Story- அவள் இவள் தானா?

 


அவள் இவள் தானா?

(குரு அரவிந்தன்)

அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு நிமிர்ந்த சுபத்ரா ஒரு கணம் அதிர்ந்து போய் அப்படியே நின்றாள். நவக்கிரகங்களைச் சுற்றி வந்து கும்பிட்டுக் கொண்டிருந்த அந்தச் ஜோடி அவள் பார்வையில் பட்டது தான் காரணம் என்பதை அருகே நின்ற அவளது கணவன் சுரேந்திரன் சட்டென்று புரிந்து கொண்டான்.

''என்ன சுபா அப்படியே மலைச்சுப்போய் நின்றுவிட்டாய்?''

''இல்லை, ஒன்றும் இல்லை.'' உறைந்துபோய் நின்ற சுபத்ரா அவசரமாக மறுத்தாள்.

''அந்த ஜோடியைப் பார்த்துத்தானே ஆப்செட்டாயிட்டாய்?''

''ஆமா!'' என்று யோசனையோடு தலையசைத்தாள்.

''ஏன்? உனக்கு அவங்களை ஏற்கனவே தெரியுமா?''

''தெரியும்! அவள் நான் முன்பு வேலை பார்த்த இடத்தில் என்னோடு கூட வேலை செய்தவள். ரொம்ப நல்ல பெண்!''

''ஜோடிப் பொருத்தம் நல்லாய்த்தானே இருக்கு, அவங்களுக்கு என்ன குறை?''

''அந்த அயோக்கியனோட இவள் எப்படி சிநேகிதமானாள் என்று தான் எனக்கு ஆச்சரியமாய் இருக்கு.'' 

''சினேகிதமா? அவங்களைப் பார்த்தால் கணவன் மனைவி போலத் தெரியுதே! கழுத்திலே கூட புதுத்தாலிக் கயிறு தொங்குதே!"

''தொங்கும், இப்படி எத்தனை பேர் கழுத்தைக் கயிற்றிலே தொங்க வைத்தானோ?"

''ஏன் சுபா, மரியாதையில்லாமல் ஒரு மாதிரிப் பேசறாய்?''

''பின்னே எப்படிச் சொல்வதாம் அவனைப் பற்றி? பொம்பளைப் பொறுக்கி'' ஆத்திரத்தில் முகம் சிவக்கத் திட்டித் தீர்த்தாள்.

''என்ன இது? கோயில் பிரகாரத்தில் நின்று கொண்டு அப்படியெல்லாம் கண்டபடி திட்டாதே சுபா!''

''இவன் செய்த அனியாயத்திற்குத் திட்டித் தீர்க்காமல் வேறு என்ன செய்வதாம்?''

''அப்படி நீ கோபப்படும் அளவிற்கு என்ன தான் பெரிதாய்ச் செய்திட்டான்?''

''ஒரு அப்பாவிப் பெண்ணோட நெருங்கிப் பழகிவிட்டு நடுவழியில் அவளை ஏமாற்றி விட்டு ஓடிப்போனது பெரிய தப்பில்லையா?''

''தப்புத்தான்! அதற்கேன் நீ கோபப்படுகிறாய்? யாரை அப்படி ஏமாற்றினான்?''

''என்;;;...ன? யாரை என்றா கேட்டீங்க? வேறு யாரையுமல்ல,   என்னோட குளோஸ் ஃபிரண்ட், ஒன்றாகப்படித்த கல்லூரித்தோழி ஒருத்தியைத்தான் ஏமாற்றினான்.''

''அப்படியா? ஏன்? என்னாச்சு உன்னோட ஃபிரண்டுக்கு?''

"பாவம்! காதல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியில் மனம் உடைந்து அதைத் தாங்க முடியாமல் தற்கொலை கூடச் செய்ய யோசித்தாள்."

'ஏன்? ஏன் தோல்வி ஏற்படணும்? அவங்க பெற்றோர் சம்மதிக்கவில்லையா?'

