Story - முள்ளு வேலி
முள்ளு வேலி
குரு அரவிந்தன்
இது என்ன வாழ்க்கை என்று சலித்துக் கொண்டாள் சுபா.
கனடியமாப்பிள்ளை என்று பெரிய ஆடம் பரமாய் அப்பா செய்து வைத்த திருமணம். இக்கரை மாட்டிற்கு அக்கரைப் பச்சை என்பது இங்கே வந்தபின் தான் அவளுக்குப் புரிந்தது.
மொழி, பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே அவளுக்குப் புதுமையாக இருந்தது. அதே நேரம் மனதிற்குப் புரியாத பயமாகவும் இருந்தது.
ஜெகன் கண்ணிறைந்த நல்ல கணவன் தான்.
மேலை நாட்டு மோகத்தில் எத்தனையோ ஆசைகளை நெஞ்சிலே சுமந்து கொண்டுதான் அவள் இந்த மண்ணில் காலடி வைத்தாள். ஆனால் பொருளாதாரப் பிரச்சனை அவர்களை நிறையவே பாதித்தது.
ஜெகனுக்கு தினமும் இரண்டு வேலை. இரவு வேலையால் வீட்டிற்கு வரும் போதும் சரி அல்லது அதி காலையில் வேலைக்கு போகும் போதும் சரி அவள் நல்ல தூக்கத்தில் இருப்பாள். போதாக் குறைக்கு வார இறுதி நாட்களிலும் பகல் வேலை. வேலை அலுப்பில் இரவு வந்ததும் அடித்துப் போட்டது போலத் தூங்கிப் போவான்.
கணவனோடு அன்பாய்க் கதைக்கக் கூட நேரமிருக்கவில்லை. தொலைபேசி தான் அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை வைத்திருந்தது.
இந்த நாட்டை பற்றிய அவள் கண்ட கனவுகள் எல்லாம் கண் முன்னால் கலைந்த போது, நிஜத்தை அவளால் இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இயந்திரமயமான போலிவாழ்க்கை அவளை மேலும் விரக்தி அடையவைத்தது.
தானாவது ஒரு வேலையைத் தேடி அவனது பொருளாதாரப் பளுவைக் குறைக்க வேண்டும் என்று சுபா என்றுமே நினைத்ததில்லை. அவள் செல்லமாக வளர்ந்த சூழ்நிலை அவளை அப்படிச் சிந்திக்க வைக்கவும் இல்லை.
நல்லதை அவர்களுக்கு எடுத்து சொல்ல வீட்டில் பெரியவர்களும் இருக்கவில்லை. முன் தூங்கிப்பின் எழும்பப் பழகிக்கொண்டாள். அவளுக்குத் தெரிந்த சில குடும்பங்களில் ஆளுக்கு ஒரு கார் வைத்து ஓடுவதைப் பார்க்க அவளுக்கு வியப்பாக இருந்தது.
வேலைக்கும் போகாமல் எப்படி இவர்களால் இப்படிச் சொகுசாக வாழ முடிகிறது என்று சில நேரங்களில் நினைத்து பார்ப்பதுண்டு. சோம்பேறிகளாலும் இந்த நாட்டில் "லக்ஷறியாய்" வாழமுடியும் என்பதை வெகு விரைவிலே புரிந்து கொண்டாள்.
மற்றைய பெண்களைப் போலத் தானும் கார் ஓடப் பழகவேண்டும் என்று ஆசைப் பட்டாள். சராசரி எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் ஆசைதான். ஆனால் அவளது இந்த ஆசையை நிறைவேற்ற ஜெகனுக்கோ நேரமிருக்கவில்லை.
எனவேதான் அவள் குணத்திடம் காரோட்டப் பழகப் போகவேண்டி வந்தது.
சில நாட்களாக அவளது மனது ஏனோ சஞ்சலப் பட்டுக் கொண்டிருந்தது.
இனம் புரியாத பயம் அவளை வதைத்துக் கொண்டிருந்தது. அன்று இரவு அவள் ஜெகனிற்காகத் தூங்காமல் காத்திருந்தாள்.
""என்ன..சுபா....தூக்கம் வரல்லையா?""
""வருது.......எவ்வளவு நேரம் தான் தூங்கிறது. தூங்கித் தூங்கி அலுத்துப் போச்சு. வீட்டுக்குள்ளே அடைஞ்சு கிடந்து ரீவியைப் பார்த்தாப்; போர் அடிக்குது.’
ஜெகன் எதுவும் பேசாது மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
‘நான் நல்லா காரோடப் பழகிவிட்டேன் என்று குணம் அண்ணா சொல்கிறார். நேர்முகப் பரீட்சைக்கு போகுமுன் ஹைவேயிலும் ஓடிப் பார்த்தால் நல்லது என்கிறார்.’
‘சரி ஓடிப்பழகினால் போச்சு’ என்றான் ஜெகன்
‘வெள்ளிக்கிழமை நியூயோர்க் போய் அங்கிருந்து அப்படியே பிற்ஸ்பேர்க் சிவன் கோயிலுக்கும் போய் வருவாங்களாம். எங்களையும் வந்தால் ஹைவேயில் கார் ஓடிப் பார்க்கலாம் என்கிறார். நாங்களும் போவோமா?""
ஆவலோடு அவனின் முகத்தைப் பார்த்தாள். சம்மதத்திற்குக் காத்திருந்தாள்.
""போகலாம்.......ஆனால் எனக்கு இந்தக் கிழமை நேரம் இல்லையே?""
அவன் வார்த்தையில் இயலாமை தெரிந்தது.
""ஏன் நான் என்ன கேட்டாலும் நீங்க இல்லைன்னு சொல்லுறீங்க?""
""இல்லைன்னு நான் சொல்லலையே! வேறு ஒரு நாளைக்குப் போகலாம்
என்று தானே சொன்னேன்.""
""நேரம் இருக்கோ இல்லையோ நான் போகணும்"" என்றாள் பிடிவாதமாக.
""வேலையை விட்டு விட்டு நான் வரமுடியாது சுபா. கட்டாயம் போகத்தான் வேண்டும் என்றால் போய்விட்டு வா. இனி உன் இஷ்டம்""
அவளது பிடிவாதம் அவனைக் கவலைப்பட வைத்தது.
ஆற்றாமையால் தூக்கம் வர மறுத்தது. துயரம் நெஞ்சை அடைக்கப் பெருமூச்சால் துயர்துடைத்தான். வேலைக்களைப்பால் அவன் எதுவும் பேசாது மௌனமாய்த் தூங்கிப் போனான்.
வேலைக்குப் போவதையும் தூங்குவதையும் தவிர இவனுக்கு வேறு ஒன்றுமே தெரியாதா? வீட்டிலே நானொருத்தி காத்திருக்கிறேன் என்பதைக் கூட இவன் புரிந்து கொள்ள மாட்டானா?
இதுதான் கனடா வாழ்க்கையா? அவள் கண்களில் நிராசை தெரிந்தது. ஏக்கப் பெருமூச்சில் விழி நனைந்தது.
அவள் காலையில் எழுந்து சோம்பலை முறித்துக் கொண்டு, தபாற் பெட்டியைப் பார்த்தாள்.
பல நாட்களின் பின் ஊரில் இருந்து அப்பாவின் கடிதம் வந்திருந்தது.
அன்புள்ள மருமகனுக்கும் மகளுக்கும் எழுதிக் கொள்வது,
நான் நலமாய் உள்ளேன். உங்கள் நலமறிய ஆவல். சுபா உன் திடீர் பிரிவு என்னைப் பாதித்தாலும் உன் எதிர் காலம் நன்றாக இருக்கும் என்பதால் பொறுமையாய் சகித்துக் கொண்டிருக்கிறேன். மேலும் இங்கே நல்ல மழை பெய்கிறது. நேற்று பலத்த காற்றோடு மழை பெய்ததால் கிழக்குப் பக்கத்து மூலையில் வேலி சரிந்து விட்டது. கட்டாக்காலி மாடுகள் உள்ளே வராமல் தான் நாங்கள் வேலி போடுகின்றோம். ஆனால் நம்ம வீட்டு மாடு, அது தான் உனதருமைச் "செவலை" தன்னை அடைத்து வைக்கத்தான் இந்த வேலி போட்டிருக்கிறோம் என்று நினைத்ததோ என்னவோ, சரிந்த வேலியால் பாய்ந்து ஓடிப் போய் விட்டது. நேற்று முழுவதும் எல்லா இடமும் தேடிப் பார்த்தோம். கிடைக்கவில்லை! எல்லா இடமும் அலைந்து கடைசியாகக் கண்டுபிடித்தோம், கசாப்புக்கடையிலே அதன் தோலை!......
சுபா உன்னாலே செவலையின் பரிதாப முடிவைத் தாங்க முடியாது என்று எனக்குத் தெரியும். எவ்வளவு தான் நாங்கள் கவனமாக இருந்தாலும் சிலநேரங்களில் எதிர்பாராமல் தவறு நடந்து விடுகிறது. அதற்காக வருந்தாமல் இருக்கவும் முடிவ தில்லை. மனிதருக்கே எத்தனையோ விடயங்கள் புரியாத போது இந்த வாயில்லா ஜீவனிற்கு........!""
கடிதத்தை மேலும் வாசிக்க முடியாமல் அவள் கண்கள் பனித்தன.
""செவலை...... ஓ........என்ரை.....செவலை......"" மனம் விட்டு அழவேண்டும் போல இருந்தது. அப்படியே காப்பெட்ரில் உட்கார்ந்து ஷோபாவில் தலையைச் சாய்த்து அழுது தீர்த்தாள்.
"'என் மனசை உன்னாலே எப்படிப் புரிஞ்சு கொள்ள முடிஞ்சிச்சு. எனக்குப் பாடம் சொல்ல உன்னையே தியாகம் செய்து விட்டாயே செவலை!""
உதடுகள் மெல்லத் துடித்தன. நெஞ்சில் இருந்த ஏதோ ஒரு இனம் தெரியாத பயம் தெளிந்தது போல இருந்தது.
மெல்ல எழுந்து படுக்கை அறைக்குள் போய்க் கழட்டி வைத்த தாலிக் கொடியை மீண்டும் போட்டுக் கொண்டாள். சுவாமிப் படத்திற்கு முன்னால் நின்று கண்ணிலே ஒற்றிக் கொண்டாள்.
தன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வேலி போட்டது போல மனத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. கொண்டு போவதற்கு அடுக்கி வைத்திருந்த றவல் பாக்கைத் திறந்து உள்ளே இருந்த தனது உடுப்புகளை திரும்பவும் பீரோவில் அடுக்கினாள்.
ரெலிபோன் கிணுகிணுத்தது. எடுப்பதா விடுவதா? நெஞ்சு படபடத்தது.
""ஹலோ..."" என்றாள்.
""சுபா.....எல்லாம் ரெடி....இன்னும் ஒரு அரைமணி நேரத்தில் வந்து பிக்கப்
பண்ணுறேன்...ரெடியாய் இரும்".
""குணமண்ணை.....வேண்டாம் நான் வரவில்லை.""
""என்ன இது.......சரி என்று சொல்லி விட்டு....இப்N;பா என்ன திடீரென்று
வரமாட்டன் என்று சொல்னால்......என்ன அர்த்தம்"".
""ஏதோ அசட்டுத் துணிவில் சொல்லிவிட்டேன். அமெரிக்க ஹைவேயில் கார் ஓடிப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தான் தனிய என்றாலும் போவோம் என்று சம்மதம் சொன்னேன். ஆனால் இப்போ அது தவறு என்று தெரிகிறது.’
‘என்ன சொல்றாய், நீதானே ஓம் என்று சொன்னாய்?’
‘சொன்னனான்தான் ஆனால் நாங்கள் தனியே வெளியே போவது தப்பு என்று இப்போது தான் புரியுது. இனசனம் தப்பாகக் கதைப்பதற்கு நாங்கள் சந்தர்ப்பம் கொடுக்கக் கூடாது. நியூயோர்க் போய் அங்கிருந்து பிற்ஸ்பேர்க் கோயிலுக்குப்; போய் வர எப்படியும் இரண்டு நாள் எடுக்கும். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது, உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. நாளைக்கு இரண்டு குடும்பமும் தெருவிலே நிற்கக் கூடாது.""
"என்ன நீ எனக்கு புத்திமதி சொல்லுறியா? என்ன எண்ணத்திலை வாறன் என்று சொன்னனி. இப்ப என்ன பத்தினி வேடம் போடுறியா?"" குணமண்ணைக்கு கோபம் தான் வந்தது.
வெண்ணெய் திரளும் போது இவள் என்ன இப்படிப் போட்டு உடைத்து விட்டாளே. இரண்டு நாள் உல்லாசமாய் இருக்கலாம் என்றால், இவளவையை நம்பி ஒன்றும் செய்யக்கூடாது. கடைசி நேரத்தி;ல் நல்ல பிள்ளையாய் நடிச்சிடுவாளவை.
""குணமண்ணை அளவோட கதைக்க தெரிந்து கொள்ளுங்கோ! .....ஜெகனுக்கு நேரமில்லை என்று தான் எனக்குக் காரோடப் பழக்கி விடும் படி உங்களைக் கேட்டவர். கார் பழக்கி விடுகிறேன் என்று சொல்லித் தினமும் ஆசை வார்த் தைகள் பேசி என்னுடைய மனதைக் குழப்பியது நீங்கள் தான். உங்களுடை மனம் சஞ்சலப் பட்டதற்கு எந்த விதத்திலாவது நான் காரணமாய் இருந்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கோ. தயவு செய்து இனிமேல் ஜெகன் இல்லாத நேரம் நீங்கள் இந்த வீட்டிற்கு வரவேண்டாம்."" அவளுக்கு உடம் பெல்லாம் வியர்த்து மூச்சு வாங்கியது.
குரலில் ஒரு வேகமும் எதிர்ப்பும் இருந்தது. இதை எல்லாம் சொல்ல எப்படித் துணிவு வந்தது என்று நினைக்க அவளுக்கே வியப்பாக இருந்தது.
வேலை முடிந்து இரவு பதினொரு மணிக்கு தூக்க கலக்கத்தில் ஜெகன் வந்தான். சுபா போயிருப்பாள் என்று தான் அவன் நினைத்தான். மாறாக அவள் வீட்டிலே இருந்தது அவனுக்கு நிம்மதியாயும் சந்தோஷமாயும் இருந்தது.
மைக்ரோவேவில் உணவைச் சூடாக்கிப் பரிமாறினாள் சுபா.
ஜெகனிற்கு ஆச்சரியமாக இருந்தது. தானே உணவை எடுத்து சூடாக்கிச சாப்பிட்டுத் தான் அவனுக்குப் பழக்கம். இன்று இது என்ன புதுமை! ஏனோ மனதிற்கு மனைவியின் அந்த உபசாரம் இதமாக இருந்தது.
"'என்ன விசேஷம்"" என்றான் சுபாவைப் பார்த்து.
""ஒன்றுமில்லை அப்பாவிடம் இருந்து கடிதம் வந்தது."'
""என்னவாம்"" பார்வை திரும்பி அவளிடம் போனது.
""செவலை......என்னுடைய.......செவலை செத்துப் போச்சாம்""
அவள் அதை சொல்லும் போது அழுவாள் என நினைத்தான். அவள் அழவில்லை. அவனருகே மெல்ல வந்து அவனது தலையை மெதுவாகக் கோதிவிட்டாள்.
"'உங்ககிட்ட ஒன்று கேட்கட்டா?""
""என்ன?''அவன் கேள்விக்குறியோடு பார்த்தான்.
""நீங்க தனிய வேலைக்குப் போய்க் கஷ்டப்படுகிறீங்க அதனாலே நானும் வேலைக்குப் போனால் குடும்பப் பாரம் கொஞ்சம் என்றாலும் குறையும் என்று நினைக்கிறேன். உங்களோடு சேர்ந்து இந்தக் குடும்பச் சுமையை நானும் சுமக்கணும் போல இருக்கு. அதனாலே நானும் வேலைக்குப் போகட்டா?""
நம்பமுடியாமல் அவளைப் பார்த்தான்.
ஏனிந்த திடீர் மாற்றம் என்று அவனுக்குப் புரியவில்லை!
(முற்றும்)
Comments
Post a Comment