Story - உயிர்த்த ஞாயிறில் உதிர்ந்த பூக்கள்!
உயிர்த்த ஞாயிறில் உதிர்ந்த பூக்கள்!
குரு அரவிந்தன்
‘என்னங்க..?’ என்றாள் மனைவி.
‘கொஞ்ச நேரமாவது என்னைத் தூங்கவிடேன்’ தூக்க கலக்கத்தில் சினந்த நான் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த எனக்கு அவளது குரல் எங்கோ பாதாளத்தில் இருந்து கேட்பது போல இருந்ததால், கனவாக இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றியது.
ஆனாலும் அவள் என்னைத் தட்டி எழுப்பியபோது தான் நிஜமாகவே என்னை எழுப்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
இரவு நேர வேலை செய்து விட்டு வந்தால், காலையில்தான் சற்று நேரம் நான் படுத்துத் தூங்குவது வழக்கம். மீண்டும் இரவு வேலைக்குப் போகவேண்டும். அதற்குள் பத்துத்தரமாவது என்னை எழுப்பி நச்சரித்து விடுவாள்.
‘என்னங்க?’ சற்று நேரத்தால் மீண்டும் காதுக்குள் கிசுகிசுத்தாள்.
‘சரி சொல்லு!’ காது கொடுத்துக் கேட்காவிட்டால் படுக்கையால் எழும்பும் வரையும் இவள் இப்படித்தான் நடந்து கொள்வாள் என்பதால் அவள் சொல்வதைக் கேட்கத் தயாரானேன்.
‘உங்ககிட்ட ரொம்ப நாளாய் ஒரு சேலை வாங்கித்தரச் சொன்னேனே, ஞாபகம் இருக்கா?’
என்னுடைய இயலாமையை வெளிக்காட்ட முடியாமல், நான் எதுவும் பேசாது கண்மூடிப் படுத்திருந்தேன்.
‘நாளைக்கு என்ன கிழமை என்றாவது உங்களுக்கு ஞாபகம் இருக்கா?, காலையில நாங்க பெருநாளுக்குப் போகணும், புரியுதா? என்றாள்.
சென்ற வியாழன் இரவு வேலைக்கு விடுப்பு எடுத்திருந்தேன். நேற்று அதாவது புனித வெள்ளியன்று மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தேவாலயம் சென்று வழிபட்டு வந்தேன். திரும்பி வரும்போதுதான் அவள் தனது பழைய சேலையைப் பற்றி நினைவூட்டியிருந்தாள்.
இரண்டு மூன்று நாட்களாக ஆண்டவரின் உயிர்த்த புனித ஞாயிறு பெருவிழாவிற்குப் போவதற்கான ஆயத்தங்களை அவள் செய்து கொண்டிருந்தாள். சொந்த பந்தங்கள் ஒன்றாகச் சந்திக்கும் தினமென்பதால் பிள்ளைகள் இருவரும் அணிவதற்கான உடைகளில் கவனம் எடுத்திருந்தாள்.
எனக்குத் தெரியும் அவளிடம் இருக்கும் கொஞ்சம் விலை உயர்ந்த கருநீல நிறச்சேலை அதுதான் என்று. சென்ற வருடமும் உயிர்த்த ஞாயிறு அன்று தேவாலயத்திற்கு அதைத்தான் உடுத்திக் கொண்டு வந்திருந்தாள். அதனால்தான் இந்த வருடமாவது புதிதாக ஒரு சேலையை நான் வாங்கத் தருவேன் என்ற எதிர்பார்ப்பு அவளிடம் இருந்தது.
கையிலே பணம் இல்லை, கைமாற்று வாங்கலாம் என்றால், தெரிந்த யாருக்கும் பணம் தருவதற்கு வசதியில்லை. ஒருநாள் கூத்துத்தான், ஆனாலும் எப்பாடுபட்டாவது இந்தமுறை அவளுக்கு ஒரு சேலையை வாங்கிக் கொடுத்து விட வேண்டும் என்று மனச்சாட்சி அவளுக்காக உருகியது. கடன் கேட்ட ஒரு சிலரும் கையை விரித்து விட்டார்கள். அக்கம் பக்கம் இருக்கும் அவர்களுக்கும் திருவிழா செலவுதானே!
‘சரி நாளைக்கு நான் இதையே கட்டிட்டுப் போறேன் இதுதான் கடைசி, கையில காசு வந்ததும் புது சேலை நீங்க வாங்கித்தராட்டி இனிமேல் எங்கேயும் உங்களோட வரமாட்டேன், புரிஞ்சுதா?’ அவள் கண்களைக் கசக்கிக்கொண்டு சற்று மிரட்டுவதுபோல, சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.
இயலாமையின் வெளிப்பாட்டை அவளது தொனியில் கொட்டி விட்டுச் சென்ற போது, எனக்கு என்னவோ போல இருந்தது. பாவம், குடும்பச் சுமையைத் தன்தலையில் சுமக்கும் அவள் நான் என்ன சொன்னாலும் நம்பிவிடுவாள். தற்சமயம் என்னிடம் கையிலே பணம் இல்லை என்று அவளுக்கும் தெரியும்.
பிள்ளைகளுக்காவது நல்ல விலை உயர்ந்த துணி எடுத்திருக்கலாம், அதைக்கூட இம்முறை செய்ய முடியவில்லை. கொஞ்சம் நல்ல துணியாய் எடுத்துத் தைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்குள் இருந்தது. ஞாயிறு விடுப்பு எடுக்க முடியாததால் அவர்களுடன் சேர்ந்து காலையில் பெருநாளுக்கும் என்னால் செல்ல முடியவில்லை.
தேவாலய வீதியில் ஆட்டோ எடுப்பது கொஞ்சம் சிரமம் என்பதால் காலையில் வேலை முடிந்ததும் நானே ஆட்டோ எடுத்துக் கொண்டு அங்கு சென்றேன். சற்று நேரம் பொறுத்து நிற்கும்படி ஆட்டோ ஓட்டுநரிடம் சொல்லிவிட்டு, தேவாலயத்தில் மனைவியையும், பிள்ளைகளையும் அழைத்துச் செல்லும் நோக்கத்தோடு தேவாலய வாசலை நோக்கிச் சென்றேன்.
தேவாலயத்தில் கூட்டம் நிறைந்து வழிந்தது. அதனால் உள்ளே செல்ல முடியாமல் வெளியே நிறைந்து நின்ற பக்தர்களுக்காக ஒலிபெருக்கியில் உள்ளே நடக்கும் நிகழ்வுகள் எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் ஒலிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.
‘மன்றாடுவோம், பெண்மையை மதித்து பெண்களுக்கு மதிப்புத் தந்த எங்கள் இறைவனே, உமது உயிர்ப்பின் முதல் சாட்சிகளாகப் பெண்களைத்தானே தேர்ந்தெடுத்தீர்! இதன் மூலம் அவர்களை எல்லாம் பெருமைப்படுத்தினீரே, உமக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். உம்மைப் போலவே நாங்களும், பெண்களை மதித்து அவர்களை மாண்புடன் நடத்த எமக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்’
ஒலிபெருக்கியில் காற்றோடு கலந்து வந்த வேண்டுதலைக் கேட்ட போது, மற்றவர்களுக்கு முன்னால் முகம் கோணாது எங்கள் பொருளாதார நெருக்கடியை வெளியே காட்டிக் கொள்ளாமல் எனது மனைவி எப்படிச் சாதுரியமாகச் சமாளிக்கிறாள் என்பதை எண்ணி அவளைப்பற்றிப் பெருமைப் பட்டுக்கொண்டேன்.
எதற்கும் இசைந்து போகும் மனைவியின் பெருந்தன்மையை மனதுக்குள் மெச்சிக் கொண்டேன். தனக்கு மட்டுமல்ல, பிள்ளைகளுக்கும் புதுத்துணி எடுத்துத் தரவில்லை என்று அவள் முதலில் குறைப்பட்டுக் கொண்டாலும், பிள்ளைகளுக்கு எங்கள் வசதிக்கேற்ப புதுத்துணி எடுத்துக் கொடுத்ததும் நிலமையைப் புரிந்து கொண்டு மௌனமாக இருந்து விட்டாள். நன்றாகத் தைப்பாள் என்பதால் மகளின் துணியில் அழகான பூவேலைப் பாடுகளைச் செய்து அதிலே தனது திறமையைக் காட்டியிருந்தாள்.
இன்னும் சில வருடங்களை எப்படியாவது ஓட்டிவிட்டால் எங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் பிறந்து விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. மூத்தவள் மகள் நன்றாகவே படித்தாள், பல்கலைக் கழகத்திற்கு கட்டாயம் அனுமதி பெறுவாள். பட்டப்படிப்பை முடித்து நல்ல வேலை கிடைத்து விட்டால், எங்கள் குடும்பம் தலை நிமிர்ந்து விடும். எல்லாப் பெற்றோர்களைப் போலவே எங்களுக்கும் அவளைப் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தது.
கடைக்குட்டி மகன் இன்னும் விளையாட்டுத் தனத்தோடு செல்லப் பிள்ளையாகவே இருக்கிறான். பிள்ளைகளுக்காகவே வாழ்கிறோம், அவர்கள் எதிர்காலம்தான் எங்கள் வாழ்க்கையின் எதிர்பார்ப்பு என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை பெற்றோர்களாகிய எங்களுக்கு இருந்தது.
இரவு நேரக் காவலாளியாக வேலைபார்ப்பதில் கிடைக்கும் சம்பளத்தில் குடும்பத்தைக் கையும் கணக்குமாகக் கொண்டு செல்லத்தான் முடிந்ததே தவிர, மேற்கொண்டு மேலதிக செலவிற்குப் போதுமானதாக இருக்கவில்லை. கனவுகள் நிறையவே இருந்தாலும் அதை எல்லாம் நிறைவேற்றக் கூடிய முறையில் எனது பொருளாதாரம் இருக்கவில்லை.
சிந்தனையோடு தேவாலய வாசலை நோக்கிச் சென்ற நான், திடீரென இடிமுழக்கம் போல ஒரு சத்தம் கேட்டதும் அதிர்ந்து போய் அப்படியே நின்றேன். என்னவாக இருக்கும், நிமிர்ந்து பார்த்தேன், வானம்கூட கறுத்தில்லையே!
கல்லால் எறிந்தது போல, ஏதோ ஒன்று திடீரென என் நெற்றியில் பட்டுத் தெறித்தது. தடவிப் பார்த்தேன் இரத்தம் கசிந்தது. தேவாலயத்தின் கூரை மத்தாப்பாய்ச் சிதறிப் பறந்தது போல ஒரு கணம் விழிகள் நம்ப மறுத்து உறைந்து நின்றன. மறுகணம் தேவாலயத்தின் வாசலுக்குள்ளால் சுடுண்டு உருண்டு வெளிவந்த கரும்புகை மண்டலம் காற்றோடு கலந்தது. உள்ளேயிருந்து கேட்ட அவலக் குரல்கள் அங்கே ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை உறுதிப்படுத்தின. நெற்றியில் சுள்ளென்று வலித்தது.
வாசல் வழியாக வெளியே ஓடிவந்த சிலரின் உடைகள் இரத்தத்தில் தோய்ந்து போயிருப்பதை அவதானிக்க முடிந்தது. அப்படி என்றால், ஆண்டவரே உள்ளே இருந்த என் மனைவி, பிள்ளைகளுக்கு எதாவது நடந்திருக்குமா?
இலங்கையில் யுத்தம் ஓய்ந்து பத்து வருடங்களாகி விட்டதால், சிறார்களுக்குக் கடந்த காலம் பற்றித் தெரிந்திருக்கவில்லை. மக்கள் கடந்தகால அவலங்களைக் கடந்து ஓரளவு சகஜ வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். யுத்தகாலத்தில் தொலைந்தவர்கள் இன்னும் இருக்கிறார்களா, இல்லையா என்பதுகூட இதுவரை தெரியவில்லை. கடந்த கால இழப்புக்களையே இன்னும் மீட்க முடியாமல் தவிப்பவர்களுக்குத்தான் அதன் வேதனையும் வலியும் புரியும் என்பதால், அந்த வலி என்றும் ஆறப்போவதில்லை.
இந்த சூழ்நிலையில் மீண்டும் குண்டு வெடிப்பா? தமிழ் பேசியதால் அன்று தமிழன் என்று இனம் கண்டு அடித்தார்கள், இன்றும் மதத்தின் பெயரைச் சொல்லி மீண்டும் அடிக்கிறார்கள். யார் அரசியல் செய்தாலும் முடிவில் பாதிக்கப் படுவது தமிழனாகத்தானே இருக்கிறான். ஏன் இந்த நாட்டில் மட்டும் திரும்பத் திரும்ப அவலநிலை ஏற்படுகின்றது. இதில் ஏதாவது அரசியல் சூழ்ச்சி கலந்து இருக்குமோ? எது எப்படி இருந்தாலும், நாட்டிலே இது போன்ற ஏதாவது அனர்த்தங்கள் நடந்தால், இறுதியில் பாதிக்கப்படுவது எங்களைப் போன்ற சராசரி மனிதர்கள் தானே!
வாசல்கதவால் வெளியே வந்த கும்பலை உடைத்துக் கொண்டு வெறிபிடித்தவன் போல உள்ளே ஓடிப்போனேன். புகைமண்டலத்தில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. குண்டு வெடிப்பால் மின்சாரம் வெட்டப்பட்டதால் விளக்குகள் அணைந்திருந்தன. உள்ளே எல்லோரும் இரத்தத்தில் குளித்த மனநோயாளர்களைப் போல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருப்பது உள்ளே இருந்த புகை மண்டலத்தில் மங்கலாகத் தெரிந்தது. சன நெரிசலில் யாரோ கீழே விழுந்திருக்க வேண்டும், காலில் தட்டுப்படவே நானும் தடுமாறி உருண்டு கீழே விழுந்தேன். தலையை நிமிர்த்தி, கீழே கிடப்பது யார் என்று பார்த்தேன், எனக்கு நன்றாகப் பழகிப் போன அந்தக் கருநீல நிறப்புடவை கண்ணில் பட்டது. என் மiவியின் புடவைதானா என்ற சந்தேகத்தோடு எழுந்து, குப்புற விழுந்து கிடந்த அந்தப் பெண்ணின் முகத்தைத் திரும்பிப் பார்த்தேன்.
அவளேதான், உடம்பெல்லாம் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
‘என்னாச்சு?’ ஒன்றுமே புரியாமல் அவளிடம் கேட்டேன்.
‘எனக்கு ஒன்றுமில்லை, பிள்ளைகளுக்கு என்னாச்சோ தெரியவில்லை, எங்கே என்று தேடிப் பாருங்கோ’ என்று என்னை விரட்டினாள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘போங்க சீக்கிரம்’ என்ற அவளைத் திருப்திப் படுத்துவதற்காக அவளை எழுப்பி அருகே இருந்த தூணோடு சாயவைத்து விட்டு பிள்ளைகளைத் தேடி ஓடினேன்.
பிள்ளைகள் இருவரும் ஏசுவின் சுருவத்திற்கருகே மூச்சுப் பேச்சற்று கீழே விழுந்து கிடந்தார்கள். குண்டு வெடித்ததில் அருகே இருந்த ஏசுவின் சுருவத்தில் இரத்தம் பொட்டுப் பொட்டாய் பதிந்திருந்தது. மண்டியிட்டு, உடம்பெல்லாம் இரத்தத்தில் தோய்ந்திருந்த அவர்களின் தலையை நிமிர்த்திப் பார்த்தேன், எந்த அசைவும் அவர்களிடம் இல்லை என்றாலும் மெதுவாக இதயம் துடிப்பது போல இருந்தது. அதிர்ச்சியில் ‘ஆண்டவரே என்ன சோதனை இது?’ என்று தலையில் அடித்துக் கொண்டேன்.
யாரை முதலில் வைத்திய சாலைக்குக் கொண்டு செல்வது. அதிர்ச்சியில் என்ன நடக்கிறது என்பதை உணரமுன்பே, ஆம்புலன்சில் வந்தவர்கள் காத்திருக்க நேரமில்லை என்பது போல, அவசரமாகப் பிள்ளைகள் இருவரையும் காவுபடுக்கையில் தூக்கிக் கொண்டு சென்றார்கள். பொறுத்திருக்க இது நேரமில்லை, ஓடிப்போய் ‘மனைவியைக் காப்பாற்று’ என்று மனசு கட்டளையிட்டது. அவசரமாக மனைவியை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அருகே இருந்த வைத்திய சாலைக்குச் சென்றேன். அங்கே இடம் இல்லை என்று உள்ளே எடுக்க மறுத்து விட்டார்கள்.
அருகே இருந்த ஒவ்வொரு வைத்திய சாலையாகத் திரிந்தேன். ஆம்புலன்சில் வந்தவர்களை மட்டுமே அங்கே அனுமதித்தார்கள். எப்படியோ மூன்று மணி நேரத் தாமதத்தின் பின் பதிவு செய்து மனைவியை உள்ளே எடுத்தார்கள். தலையிலே இருந்த காயத்திற்கு உடனே மருந்து போட்டுக் கட்டுப் போட்டார்கள். தலையில் ஏற்பட்ட காயம் என்பதால் ஸ்கான் பண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் அதற்குச் சற்றுத் தாமதம் ஆகும் என்றார்கள்.
‘எனக்கு ஒன்றுமில்லை பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வாங்க’ என்று படுக்கையில் இருந்த மனைவி வலியோடு முனகினாள்.
டாக்டருக்கு நிலைமையை விளக்கினேன். ‘நாங்க உங்க மனைவியைப் பார்த்துக்கிறோம், அவங்க சின்னப்பிள்ளைங்க உடனே போய் அவங்களுக்கு என்னாச்சு என்று பாருங்கள்’ என்றார் மனிதாபிமானத்தோடு. அவரது வார்த்தையில் நம்பிக்கை ஏற்படவே, மனைவியை அங்கே விட்டுவிட்டு பிள்ளைகளைத் தேடி ஓடினேன். பிள்ளைகளை அனுமதித்த வைத்திய சாலையைத் தேடிப்பிடிக்கவே சில மணி நேரம் எடுத்தது.
தேவாலயத்தில் நடந்த அவலத்தின் ஓலம் அந்த வைத்திய சாலை எங்கும் கேட்டதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவசர சிகிட்சைப் பிரிவு என்பதால் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அங்கே உறவுகளை அனுமதித்து விட்டு காத்திருந்த என்னைத் தெரிந்த சிலர் எனக்கு ஆறதல் சொல்லி, பிள்ளைகளைப் பற்றி வரவேற்பு மேசையில் இருந்த பெண்ணிடம் விசாரிக்கச் சொல்லவே, அவளிடம் விசாரித்தேன்.
நான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதிர்ச்சியில் அங்கேயே உறைந்து போயிருந்போது, மனைவியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், இரத்தம் தேவைப் படுவதாகவும் உடனே அங்கே வரும்படியும் செல்பேசியில் அழைத்துச் சொன்னார்கள். எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு அங்கே விரைந்தபோது, தலையிலே கட்டுடன் மனைவியின் கண்கள் மூடியிருக்க, ஆக்ஸிஜின் கொடுத்துச் சலைன் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.
