Story - காத்திருப்பதிலும் சுகமுண்டு..!
கயமலர் உண்கண்ணாய்! காணாய்!
ஒருவன் வய மான் அடித்தேர்வான். -கலித்தொகை
………………………………………………………
காத்திருப்பதிலும் சுகமுண்டு..!
குரு அரவிந்தன்
இராணுவத்தில் இணைந்திருந்த அவன் பல வருடங்களின் பின் விடுமுறைக்கு தனது கிராமத்திற்கு வந்திருந்தான். இயற்கை தந்த கொடைபோல அவனது கிராமம் விவசாயநிலமாக ஆற்றங்கரையில் மிகச்செழிப்புடன் இருந்தது. சின்ன வயதில் இருந்தே அந்த ஆற்றங்கரையில் உருண்டு புரண்டு, ஆற்றில் குதித்து மூழ்கி எழுந்து பழகிப் போனவன். ‘ஆறோடும் மண்ணில் என்றும் ஏரோடும்’ என்று வாய்க்குள் முணுமுணுப்பது மட்டுமல்ல, ‘எங்களுக்கு வாழ்வு தருகின்ற தாய்’ என்று எப்பொழுதும் பெருமைப்பட்டும் கொள்வான். காலமாற்றம், ஏர்பிடித்த அவனது கையைத் துப்பாக்கி பிடிக்க வைத்தது.
பேருந்தை விட்டு இறங்கி, ஆற்றங்கரையோரமாகச் செல்லும் பாதையில் தனது கிராமத்தை நோக்கிச் சென்றவனை, ஆற்றின் சலசலப்புச் சத்தம் ஆற்றங்கரைப் பக்கம் இழுத்தது. சில பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் படிக்கட்டில் அமர்ந்து இயற்கையை ரசித்தபடி, பழைய நினைவுகளை மீட்டுக் கொண்டிருந்தான்.
தன்னை மறந்து கற்பனையில் மூழ்கி இருந்தவனது சிந்தனை, யாரோ அபாயக் குரல் எழுப்பும் சத்தம் கேட்டுக் கலைந்தது. அவனை நோக்கி இரண்டு இளம் பெண்கள் ஓடி வந்து ‘காப்பாற்றுங்க’ என்று சொல்லி ஆற்றுப்பக்கம் கையை காட்டினார்கள்.
ஒரு பெண் ஆற்றிலே மூழ்கித் தத்தளித்து கொண்டிருப்பது தெரிந்தது.
‘அவளுக்கு நீச்சல் தெரியாது, எங்களை நம்பி ஆற்றிலே இறங்கிவிட்டாள், தயவு செய்து காப்பாற்றுங்களேன்’ என்று அவனை வேண்டினார்கள்.
ஒரு உயிர் ஆபத்தில் இருக்கிறது என்றால் அதைக் காப்பாற்ற வேண்டியது அவனது கடமையல்லவா? மக்களுக்காக நாட்டைக் காப்பாற்றப் போராடுவது மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவையான போது உதவுவதும் அவனது கடமைதானே என்ற எண்ணத்தோடு, மறுவார்த்தை பேசாது சட்டென்று ஆற்றுக்குள் குதித்தான்.
நீந்திச் சென்று, தத்தளித்துக் கொண்டிருந்த அவளது முடியைப் பற்றிக் கவனமாக இழுத்து வந்து கரைசேர்த்தான். கரைக்குக் கொண்டு வந்ததும் அவள் மயங்கி விழுந்தாள்.
அவளது ஈரவுடை உடலோடு ஒட்டியிருந்தது. அவன் தனது சட்டையைக் கழற்றி அவளுக்குப் போர்த்து விட்டு, அவளது சினேகிதியிடம் முதலுதவி செய்யச் சொன்னான். அவளோ எப்படிச் செய்வது என்று தெரியாது என்று சொல்லிக் கையை விரித்தாள்.
‘பயப்படாதீங்க, ஆபத்திற்குப் பாவமில்லை, நீங்களே செய்யுங்க’ என்றாள். அவன் தயங்கி நின்றான், சமூகப்பண்பாடு, கலாச்சாரம் அவனை தடுத்தது. ஆனால் அவர்கள் விடுவதாக இல்லை.
‘கொஞ்சம் உதவி செய்யுங்களேன், பிளீஸ்..!’ என்றாள் பதட்டத்தோடு ஒருத்தி.
‘இவளுக்கு ஏதாவது ஆச்சுண்ணா என்னைக் கொன்று போடுவாங்க,’ மற்றவள் விசும்பத் தொடங்கினாள்.
உடனடியாக குப்புற படுக்கவைத்து அவளது தலையைப் பக்கவாட்டில் திருப்பி முதுகையும், வயிற்றையும் அமுக்கிவிட்டான். அப்புறம் மல்லாக்கப் படுக்கவைத்து உள்ளங்கை இரண்டையும் ஒன்றின்மேல் ஒன்றாக அவளது நெஞ்சின் நடுவில் வைத்து அழுத்தினான். எந்த மாற்றமும் தெரியவில்லை, ஏன் என்ற கேள்வி மனதில் எழுந்தது. எதற்கும் முதலுதவி செய்து பார்ப்போம் என்று மணற்தரையில் மண்டியிட்டு அவளது மூக்கை மூடிக்கொண்டு உதட்டிலே வாயைவைத்து காற்றை நன்றாக ஊதி முதலுதவி செய்து பார்த்தான்.
‘வைத்தியரைக் கூட்டி வருவோமா..?’ என்றாள் இன்னொருத்தி
‘வேண்டாம், பக்கத்து தெருவில்தான் வைத்தியர்வீடு, இவளைத் தூக்கிட்டுப் போவமா?’
‘பார்த்திட்டு இருக்கமுடியாது, எல்லாரும் சேர்ந்து பிடியுங்க..! என்று அவளைத் தூக்க முயன்றாலும், அவர்களால் தூக்க முடியவில்லை.
‘ஏன்ன சார், பார்த்திட்டு நிற்கிறீங்க உதவி செய்யுங்களேன்..!’
‘நானா, எப்படி?’ அவன் தயங்கினான்.
‘ஆபத்திற்குப் பாவமில்லை அவளுக்கு மூச்சுத்திணறி ஏதாவது நடந்தால் அந்தப் பாவம் காலமெல்லாம் உங்களை விடாது சார்’
எத்தனையோ எதிரிகளை நேருக்குநேர் சந்தித்து தனது வீரத்தைக் காட்டிய அவனுக்கு இந்தப்பெண்கள் கூட்டத்தை, அதுவும் தனது கிராமத்து இளசுகளைச் சமாளிக்க முடியாமல் இருந்தது.
;சரி, விடுங்க’ என்றவன், சட்டென்று குனிந்து இரண்டு கைகளாலும் அவளை அலக்காகத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான், அவனது பெட்டியைத் தூக்கிக் கொண்டு சினேகிதிகள் அவனோடு நடந்தார்கள்.
வைத்தியர் அவசரமாகத் தனது கடமையைச் செய்யத் தொடங்கினார்.
‘எங்க ஹிரோ சார் முதலுதவி எல்லா செஞ்சிட்டாரு, ஆனாலும் மயக்கம் தெளியல்ல’ என்றாள் சினேகிதி வைத்தியரைப்பார்த்து.
‘நாசி வழியாய் தண்ணீர் போய் மூச்சுக்குழாயை அடைத்திருக்கலாம், எதற்கும் புரட்டிப் போடுங்க’ என்;ற வைத்தியர் முதுகிலே கையைவைத்து அமுக்கினார்.
‘அதெல்லாம் செஞ்சாச்சு, அப்பவே இவர் உறுஞ்சி எடுத்திட்டார்’ என்றாள் சினேகிதி.
‘இவங்க என்ன சொல்றாங்க..?,’ தனது கிராமத்துப் பெண்கள்தானே என்று அவர்களை கொஞ்சம் குறைவாக மதிப்பிட்டு விட்டோமோ என்று யோசித்தான்.
‘கொஞ்சநேரத்தில எல்லாம் சரியாகிடும், தண்ணியில நனைஞ்சு ஈரமாய் இருக்கிறீங்க, நீங்க போயிட்டுவாங்க தம்பி, நான் பாத்துக்கிறேன்’ என்று அவனை மரியாதையோடு வழியனுப்பி வைத்தார் வைத்தியர்.
அவன் தனது வீட்டை நோக்கி நடந்தான். அவனுடைய சிந்தனை எல்லாம் அவள் மீதே இருந்தது. எங்கேயோ, எப்போதோ பார்த்தமுகமாக நினைவில் இருந்தது. ஒரு உயிரைக்காப்பாற்ற முடிந்ததில் அவன் மனசு நிறைந்திருந்தது. விதிதான் தன்னை அங்கே வரப்பண்ணியிருந்தாக நினைத்தான்.
அவனது தாயாரும், தங்கையும் ஓடிவந்து அவனை வரவேற்று அணைத்து, குசலம் விசாரித்தார்கள்.
‘என்ன பனியனோடு நிற்கிறாய்? உடுப்பெல்லாம் ஈரமாயிருக்கு?’ தாயார் வினாவினாள்.
‘என்னண்ணா, என்னனாச்சு..?, மழைகூடப் பெய்யவில்லையே..!’ சந்தேகத்தோடு கேட்டாள் தங்கை.
அவன் நடந்தகதையைச் சொன்னான்.
‘யாராயிருக்கும்?’ தாயும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
‘யாரண்னா அவள்? பெயர் தெரியுமா?’ என்றாள் தங்கை.
‘ரதி என்று பெயர் சொல்லிச் சினேகிதிங்க அவளை கூப்பிட்டாங்க.’
‘எப்படி இருந்தா?’ கேட்டாள் சகோதரி.
‘நல்லநிறமாய், நீட்டுமூக்காய், நீண்டகூந்தல், அப்புறம் கன்னத்தில சின்னதாய் குழி விழுந்திருந்திச்சு..!’
‘என்னண்ணா அடையாளம் சொல்லச்சொன்னால் அப்படியே அவளை ஒரு ஓவியமா வரையிறியே ..!’ அவளது சந்தேகம் வலுத்தது.
‘அம்மா.. நம்ம ரதியாக இருக்குமோ..?’
‘அவள்தான் நல்லாய் நீந்துவாளே, செய்தாலும் செய்திருப்பாள்?’ அம்மாவின் வார்த்தைகளில் ஏதோ தொக்கிநின்றது.
‘என்னம்மா சொல்லுறீங்க?’ என்றான்.
‘ஆமாண்ணா, அவள் நல்லவள்தான், ஆனால் உங்களை நல்லாய் ஏமாற்றிவிட்டள், இந்தக் கிராமத்தில நீச்சல் சாம்பியன் அவள்தான், ஒருத்தராலும் அவளோட போட்டிபோட இதுவரை முடியல்ல, உனக்கு ஞாபகம் இருக்காண்ணா என்னோட படித்தாளே மேலைத்தெரு பணக்கார வீட்டுப்பெண்ணு, எங்க வீட்டுக்குக்கூட வருவாளே..? அப்பவே அவளுக்கும் உங்கமேல ஒரு..!’ மேற்கொண்டு தொடராமல் நிறுத்தினாள் தங்கை.
அவனுக்கு மெல்லமெல்ல அவளைப்பற்றிய ஞாபகம் வந்தது. அன்று சிறுமியாக இருந்தவள் இன்று குமரியாகி நிற்கிறாள். பதுமவயதில் அவள் காலடி வைத்தபோது, இளைஞனாக இருந்த இவன் அவளது அழகை, குறும்புத்தனத்தை ரசித்திருக்கிறான். அவளிடம் இருந்த என்னவென்று சொல்லமுடியாத ஒருவகை ஈர்ப்பு இவனையும் கவர்ந்திருந்தாலும் அதை அவன் ஒருபோதும் வெளிக்காட்வில்லை. அப்புறம் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் அவன் இராணுவத்தில் இணைந்து ஊரைவிட்டு போகவேண்டி வந்தது. பல வருடங்களின் பின் இப்போதுதான் வந்திருப்பதால், மாற்றங்கள் எல்லாம் அவனுக்குப் புதிதாக இருந்தன. திமிர்பிடித்தவள், நன்றாகத் தன்னை ஏமாற்றி முட்டாளாக்கி விட்டாள் என்ற கோபம் அவனுக்குள் குமைந்து கொண்டிருந்தது.
அந்திசாயும் நேரம் வானம் வெளித்திருந்தது, ஆற்றங்கரைப் படிக்கட்டில் அமர்ந்திருந்து இயற்கையை ரசித்துக் கொண்டிருதான். நிழல் தட்டவே, நிமிர்ந்து பார்த்தான். அன்று தன்னை முட்டாளாக்கியவள்தான் இன்று அழகாக சுடிதார் அணிந்து எதிரே நிற்கிறாள் என்பதைச் சட்டென்று அவன் புரிந்து கொண்டான்.
‘என்னைப் பெரியதொரு ஆபத்தில் இருந்து காப்பாற்றினதுக்கு உங்களுக்கு நன்றி சொல்லத்தான் தேடிவந்தேன்’ என்றாள்.
சற்று நேரம் எதுவும் பேசாது இருந்தவன், ‘இல்லை, நான்தான் உனக்கு நன்றி சொல்லனும்’ என்றான் சற்று முகத்தைத் தூக்கியபடி.
‘எனக்கா, நீங்களா.. ஏன்..?’ என்றாள் அவள் நம்பமுடியாமல்.
‘உன்னோட அபாரமான நடிப்புக்கு’ என்றான்.
‘நடிப்பா, என்ன சொல்லுறீங்க..?’
‘என்னோட தங்கச்சி மதி உன்னோட சினேகிதிதானே, உன்னைப்பற்றி எங்கிட்ட எல்லாம் சொல்லிவிட்டாள்.’
உண்மை தெரிந்து விட்டதில் அவளது முகம் சட்டென்று மாறியது.
‘என்னை மன்னிச்சிடுங்க, நான் வேண்டுமென்றே செய்யவில்லை, எனக்கு வேறுவழி தெரியலை..!’ தலைகுனிந்தபடியே சொன்னாள்.
அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவளோ வைத்த கண் வாங்காது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘நான் செய்தது தப்புத்தான், என்மேல கோபமில்லையே..!’
‘உன்னைக் கோபிக்க நான் யார்..?’ என்றான்.
‘நீங்க யாரா..?, இதுக்கு நான் என்ன பதில் சொல்ல.. உங்களையே மனசில நினைச்சிட்டு நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அடிக்கடி உங்க வீட்டுக்கு நான் வந்ததே உங்களைப் பார்க்கத்தான். உங்க தங்கை மதியிட்ட அப்பவே செல்லிப் பார்த்தேன், ‘இந்த வயசில உனக்கொரு காதலா’ என்று சொல்லித்தடுத்திட்டாள். என்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்த எனக்கு சந்தர்ப்பம் அமையவேயில்லை. என்னை நான் தயார் படுத்தியபோது, சொல்லாமல் கொள்ளாமல் திடீரென இராணுவத்தில சேர்ந்திட்டீங்க. நான் உடைஞ்சு போயிட்டேன். கலியாணம் பேசி வந்தாங்க, சாக்குப்போக்குச் சொல்லி மறுத்திட்டேன். நீங்க ஊருக்கு வருவதாக மதி சொன்னாள், அதனாலேதான் அப்படி நடந்து கொண்டேன், தப்புத்தான் என்னை மன்னிச்சிடுங்க..!’ அவள் கண்கள் கலங்கி எதையோ யாசிப்பதுபோல எதிரே நின்றாள். அவள் யாசித்ததில் கள்ளம்கபடமற்ற உண்மைத்தன்மை இருந்ததை அவன் அவதானித்தான்.
‘என்னுடைய சட்டை எங்கே?’ என்றான்
‘உங்க சட்டையா, எனக்குத் தந்ததாய் நெனைச்சு அதைப் போட்டுக்கிட்டுத்தானே இரவில தூங்கிறேன்’ என்றாள்.
அவன் கோபத்தோடு அவளை முறைச்சுப் பார்த்தான்.
‘சரி, நான் நடிக்கிறேன் என்று தெரிந்தும் நீங்க ஏன் என்னைக் காட்டிக் கொடுக்கல்லை, பேசாம அப்படியே போயிருக்கலாமே?’
அவன் சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.
‘பிளீஸ், ஏன்னு சொல்லுங்களேன்..!’ என்றாள்.
‘ஏன்னா, நானும் ஒருகாலத்தில உன்னைக் காதலிச்சேன், எங்க குடும்ப ஏற்றதாழ்வு அதை வெளியே சொல்ல இடம் தரவில்லை, நீ ரொம்ப உயரத்திலே இருந்தாய்! ஒருதலைக்காதல் என்று வெச்சுக்கோவன்’ என்றான்.
‘உண்மையாவா, நீங்களும் என்னை விரும்பினீங்களா?’ ஆச்சரியத்தில் அவளது கண்கள் விரிந்தன.
‘ஆமா..!’ என்று அவன் மெல்லத்தலையசைத்தான்.
இன்பவதிர்ச்சியில் ஒரு கணம் தயங்கியவள் மறுகணம், பாய்ந்து அவனை இறுக அணைத்து, அவனது உதட்டைச் செல்லமாகக் கடித்தபடி மெல்ல விசும்பினாள்.
‘அன்னிக்கு நீங்க முதலுதவி செஞ்சபோதே சட்டென்று உங்க உதட்டைக் கடிக்கணும்போல மனசு துருதுருத்திச்சுது, ஆனாலும் நடிப்புன்னு தெரிஞ்சுடுமே என்று கண்ணை மூடிக்கொண்டு அடக்கமாயிருந்தேன்’ என்றாள்.
இதற்காகவே காத்திருந்ததுபோல, அவனுடைய கோபம் எங்கே போச்சோ தெரியவில்லை, அவளை மெல்ல அணைத்துத் தலையை வருடி விட்டான். அவனுடைய இதமான அணைப்பில் அவள் தன்னையேமறந்தாள்.
காத்திருந்ததிலும் ஒருசுகம் இருந்தது. அப்புறம் வார்த்தைகளுக்கு அங்கே இடமிருக்கவில்லை. அதன்பின் அங்கு நடந்ததை எழுதவும் பேனா இடம் தரவில்லை..!
Comments
Post a Comment