Story - இன்பக்கனவை ஏனோ கலைக்கிறாய்?
இன்பக்கனவை ஏனோ கலைக்கிறாய்?
(குரு அரவிந்தன்)
கெட்டிமேளம் முழங்கித் தாலி கட்டி முடிந்ததும் மணமக்கள் அக்கினி வலம் வர, பெரியதொரு பொறுப்பு முடிந்தது போல மணமக்களின் பெற்றோர் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்கள்.
யாரே ஒருவர் மண்டப மூலையில் செல்போனோடு ரகசியம் கதைத்துச் சிரித்துக் கெண்டு நிற்க, பெரியவர்கள் விட்ட இடத்தில் தங்கள் குடும்பக் கதைகளைத் தொடர்ந்தார்கள்.
சிறுவர்கள் சிலர் மண்டபத்தில்; கலர்கலராய்த் தொங்கும் பலூன்களைப் பறிப்பதற்குத் துள்ளிப் பாய்ந்து கொண்டிருக்கச் சிலர் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
கூந்தலைப் பின்னேதள்ளி, அதிலே அழகாக மல்லிகைச் சரத்தைச் செருகி, தமிழ்ப் பண்பாட்டில் ஆடை அணிந்து, அழகான தேவதைகளாய் அன்ன நடை நடந்து, வரிசைகளுக் கிடையே ஊர்ந்து வந்த அந்த அழகிய பருவப் பெண்கள், வெள்ளித் தட்டில் கற்கண்டை ஏந்தி, சிரித்த முகத்தோடு ஒவ்வொருவருக்கும் நீட்டி, "தாங்யூ" சொன்னவர்களுக்கு "யூ....வெல்க்கம்" சொல்லிக் கொண்டு வந்தார்கள்.
சேகருக்கருகே சுகந்தி வந்த போது,
""வெண்ணிலவே.....வெண்ணிலவே....என்னைத் தாண்டி
வருவாயா விளையாட ஜோடி தேவை. ""
என்று அவளைப் பார்த்து மெதுவாகப்; பாடினான்.
அவள் அவனருகே வந்து கற்கண்டுத் தட்டை நீட்டினாள்.
'இது நல்லாய் இல்லை, ஒரு பாட்டைக் கூட உனக்குச் சரியாகப் பாடத் தெரியவில்iயே!" என்பது போல அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
"பெண்ணே! உன் பார்வை என்னைச் சுடுகின்றது. என்னை
எரித்து விடாதே!"" என்றான் அவளைப் பார்த்து.
அவள் பல்லைக் கடித்துக் கொண்டு அப்பால் நகர்ந்தாள்.
""பைத்தியமோ?"" என்று நினைத்துக் கொண்டாள்.
அப்புறம் அவள் போன இடமெல்லாம் அவனும் போனான்.
அவளைப் பற்றிய விபரங்கள் எல்லாம் சேகரித்தான். தினம்
தினம் விதம் விதமாக உடுத்துக் கொண்டு அவள் கண்ணுக்குத் தரிசனம் தந்தான்.
ஒரு நாள் காலையில் அவளுக்காகக் காத்திருந்து 'சப்வேயில்' சந்தித்தான்.
""சுகந்தி....உங்களோடு ஒரு நிமிடம் கதைக்கலாமா?""
அவள் பயந்து போய் அவனைப் பார்த்தாள்.
""நீங்க........."" என்று அச்சத்தோடு கேட்டாள்.
""ஜ ஆம் சேகர்"" என்று அறிமுகப்படுத்தி, ""ஞாபகம் இருக்கா
உங்கள் சினேகிதி நிருஜாவின் திருமணத்திற்கு வந்திருந்தேனே!""
'அப்படியா.....? ஞாபகம் இல்லையே.......!""
""பரவாயில்லை....இனியாவது ஞாபகம் வைத்துக்கொள்ளுங்களேன்!""
""சந்தோசம்.........வரட்டுமா?""; அவள் மருண்டுபோய், அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்று விரைவாக நகர்ந்தாள்.
"சங்ககாலத்துப் பெண்களை வர்ணித்தது போல "அச்சம், மடம்,
நாணம்.....எல்லாம் இவளிடம் தான் குடியிருக்கிறதோ?" என்று அவன்
ஆச்சரியப் பட்டான்.
நண்பர்கள் மூலம் அவளது பிறந்த தினத்தை அறிந்து, எப்படியும் அவள் அன்று காலையில் கோயிலுக்கு வருவாள் என்று அவளுக்காகக் கோயிலில் காத்திருந்தான்.
நல்ல பண்பாட்டில் வளர்ந்தவர்களைப் பார்ப்பதற்கு இப்படியான இடங்கள் தான் உகந்தது என்று தனக்குள் நினைத்துக் கொண்டு அவளுக்காகக் காத்திருக்க, அவளது தரிசனம் கிடைத்தது. அவளைக் கண்டதும் பக்திப் பரவசமாய் வீதி வலம்வந்து கும்பிட்டான்.
""தேவதையே! உனக்காகக் காத்திருப்பதிலும் ஒரு விதமான சுகம் உண்டு!''
என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு அவள் பார்க்காத நேரத்தில்
திருட்டுத் தனமாய் அவளைப் பார்த்தான். பக்தியோடு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு கற்பனையில் மிதந்து காற்றிலே பறந்தான்.
மாலையில் அவளது நண்பர்களுடன் அழையா விருந்தாளியாக
அவள் வீட்டிற்குச் சென்றான். சுகந்தியைப் பார்த்து "என் மனம்
விரும்புதே உன்னை!" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ""மெனி ஹப்பி......றிட்டேன்ஸ் ஒவ்தடே"" சொன்னான்.
அவளது பெற்றோரிடம் தன்னை அறிமுகப் படுத்தி தான் அவர்களுக்கு தூரத்து உறவுமுறையில் சொந்தம் என்று பல உறவு முறைகளைப் புதுப்பித்தான்.
அன்று 'வலன்ரயின்' தினம். மலர்ச் செண்டுக்கடையில் இருந்து அவளது பெயருக்கு மலர்ச் செண்டு ஒன்று வீடுதேடி வந்தது. 'யாரோ சினேகிதிகள் தன்னைச் சீண்டி வேடிக்கை பார்க்கிறார்கள்' என்று முதலில் நினைத்தாள். ஆனால் மலர்ச்செண்டுக்குள்ளே வண்ணமடல் ஒன்று எட்டிப் பார்த்தது.
ஆவலோடு அதை எடுத்து வாசித்துப் பார்த்தாள். பெயர் இல்லாமல் மொட்டையாக நான்கு வரிகள் மட்டும் எழுதப்பட்டிருந்தன.
"நிலவிலும் மலரிலும் உன் முகம்
நினைவிலும் கனவிலும் என்னிடம்!
மானேயுன் கடைவிழிப் பார்வையில்
மயங்குதே என் மனம் உன்னிடம்!."
சுகந்தி இதை எல்லாம் பெரிது படுத்தி "யாராக இருக்கும்" என்று
அறிந்து கொள்ளக் கூட முயற்சி செய்யவில்லை. பெற்றோரின்
கட்டுப் பாட்டுக்குள் நல்லதொரு குடும்பத்தில் வளர்ந்தவள். நன்றாகப் படிக்க வேண்டும், பண்பாட்டைப் பேணவேண்டும், வாழ்க்கையிலே நன்கு முன்னேற வேண்டும் என்பதெல்லாம் அவளது லட்சியக் கனவுகள்.
இதற்காக அவள் மனசைப் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
இரவு நேரம் தொலைபேசி மெல்லச் சிணுங்கியது.
""ஹலோ.....யார் பேசுவது?"" என்றாள் சுகந்தி.
""தெரியவில்லையா? ஹப்பி வலன்ரயின்"" என்றது மறுபுறம்.
குரலை அவளால் நன்றாக அடையாளம் காணமுடிந்தது. ஆனால் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.
""தெரியவில்லையே.......என்ன வேண்டும்?"" என்றாள்.
""என்ன வேண்டும் என்றா கேட்டீர்கள்? இதற்காகத்தானே இவ்வளவு காலமும் காத்திருந்தேன். எனக்கு என்ன வேண்டும் என்று இதோ இப்பொழுதே சொல்கிறேன் கேளுங்கள்!""
"ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும்.....உடல்......உயிராலும்......பிரியாத....வரம் வேண்டும்"
அவள் பதறிப்போய் முகம் சிவந்து, வியர்த்து விறுவிறுக்க தொலைபேசியை அப்படியே வைத்து விட்டு ஓடிப்போய்க் கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
""யார் இவன்? எதற்காக என்னைத் தெடர்கின்றான்? ஏன் என் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றான்? ஒரு வேளை எனது சினேகிதிகள் சொன்னது போல, கண்டதும் காதலோ?""
புரியாத ஏதோ ஒரு இன்ப உணர்வு அவளை ஆட்கொண்டது. தன்னால் ஒரு இளைஞன் கவரப் படுகின்றான் என்பதை அறியும் போது இந்த வயதில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் ஒரு உன்னதமான, இனிமையான உணர்வு தான் இது. ஆனால் அவள் வளர்க்கப் பட்ட விதமோ என்னவோ, அவள் மனத்தில் அவளை அறியாமலே ஒருவித பயம் சூழ்ந்து கொண்டது.
"வேண்டாம்....இந்த வலைக்குள் நான் மாட்டிக் கொள்ளக் கூடாது. இலட்சியக் கனவுகளை அடைய வேண்டுமானால் இதை இப்படியே வளர விடக் கூடாது. இதற்கு விரைவில் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்"" என்று நினைத்துக் கொண்டு அப்படியே உறங்கிப் போனாள்.
நூல் நிலையத்தில் இருந்து திரும்பி வரும்போது பனி கொட்டிக் கொண்டிருந்தது. மார்கழிப்பனிக் குளிர்காற்று ஊசியாய்க் குத்திக் கிழித்;தது. "படித்து முன்னேற வேண்டும் என்றால் இதை எல்லாம் பொறுத்துக் கஷ்டப்படத்தான் வேண்டும்" என்று நினைத்துக் கொண்டு பனிமழையில் நனைந்து, குளிரில் நடுங்கி வீடு வந்து
சேர்ந்தாள்.
காலையில் படுக்கையால் எழும்பும் போது தலை இலேசாகக் கனத்து, உடம்பு மெல்லச் சுட்டது. தாயார் தொட்டுப் பார்த்து விட்டுப் பதறிப்போய் குடும்ப வைத்தியரிடம் அழைத்துச் சென்றார்.
அங்கே எக்ஸ்றே படங்கள் எடுத்து, ஊசியால் குத்திக் குத்தி இரத்தம் எடுத்து குப்பியில் நிரப்பினார்கள். காய்ச்சலுக்கு மருந்து எழுதிக் கொடுத்து மருத்துவ சோதனையின் முடிவு அடுத்த வாரம் தெரிய வரும் என்று சொன்னார்கள்.
மறு வாரம் மீண்டும் குடும்ப வைத்தியரிடம் இருந்து அழைப்பு வந்தது. பதறியடித்துக் கொண்டு போனார்கள்.
"என்னாச்சு.....டாக்டர்......சுகந்திக்கு......?"
"பயப்படாதீங்க....... மருத்துவப் பரிசோதனையின் முடிவு வந்திருக்கின்றது. மனதைத் தைரியப்படுத்திக் கொள்ளுங்கள். இதை எப்படி உங்களுக்குச் சொல்லுவதென்று தான் தயக்கமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனையில் இருந்து சுகந்திக்கு "இலுக்கேமியா என்னும் குருதிக் கான்சர்" இருப்பதாகத் தெரிகின்றது. முயற்சி செய்தால் இதை மாற்றமுடியும்.""
ஒரு கணம் குடும்பமே இடிந்து போய்விட்டது.
வாழ வேண்டிய வயதில் ஏன் இந்தச் சோதனை? கடவுளே அவள் மனதாற் கூட யாருக்கும் தீமை நினைத்ததில்லையே!
"டாக்டர்.......கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்களேன். என்ன செய்யலாம்? இந்த நோய் எப்படி வந்தது? இதை எப்படி மாற்றலாம்?’
""இதை எலும்பு மச்சை நோய் என்பார்கள். எலும்பு மச்சை என்;பது நீண்ட எலும்பில் உள்ள செம்மஞ்சள் நிறமான மென்மையான பகுதியாகும். எலும்பு மச்சை பாதிக்கப் படுவதால் போதிய அளவு செங்குழியங்கள் உருவாக்கப் படுவதில்லை. இரத்தம் சுத்திகரிப்பது குறைவதனால் முதலில் தலைச்சுற்று, பலவீனம் போன்ற அறிகுறிகள் தோன்றுகின்றன. படிப்படியாக இது உயிராபத்திற்கு வழி வகுக்கும்.
‘இதற்கு மருந்தே இல்லையா டாக்டர்?’
பாதிக்கப்பட்ட எலும்பு மச்சைக்குப் பதிலாக வேறு ஒருவரின் புதிய எலும்பு மச்சையைப் பொருத்துவதால் இதைக் குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மச்சையை இவரின் உடல் ஏற்றுக் கொள்ள வேண்டும். உறவினரின் அல்லது இனத்தவரின் மச்சை பெரும்பாலும் பொருந்துவதற்கு கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு.""
வைத்தியரின் ஆலோசனைப்படி சுகந்தியை வைத்தியசாலையில் அனுமதித்தார்கள். குடும்ப அங்கத்தினரின் எலும்பு மச்சை எல்லாம் சோதித்துப் பார்த்தார்கள். அதில் எதுவுமே சுகந்திக்குப் பொருந்தவில்லை.
மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாது, மனம் உடைந்து போய் கடவுள்மேல் பாரத்தைப் போட்டார்கள்.
சுகந்தியை வைத்தியசாலையில் அனுமதித்திருக்கிறார்கள் என்பதை நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டு சேகர் மலர்க் கொத்தோடு சுகந்தியைப் பார்க்க வைத்தியசாலைக்கு வந்தான்.
"சுகந்தி என்னாச்சு உங்களுக்கு? சொல்லி அனுப்பியிருந்தால் ஓடோடி வந்திருப்பேனே!"
"ஒன்றும் இல்லை....சும்மா காய்ச்சல்தான்."
"சும்மா காய்சலுக்காக யாராவது இப்படிப் படுத்திருப்பார்களா?" அவன் ஏளனமாகச் சிரித்தான்.
"சுகந்தி இங்கே பாருங்க, உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதைப் பயப்படாமல் என்னிடம் கேட்கலாம். நான் யார்? உங்கள் உறவினன் தானே!
"உறவினன்" என்ற சொல்லைக் கேட்டதும் அவளுக்கு டாக்டர் சொன்னது ஞாபகம் வந்தது.
'உறவினரின் எலும்பு மச்சை பொருந்துவதற்கு கூடுதலான சாத்தியக் கூறுகள் உண்டு.' அவள் மனதிலே நம்பிக்கை ஒளிவீச,
"சேகர்....என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் எங்களுக்கு உங்களுடைய இந்த ஆறுதல் வார்த்தையைக் கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்கின்றது தெரியுமா? நான் ஒரு உதவி கேட்பேன் செய்வீர்களா?’ என்றாள் தயங்கியபடி.
"செய்வீர்களாவா? நான் எப்போது நீங்கள் உதவி கேட்பீர்கள் என்றல்லவா காத்திருக்கின்றேன். பயப்படாமல் கேளுங்கள். சுகந்தி உங்களுக்காக நான் எதையும் தாங்குவேன்! எதையும் செய்வேன்! வானத்தை வில்லாக வளைத்துக் காட்டவேண்டுமா? இல்லை வானத்து நட்சத்திரங்களைப் பறித்து வந்து உங்கள் கூந்தலில் பூமாலையாகச் சூடவேண்டுமா?"
"இதை எல்லாம் கேட்கும் நிலையில் நான் இல்லை சேகர். நான் கேட்பதெல்லாம் ஒரு சாதாரன சராசரி மனிதனாற் செய்யக் கூடிய ஒரு உதவியைத்;தான்.""
"என்ன?'' என்பது போலப் பார்த்தான் சேகர்.
"எனக்காக எதையும் செய்வேன் என்று நீங்கள் சொன்னபடியால் ஒரு உண்மையை உங்களிடம் சொல்ல விரும்புகின்றேன். எலும்பு மச்சை நோயால் நான் பாதிக்கப் பட்டிருக்கின்றேன். மாற்று எலும்பு மச்சை கிடைத்தால் தான் என்னால் வாழமுடியும். உங்களுடைய எலும்பு மச்சை எனக்குப் பொருந்துமா என்று எனக்காக ஒரு முறை நீங்கள் பரீட்சித்துப் பார்ப்பீர்களா? பிளீஸ்.'
அவன் பேயறைந்தது போல் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டான். சுகந்தி ஒருவேளை தன்னைச் சோதித்துப் பார்க்கிறாளோ என்று கூட நினைத்தான். ஒரு விதமாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு,
"ஆமாம்.....பரீட்சித்துப் பார்ப்பதென்றால்...எப்படி..?"" தயக்கத்தோட மெதுவாக இழுத்தான்.
"இரத்ததானம் செய்வது போல இதுவும் ஒரு வித தானம் தான், உறவினர் அல்லது இனத்தவரின் எலும்பு மச்சை அதிகமாக பொருந்துவதற்கு வாய்ப்புண்டு"" அதீத நம்பிக்கையோடு விபரித்தாள்.
"புரிகின்றது....சுகந்தி! ஆனால்...நான்.....என்ன யோசிக்கிறேன் என்றால் வருகின்ற கிழமை என் நண்பர்களுடன் மெக்சிக்கோவிற்கு உல்லாசப் பயணம் போக முடிவு எடுத்திருக்கின்றேன். எப்போது திரும்பி வருவேனோ தெரியாது. எதற்கும் நான்; நாளை வந்து பார்க்கிறேனே! மனதைத் தளரவிடவேண்டாம். ரேக்......கெயர் சீயூ....ருமறோ......பாய்.........!"
அவளுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவசரமவசரமாக வைத்தியசாலையை விட்டு வெளியேறினான். அவனுக்கு அந்தச் சூழலை விட்டு விலகி எங்கேயாவது போனால் போதும் போல இருந்தது.
எதிர்பாராமல் அவள் கொடுத்த அந்த அதிர்ச்சியை அவனால் கொஞ்சம்; கூடத் தாங்க முடியவில்லை!
"இன்று என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்குச் சரி " எப்பொழுதோ, எங்கேயோ படித்தது அவளுக்கு ஞாபகம் வந்தது.
அதன் பின் சேகர் திரும்பி வரவேயில்லை.
புனிதமான அவளது இதயக் கோயிலில் வைத்து வணங்கப்பட வேண்டியவன் வெறும் சுயநலவாதியாய், கோழையாய், ஆண்மையற்றவனாய்ப் போய்விட்டான். மலருக்கு மலர் தாவும் அந்த வண்டு அறியுமா இந்தப் பாசமலரை?
அவளது இன்பமான நினைவுகள் எல்லாம் வெறும் கனவுகளாய்; மௌனமாய்க் கலைந்து போயின!
மனமுடைந்து போய் இருந்த அவர்களுக்குத் தமிழர் ஜக்கிய அமைப்பு மூலம் உதவிக் கரம் நீட்ட முன் வந்தது செஞ்சிலுவைச் சங்கம்.
"இன்ரநெற்", வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் போன்ற தொடர்புச் சாதனங்கள் மூலம் உதவி கேட்டு வேண்டுகோள் விடுத்தார்கள்.
பொதுமேடையிலே அன்று அவள் வெண்ணிலவாக வந்தாள்.
"எனது அன்புச் சகோதரர்களே! நான் எலும்பு மச்சை நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றேன். உங்களால் தான் எனக்கு உதவமுடியும். எங்கள் உறவினர் அல்லது இனத்தவர் ஒருவரின் எலும்பு மச்சைதான் பெரும்பாலும் எனக்குப் பொருந்தும். நீங்கள் இந்த உதவியைச் செய்தால் நான் வாழ்நாள் எல்லாம் உங்களுக்கு நன்றி உள்ளவளாய் இருப்பேன். இந்த உலகில் இன்னும் சிறிது காலம் நான் வாழ ஆசைப் படுகின்றேன். நீங்கள் நினைத்தால், யாராலும் விலை கொடுத்து வாங்க முடியாத இந்த உதவியை நிச்சயமாக உங்களாற் செய்ய முடியும்! செய்வீர்களா? என்னை வாழவிடுவீர்களா?"
அவள் சோகம் கலந்த குரலில் அன்பான இந்த வேண்டுகோளை விடுத்தாள்.
"இரத்ததானம் செய்வது போல இதுவும் ஒரு மச்சை தானம் தான். தானம் செய்பவர் பயப்பட வேண்டியதில்லை. மேலதிக விபரங்களுக்கு எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்"" என்று தொலைபேசி இலக்கத்தை அறிவித்தார் அவர்களுடன் வந்த வைத்திய ஆலோசகர்.
மறுநாள் எலும்பு மச்சை பொருந்துமா என்று பரிசோதித்துப்பார்க்கும் இடத்திலே அவள் இருந்தாள். அவளுக்காகத் தங்கள் எலும்பு மச்சையைப் பரிசோதித்துப் பார்க்கப் பலர் வந்து காத்திருந்தார்கள். அந்தக் கூட்டத்திலே ஒருவனாக சேகரும் வந்திருப்பானோ என்று ஆவலோடு எட்டிப் பார்த்தாள்.
ஒரு பெண்ணின் மனதைக் கலைத்து அதில் ஆசைகளை வளர்த்தவன். அவளது அழகைக் கண்டு அதற்காகவே அவளை அடைய நினைத்தவன். அவளது மென்மையான உள்ளத்தைப் புரிந்து கொள்ளக் கூட முடியாமல், கோழையாய்ப் போனவன். ஒரு மனித நேயத்திற்காகவாவது அவன் அன்று அங்கே வந்திருக்கலாம், ஆனால் அவன் வரவேயில்லை!
அவள் இதற்காக யாரையும் நோகத் தயாராக இல்லை! நோகும் நிலையிலும் அவள் இல்லை!
"அன்புத் தங்கையே! உன்னைக் கைவிட மாட்டோம்"" என்று சொல்வது போல எலும்பு மச்சைப் பரிசோதனை செய்ய வந்தோரின் வரிசை நீண்டு கொண்டு போனது.
"மண்ணைக் காக்க எத்தனை தியாகங்கள் செய்N;தாம், இந்தப் பெண்ணைக் காக்க, எங்கள் உடன்பிறப்பின் உயிரைக் காக்க, நாங்கள் இந்த உதவியைக் கூடச் செய்ய மாட்டோமா?"' கூட்டத்தில் நின்ற யாரோ ஒருவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அவள் கண்கள் பனிக்க, அவளை அறியாமலே கைகளைக் கூப்பி அவர்களைப் பார்த்து வணங்கினாள்.
"ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும், உடலுயிராலும் உங்களைப் பிரியாத........வ......ர.....ம்........." உதடுகள் துடித்து வார்த்தைகள் வாய்க்குள்ளே சிக்கிக்கௌ;ள, கூப்பிய கைகள் அப்படியே இருக்க, அவள் அவர்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.
என்றோ, எங்கேயோ கேட்ட அந்தப் பாடலை இன்று இந்த அன்புச் சகோதரர்களைப் பார்த்ததும் அவளை அறியாமலே அவள் வாய் முணுமுணுத்தது. இங்கே இவர்கள் காட்டும் இந்தப் பாசத்தைப் புரிந்து கொள்ளவாவது இந்த உலகில் சிறிது காலம் தான் வாழவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
"நாமிருக்கப் பயமேன்" என்பது போல, உடன் பிறப்புக்கள் மனிதத்தெய்வங்களாய், நம்பிக்கை நட்சத்திரங்களாய் முன்னேற, அந்த வரிசை நீண்டு கொண்டே போனது. யாரோ ஒருத்தன் அதற்குள் இருப்பான் என்ற அவளது நம்பிக்கை என்றும் வீண்போகாது!
Comments
Post a Comment