என் குரல் கேட்டதும் மெல்லக் கண்விழித்துப் பார்த்தவள், என் கைகளைப் பற்றிக் கொண்டு, உதடுகள் துடிக்க, ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பது புரிந்தது. எனக்காகவே காத்திருந்தது போல, ‘என்னங்க, பிள்ளைகளை நீங்கள்தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேணும்’ என்று மெல்ல அனுங்கினாள். அவளது விழியோரம் கண்ணீர் துளிர்த்த போது, அவள் ஏன் அப்படிச் சொல்கிறாள் என்பது முதலில் புரியவில்லை. அவளது கைகள் குளிர்ந்து போக, நடுங்கிய அவளது கைகளின் பிடிதளர்ந்தது.
தளர்ந்து போன கைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஒரு கணம் உறைந்து போயிருந்தேன். ‘ஐயாம் சொறி’ என்று டாக்கடர் ஆறுதல் சொன்ன போதுதான் அவள் என்னை விட்டுப் பிரிந்து விட்டாள் என்பதை டாக்டர் சொல்லாமல் சொன்னது புரிந்தது. அப்போதுதான் சில மணி நேரங்களில் விதி என் வாழ்க்கையோடு விளையாடிப் புரட்டிப் போட்டு விட்டதை உணர்ந்தேன்.
மண்டை விறுவிறுத்துப்போக, நான் ஒரு கணம் உறைந்து போய் நின்றேன், யாரை நோவேன் யாரிடம் சொல்வேன். மதம் என்றால் வெறி என்பதனால்தானோ என்னவோ, மனிதனுக்கு மதம் பிடித்ததால் என்னைப் போன்ற அப்பாவிகள் பலரின் குடும்பங்கள் பலியாகி இன்று சீரழிந்து போயிருக்கின்றன.
இன்று எல்லாவற்றையும் இழந்து தனி மரமாய் நிற்கும் போதுதான், நாட்கள், வாரமாய், மாதமாய் வேகமாகக் கடந்து விட்டது தெரிந்தது. அவள் அன்று சொன்னது போலவே அவள் கடைசியாக உடுத்த சேலை அந்தக் கருநீலப் பழைய சேலையாகத்தான் இருந்தது. வேடிக்கையாகப் பொய்க் கோபத்தோடு அவள் சொல்லியிருந்தாலும், இன்னுமொரு முறை அந்த சேலையை உடுக்கவோ, என்னோடு ஒன்றாக வெளிக்கிட்டு வெளியே வரவோ அவளுக்குச் சந்தர்ப்பமே இல்லாமல் விதி சதி செய்து விட்டது!
இம்முறை எல்லோருக்குமான உயிர்த்த ஞாயிறு, எனக்கு மட்டும் கறுத்த ஞாயிறாகிவிட்டது! குடும்பம் என்பது ஒரு சுமை அல்ல, அது ஒரு சுகம் என்பதைத் தனிமரமாக நிற்கும் போது ஏற்படும் வலியில் தான் உணரமுடிகின்றது. பிள்ளைகளை நான் கவனமாக வளர்த்தெடுப்பேன் என்ற நம்பிக்கையோடு அவள் போய்விட்டாள்.
பிள்ளைகள் இருவரும் தேவாலயக்குண்டு வெடிப்பில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போதே இறந்து போனதை உயிருக்குப் போராடிய மனவிக்கு நான் கடைசிவரை சொல்லவே இல்லை! உயிர்த்த ஞாயிறில் உதிர்ந்த இதுபோன்ற சின்னஞ் சிறிய பூக்களுக்காக இன்னும் ஒரு உயிர்த்த ஞாயிறு வருமா?
Comments
Post a Comment