'கல்லூரிப் பருவத்தில் நாங்க கொஞ்ச பிரண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து யாராவது காதல் திருமணம் செய்வதென்றால் சீர் செனம், டொனே~ன் என்று கேட்பவர் களைத் திருமணம் செய்வதில்லை என்று எங்களுக்குள் ஒரு முடிவெடுத் திருந் தோம். அதனாலே சந்திரனின் பெற்றோர் அவளிடம் சீர் செனம் வேண்டும் என்று கேட்டபோது அவள் அதிர்ந்து போய்விட்டாள். அவளிடம் கொடுப்பதற்கு வசதி யிருந்தாலும் அவள் சீர் செனம் கொடுத்துத் திருமணம் செய்ய மறுத்து விட்டாள்."

"உன்னோட சிநேகிதியின் கலியாணம் நடக்காமற் போனதற்கு இதுதான் காரணமா?'

''ஆமா! காதலித்தவனே அவளுக்கு விலை பேசியபோது அவளால் அதைத் தாங்க முடியவில்லை. அதைத் தனக்கு ஏற்பட்ட அவமானம் என்றே நினைத்தாள். அதனால் அவள் மனமுடைந்து அவனைத் திருமணம் செய்ய ஒரேயடியாய் மறுத்துவிட்டாள்!''

''இப்போ புரியுது! ஏன் இந்த வெறுப்பு அவன் மேல் என்று!"

''ஆமா, அன்றிலிருந்து அவனைக் கண்டால், எங்கள் எல்லோருக்கும் அவன் மீது ஒரே வெறுப்பு"

'நல்ல காலம் நான் யாரையும் காதலிக்கவில்லை! என்னுடையது அரேஞ்ட் மரீட்ச்!' சுரேந்திரன் தனக்குள் சிரித்துக் கொண்டான். 

சுபா நவக்கிரகங்களைச் சுற்றிக் கும்பிட்டுக் கொண்டிருக்க, சுரேந்திரன் உண்டியலில் காசு போட்டுவிட்டு அவளுக்காகப் பிரகாரப் படிக்கட்டில் காத்திருந்தான். 

வழமையாக அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் பிரகாரபடிக்கட்டில் உட்கார்ந்துவிட்டு போகும் சுபத்திரா அன்று வழமைக்கு மாறாக விடுவிடு என்று வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

அவளது சினேகிதிக்கு நடந்ததை நினைத்து அவள் நிறையவே குழம்பிப் போயிருக்கிறாள் என்பது அவளது நடையிலே புரிந்தது. தனது தோழியை மட்டுமல்ல, இப்போது வேறு ஒருத்தியையும் அவன் ஏமாற்றுகிறான் என்பதை கண்முன்னால் கண்டதால்தான் அவள் நிலை குலைந்து போயிருக்கிறாள் என்று சுரேந்திரன் நினைத்தான். அவளிடம் வாயைக் கொடுத்து தேவையில்லாமல் ஏச்சுவாங்க அவன் விரும்பவில்லை என்பதால் அவனும் ஒன்றும் பேசாது மௌனமாகவே அவளோடு வீடு வந்து சேர்ந்தான்.

சுரேந்திரன் கேயிலில் நடந்த அந்த நிகழ்ச்சியை அத்துடன் மறந்துபோகவே முயற்சி செய்தான். ஆனால் கண்ணில் விழுந்த தூசிபோல மனதுக்குள் ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டேயிருந்தது. 

அன்று தற்செயலாக அவன் பயணம் செய்த ரயிலிலேயே கோயிலில் கண்ட அந்தப் பெண்ணும் அவனுக்கு எதிர்த்தாப் போல் இருந்த ஸீட்டில் அமர்ந்திருந்தாள். அங்கே அவளைக் கண்டதும் அவன் சட்டென்று உற்சாகமானான். பெண்களின் மனதைக் கிளறக் கிளற சுரங்கம் போல ஏதாவது கிடைத்துக் கொண்டேயிருக்கும் என்பதையும் அவன் அனுபவத்தில் நன்கு தெரிந்து வைத்திருந்தான். எனவே தான் அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளிடமிருந்து தனக்குத் தேவையான எதையாவது பிடுங்கலாமா என்று முயற்சி செய்து பார்த்தான்.  

"புரட்டாதி சனி அன்னிக்கு கோயில்லே உங்களைப் பார்த்திருக்கேன்!" சிநேகமான ஒரு புன்னகையோடு அவளிடம் பேச்சை மெல்ல ஆரம்பித்தான். 

''தெரியும்! நீங்களும் எங்களைப் பார்த்து ஏதோ உங்கள் மனைவியிடம் சொன்னதை நானும் அவதானித்தேன்''.

''அப்படியா? புரட்டாதிச் சனியன்று விரதமிருந்தீர்களோ?''

'ஆமா! விரதமிருந்தோம், அது தான் அன்று கோயிலுக்கு கணவரோடு வந்திருந்தேன்."

'உங்களோடு ஒன்றாக வேலை பார்த்த சுபத்ராவை உங்களுக்கு ஞாபகமிருக்கா?"

அவள் ஒரு நிமிடம் நினைவு படுத்திப் பார்த்தாள்.

சுபத்ராவா..? பார்க்கும் போதெல்லாம் பாரதியை நினைவில் கொண்டு வரும் அந்தச் சுட்டும் விழிச் சுடர், வட்டக் கருவிழிச் சுபத்ராவா? 

''ஆமா ஞாபகம் இருக்கே! நாங்க இரண்டு பேரும் கொஞ்சக் காலம் ஒரே கம்பனியிலே தான் ஒன்றாய் வேலை பார்த்தோம், அப்புறம் அவங்க விலகி வேறு கம்பனிக்குப் போயிட்டாங்க, நீங்க சுபத்ராவோட...?'' 

''ஹஸ்பன்ட்!'' 

''மிஸ்டர்..?'' 

''சுரேன்! நீங்க..?'' 

'ராதிகா! மிஸ்ஸிஸ் ராதிகா சந்திரசேகர்!"

'கிளாட் டு மீட் யூ!''

''அப்போ அன்னிக்கு உங்க கூட இருந்தது சுபத்ராவா? எங்கேயோ பார்த்த ஞாபகமாய் இருகேன்னு நினைச்சேன், ரொம்ப மாறிவிட்டா, ஆமா அவ எப்படி இருக்கா?"

''நல்லாயிருக்கா, எங்க கல்யாணம் பெரியவங்களாய்ப் பார்த்துச் செய்து வைத்ததுதானே!"

"அப்படியா..?' 

'உங்க கல்யாணமும் அரேஞ்ட் மரீட்ச்சா?'

'ஆமா, பெற்றோர் ஒழுங்கு செய்து வைத்த கல்யாணம் தான்! எங்க கல்யாணம் நடந்து ஆறு மாசமாச்சு, ஏன் கேட்கிறீங்க?"

'இல்லை, சந்திரனை உங்களுக்கு முன் கூட்டியே தெரியுமா?"

'சந்திரனா? நீங்க சேகரைத் தானே சொல்றீங்க? பெண்பார்க்க வரும்வரையும் அவரை எனக்குத் தெரியவே தெரியாது, இது அரேஞ்ட் மரீச்தானே!'

'நீங்க சேகர் என்றா சொல்லுவீங்க? அவனை ஊர்லை சந்திரன் என்று பெயர் சொல்லித்தான் அழைப்பாங்களாம்! பெயரிலேயும் மாறாட்டமா?"

'மாறாட்டமா? நீங்க என்ன சொல்லுறீங்க?"

'இல்லை ஆள்தான் மாறாட்டம் என்று பார்த்தால் பெயரிலும் மாறாட்டமா?"

'எனக்குப் புரியலை! ஏன் அப்படிச் சொல்கிறீங்க?"

'சந்திரனோட கடந்த கால வாழ்க்கை பற்றி உங்களுக்குத் தெரியுமா?" 

'எதைப் பற்றிக் கேட்கிறீங்க?" 

'சந்திரனோட பர்சனல் கரக்டரைப்பற்றி..?''

அவள் கொஞ்சம் நிதானித்தாள். இவன் எதையோ கிளறப்பார்க்கிறான், வார்த்தைகளை அளந்து பேசு என்று உள்மனம் எச்சரித்தது.

''இல்லை, எனக்கு அதை அறிவதில் ஆர்வமில்லை!"

'உங்களுக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம் ஆனால் அவன் ஒரு பெண்ணோடு ரொம்ப குளோசாய்ப் பழகிவிட்டு அவளை ஏமாற்றி விட்டு ஒடிப் போனவன் என்பதாவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டுமே!''

வேண்டும் என்றே அவள் முகத்திற்கு நேரே சொன்னதும், அவளது முகம் சட்டென்று கறுத்தது. ஆனாலும் மறுகணம் தன்னைத்தானே சமாளித்துக் கொண்டாள்.

'கல்யாணத்திற்கு முன், அவர் தனது கடந்த காலத்தைப் பற்றி எதையும் மறைக்காமல் என்னிடம் நிறையவே சொல்லியிருக்கிறார், ஆனால் அதை நான் பெரிது படுத்தவில்லை!'

'ஏன்? ஒரு அப்பாவிப் பெண்ணைக் காதலித்து ஏமாற்றி நடுரோட்டிலே விட்டுவிட்டுச் சென்றது உங்களுக்குத் தவறாகத் தெரியவில்லையா?"

"அதற்கென்ன இப்போ..?"

'சந்திரனைப் பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை! அதனாலே நீங்களும் அந்தப் பெண்ணைப் போல அவனிடம் தெரியாமல் ஏமாந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் சொல்கிறேன்!''

ஆடு நனைகிறதே என்று ஏன் இந்த ஓநாய் அழுகிறது? 

அவள் உ~hரானாhள். எனவே மிகவும் அவதானமாகவும், நிதானமாகவும் பதிலளிக்கத் தொடங்கினாள்.

''யாரிடம் ஏமாந்து விடுவேன் என்று நீங்கள் நினைக்கிறீங்க..? என் கணவனிடமா?''

''உங்க கழுத்திலே பெயருக்கு ஒரு தாலி கட்டியிருக்கிறானே, அவனிடம் தான்! அவனைக் கணவன் என்று நீங்க வேறு உரிமை கொண்டாடுறீங்க?''

'யூ ஆ டூமச்! இங்கே பாருங்க, காதலிப்பதும், காதல் வெற்றி, தோல்வி என்று முடிவதும், ஒருவரை ஒருவர் பிரிந்து போவதும், இப்படி எல்லாம் எங்கேயாவது, எப்போதாவது காலாகாலமாய் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அவரும் ஒரு பெண்னோடு தான் பழகினதாகவும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் திருமணம் செய்ய முடியாமற் போனதாகவும் சொன்னார். அவ்வளவுதான்!" 

'அவன் சொன்னதை நீங்க அப்படியே நம்பிவிட்டீங்களா?'

'ஆமா நம்பினேன்! தப்பு அவர் மேலே மட்டுமல்ல, அந்தப் பெண்ணிடமும் இருக்கலாம் இல்லையா?"

'அப்படின்னா உங்க கணவர் நல்லவர், அந்தப் பெண் தான் தப்புப் பண்ணினா என்று வாதாட வர்றீங்களா?"

'இல்லை! நீங்க ஏன் அனாவசியமாய்க் கோபப்படுறீங்க? தவறு யார்பக்கம் என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை!'

'ஏன்? அந்த அயோக்கியன் உங்க தற்போதைய கணவன் என்பதாலா?" சுரேந்திரன் தேவையில்லாமல் கோபப்பட்டான்.

'மைன்ட் யுவ வேட்ஸ்! அவருடைய கடந்த காலத்தைப் பற்றி எனக்குக் கவலையில்லை, என்னைப் பொறுத்தவரை அவர் எனக்கு நல்ல கணவராகத்தான் இருக்கிறார், எனக்கு அதுவே போதும்! தயவு செய்து மற்றவங்க வாழ்க்கைப் பிரச்சனையில் நீங்க தலையிடாதீங்க!"

''ஏன்? ஒருத்தன் தவறு செய்தால் அதை ஏனென்று தட்டிக் கேட்கக் கூடாதா?""

"உங்களுக்குத் தேவையில்லாத பிரச்சனையில் நீங்க தலையிடாதீங்க, அதைத்தான் உங்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், ஏனென்றால் அது சில நேரங்களில் உங்க வாழ்க்கையையும் அழிச்சிடும்!""

''அதற்காக அனியாயத்தைப் பார்த்துக் கொண்டு நாங்க பேசாமல் இருக்கணுமா?'' அவனது கோபம் தணிவதாய் இல்லை! 

'என்னுடைய கணவரின் கடந்தகால நடத்தையைப் பற்றி நானே கவலைப் படவில்லை, நீங்கள் ஏன் கவலைப்படணும்?"

''இது சுயநலம்! இப்படிப்பட்ட குணமுள்ள ஒருவன் நல்ல கணவனாய் உங்களோடு காலமெல்லாம் இருப்பான் என்று நீங்க நம்பிறீங்களா?''

''திருமணம் என்பது ஒரு புரிந்துணர்வுள்ள பந்தம் என்று தான் நான் நினைக்கிறேன்! அந்த நம்பிக்கையில் தானே நாங்க வாழ்கிறோம்!''

'அப்படியா? அந்த அளவிற்கு அவன் மேலே நம்பிக்கை வைத்திருக் கிறீங்களா? இனி நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு ஏறாது, எப்படியோ  ஒரு அயோக்கியனை மன்னித்து, அவனை ஒரு நல்ல கணவனாய் ஏற்றுக் கொண்டிருக்கும் உங்க நல்ல மனசை உண்மையிலே நான் மனம் திறந்து பாராட்டத்தான் வேண்டும்!" என்றான் நக்கலாக.

'அப்படி எல்லாம் பெருமையாய்ச் சொல்லி என்னைப் புகழாதீங்க, பார்க்கப் போனால் நானும் தான் உங்களைப் பாராட்டவேண்டும், பிக்காஸ் யூ ஆல்ஸோ டிஸேவிட்!"

"என்னையா? ஏன் அப்படிச் சொல்லுறீங்க? எதுக்கு நீங்க என்னைப் பாராட்டணும்?" அவன் ஒன்றும் புரியாத அப்பாவி போலக் கேட்டான்.

''ஏனென்றால் என் கணவரோடு நெருங்கிப் பழகி ஏமாற்றப்பட்டவள் என்று தெரிந்தும் அந்தப் பெண்ணை உங்க மனைவியாய்ப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டிருக்கிறீங்களே, அதற்காகத்தான் உங்களை நான் மனம் திறந்து பாராட்டணும்;!" 

சொல்லிக் கொண்டே அவள் எழுந்து, தனது கைப்பையை எடுத்துக் கொண்டு அடுத்த ஸ்டேஷனில் இறங்குவதற்குத் தயாராக வாசற்பக்கம் நகர்ந்தாள்.

'என் மனைவியா.....?" என்று அவன் அதிர்வான் என அவள் எதிர்பார்த்தாள், 

''என் ஊகம் சரி தான்..!" என்று அவன் முணுமுணுத்தது வண்டிச் சத்தத்தில் அவளுக்குக் கேட்காமலே அடங்கிப் போயிற்று.


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper