Story - அம்மா காத்த புதையல்.
அம்மா காத்த புதையல்.
குரு அரவிந்தன்
கீழ்வானம் வெளுத்திருந்தது. பறவைகள் கீச்சிடும் சத்தம் கேட்கவே, எழுந்து சோம்பல் முறித்தபடி யன்னலுக்கால் பார்வையை வெளியே படரவிட்டேன். பரந்தவானத்தில் வெள்ளைப்புறாக்கள் அச்சமின்றி; அங்குமிங்கும் வட்டமிட்டு ஆரவாரப்படுத்திக் கொண்டிருந்தன. யுத்தபூமியில் சமாதானம் வந்துவிட்டது என்பதற்குக் கட்டியம் கூறுவது போன்ற அந்தக் காட்சி மனதுக்கு சற்று நிம்மதியைத் தந்தது.
அரசியல் வாதிகள் வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிடுவதில் மட்டுமல்ல, ஆளுக்காள் போட்டி போட்டுக் கொண்டு பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் சிரிப்பதுபோலப் பாவனை செய்து, தங்களைச் சமாதானவிரும்பிகள் என்று காட்டிக் கொண்டிருந்தார்கள். இதுவரை காலமும் சமாதானப் புறாக்களை யார் பறக்கவிட்டாலும் மாறிமாறிச் சுட்டு வீழ்த்திக் காலம் கடத்திக் கொண்டு இருந்தவர்களும் இந்த அரசியல் வாதிகள்தான் என்பது நாட்டுமக்கள் எல்லோரும் அறிந்த உண்மையே! இவர்கள் என்னதான் மனிதநேயம் மிக்கவர்களாகக் காட்டிக் கொண்டாலும் உதிர்ந்து போன சிறகுகள், இன்னமும் ரத்தக்கறை காயாமல் காற்றில் அங்குமிங்குமாய் அலைந்து பரிதவிப்பதுபோல, மனிதமனங்களும் கடந்தகால அவலத்தின் நினைவுகளிலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டுதான் இருக்கின்றன.
யுத்தநிறுத்த உடன்படிக்கையில் அரசாங்கமும், போராளிகளும் கையெழுத்துப் போட்டிருந்தார்கள். இனிமேல் சமாதானம்தான் என்று மனிதநேய நலன் விரும்பிகள் ஒருபக்கம் பேசிக் கொள்ள, இது எவ்வளவு காலத்திற்கு நிலைக்குமோ என்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சந்தேகக் கண்ணோடு பார்த்தார்கள்.
‘யாருக்கையா வேண்டும் இந்த யுத்தநிறுத்தம், நாங்க கேட்டோமா’ என்று யுத்தத்தின் பெயரைச் சொல்லிப் பணம் சம்பாதித்துக் கொண்டிருந்த எதிர்வினை விரும்பிகள் எல்லோரும் ஒரேயடியாக சலித்துக் கொண்டார்கள்.
சமாதான உடன்படிக்கையைக் கிழித்து வீசுவதற்கென்றே தகுந்த சந்தர்ப்பத்திற்காக இவர்கள் காத்திருந்தார்கள். என்னதான் சமாதானம் வந்திடிச்சு என்று இவர்கள் ஆரவாரப்பட்டாலும், நியாயமான கேரிக்கைகளை நிறைவேற்றுவதிலேயோ, அல்லது சிறுபான்மை இனத்தவரின் அடிப்படைப் பிரச்சனை என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பதிலேயோ இவர்களில் யாரும் சிறிதளவுகூட முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை.
அடிப்படைப் பிரச்சனையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு வேறு எதையோ எல்லாம் கவனத்தில் எடுத்து அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் தங்களைச் சுற்றிய சுயநலம் நோக்கியதாகவே இருந்தது.
சமாதானம் வரும் என்று காத்திருந்து சலித்துப்போன நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தி எனது ஊருக்குப் போயிருந்தேன். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் எங்கள் வீடு அகப்பட்டுப் போயிருந்தது. பரம்பரைச் சொத்தாக இருந்த காணியில் தாத்தா இந்த வீட்டைக் கட்டும்போது, ஒட்டு மொத்தமாய் இந்த ஊரே ஒருநாள் புலம் பெயரவேண்டிவரும் என்று எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நிச்சயமாக அவர் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்.
அதியுயர்பாதுகாப்பு வலையத்திற்கு வெளியே இருந்த சண்டிலிப்பாய் என்ற ஊரில் தற்காலிகமாய்த் தங்கியிருந்த அம்மாவைச் சென்று பார்த்தபோது, அம்மா ஒரு அதிர்ச்சியான செய்தியை என்னிடம் சொன்னாள். இராணுவம் எங்க ஊரை ஆக்கிரமித்த போது, பாதுகாப்புத்தேடி ஊரைவிட்டு எல்லோரும் அவசரமாகக் கிளம்பவேண்டி வந்ததாம். ஆக்கிரமிப்பு இராணுவம் கட்டவிழ்த்துவிட்ட மந்தைபோல, கட்டுப்பாடு இல்லாமல் தங்கள் இஷ்டம்போல எதுவுமே செய்வார்கள். உடமைக்கு மட்டுமல்ல, உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம்.
இளைஞர்களையும் யுவதிகளையும் அள்ளிக் கொண்டுபோய் தெற்கே உள்ள பூசாசிறையில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்த சம்பவங்கள் இன்னமும் யார் மனதையும் விட்டகலவில்லை. அவர்கள் எந்தநேரமும் எதுவும் செய்யலாம் என்ற பயம் எல்லோர் மனதிலும் இருந்ததால் அடுத்து என்ன செய்வது என்ற முடிவு எடுக்க முடியாமல் இருந்தது. பரம்பரை பரம்பபரையாக வாழ்ந்துவந்த வீடுவாசலை விட்டுச் செல்வதென்பது இலகுவான காரியமா?
அப்படிச் செல்வதில் ஊரிலே பலருக்கு இஷ்டமில்லை. நடப்பது நடக்கட்டும் என்று சொல்லி, மண்மீது அதீத பற்றுக் கொண்டவர்களும், படுக்கையில் கிடந்த சில வயோதிபர்களும் வீடுவாசலை விட்டுக் கிளம்பிவர மறுத்துவிட்டார்கள்.
அந்த அவசரத்தில்தான், ஊரைவிட்டுக் கிளம்பிவருமுன் அம்மா தனது தங்கநகைகள் எல்லாவற்றையம் ஒரு பொலித்தீன் பையில் போட்டு அதை ஒரு சிறிய தகரப் பெட்டியில் வைத்து, பொலித்தீன் பையாலே சுற்றி கிணற்றடியில் நின்ற பப்பாசி மரத்திற்கு அடியில் புதைத்து வைத்துவிட்டு வந்ததாகச் சொன்னாள். இதுவரை காலமும் அம்மாவின் நகைகள் பற்றி யாரும் கவலைப்படவில்லை. கடைசிக் காலத்தில் அம்மா படுக்கையில் கிடந்தபடியால், அம்மா அந்த ரகசியத்தைச் சொல்ல வேண்டி வந்தது. நான் விடயத்தைக் கிரகித்துக் கொள்ளுமுன் அருகே நின்ற எனது மனைவி கிரகித்துக் கொண்டு உஷாரானாள்.
‘நகைகள் மட்டும்தானா மாமி?’ என்றாள்.
‘ஓம், பிள்ளை!’
‘என்னமாமி, இந்த நகைகளுக்காக அவருடைய உயிரைப் பணயம் வைச்சுப் போகச் சொல்லுறீங்களா?’
‘இல்லைப் பிள்ளை, உனக்குத் தருவதற்காக வைத்திருந்த என்னுடைய வைரத்தோடும் அதற்குள்ளதான் இருக்கு!’
‘வைரத்தோடா…?’
வைரத்தோடு என்றதும் மனைவியின் விழிகள் விரிந்தன. அவளது முகபாவத்தில் திடீரெனக் கருணை தெரிந்தது.
‘வைரத்தோடு எனக்காமாமி, பரம்பரைச் சொத்தாச்சே, எப்படியும் அதைப்பாதுகாக்க வேண்டும்!’ என்றாள் கரிசனையோடு.
‘என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ தெரியாது, நீங்க போய் அந்த நகைகளை எடுத்திட்டு வாங்கோ’ அந்த வைரத்தோட்டுக்காக என்னுடைய உயிரையே பணயம் வைக்கலாம் என்று நினைத்தாளோ என்னவோ.
நான் தயங்கினேன், மனைவி அவசரப்படுத்தினாள்.
இந்தப் பகுதிக்குப் பொறுப்பான இராணுவ உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் அந்தப் பக்கம் யாருமே நகரமுடியாது. இராணுவ முகாமிற்குச் சென்று அவர்களிடம் அனுமதி பெற்று, ஒரு விதமாக அவர்களின் அனுமதியுடன் வீட்டைப் பார்க்கச் சென்றேன்.
எனக்குப் பயமாக இருந்தது. இராணுவ முகாமில் இருந்து ஏவிய செல் வந்து விழுந்ததால் தலையைப் பறிகொடுத்த மொட்டைப் பனைமரங்கள் ஆங்காங்கே முண்டமாய் நின்றபடி என்னைப் பரிதாபமாய்ப் பார்ப்பதுபோல இருந்தது. கவனிப்பாரற்று இடிந்துபோன வீடுகளையும், தூர்ந்துபோன வீதிகளையும் பார்க்கும்போது சுடுகாட்டுக்குள் செல்வது போன்ற மனநிலை எனக்குள் எழுந்தது. உண்மையிலேயே தமிழர் வாழ்ந்த பிரதேசங்கள் எல்லாவற்றையும் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏற்கனவே திட்டமிட்டபடி சுடுகாடாக்கித்தான் வைத்திருந்தார்கள் என்பதை நேரே பார்த்தபோதுதான் எனக்குப் புரிந்தது,
ஒற்றைக் காலிழந்த பசுமாடு ஒன்று தலை நிமிர்த்தி என்னைப் பரிதாபமாகப் பார்த்தபோது, ஆறறிவு மிருகம் புதைத்து வைத்த கண்ணி வெடியில் ஐந்தறிவு மிருகம் ஏமாந்துபோய் மாட்டிக்கொண்டு விட்டதே என்று அதற்காகப் பச்சாதாபப்படத்தான் என்னால் முடிந்தது.
ஊர் இருந்த நிலைமையைப் பார்த்தபோது, மனைவியின் சொல்லைக் கேட்டு வைரத்தோட்டுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைக்கிறேனோ என்றுகூட எனக்கு எண்ணத் தோன்றியது. வீடு தூர்ந்து போயிருக்க, சுற்றிவர இருந்த இடத்தில் பற்றைகள் வளர்ந்திருந்தன. கண்ணிவெடிகள் எங்கேயாவது நிலத்தில் புதைக்கப் பட்டிருக்கலாம் என்று உள்ளுரப் பயம் இருந்தாலும், அம்மா குறிப்பிட்டபடியே அந்த இடத்தில் தோண்டிப்பார்த்து, அந்தப் பெட்டியை எடுத்துக் கவனமாகக் கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தேன். நகைகள் வைரத்தோடு மட்டுமல்ல, அமரரான அப்பாவின் சிறிய புகைப்படம் ஒன்றும் அதற்குள் கவனமாக பொலித்தீன் பையுக்குள் போட்டு வைக்கப்பட்டிருந்தது. அம்மாவின் கவனம் எதுவும் நகைகளில் செல்லவில்லை. அப்பாவின் படத்திலேயே இருந்தது.
அவ்வப்போது எடுத்துப் பார்த்துக் கொள்வாளோ என்னவோ, நீண்ட நாட்களாக அம்மா அந்தப் படத்தைத் தனது தலையணிக்கு அடியில் வைத்துக் கவனமாகப் பாதுகாத்துக் கொண்டிருந்தாள். இதுவரை காலமும் எதையோ பறிகொடுத்ததுபோல தவித்துப் போயிருந்த அம்மா இப்போதெல்லாம் யாரோ தனக்குத் துணை இருப்பதுபோல, தனக்கென்று ஒருதனி உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டு நிம்மதியாய்த் தூங்கவும் செய்தாள்.
‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் மிந்நாடே..!’
அப்பா அம்மாவின் ஞாபகம் வரும்போதெல்லாம் பிறந்த மண்ணின் ஞாபகமும் கூடவே வருவதுண்டு. விழிமூடித் திறக்கின்றபோது விழியோரம் எனையறியாமலே நனைவதுமுண்டு.
‘இந்தா, இந்தப் படத்தை நீயே வைச்சிரு, உன்னுடைய பிள்ளைகள் வளர்ந்ததும், அவங்க தாத்தா யார் என்று கேட்டால் இந்தப் படத்தை அவங்களுக்குப் பெருமையோடு காட்டு. அவர் வாழ்ந்த வாழ்க்கையைப்பற்றி, நீ பிறந்து வளர்ந்த இந்த மண்ணைப்பற்றி எல்லாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடு. சொந்த மண்ணைவிட்டுப் பிரிந்த துயரத்தின்; வேதனை எப்படிப்பட்டது என்பதை எல்லாம் அவர்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருமரம் என்னதான் கிளைகளைப் பல்வேறு திசைகளுக்கும் பரந்து பரப்பினாலும், அந்த மரத்தின் மூலவேர் இந்த மண்ணிலேதான் இருக்கிறது என்பதை மறக்காமல் கவனமாக அவர்களுக்கு எடுத்துச் சொல்லு.’ அம்மாவின் ஆதங்கம் என்னவென்று எனக்குப் புரிந்தது.
இதுவரை காலமும் அம்மா தான் காத்து வந்த புதையலை என்னிடம் கொடுத்துக் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளை இப்பொழுதும் நினைத்துப் பார்க்கின்றேன். பிறந்து, தவழ்ந்து, வளர்ந்த மண்ணைப் பார்க்க நான் ஒருபோதும் திரும்பி வரமாட்டேன் என்றோ, வாழ்நாளில் அதற்குச் சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்காமல் போகலாம் என்றோ அம்மா நினைத்திருக்கலாம்.
அம்மா எங்களைவிட்டுப் பிரிந்தபின்பு அதிகநாட்கள் அந்த மண்ணிலே எங்களால் தங்க முடியவில்லை. இனவொழிப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கெடுபிடிகளைத் தாங்கமுடியாமல், நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு இரவோடிரவாக சொந்த மண்ணைவிட்டுப் புகலிடம் தேடியோட வேண்டிவந்தது. எனவே அருகே இருந்த இராமேஸ்வரத்திற்கு உடன் பிறப்புக்களைத்தேடிப் படகில் புறப்பட்டோம். பல கஷ்டங்களுக்கு மத்தியில் தமிழகத்தை வந்தடைந்தோம். தமிழகத்திற்கு அகதிகளாய் வந்தாலும், உடன்பிறப்புக்களைக் கண்ட மகிழ்ச்சியில் இங்கே ஓரளவாவது எங்களால் நிம்மதியாய் இருக்கமுடிகிறது.
இப்போ எனது மகள் வளர்ந்து கேள்விகள் கேட்கும் பருவத்தில் இருக்கிறாள்.
‘இது யாரப்பா?’ எனது பர்சில் கவனமாக வைத்திருந்த அப்பாவின் படத்தைப் பார்த்து எனது மகள் கேட்டாள்.
‘இதுவா, இது உன்னோட தாத்தா!’ என்றேன்.
‘தாத்தான்னா..?’
‘அப்பாவோட அப்பா, பாட்டா, அல்லது அப்பப்பா என்றுகூடச் சொல்லலாம்.’
‘அசப்பில் உங்களைப் போலவே இருக்கிறார், தலைதான் நரைச்சிருக்கு, இறந்திட்டாரா?’
‘ஆமா!’ என்றேன்.
‘அப்போ எங்க பாட்டி..?’
‘அவங்களும் இறந்திட்டாங்க’
‘பாட்டி எப்படி இருப்பாங்கப்பா?’
‘அப்பாவைப்போலவே நிறமாய் அழகாய், ஸ்மாட்டாய் இருப்பா, சுருங்கச் சொன்னா எங்க அம்மாவைப் போல ஒரு தெய்வம் இல்லை! என்றேன்.
‘நானும் பாட்டியைப் பார்க்கணுமே, பாட்டியின் படம் ஒன்றும் இல்லையாப்பா?’
‘படமா..?’ சாட்டை கொண்டு அடித்தது போன்ற வலியை நான் உணர்ந்தாலும், அந்த நேரம் அதைச்சமாளித்துக் கொண்டு சாதுர்யமாய்ப் பதில் சொன்னேன்.
‘இல்லையம்மா, அவசரமாய்ப் புறப்பட்டு இராணுவத்திடம் இருந்து தப்புவதற்காக இரவோடு இரவாக ஒளிஞ்சொளிஞ்சு வந்தோமா, அதனாலே அவசரத்தில் எதையுமே எடுத்துக் கொண்டு வரமுடியலை!’
‘இதுதான் உன் பாட்டி’ என்று அடையாளம் சொல்ல, நான் சுமந்து வந்த அம்மாவின் நினைவுகளைத்தவிர என்னிடம் வேறு எதுவுமே மிஞ்சி இருக்கவில்லை! அப்பாவின் புகைப்படத்தை புதையல் போல் காத்து கவனமாக என்னிடம் கொடுத்து, எனக்கு முகவரி தந்த அந்தத் தெய்வத்தின் புகைப்படம் ஒன்றையாவது கையோடு கொண்டுவராமல் போனேனே என்ற குற்ற உணர்வு இப்போதும் எனக்குள் உறுத்திக் கொண்டேதான் இருக்கிறது.
அந்த இழப்பு எப்போதுமே நிவர்த்தி செய்யமுடியாத ஒரு இழப்பாய்ப் போய்விட்டது. நான் இழந்தது அம்மாவை மட்டுமல்ல, எனது அடுத்த தலைமுறை நினைவில் வைத்திருக்க வேண்டிய அம்மாவின் முகவரியையும்தான்!
Comments
Post a Comment