Corona - உன்னைச் சரனடைந்தேன்..!

 


உன்னைச் சரனடைந்தேன்..!

குரு அரவிந்தன்.


‘குட்மோர்ணிங் மிஸ்ஸிஸ் வேர்ஜீனியா’

புழக்கமான குரல் போல இருந்ததால், அரைகுறைத் தூக்கத்தில் இருந்த நான்  கண் விழித்துப் பார்த்தேன். 

களைப்பாக இருந்தது, அனாலும் எங்கே இருக்கிறேன் என்று ஒரு கணம் சிந்தித்தேன்.  

முகமெல்லாம் மூடிக் கவசம் அணிந்தபடி நீலநிற உடுப்பில் எதிரே நின்று கொண்டிருந்தாள் அவள், முகத்தைப் பார்க்க முடியாவிட்டாலும், குரலில் இருந்து அது நர்ஸ் மேரிதான் என்பது புரிந்தது. 

நாங்கள் வசித்த அலபாமா நகருக்கு இவ்வளவு விரைவாகக் கொரோனா வைரஸ் பரவியிருக்கும் என்று நான் நினைத்தில்லை. தொடக்கத்தில் எங்களைப் போலவே, எல்லோரும் இந்த வைரஸின் கொடூரத்தைப் புரிந்து கொள்ளவில்லை. சாதாரண இருமலுடன் கூடிய ஜ+ரம் என்றுதான் என்று அலட்சியமாக இருந்து விட்டோம். ஆனால் அழையா விருந்தாளியாய் எங்கள் வீட்டுக்குள்ளும் கொரோனா நுழையும் என்று எதிர்பார்க்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக என்னை எனது பிள்ளைகள் இங்கே கொண்டு வந்து சேர்த்திருந்தனர் என்பது நர்ஸ் மேரியின் குரலில் இருந்து உடனே நினைவில் வந்தது.

எப்படி எனக்கு இந்த கொரோனா தொற்று ஏற்பட்டது என்று எனக்கே தெரியவில்லை, பொதுவாக அவரும் நானும் தேவை ஏற்பட்டால், கடை தெருவுக்குப் போய் வருவோம். பின்நேரங்களில் தினமும் காலாறச் சிறிது தூரம் அருகே உள்ள பூங்காவில் நடப்போம்.  

கடைசியாக மாதர்சங்க ஒன்றுகூடலின் போது, இரவு விருந்தில்தான் கலந்து கொண்டிருந்தேன். எங்கே வெளியே போய் வந்தாலும் கைகளை கவனமாகக் கழுவிக் கொள்ளுங்கள் என்று மகள் எங்களுக்கு அறிவுறுத்தல் செய்திருந்தாள்.

‘கைகளைக் கவனமாகக் கழுவிக் கொள்ளுங்கள், வெளியே செல்வதானால் முகக் கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்’ என்றெல்லாம் சுகாதார, சமூகத் தொண்டர்கள் அறிவுரை வழங்கினார்கள். முடிந்தவரை அதைக் கடைப்பிடித்தோம், 

இந்த வயதில் ஏற்படும் மறதி காரணமாகச் சில நேரங்களில் அதை மறந்து விடுவதும் உண்டு. அன்று நான் கைகளைச் சுத்தமாகக் கழுவினேனோ ஞாபகமில்லை. ஒருவரிடம் இருந்து நோய் தொற்றுவதற்கு இரண்டு வாரங்கள்கூட எடுக்கலாம் என்று சொன்னார்கள்.

அதன்பின், மூன்று நான்கு நாட்களின்பின் உடம்பு சோர்வாக இருப்பதை உணரமுடிந்தது. சாதாரண ஜ+ரம் என்றுதான் முதலில் நினைத்தேன், அப்போதுதான் கொரோனா வைரஸ் உலகெல்லாம் வேகமாகப் பரவுவதாக முகநூலில் அறிய முடிந்தது. கோவிட் - 19 என்று அதற்குப் பெயர் சூட்டியிருந்தனர். 

தொண்டை நோவும், இருமலும் ஏற்பட்டது. சளி பிடித்துக் கொண்டதால் சுவாசிப்பது சற்றுக் கடுமையாக இருந்தது. மகளுடன் செல்போனில் இது பற்றிப் பேசினேன். அவள் வந்து வைத்திய சாலைக்குச் செல்வதற்கு ஆம்புலன்ஸ்ஸை அழைக்க, அவர்கள்தான் உடனே இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள். 

மருத்துவமனையில் எல்லோரும் கையுறைகள் அணிந்து முகத்தை மூடிக் கவசம் அணிந்திருந்தனர். என்னால் சுவாசிக்க முடியவில்லை என்று முறையிட்டேன். ஆக்ஸிஜன் தந்தபின் ஓரளவு சுவாசிக்கக் கூடியதாக இருந்தது.

இரண்டு நாட்களாக ஜ+ரம் வந்து வீட்டிலே படுத்திருந்தபோது எனது கணவர் எட்வேட் தான் என்னைக் கவனித்துக் கொண்டார். அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். வேண்டாம் என்று தடுத்தும் அவர் விடவில்லை. ‘இத்தனை வருடமாய் எந்தக் குறையும் இல்லாமல் நீதானே என்னைக் கவனித்தாய், இப்போ நீ படுக்கையில் இருக்கும் போது, இதைக்கூட நான் செய்யக்கூடாதா?’ என்று எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுச் செய்தார். 

இந்த வயதில் எனக்குத் தொண்டு செய்வதில் கஷ்டப்படுகிறாரே என்று மனசு சங்கடப்பட்டது. புரிந்துணர்வு எங்களுக்குள் இருந்தது, ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதால் அதற்கேற்பச் செயற்பட்டோம். அவருடைய திருப்திக்காகச் செய்வதைச் செய்யட்டும் என்று நானும் விட்டு விட்டேன். 

கணவருக்கு என்னிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றிவிட்டதாகவும், இதே வைத்தியசாலையில் வேறு மாடியில் அவரையும் அனுமதித்திருப்பதாகவும் மூன்று நாட்களின் பின் மகளிடம் இருந்து செய்தி வந்திருந்தது. கொரோனா வைரஸ் தொற்றக்கூடியது என்பதால், உறவினர் யாரும் வந்து பார்ப்பதற்கு நிர்வாகம் அனுமதிக்கவில்லை. தனிமைப் படுத்தப் பட்டேன்.

நோய்வாய்பட்டு படுக்கையில் கிடக்கும் போதுதான் அனேகமாகக் கடந்த காலத்தை நினைத்துப் பார்க்க முடிகின்றது. நான் ஓரளவு குணமடைந்த நிலையில் இருந்தாலும், 87 வயதான கணவரின் நிலை எப்படி இருக்கிறது என்பதை என்னால் அறிய முடியவில்லை. அமெரிக்காவில்தான் கொரோனா வைரஸ்ஸின் பாதிப்பால் அதிகமானவர்கள் இறந்ததாகக் கேள்விப்பட்டதில் இருந்து ஒரே பதட்டமாக இருந்தது. அதுமட்டுமல்ல, எண்பது வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டது மட்டுமல்ல, மரணங்களும் அவர்களுக்குத்தான் அதிகம் ஏற்பட்டது. 

வேறு வருத்தங்கள் ஏற்கனவே ஒருவருக்கு இருந்தால், அவர்களைக் கொரோனா வைரஸ் இலகுவில் தாக்குகிறது, அவர்களுக்கு மரணத்தையும் ஏற்படுத்துகின்றது என்றெல்லாம் சொன்னார்கள். இவருக்கு நீரழிவு நோய் இருந்தது. அதற்கான மாத்திரைகளைக் கவனமாக எடுத்துக் கொண்டிருந்தார். இந்த கொரோனா வைரஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துகூட இன்னமும் கண்டு பிடிக்கவில்லை என்று நர்ஸ் வேறு சொன்னதால் பயமாக இருந்தது. கணவர் எட்வேட்டைப் பற்றிப் பிள்ளைகள் என்னிடம் இருந்து எதையாவது மறைக்கிறார்களோ என்ற சந்தேகமும் எழுந்தது.

‘ஆ யூ ஓகே மம்?’ என்று கேட்டு என் சிந்தனையைக் கலைத்தாள் நார்ஸ் மேரி.

படுக்கையில் இருக்கும் என்னிடம் ‘ஓகேயா?’ என்று கேட்டால் நான் என்ன பதிலைச் சொல்வது, தலையை மட்டும் அசைத்தேன்.

‘மம்… இப்ப நீங்க வடிவாய் வெளிக்கிட்டு என்னோட வரணும்..!’ என்று சொன்ன நர்ஸ், எனது முகத்தைத் துடைத்து, தலை சீவி, ஆடை மாற்றி விட்டாள். முகத்திற்குக் கிறீம் பூசிவிட்டாள். 

‘வாங்க போகலாம்’ என்று சொல்லி என்னை வீல்செயரில் வைத்துத் தள்ளிச் சென்றாள்.

‘எங்கே வீட்டிற்கா, நான் சுகமாகிவிட்டேனா?’ ஆச்சரியமாய் கேட்டேன்.

‘இல்லை இன்னும் சில நாட்கள் இங்கே இருக்க வேண்டும். இரண்டு வாரமாவது தனிமைப் படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.’ 

‘இப்போ எங்கே போகிறோம்?’

‘ஓரு இடத்திற்கு போகிறோம், கொஞ்சம் பொறுமையாக இருங்க’ என்றாள் நர்ஸ்.

எனக்குத் திக்கென்றது, அவருக்கு ஏதாவது நடந்திருக்குமோ, எல்லோருடைய மௌனமும் எதையாவது மறைப்பதற்காய் இருக்குமோ?

‘இப்போ உங்களுக்கு ஒரு சேப்பிரைஸ் தரப்போகிறேன்’ என்று சொல்லி, எலிவேட்டரில் ஏற்றி வேறு மாடியில் இருந்த ஒரு அறைக்குள் என்னை வீல்செயரில் வைத்து தள்ளிச் சென்றாள்.

உண்மைதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது, அந்த அறையில் என் கணவர் கட்டிலில் படுத்திருந்தார். என்னைக் கண்டதும் தலையைத் தூக்கிப் பார்த்தார். மறுகணம் அவரது முகம் மலர ‘வேர்ஜினீ..!’ என்று முணுமுணுத்தார். 

நான் ஒரு கணம் உறைந்து போய் அவரைப்பார்த்தேன். 

அவரைக் கட்டி அணைக்க வேண்டும் போல இருந்தாலும், இந்த கொரோனா நோய் தொற்றும் என்பதால், சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்று சொல்லி என்னை அவருக்கு அருகே கொண்டு செல்லவில்லை.

மகிழ்ச்சியில் எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஒரே பதட்டமாக இருந்தது. கட்டிலுக்குப் பின்னால் தலைமாட்டுப்பக்கம் இருந்த சுவரில் பதாதை ஒன்று தொங்கியது. ‘ஹப்பி 65 வது வெடிங் அனுவேசரி’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்த அந்தப் பதாதை என்னை மேலும் ஆச்சரியப்பட வைத்தது.

நானே அதை மறந்தே போயிருந்தேன். வயது போனதால் ஞாபகசக்தி கொஞ்சம் குறைந்து விட்டது என்று தான் நினைக்கின்றேன். எங்க வெடிங் அனுவேசரி பற்றி மகளிடம் இருந்து அறிந்து கொண்டதாக மேரி சொன்னாள்.

சட்டென்று பழைய நினைவுகள் கண்ணுக்குள் நிழலாடின. அவரை முதன் முதலாகச் சந்தித்து 65 வருடங்களாகி விட்டன. என்னுடைய நினைவுகள் பின் நோக்கி ஓடின, நேற்று நடந்தது போல எல்லாமே ஒன்றின் பின் ஒன்றாக நினைவில் வந்தன. துடிப்பு மிக்க அந்த இளைஞன் என்னைக் கவர்ந்ததில் ஆச்சரியமில்லை!

எட்வேட்டை முதன் முதலாகச் சந்தித்தது, எனது காதலைச் சொன்னது, திடீர் திருமணம் நடந்தது. அறுபத்தைந்து வருடங்கள் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டன. அவர் ஒருவிதத்தில் எனக்கு உறவினராகவே இருந்தார். நாட்டைக்காக்கும் வீரனாக இராணுவத்தில் அவர் இணைந்தபோது எனக்கு அவர்மீது தனிமதிப்பு ஏற்பட்டது. அவர் விடுமுறையில் வந்து நின்றபோது, ஒருநாள் நானாகவே அவரிடம் எனது விருப்பத்தைச் சொன்னேன். அவருக்கும் என்னைப் பிடித்துக் கொண்டதால், எங்கள் திருமணம் உடனடியாகவே நடந்தது.

காதல், திருமணம், குடும்பம், வாழ்க்கை என்று காலம் வேகமாகவே ஓடிவிட்டது. ஆரோக்கியமாக இருந்த எங்கள் இருவரையும் கொரொனா வைரஸ் மடக்கிப் போட்டிருந்தது. ஆனாலும் இதை எல்லாம் கடந்து எங்கள் திருமண நாளை நினைத்துப் பார்க்கும் போது எல்லாமே வியப்பாக இருந்தது.

இரவு தூங்குவதற்காக மருந்து தந்திருந்தார்கள். எட்வேட்டின் நினைவு தான் கண்ணுக்குள் படமாய் விரிந்தது. 

கண்ணயர்ந்த போது ‘வேர்ஜினீ..!’ அவரது குரல்போல இருந்தது. திடுக்கிட்டு கண்விழித்துப் பார்க்க முயற்சி செய்தேன், கண் திறக்க முடியவில்லை, உடம்பு அசைய மறுத்தது. 

அருகே வந்த அவர்தான் எனது கைகளைப் பற்றி என்னை அணைத்தபடி ‘வெளியே போவோமா’ என்று என்னை அழைத்தார். 

இதற்காகவே காத்திருந்தது போல, அவருடைய அந்த இதமான அணைப்பின் சுகத்தில் எல்லா வேதனைகளையும் மறந்தேன். என் கைகளைப் பற்றிப் பிடித்தபடி,

‘நாங்கள் சிட்டுக்குருவிகளாய் பறப்போமா?’ என்றார்.

சம்மதம் சொல்ல வார்த்தைகள் வரவில்லை, உடம்பை அசைக்க முயன்றேன் அதற்கும் முடியவில்லை!

‘தனியே உன்னை விட்டுச் செல்ல மனம் வரவில்லை, நீயும் என்னோடு வார்றியா!’ என்றார்.

மறுகணம் அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு இருவரும் வானத்தில் சந்தோஷமாய் சுதந்திரமாய்ப் பறப்பதை என்னால் உணர முடிந்தது.

‘டடீ..ய்.. ம..ம்மி..!’ என்று பிள்ளைகள் ஓலமிடுவது எங்கோ தூரத்தில் எதிரொலியாக் கேட்டது.

இதையெல்லாம் கடந்து கொரோனா வைரஸ் தனது முதலாவது பிறந்த தினத்தை மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்தது.



Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper