Story - அப்பாவின் ஆசை





 அப்பாவின் ஆசை


(குரு அரவிந்தன்)


அப்பாவை வயோதிபர் இல்லத்தில் சேர்க்கப் போகிறோமே என்பதை நினைக்க மனதிற்கு வேதனையாகவும், நான் எடுத்த முடிவு சரிதானா என்பதில் எனக்குள் தடுமாற்றமாயும் இருந்தது. வேறு வழி இல்லாததால் சூழ்நிலையை அனுசரித்து நான் எடுத்த முடிவு சரியானதாகத்தான் இருக்கும் என்று எனக்குள் சமாதானப் படுத்திக் கொண்டேன்.

''மாமனாரை வீட்டிலே வைத்துப் பார்க்கமுடியாத கொடுமைக்காரி என்று எனக்குக் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கவா இப்படி நடக்கிறீங்க?"" என் மனைவி  தேவகியின் நச்சரிப்பு என்னைச் சிறிது நிலைகுலைய வைத்தாலும் என் முடிவில் நான் பிடிவாதமாய் இருந்தேன். தேவகியோ உறவுகளின் பழிச்சொல் தன்மீது விழுந்துவிடாமல், மிகவும் கவனமாக எப்பொழுதும் பாதுகாப்பு உணர்வோடு இருந்தாள்.

எழுபத்தி நாலு வயதில் அப்பா தனித்துப் போய் விட்டார். அம்மா அடிக்கடி 'பூவோடும் பொட்டோடும் போயிடணும்' என்று வேண்டிக் கொண்டபடியே அவள் சுமங்கலியாய்ப் போய்விட்டாள். ஊரிலே யாரும் துணை இல்லாதபடியால் அம்மாவின் அந்திம காரியங்களை முடித்துவிட்டுத் திரும்பி வரும்போது அப்பாவையும் ரொறன்ரோவிக்கு என்னுடன் அழைத்து வந்தேன். 

காலத்தின் முத்திரைகள் அப்பாவின் முகத்தில் இதுவரை முழுமையாகப் பதியவில்லை. அவர் உடல் உபாதை எதுவும் இல்லாமல் நல்ல சுகதேகியாகத்தான் இருந்தார். தினமும் ஷேவ் பண்ணி முகத்தைப் பளீச்சென்று வைத்திருப்பார். குத்தரிசிச் சோறும், குரக்கன் பிட்டும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு என்று தன் கட்டுமஸ்தான உடம்பைப் பற்றிச் சொல்லிக்கொள்வார். யாரைக் கேட்டாலும் பத்துப் பன்னிரண்டு வயது குறைத்துத்தான் அவரது வயதை மதிப்பிடுவார்கள். அவர்களுக்கொல்லாம் பவளவிழா கொண்டாடும் கதாநாயகன்போல 'ஐயாம் கோயிங் டூ பி செவின்டி பைவ்' என்று சொல்லிக் கொள்வதில் அப்பாவிற்கு ஒருவித பெருமை கலந்த திருப்தி. 

சென்றமாதம் மருத்துவ பரிசோதனைக்கு அவரை அழைத்துச் சென்ற போது அப்பாவிற்கு ஹை கொலஸ்ரோல் இருப்பதாக குடும்ப வைத்தியர் எச்சரிக்கை செய்தார். அவரை நன்றாக உடற்பயிற்சி செய்யும்படி வற்புறுத்தியதோடு, தினமும் ஒரு ஆஸ்பிரினும், 'லிப்பரோல்" மாத்திரையும் சாப்பிடச்சொன்னார். மறுபடியும் இந்தமாதம் சென்றபோது ஹை பிளட்பிரஷர் என்று சொல்லி அதற்கும் மருந்து கொடுத்தார்கள். 

தள்ளாடும் வயதில் கைநடுக்கம் வேறு அவரைத் திடீரெனப் பிடித்துக் கொண்டது. பாக்கின்ஸன் நோயாய் இருக்கலாமோ என்று சந்தேகப் படுவதாகச் சொன்னார்கள். எதையுமே சந்தேகத்தோடுதான் இவர்கள் முதலில் தொடங்குவார்கள், பின் திடீரெனப் பெரிய குண்டைத் தூக்கிப் போடுவார்கள். இந்த மண்ணுக்கு வந்ததும் இப்படியாக தினமும் ஒவ்வெரு வியாதிகள் அப்பாவின் உடலை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இந்த வியாதிகளை  எதிர்த்துப் போராட அப்பாவின் வயதும், உடம்பும் கொஞ்சமும் இடம் கொடுக்கவில்லை.

இந்த மண்ணில் தினமும் யந்திரமயமான வாழ்க்கை. காலையில் எழுந்து நானும் மனைவியும் வேலைக்கு ஓடவேண்டும். வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது இருட்டிவிடும். நாங்கள் எப்போ வீட்டிற்கு வருவோம் என்ற எதிர்பார்ப்பில் எங்கள் வருகைக்காக அப்பா தனிமையில் ஆவலுடன் காத்திருப்பார். எதைஎதையோ எல்லாம் சொல்லிப் பகிர்ந்து கொள்ள நினைக்கும் ஒரு குழந்தையின் ஆர்வம் அவர் முகத்தில் தெரியும்.  களைத்து விழுந்து வரும் எங்கள் முகத்தைப் பார்த்ததும் அவரின் மனம் மாறிவிடும். சொல்லவந்ததைச் சொல்லாமல் மௌனமாகிவிடுவார்.  

பகலில் அவருக்கு வேண்டிய பணிவிடைகளை யார் செய்வது என்பது ஒரு பிரச்னையாகி விட்டது. அதற்காக எங்கள் வேலையை விட்டுவிட முடியுமா? அப்பாவின் நலன்களைக் கவனிப்பதற்காக எங்களில் யாராவது ஒருவர் வேலையை விட்டாலும், எதற்கெடுத்தாலும் பணம் பிடுங்கும் இந்த நாட்டில் குடும்ப பொருளாதாரச் சுமையை எப்படிச் சுமப்பது? எல்லாமே கேள்விக் குறிகளாய் விஸ்வரூபமெடுத்து என்முன்னால் நிமிர்ந்து நின்றபோது என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினேன்.

''எனக்கு ஒரு சின்ன ஆசை"" என் மனதைப் படித்தவர் போல அப்பாவே என்னிடம் ஒரு ஓய்வு நாளில் கேட்டார்.

"'என்னப்பா? என்ன ஆசை?'' என்றேன்.

"'என்னை ஒரு வயோதிபர் இல்லத்தில் சேர்த்து விடுங்களேன்"' தயங்கித் தயங்கிக் கேட்டார்.

"'வயோதிபர் இல்லத்திலா? என்னப்பா சொல்லுறீங்க?"" அதிர்ந்து போய்க் கேட்டேன். 

நான் அப்பாவிடம் இருந்து இப்படியான ஒரு வேண்டுகோளை எதிர்பார்க்கவில்லை. எங்கேயோ உயரத்தில் இருந்த அப்பாவைச் சட்டென்று இப்படிக் கீழே இழுத்து முகம் குப்பிறத் தள்ளி விட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. 

அம்மா இருக்கும் வரை அவள்தான் எங்களுக்குள் உறவுப் பாலமாய் இருந்தாள். அப்பா மிகவும் கண்டிப்பானவர். அதிகம் பேசமாட்டார். எப்போதாவது நண்பர்களுடன் வெளியே போவதென்றால் கூடப் பயந்து பயந்து எட்டநின்று அம்மா மூலம் தான் உத்தரவு கேட்டு அவரிடம் தூதுவிடுவேன். அப்பா என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு ஒருவித கண்டிப்பான தொனியில் 'ம்" என்று தலையசைப்பார். 'நான் உன்னை நம்பிறேன்" என்பது போல அவரது அந்த ஒரே பார்வையே போதும், நாங்க போகுமிடத்தில் தப்புச் செய்வதைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கமாட்டோம்.

காலவோட்டம் நிலைமையைத் தலைகீழாய் மாற்றி விட்டிருந்தது. அப்பாவிடம் பயந்து, பயந்து நான் உத்தரவு வாங்கிய காலம்போய், இப்போ அப்பா என்னிடம் அனுமதி கேட்கும் நிலைக்கு வந்துவிட்டதை நினைக்க மனதிற்கு வேதனையாகவும், அதே சமயம் அவரைப் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்தது. வலதுகை உடைந்தது விட்டது போல, அவரது ஒவ்வொரு செய்கைகளையும் பார்க்கும் போது அம்மாவின் பிரிவு அப்பாவைப் பெரிதும் பாதித்திருந்ததை என்னால் நன்றாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஷ''ஆமா, இங்கே இந்தத் தனிமையை என்னாலே தாங்கமுடியலை, நீங்க காலையிலே போனால் இரவுதான் வீட்டிற்கு வர்றீங்க, பொழுது போக்க எனக்குப் பேரப்பிள்ளைகள் கூட இல்லை. நடுங்கும் கைகளோடு என்னுடைய தேவைகளைக் கூட என்னால் செய்ய முடியவில்லை. உங்களுக்குப் பாரமாயும் நானிருக்க விரும்பவில்லை. எத்தனை நாட்களுக்கு டிவி, வானொலி என்று பொழுது போக்குவது. என்னோட கண் பார்வையும் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டே வருது. இப்படியே தொடர்ந்து தனிமையில் இருந்தால் எனக்குப் பைத்தியம் பிடித்து விடுமோ என்று பயமாய் இருக்கு. அதனாலே நானே விரும்பித்தான் இந்த முடிவிற்கு வந்தேன்.''

''என்னப்பா சொல்லுறீங்க? நீங்க மண்ணாய் இருந்து இந்த மரத்தை வளர்த்து விட்டீங்க, இன்று இந்த மரத்திற்கு இலையாய், நிழலாய் இருந்து எனக்கு ஆறுதல் தருகிறீங்க, இதிலே யாருக்கு யார் பாரமப்பா? பெற்ற பிள்ளையைப் பாரம் என்று நீங்க நினைத்திருந்தா இப்படி வளர்த்து என்னை ஆளாக்கி விட்டிருப்பீங்களா? எப்படியப்பா 'எங்களுக்குப் பாரமாய் இருக்கிறீங்க' என்று சொல்ல உங்களுக்கு மனசு வந்தது?""

''எனக்குப் புரியுதப்பா, ஆனால் நீ சொல்வதெல்லாம் என்னைச் சமாதானப் படுத்தச் சொல்லும் வெறும் வார்த்தைகள்தானப்பா, ஏட்டுச் சுரக்காய் கறிக்குதவாது என்பது உனக்குத் தெரியும்தானே? அதனாலே நிஜமாய், யதார்த்தமாய் வாழப்பழகிக் கொள்ளப்பாரப்பா, அப்போது தான் நான் சொல்வது சரி என்று உனக்குப் புரியும்.'' 

அப்பாவிற்கு வெறும் வார்த்தைகளில் நம்பிக்கையில்லை. நிஜத்தை நிஜமாகவே எடுத்து வாழப் பழகிக் கொண்டவர். அதனாலே இங்கே எங்கள் குடும்ப நிலைமையை நன்கு புரிந்து வைத்திருந்தார்.

''நானோ அல்லது தேவகியோ உங்க மனம் நோகும்படியாய் எப்போதாவது நடந்துகிட்டோமாப்பா?''

''அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, நீங்க தேவையில்லாமல் எதை எதையோ எல்லாம் வீணாய்க் கற்பனை பண்ணி மனசைக் குழப்பிறீங்க, தேவகி ரொம்ப நல்ல பெண்ணப்பா, பெற்ற மகளைப்போல என்னைக் கவனிச்சுப் பார்த்துக்கிறா, எனக்குத்தான் ஒரு மாறுதல் வேண்டும், அதனாலேதான் முதியோர் இல்லத்தில் நிரந்தரமாய்த் தங்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன்."'

அப்பா மனம் திறந்து பேசியதைக் கேட்டதும் நான் நெகிழ்ந்து போய்விட்டேன். இங்கே தினமும் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதுதான் அப்பாவின் பிரச்னையாய்ப் போய்விட்டது என்பது எனக்கு மெல்லப் புரிந்தது. அதனால் தான் முதியோர் இல்லத்தில் சென்று தங்க வேண்டும் என்பதில் அப்பா விடாப்பிடியாய், ஒரு குழந்தையின் பிடிவாதத்தோடு இருக்கிறார் என்பதும் தெரிந்தது.

சொந்தபந்தம் என்ன சொன்னாலும் பரவாயில்லை அப்பாவின் விருப்பப்படியே நடக்கட்டும் என்று ஒரு நல்ல நாளில் அப்பாவை முதியோர் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அங்கே அவரை அனுமதித்து விட்டோம்.

தினமும் வேலை முடிந்ததும் நானோ அல்லது தேவகியோ  முதியோர் இல்லத்திற்குச் சென்று அவரைப் பார்த்து, தேவைகளைக் கேட்டு, நலன் விசாரித்து வந்தோம்.

அவரும் அங்கே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். மாலை நேரங்களில் வெளியே மரநிழலில் புதிய நண்பர்களுடன்  பொழுது போக்காக காட்ஸ் விளையாடிக் கொண்டிருப்பார், சில சமயம் வரவேற்பறையில் பெரிய திரையில் டிவி பார்த்துக் கொண்டிருப்பார், வானொலி கேட்டுக் கொண்டிருப்பார், இருபத்தி நாலுமணி நேர வானொலியில் இலவச தொலைபேசி மூலம் தேவாரம் திருவாசகம் பாடிக் கொண்டிருப்பார். புத்தகம் படிப்பார், காலாற வெளியே சிறிது தூரம் நடந்துவிட்டு வருவார். அவருக்கு அந்த வாழ்க்கை ரொம்பப் பிடித்துப் போயிருந்தது. கூட்டை விட்டு வெளியேறிச் சுதந்திரமாய் வானத்தில் சிறகடித்துப் பறந்து திரியும் பறவையின் சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.

ஆனாலும் அப்பாவை என்னோடு எங்கவீட்டிலே வைத்துப் பார்க்க முடியவில்லையே என்ற குறை என் மனதில் எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது. 'இவன் தந்தை என்நோற்றான் கொல்லெனும் சொல்", சின்னவயதில் அப்பா எனக்குச் சொல்லித் தந்த குறள் அவரைப் பார்க்கும் போதெல்லாம் என் நினைவில் வந்து நின்றது. ஒரு மகனாய்த் தந்தைக்குச் செய்யவேண்டிய கடமையில் இருந்து நான் தவறி விட்டேனோ என்ற குற்ற உணர்பு நெஞ்சம் முட்டிக் கனத்ததுக் கொண்டே இருந்தது.

அன்று மாலை வேலை முடிந்ததும் வழக்கம் போல அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். வழமையயான இடங்களில் அப்பாவின் நடமாட்டத்தைக் காணமுடியவில்லை. என்ன நடந்திருக்கும்? அப்பா எங்கே? நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது.

அவசரமாக உதவியாளரிடம் விசாரித்தேன்.

''உங்க அப்பாவா? லக்கி மான், அதிஷ்டவசமாய் உயிர்தப்பிப் பிழைத்திருக்கிறார்.''

''என்ன நடந்தது?'' பதட்டத்தோடு கேட்டேன்.

''காலை பத்துமணி இருக்கும் மலசலகூடத்திற்குப் போயிட்டு வந்த உங்கப்பாவிற்கு திடீரென மைல்ட் அட்டாக் வந்திடிச்சு. உடம்பெல்லாம் வியர்க்க, அப்படியே நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மயங்கிப்போய் படுக்கையிலே சரிஞ்சிட்டார். நல்லகாலம் நாங்க நிலைமையைப் புரிந்து கொண்டு உடனடியாக முதலுதவி செய்து அவரை ஆம்புலன்ஸில் அவசரசிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றபடியால் உயிரோடு தப்பிவிட்டார்.''

அவர் சொல்லச் சொல்ல மனசு படபடத்தது. அப்பாவின் விருப்பப்படியே முதியோர் காப்பகத்தில் அவரைச் சேர்த்திருந்த படியால்தான் அப்பா பிழைத்துக் கொண்டார். இதுவே எங்க வீடாய் இருந்திருந்தால் காலை பத்துமணிக்கு யாருடைய துணையும் இல்லாமல் அப்பா தனிமையில் நெஞ்சு வலியால் துடித்துத் துடித்து..!"" நினைத்துப் பார்க்கவே எனக்குத் தலை கிறுகிறுத்தது.

 வெறும் போலிக் கொளரவத்தையும், பிடிவாதத்தையும் கைவிட்டு, இடத்திற்கும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கும் ஏற்ப யதார்த்தமாய்ச் சிந்தித்து, சிலசமயங்களில் நாங்கள் எடுக்கும் நல்ல முடிவுகள் எவ்வளவு பயனுள்ளதாய்ப் போய்விடுகிறது என்பதை நினைத்துப் பார்க்க மனதிற்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. உதவியாளருக்கு நன்றி சொல்லிவிட்டு, அப்பாவைப் பார்க்க வைத்திய சாலையை நோக்கி வண்டியைத் திருப்பினேன்.


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper