Story - கரைதொட்டுத் தாலாட்டும் கடலலைகள்
பாடல்: இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி .. எம்மனோரில் செம்மலும் உடைத்தே..! - நற்றிணை
……………………………………………………….
கரைதொட்டுத் தாலாட்டும் கடலலைகள்
குரு அரவிந்தன்
நீண்டு பரந்து கிடந்த கடற்பரப்புக்கு அப்பால் தெரிந்த நீலவானம், இப்போது மெல்லமெல்ல செவ்வானமாக மாறத்தொடங்கி இருந்தது.
கடற்கரை வெண்மணற்பரப்பில் தாரணியும் அவளது தோழி ஜெயாவும் எதிர்த்தாப்போல எதுவுமே பேசாது மௌனமாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் மௌனத்தைக் கலைப்பதுபோல அலைகள் மெல்ல ஆர்ப்பரிக்கத் தொடங்கின.
சாதாரண நாளாக இருந்திருந்தால் தாரணி தனது கமெராவைக் கொண்டு வந்து இந்த அழகியகாட்சியைப் படமாக்கியிருப்பாள். இடங்களைச் சுற்றிப்பார்த்து இயற்கையின் அதிசயத்தை ரசிப்பதும், அவற்றைப் புகைப்படம் எடுப்பதும் அவளுக்குப் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது.
ஆனால் அவளது மனசு இன்று ஒன்றிலுமே ஈடுபாட மறுத்தது. இவளது மனம் நிம்மதியின்றித் தவிப்பதைத் தோழி ஜெயாவும் அவதானித்தாலும், எதுவுமே பேசாது அவளும் மௌனமாக இருந்தாள்.
தாரணி பிறந்து வளர்ந்த கடற்கரைக்கிராமம் என்பதால் பிறந்ததில் இருந்தே கடலன்னையின் தாலாட்டில் வளர்ந்தவள் இவள். தினமும் இந்த மணலில் உருண்டு பிரண்டு, தண்ணீரில் மூழ்கி எழுந்திருக்கிறாள்.
‘கடற்கரை வெறும் பொழுது போக்கும் இடமல்ல, உணர்வுகளின் பிறப்பிடம்’ என்று அவள் தனது நாட்குறிப்பில் கூட எழுதி வைத்திருக்குமளவிற்கு அவள் பிறந்து வளர்ந்த இந்தக்கடற்கரைக் கிராமத்தை அளவுக்கதிகமாக நேசித்தாள்.
ஆழிப்பேரலையால் ஒருமுறையும், யுத்தம் என்ற போர்வையில் இன்னும் ஒருமுறையும் இந்தக் கிராமமும் சூறையாடப்பட்டு இழப்புக்களையும், வலிகளையும் சந்தித்திருக்கிறது. ‘விழுந்தாலும் எழுந்திருப்போம்’ என்று அந்தக் கிராமத்து மக்கள் பாதிப்பில் இருந்து மீண்டும் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பி இருந்தார்கள்.
‘கல்விச் செல்வம் ஒன்றே என்றும் கூடவரும்’ என்பதால் ஓரளவு வசதியானவர்கள் கல்வியில் நாட்டம் கொண்டனர்.
அவளும் அப்படித்தான் இந்தக் கிராமத்திலேயே உயர்கல்விகற்று, அதன்பின் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் கற்று இன்று வைத்திய கலாநிதியாகி வெளியே வந்திருக்கின்றாள். அந்தக் கிராமத்திலே வைத்தியக் கலாநிதியாகச் சில ஆண்கள் சித்தியடைந்திருந்தாலும், முதல் சித்தியடைந்த பெண்ணாக இவள்தான் இருந்தாள்.
அவளது எதிர்காலம் இப்போ கேள்விக்குறியாக மாறியிருந்தது. அம்மா கோயிலுக்குப் போய், பூக்கட்டிப் பார்க்கப் போவதாகச் சொல்லி விட்டுச் சென்றிருந்தாள். அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு என்பதால் இவள் அதில் தலையிட விரும்பவிலை. பொறுமையை இழந்த ஜெயா, மகாகவியின் நாட்டுப் பாடல் ஒன்றை மெல்லப்பாடத் தொடங்கினாள்,
‘சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்,
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்..!’
எங்களுக்கு வாழ்வு தந்த கடலன்னை எனக்கொரு வழிகாட்ட மாட்டாளா என்று சிந்தித்துக் கொண்டிருந்த தாரணிக்கு இந்தப் பாடலைக் கேட்டதும் திடீரென ஒரு யோசனை தோன்றியது.
சட்டென்று எழுந்து கரையோரம் சென்றவள், குதூகலத்துடன் ஓடிவந்து தனது சிவந்த மென்மையான பாதங்களைத்தொட்டு முத்தமிடும் அந்த அலைகளை ரசித்தபடி சற்று நேரம் நின்றாள்.
அப்புறம் குனிந்து ஈரமணலில் அவள் தனது பெயரை ஒரே நேர்க்கோட்டில் இரண்டு இடங்களில் எழுதினாள். ஒரு பெயருக்கு பின்னால் தாரணி அருள் என்றும் மற்றப் பெயருக்கு பின்னால் தாரணி சுஜன் என்றும் எழுதிவிட்டு மீண்டும் பழைய இடத்தில் வந்து உட்கார்ந்தாள். இவளது தோழியோ ஒன்றும் புரியாமல் இவள் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘என்னடி செய்யிறாய்?’; என்று ஒன்றும் புரியாமல் கேட்டாள் ஜெயா.
‘கொஞ்சம் பொறுத்திருந்து தான் பாரேன், ஐயாம் வெயிட்டிங் பார் ஏ றிசல்ட்’ என்றாள் தாரணி.
‘இவள் முன்வாங்கு மாணவியாக இருந்தாலும் இவளது செய்கை எல்லாம் பின்வாங்கு மாணவி போலவே இருக்கிறது’ என்று நினைத்து உதட்டுக்குள் சிரித்தாள் ஜெயா.
‘ஏன்டி சிரிக்கிறாய்?’
“தாரணி, நீ ஒரு அதிசயப் பிறவியடி!’ என்றாள் தோழி ஜெயா.
அலைகளின் கொந்தளிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து கரையில் வந்து பலமாக மோதத் தொடங்கின. ஆர்ப்பாட்டம் செய்வதும் அப்புறம் பணிந்து போவதும் கடலன்னைக்கு கைவந்த கலையாக இருந்தாலும், இந்தக் கிராமத்தவரின் வாழ்வாதாரமே இந்தக் கடலன்னைதான் என்பதால், அவர்கள் பொறுமையோடு தாக்குப்பிடிக்கப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று அவளுடன் உயர்வகுப்பு மட்டும் ஒன்றாகப்படித்த அவ்வூர் சம்மாட்டியின் மகன், அருளானந்தன், மற்றது அவளுடன் வைத்திய கல்லூரியில் படித்து இப்போது வைத்தியராகக் கடமையாற்றும் சுஜன். டாக்டர் சுஜன், அவளை விரும்புகிறான் என்பதை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போதே, அவனது நடவடிக்கைகளில் இருந்து அவள் ஊகித்திருந்தாள்.
அவன் பெண் கேட்டு வந்து போனதாக வீட்டிலே சொன்ன போதே அவள் மனதில் போராட்டம் ஆரம்பித்து விட்டது. அப்பாவுக்கு டாக்டர் சுஜனையும், அம்மாவுக்கு சம்மாட்டியின் மகன் அருளையும் பிடித்திருந்தது.
அப்பா எதிர்காலம் கருதிக் குடும்பத்தின் பொருளாதார நிலையை உயர்த்தப் பார்த்தார், அம்மா மகளின் லட்சியத்தை நிறைவேற்றப் பார்த்தாள். முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு இவளிடம் விடப்பட்டிருந்தது.
எந்தக் கடற்கரைக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தாளோ அந்தக் கிராமத்து மக்களுக்கு வைத்தியத்துறையில் தொண்டாற்ற வேண்டும் என்பதே அவளது லட்சியமாக இருந்தது. சொந்தபந்தம் எல்லாவற்றையும் துறந்து விட்டுப் போவதென்றால் டாக்டர் சுஜனையே திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா போய்விடலாம். அப்படியானால் அவளது கடந்தகாலக் கனவுகள், லட்சியங்கள் என்னாவது?
மனம் அமைதியின்றிச் சஞ்சலப்பட்டது. இதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்பது அவளது போராட்டமாக இருந்தது. எதிர்காலம் குறித்த கவலையில் தனது சுயநலமா அல்லது பொதுநலமா முக்கியம் என்று சிந்தித்துப் பார்த்தாள்.
அவளது சகோதரன் குறிப்பிட்டது போல மூக்கைப் பொத்திக் கொண்டு வந்துபோன சுஜனுக்கு இந்தக் கிராமத்தை, இங்குள்ள மக்களைப் புரிந்து கொள்வது என்பது முடியாத காரியமாகத்தான் இருக்கும். சம்மாட்டியின் மகன் அருளோ போதிய படிப்பறிவு இல்லாவி;டாலும் இந்தக் கிராமத்தில் செல்வாக்கும் மதிப்பும் கொண்டவன். அவளது லட்சியத்திற்கு உதவுவதாக அவளது பெற்றோருக்கு வேறு வாக்குக் கொடுத்திருக்கிறான்.
அவளது சகோதரனும், தாயாரும் அன்று வீட்டிற்கு வந்துபோன டாக்டர் சுஜனைப் பற்றி, அவளுக்கு ஒரு வர்ணனையே செய்திருந்தார்கள். அவள் அதை நினைத்துப் பார்த்தாள்.
‘ஏய்..! இங்கேவா, தாரணியின் வீடு எங்கே என்று தெரியுமா?’ பென்ஸ் வண்டியில் உட்கார்ந்திருந்தவன் கேட்டான்.
‘தாரணியா, எந்தக் தாரணின்னு தெரியலையே, அவங்க அப்பா பெயரைச் சொன்னாத்தான் யாரென்று தெரியும்..!’ என்றான் அந்தச்சிறுவன்.
‘அப்பன் பெயரொன்றும் எனக்குத் தெரியாது, இந்தக் கிராமத்தில ஒருத்தி டாக்டருக்குப் படிச்சாங்களே அவங்க வீடு தெரியுமா?’
‘ஓ தாரணி அக்காவா, இப்படியே நேரே போங்க, அப்புறம் சோத்தாங்கைப் பக்கம் திரும்பிப் போங்க, கடற்கரையைப் பார்த்தபடி பச்சை நிறமடிச்ச வீடு, வாசல்ல ஒரு தென்னை மரம் நிற்கும்..!’ என்றான் அந்தச்சிறுவன்.
‘சோத்தாங்கைன்னா?’
சிறுவன் வலதுகையை உயர்த்திக் காட்டினான். அவன் சொன்ன பாதையில் வண்டி கிளம்பிப் போனதற்கு அடையாளமாய்ப் பாதையைப் புழுதி மறைத்திருந்தது.
‘பெரிய மன்மதன் மாதிரிப் போறான், சோத்தாங்கை என்றால் என்னவென்று அவனுக்குத் தெரியலையே, அக்காவுக்குத் தெரிந்தவனாக இருக்குமோ?’ என்று முணுமுணுத்துக் கொண்டு வண்டி சென்ற அதே பாதையில் நடந்தான் சிறுவன்.
டாக்டர் தாரணி வீட்டு வாசலில் வண்டி நின்றதும் அவன் இறங்க மனமில்லாமல் முகத்தைச் சுழித்தான், காரணம் வாசலில் பனையோலைப்பாயில் மீன்கருவாடு காயப்போட்டிருந்தது.
சுஜன் தான் ஒரு டாக்டர் என்றும், நகரத்தில் இருக்கும் செல்வந்தர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். தாரணியோடு ஒன்றாக மருத்துவக் கல்லூரியில் படித்ததாகவும், அவளைத் தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், திருமணமானதும் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் சேப்பிரைஸாக இருக்கட்டும் என்றுதான் அவளுக்குக் கூடச் சொல்லாமல், திடீரெனப் புறப்பட்டு இங்கே வந்ததாகவும் சொன்னான்.
‘தாரணி அவங்க பெரியப்பா வீட்டுக்குப் போயிட்டா, எங்களுக்குச் சம்மதம்தான், எதற்கும் தாரணி வந்ததும் அவங்க சம்மதத்தைக் கேட்டிட்டு அறிவிக்கிறோம்’ என்றார் விபரங்களைக் கேட்டறிந்த தாரணியின் தகப்பன்.
எதிர்காலம் கருதி, இந்தத் திருமணம் கட்டாயம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர்.
தோளுக்கு மேல் வளர்ந்தால் தோழி என்பது போல, மகளுடைய லட்சியம் என்னவென்று தெரிந்திருந்த தாயாரோ சுஜனை வெட்டி விடத்தான் பார்த்தாள். இந்தக் குடும்பத்திற்கு அவன் சரிப்பட்டு வரமாட்டான் என்பதை அவனைப் பார்த்ததுமே புரிந்து கொண்டாள். ஜாடைமாடையாகத் தங்கள் குடும்ப சூழலையும், மகளின் லட்சியம் என்னவென்பதையும், மகளைக் கட்டிக்க ஊருக்குள்ளேயே நல்ல மாப்பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதையும் அவனுக்கு எடுத்துச் சொன்னாள். நகரத்தில் வசிக்கும் அவனுக்கு இப்படியான கிராமத்து சூழல் ஒருபோதும் ஒத்துப்போகாது என்று சொல்லித் தட்டிக்கழிக்க முயன்றாள்.
‘ஆன்டி கவலைப்படாதீங்க, எல்லாரும் இப்படித்தான் லட்சியம் அது இது என்று சொல்லுவாங்க, வசதி வந்தால் எல்லாவற்றையும் மறந்திடுவாங்க, பணந்தான் எல்லாமே! கலியாணம் முடிஞ்சதும் நாங்க அமெரிக்கா போயிடுவோம், அப்புறம் என்ன, நீங்ககூட அமெரிக்காவுக்கு மகளைப்பார்க்க, பேரப்பிள்ளைகளைப் பார்க்கவென்று அடிக்கடி வந்து போகலாம்’ என்று ஆசை காட்டினான் சுரேன்.
‘நீங்க போயிட்டு வாங்க, தாரணி வந்ததும் அவளோட விருப்பத்தைக் கேட்டிட்டு உங்களுக்கு அறிவிக்கிறோம்’ என்று சுஜனின் மனம் நோகாமல் சொல்லி அனுப்பிவைத்தாள் இரட்டை மனநிலையில் இருந்த தாயார்.
‘இவளுக்காக இந்தக் குப்பத்துக்கு வரவேண்டியதாச்சே, எப்படித்தான் இந்த நாற்றத்துக்குள்ள இருக்கிறாங்களோ, சம்மதம் மட்டும் சொல்லட்டும், தாரணியைக் கூட்டிட்டு அமெரிக்கா கிளம்பிடுவேன். அப்புறம் இவங்களுக்கும், இந்தக் குப்பத்திற்கும் நிரந்தரமாகவே பாய், பாய் செல்லிவிட வேண்டியதுதான்!’ என்று மனதுக்குள் முணுமுணுத்துக் கொண்டு வெளியே வந்தான் டாக்டர் சுஜன்.
அவன் வெளியே வரும்போது யாரிடம் அவன் இடம் விசாரித்தானோ அந்தப் பையன் வாசலில் வெய்யிலில் காய்ந்த கருவாட்டுத் துண்டுகளை ஒவ்வொன்றாகப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது இவன் கண்ணில் பட்டுத் தெறித்தது. இதமாக வீசிய கடற்காற்றில் அந்த மணம் இவனைச் சுற்றிச் சூழ்ந்து ‘இதுதான் எங்க கடலோரக் கிராமத்து வாழ்க்கை’ என்று சொல்லாமல் சொல்லிச் சென்றது.
‘இருட்டப்போகுது, வீட்டிற்குப் போவமாடி?’ என்ற ஜெயாவின் குரல் அருகே கேட்டு நினைவுலகத்திற்கு வந்தாள் தாரணி. மெதுவாக எழுந்து ஈரமணலில் தான் பெயர்களை எழுதிவைத்த இடத்தை நோக்கி நடந்தாள்.
‘சுஜன் - தாரணி’ என்ற பெயர் மட்டும் அழியாமல் அப்படியே இருந்தது. கடலன்னையிடம் எதை எதிர்பார்த்து வந்தாளோ, அவள் தனது விருப்பத்தை மறைமுகமாக இவளுக்குச் சொல்லிவிட்டிருந்தாள்.
கடலன்னை எடுத்த முடிவு அவளது மனசுக்குள் திருப்தியாக இருந்தாலும், கோயிலில் பூக்கட்டிப் பார்க்கச் சென்ற அம்மாவின் முடிவை அறிவதற்காக வீட்டிற்கு விரைந்தாள்.
என்னதான் இவள் முடிவெடுத்தாலும், படித்தவளாக இருந்தாலும், ஒருவேளை ஏனைய பெண்களின் பெற்றோர்கள் போல, இவளது பெற்றோரின் கையில்தான் இவளது எதிர்காலமும் தங்கியிருக்கிறதோ தெரியவில்லை..!
Comments
Post a Comment