
இரவு தூக்கத்திற்குச் செல்லும் போது அவனது நினைவு மீண்டும் வந்தது. யார் இவன், கனன் என்ற பெயர் எப்படி வந்தது. கனன் என்ற பெயர் எங்களில் யாருக்கும் இல்லையே, வடநாட்டைச் சேர்ந்தவனாக இருப்பானோ?
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; - அவன்தான் யாரெனச் சிந்தை செய்தேன்;
இனம் விளங்க வில்லை - எவனோ என்னகந் தொட்டு விட்டான்.
வினவக் கண்விழித்தேன்; - சகியே! மேனி மறைந்து விட்டான்;
மனதில் மட்டிலுமே - புதிதோர் மகிழ்ச்சி கண்டதடீ..!
தூக்கத்திலும் அவன் வந்தான். அந்தச் சிரிப்பு என்னை மயக்கி விட்டிருந்தது. என் தன்மான உணர்வு அவனைப் பற்றிச் சினேகிதிகளிடம் விசாரிப்பதைத் கட்டுப் படுத்தி வைத்திருந்தது.
‘ஓய்வு மொழிதலுமில்லாமல் - அவன் உறவை நினைத்திருக்கும் உள்ளம்;’ என்று பாரதியார் பாடியதுபோல, அவனை என் உள்ளம் விரும்பத் தொடங்கியிருப்பதை நான் உணர்ந்தேன்.
இளைஞர்கள் யாரைப் பார்த்தாலும் அவனே எங்கும் வியாபித்திருக்கிறான் என்பது போல உணர்ந்தேன். எங்கேயாவது அரங்கேற்றத்திற்கு அவன் புல்லாங்குழல் வாசிக்க வருவானா என்று காத்திருந்து நானும் அங்கெல்லாம் போகத் தொடங்கினேன். அன்று நான் மினுங்கல்கள் பதித்த கருநீலச் சேலை ஒன்றை அணிந்து அரங்கேற்றத்திற்குச் சென்றிருந்தேன்.
‘ஏஞ்சல் மாதிரி இருக்கிறாயடி மீரா’ என்று என் சினேகிதி விதுரா என்னைப் புகழ்ந்த போது அவனும் அருகேதான் நின்றான். ஆனாலும் நான் அவனைக் கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவேயில்லை.
அரங்கேற்றம் காணும் பெண் ஆடைமாற்றச் செல்லும் போது கிடைக்கும் நேரத்தில் இசைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டுவதுண்டு. அன்றும் அப்படி ஒரு இடைவேளையின் போது அவன் வேணுகானமிசைத்தான்.
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நட்சத் திரங்க ளடீ!
சோலை மல ரொளியோ - உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
நெஞ்சி லலைக ளடீ..!
செஞ்சுருட்டி ஏகதாளத்தில் சிருங்கார ரசத்தோடு அந்தப் பாடல் அருமையாக இசைக்கப்பட்ட போது சபையோர் கரவொலி எழுப்பினர். ஒருவேளை எனது கருநீலப் புடவையைப் பார்த்து விட்டுத்தான் அந்தப் பாடலை இசைத்தானோ என்று நினைத்தேன்.
இனியும் பொறுக்க முடியாது என்பதால் வெட்கத்தைவிட்டு விதுராவிடமே அவனைப் பற்றி விசாரித்தேன். அவனுடைய உண்மையான பெயர் கண்ணன் என்றும் ஆங்கிலத்தில் வாசிக்கும்போது நண்பர்கள் கனன் என்று சொன்னதால் அந்தப் பெயரே நண்பர்களிடம் நிலைத்து விட்டதாகச் சொன்னாள்.
எனது அரங்கேற்றத்திற்கும் இவனையே அழைக்க வேண்டும் என்று அப்போதே நிச்சயப் படுத்திக் கொண்டேன்.
கண்ணனைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தோடு அரங்கத்தின் பின் பக்கம் சென்றேன். வெளிச்சம் குறைவாக அந்தப் பக்கம் இருட்டாக இருந்தது, அங்கே கண்ணன் தனிமையில் நின்றான்.
என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லைக் கேட்டுவிட வேண்டும் என நினைத்தேன். வெட்கத்தோடு தலை குனிந்தபடி அருகே சென்றேன்.
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப் பேனோ டீ? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!
நான் ஒரு கணம் உறைந்து போனேன்.
எதிர்பார்காத நேரத்தில் அருகே கேட்ட ‘இச்’ என்ற அந்தச் சத்தத்தால் வெட்கப்பட்டுக் கன்னத்தைப் பொத்திக் கொண்டு சட்டென்று கண்விழித்துப் பார்த்தேன்.
என்னையே ஆச்சரியமாய்ப் பார்த்துக் கொண்டு படுக்கைக்கு அருகே தங்கை நின்று கொண்டிருந்தாள். சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு,
‘என்னடி?’ என்றேன்.
‘கனாக்கண்டியா அக்கா?’ என்றாள்.
‘ஆமாம், சுவீட்றீம், நீதான் அதைக் கலைசச்சிட்டியே’ என்றேன்.
‘தெரியுது, அதுதான் தூக்கத்திலே சிரிச்சியா?’ என்று சொல்லிக் கொண்டே வெளியேறினாள் தங்கை.
இப்பதான் நவீன தொழில் நுட்பவசதிகள் காதலுக்குத் தீனிபோட இருக்கிறதே, செல்போனை எடுத்து அரங்கேற்றத்தில் எடுத்த அவனது படத்தைக் குளோசப்பில் கொண்டு வந்தேன்.
என்னைக் கொல்லாமல் கொல்லும் அந்தப் பார்வை.. கண்ணா தூக்கத்தில் நீ மட்டும்தான் முத்தம் கொடுப்பியா? ம்..ம்..
காத்திருப் பேனோ.. டா? - இதுபார்,
கன்னத்து முத்த மொன்று!
இச்சென்று செல்போன் திரையில் அவனுக்கு ஒரு முத்தம் கொடுத்தேன்.
Comments
Post a Comment