Story - சீமை சினேகிதி

 


சீமை சினேகிதி    

(குரு அரவிந்தன்)


‘இங்கே பார் என்னை அக்கான்னு கூப்பிடாதே’ என்றாள் முதல் நாளே கிறிஸ்டினா. 

கிறிஸ்டினா அளவான உடம்போடு நிறமாய், அழகாய் இருந்தாள். யாரையும் இலகுவில் கவரக்கூடிய வல்லமை அவளிடம் இருந்தது மேலைநாட்டு ஆடையில் அவள் ஒரு அழகுப் பொம்மையாய்த் தெரிந்தாள். எவ்வளவுதான் சாப்பிட்டாலும் உடம்பு வைக்காத தேகம் அவளுக்கு. முகம் ஒரு கவர்ச்சிச் சிரிப்போடு பளிசிசென்று இருந்தது. அழகாக இருப்பதற்கு நேரத்தைச் செலவிடாமலே அழகாக இருந்தாள். 

என்னைவிட இரண்டு மூன்று வயது கூடுதலாக இருக்கலாம். அனுபவத்திலும், பேச்சிலும் அப்படித்தான் தெரிந்தாள். அதனால்தான் ஊர்வழக்கம்போல மரியாதை நிமிர்த்தம் அவளை ‘அக்கா’ என்று அழைத்தேன். அது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை முதல் சந்திப்பிலேயே தெளிவாகச் சொல்லிவிட்டாள்.

இங்கே எல்லாமே எனக்குப் புதுமையாக இருந்தது. ஆடை துறந்த கன்னிகை போல மரங்கள் எல்லாம் இலை உதிர்த்து விட்டுப் பிறந்த மேனியாக இயற்கையின் கோலத்தைக் காட்டி நின்றன. முக்கியமாக இங்கே வந்த சில வாரங்களில் புதிய வானம் தூவிய முதற் பனிமலர்களைப் பார்த்போது பிரமித்துப் போனேன். 

பூமி தொட்ட பனிப்பூக்கள் ஊசியிலை மரங்களில் வெண்பூக்களாய் மலர்ந்திருந்த காட்சி, ஊரிலே முதல் மழையில் புழுதிவாசம் முகர்ந்ததுபோல, பனிப்பூக்களில் நனைந்;தபோது என்னை ஒரு குழந்தையாகவே மாற்றிவிட்டது. உண்மையைச் சொன்னால், சில நேரங்களில் எனது கனவுகள், கற்பனைகள் எல்லாம் நிஜமாகக் கண்முன்னால் விரிந்தபோது என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்தவே முடியாமல் போய்விட்டது.

‘ஜெஸ், ஆமா என்னைக் கிறிஸ்டினா என்றே பெயர் சொல்லிக் கூப்பிடலாம், வயசொண்ணும் இங்கே பெரிசாப் பாக்கிறதில்லை. புரியுதா, வீயா பிரண்ட்ஸ்..!’ 

‘கிவ்மீ பைவ்’ என்று ஒற்றைக் கையை உயர்த்தி எனது கையில்; தட்டியவள், என் கையைப் பற்றிக் கொண்டே கண்களைப் பார்த்துச் சொன்னாள். ஊரிலே மரியாதை நிமிர்த்தம் யாருடைய கண்ணையும் நேரேபார்த்து நான் பேசியதில்லை. அவள் என்னைப் பார்த்த பார்வையை என்னால் எதிர் கொள்ள முடியவில்லை. யாருமே இதுவரை என்னைப் பார்த்து கைகளைப் பற்றி இவ்வளவு நட்போடு உறவு கொண்டாடியதில்லை.

‘பிரண்ட்ஸ்..?’ சரியென்று தலை அசைத்தேன்.

அவள் எனது கையைப் பற்றிய போது, என் உடம்பெல்லாம் ஏதோ உணர்வு பரவியது. அவளது வார்த்தையிலும், தொடுகையிலும் இருந்தது அன்பா, பாசமா, நட்பா எதுவென்று புரியவில்லை, ஏதோவொன்று, ஆனாலும் எனக்குப் பிடித்திருந்தது. 

ஊரிலே கிடைக்காத எத்தனையோ சுதந்திரம் இங்கே கிடைத்தது. அங்கே ஒரு பருவப் பெண்ணால் தனது இஷ்டத்திற்கு வீட்டை விட்டு சுதந்திரமாய் வெளியே திரியமுடியமா? இங்கே எனக்கு எந்தவொரு தடையும் இருக்கவில்லை. கிறிஸ்டினா இன்று குயின்ஸ் பார்க்குக்குப் போறதாகச் சொன்னாள், என்னையும் வர்றியா என்று கேட்டாள். நானும் வர்றதாக ஒத்துக் கொண்டேன். 

அதனாலே அவளுக்காகக் காத்திருந்தேன். ஊரிலே தனியே இருக்கும் பாட்டியின் நினைவு வந்தது.

‘உன்னைப்பார்த்தால் சீதா மதிரியே இருக்கிறாய்’ 

‘அப்படியா, இராமாயணத்து சீதையை எப்படி உங்களுக்குத் தெரியும் பாட்டி?’ 

‘அட நான் அதைச் சொல்லேல்ல, நம்ம சீதா, தெய்வம் தந்த வீடு கரெக்டர் மாதிரி’

‘ஓ அப்படியா..?’

‘என் கண்ணே பட்டிடும்போல, சீத்தாம்மா நீ சீமையில் பிறந்திருக்க வேண்டியவா, இங்க வந்து பிறந்ததால கஷ்டப்படுகிறாய்!’

‘சீமைக்குத்தானே, போயிட்டாப் போகுது பாட்டி’.

வாகன விபத்து ஒன்றில் எனது பெறோரை நான் இழந்திருந்தேன். பாட்டிதான் என்னை எடுத்து வளர்த்திருந்தாள். பாட்டி ஓரளவு வசதியாக இருந்ததால் எந்தவித கஷ்டமும் இன்றி என்னால் மிகவும் கட்டுப்பாட்டோடு வளரமுடிந்தது. நான் வெளிநாடு செல்ல வேண்டும் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதுதான் பாட்டியின் விருப்பம். பாட்டியின் விருப்பமும் இப்போது நிறைவேறியிருந்தது. கிளம்பும்போது பாட்டி சொன்னது இப்பவும் ஞாபகம் இருக்கு.

‘அமெரிக்கா போறதில ஒண்ணுமில்லே, தனியத் துணையில்லாமலே போறே, ஆம்பளங்க விஷயத்திலே கொஞ்சம் எட்ட நின்னே பழகிக்கோ, புரியுதாம்மா?’ ஏனக்குள் சிரித்துக் கொண்டேன், பாட்டியால இப்படித்தான் உபதேசம் பண்ணமுடியும்.

வடஅமெரிக்காவில் உள்ள பிரபல வங்கி ஒன்றின் ஐரித் துறையில் வேலை கிடைத்தது. என்னைப்போலவே பல்வேறு நாடுகளில் இருந்தும் பலர் இங்கே வந்து ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்தார்கள். 

தங்குவதற்கு இடம் தேடிய போதுதான் இங்கே மேற்பார்வையாளராக இருக்கும் கிறிஸ்டினாவின் அறிமுகம் கிடைத்தது. அவள் தங்கியிருந்த அறையில் இன்னுமொரு இடம் காலியாக இருந்ததால், அவளது அறைத் தோழியாகவும் எனக்கு இடம் கிடைத்தது. அங்கிருந்து வேலைக்குப் போவது வசதியாக இருந்தது மட்டுமல்ல கிறிஸ்டினாவையும் எனக்குப் பிடித்திருந்ததால் அவளுடனே தங்குவதற்குச் சம்மதித்தேன். 

‘என்ன இது சல்வாரா, நீ கொஞ்சமாவது மாறணும் சீதா, யாருமே இப்படி அங்கே வரமாட்டாங்க.’ 

என்னைக் கட்டாயப்படுத்தி பான்ஸ், ஸார்ட் அணியவைத்து, நகத்திற்கும், உதட்டிற்கும் மைபூசிவிட்டாள். 

கண்ணாடியில் அழகு பார்த்தபோது ‘இது நானா’ என்று ஆச்சரியப்பட்டேன்.

‘இப்பதான் நீ அழகாய் இருக்கே, என் கண்ணே பட்டிடும் போல...’ கன்னத்தில் செல்லமாய்க் கிள்ளிப் பாட்டியை நினைவூட்டினாள்.

சப்வே தொடர் வண்டிநிலையத்திலிருந்து வெளியே வந்தோம். இப்போ இயற்கைக் காற்றைச் சுவாசிக்க முடிந்தது. தேர்த்திருவிழாக் கூட்டம்போல, எங்களுக்கு முன்னால் பலர் ஆண்பெண் வித்தியாசம் இன்றிக் கையைக் கோர்த்தடி போய்க் கொண்டிருந்தனர் கூட்டத்திற்குள் ஆண்களை இடித்துக் கொண்டு வேகமாக நடப்பதற்கு எனக்குக் கூச்சமாக இருந்தது. 

‘சீதா இப்படியே நடந்தால் இன்றைக்குப் போய்ச் சேரமாட்டோம். சீக்கிரம் வா’ என்று சொல்லி என் கையைப்பிடித்து அழைத்துச் சென்றாள். 

‘காபி சாப்பிடுவோமா?’ என்றாள் கிறிஷ்டினா. 

‘இல்லை, வேணாம்’

‘பரவாயில்லை, நாவாங்கித்தர்றேன், இந்தக் காப்பியைச் சாப்பிட்டுப்பார்’

‘ஸ்டாபக்’ காப்பி வாங்கித் தந்தாள். கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அருந்தியதும் உற்சாகம் பொங்கியது. கொஞ்சம்கூட மிச்சம் வைக்காமல் அப்படியே அருந்திவிட்டேன்.

‘காபி எப்படி?’ என்றாள் கிறிஸ்டினா.

‘நல்லாயிருக்கு, முதல்ல வேணாம் என்றுதான் சொன்னேன், ஆனால் இப்ப சுவைத்துப்பாத்தா நல்ல ரூசியாய் இருக்கு. எனக்குப் பிடிச்சிருக்கு’ என்றேன்.

‘எல்லாமே நாம அனுபவித்தால்தான் அதன் அருமை தெரியும் இல்லையா, இந்த குழந்தைத் தனம்தான் எனக்கு உங்கிட்ட பிடிச்சிருக்கு சீதா’ என்றாள்.

ரொறன்ரோ டவுன்ரவுன் அழகாக இருந்தது. சீஎன் டவர் உயர்ந்து நின்றது. ஒருநாளைக்கு உலக அதிசயமான நயகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க வேண்டும். கனடா பக்கத்தில் நின்று பார்த்தால் அழகாக இருக்குமாமே! கிறிஸ்டினா எப்போதாவது போனால் நானும் கேட்டுப் பார்க்கலாம்.

‘இங்கே நிலத்துக்குக் கீழே இதுமாதிரி இன்னுமொரு டவுன் இருக்காமே அது உண்மையா?

‘ஆமா, நீ ஒரு நாளும் பார்த்ததில்லையா?’

‘இல்லையே, நான் இப்பதானே இங்கே வந்தேன், இனிமேல்தான் எல்லா இடத்தையும் சுற்றிப் பார்க்கணும்’.

‘அப்படின்னா வா நான் காட்டுறேன்’

கீழே செல்வதற்கு எலிவேற்ரருக்குக் காத்திருந்தோம். எங்களைப் போலவே பலரும் காத்திருந்தார்கள். எலிவேற்றர் மேல் நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. இப்போதைக்கு வருவதாக இல்லை. 

‘எவ்வளவு நேரம் செல்லுமோ தெரியாது. நாங்க படிக்கட்டு வழியே இறங்கிச் செல்லலாம், வர்றியா’ என்றாள் கிறிஸ்டினா.

சம்மதம் என்று தலையாட்டிவிட்டு அவளுடன் படிக்கட்டு வழியே கீழே இறங்கினேன். அவளது வேகத்திற்கு என்னால் ஈடுகொடுக்க முடியவில்லை. பழக்கப்பட்டவள் போல அவள் தடதடவென்று படிக்கட்டு வழியாகக் கீழே இறங்கினாள். அவளோடு சேர்ந்து நானும் ஓடியோடிக் கீழே இறங்கினேன். 

எனக்குப் பழக்ம் இல்லாததால் ஓரிடத்தில் படிக்கட்டுத் தடக்கவே கீழே விழப்போன என்னை அவள் தாங்கிக் கொண்டாள்.

‘கவனம் சீதா, நான் வேகமாய்ப் போகிறேனா?’

‘இல்லை, நான் சமாளிக்கிறேன்.’ என்றேன். 

எனக்காக அவள் தனது வேகத்தைக் குறைத்து என் கைகளைப் பற்றியபடி என்னோடு சேர்ந்து கீழே இறங்கினாள். நிலத்தடிக்குக் கீழே மிகப்பெரியதொரு நகரமே இருந்தது. இப்படி ஒரு நகரமே நிலத்திற்கடியில் இருக்கும் என்று என்னால் கற்பனைகூடச் செய்து பார்க்க முடியமல் இருந்தது. 

இலகுவாக வெளியே செல்வதற்கு ஆங்காங்கே அம்புக்குறிகள் போட்டு மேலே உள்ள வீதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தனர். 

‘சரி, நேரமாச்சு, கூட்டத்தை ஆரம்பிச்சிடுவாங்க, குயின்ஸ் பார்க்குக்குப் போகலாமா சீதா?’

நான் சரி என்று தலையசைத்தேன். இப்போதெல்லாம் அவள் என்ன சொன்னாலும் என்னை அறியாமலே சட்டென்று தலையாட்டப் பழகிக் கொண்டேன். புதிதாக வந்த எனக்கு அவளைவிட்டால் வேறுயார் இங்கே உதவிக்கு வரப்போகிறார்கள். எல்லாவிதத்திலும் அவள் எனக்கு நல்ல துணையாக இருந்தாள். 

கிறிஸ்டினா என்னை குயின்ஸ் பார்க்குக்கு அழைத்துச் சென்றாள். போகும்போது ஊர்வலங்கள், அரசில் கூட்டங்கள், போன்றவை இங்கே அடிக்கடி நடப்பதாகச் சொன்னாள். 

ஆங்காங்கே சீமென்ட்பெஞ்சில் ஜோடிகள் பலர் உல்லாசமாய் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். பள்ளிச் சீருடையோடு அந்தப் பெண்ணு அவனுக்கு அருகே நெருக்கமாக உட்கார்ந்து அவனுடைய தோள் இரண்டையும் மெதுவாக மாஸாச் செய்து கொண்டிருந்தாள். அவனோ கண்களை மூடி அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். 

என் உடம்புக்குள் ஏதோ குறுகுறுத்தது. இப்படி நெருக்கமாகப் பள்ளியிலே உறவாடுவாங்களா? நம்ம ஊரிலே முடியமா? அந்தக் காட்சி திரும்பத் திரும்ப எனக்குள் நிழலாடியது.

‘இப்படி ஊர்வலங்களில் பங்கு பற்றுமளவிற்கு அரசியலில் உனக்கு ஆர்வமிருக்கா கிறிஸ்டினா?’

‘இல்லை, ஆனால் சில விஷயங்களைப் பார்த்திட்டு நாம சும்மா இருக்க முடியாது. அதனால் எங்க எதிர்ப்பை ஒன்றுகூடித் தெரிவிக்கத்தான் நாம இங்கே வந்தோம்’ என்றாள்.

‘எதிர்ப்பா, என்னத்திற்கு?’

‘அதுதான் வந்திட்டமே, நீயே வுந்து பாரேன்’

பாடசாலைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட செக்ஸ் எடியுகேஷன் பற்றிய பாடத்திட்டத்தில் தேவையில்லாத விடையங்கள் புதிதாகச் சேர்க்க்ப்ட்டிருப்பதால், அது பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதால்  அதை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கும்படி வேண்டித்தான் ஊர்வலம் போனார்கள்.

இதுதான் குயின்ஸ்பார்க் என்றாள் கிறிஸ்டினா. எங்கிருந்து வந்தார்களோ தெரியாது, நாலாபக்கமும் இருந்து மக்கள் அங்கே ஒன்றுகூடத் தொடங்கினர். தூர இடங்களில் இருந்து பேருந்துகளிலும் வந்து இறங்கினர். 

ஆண்களைவிடப் பெண்களே அதிகமாயிருந்தனர். பொலீஸ் வண்டி ஒன்று அங்கே நிறுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் எட்டவே நின்று கூட்டத்தைக் கண்காணித்துக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு பேரும் ஒன்றாகவே கூட்டத்தோடு நடந்தோம். கிறிஸ்டினா உரக்க்க் குரல் கொடுக்க அவளைப் போலவே நானும் உரக்கக் குரல் கொடுத்தேன். ஆங்கிலத்தில் உரக்கக் கத்திச் சத்தம் போடுவது எனக்கு வேடிக்கையாக இருந்தது. 

சில பெண்கள் கையிலே பெரிதும் சிறிதுமாய் பதாதைகள் வைத்திருந்தனர். ‘கான்ஸ் ஓவ் அவகிட்ஸ்’ என்று ஒரு பதாதையில் பெரிதாக எழுதியிருந்தது. ஒன்று மட்டும் புரிந்தது, இது பிள்ளைகள் சம்பந்தமான விடையமாக இருக்கலாம். கல்வியை இதற்குள் ஏன் கொண்டு வருகிறாங்கள் என்று புரியவில்லை.

இப்படி ஒரு ஊர்வலம் என்றாலே அரசியல் வாதிகள் ஊரிலே காடையங்களை வெச்சு மிரட்டுவாங்க, இங்கே அதெல்லாம் இல்லை. கப்சிப்பென்று சத்தம் நின்று அமைதியானது. ஊர்வலத்தை ஒழுங்கு செய்தவர்கள் உரையாற்றினார்கள். எல்லோரும் காது கொடுத்துக் கவனமாகக் கேட்டார்கள்.

 எனக்கு ஆங்கிலம் ஓரளவு புரிந்தாலும், பிரித்தானிய உச்சரிப்பைக் கேட்டுப் பழகிப்போனதால், அவர்கள் வேகமாக வித்தியாசமான அமெரிக்க உச்சரிப்பில் பேசியதால் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டேன். அவர்களின் மொழி உச்சரிப்பை முற்றாக விளங்கிக் கொள்ள எனக்கு இன்னும் கொஞ்ச நாட்கள் எடுக்கலாம். 

அருகே நின்ற கிறிஸ்டினாவும் அவர்களின் பேச்சிலே கவனத்தைச் செலுத்தியிருந்தாள். பேச்சிலே கவனம் செலுத்திக் கொண்டிருந்த என் உணர்வு சட்டென்று விழித்துக் கொண்டது. 

அவளது கைகள் சுடுவது போல இருந்தது. முகத்தைத் திரும்பாமலே என் கவனத்தைத் திருப்பினேன். கைகளைக் கோர்த்தபடி நின்ற என் உள்ளங்கையில் அவள் சுட்டு விரலால் மெதுவாக வருடிவிட்டாள். ஆனாலும் அவளது பார்வை உரையாற்றியவர் மேலேயே இருந்தது. தற்செயலாக நடந்ததா அல்லது வேண்டும் என்றே அவள் செய்தாளா தெரியவில்லை. 

இரவு தூக்கம் வராமல் போகவே படுக்கையில்; உழன்று கொண்டிருந்தேன். கிறிஸ்டினா படுக்கையில் இருந்தபடீயே டிம்லைட்டில் லாப்ரொப்பில் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். எனக்குள் குடைந்து கொண்டிருந்த விடையத்தை அவளிடம் கேட்க நினைத்தேன்.

‘கிறிஸ்டினா உங்ககிட்ட ஒண்ணு கேட்டால் தப்பா நினைக்கமாட்டியே?’ என்றேன்.

‘யெஸ் டியர், என்கிட்டக் கேட்க என்ன தயக்கம்?’ 

எனக்குத் தயக்கமாக இருந்தது. ஆனாலும் என்னுடைய சந்தேகங்களைத் தீர்க்கக்கூடியவள் இவள்தானே! 

‘லெஸ்பியன்’ என்று இவங்க எல்லாம் மெதுவா பேசிக்கிறாங்களே, அப்பிடின்னா என்ன கிறிஸ்டினா?’ என்றேன்.

அவள் வினோதமாக என்னைப் பார்த்து சிரித்துவிட்டு, மெல்ல எழுந்து எனது கட்டிலுக்கு அருகே வந்தாள்.



Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper