Story - ஏக்கம்!
ஏக்கம்!
குரு அரவிந்தன்
இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் நான் இந்தப் பாடசாலைக்கு மாற்றலாகி வந்திருந்தேன். அதிபரின் அலுவலகம் எங்கே என்று தேடிக் கொண்டிருந்த போது அவள் சிரித்த முகத்தோடு எனக்கு எதிரே வந்து, ‘குட்மோணிங் டீச்சர்’ என்று சொல்லி எனக்கொரு அதிர்ச்சி கொடுத்தாள்.
‘டீச்சரா? எப்படித் தெரியும்?’
‘புது டீச்சர் இன்று வர்றதா பிரின்சிபல் சொன்னாவே’
‘அப்படியா? உன் பெயர் என்னம்மா?’
‘உஷா!’
அதிபரின் அறை வாசல் வரை என்னை அழைத்துச் சென்றவள், எதுவுமே சொல்லாமல் ஓடி மறைந்து விட்டாள். அப்புறம் எனது வகுப்பறைக்குள் நான் நுழைந்த போது தான் தெரிந்தது அவளும் நான்காவது தான் படிக்கிறாள் என்று.
ஏனோ இந்த இரண்டு வாரத்தில் எனக்குப் பிடித்த மாணவ, மாணவிகளில் அவளும் ஒருத்தி ஆகிவிட்டாள். ஏதோ ஒன்று அவளிடம் என்னைக் கவர்ந்தது. அவளது முகத்தில் கவர்ச்சியும், சுட்டித் தனமும் இருந்தன, ஆனால் அவளது சிரிப்பின் பின்னால் ஒருவித சோகம் தெரிந்தது. அது ஏன் என்று தான் எனக்குப் புரியவில்லை. அதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம் எனக்குள் நினைத்தேன்!
அன்று வெள்ளிக்கிழமை. கட்டுரை வரையும் நாள்.
நாளை சனிக்கிழமை ‘மதேஸ் டே!’ தாயைப் போற்றி மரியாதை செய்யும் தினம். மேலைநாடுகளில் மிகவும் முக்கியமான தினம். அத்தினத்தில் தாயின் ஸ்தானத்தில் இருப்பவர்களைப் போற்றி மதித்து அவர்களை வாழ்த்திப் பரிசுகள் கொடுப்பது வழக்கம்.
தாயின் மேன்மை பற்றி இவர்களுக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காக ‘தாயிற் சிறந்த தொரு கோயிலுமில்லை’ என்ற தலைப்பில் எனது மாணவர்கள் எல்லோரையும் கட்டுரை ஒன்று வரையும் படி கூறினேன்.
‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்ற ஒளவையின் வாக்கியத்தை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி "மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்"" என்ற உலக நீதியையும் அவர்களுக்கு தெளிவாக விளங்கப் படுத்தினேன். ‘அம்மா’ என்ற அந்த மந்திர வார்த்தைக்குள் கட்டுப்பட்டது போல எல்லோரும் ஆர்வத்தோடு தங்களுக்குத் தெரிந்தவற்றை எழுதத் தொடங்கினார்கள்.
அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதை ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்தேன்.
‘அம்மா என்று அழைக்காத நாளில்லையே’ என்ற பாடல் வரிகளைக்; குறிப்பிட்டு ஒரு மாணவி எழுதிக் கொண்டிருந்தாள். ‘தலைவாரிப் பூச்சூடிப்’ பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்பும் பாரதிதாசன் கண்ட தாயைப்பற்றி வேறு ஒரு மாணவி கட்டுரை வரைந்து கொண்டிருந்தாள். இன்னுமொரு மாணவன் 'தனது காதலிக்காக தாயின் இதயத்தைப் பறித்துச் சென்ற ஒருவன் தடுக்கிக் கீழே விழுந்த போது அந்த மகனைப் பார்த்து தாயின் இதயம் ‘மகனே வலிக்கிறதா?’ என்று கேட்டதாம்’ என்று எழுதிக் கொண்டிருந்தான்.
இப்படியாக அம்மா என்றால் அன்பு, அம்மா என்றால் பாசம், அம்மா என்றால் தெய்வீகம் என்றெல்லாம் அவர்கள் தாயைப் பற்றிக் கட்டுரையில் புகழாரம் சூட்டிக் கொண்டு இருந்தார்கள்.
உஷாவின் நோட்டுப் புத்தகத்தை எட்டிப் பார்த்தேன். ‘அம்மா’ என்று தலைப்புப் போட்டு விட்டு வேறு எதுவும் எழுதாமல் அந்தப் பக்கத்தை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருந்தாள்.
‘உஷா என்னாச்சு உனக்கு? ஏன் ஒன்றும் எழுதவில்லை? முகத்தை ஏன் இப்படித் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்?’
என்னை நிமிர்ந்து பார்த்தவளின் விழி ஓரம் நீர்முட்டி நின்றது.
‘ஒன்றுமில்லை!’ என்று தலையசைத்தாள்.
தலையசைப்பில் கண்ணீர்த் துளி ஒன்று நோட்டுப் புத்தகத்தில் பொட்டென்று விழுந்து தெறித்தது.
அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டு தன்னைச் சமாளித்தாள்.
‘அழாதே! இங்கே யாராவது ஏதாவது தப்பாய்ச் சொன்னாங்களா?’
‘இல்லையே!’ என்று கலங்கிய கண்களுடன் அவள் தலையசைத்து மழுப்பிவிட்டாள்.
‘அப்போ ஏன் அழுகிறாய்? கண்ணைத் துடைச்சிட்டு அம்மாவைப் பற்றி உனக்குத் தெரிந்தவற்றை எழுதம்மா!’
அவள் மெல்லத் தலையசைத்தாலும் அவளுக்குத் தாயைப் பற்றி எழுதுவதில் இஷ்டமில்லை என்பது அவளது அந்த அசைப்பில் எனக்குப் புரிந்தது.
‘எதற்காக திடீரென்று கட்டுரை எழுத மறுக்கிறாள்?’ எனக்குள் உறுத்திய அந்தக் கேள்விக்கு அவளது தோழி சிந்து தான் பதில் சொன்னாள்.
‘டீச்சர்! உஷாவிற்கு அம்மா இல்லை!’
‘உஷாவிற்கு அம்மா இல்லையா?’ எனக்கு என்னவோ போலாகிவிட்டது. அதைக் கேட்டதும் ஏனோ மனதுக்கு ரொம்ப வேதனையாய் இருந்தது.
‘உஷாவிற்கு அம்மா இல்லையா?’
என்னைப் போலவே உஷாவும் சின்னவயதில் தாயை இழந்து விட்டாளா? தாயின் அரவணைப்பு இல்லாமல் ஒரு பெண் குழந்தை வளர்வதன் கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஏனென்றால் நானும் அப்படி ஒரு நிலையில் வளர்ந்தவள்தான். நான்பட்ட அனுபவங்களையும், வேதனை களையும் எப்படி வெளியே எடுத்துச் சொல்ல முடியும்?
அவளுக்கு எப்படியாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்லி அவளைத் தேற்ற வேண்டும் என்று என்னைத் தயார்ப் படுத்திக் கொண்டேன்.
‘உஷா இங்கே பாரம்மா! ஆண்டவன் எல்லோருக்கும் எல்லா வசதிகளையும் கொடுப்பதில்லை. சின்னவயதிலேயே தாயை இழந்த உனது ஏக்கம் எப்படிப் பட்டதென்று எனக்குத் தெரியும்! ஏனென்றால் நானும் உன்னைப் போலத்தான் சின்ன வயதிலேயே அம்மாவை இழந்தவள்.’
அம்மா கடைசி மூச்சு இருக்கும் வரை என்னைப் பற்றித் தான் கவலைப் பட்டுக் கொண்டு இருந்தாள். என் உணர்விலும், உயிரிலும், உதிரத்திலும் ஒன்றாய்க் கலந்தவள். அப்படிப் பட்ட ஒரு தாயின் பிரிவை எப்படி என்னால் இலகுவில் மறக்க முடியும்?
கண் மூடிக் கிடக்கும் அம்மாவின் கன்னம் நனைந்திருந்தது.
‘ஏம்மா அழறே...?’
‘இல்லேடா... நான் அழலே! உன்னை விட்டுப் பிரிஞ்சிடுவேனோ என்று எனக்கு பயமாயிருக்கு.’ அம்மா முனகுவது எனக்கு மெல்லக் கேட்கிறது. அவள் முகத்தில் மரணபயம் தெரிகிறது.
நெற்றியில் கைவைத்துப் பார்க்கிறேன். அனலாய்க் கொதிக்கிறது.
‘இல்லையம்மா உங்களுக்கு ஒன்றுமே ஆகாது! கவலைப் படாமல் நிம்மதியாய் தூங்குங்க!’
அம்மாவின் விரல்கள் என்முடியைக் கோதி விடுகின்றன.
‘நீ நல்லாய்ப் படிச்சு வாழ்கையிலே உயரணும்.... எல்லோரும் உன்னை மதிக்கக் கூடியதாய் நல்லபடியாய் வாழ்ந்து காட்டணும்!"' அம்மாவின் மூச்சு நெஞ்சுக்குள் முட்டி வார்த்தைகள் விக்கலாகி அடங்கிப்போக, விரல்கள் சோர்ந்து, செயலிழந்து பிடி தளர்ந்து, அப்படியே....?’
‘அம்மா...! அம்மா....! அம்...மா!’
என் மௌனத்தை உஷாதான் கலைத்தாள்.
‘டீச்சர்’
‘...ம்!’
‘உங்களுடைய அம்மாவைப் போல எனக்கும் ஒரு அம்மா இருந்திருந்தால் நானும்; பூப்போட்டுக் கும்பிட்டிருப்பேன் டீச்சர், எனக்குத்தான் அப்படி ஒரு அம்மா இருக்கவில்லையே!’ அவளால் விம்மலை அடக்க முடியவில்லை.
‘பெற்ற தாயைப் பற்றி, இறந்து போன அம்மாவைப் பற்றி அப்படி எல்லாம் தப்பாய்ச் சொல்லக் கூடாதம்மா!’
‘தாய் என்ற அந்தப் புனிதமான சொல்லுக்கே அர்த்தம் தெரியாமல் வாழ்ந்தவளை எப்படி டீச்சர் நான் அம்மா என்று சொல்ல முடியும்?’ கோபத்தோடு வார்த்தைகளைக் கொட்டினாள்.
நான் ஒரு நிமிடம் நிலைகுலைந்து போனேன். தாயின் மீது எவ்வளவு வெறுப்பிருந்தால் இப்படியான வார்த்தைகள் இவளிடமிருந்து வெளிவரும். தாயைப் பற்றி அதுவும் பெற்ற தாயைப் பற்றித் தப்பாய்ச் சொல்ல இவளுக்கு எப்படி மனசு வந்தது?
‘தாயென்றால் அப்படித்தான்! அன்பு செலுத்துவது மட்டுமல்ல குழந்தைகளோடு கண்டிப்பாகவும் இருப்பதுதான் வழக்கம். அதற்காக இறந்துபோன உன்னுடைய அம்மாவை இப்படி வெறுக்கலாமா?’
‘யார் சொன்னா எங்க அம்மா இறந்திட்டான்னு....?’ என்றாள் வெறுப்போடு.
‘என்னம்மா சொல்கிறாய்? அப்படின்னா உன்னோட அம்மா எங்கே?’
அவள் கண்கள் கலங்க, என்னைப் பரிதாபமாய்ப் பார்த்தாள்.
‘வேண்டாமம்மா! மனசுக்குக் கஷ்டம் என்றால் சொல்ல வேண்டாம்!’
‘அம்மா தான் எங்களைத் தனியே தவிக்க விட்டுட்டு, அடுத்த வீட்டு அங்கிளோட ஓடிப்போயிட்டாவே....!’
எதிர்பாராத இடியொன்று என் இதயத்தைச் சிதறடிக்க நான் நிலை குலைந்து போனேன். உள்ளத்தைப் பிழிந்தெடுத்த அந்த வார்த்தைகள் எனக்குள் இனம் புரியாத வேதனையை கொடுக்க, அடிவயிறு அந்த வேதனையில் பற்றி எரிந்தது.
கருத்து வேறுபாடு காரணமாகச் சட்டப்படி பிரிந்து போகும் கணவன் மனைவியைப் பார்த்திருக்கிறேன். இந்த நாட்டு வழக்கப்படி 'அம்மா பிரிந்து போய்விட்டா' என்று நாகரிகமாய்ச் சொல்லியிருக்கலாம், அதைவிட்டு அம்மா 'ஓடிப் போய்விட்டா' என்று சொல்லுமளவிற்கு...?
பெற்ற குழந்தையைத் தனியே தவிக்க விட்டு போக எப்படி அந்தத் தாயால் முடிந்தது? ஆயிரம் காரணம் சொன்னாலும் அந்தத் தாயை மன்னிக்க முடியுமா? இப்படியும் ஒரு தாய் இருப்பாளா?
விழிகளில் நீர் முட்ட, தாயின் பாசத்திற்கு ஏங்கும் அந்தச் சிறுமியைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஏனோ அவள் சொன்ன அந்த வார்த்தைகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை!
யாரோ அருகே விசும்பும் ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தேன். சிந்து!
‘நீ ஏனம்மா அழுகிறாய்?’
விசும்பல் விம்மலாய், அழுகையாய் வெடித்தது!
தாயை இழந்த தன் தோழிக்காக இவளும் அழுகிறாளோ?
‘என்னம்மா சிந்து? என்னாச்சு உனக்கு?’
‘வந்து டீச்சர்...!’ சிந்து தயங்கினாள்.
‘பரவாயில்லை, சொல்லம்மா!’
‘உஷாவோட அம்மா ஓடிப்போனது வேறுயாரோடுமல்ல டீச்சர், எங்க அப்பாவோட தான்!’
அடிமனதில் இருந்து வெடித்துக் கிளம்பிய விம்மலை அவர்களுக்குத் தெரியாமல் மெல்ல அடக்கிக் கொண்டேன்! அந்தப் பிஞ்சுமனங்கள் நோகக் கூடாதல்லவா!
Comments
Post a Comment