Story- அலை நடுவே ஓர் எல்லைக்கோடு
அலை நடுவே ஓர் எல்லைக்கோடு
(குரு அரவிந்தன்)
அவளோ கரையில் நின்றபடி ஆழ்கடல் நோக்கிக் கைகளை அசைத்துக் கொண்டிருந்தாள். அவன் தாயிடம் தூதுவிட்ட அலைகள் மெல்ல எழுந்து கரை நோக்கி நகர்ந்து அவளது கால்களைத் தழுவி ஆறுதல் சொல்லிச் சென்றன. மகனுடைய துணிவு அவளுக்கு வியப்பைத் தந்தது. ‘சொன்னால் கேட்கிறானில்லையே, அப்பனைப்போல இவனும் பிடிவாதமாய் இருக்கிறானே’ என்று மனதுக்குள் புலம்பிக் கொண்டாள்.
‘என்ன மீனாட்சி கையை அசைச்சிட்டே இருக்கிறாய், யாருக்காக்கும்?’ என்றபடி அருகே வந்த மரியமும் தனது பார்வையை அத்திசை நோக்கித் தொடரவிட்டாள்.
அலைகளின் நடுவே அந்தப் படகு மெல்ல மெல்ல அசைந்து ஆழ்கடல் நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.
‘ஏன் மீனாட்சி நீ போகலையா?’ என்றாள் மரியம்.
‘இல்லை, இனிமேல் என் மகன்தான் போகப்போகிறான்’
‘உண்மையாவா அப்போ உனக்கு இனிமே ஓய்வுதான்’
‘அம்மா நீ கஷ்டப்பட்டது போதும், நான்தான் வளர்ந்திட்டேனே, இனிமேல் நான்தான் கடலுக்குப் போவேன் என்று அடம்பிடித்துத்தான் போகிறான்’ என்றாள்.
‘எப்படியோ அம்மா பாசம் விட்டுப்போமா?’ என்றாள் மரியம்.
‘என்னமோ எனக்கு மனசே சரியில்லை’
‘ஏன் உன்னோட மகன்லை நம்பிக்கையில்லையா?’
‘அப்படி ஒண்ணுமில்லை, அவனுக்குப் பழக்கமில்லாத கடல். திரும்பி வரும் வரையும் உயிரைக் கையில பிடிச்சிட்டிருக்கணுமே’ என்றாள்.
‘நீ சொல்லறதும் சரிதான், கடந்த காலத்தில நடந்ததை எல்லாம் இலகுவில் மறக்க முடியமா?’
மீனாட்சியின் கண்களில் நீர் துளிர்த்தது.
மீனாட்சியின் வாழ்க்கையும் இப்படித்தான் ஒருநாள் திடீரென இருள் சூழ்ந்து கொண்டது. ஐந்தாறு வருடங்களுக்கு முன் ஒருநாள் காலையில் கம்பீரமாகக் கடலுக்குச் சென்ற கணவன் திரும்பிவரவே இல்லை.
கூட்டமாக மீன் பிடிக்கச் சென்ற படகுகள் எல்லாம் திரும்பி வந்திருந்தன. இவர்களின் படகு மட்டும் திரும்பி வரவில்லை. மறுநாள் சற்றுத் தொலைவில் கரை ஒதுங்கிய படகில் துப்பாக்கிச் சூட்டுக்காயத்தோடு அவனோடு தொழிலுக்குக் கூடச்சென்ற கூட்டாளி மட்டும் பிணமாகக் கிடந்தான்.
அந்தக் காட்சியைப் பார்த்ததும் அந்தக் கிராமமே அதிர்ச்சியில் ஆழ்ந்து போனது. என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்குக்கூட சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிரோடு இல்லை. அவ்வப்போது கடற்தொழிலுக்காகச் சென்ற மீனவர்கள் பலர் பிணமாக வந்தாலும், இவளது கிராமத்தில் இதுவே முதல் மரணமாக இருந்தது.
முழுக் கிராமமும் சேர்ந்து கணவனைத் தேடியலைந்தாலும், அந்த முயற்சியெல்லாம் வீணாகவே போயின. ஊர்கூடி அழுதாலும், அரசுக்கு மனு எல்லாம் கொடுத்தாலும் எதுவுமே நடக்கவில்லை. இறந்தவனின் குடும்பத்திற்கு சொற்ப பணம் கொடுத்தார்கள்,
அந்தப் பணம் ஒரு உயிருக்கு ஈடாகுமா? கொன்று குவித்துவிட்டு இறந்தவர்களின் குடும்பத்திற்குப் பணம் கொடுத்தால் எல்லாம் சரியாகி விடுமென்றால், செல்வாக்குள்ள ஒவ்வொருவனும் தன் கோபத்தைத் தீர்க்க கொலையாளியாகத்தானே மாறப்பார்ப்பான்.
ஆட்சியாளர்களின் அக்கறையின்மையால், கடலுக்குப் போனவர்கள் எந்த நேரமும் பிணமாகத் திரும்பி வரலாம் என்ற எதிர்பார்ப்பே இதுவரை எல்லாக் கரையோரக் கிராமங்களிலும் இருந்தது. மீனவர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதை அவர்கள் உணர்ந்தாலும், அதற்காக அன்றாடம் தீனிபோடும் கடற்தொழிலை விட்டுவிட முடியுமா?
ஏனைய பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்பவர்கள் நாட்டின் எல்லையைத் தாண்டினாலும் அந்த நாட்டுக் கடற்படை அவர்களைக் கைது செய்ததே தவிர அவர்களை ஒரு போதும் சுட்டுக் கொன்றதில்லை. தமிழக மீனவர்களுக்கு மட்டும் என் இந்தக் கதி, யார் இதற்கெல்லாம் காரணம் என்பது மீனவர்களுக்குப் புரியாத புதிராகவே இருந்தது.
அரச தரப்பில் இருந்து பேசுகிறோம், பேச்சுவார்த்தை தொடர்கிறது என்றெல்லாம் அறிக்கை விட்டுக் கொண்டிருந்தார்களே தவிர எதுவும் நடைமுறைச் சாத்தியமாகவில்லை. மாறிமாறி உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குச் செல்வதிலும் விருந்து உண்டு மகிழ்வதிலுமே அவர்களின் கடந்த காலம் கடந்தது.
காலம் செல்லச் செல்ல மீனாட்சியின் கணவன் இறந்து விட்டதாகவே எல்லோரும் முடிவெடுத்தார்கள். பன்னிரண்டு வயதே நிரம்பிய மகனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு இவளிடமே இருந்தது. தனித்துப் போய் நின்ற அவளுக்கு மரியம்தான் உதவிக்கு வந்தாள். மகனை அவள் பார்த்துக் கொள்ள மீனாட்சி மீன்பிடிக்கக் கடலில் இறங்கினாள். தொடக்கத்தில் ஒரு பெண் எப்படிக் கடலில் இறங்கித் தொழில் செய்யலாம் என்ற பொதுவான எதிர்ப்பு அவளுக்கு இருந்தாலும் காலப் போக்கில் அதை யாருமே கண்டு கொள்ள வில்லை.
மீன்குட்டிக்கு நீந்தக் கற்றுத் தரணுமா என்பது போல மீனாட்சி நீச்சலடிப்பதில் கெட்டிக்காரி. நேர்மையான முறையில் உழைக்க வேண்டும் என்பதால், மற்ற ஆண்களைப்போல இவளும் கடற்தொழிலுக்குச் சென்றாள். ஏதோ அன்றாட சீவியத்திற்கு அவளது வருமானம் போதுமானதாக இருந்தது. கடலுக்குப் போகமுடியாத நாட்களில் பல்லைக் கடித்துக் கொண்டு பட்டினி கிடந்தாள். தான் பட்டினி கிடந்தாலும் கஷ்டப்பட்டு மகனைப் படிக்க வைத்தாள். அவனுக்கு உலக அறிவைப் புகட்டினாள்.
வங்கக் கடல் பகுதியில் சித்திரை மாதத்தில்தான் மீன்களின் இனப்பெருக்கக் காலமாகையால் அப்பகுதியில் மீன் பிடிப்பதற்கு சில நாட்களுக்கு அரசு தடை விதித்திருந்தது. பொதுவாக சித்திரை நடுப்பகுதியில் தொடங்கி வைகாசி முடியும்வரை இந்தத் தடை நீடிக்கும். இந்தக் காலத்தில் தடை உத்தரவு காரணமாக பல விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதில்லை.
முன்பெல்லாம் அரச உதவி 800 ரூபாவரைதான் கிடைத்தது, ஆனால் இப்போ புதிய ஆட்சி மாற்றத்தால் 2000 ரூபாவரையில் அவளுக்குக் கிடைத்தது. அதை வைத்தே ஓரளவு சமாளித்தாள். நிலத்திலே விவசாயிகள் எப்படி பாடுபட்டுப் பலன் எடுக்கிறார்களோ அதேபோலத்தான் கடலிலும் இவர்கள் பாடுபட்டுப் பலன் எடுத்தார்கள். அவர்கள் விதை விதைத்து நிலத்திலே அறுவடை செய்வது போலத்தான் இவர்களும் கடலிலே அறுவடை செய்தார்கள்.
இங்கே அறுவடை செய்யப்படுவது கடல் வாழ் உயிரினங்கள்தான். ஒவ்வொரு குறிப்பிட்ட இடங்களிலும் எந்த மீன் அதிகம் அகப்படும் என்பதை அனுபவம் வாய்ந்தவர்களால்தான் அடையாளம் காட்ட முடியும். அதிஷ்டம் இருந்தால் மீன், இறால், சிங்கிறால், கணவாய், நண்டு என்று வலையில் வந்து விழும். இல்லாவிட்டால் ஏமாற்றம்தான். மீனிலும் சிறியமீன், பெரியமீன் என்று வேறுபடும். தேறை, சூடை, நெத்திலி எல்லாம் சிறியமீன் வகையில் அடங்கும். பெரிய மீன் வகையில் பாரை, விளை, சுறா, திருக்கை, வாளை, சூவாரை, ஒட்டி, ஓரா, கொடுவா, சீலா, பாளை, வெளவால், கலவாய், வஞ்சுரன், முரல், கொளுத்தி என்று பல இனங்கள் அடங்கும்.
எத்தனை மீன்கள் அகப்பட்டாலும், அவளை எப்போதும் அதிசயிக்க வைப்பது பாம்பைப்போல உருவம் கொண்ட விலாங்கு மீன்தான். மன்னார் வளைகுடாப்பகுதியில் அவை அதிகமிருந்தாலும் இவர்கள் அதைப் பிடிப்தில்லை. பவளப்பாறையில் இவை பதுங்கியிருந்து இரை தேடும். வலையில் தப்பித்தவறி அகப்பட்டாலும் அதை எடுத்து மீண்டும் தண்ணீரில் விட்டுவிடுவாள்.
அவளும் ஒரு விலாங்கு மீன் போலத்தான் தனது வாழ்க்கையைக் கொண்டு நடத்தினாள். யாருக் கெல்லாம் வாலைக் காட்டவேண்டுமோ அவர்களுக் கெல்லாம் வாலைக் காட்டினாள், யாருக்கொல்லாம் தலையைக் காட்ட வேண்டுமோ அவர்களுக்குத் தலையைக் காட்டினாள். அன்பாய் பாசமாய் பழகவும் அதே சமயம் கண்டிப்பாய் இருக்கவும் பழகிக் கொண்டாள். அவளது கண்டிப்புக் காரணமாக தனியே இருக்கிறாள் என்ற எண்ணத்தோடு யாரும் அவளிடம் நெருங்க முடிவதில்லை. மகனை வளர்த்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்தியதால், கணவன் இல்லையே என்ற துயரத்தை அவள் அதிகம் வெளிக்காட்டவில்லை.
ஆழ்கடலில் மீன்பிடித்த அனுபவம் மகனுக்கு இல்லையே தவிர கடல் வாழ் உயிரினங்கள் பற்றி அவன் அதிகம் அறிந்து வைத்திருந்தான். ஒமேகா கொழுப்பு அமிலம் மீன்களில் அதிகம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மீன்கள் சிறந்த உணவு என்பதை அவன் தெரிந்து வைத்திருந்தான். வலுவான எலும்புகளைக் கொண்ட மீன்வகைகள், குருத்தெலும்பு கொண்ட மீன்வகைகள், செதில் இல்லா மீன்வகைகள் என்று பல வகையான மீன்களைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தான்.
செவுள் வலை, மாபாச்சு வலை, என்று ஒவ்வொரு விதமான வலைகளைப் பற்றியும் கடலின் நீரோட்டம் பற்றியும் அறிந்திருந்தான். வானமே எல்லை என்பது போல முன்பெல்லாம் கடலுக்கு எல்லையில்லை. விரும்பிய இடத்தில் விரும்பியபடி மீன் பிடித்தார்கள். ஆனால் இப்போ நாடுகளுக்கான கடல் எல்லையே ஒரு பிரச்சனையாகப் போய்விட்டது. மகன் எல்லாவற்றையும் தெரிந்து வைத்திருந்தாலும், புதிதாகக் கடற் தொழிலுக்குப் போகிறானே, கடல் எல்லைகளை அவனால் கணிப்பிட முடியுமா, கண்ணுக்குத் தெரியாத அந்த எல்லையை அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியுமா என்பதில் மீனாட்சிக்குச் சந்தேகம் இருந்தது. ஆனாலும் போகப்போக ஆனுபவத்தில் அவன் புரிந்து கொள்வான் என்று தனக்குள் சமாதானப் படுத்திக் கொண்டாள்.
திடீரென மீனாட்சியைத் தேடி சில அரசஅதிகாரிகள் வந்தார்கள். மீனாட்சி பதறி அடித்துக் கொண்டு ஓடிவந்தாள். கடலுக்குப் போன மகனின் நினைவாகவே அவள் இருந்ததால் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. என்னவோ ஏதோ என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டாள்.
‘நீதானே மீனாட்சி?’ என்றார்கள்.
‘ஆமா’ என்று தலையாட்டாமலே உடம்பு பதறியது.
இன்னுமொரு இடி அவளது தலையில் விழப்போகிறதா, அவளால் தாங்க முடியுமா?
அதிகாரி அவளை ஆசுவாசப்படுத்தினார்.
‘உன்னுடைய கணவனுடைய பெயரென்னம்மா?’
அவள் கணவனின் பெயரைச் சொல்லி விட்டு, ‘அவர்தான் கடல்ல காணாமல் பேயிட்டாரே’ என்றாள்.
‘நாங்களும் அப்படித்தான் இதுவரை காலமும் எண்ணியிருந்தோம், ஆனால் அவன் உயிரோடுதான் இருக்கிறான்.’ என்றார் அந்த அதிகாரி.
‘;உயிரோட இருக்கிறாரா?’ அவள் ஆச்சரியத்தில் ஒரு கணம் உறைந்தாள். கைகளை உயர்த்தி ‘ஆண்டவரே’ என்றாள்.
‘ஆமா, இப்போ யுத்தம் ஓய்ந்து போனதாலே அயல் நாட்டில நீண்ட காலமாக சிறையிலே இருந்த மீனவங்களை விடுதலை செய்திருக்கிறாங்க. அதிலே உன்னோட கணவனும் ஒருவன்’ என்று விளக்கம் தந்தார் அந்த அதிகாரி.
‘என்னோட கணவன் உயிரோட இருக்கிறார்’ என்று புலம்பிய படியே வந்து நின்ற அதிகாரிகளையும் மறந்து ஓடினாள். மீனாட்சிக்கு சந்தோஷம் தாங்க முடியாமல் இருந்தது. தனது தோழி மரியத்தோடு அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளவே அவளிடம் ஓடினாள்.
அங்கே மரியம் பத்திரிகையைக் கையில் பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள்.
சந்தோஷமிகுதியால் மரியத்தை அணைத்து விட்டு,
‘உனக்கொரு நல்ல செய்தி தெரியுமா?’
‘என்ன?’ என்றாள் மரியம் ஆர்வமில்லாமல்.
‘என்னுடைய கணவர் உயிரோட இருக்கிறாராம். இப்பதான் வந்து செய்தி சொன்னாங்க.’ என்றாள்.
‘அப்டீயா?’ என்று மரியம் ஆச்சரியப்பட்டாலும் மரியத்தின் சிந்தனை எங்கேயோ இருந்தது.
பத்திரிகையில் வாசித்த அந்தச் செய்திதான் அவளது கவனத்தைத் திசை திருப்பியிருந்தது. தினம் வரும் செய்திதான் என்றாலும் மீனாட்சியின் மகன் ஆழ்கடலுக்குப் போன இந்த நேரத்தில் வந்த செய்தி என்பதால் அவள் உறைந்து போயிருந்தாள்.
‘ஆழ்கடலுக்குப் போன மீனவர்களின் சில படகுகள் இன்னமும் கரை திரும்பவில்லை. கடல் எல்லையில் கடற்படை சுட்டதால் பலர் காயம் அடைந்திருப்பதாக நம்பப் படுகின்றது.’ என்று பெரிதாக தலையங்கம் போடப்பட்டிருந்தது.
யுத்தம் ஓய்ந்தாலும், ஆட்சி மாறினாலும் அதிகாரிகள் இன்னும் மாறவில்லை என்பதை அந்தத் தலையங்கம் சொல்லாமல் சொல்லி நின்றது.
Comments
Post a Comment