Story - திசைமாறிய வேர்கள்..!
திசைமாறிய வேர்கள்..!
(குரு அரவிந்தன்)
நிஷா தான் கொண்டுவந்த படங்களைப் பாட்டியிடம் காட்டுவதா... வேண்டாமா என்று ஒருகணம் யோசித்தாள். இதுவரை பாட்டியிடம் அவள் எதையுமே மறைத்ததில்லை. எனவே காட்டிவிடுவதுதான் நல்லது என்ற முடிவிற்கு வந்தாள்.
பாட்டியம்மாவிற்கு அருகே உட்கார்ந்து அவள் தோள்களில் ஆசையோடு தலைசாய்த்து செல்லமாக பாட்டியம்மாவை அணைத்தபடி அவளின் கன்னத்தை மெல்லத் தொட்டு வருடிவிட்டாள்.
எதையோ கேட்பதற்குத்தான் அவள் முத்தாய்ப்பு வைக்கிறாள் என்பது பாட்டியம்மாவிற்கு விளங்கியது... ஆனாலும் அவளே சொல்லட்டும் என்று பொறுமையோடு காத்திருந்தாள்.
''பாட்டியம்மா இந்தப் போட்டோஸைக் கொஞ்சம் பாருங்களேன்'' லட்சுமிபாட்டியிடம் தான் கொண்டு வந்த புகைப் படங்களை நீட்டினாள் நிஷா.
பாட்டியம்மா கண்ணாடியை மாட்டிக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தாள்.
அமெரிக்காவில் உள்ள ரெக்ஸஸ் என்னும் இடத்தில் ஐ. பி. எம் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பயிற்சிப்பட்டறை ஒன்றுக்கு கனடாவில் இருந்து நிஷாவும் சென்றிருந்தாள். பயிற்சிப் பட்டறைக்கு வந்தவர்கள் சிறு சிறு குழுக்கலாக நின்று படங்கள் எடுத்திருந்தார்கள். இரண்டு படங்களில் மட்டும் நிஷா இன்னுமொரு இளைஞனோடு தனியே நின்றுகொண்டிருந்தாள். அந்தப் படங்களை மட்டும் தனியே எடுத்து பாட்டியம்மா கொஞ்சம் அவதானமாகப் பார்த்தாள்.
''என்ன பாட்டியம்மா இந்தப் படத்தைமட்டும் ரொம்ப அக்கறையாய்ப் பார்க்கிறாய், இஸ் தட் கை ஸ்மாட்?"'
'யார் இந்த இளைஞன்?" பாட்டியம்மா கேள்விக் குறியோடு நிஷாவை நிமிர்ந்து பார்த்தாள்.
''பயிற்சிப் பட்டறைக்கு பலநாடுகளிலும் இருந்து நிறைய ஸ்டூடன்ட் வந்திருந்தாங்களா, அவங்கள்ள நாங்க இரண்டு பேர் மட்டும்தான் வெள்ளிக்கிழமை அன்று வெஜிட்டேரியன் சாப்பாட்டிற்கு ஆடர் கொடுத்திருந்தோம். சாப்பிடும்போது அவன் என்னைப்பார்த்து இந்துவான்னு கேட்டான். அப்புறம்தான் அவனும் தமிழன்னு தெரியவந்தது, அதனாலே நாங்க ஃபிரண்ட்ஸாயிட்டோம்.""
பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாய் அந்த இளைஞன் தெரிந்தான். ஆனால் இருவரும் ரொம்ப நெருக்கமாய் உட்கார்ந்து போட்டோ எடுக்குமளவிற்கு அப்படி என்ன ஃபிரண்ட்ஷிப்..?
பாட்டியம்மா கேட்காமலே அவள் புரிந்து கொண்டு பதில் சொன்னாள்.
''பெயர் வசீகரன். லண்டன், யூ.கேயில் இருந்து வந்திருந்தான். ரொம்ப ஸ்மாடான பையன்!''
''அவங்க குடும்பம் லண்டன்லதான் இருக்காங்களா?""
''ஆமா, அவங்க பாட்டி உகண்டாவிலதான் இருந்தாங்களாம், இடிஅமீனின் கொடுமையால அவங்க எல்லோரும் குடிபெயர்ந்து லண்டனுக்குப் போனாங்களாம். லண்டன்லதான் வசீகரன் பிறந்தானாம். தமிழ்நாட்டிலே இருந்துதான் அவங்க பாட்டி உகண்டாவிற்கு வந்தாங்களாம்.''
''அப்படியா, தமிழ்நாட்டிலே எந்தப் பக்கம் என்று கேட்டியா? நாங்களும் தமிழ்நாட்டிலே இருந்துதான் தண்ஸானியாவிற்கு குடிபெயர்ந்து போனோம். தண்ஸானிய ஆபிரிக யூனியன் ஆட்சிக்காலத்தில் நியரேரேயின் சட்டதிட்டங்களால் நாங்களும் நாட்டைவிட்டு வெளியேறவேண்டி வந்தது. அதனாலேதான் கனடாவில் குடியேறினோம். நீயும் இங்கேதானே பிறந்தாய்!"'
தமிழர்கள் எல்லாம் பிழைப்புத்தேடி சொந்தமண்ணைவிட்டு எப்படி எல்லாம் சிதறிப் போனார்கள் என்று பாட்டியம்மா பழைய கதையை விபரிக்கத் தொடங்க, நிஷா பொறுமையிழந்து கொண்டிருந்தாள்.
''சரி, சரி போதும், போட்டோஸைக் கொடு, நான் போகணும்!''
''இது எங்கே உன்னோட ரூமில எடுத்த படமா?""
''இல்லை பாட்டியம்மா, இது அவன் தங்கியிருந்த ரூம்!''
''நீ அவனுடைய அறைக்குப் போனியா?''
''என்ன பாட்டியம்மா, நாங்க எல்லோரும் ஒரே ஹோட்டலில் தானே தங்கியிருந்தோம்!''
''நான் கேட்ட கேள்விக்குப் பதிலை சொல்லேண்டி...''
''நீ என்ன மனசில நினைச்சிட்டிருக்கிறாய் என்று எனக்குப் புரியுது, ஏன் சுற்றி வளைச்சுக் கேட்கிறாய்? ஆமா, நான் அவனோட ரூமுக்குப் போனேன்!""
''அப்படின்னா..?'' பாட்டியம்மாவின் குரல் அதிர்ந்தது.
''கடைசி நாள் அவனுடைய அறையிலே தான் தங்கினேன், இவ்வளவும் போதுமா... இல்லை இதைவிட இன்னமும் விவரமாய் சொல்லணுமா?''
''அடி.. பாவி..!'' தலையிலே கைவைத்துக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்தாள் பாட்டியம்மா.
''இப்போ உனக்குத் திருப்தியா?'' திறந்த வாய் மூடாமல் தன்னையே பார்த்துக் கொண்டிருந்த பாட்டியம்மாவைப் பார்த்து அவள் கேட்டாள்.
''ஐயாம் ஜஸ்ட் டுவன்டிடூ! இருபத்திரண்டு புரியுதா?'' பெருவிரலை உயர்த்திக் காட்டினாள்.
பாட்டியம்மா அதிர்ந்து போய் கண்களை அகலவிரித்து பேத்தியைப் பார்த்தாள். நேற்றுவரை பெருவிரல் சூப்பித்திரிந்தவளா இவள்? நம்பமுடியவில்லை அவளுக்கு வயது சட்டென்று ஏறிவிட்தென்று, ஆனாலும் ஆடைகளை மீறி எட்டிப்பார்த்துத் திமிறும் உடம்பு அவளை நம்பவைத்தது.
இந்த வயதிலே பாட்டியம்மாவிற்கு ஒன்றுமே தெரியாமல், உலக அனுபவம் சுத்தசூனியமாய் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனாலும் இந்தக் காலத்துப் பெண்கள் தேவைக்கு அதிகமாகவே அறிந்து வைத்திருக்கிறார்களோ என்று சந்தர்ப்பசூழ்நிலை அவளை நினைக்க வைத்தது.
''நீ நினைக்கிற மாதிரி ஒன்றும் பயப்படத் தேவையில்ல... இது ஒண்ணும் அப்படி தப்பான சமாசாரமில்லை. ஒருத்தரை ஒருத்தர் சந்திப்பதன் மூலம் அவர்களை ஓரளவு என்றாலும் புரிஞ்சுக்கிற நாகரிகமான இந்த முறையைத்தான் நான் மதிக்கிறேன். வசீகரன் என்னை ஏமாற்றமாட்டான் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு, நான் அவனைத்தான் கல்யாணம் கட்டப்போறேன்."'
'அவனோட ஒரே அறையில் தங்கிவிட்டு வருகிறாள்' என்ற அந்த இடியையே பாட்டியம்மாவால் தாங்கமுடியாது இருந்தது. போதாக்குறைக்கு அவன் யார்? எப்படிப்பட்டவன்? என்றுகூடத் தெரியாமல் அவனைத்தான் கலியாணம் கட்டப்போவதாகவும் வீறாப்பாய் அல்லவா பேசுகிறாள்.
'வரையறையில்லாமல் பழகும்போது தன்னையே தொலைத்து விடுவோம்' என்ற பயஉணர்வுகூட இவளுக்கு இல்லையா? என்ன பெண் இவள்?
''இப்ப என்னடி பண்றது?"'
''அவங்க சம்மதம் கேட்டா சரி சொல்லிடு"'
''அவங்க என்ன ஜாதி, குலம் என்றாவது தெரியுமாடி?""
''அப்படின்னா என்ன பாட்டி..?""
இவளுக்கு எப்படிச் சொல்லி விளங்க வைப்பது என்று தெரியாமல் லட்சுமி திண்டாடினாள்.
''உன்னோட சம்மதத்தோட இந்தக் கல்யாணம் நடக்கணும் என்று தான் உன்கிட்ட இதையெல்லாம் சொல்றேன். இல்லை என்றால் நான் இப்பவே போய் அவன்கூட ஒன்றாய் வாழப்போறேன். மறந்திடாத... என்னைத் தடுத்து நிறுத்த உன்னாலே முடியாது... இந்த நாட்டில எனக்கு அந்த சுதந்திரம் இருக்கு... நான் மேஜர்!''
அவள் பட்டும் படாமலும் தன்னுடைய முடிவு என்ன என்பதைத் தெட்டத் தெளிவாகச் சொல்லிவிட்டுத் தனது படுக்கைக்குச் சென்றாள். பெற்றோர் இல்லாததால் அவளைச் செல்லமாக வளர்த்து விட்டோமோ என்று பாட்டியம்மாள் ஒரு கணம் சிந்தித்தாள்.
மறுநாள் வேறு ஒரு செய்தியோடு ஓடி வந்தாள் நிஷா.
''பாட்டி அவங்க பூர்வீகம் தமிழ்நாட்டிலே உள்ள திருச்சிப்பக்கமாம்."'
''விசாரிச்சியா?"'
''ஆமா, மின்னஞ்சல் மூலம் செய்தி பரிமாறிக் கொண்டோம். அவங்க வீட்டு பழைய ஆல்பத்தில் இருந்து இரண்டு படங்களைப் பிரதி எடுத்து மின்னஞ்சல் மூலம் எனக்கு அனுப்பியிருக்கிறான், இது அவங்க குடும்பப்படம். இது அப்பா, இது அம்மா, இது வசீகரன், இது வசீகரனோட தங்கை! இந்தப் பழைய கறுப்பு, வெள்ளைப் படத்தில இருக்கிறது அவங்க பாட்டியும், பாட்டியோட குடும்பமும். உறவினரின் கல்யாணத்தின்போது மணவறைக்கு முன்னால் நின்று தம்பதிகளோடு சேர்ந்து எடுத்திருக்கிறாங்க!''
கறுப்பும் வெள்ளையுமாய் கணினி மூலம் அச்சிடப்பட்ட அந்தப் படத்தைப் பார்த்ததும் பாட்டியம்மாவிற்கு வியப்பாக இருந்தது.
''என்ன பாட்டியம்மா திகைச்சுப் போயிட்டீங்க, இப்போது எல்லாம் நவீன வசதிகள் இருப்பதாலே கணினி மூலம் எதையுமே நினைத்ததும் பெறக்கூடியதாக இருக்கு!''
''இல்லை, நான் அதைச் சொல்லலை..!""
''அப்போ..?""
''இந்தப் படத்திலே மணப்பெண்ணுக்குப் பக்கத்திலே நிற்பதுதான் அவங்க பாட்டியா?''
''ஆமா, அவங்கதான் உகண்டாவிற்கு போனவங்களாம். போன வருடம் லண்டன்ல அவங்க இறந்திட்டாங்க"'
''இறந்திட்டாங்களா..? லட்சுமி சிலவினாடிகள் கண்மூடி மௌனம் சாதித்தாள்.
''ஏன் பாட்டி மௌனமாயிட்டாய்..?''
''இல்லை... அவங்களுக்கு அடுத்தாப்போல சிரிச்சிட்டு நிற்பது யார் என்று தெரியுமா?''
''இல்லையே... எனக்கு எப்படித் தெரியும் பாட்டியம்மா?''
''அது நான்தான்! நாங்க சின்னவயசிலே ஒண்ணா எடுத்த படம்''
''உண்மையாவா? அப்போ வசீகரன் எங்களுக்கு உறவினரா?"' நிஷா ஆச்சரியமாய்க் கேட்டாள்.
''அப்படித்தான் நினைக்கிறேன்! எனக்குப் பக்கத்தில உட்கார்ந்து இருக்கிறதுதான் வசீகரனின் பாட்டின்னா, அது என்னோட கசின், அதாவது என்னோட ஒன்றுவிட்ட சகோதரி!''
''அப்போ அவங்க எங்களுக்கு உறவா..?"" என்றாள் நிஷா. 'உறவு என்ற சொல்' அவளுக்குள் ஒரு உற்சாக ஊற்றை ஏற்படுத்தியது. எத்தனையோ பிரச்சினைகள் தீர்ந்து விட்டது போலவும் இருந்தது.
பாட்டியம்மாவோ யோசனையில் ஆழ்ந்தபடி இது எப்படிப்பட்ட உறவு என்று மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்தாள். ஒருபுறம் என்னுடைய மகளின் மகள் நிஷா, மறுபுறம் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரியின் மகளின் மகன் வசீகரன்!
மரபு மீறல் காரணமாக இது விவஸ்தை இல்லாத உறவாகி விடுமோ என்ற பயம் பாட்டியம்மாவைப் பிடித்துக் கொண்டாலும், அறிவுசார்ந்த சிந்தனை மூலம்தான் இதை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று பாட்டியம்மாள் முடிவெடுத்தாள். இந்த உறவு முறையைத் தெரிந்தவர்களில் தான்மட்டும்தான் இப்போது உயிரோடும்.. ஞாபகமறதி குன்றாமலும் இருப்பது பாட்டியம்மாவிற்கு பெரிய சங்கடமாய் இருந்தது.
எப்படித்தான் புத்திமதி சொன்னாலும் வெளிநாடுகளில் வளரும் இன்றைய புதிய தலைமுறையினர் பெரியவர்களின் சொல்வழி கேட்கப் போவதில்லை என்பதும் பாட்டியம்மாவிற்கு தெளிவாகப் புரிந்தது. அதேசமயம் மறுத்தால் பெட்டியையும் எடுத்துக் கொண்டு அவள் கிளம்பிவிடுவாள் என்பதும் புரிந்தது. சொந்த மண்ணிலே இருந்திருந்தால் இப்படி ஒரு பிரச்சினையை நேரடியாக சந்திக்க வேண்டியே வந்திராது என்று பாட்டியம்மாள் நினைத்தாள்.
''என்ன யோசனை பாட்டியம்மா?''
''இல்லை, கட்டாயம் அவனைத்தான் நீ கட்டணுமா..?''
''அதுதான் ஏற்கனவே சொல்லிட்டேனே..!"'
பேத்தியின் பிடிவாதம் எப்படிப்பட்டது என்பது பாட்டிக்குத் தெரிந்ததுதானே!
''அப்படின்னா ஒன்று செய்..!""
''என்ன..?''
''இந்தக் கல்யாணம் நல்லபடி நடக்கணும் என்றால் நான் சொல்றபடி செய்! அந்தப் படங்களைக் கிழிச்சுப் போடச்சொல்லு... மேற்கொண்டு அவங்க குடும்பத்தைப் பற்றி எதுவுமே விசாரிக்காமல் விட்டுவிடு...''
''ஏன் பாட்டியம்மா அவங்க குடும்பமே எங்க விரோதியா?""
பாட்டியம்மா அவளைத் தீர்க்மாய் பார்த்தாள்.
''நான் சொன்னதைச் செய்! மௌனம் காப்பது உனக்கு நல்லது. இல்லேன்னா எங்க உறவுகள் உன்னைப் பழிக்கும்... அவங்களே உங்களுக்கு விரோதியாய்ப் போயிடுவாங்க, புரியுதா?''
அவளுக்குப் புரிந்ததோ இல்லையோ, ஆனாலும் புரிந்ததுபோலத் தலையசைத்துக் கொண்டு பாட்டியம்மாவின் அந்தக் குடும்பப் படத்தைக் கிழித்துப் போட்டாள். எங்க சமுதாய அமைப்பைப் பற்றி பாட்டியம்மா நிறையத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்பதும் அவளுக்குத் தெரியும்!
பாட்டியம்மா சொல்வதில்கூட ஏதாவது உண்மை இருக்கலாம்..!
Comments
Post a Comment