Corona - தாய்மையின் பூரிப்பில் கன்னத்தில்..!

 

தாய்மையின் பூரிப்பில் கன்னத்தில்..!

குரு அரவிந்தன்


மனைவி மயங்குவதும், தெளிவதுமாக இருந்தாள். 

கொரோனா வைரஸின் பாதிப்பால் மருத்துவ மனைக்கு அடிக்கடி செல்வதற்கே பயமாக இருந்தது. சுகாதார சேவைப் பிரிவினரின் கடின உழைப்பால் இப்பொழுது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது. 

வீட்டை விட்டு வெளிக்கிட மனைவிக்கு விருப்பமே இருக்கவில்லை. ஆனாலும் காலத்தைக் கடத்த விரும்பவில்லை, மருத்துவ மனைக்குச் செல்ல வேண்டிய அவசரமும் அவசியமும் இருந்ததால், நேற்று மாலைதான் அவளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தேன். 

‘ஏன் இவ்வளவு தாமதம்?’ என்பது போல, வைத்தியர் என்னை நிமிர்ந்து பார்த்த பார்வைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தேன். தாமதம் செய்யாமல், உடனடியாகவே மனைவியை உள்ளே அழைத்துச் சென்றார்கள்.

லொபியில் காத்திருந்தேன், என்னைப் போலவே வேறு சிலரும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். சுவரில் தொங்கிய தொலைக்காட்சித் திரையில் உடன் ஒளிபரப்பு நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது. மேடையில் இருந்த பெரியதொரு தோல்கருவியில் ஒருவர் ‘டான்.. டான்’ என்று அடித்துக் கொண்டிருந்தார், பார்வையாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பெரிய குரலில் ஐந்து.. நான்கு.. மூன்று .. இரண்டு.. ஒன்று.. எண்ணினார்கள். எண்ணி முடித்ததும் ‘ஹப்பி நியுஇயர்’ என்ற ஒரே கோஷம் பெரிதாக எழுந்தது. 

அருகே இருந்த சிலரும் ‘ஹப்பி நியுஇயர்’ சொன்னார்கள். புதுவருடத்தில் ஏதாவது நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மனதிலும் இருந்தது, காரணம் 2020 கொரோனா வைரஸின் தக்கத்தால் உலகமே செயலிழந்து போயிருந்தது. 

இது எதையுமே உள்வாங்கும் நிலையில் என் மனம் இருக்கவில்லை. உள்ளே கொண்டு சென்ற மனைவிக்கு என்னாச்சு என்பதைத் தெரிந்து கொள்வதில்தான் எனது சிந்தனை இருந்தது. 

நர்ஸ் தூரநின்று ‘ராஜ்குமார்’ என்று உரக்க அழைத்து அங்கிருந்த ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தாள். சிந்தனை கலைந்த நான் கையை உயர்த்திக் காட்டினேன். சிரித்த முகத்தோடு ஓடிவந்து ‘பேபிகேள்’ என்று வாழ்த்து சொல்லிவிட்டு நகர்ந்தாள். சற்று நேரத்தால் டாக்டர் வந்து வாழ்த்துச் சொல்லிக் கைகுலுக்கினார். எனக்கு ஏன் என்று முதலில் புரியவில்லை, டாக்டரைப் பார்த்தேன், ‘2021 ஆண்டு பிறந்த முதற் குழந்தையின் தந்தை நீங்கள் தான்’ என்று வாழ்த்தினார்கள். இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை, கணக்குப்பார்த்து எதுவும் செய்யவில்லை, தற்செயலாகத்தான் எல்லாம் நடந்தது, ஆனாலும் அப்பாவாகிவிட்டதில் மகிழ்ச்சியாக இருந்தது. 

இதைக் கேள்விப்பட்டுக் காலையில் மீடியாவில் இருந்து சிலர் வந்திருந்தார்கள். ‘இங்கே பிறந்த முதற்குழந்தை மட்டுமல்ல, உலகத்திலேயே 2021 ஆம் ஆண்டு பிறந்த முதற் குழந்தை என்ற பெருமையும் உங்க பெண்ணுக்குத்தான்’ என்று வாழ்த்திப் படங்களும் எடுத்துச் சென்றார்கள். 

இதற்கெல்லாம் காரணமான மனைவி மௌனமாகக் கட்டிலில் படுத்திருந்தாள்.

குழந்தையை அவளது கையில் கொடுத்தேன், முகத்தில் தாய்மையின் பூரிப்புத் தெரிந்தது. ஆசையோடு குழந்தையை வாங்கி மார்போடு அணைத்தவளின் முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு விரிந்தது. 

சிரிக்கும்போது குழந்தையின் கன்னத்தில் மட்டுமல்ல, அவளது கன்னத்திலும் மெல்லியதாகக் குழி விழுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டிருந்த அவளது முகத்தையும், குழந்தையின் முகத்தையும் மாறிமாறி உற்றுப் பார்த்தேன். இத்தனை நாட்களாய் இதை ஏன் நான் கவனிக்காமல் விட்டேன்.

அதை அவள் கவனித்திருக்க வேண்டும்.

‘என்ன..?’ புருவத்தை உயர்த்தி, கேள்விக்குறியோட என்னைப் பார்த்தாள்.

‘ஒன்றுமில்லை..! என்று ஒரு மெல்லிய புன்னகையோடு தலையசைத்தேன். அந்தப் புன்னகையின் அர்த்தம் அவளுக்குப் புரிந்திருக்கும்.

புரிதலின் வெளிப்பாடாய், விழிகளை உயர்த்தி வெட்கப்பட்டு என்னைப் பார்த்தவள், குழந்தையை இறுக அணைத்துக் கொண்டே, கன்னத்தில் முத்தம் ஒன்று கொடுத்தாள்.

மார்ச் மாதம் 2020, கொரோனா வைரஸின் தாக்கத்தால் வீட்டுக்குள் ஒரு மாதம் சுயதனிமைப் படுத்தலை மேற்கொண்டிருந்தோம். 

வீட்டிலே இருந்து இருவரும் வேலை செய்யப்போகிறோம் என்று நினைத்தபோது, இப்படி ஒரு சந்தர்ப்பம் ஒருபோதும் கிடைக்காது என்பதால் கொஞ்சம் கிளுகிளுப்பாகவும் இருந்தது. 

திருமணமாகி இந்தா அந்தா என்று நாட்கள் விரைவாக ஓடிவிட்டன. வேலை வேலையென்று ஓடித்திரிந்த எங்களுக்குச் சம்பளத்துடன் வீட்டிலே ஒன்றாக இருக்க சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருந்தது.  

கொரோனா வைரஸின் பரவல் அதிகமாவதால், இன்னும் ஒரு மாதம் மேலதிகமாக இருக்க வேண்டியும் வரலாம் என்று அறிவிப்புகள் அடிக்கடி வந்த வண்ணம் இருந்தன. ஓடியாடித் திரிந்த எங்களுக்கு வீட்டுக்குள் அடைந்து கிடப்பது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது உங்களுக்குப் புரியும். அரச, சமூக கட்டுப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு சுயதனிமைப் படுத்தலைக் கடைப்பிடித்தோம். 

வீட்டிலே இருந்து வேலை செய்யச் சொன்னதால், அவ்வப்போது முகத்திற்கு முகமூடி போட்டு, அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு வருவேன். கண்ணுக்குத் தெரியாத இந்தக் கொரோனா வைரஸ் எல்லோரையும் என்னமாய் பாடு படுத்துகிறது என்று திட்டிக் கொண்டே, வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக சோப்போட்டுக் கைகளைக் கழுவிக் கொள்வேன்.

‘மோடி அங்கிள் சொன்னபடியால் நான் வெளிக்கிட்டு வெளியே திரியமாட்டேன், வீட்டுக்குள் தான் இருப்பேன்’ என்று அந்தச் சின்னப்பையன் சொன்னதை முகநூலில் யாரோ பதிவேற்றம் செய்திருந்ததைப் பார்த்த ஞாபகம் எனக்கு வந்தது. அந்த சின்னப் பையன் போலவே எனது மனைவியும் சுயதனிமைப் படுத்தலைக் கவனமாகக் கடைப்பிடித்தாள். வீட்டுக்குள் மட்டுமல்ல, படுக்கை அறையிலும்தான்!

அடிக்கடி தண்ணீர் குடிப்பது மட்டுமல்ல, கைகளையும் சோப் போட்டு அலம்பிக் கொள்வாள். என்னையும் அந்தப் பழக்கத்தை தொடரும்படி கட்டாயப் படுத்துவாள். வெளியே நான் போவதை அவள் விரும்பாவிட்டாலும், அவசர தேவைக்கு வெளியே கிளம்பினால், முகமூடி அணிந்து செல்லும்படி கட்டாயப் படுத்துவாள். வீட்டுக்கு வந்ததும் மீண்டும் சோப்போட்டுக் கைகழுவவேண்டும்.

தமிழ்படங்களில் அல்லது சின்னத்திரையில் வருவதுபோல ஊடல் வந்தால் தரையில்தான் படுப்பேன் என்று பிடிவாதம் பிடிப்பது போல எல்லாம் இவள் பிடிவாதம் பிடிக்கவில்லை. கட்டிலிலேயே ஒரு தலையணையை நடுவே வைத்து விட்டுக் கட்டிலின் கரையில் படுத்துக் கொள்வாள். தப்பித்தவறி மூச்சுக் காற்றுப் பட்டாலும் என்று முன்னெச்சரிக்கையாக முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொள்வாள். இந்தப் பக்கம் பில்டர் போலத் தலையணை இருந்தது.

‘என்ன கட்டிலில் அளந்து பார்க்கிறீங்கள்?’ என்றாள்.

‘இல்லை, சுயதனிமைப்படுத்தலில் மூன்றடியாவது குறைந்தது தள்ளியிருக்கச் சொல்லியிருக்கிறார்கள், அதைச் சரியாகக் கடைப்பிடிக்கிறோமா என்று பார்த்தேன்’ என்றேன்.

‘குசும்பா..?’ என்றாள்

‘எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லிட்டிருந்தால் நான் என்ன செய்யிறது?’

‘ஓ.. தினமும் ஊரெல்லம் சுத்தீட்டு வருவீங்க, நாங்க கிட்ட வந்து கட்டிப் பிடிக்கணுமாக்கும்’ என்றாள் சற்று முறைப்பாக. 

நான் ஏதாவது சாட்டுச் சொல்லி இடையிடையே வெளியே திரிவது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது. அவளுக்குப் பிடிக்காததை நான் செய்ய விரும்பவில்லை என்பதால், அவசர தேவை ஏற்பட்டால், அதுவும் அவள் சொன்னால்  மட்டும் வெளியே போய் வந்தேன். 

மற்றும்படி ‘ஊபர் கேற்ரரிங் சேவை’யினர் நாங்கள் விரும்பிய நாவுக்கு ருசியான உணவை அவ்வப்பேது கொண்டு வந்து கொடுத்தனர். அவர்களும் மிகக்கவனமாகக் கையுறை அணிந்து, முகமூடி போட்டுத் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் நோய் பரவாது கவனமாக நடந்து கொண்டனர்.

காலையில் எழுந்ததும் ஏதாவது மின்னஞ்சல் செய்தி இருக்கிறாதா என்று பார்ப்பது வழக்கம். ஜன்னல் கரையோரம் உட்கார்ந்து, லாப்ரொப்பை மடியில் வைத்து ஆன் செய்து விட்டுக் காத்திருந்தேன். 

கண்கள் சும்மா இருக்காது என்பதால், எதையாவது வேடிக்கை பார்க்கப் பரபரத்தது. ஜன்னலுக்கால் பார்வையைச் செலுத்தினேன். பொதுவாக இரண்டு காட்சிகள் கண்ணுக்குத் தெரியும். 

ஒன்று எதிர் வீட்டு பால்கனியில் வாலை விறைப்பாக நீட்டிக் கொண்டு சந்தேகப் பார்வை பார்க்கும் அந்தக் கறுப்பு ஜெர்மன் செப்பேட் நாய் அல்லது அரைகுறையாக ஜன்னலில் தெரியும் அவளது புன்னகை வதனம்தான் முதலில் கண்ணில் படுவதுண்டு. எது முதலில் படுகிறதோ அது அன்றைய எனது பொழுது எப்படி இருக்கும் என்பதைக் கணித்துவிடும்.

அவளுக்குப் பிடித்த நிறமோ, என்னவோ கரும்நீல நிறத்தில் ஆடை அணிந்திருப்பாள். தினமும் அவள் அல்லது அந்த நாய் கண்ணில் பட்டதால், காலையில் இது ஒரு சாம்பிரதாய நிகழ்வாகப் போய்விட்டது. 

