Story - மருமகள்

 


மருமகள்

குரு அரவிந்தன்


அப்படி ஒரு நெருக்கம்! சுற்றிவர என்ன நடக்கிறது என்பதைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை. 

தங்களை மறந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்களா அல்லது ஒருவரை ஒருவர் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தார்களா என்பதுதான் தெரியவில்லை! 

தற்செயலாக அவர்களைப் பார்த்ததும், சாதாரணமாக ஒன்றாக இருக்கும் ஜோடிகளைப் பார்க்கும்போது பெற்றோருக்கு வரும் அதே எரிச்சல்தான் அவருக்கும்  வந்தது. 

நல்ல கட்டுமஸ்தான தேகம் அவனுக்கு. தோளுக்கு மிஞ்சி வளர்ந்து விட்டான் என்பதை கொஞ்சநாட்களாக அவர் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றார். படித்து முடிந்ததும் நல்ல உத்தியோகம் எடுக்கவேண்டும், அப்புறம் கலியாணம் பேசவேண்டும் என்று வரைந்த கோட்டிற்குள் நின்றுதான் அவரது சிந்தனை இதுநாள்வரை வளர்ந்திருந்தது. இந்த நடைமுறைதான் அவர்களின் குடும்பத்திலும் இதுவரை காலமும் தொடர்ந்து வந்திருக்கிறது. ஆனால் அவர் சற்றும் எதிர்பார்க்காத இப்படியான ஒரு அதிர்ச்சியை மகன் தருவான் என்று அவர் கொஞ்சமும் நினைத்துப் பார்த்ததில்லை.

அவர் தன்னைவிட, மனைவி லட்சுமியைப் பற்றித்தான் அதிகம் கவலைப்பட்டார். மகனின் எதிர்காலம் பற்றிய, நிறையக் கற்பனைகளோடு உலாவரும் மனைவிக்கு இந்த விடயம் தெரிய வந்தால் துடித்துப் போய்விடுவாள் என்று பயந்தார். சொந்தம் விட்டுப் போகக்கூடாது என்ற நல்ல நோக்கத்தோடு அண்ணன் மகளை எப்படியாவது மருமகளாக்கிவிட வேண்டும் என்ற பிடிவாதத்தோடு தவமிருக்கும் மனைவியால் இதை ஏற்றுக் கொள்ள முடியுமா?  

குடும்பத் தலைவர் என்றமுறையில் இந்த விடயத்தைப் பெரிதுபடுத்தாமல், மனைவிக்குத் தெரியாமல் பக்குவமாய் மகனுக்கு எடுத்தச் சொல்லி எப்படியாவது சுமூகமாய்ச் சமாளிக்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

காதல் வசப்பட்ட மகன் நிம்மதியாகத் தூங்கினானோ இல்லையோ, அவர்களை ஒன்றாகக் கண்ட நாளில் இருந்து இவர் மட்டும் தனது தூக்கத்தை இழந்துவிட்டார். தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தவர், திரும்பி மனைவியைப் பார்த்தார்.

 அவள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். யாரோ ஒரு பெண்னோடு மகன் கூத்தடிக்கிறான் என்கிற விடயம் அவளுக்குத் தெரியவந்தால் இப்படி நிம்மதியாகத் தூங்குவாளா?

மகனாகவே அவரிடம் வந்து சொல்லுமுன் அதிரடியாக அவனிடம் கேட்டுவிடலாமோ என்று நினைத்தார். தள்ளிப்போடப் போட காதல் துளிர்விட்டு வளர்ந்து, பற்றிப் பிடித்துவிடும். முளையிலேயே அதைக்  கிள்ளி எறியாவிட்டால் அப்புறம் கஷ்டப்பட வேண்டிவரும். 

இது நட்பா அல்லது காதலா என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பார்த்தால் அவருக்கு நட்பாகத் தெரியவில்லை. இப்படியான விடயங்களில் தலையை நுழைக்கும்போது மிகவும் அவதானம்தேவை, கொஞ்சம் தவறினாலும் நிலைமை விபரீதமாய்ப் போய்விடும். இந்த வயதுக் காதலைப் பொறுத்தவரை ‘வேண்டாம், விட்டுவிடு’ என்றெல்லாம் புத்திமதி சொல்லப் போனால் காற்றின் திசையில் பரவும் தீபோல அது இன்னும் வேகம் கொண்டுவிடும். 

எனவே கவனமாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டார். தோளுக்கு மிஞ்சினால் நண்பன், தகப்பன் என்ற ஸ்தானத்தைவிட்டு இறங்கி வந்து அவனது நண்பனாகவே மாறி அவனிடமே கேட்டுவிடுவது என்று நினைத்தார். ஒருவேளை ‘ஆமா, நான் அவளைத்தான் காதலிக்கிறேன், அவளைத்தான் திருமணம் செய்யப் போகிறேன்’ என்று அவன் அவரிடமே அடித்துச் சொல்லிவிட்டால் அப்புறம் என்ன செய்வது என்ற பயமும் அவரைப் பிடித்துக் கொண்டது.

புலம் பெயர்ந்து கனடாவிற்கு வந்த புதிதில், ஒரு திருமணவீட்டில் வைத்து யாரோ வேடிக்கையாக இவர்களிடம் கேட்டார்கள்,

‘உங்க பிள்ளைகள் வேற்று இனத்தவரைக் காதலித்து திருமணம் செய்யப் போவதாகக் கேட்டால், நீங்க அதற்குச் சம்மதிப்பீங்களா?’

‘அப்படி ஒரு முடிவோடு வீட்டிற்குள்ள காலடி எடுத்து வைத்தால், அந்தக் காலை ஒடைச்சிட மாட்டேன்..?’ அவரை முந்திக் கொண்டு அவரது மனைவி சட்டென்று பதில் சொன்னதை நினைத்துப் பார்த்தார். அந்த ஒரு நினைவே அவரைக் அதிகம் கவலை கொள்ளச் செய்தது.

இந்தப் பதினாறு வருடங்களில் எத்தனை மாற்றங்கள். இது ஒரு பல்கலாச்சாரநாடு என்பதால், மதம் மொழி இனம் மாறித் திருமணங்கள் நடப்பதற்குச் சந்தர்ப்பம் சூழ்நிலை அதிகம். அப்படியான மாறுபட்ட திருமணங்கள் நடக்கும்போது கொஞ்சம் மனசை நெருடத்தான் செய்யும். இளைய தலைமுறை வழமையான சம்பிரதாயங்களைப் பற்றியோ, அல்லது அதன் எதிர் விளைவுகளைப் பற்றியோ கொஞ்சமாவது கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. விருப்பமோ விருப்பமில்லையோ, இப்படி எத்தனையோ முரண்பட்ட கலியாணங்களுக்குச் சென்று வாழ்த்தி, விருந்துண்டு வந்தாச்சு. ஆனாலும் தனக்குத் தானே என்று வரும்போது மனது தாங்குமா என்பது கேள்விக் குறியாகவே நின்றது!

மகனைத்தனியே அழைத்து, முதலில் படிப்பு முடியவேண்டும், அப்புறம் நல்ல உத்தியோகம் எடுக்க வேண்டும், அதன்பின்தான் கலியாணத்தைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று புத்திமதி சொல்லி இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து வந்த வழக்கத்தை அவனுக்கு நினைவு படுத்த விரும்பினார.; பெற்றோர் பேசி ஒழுங்கு செய்யும் திருமணத்தில் உள்ள நன்மைகள் பற்றியும், அதே சமயம் காதல் திருமணத்தில் உள்ள தீமைகள் பற்றியும் மகனுக்கு விரிவாக எடுத்துச் சொல்லவேண்டும், எதிர் காலத்தில் அவர்கள் எதிர் கொள்ளவேண்டிய சமூக, பொருளாதார பிரச்சனைகள் பற்றியும் மகனுக்கு விளங்க வைக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டார். ஒருவேளை தான் சொல்லும் புத்திமதியை மகன் ஏற்றுக் கொள்ளாவிட்டால், எப்படியாவது அவளைச் சந்தித்து அவளுக்காவது இதைப்பற்றி எடுத்துச் சொல்வது நல்லது என்று நினைத்தார். 

அவளுக்காகக் காத்திருக்க வேண்டிவந்தது. அவளை அருகே பார்த்ததும் அவளேதான் என்று நிச்சயப் படுத்திக் கொண்டார். தலை நிறைய மல்லிகைப்பூ சூடியிருந்தாள். நிஜமானபூ என்றால் வீட்டிற்குள்ளேயே செடிவளர்த்து மாலை கட்டியிருக்கலாம். 

சும்மா சொல்லக்கூடாது, தனக்கு ஏற்ற, பொருத்தமான துணையைத்தான் தேர்ந்து எடுத்திருக்கிறான். தொலைத்து விட்டது எதையோ தேடிஎடுக்கப் போவதுபோல அவள் அவசரமாக நடந்தாள். அந்த நடையிலும் எதையோ சாதிக்கப் போவது போன்ற உற்சாகம் தெரிந்தது. வலதுபக்கம் உள்ள தெருவில் திரும்பி, அம்மன் கோயில் திசை நோக்கி நடப்பதை அவதானித்தார். 

அவளுக்கு அவரை யார் என்று தெரிந்திருக்க நியாயமில்லை என்ற துணிச்சலோடு, அவளை வேவு பார்ப்பதுபோல நெருக்கமாகவே பின் தொடர்ந்தார். அவள் யாரையுமே சட்டை செய்ததாகத் தெரியவில்லை. கோயில் வாசலில் நின்று, கைகூப்பிப் பிரார்த்தித்தவள், கோயிலுக்கு உள்ளே நுழைந்தபோது அவருக்குத் திக்கென்றது. 

இன்று வெள்ளிக்கிழமை, நிச்சயமாக சந்துருவும் லட்சுமியும் கோயிலுக்கு வந்திருப்பார்கள். சந்துரு அங்கே வருவான் என்று தெரிந்துதான் தேடிவந்தாளோ? லட்சுமியும் அங்கே நிற்பது தெரியாமல் சந்துருவைக் கண்டதும் அவள் பாய்ந்து சென்று சந்துருவைச் சந்தித்துப் பேசமுற்பட்டால், உரிமை கொண்டாடினால் எல்லாமே விபரீதமாய்ப் போய்விடும். அப்படியான ஒரு செய்கையை லட்சுமி ஏற்றுக் கொள்வாளா? அவளால் அதைத் தாங்கமுடியுமா? 

கூட்டத்திற்குள் யாரையோ தேடும் அவசரம் அவளது விழிகளில் தெரிந்தது. என்ன செய்யலாம், காரியத்தைக் கெடுக்கப் போகிறாளோ என்று பயந்தார். அவளைத் தடுத்து நிறுத்தி, தான்யார் என்பதைச் சொல்லி விசாரிக்கலாமா, முடிந்தால் புத்திமதி சொல்லலாமா என்றுகூட யோசித்தார்.

சட்டென்று அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. இனியும் தாமதிக்கக்கூடாது என்று அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தார். அதிர்ச்சியாக இருந்தது, யாரை அவள் சந்திக்கக்கூடாது என்று நினைத்தாரோ, அவனை நோக்கித்தான் அவள் முன்னேறிக் கொண்டிருந்தாள். யாரிடமிருந்து இதை மறைக்க விரும்பினாரோ அவளும் மகனுக்கு அருகே நிற்பதை அவதானித்தார். தன்னுடைய சக்தியையும் மீறி எல்லாம் நடக்கின்றது என்பதை உணர்ந்து சட்டென்று அருகே இருந்த தூணின் பின்னால் மறைந்து கொண்டார்.

சந்துருவின் அறிமுகத்தைத் தொடர்ந்து, லட்சுமி அவளை ஆசீர்வகிப்பதும், அதைத் தொடர்ந்து லட்சுமி சொன்னதும் அவர் காதில் விழுந்தது,

‘நல்லாயிரும்மா, எங்கவீட்டுக்காரருக்குத் தெரிந்தால் ரொம்பவும் உடைஞ்சு போயிடுவாரோ என்றுதான் எனக்குப் பயமாயிருக்கு, உங்க காதலை, என்னைப்போல பக்கவமாய் எடுத்துக் கொள்ளும் மனநிலை அவருக்கு இருக்குமோ தெரியாது! சந்தர்ப்பம் கிடைக்கும்போது மெதுவாக எடுத்துச் சொல்லித்தான் உங்க மாமனாருக்குப் புரிய வைக்கவேண்டும்!’

தேவையில்லாமல் மனசைப் போட்டுக் குழப்பிக் கொண்டதை நினைக்க, நிம்மதிப் பெருமூச்சொன்று அவரை அறியாமலே வெளிப்பட்டது. அந்தப் பெண்ணை இப்போ மாமனாரின் கோணத்தில் நின்று துணிச்சலோடு பார்த்தார்!


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper