Story - சௌப்படி
சௌப்படி
(குரு அரவிந்தன்)
அன்று காலை பத்திரிகையில் வந்த செய்தி ஒன்று என்னைப் பாதித்திருந்தது. மனசு கேட்காமல், திரும்பவும் அந்தப் பக்கத்தைப் புரட்டிப் பார்த்தேன்.
‘மூடநம்பிக்கைகள் மனிதனின் சிந்தனை விருத்தியைத் தடைப்பண்ணிக் கொண்டே இருக்கும். படிப்பறிவு உள்ளவர்கள் உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தாவிட்டால் இளம் பெண்களின் நிரந்தர சிறைச்சாலைகளாக மட்டுமல்ல, கல்லறைகளாகவும் சௌப்படிகள் (ஊhhயரியனi) மாறிவிடலாம்!’ என்று அந்தப் பத்திரிகைச் செய்தி எச்சரிக்கை செய்தது.
அந்த செய்தி என்னையும் பாதித்ததற்குக் காரணம் எனது ஆசை அக்காதான்!
அக்கா என்னோடு இல்லையே என்ற துயரம் அடிக்கடி என்னை வதைத்துக் கொண்டிருந்தது. அவள் என்னோடு இருந்திருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எனக்கு நல்லதொரு தோழியாய், வழிகாட்டியாய் இருந்த எனது அக்கா துளசியை எப்படி நான் பிரிந்தேன்.
ஐந்து பெண் குழந்தைகளில் நான் இரண்டாவதாக இருந்தேன். கட்மண்டுவில் உள்ள தூரத்து உறவினர் ஒருவர் தனக்குப் பிள்ளைகள் இல்லை என்று குறைப்படவே, நகரத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த அவர்களுக்கு எங்கப்பா என்னைத் தாரை வார்த்துக் கொடுத்திருந்தார்.
பருவம் அடையும் முன்பே வீட்டை விட்டு நான் கிளம்பி இருந்ததால் அக்கா பட்ட கஷ்டங்கள் எதையும் நான் அனுபவிக்கவில்லை. நகர வாழ்க்கை எனக்கு எல்லா வசதிகளையும் கொடுத்திருந்தது. அதனால்தான் இன்று, எனது பெற்றோரைப் பிரிந்திருந்தாலும் என்னால் சுதந்திரமாக இருக்க முடிகின்றது.
அச்ஹம் பகுதியில் உள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டைப் பற்றி எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது. ஒரு அறையுடன் கூடிய சிறிய வீடு என்பதால், சிறுமிகளான நாங்கள் பகலில் அதிக நேரத்தை முற்றத்திலேயோ அல்லது அக்கம் பக்கத்திலேயோ தான் செலவிட்டோம். நாங்கள் ஒன்றாக விளையாடினோம், ஒன்றாகப் படுத்து எழும்பினோம், பசி பட்டினியோடு எல்லாமே தினசரி வாழ்க்கையில் ஒரு நிகழ்வாக நடந்து கொண்டிருந்தது. அப்பா ஒரு தொழிலாளி, கையிலே பணம் கிடைத்த போதெல்லாம் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வருவார்.
இப்படியே நகர்ந்து கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில் ஒரு நாள் திடீரெனக் குழப்பம் ஏற்பட்டது. எனக்குக் காரணம் புரியவில்லை, ஆனாலும் அந்த நாளை இன்றும் என்னால் மறக்க முடியாது. அப்போது அக்காவுக்குப் பதின்மூன்று வயதிருக்கும், திடீரென ஒரு நாள் எங்களை விட்டு அவள் தனிமைப் படுத்தப்பட்டாள். வீட்டிற்குப் பின்னால் இருந்த எங்கள் மாமாவின் சிறிய மாட்டுத் தொழுவத்தில் அவளைத் தங்க வைத்தார்கள்.
பத்துப் பதினொரு நாட்களாய் இருக்கலாம், பகலும் இரவும் அவள் அதற்குள்ளேயே இருட்டுக்குள் அடைந்து கிடந்தாள். எங்களோடு சேர்ந்து விளையாடவோ அல்லது வெளியே வரவோ அவளைப் பாட்டி அனுமதிக்கவில்லை. அக்காதான் வீட்டிற்கு மூத்த மகள் என்பதால் வீட்டிலே எதைச் சொன்னாலும் முரண்படாமல் மௌனமாய் தலையாட்டுவாள். பாட்டியிடம் காரணம் கேட்டதற்கு அது அப்படித்தான் என்று எதையோ சொல்லி மழுப்பிவிட்டாள்.
அக்கா எந்தக் குற்றமும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் அவள் செய்யாத குற்றத்திற்காக அவள் ஏன் இருட்டறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று மனதுக்குள் புழுங்கினேன்.
பாரம்பரிய நடைமுறை என்று சொல்லி ஊரிலே பலர் மூட நம்பிக்கையுடன் வாழ்ந்தார்கள். எங்கள் பாட்டியும் அப்படியான நம்பிக்கையுடன் தான் இருந்தாள். நான் நகரத்தில் சென்று வாழ்ந்ததால் என்னால் நான் பிறந்த அந்தக் கிராம வாழ்க்கையை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது.
ஒரு முறை பெற்றோரைப் பார்க்கக் கிராமத்திற்குச் சென்ற போது, சமையல் அறையில் வைத்துப் பாட்டி கேட்ட முதல் கேள்வி ‘நீ தீட்டுப்பட்டு இருக்கிறாயா?’ என்பதுதான். என்னால் பாட்டியைப் புரிந்து கொள்ள முடிந்தது. கிராமத்து முதியவர்கள் சிலருக்கு இப்படியான நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரியதொரு விடயமாக இருந்தது. இதுவரை என்னை யாரும் அப்படிக் கேட்டதில்லை. நகரத்தில் எல்லா வசதிகளும் இருந்தன. மாதவிடாய் காலங்களில் சுகாதார முறையில் தயாரிக்ப்பட்ட அதற்கான துணிகளையே நான் பாவிக்கப் பழகிக் கொண்டதால் எனக்கு இதில் எந்தக் குழப்பம் இருக்கவில்லை.
நான் பிறந்த கிராமத்தில் அந்த வசதிகள் இருக்கவில்லை. இப்படியான நேரங்களில் பழைய துணிகளையே அவர்கள் திரும்பத் திரும்பப் பாவித்தார்கள். அப்படிப் பாவித்த துணிகளை வீட்டில் துவைத்துக் காயவைப்பதற்கே இளம் பெண்கள் வெட்கப்பட்டார்கள். வயதிற்கு வந்த நாளில் இருந்து ஒவ்வொரு மாதமும் மூன்றோ அல்லது நான்கு நாட்கள் அக்கா அந்தக் குடிசைக்குள்தான் காலத்தைத் செலவிட்டாள்.
அம்மாவும் இப்படித்தான், பிள்ளைகள் பிறந்த போது அந்தக் குடிசைதான் சில நாட்களுக்கு அம்மாவிற்கும் தஞ்சம் கொடுத்தது. நகரப்பள்ளிக்கு நான் சென்றதால் மெல்ல மெல்ல இதற்கான காரணம் புரியத் தொடங்கியது.
இதுவே எனது கிராமமாக இருந்தால், சமையலறைக்கோ, தோட்டத்திற்கோ செல்லக்கூடாது, மரம் செடி கொடிகளில் தொடக்கூடாது, கிணற்றிலே தண்ணீர் அள்ளக்கூடாது, ஆண்களைத் தொடக்கூடாது, குளிக்கக்கூடாது, தண்ணீரில் இறங்கங்கூடாது, கண்ணாடி பார்க்கக்கூடாது, சூரிய வெளிச்சம் படக்கூடாது, தலை வாரக்கூடாது, பாடசாலைக்குக், கோயிலுக்குச் செல்லக்கூடாது, பால் அருந்தக்கூடாது இப்படி எத்தனையோ கட்டுப்பாடுகள் பெண்களுக்காக இருந்தன. அப்படி ஏதாவது தவறி நடந்தால் அது கெட்ட சகுனம் என்றார்கள். குடும்பத்திற்கு மட்டுமல்ல, அந்தக் கிராமத்திற்கே அதனால் அழிவுதான் என்றார்கள். இயற்கைச் சீற்றம் ஏற்பட்டால் கூட அதற்கும் பெண்களையே காரணம் சொன்னார்கள்.
ஒருமுறை வீட்டிலே எல்லோரும் ஒன்றாக இருந்தபோது, நான் இது பற்றிப் பேச விரும்பினேன். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இது பற்றிய அறிவியல் விளக்கத்தைத் தரவிரும்பினேன். பாட்டியிடம்தான் முதலில் இதைப்பற்றிய விளக்கத்தைக் கொடுத்தேன்.
‘பாட்டி, எனக்கொன்றும் நடக்கவில்லையே? நான் மாதவிடாய் வந்தால் உடனே குளிக்கிறேன், எனது படுக்கையிலேயே படுக்கிறேன், சமையல் அறைக்குள் செல்கிறேன், பள்ளிக்குப் போகிறேன், விளையாடுகிறேன், பழங்கள் சாப்பிடுகின்றேன், ஏன் பால்கூடக் குடிக்கிறேன்.’ என்றேன்.
பாட்டியின் முகம் சட்டென்று விகாரமாக மாற, என்னை முறைத்துப் பார்த்தாள்.
‘நஞ்சை விதைக்கவா நீ இங்கே வருகிறாய், வந்தால் இனிமேல் நீ வாய் திறக்கக் கூடாது, புரியுதா?’ பாட்டி கீச்சுக் குரலில் கத்தினாள்.
‘ஏன் பாட்டி, நல்லதைச் சொல்லக்கூடாதா?’
‘உன்னுடைய ஆட்டத்தை எல்லாம் பட்டினத்தில வெச்சுக்கோ, இங்கே, இந்த வீட்டிலே வேண்டாம்.’ பாட்டியின் மிரட்டல் மேற்கொண்டு பேசாது எனது வாயை அடைத்து விட்டது. இப்படி, அடிக்கடி பாட்டி போடும் பத்திரகாளி வேடம்தான், ஊருக்குப் பயந்து வீட்டிலே எல்லோரையும் சிந்திக்க விடாமல் நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.
அக்காவுக்காக நான் கொண்டு வந்த சில ‘சனிட்டறிபாட்சைக்’ (ளயnவையசல Pயனள) கொடுத்து விட்டு விடை பெற்று நகரத்திற்குத் திரும்பினேன். இந்தக் கிராமத்தில் பாட்டி, அம்மா போன்றவர்களின் காலம் முடிவுக்கு வந்து விட்டது, ஆனால் அக்கா இனித்தான் வாழ்க்கையை ஆரம்பிக்கப் போகிறாள். எவ்வளவு காலத்திற்கு அக்காவின் வாழ்க்கை இப்படியே மாட்டுத் தொழுவத்தோடு அமையப் போகிறது. அது மட்டுமல்ல, தங்கைகளின் எதிர்காலத்தை நினைக்கவும் பயமாக இருந்தது. ஒருவேளை இப்படியான கிராமத்து வாழ்க்கைக்கு வேறுவழி இல்லாமல் இவர்கள் தங்களைப் பழக்கப் படுத்திக் கொண்டு விடுவார்களோ?
ஒரே குடும்பத்தில் பிறந்தாலும் எனக்குக் கிடைத்த வசதிகள் அக்காவிற்குக் கிடைக்கவில்லை. அவரவர் தலைவிதி என்று நினைத்துக் கொண்டேன். மழை விட்டதும் குளிர் விட்டுப் போனது போல, வீட்டிற்குச் சென்றதும் பள்ளிப் படிப்பிலே கவனம் செலுத்தத் தொடங்கினேன். படிக்க வேண்டும், வாழ்க்கையிலே முன்னேற வேண்டும் என்பதே எனது சிந்தனையாக இருந்தது. ஆனால் அதை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, ஒருநாள் கிராமத்தில் இருந்து அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வந்தது.
‘அக்காவிற்குப் பாம்பு கடித்து விட்டது, ஆபத்தான நிலையில் இருக்கிறாள்’
என்னை வளர்த்த பெற்றோரையும் அழைத்துக் கொண்டு பதறியடித்து எங்கள் கிராமத்திற்குச் சென்றேன். வசதிகள் அற்ற கிராமம் என்பதால் இரவில் விஷயந்துக்களின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது.
அங்கே அக்காவின் உடலைத்தான் பார்க்க முடிந்தது. மரணத்திலும் புன்னகைத்தடி அவள் படுத்திருந்தாள். எவ்வளவு அவசரமாகத் தன் வாழ்க்கையை அவள் முடித்துக் கொண்டாள். மரணத்தை வேடிக்கை பார்க்க வந்த ஊரோ இது ‘தெய்வக் குற்றம்’ என்று பழியையும் அவள் மீதே போட்டு விட்டு மௌனமாக இருந்தது.
இரவு சௌப்படியில் (ஊhhயரியனi) தனிமையில் படுக்கச் சென்ற அக்காவை விஷப்பாம்பு ஒன்று காலில் கடித்திருந்தது. வைத்திய சாலையில் அதற்கான மருந்து வசதிகள் இல்லாததால் ஏழு மணி நேரம்வரை உயிருக்குப் போராடிய அக்கா இறந்து போயிருந்தாள். மலைப்பகுதித் தெருக்கள் மழை வெள்ளத்தால் மூடப்பட்டிருந்ததால் கிராமத்து வைத்திய சாலைக்கு அக்காவைக் கொண்டு செல்ல மூன்று மணி நேரம் எடுத்ததாம்.
இந்தக் கிராமத்தவர்களின் மூடநம்பிக்கையால் என் அக்கா போன்ற இளம் பெண்கள் பலி எடுக்கப்படுவதை யாரும் கண்டு கொள்வில்லை. இப்படித்தான் சௌப்படியில் படுத்த 14 வயது இளம் பெண் ஒருத்தி சென்ற வாரம் புகையால் மூச்சுத் திணறி இறந்து போனதாக பத்திரிகையில் செய்தி வந்தது. பக்கத்துக் கிராமமான டெலிக்காவில் இன்னுமொரு பதுமவயதுப் பெண்ணும் சென்ற வருடம் சௌப்படியில் படுத்த போது இறந்து போனாள். இன்னும்மொரு இளம் பெண், வெறிபிடித்த ஒருவனால் மோசமாகப் பாதிக்கப் பட்டிருந்தாள். இப்படியான அந்த இறப்புகளுக்கான காரணங்கள் அனேகமாக மூடிமறைக்கப் பட்டுவிட்டன.
எங்கள் கிராமத்து இளம் பெண்களுடன் சேர்ந்து ஒருநாள் நாங்கள் ஒரு கணக்கெடுத்தோம். அப்போதுதான் சுமார் 500 மேற்பட்ட இது போன்ற சௌப்படிகள், எங்கள் கிராமத்தில் இன்னும் இருக்கின்றன என்பது தெரிய வந்தது. கல்வி அறிவு பெற்று, சமூதாயச் சீர்திருத்தம் ஏற்படும் வரை இந்த சௌப்படி முறையை யாராலும் மாற்;ற முடியாமல் போகலாம். இதற்கான அரசு இயற்றும் சட்டங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை. இதுபோல நெருப்பால், மிருகங்களால் மட்டுமல்ல, மனித மிருகங்களால் சௌப்படியில் பாதிக்கப்பட்ட இளம் பெண்களோ அதிகம். இளம் பெண்களின் மாதாந்தச் சிறைச்சாலைகளாக இன்றும் இந்தச் சௌப்படிகள் இருக்கின்றன.
யார் என்ன சொன்னாலும், இப்பகுதி மக்களிடையே இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என்னால் முடிந்ததை நான் செய்ய வேண்டும். ஒவ்வொரு உயிருக்கும் சுயமதிப்புடன், முக்கிய தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்வதற்கான உரிமை இந்த உலகில் இருக்க வேண்டும். மூடநம்பிக்கையால் ஏற்பட்ட அக்காவின் மரணம் போன்ற மரணங்கள் இனியும் இந்தக் கிராமங்களில் நடக்கக் கூடாது, எல்லோரும் இதைப் புரிந்து கொண்டால் இவ்வுலகம் நிச்சயம் செழிக்கும் என்ற சிந்தனையோடு, அக்காவின் இறுதிக் கிரிகைகளை முடித்துக் கொண்டு நகரத்திற்குத் திரும்பினேன்.
சிந்தனை வேறு, செயல் வேறு என்பது நகரத்திற்குச் சென்ற பின், பள்ளிப் படிப்பில் மூழ்கிய போது தான் புரிந்தது. இன்னுமொரு பதுமவயதுப் பெண்ணின் உயிர் சௌப்படியில் காவு கொடுக்கப் படும்வரை நாங்கள் தூங்கிக் கொண்டேதான் இருப்போமோ தெரியாது!
வார்த்தைகள் ஏனோ மௌனமாக, இனி ஒருபோதும் இன்னுமொரு பெண் இதற்குப் பலியாகக்கூடாது என்று மனதுக்குள் பிரார்த்திப்பதற்கு மட்டும்தான் இப்போது என்னால் முடிகின்றது. இதுபோன்ற மரணங்கள் எந்தவொரு தடையும் இல்லாமல், தொடர்ந்து கொண்டேதான் இருக்கப் போகின்றன.
Comments
Post a Comment