அவளுயை முகத்தில் அந்தச் சிரிப்பும், மார்புவரை தொங்கும் கூந்தலும், கடைக்கண்ணால் மெல்லப் பார்த்து விட்டு, எதுவும் தெரியாதது போல சட்டென்று கையிலே தயாராக வைத்திருக்கும் செல்போனை நோண்டுவதும், மெல்லிய புன்னகையோடு செல்போனுக்குள் எதையோ தேடுவது போலப் பாசாங்கு செய்வதையும் பார்க்க எனக்கு சிரிப்பாக இருக்கும். 

பிங்கலரில் உதட்டுச் சாயம் பூசிய அவள் சிரிக்கும் போது கன்னத்தில் குழி விழுவதும் அவளது அழகுக்கு அழகு சேர்த்தது. அது அவளுக்குத் தெரியுமோ தெரியது, ஆனால் ரசிகனாக நான் அதைப் பார்த்து ரசித்தேன். அந்த அழகைப் பார்த்து ரசித்தாலே காலையில் ஒரு மகிழ்வான உணர்வுகள் வந்துவிடும். அதனால் எனது மனவோட்டங்கள் எதையும் நான் காட்டிக் கொள்ளாமல் மகிழ்வாக இருந்தேன். 

முதலில் அவளுக்குத் தெரியாமல் நான் அதை ரசிப்பது எனக்குள் குற்ற உணர்வு போல இருந்தாலும், இலவசமாகக் கிடைக்கும் அந்த ஜன்னல் காட்சி ஏனோ மனதுக்கு இதமாக இருந்தது.

அவளைப் பார்க்கும் போதெல்லாம் ‘மாற்றான் வீட்டு மல்லிகை வாசத்தை எட்ட நின்று முகர்ந்து பார்ப்பதில் தவறில்லை’ என்ற அறிஞர் அண்ணா குறிப்பிட்ட வசனம்தான் நிiவுக்கு வரும். அழகு ரசிப்பதற்கு மட்டுமே, சினிமாவைப் பார்த்து ரசிப்பது போல, எட்ட நின்று ரசிக்கலாம் என்று எனக்குள் சமாதானம் சொல்லி கொள்வேன்.

அன்றும் வழமைபோல, லாப்ரொப்போடு ஜன்னல் கரையில் உள்ள சோபாவில் உட்கார்ந்திருந்தேன். என்றும் இல்லாதவாறு, மனைவி தனது லாப்ரொப்போடு அருகே வந்து உட்கார்ந்து அதைத் திறந்து ஆன் செய்தாள்.

‘ராஜ் இங்கே பாருங்கள்’ என்று அவளது லாப்ரொப் திரையைக் காட்டினாள். திரைகள் மூடித் திறந்து கடைசியாக அவுட்லுக் திரை விரிந்ததும் அதிலே அவள் தெரிந்தாள், வழமையான கருநீல உடை, கன்னத்தில் குழி விழும் அதே சிரிப்பு. 

எனக்குத் திக் கென்றது. தினமும் அவளது அழகைப் பார்த்து நான் ரசிப்பதை இவள் பார்த்திருப்பாளோ? தெரிந்துதான் இதைக் காட்டுகின்றாளோ?

‘ராஜ், இங்கே இவளோட சிரிப்பைப் பாருங்களேன்?’ என்றாள்.

‘அதுக்கென்ன..?’ தினமும் நான் பார்த்து ரசிக்கிற சிரிப்புத்தானே, ஆனாலும் முதல் முதலாய்ப் பார்ப்பது போலக் கேட்டேன்.

அவள் எனது கைகளைப் பற்றிக் கொண்டு தோளில் சாய்ந்தாள். எனக்கு ஒன்றுமாய்ப் புரியவில்லை. 

‘நான் ஒன்று கேட்பேன் தப்பாய் எடுக்க மாட்டீங்களே..!’

எனக்கு நெஞ்சு குற்ற உணர்வில் திக்திக்கென்று அடித்துக் கொண்டது. எதைப் பற்றிக் கேட்கப் போகிறாள்?

‘எனக்கும் இவளைப்போல, கன்னத்தில் குழி விழுகிற மாதிரி அழகாகச் சிரிக்கிற ஒரு பெண் குழந்தை வேணும்..!’

நடுவே இருந்த தலையணைக்கு அன்றே விடுதலை கிடைத்தது.

சுயதனிமைப்படுதல் என்னாச்சு என்று இப்போ உங்களுக்குப் புரிஞ்சிருக்கும்!


………………………………………………………………



Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper