Story - ஒற்றை மாட்டுவண்டி

 


ஒற்றை மாட்டுவண்டி

குரு அரவிந்தன்

நான் இன்று எடுத்த முடிவு சரியா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இதற்கு மேலும் தாக்குப் பிடிக்கும் நிலையில் நான் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. 

மனம் குழம்பிப் போயிருக்கும் போது, உணர்ச்சி வசப்பட்டு நான் ஏதாவது தவறான முடிவை எடுத்து விடுவேனோ என்ற பயமும் எனக்குள் இருந்தது. அம்மாவைச் செல்போனில் அழைத்து இதைப்பற்றிச் சொல்லலாமா என்று முதலில் நான் யோசித்தாலும் அவள் காரணம் கேட்பாள், வழமைபோல ‘அடங்கிப்போ’ என்பாள் என்பதால் அதையும் தவிர்த்துக் கொண்டேன்.

 குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து இவ்வளவு காலமும் வேதனையைத் தாங்கிக் கொண்டு பொறுமையாக இருந்தது போதும் என்ற நிலைக்கு இன்று வந்து விட்டேன், ஏனென்றால் பொறுமைக்கும் எல்லை உண்டு. நிரஞ்சன் வருவதற்குமுன் பெட்டியை அடுக்கிக் கிளம்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதால் பெட்டியை அடுக்கத் தொடங்கினேன்.

நான் அவசரப்பட்டு அன்று எடுத்த முடிவுதான் இன்று என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருந்தது. பெற்றோரின் சொல்லைச் சற்றுக் காது கொடுத்தாவது கேட்டிருக்கலாம். இளமைத்துடிப்பு, இந்த நாட்டில் எதையும் என்னால் செய்ய முடியும் என்ற துணிவு, நாங்கள் இருக்கிறோம் என்று கைகொடுக்க வந்த கல்லூரிச் சினேகிதிகள், பெற்றோரின் மாப்பிள்ளை பார்க்கும் படலத்தைத் தட்டிக் கழிக்கும் ஆக்கிரோசம், இவை எல்லாமே என்னை அவசரமாகக் காதல் திருமணத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருந்தது.

பெற்றோருக்கு என்னை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது என்னவோ உண்மைதான். சராசரி பெற்றோருக்கு இருக்கும் கனவுதான் என்றாலும் ஏனோ அந்த வயதில் எல்லாவற்றுக்கும் தலை அசைத்து ‘ஆமா’ போடுவதற்கு எனது பிடிவாதம் தடையாக இருந்தது. இந்த நாட்டில் என்னுடைய விருப்பத்தை மீறி இவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். எனவேதான் இவர்கள் திருமணம் பேச முற்பட்ட போது அதைத் தட்டிக் கழித்தேன்.

‘இந்தப் பையன் டாக்டராம், உனக்குப் பிடிச்சிருந்தால் சொல்லு’ அம்மா கையிலே ஒரு புகைப்படத்துடன் முன்னாள் நின்றாள். எப்படியாவது சம்மதத்தை வாங்கி விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அவள் முகத்தில் தெரிந்தது.

‘எனக்கு இப்ப கலியாணம் வேண்டாம் அம்மா’ என்றேன்.

‘நல்ல வரன் என்று அப்பா சொல்லுறார், கரீபியனில டாக்டருக்குப் படிச்சவனாம்.’

‘எங்கை படிச்சா எனக்கென்ன, எனக்கு இப்ப கலியாணம் வேண்டாம்.’

‘ஏன் வேண்டாம் என்கிறாய்?’

‘யாரென்றே தெரியாத ஒருத்தனோட எப்படியம்மா வாழ்றது?’

‘நாங்கள் எல்லாம் தெரிந்து கொண்டா கலியாணம் கட்டினம், நாங்கள் வாழவில்லையா?’

‘என்னாலை அப்படி எல்லாம் வாழ ஏலாது’

‘அப்ப உனக்கு என்னதான் வேணும்?’

‘எனக்குப் பிடிச்ச ஒருவனைத்தான் நான் கட்டுவேன்!’

அம்மாவின் முகம் மாறிப் போனது. காலையில் அப்பா அம்மாவோடு சத்தம் போட்டதற்கும் காரணம் நான்தான் என்று எனக்குத் தெரியும். ஆனாலும் எதையுமே தெரிந்தது போலக் காட்டிக் கொள்ளவில்லை. எனது தோழிகள் சொன்னதுபோல, ‘பேசிவாறகலியாணம்’ ஒன்றும் செய்யிறதில்லை என்று நானும் பிடிவாதமாக இருந்தேன்.

சினேகிதிகளுக்கு அம்மா கொண்டு வந்த வரனைப் பற்றிச் சொன்ன போது அவர்களும் எனது முடிவையே ஆதரித்தனர். ‘பேசிச் செய்யும் திருமணம்’ என்றாலே முகத்தைச் சுழிக்கும் சினேகிதிகள் என்பதால் என்னுடைய முடிவு சரியானதுதான் என்பதில் அவர்களுக்கு சந்தேகமே இருக்கவில்லை.

‘அதெப்படி முன்பின் யாரென்றே தெரியாத ஒருவனிட்ட எங்கட வாழ்க்கையை ஒப்படைக்கிறது’ என்று கீதாதான் முதலில் கேள்வியாய்க் கேட்டாள். முகநூலில் தனிமனித சுதந்திரம் பற்றியும், பெண்களின் உரிமைபற்றியும் அவள் எழுப்பும் கேள்விகள்தான் அவளுடனான சினேகிதத்தைத் தொடக்கி வைத்தது. 

அவன் அழகாகவும், எடுப்பாகவும் இருந்தது உண்மைதான். பெண்களைக் கவரக்கூடிய விதத்தில் பேசக் கற்று வைத்திருந்தான். ஒரு கூட்டத்தில் நின்றால் அவன் பார்வை இளம்; பெண்களை நோக்கிதாகவே இருக்கும். பல தடவை அவனை நான் அவதானித்தாலும் அன்று அவன் என்னிடமே நேரடியாகப் பேசிய போதுதான் எனக்குள் ஏதோ மாற்றங்கள் நிகழ்ந்ததைப் புரிந்து கொண்டேன். 

நிரஞ்சன் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். ஒரு ஆண் மகனால் இவ்வளவு மெதுவாக, இனிமையாகக், கவர்ச்சியாகப் பேச முடியும் என்பதை அன்று அவனிடம்தான் கண்டு கொண்டேன். எப்படித்தான் இவங்க எங்களைப் போன்ற அழகான இளம் பெண்களைப் பார்த்துத் தூண்டில் போடுறாங்களோ என்று அவன் மீது முதலில் எனக்குக் கோபம் வந்தாலும் அந்தத் தூண்டிலில் நானே மாட்டிக் கொண்ட போதுதான் காதல் என்றால் எதுவும் செய்யும் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆனாலும் அது காதலா அல்லது கவர்ச்சியா என்பதில் முடிவெடுக்க முடியாமல் கொஞ்ச நாட்களாகத் திண்டாடும் நிலையில் நானிருந்தேன்.

புகுந்த மண்ணின் சூழ்நிலை எங்கள் இருவரையும் நெருங்கிப் பழகச் சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்தது. சில சமயங்களில் நாங்களாகவே சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொண்டோம். ‘டேற்ரிங்’ என்று சொல்லாவிட்டாலும் அது போன்ற சூழ்நிலையில் சந்தித்துக் கொண்டோம். பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு நிரஞ்சன் பார்த்த வேலை ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனாலும் எங்கள் இருவரின் வருமானத்தையும் வைத்துக் காலத்தை ஓட்டிவிடலாம் என்றுதான் நம்பியிருந்தேன். 

நான் நிரஞ்சனை விரும்பி விட்டேன் என்பதால் எனது விருப்பப்படியே பெற்றோர் எங்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள்.

தொடக்கத்தில் எல்லாமே நன்றாக நடந்தன. 30 நாட்கள், 60 நாட்கள் என்று கணக்குச் சொல்லி எப்படியோ ஒரு வருடத்தை இழுத்துப் பறித்தாகிவிட்ட போது, கையிலே ஒரு பெண் குழந்தை தனது மோகனப் புன்னகையால் என்னை வருடிக் கவர்ந்திழுத்தாள். வேலைக்குப் போவது, குழந்தை இனியாவைப் பார்த்துக் கொள்வது, நோயாளிகளாகி விட்ட மாமா மாமிக்கு உணவு சமைப்பது, அவர்களைக் கவனித்துக் கொள்வது, வைத்தியரிடம் அழைத்துச் செல்வது, திருப்திப்படாத அவர்களிடமிருந்து திட்டு வாங்குவது எல்லாவற்றையுமே சமாளித்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டினேன். இந்த நாட்டிற்கு வந்தபின்பும் ஆண் வாரிசு ஒன்று கிடைக்கவில்லையே என்ற மாமாவின் கவலையில் எழுந்த குத்தல் பேச்சும், கைநிறைய சீதனம் கொண்டு வரவில்லையே என்ற மாமியின் கனவுகள் உடைந்ததில் ஏற்பட்ட எரிச்சல் கலந்த பேச்சும் என்னை அவ்வப்போது சன்னதம் கொள்ள வைத்ததென்னவோ உண்மைதான். ஆனாலும் காதல் திருமணம் என்பதால் எனது பெற்றோர்கள் இதனால் மனம் நோகக்கூடாது என்பதை நினைவில் கொண்டு நிரஞ்சனின் அன்பை எதிர்பார்த்து மிகவும் கவனமாக நடந்து கொண்டேன். 

வீட்டுப் பத்திரம் என்பேரில் இருந்ததால் வீட்டுக்கான மாதாந்தப் பணத்தையும் என்னையே கட்டச் சொன்னார்கள். எனது வருமானம் போதுமானதாக இருந்ததால், நான் அதைப் பெரிய சுமையாக எடுக்கவில்லை. ஆனாலும் ‘அரைகுறை வீட்டைச் சீதனம் எண்டு தந்து சமாளிச்சுப் போட்டினம்’ என்ற அவர்களின் குத்தல் பேச்சுக்கு ஒருபோதும் குறைவேயில்லை.  

‘ஊரில என்றால் அடங்கிக் கிடந்திருப்பாய், இங்க நீ உழைக்கிறாய் என்ற திமிர் உனக்கு..!’ நிரஞ்சனின் இயலாமையால் வெளிப்படும் இதுபோன்ற வார்த்தைகள் என்னைத் தீயாச் சுட்டுப் பொசுக்குவதுண்டு. இது போன்ற புகுந்த வீட்டில் அடிக்கடி ஏற்படும் வாக்குவாதம், அவர்கள் எல்லோரும் ஒன்று பட்டுக் காட்டும் உதாசீனம் என்னை அவ்வப்போது மனம் நோகச் செய்தாலும் சமாளித்துக் கொண்டே காலத்தைக் கடத்தினேன். 

ஆனாலும் வளர்ந்து வரும் மகளின் எதிர்காலம் இப்படியான சூழலில் வளர்ந்தால் ஏமாற்றத்தையே தரப்போகிறது என்ற பயமும் எனக்குள் அடிக்கடி முன்னெச்சரிக்கை செய்து கொண்டேயிருந்தது. இரட்டை மாட்டு வண்டியிலே இரண்டு மாடுகளும் சேர்ந்து ஒற்றுமையாக இழுத்தால்தான் வண்டி சரியாகப் போக வேண்டிய இடம் போய்ச் சேரும் என்று எங்க பாட்டி சிலசமயங்களில் உதாரணம் சொல்வதை நினைத்துப் பார்ப்பேன்.

இரண்டு மாடுகளால் இரட்டைமாட்டு வண்டியை ஒற்றுமையாக இழுக்க முடியாவிட்டால் ஒற்றை மாட்டு வண்டியைத் தனியே ஒரு மாட்டால் இழுக்க முடியும் தானே? என்ற எண்ணம் என் மனதில் அடிக்கடி வந்து போனது. சின்ன வயதிலே கனடாவிற்குப் புலம் பெயர்ந்து வருமுன் ஒரு நாள் அப்பாவுடன் புது வருடப்பிறப்பிலன்று நடந்த வண்டில் மாட்டுச் சவாரியைப் பார்ப்பதற்க்குப் போயிருந்தேன். இரட்டை மாட்டுவண்டில் சவாரி, ஒற்றை மாட்டு வண்டில் சவாரி என்று இரண்டு விதமான போட்டிகளை வைத்தார்கள். இரட்டைமாட்டு வண்டில் சவாரியை விட எனக்கு ஒற்றை மாட்டு வண்டில் சவாரிதான் பிடித்திருந்தது. காரணம் இரண்டு மாடுகள் ஓடிக்கடந்த அந்தத் தூரத்தைத் தனி மாட்டாலும் ஓடிக்கடக்க முடியும் என்ற நம்பிக்கையைப் போட்டியில் வென்ற அந்த ஒற்றை மாடு எனக்குள் ஏற்படுத்தியிருந்தது.

திடீரென எனக்கு என்ன நடந்தது என்று நீங்கள் நினைக்கலாம். எனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் திடீரென ஏற்படவில்லை, குடும்ப சூழ்நிலை காரணமாக, நாளடைவில் மெல்லமெல்ல ஏற்பட்டதுதான். இந்த மாற்றங்களே என் பெயரையும் மாற்றப் போகின்றது என்பது எனக்குத் தெரியும். என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர்கள், மிஸ்ஸிஸ் நிஷா நிரஞ்சன் என்று சொன்னவர்கள் எல்லாம் என்மீதான தங்களின் பார்வையை மாற்றிக் கொள்ளப் போகிறார்கள். 

பரவாயில்லை, மற்றவர்களை நம்பியிருக்காமல் செயற்படக் கூடிய என்னைப் போன்றவர்களுக்குக் கிடைக்கப்போகும் ‘சிங்கிள்மதர்!’ என்ற இந்தப் புதிய பெயர் எனக்குப் பிடிக்காவிட்டாலும் அதற்கான தேவை இப்போது இருந்தது.

வார இறுதி என்பதால் நிரஞ்சனின் பெற்றோர்கள் தங்கள் மகளின் வீட்டிற்கு வழமைபோல வாரஇறுதியைக் களிப்பதற்குச் சென்றிருந்தனர். காலையில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வெளியே சென்ற நிரஞ்சன் மதியமும் வீடு திரும்பவில்லை. வாசல் மணி அடித்துச் சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தேன். மதுவாடை குப்பென்று அடித்தது. இப்போதெல்லாம் நிரஞ்சன் அடிக்கடி மதுவுக்கு அடிமையாகியிருந்தான். தள்ளாடியபடியே உள்ளே வந்தவன், நேரே படுக்கை அறைக்குச் சென்றான். அரைகுறையாக அடுக்கப்பட்டிருந்த சூட்கேஸைப் பார்த்தவன், கண்களை அகலமாக விரித்துக் கேள்விக் குறியோடு என்னைப் பார்த்தான். 

நான் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மறுகையில் சூட்கேஸை எடுத்தேன். வேண்டாம், இந்த நரக வாழ்க்கை! 

‘என்னடி கொம்மா வீட்டுக்குக் கிளம்பிவிட்டாய் போல, வாயை மூடிக்கொண்டிருந்தால் உனக்கு நல்லது, இல்லாட்டி இதுதான் தினமும் நடக்கும். போகேக்க உன்ர அருமை மகளையும் தூக்கிக் கொண்டுபோ, கொஞ்ச நேரமாவது நான் நிம்மதியாய்த் தூங்கலாம்.’ நாக்குளற முணுமுணுத்த நிரஞ்சன் படுக்கையை நோக்கி நகர்ந்தான்.

‘எவ்வளவு நேரமென்றாலும் தூங்கு, எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை. முதல்ல இந்தா உன்ர சூட்கேஸைப் பிடி, கிளம்பு’ என்றேன். நிதானமிழந்திருந்த அவனது கையிலே சூட்கேஸைத் திணித்து, அவனை மறுவார்த்தை பேசவிடாது வாசல்வரை இழுத்துச் சென்று வெளியே தள்ளிக் கதவை நிதானமாகச் சாத்தி உள்ளே பூட்டினேன். எவ்வளவு காலத்திற்குத்தான் இவனோடு குப்பை கொட்டுவது?

இதுவரை எனது கையிலே அழுதுகொண்டிருந்த இனியா, அழுவதைச் சட்டென்று நிறுத்தி, நிமிர்ந்து ஆச்சரியமாய் என்னைப் பார்த்தாள்.


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper