Story - கார்த்திகையில் மலர்ந்தவள்

 




 முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குறுந்தொகை

………………………………………

கார்த்திகையில் மலர்ந்தவள்

குரு அரவிந்தன்


வாசல் மணி கிணுகிணுத்தது. 

விருந்தினரை எதிர்பார்த்துக் காத்திருந்த காந்தள் ஓடிவந்து கதவைத் திறந்தாள்.

‘வாங்க, வாங்க அன்ரி, அங்கிள் எப்படி இருக்கீங்க..?’ என்றாள் காந்தள்.

‘நாங்க நல்லாய் இருக்கோம், நீங்க எப்படி இருக்கீங்க, புதுமணத் தம்பதிங்களை நாங்க டிஸ்ரேப் பண்ணீட்டமோ தெரியாது’ என்றபடி உள்ளே வந்தாள் சொர்ணா. 

‘அப்படியெல்லாம் இல்லை, ஊரிலே இருந்து நீங்க நியூஜேர்சி வந்திருக்கிறீங்க என்று அம்மா தெரிவிச்சாங்க, அதுதான் உங்களை விருந்துக்கு அழைச்சோம்’ என்றாள் காந்தாள்.

‘ஸ்ரீராம், ஊரிலே இவங்க எங்க குடும்பநண்பர்கள் மட்டுமல்ல, உறவினரும் கூட..!’, என்று சொல்லிக் கணவன் ஸ்ரீராமுக்கு இருவரையும் அறிமுகம் செய்து வைத்தாள் காந்தள்.

‘நீங்க எங்களை விருந்துக்கு அழைக்காட்டியும், நாங்க விசிட் வரத்தான் இருந்தோம்’ என்றாள் சொர்ணா.

‘நீங்க வருவீங்கன்னு அம்மா சொன்னாங்க’ 

‘நாங்க வந்து உன்னைப் பார்க்காட்டி, ஊருக்குப்போய் உங்கம்மாவுக்கு பதில் சொல்லேலாது’ என்றாள் சொர்ணா.

‘அம்மா எப்படி இருக்கிறா?’ ஆவலுடன் கேட்டாள் காந்தள். என்னதான் செல்போனில் அடிக்கடி கதைத்தாலும் யாரிடமாவது விசாரிக்கும் போது மனதில் ஒருவித திருப்தி ஏற்படுவது உண்மைதானே!

‘எப்பபார்த்தாலும் உன்னைப் பற்றியே சொல்லிட்டிருப்பா, தனிச்சுப் போயிட்டால்லே அதனாலே உன்னைப் பற்றிய நினைவுதான்..!’

‘பாவம், அம்மாவுக்கு என்னைப்பிரிஞ்சு இருக்கிறது ரொம்ப கஸ்டமாயிருக்கும்’

‘அம்மாவுக்கு கஸ்டமோ இல்லையோ மகளுக்கு கொஞ்சம் கஸ்டமாய்தான் இருக்கிறது. முதன் முறையாகப் பிரிஞ்சிருக்கிறாங்க, அதனாலே கொஞ்சம் மனசு கஸ்டப்படத்தான் செய்யும்..!’ என்றான் ஸ்ரீராம்.

‘உண்மைதான் ஊருக்குப் போனதும் உன்னைப்பற்றிக் கேள்வி மேல கேள்வி கேட்டிட்டே இருக்கப்போறா, ஆமா எப்படி அமெரிக்கா, உனக்குப் பிடிச்சிருக்கா காந்தள்?’;

‘பிடிச்சிருக்கு ஆன்டி, நியூயோர்க், நயாகராபோல்ஸ் இரண்டும் பார்த்திட்டோம். ரொம்ப நல்லாயிருக்கு. லிபார்டிசிலை பார்த்தோம், அப்புறம் நயாகராபோல்ஸ்ல ‘மெய்ட் ஆவ்த மிஸ்ட்’ மணிக்கணக்கா உட்கார்ந்து பார்த்திட்டே இருக்கலாம் போல இருந்திச்சு. படகிலே ரொம்ப அருகே சென்று நீர்வீழ்ச்சியைப் பார்த்தோம். அற்புதமான காட்சி, வாழ்நாளில் ஒரு தடவை என்றாலும் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று கனவு கண்டேன் அது நிறைவேறிடிட்சு..! இன்னும் அமெரிக்காவில நிறைய இடங்கள் பார்க்க இருக்கு..!

‘மியாமி, லொஸ்ஏஞ்;சல், சான்பிரன்ஸிஸ்;கோ, வாஷிங்டன் அப்புறம் ஹவாய் தீவுகள் என்று பெரியதொரு லிஸ்டே வெச்சிருக்கிறா?’ என்றான் ஸ்ரீராம்.

‘ஹவாயில இருக்கிற இந்து கோயிலுக்குப் போகவிருப்பம், உருத்திராட்ச மரமெல்லாம் அங்கேயிருக்காம், அப்புறம் மியாமிபீச், சான்பிரன்ஸிஸ்கோவில கோல்டன் பிறிட்ச், வாஷிங்டன் வெள்ளை மாளிகை, எல்.ஏயில கொலிவூட் வாணபிறதேஸ் ஸ்ரூடியோ இப்படிக் கொஞ்ச ஆசைகள் இருக்கு எனக்கு, ஒவ்வொரு விடுமுறைக்கும் ஒவ்வொரு இடத்திற்கும் கூட்டிட்டு போறேன்னு எனக்குப் புறமிஸ்பண்ணியிருக்கிறார்..!’ ஸ்ரீராமைப் பார்த்துப் புன்சிரிப்போடு சொன்னாள் காந்தள்.

‘புதிதாக திருமணம் செய்த ஜோடிகளுக்கு மணிக்கணக்கென்ன, நாட்கணக்காய்கூட ஒன்றாய் திரிந்து உலகைச் சுற்றிப்பார்க்க ஆசையாய்த்தான் இருக்கும், இல்லையா..?’ என்று வேடிக்கையாகச் சொன்னார் அங்கிள். 

அவர் சொன்னது முற்றிலும் உண்மை என்பது போல, ஸ்ரீராமும் காந்தளும் ஒருவரை ஒருவர் ரகசியமாகப் பார்த்து உதட்டுக்குள் சிரித்துக் கொண்டதை சொர்ணா கவனித்ததை அவர்கள் கவனிக்கவில்லை.

தனது செல்போனை எடுத்து அதில் உள்ள படங்களைக் காட்டினாள் காந்தள். ஸ்ரீராமும், அவளும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி லிபர்ட்டிசிலைக்கு முன்பாகவும், நயாகரா நீர்வீழ்ச்சியில் ‘மெயிட் ஆவ்த மிஸ்ட்டில்’ படகில் நீலநிறமழைக் கோட் அணிந்து ஒருவரை ஒருவர் அணைத்தபடி தூவானத்தில் நனைந்தபடி சில செல்பிகள் எடுத்திருந்தார்கள்.

‘இதுக்கெல்லாம் உன்னோட கணவருக்குத்தான் நன்றி சொல்லணும், இல்லையா மிஸ்டர் ஸ்ரீராம்’ என்றாள் சொர்ணா.

உண்மைதான் அவளது அமெரிக்கக் கனவை நிறைவேற்றி வைத்தவன் ஸ்ரீராம்தான். தங்கையின் திருமணத்திற்காக நியூஜேர்சியில் இருந்து ஊருக்குச் சென்றவன், திருமணத்திலன்று தேவதைபோல உலா வந்த தங்கையின் சினேகிதியான காந்தளை முதலில் அங்கேதான் சந்தித்தான். பெண்கேட்டு வீடு வந்தபோது, காந்தள் திகைத்துப் போனாள், இவ்வளவு சீக்கிரம் தனது கனவு நினைவாகும் என்று எதிர்பார்க்கவில்லை. புரிந்துணர்வுள்ள சினேகிதியின் அண்ணன் என்பது மட்டுமல்ல, அவளுக்கும் ஸ்ரீராமைப் பிடித்துக் கொண்டதால் சம்மதம் சொன்னாள்.

தனியாக இருவரும் சந்தித்தபோது ‘நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது எங்கள் எதிர்கால வாழக்கைக்கு நல்லதென்று நினைக்கின்றேன். என்னைப்பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தால் பயப்படாமல் கேட்கலாம் காந்தள்’ என்று சொன்னான் ஸ்ரீராம்.

‘எனக்குக் கேட்க எதுவும் இல்லை, உங்க தங்கை நீங்க ரொம்ப அன்பானவர் என்று அடிக்கடி சொல்வாள். என்னைப் புரிஞ்சு கொண்டு, என்னோட எப்பவுமே அன்பாய் இருந்தால் அதுவே எனக்குப் போதும்இ எங்கிட்ட கேட்க ஏதாவது இருந்தால் நீங்க கேளுங்களேன்’ என்றாள் காந்தள்.

‘இருக்கு ஒரேயொரு கேள்வி கேட்கட்டுமா?’ என்றான் ஸ்ரீராம்.

காந்தள் ஒருகணம் பயந்துபோனாள், என்ன கேட்கப் போகிறார், ஏதாவது பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருக்குமோ என்று நினைத்தாள்.

‘காந்தள் என்றால் என்ன மீனிங்?’ என்று கேட்டான் ஸ்ரீராம்

‘இதுவா கேள்வி?’ அவளுக்குச் சிரிப்பு வந்தது.

‘எதையாவது பிழையான கேள்வியாக் கேட்டிட்டேனா?’ என்றான்.

‘இல்லை உங்களுடைய படிப்புக்கு ஏற்ற கேள்வியா ஏதோ கேட்கப் போறிங்களோன்னு பயந்திட்டேன்..!’ என்றாள். 

‘நீ தானே கேட்கச் சொன்னாய், உனக்குச் சொந்தமான எல்லாவற்றையுமே நானும் பகிர்ந்து கொள்ள விரும்பிறேன்’ என்றான்.

‘எனக்குச் சொந்தமா?’ அவள் ஒன்றும் புரியாமல் கேட்டாள்.

‘ஆமா, உன்னுடைய பெயர் உனக்குத்தானே சொந்தம்’ என்றான்.

‘சரி சொல்றேன். காந்தள் என்றால் ஒரு அழகான மலரின்பெயர். மஞ்சளும், அரேஞ்சு நிறமும் கலந்திருக்கும், கார்த்திகை மாதத்தில் மலரும் பூ என்பதால் கார்த்திகைப்பூ என்றும் சொல்வார்கள். எங்க தாத்தா தமிழ்ப் பற்றாளராகவே வாழ்ந்தார். தொல்காப்பியத்தில், சங்க இலக்கியத்தில் காந்தள் என்ற சொல் பல இடங்களில் இடம் பெற்றிருந்ததால், கார்த்திகை மாதத்தில் நான் பிறந்தபடியால் எங்க தாத்தா இந்தப் பெயரை எனக்கு வைத்தார்’ என்றாள்.

அவன் மனதுக்குள் ஏதோ யோசித்தபடி கணக்குப்போட்டான்.

‘என்ன பலமான யோசனை, இந்தப்பெயர் பிடிக்கலையா?’ என்றாள்.

‘இல்லை, காந்தள் என்றால் கார்த்திகை ஞாபகம் வரும், கார்த்திகை ஞாபகம் வந்தால் உன்னோட பார்த்டே ஞாபகம் வரும்..!’ என்றான்.

அவள் ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள். ஒன்றோடு ஒன்றைத் தொடுத்து ஞாபகப்படுத்தும் அவனது நினைவாற்றலை மனசுக்குள் பாராட்டினாள்.

இரவு விருந்து சிறப்பாக இருந்தது. காந்தள் ஓடியோடி எல்லோருக்கும் உணவு பரிமாறினாள். குளிர்ந்து போயிருந்த உணவை மைக்ரோவேவில் வைத்துச் சூடாக்கிப் பரிமாறினாள். சுடச்சுட சப்பாத்தி, நாண், பட்டர்சிக்கன்கறி, சலாட் அதன் பின் வட்டிலப்பம் அற்புதமாக இருந்தது. 

சொர்ணா அன்ரியும் அங்கிளும் நன்றாகச் சுவைத்து உண்டார்கள். உணவருந்தி முடித்ததும் சற்று நேரத்தால், பிளாக்காபியும் பரிமாறினாள் காந்தள்.

‘கொஞ்ச நாட்களில் நன்றாகச் சமைக்கப் பழகிட்டியே, உங்கம்மா எப்பவும் என்ன செய்யப் போகிறாளோன்னு பயந்திட்டே இருந்தா. உன்னோட சமையலை மாப்பிள்ளையே ருசிச்சுச் சாப்பிடுறாரே, அப்புறம் என்ன..!’ என்று காந்தளைப் பாராட்டினாள் சொர்ணா.

‘பட்டர் சிக்கன் சமைப்பது அப்படி ஒன்றும் கஸ்டமில்லை, சிக்கன், மஞ்சள்தூள், இஞ்சி, தணியாதூள், மிளகாய்த்தூள், வெண்ணெய், பூண்டு, உப்பு, மிளகுத்தூள், வெங்காயம் கொஞ்சம் இருந்தால் போதும்.

‘அவ்வளவுதானா?’ இப்பதான் என்னென்னவோ எல்லாம் சமைக்கிறாங்களே, எனக்கென்ன தெரியும்..!’ என்றாள் சொர்ணா.

‘பட்டரில்  இஞ்சி, பூண்டு, மஞ்சள்தூள், தனியாதூள், மிளகுத்தூள், மிளகாய்தூள் எல்லாவற்றையும் கலந்து துவையல் போலப் பிசைந்து எடுத்து, சிக்கன் துண்டுகளுடன் சிறிது உப்பு சேர்த்து ஊறவைத்தபின் வேகவைக்க வேண்டும். அப்புறம் வேறு சட்டியில் எண்ணெய்யை ஊற்றி வெங்காயத்தை வதக்கி அதற்குள் சிக்கினையும், போதிய உப்பையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும். சப்பாத்தி, நாணோடு சுடச்சுடச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.’ என்று சுருக்கமாகச் சொல்லி முடித்தாள் காந்தள்.

‘அம்மாவோட கைபக்குவம் அப்படியே உன்கிட்டையும் இருக்கு, கமகமன்னு சாப்பாட்டு வாசம் வரும்போதே நினைச்சேன், மாப்பிள்ளை அதிஸ்டசாலிதான்..!’ என்று சார்ட்டிபிக்கேட் கொடுத்துவிட்டு, சொர்ணாவும் அங்கிளும் திருப்தியோடு கிளம்பினார்கள். அவர்கள் கிளம்ப ஆயத்தமானபோது, ‘அம்மாவை விசாரித்ததாய் சொல்லுங்க’ என்று சொல்லிச் சிறியதொரு பார்சலையும் கொடுத்தாள் காந்தள்.

‘உன்னுடைய சமையலைப் பற்றிச் சொன்னாலே போதும், நிச்சயம் அம்மா சந்தோஷப்படுவா..!’ என்று பதில் சொல்லி, விடைபெற்றுச் சென்றனர்.

சொர்ணா தான் தங்கியிருந்த ஹோட்டலை அடைந்ததும் முதல்வேலையாக, ஊரில் இருக்கும் காந்தளின் அம்மாவோடு தொலைபேசியில் கதைத்தாள்.

‘பயப்படாதே மீனா, காந்தள் இங்கே ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறாள். சுற்றுலா போன படம் எல்லாம் காட்டினாங்க, சமையலில் உன்னையும் மிஞ்சிவிட்டாள் என்றால் பாரேன், அவங்க தந்த இரவு விருந்து அந்தமாதிரி இருந்திச்சு, அதுவும் அவள் சமைத்த பட்டர்சிக்கன்கறி இப்பவும் கையிலமணக்குது, பயப்படாதே, அவள் புத்திசாலிப்பெண் சமாளிச்சுக் கொள்வாள்’ என்று சொல்லிக் காந்தளின் தாயாரை ஆறுதல் படுத்தினாள் சொர்ணா. 

இரவு படுக்கையில் ஸ்ரீராம் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான். மிகுதி உணவை பிறிச்சில் வைத்து, பாத்திரங்களைக் கழுவி வைத்து விட்டு காந்தள் படுக்கை அறைக்கு வந்தாள். ஸ்ரீராமுக்கு அருகே சென்று அவன் சற்றும் எதிர்பார்க்காமலே, குனிந்து கன்னத்தில் முத்தமொன்று கொடுத்தாள்.

‘எதுக்கு இது..?’ என்று ஆச்சரியமாய் அவளைப் பார்த்தான்.

‘எப்படி விருந்தினரைச் சமாளிக்கப் போறேன்னு பயந்திட்டே இருந்தேனா, தக்க சமயத்தில என்னைக்காப்பாத்திட்டீங்க, அதுக்குத்தான் இது..!’ என்றாள் காந்தள்.

‘அப்படின்னா தினமும் விருந்தினரைக் கூப்பிடலாமே, எங்களுக்குத்தான் உணவகம் பக்கத்திலேயே இருக்கிறதே, இன்றைக்கு ஆடர் கொடுத்ததுபோல, போன்ல்ல சொன்ன ஐந்து நிமிடத்தில் வாசல்ல கொண்டு வந்து தந்திட்டுப் போவாங்களே’ என்றான்.

‘தாங்ஸ்..!’அவள் நன்றியோடு அவனைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

‘ஆமா, எப்படி பட்டர்சிக்கன் சமைப்பது என்று நீயே சமைத்தமாதிரி அவங்களுக்கு எடுத்து விட்டாய்?’ சந்தேகத்தோடு கேட்டான் ஸ்ரீராம்.

‘அதுவா, சொர்ணா ஆன்டி சொல்வதைத்தான் அம்மா நம்புவா, அம்மாவை எப்படியும் திருப்திப் படுத்தணும் என்கிறதாலே இணையத்தளத்தில் போய்ப்பார்த்தேன். அப்படி ஒன்றும் கஸ்டமாய்த் தெரியலை..!’ என்றாள் காந்தள்.

‘அப்போ இனிமேல் உணவகத்தில ஆடர் கொடுக்க வேண்டிவராதா?’

‘தேவையில்லை, நான்தான் சீக்கிரம் சமையல் கற்றுக் கொண்டுடுவேனே’ என்றாள் காந்தள்.

‘அப்போ இனிமேல் இது கிடையாதா..?’ தனது கன்னத்தைக் காட்டிக் கேட்டான்.

‘கிடைக்கும், ஆனால் ஒரு கண்டிஷன், என்னோட சமையல் நல்லாயிருக்குன்னு அப்பப்போ சொன்னால் மட்டும் தான்;..!’ என்றாள் காந்தள்.

‘நல்ல காலம் கிடைக்காதோன்ணு பயந்திட்டேன், நல்லாயிருக்குன்னு அட்வான்ஸ்சாய் சொன்னா..?’

பொய்யாய்க் கோபம் காட்டி, அவனைப் பார்த்து முறைத்தாள் காந்தள்.


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper