Story - யார் குழந்தை?

 


யார் குழந்தை?

(Courtesy - உயிர் நிழல்)

(குரு அரவிந்தன்)


ரியாட்டின் ஒற்றை வழிப் பாதையில் எனது கார் விரைந்து கொண்டிருந்த போது நான் எதிர்பாராத அந்த சம்பவம் நிகழ்ந்தது. வீதி ஓரத்தில் தனியே நின்ற ஒரு பெண் பெருவிரலை உயர்த்தி என்னிடம் உதவி கேட்டாள். பெண் என்றதும் பேயும் இரங்கும் என்று சொல்வார்களே, ஏனோ அது போல அப்படி ஒரு இரக்கம் எனக்கு அப்போது வரவில்லை! 

அன்னியப் பெண்களைத் தகுந்த காரணம் இல்லாமல் காரிலே ஏற்றிச் செல்வது சட்டப்படி தடைசெய்யப் பட்டிருக்கிறது என்பதை இங்கே வேலைக்கு வந்த அன்றே நண்பர்களிடம் இருந்து அறிந்து கொண்டேன். தப்பித் தவறி  நகர்பாதுகாவலரிடம் அகப்பட்டால் அதற்கு இந்த நாட்டில் என்ன தண்டனை கிடைக்கும் என்பது எனக்குத் தெரியும். எனவே அவளைக் கண்டதும் எனக்குப் பயம் தான் வந்தது. 

இப்படியான பயத்தால் தான் இதுவரை இப்படியான பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் மிகவும் கவனமாக இருந்திருக்கிறேன். எனவே தான் நான் அவசரமாக எங்கேயோ போவது போலப் பாவனை செய்து அவளுக்கு உதவி செய்யும் நோக்கத்தைத் தவிர்க்க நினைத்தேன்.

நான் அவளைக் கடந்து சென்ற போது அவள் ஒரு நிறைமாதக் கர்ப்பிணி என்பதைக் கவனித்தேன். ஒரு கையால் அடிவயிற்றைப் பிடித்தபடி பிரசவ வேதனையில் நிற்கமுடியாமல் துடித்தபடி தள்ளாடிக் கொண்டிருந்தாள்.

நான் செய்வது சரியா? ஒரு நிறைமாதக் கர்ப்பிணி பிரசவ வேதனையில் உதவி கேட்டுத் துடிக்கும் போது உதவி செய்யாமல் என் சுயநலத்திற்காக கோழை போல ஓடிப் போகலாமா? இதயமே இல்லாதவன் போல மௌனம் சாதிக்கலாமா? நானும் ஒரு குழந்தையின் தகப்பன் என்ற முறையில் என் மனைவி; இப்படி ஒரு சூழ்நிலையில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தேன்.

என் மனச் சாட்சி என்னைக் குத்திக் காட்ட என்னை அறியாமலே வண்டியை நிறுத்தி பின் நோக்கிச் செலுத்தினேன். அவள் வேதனையில் துடித்தபடி என்னைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டாள். இனியும் மௌனம் சாதித்தால் மனித நேயத்திற்கே இழுக்கு என்பதால் வருவது வரட்டும் ஆபத்தில் உதவுவது ஒன்றும் தப்பில்லை என்ற துணிவோடு காரின் பின் கதவைத் திறந்து விட்டேன். 

அவள் உள்ளே ஏறி உட்கார்ந்து அருகே உள்ள மருத்துவ மனைக்குத் தன்னைக் கொண்டு செல்லும் படி கெஞ்சிக் கேட்டாள்.

மருத்துவ மனையை நோக்கிப் போகும் போது எனது சிந்தனை யாவும் எனது மனைவியிடம் இருந்து நேற்று வந்த கடிதத்திலேயே இருந்தது. அந்தக் கடிதமும் உதவி செய்யவேண்டும் என்ற ஒரு தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. 

இப்படித்தான் அன்று ஊரிலே என் மனைவி  பிரசவ வேதனையால் துடித்த போது எனது நண்பன் ஒருவன் தெய்வம் போல தனது காரைக் கொண்டு வந்து மருத்துவமனைக்குப் போவதற்கு உதவி செய்ததாக எழுதியிருந்தாள்.

".அன்றிரவு கடும் காற்றோடு மழையும்  சோவென்று கொட்டிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் இருட்டு வேறு, நீங்கள் விடுமுறையில் வந்து நின்ற போது அறிமுகம் செய்து வைத்த உங்கள் நண்பர்தான் தனது காரைக் கொண்டு வந்து உதவி செய்தார். தகுந்த நேரத்தில் மருத்துவ மனையை அடைந்த படியால் சுகப்பிரசவமாகி விட்டது. தாமதித்திருந்தால் உயிருக்கே ஆபத்தாய்ப் போயிருக்கும் என்று டாக்டர் சொன்னார். உங்கள் விருப்பப்படியே குழந்தைக்கு பிரியா என்று பெயர் வைத்திருக்கிறேன்."  

நிலைமையின் அவசரத்தைப் புரிந்து கொண்ட மருத்துவ மனை ஊழியர்கள் அவசரமாகச் செயற்பட்டார்கள். அவளை தாமதிக்காமல் நேரடியாகவே பிரசவ அறைக்குக் கொண்டு சென்றனர். அவளைப் பொறுப்பேற்ற தாதி கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் பரபரப்பாக ஓடி வந்தாள்.

"நீங்க தானா  அந்தப் பெண்ணை அழைத்து வந்தது? என்றாள்.

"ஆமாம்!" என்றேன்.

"ஏன் இவ்வளவு நேரம் தாமதிச்சீங்க?"

என்னுடைய தயக்கத்தை எப்படித் தாதியிடம் சொல்வது?

அவள் விடுவதாக இல்லை! 

எனது பெயர், விலாசம் போன்ற விபரங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே ஓடிப்போனாள்.  

ஒரு வேளை க~;டப் பிரவசமோ?

பொறுமையாக் காத்திருந்தேன். அந்த தாதி சற்று நேரம் கழித்து மீண்டும் வந்தாள். முகத்தில் கலவரம் தெரிந்தது.

"இதிலே கையெழுத்துப் போடுங்க!" என்றாள்.

"கையெழுத்தா? நான் ஏன் போடணும்?"

"ஆண் குழந்தை பிறந்திருக்கு! 

''அப்படியா? சந்தோ~ம்!" என்றேன்.

"குழந்தை சுகமாய் இருக்கு, ஆனால் தாயோட நிலைமை கொஞ்சம் ஆபத்தாய் இருக்கு!"

"அதுக்கு நான் ஏன் கையெழுத்துப் போடணும்?"

"குழந்தையோட அப்பா நீங்க தானே?"

என் தலையில் இடி விழுந்தது போல இருந்தது.

"குழந்தையின் அப்பாவா? நானா? இல்லையே!" நான் அதிர்ந்தேன்.

அவள் நான் சொன்னதை நம்ப மறுத்தாள்.

எவ்வளவோ மறுத்துச் சொல்லியும் அவர்கள் ஏற்றுக் கொள்வதாய் இல்லை! பிரசவத்தின் போது தாய் நினைவு திரும்பாமலே இறந்து போக விதி என்னோடு விளையாடியது!

பிரசவ அறைக்குக் கொண்டு போகும் நேரத்தில் வாக்குமூலம் கொடுத்த அந்தப் பெண் நான் தான் குழந்தையின் அப்பா  என்று கூறியதாக தாதி பதிவு செய்திருந்தாள்.

தாதி என்ன கேட்டாள்? இவள் என்ன பதில் சொன்னாள்? 

என்ன நடந்தது என்று எனக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை! ஆனால் ஆறஅமர இருந்து யோசித்தபோது எங்கேயோ தப்பு நடந்து விட்டது என்பது மட்டும் தெளிவாய்ப் தெரிந்தது.

சட்டம் என்ற வலை என்னைச் சுற்றி விரிக்கப்பட்டிருப்பது தெரியாமல் அதற்குள் வலியச் சென்று நான் மாட்டிக் கொண்டேனோ? 

இந்த நாட்டின் ~ரியா சட்டத்தின் படி ஒரு பெண்ணோடு தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டால் தீர்ப்பு என்ன என்பதை நினைக்கவே என் உடல் பதறியது. 

ஒரு வெள்ளிக்கிழமை பொது இடம் ஒன்றில்; திருட்டுக் குற்றத்திற்காக ஒருவனின் கை வெட்டப்பட்டு தொங்கவிடப் பட்டதை நேரிலே நான் பார்த்துப் பதறியிருக்கிறேன். அன்று முழுவதும் தூங்க முடியாமல் அவஸ்தைப் பட்டிருக்கிறேன். அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் வேலையை விட்டுவிட்டு ஊருக்கே  திரும்பிப் போய்விடுவோமா என்று கூட நினைத்திருக்கிறேன். 

என்மேல் சுமத்தப் பட்ட குற்றம் நிரூபிக்கப் பட்டால் என்ன தண்டனை கிடைக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.

பொது இடத்தில் பொதுமக்களின் முன்னால் எண்பது கசையடிகள் வாங்கவேண்டும், 

அல்லது பொது மக்களால் கல்லடி பட்டுச் சாகவேண்டும், 

அதுவும் இல்லை என்றால் பொது இடத்தில் எல்லோரும் பார்க்கக் கூடியதாக சிரச்சேதம் செய்யப்படும்.

எனக்கு ஏற்பட்ட இந்த அவலத்தை என் மனைவி அறிந்தால்? அவள் என்னைப் பற்றி என்ன நினைப்பாள் என்பதை நினைக்கவே எனக்கு அவமானமாக இருந்தது.

ஓலைக் குடிசை என்றாலும் என் குடும்பத்தோடு ஊரிலே நிம்மதியாக வாழ்ந்து இருக்கலாம். ஆனால் பணத்தாசை யாரைத்தான் விட்டது. அரபு நாடுகளில் தொழில் தேடி வந்த எத்தனை குடும்பங்கள் பணம் இருந்தும் நிம்மதி இழந்த நிலையில் இன்று நடுத் தெருவில் நிற்கின்றன. அக்குடும்பங்களில் நானும் ஒன்றாகி விடுவேனோ?

முதன்முதலாக இந்த நாட்டிற்கு வேலைதேடி வந்த போது என்னை வழியனுப்ப வந்த நண்பன் ஒருத்தன் கைகுலுக்கி விடை தந்தபோது எனது கைகளைப் பற்றிப் பிடித்தபடி,

"விரல்கள் கவனம்" என்றான் வேடிக்கையாக.

"ஏன்?" என்றேன் புரியாமல்.

"சிறு குற்றத்திற்குக் கூட அங்கே விரல்களை வெட்டி விடுவார்கள். திரும்பி வரும் போது பத்து விரல்களும் இருக்குமோ தெரியாது"

அன்று நண்பன் சொன்னபோது வேடிக்கையாகத் தான் அதை எடுத்தேன். ஆனால் இன்று?

விரல்களா? தலையல்லவா போகப் போகிறது!

காலம் கடந்த சிந்தனை! இனி எப்படி என் மனைவியின் முகத்தில் விழிப்பேன்?

விழிப்பதா? இந்த நாட்டுச் சட்டத்தின் பிடியில் இருந்து மீண்டால் தானே மனைவியின் முகத்தில் விழிப்பதற்கு?

சட்ட வல்லுணர்களின் உதவியோடு எனக்கும் அந்தப் பெண்ணுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று ஏராளமான பணம் செலவழித்து வாதாடினேன். செய்யாத குற்றத்திற்காக நான் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்? 

அன்று தீர்ப்பு வழங்கும் தினம். உடம்பு உதறலெடுத்தது. 

குழந்தையின் தகப்பன் நான் தானா என்பதை உறுதிப் படுத்த எனது ரத்தம், உயிரணு போன்றவற்றை எடுத்து பரிசோதனை செய்திருந்தார்கள். விஞ்ஞானத்தின் நவீன முன்னேற்றம் கட்டாயம் எனக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்குள் இருந்தது. தப்பு எங்கேயும் எப்படியும் நடக்கலாம். நிரபராதி கூடத் தண்டிக்கப் படலாம். தீர்ப்பு எனக்குச் சாதகமாய் இருக்க வேண்டும் என்று வேண்டாத கடவுள் எல்லாம் வேண்டிக் கொண்டேன்.

நீதிபதி தனது இருக்கையில் அமர்ந்து தீர்ப்பை வாசித்தார்.

"....மருத்துவபரிசோதனை முடிவின்படி குற்றம் சாட்டப்பட்டவர் இந்தக் குழந்தையின் தகப்பன் அல்ல என்பது இதன் மூலம் இங்கே உறுதி செய்யப்படுகின்றது ......மேலும்.."

போன எனது உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. 

"கடவுளே நீ என்னைக் கைவிடவில்லை!" 

நீதி மன்றம் என்பதைக் கூட மறந்து நான் வணங்கும் தெய்வம் தான் நீதிபதியின் உருவில் அமர்ந்திருப்பதாக நினைத்து அவரை நோக்கி இருகரங் கூப்பி வணங்கினேன். நான் குற்றமற்றவன் என்று எனக்காக சாட்சி சொல்ல யாரும் முன்வராத நிலையில், விஞ்ஞானம் மறைமுகமாக எனக்குச் சாதகமாய் சாட்சி சொன்னதை நினைத்து எனக்குள் வியந்தேன். விஞ்ஞானம் இன்னும் வளரவேண்டும், என்போன்ற நிரபராதிகளை இந்த விஞ்ஞானம் தான் இனிக் காப்பாற்ற வேண்டும்!

நீதிபதி மேலும் தொடர்ந்தார்,

".....குற்றம் சாட்டப்பட்டவரின் சுக்கிலம் பரிசோதிக்கப் பட்டபோது அவரது உயிரணுவின் செறிவு மிகக் குறைவாகவும், சக்தியற்றும் இருப்பதாக அப்பரிசோதனையின் முடிவு தெரிவிப்பதால் இவரிடம் தந்தையாவதற்கு உரிய சாத்தியக் கூறுகள் இல்லை என்பதையும் இந்த நீதிமன்றம் கவனத்தில் கொண்டு அவரைக் குற்றமற்றவர் எனக் கருதி விடுதலை செய்கின்றது."

கூப்பிய எனது கரங்கள் அப்படியே உறைந்து போய் நின்றன!

அப்போ....... பிரியா?


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper