Story - நீ காற்று நான் மரம்!
நீ காற்று நான் மரம்!
(குரு அரவிந்தன்)
வாசலில் அழைப்பு மணி கேட்டது. மாலதி கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். வெளியே மங்கிய வெளிச்சத்தில் குளிரில் நடுங்கியபடி அவர் நின்று கொண்டிருந்தார்.
""நான் உள்ளே வரலாமா?"' குரலைக் கேட்டுப் பிரமித்தாள்.
"'என்ன மாமா இந்த நேரத்தில்? உள்ளே வாங்கோ!""
அவரை அந்த நேரத்தில் அங்கே கண்டது அவளுக்கு அதிர்ச்சி யைத் தந்தாலும் அவர் ஏன் வீடு தேடிவந்தார் என்பதை அறிவதில் அவளுக்கு ஆர்வம் இருந்தது.
அவர் உள்ளே வந்து ஹோலில் இருந்த செற்ரியில் ஓரமாக உட்கார்ந்தார்.
"'என்ன மாமா திடீரென்று? சொல்லி யிருந்தால் நானே வந்திருப்பேனே!
""வீட்டிலே யாரும் இல்லையாம்மா?"
"'இல்லை மாமா, அம்மா கோயிலு க்குப் போய்விட்டா, அப்பா இன்ன மும் வேலையால் வரவில்லை."'
"'அம்மா மாலதி நான் உங்கிட்ட தனியப் பேசணும்! அதற்காகத் தான் இந்த நேரத்தில் இங்கே வந்தேன்! நீ எனக்கு ஒருஉதவி செய்யணும். செய்வியாம்மா?"
"'சொல்லுங்க மாமா, நான் என்ன உதவி செய்யணும்?""
"'இதை உதவி என்கிறதை விட உங்கிட்ட "யாசகம்" கேட்டு வந்திருக்கிறேன் என்று தான் சொல்லணும்!"'
"'என்ன மாமா இது....! பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லு றீங்க? நான் என்ன செய்யணும்? தயவுசெய்து சொல்லுங்க!""
அவர் மேலும் வார்த்தைகளை வளர்க்க விரும்பாமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
"'மதன் மேலே நீ எவ்வளவு தூரம் அன்பு வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்! நான் இப்போ சொல்லப் போவதைக் கேட்டால்; உனக்கு அதிர்ச்சியாய் இருக்கும்""
அவர் நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தார். சொல்லப்போற விஷயத் தை அவள் தாங்குவாளா என்று மெல்ல எடைபோட்டார்.
""நீங்க சொல்ல வந்ததைச் சொல் லுங்க மாமா!"'
"'சொல்லுறேன்!இனிமேல் மதனை நீ பார்க்கக் கூடாது, பேசக்கூடாது, அவனை நீ மறந்திடணும்!"'
மாலதி ஒரு நிமிடம் அதிர்ந்து போய் அவரையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
"'நீங்க என்ன சொல்லுறீங்க மாமா? இப்படிச் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வந்தது?""
திடீரென கண்ணுக்குள் நீர்முட்ட அவள் விசும்பத் தொடங்கினாள்.
"'மாமா என்று சொல்லுறியே இந்த உறவு உனக்கு எப்படி வந்தது?""
"'உங்க மகனைத் திருமணப்பதிவு செய்தபடியால்!""
"'மூன்றே மூன்று மாதம் பழகின உன்னாலேயே அவனைப் பிரிய முடியவில்லை, முப்பது வருஷம் பழகின என்னாலே எப்படிப் பிரிய முடியும் என்று நினைக்கிறாய்?""
""இல்லை மாமா, நீங்களும் விரும் பித்தானே என்னை மருமகளாய் ஏற்றுக் கொண்டீங்க? இப்போ மட்டும் ஏன் இப்படி வேண்டா வெறுப்பாய்ப் பேசிறீங்க? என்னை நீங்க வெறுக்கிற அளவிற்கு நான் ஏதாவது தவறு செய்திட்டேனா?"'
"'இல்லையம்மா! உன்னோட நிறை யப் பேசவேண்டும் என்றுதான் இங்கே வந்தேன். பேசமுடியலை, உன்னிடம் என்ன சொல்ல வந்தேனோ அதை எப்படி உன்னிடம் சொல்லுவது என்று தான் தெரியலை!""
""ஏன் என்ன நடந்தது? மதன் ஏதாவது சொன்னாரா?""
"'மதன் ஒன்றும் சொல்லவில்லை! நான் இங்கே வந்தது அவனுக்குக் கூடத்தெரியாது. டாக்டர் தான் சொன்னார்!""
"'டாக்டரா? மெடிக்கல் றிப்போட் வந்திட்டுதா?""அவள் குரலில் பதட் டம் தெரிந்தது.
""ஆமாம் அதனாலே தான் நான் இங்கே வந்தேன். அதைப்பற்றிச் சொல்லத் தான் வந்தேன். இப்போ உன்னை நேரே பார்த்ததும் என்னாலே ஒன்றும் சொல்ல முடியலை!""
அவர் எழுந்து கண்களைத் துடைத்தபடி சோகத்தோடு வாசலை நோக்கி நடந்தார்.
என்ன சொல்ல வந்தார்? ஏன் ஒன்றுமே சொல்லாமலே போகின் றார்? ஒருவேளை மெடிக்கல் ரிப்போட்டில் ஏதாவது....? தனக் குள் குழம்பிப் போனவள் ஓடிவந்து அவரை வழிமறித்து "'நில்லுங்க மாமா, மதனுக்கு ஏதாவது?"" என்றாள் முகத்தில் கேள்விக் குறியோடு.
அவர் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் தயக்கத்தோடு திண் டாடினார்.
"'பரவாயில்லை சொல்லுங்க மாமா, நான் தாங்கிக்கிறேன்"" அவள் அவரை வற்புறுத்தினாள்.
''வரக்கூடாத வருத்தம் வந்திட்டு தம்மா! கான்சர்"" சொல்லமுடியாமல் மென்று விழுங்கினார்.
இடி விழுந்தது போல அதிர்ந்து போய் அப்படியே பிரக்ஞையற்று செற்றியில் உட்கார்ந்தவள் சிறிது நேரம்கழித்து மெல்லச் சிரமப்பட்டு கண்திறந்து பார்த்தாள்,
""மாமா நான் அவரைப் பார்க்க ணும்! நான் இப்பவே பார்க்கணும்! நானும் உங்ககூட வர்றேன் மாமா, பிளீஸ்!"' என்று விம்மி அழத் தொடங்கினாள்.
பெரியவர் என்ன செய்வது என்று தெரியாமல் அவளைச் சமாதானப் படுத்த முனைந்தார். அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூட முடியாத நிலையில் அவரும் உடைந்து போய் இருந்தார்.
""வேண்டாமம்மா, தயவுசெய்து நீ அங்கே வரவேண்டாம்,""
""ஏன் மாமா நான் அவரைப் பார்க்கக் கூடாதா? எனக்கு அவரைப் பார்க்கிற உரிமை கூட இல்லையா?"" அவரிடம் ஏக்கத் தோடு கேட்டாள்.
"'சட்டப்படி உனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் சம்பிரதா யப்படி உனக்கு அந்த உரிமை இல்லை!"'
"'ஏன் மாமா முறைப்படி திருமணப் பதிவு முடிஞ்சாலும் கழுத்திலே தாலி கட்டவில்லை என்பதால் தானே இந்த உறவை மறுக்கிறீங்க? எழுதின அன்றே தாலி கட்டியிருந்தால் நான் அவருடைய மனைவிதானே?""
"'அது ஊரிலையம்மா, இந்த நாட்டிலை இல்லை!"" அவர் பிடி வாதமாய் அவளது உரிமையை மறுத்தார்.
"'கழுத்திலே கட்டினால் தான் தாலியா? அதற்குத் தான் மதிப்பா?
ஊரறிய கைபிடித்து விரலிலே போட்ட இந்த மோதிரத்திற்கு மதிப்பே இல்லையா?"'
""நான் இல்லை என்று சொன் னேனா? உன்னுடைய நன்மைக் காகத்தான் சொல்கிறேன், நீ வாழவேண்டியவள், உன்னுடைய எதிர்காலம் தான் எனக்கு முக்கியம்! அவனைப் பிரிந்து இருப்பது தான் இருவருக்கும் நல்லது. நீ அவனை மறந்திடு!"'
"'வேண்டாம் மாமா! பிளீஸ் எங்களைப் பிரிச்சிடாதையுங்கோ! எங்களுடைய கனவுகளைக் கலை ச்சிடாதையுங்கோ! கொஞ்சக் காலமென்றாலும் என்னை அவரோடு வாழவிடுங்கோ""
"'கொஞ்சம் என்றால்? எவ்வளவு காலம் நீ அவனோடு வாழப் போகிறாய்?"" அவரது குரலில் கடுமை தெரிந்தது.
"'ஐந்து வருடமோ பத்து வருடமோ அவர் உயிரோடு இருக்கும் வரைக்கும்!""
அவர் விரக்தியோடு சிரித்தார்.
"'உன்னோட ஆசை எனக்குப் புரியுதம்மா! அப்படி உயிரோடு இருப்பான் என்றால் உன்னைவிட நான்தான் அதிகம்; சந்தோஷப் பட்டிருப்பேன். ஆனால் ஆண்டவ னுக்குத்தான் அதிலை கொஞ்சம் கூட சம்மதம் இல்லை. அவனது நாட்களை எண்ணிக் கொண் டிருக்கவைத்து விட்டான். ஆகக் கூடினால் ஆறுமாதந்தான்!""
""ஆ....று....மாதமா?"" அவள் விறை த்துப் போய் நம்பமுடியாமல் அவரைப்பார்த்தாள். "'உண்மையா? நீங்கள் சொல்வது உண்மையா மாமா?""
""ஆமாம் ஆனபடியால் தான் சொல்லுறேன் நீ அவனை மறந்துவிடு. ஆறுமாதம் தான் உயிரோடு இருப்பான் என்பது அவனுக்கே தெரியாது! அதைச் சொல்லத்தான் இங்கே வந்தேன்""
"'எப்படி மாமா என்னால் முடியும்? இன்பத்திலும் துன்பத்திலும் காலம் எல்லாம் அவரோடு கூட இருப்பேன் என்று எல்லோருக்கும் முன்னால் வாக்குக் கொடுத்து விட்டு அவருக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நேரத்தில் கோழை போல அவரை விட்டு பிரிந்துபோகச் சொல்கிறீர்களா?""
"'உன்னுடைய வேகமும், இளமை த்துடிப்பும் எப்படிப் பட்டது என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் சொல்வதையும் கொஞ்சம் கவனமாய்க் கேள். நீ அவனைக் காதலித்துக் கைபிடித் திருந்தால் நான்கூட யோசித்தி ருப்பேன். ஆனால் இது பெற்றோரால்ஒழுங்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் மட்டும்தான். இப்போ நீ சொன்ன தெல்லாம் வெறும் வார்த்தைகள் தான். சினிமாவிற்குத் தான் இந்த வார்த்தைகள் பொருந்துமே தவிர நிஜமான வாழ்க்கைக்கு அல்ல. நீ வாழவேண்டியவள். உன் எதிர் காலம் உனக்குத் தான் சொந்தம். அதனாலே உன் எதிர் காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் பொறுப்பும் உன்னிடம் தான் இருக்கிறது."'
"'மாமா இந்த நிலையிலே நான் பிரிந்தால் என்னைப் பற்றி மற்ற வர்கள் என்ன நினைப்பார்கள்? எந்த முகத்தோடு நான் அவர்க ளைப் பார்ப்பேன்?""
"'மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதையிட்டு நீ கவலைப்படா தே! முதலில் உன்னைப் பற்றிக் கவலைப்படு! புதிதாக ஒரு உறவை ஏற்படுத்துவதாலே ஏற்ப டப்போகும் மனஉளைச்சலை நீ முதலில் புரிந்து கொள்ள வேண்டும்! அப்படி ஒரு நிலைமையைக் கூடியவரை தவிர்ப்பது தான் இருவருக்கும் நல்லது!""
"'என்னுடைய மனசென்ன கல்லா? நானென்ன ஜடமா? ஏன் இப்படிச் சொல்லுறீங்க மாமா? உங்களுக்கு இரக்கமே இல்லையா?""
"'அப்படிச் சொல்ல நான் வர வில்லை? இல்லாத ஒரு உறவை தொடரப் போவதாக நினைத்து உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே! வாழவேண்டிய வயதிலே வாழாத ஒரு வாழ்க்கை க்காக விதவைக் கோலம் போடதே! யதார்த்தமாய் வாழப் பழகிக் கொள். இப்படியான ஒரு நிலைமையில் உங்கள் இருவ ரையும் பிரித்து விடுவதைத் தவிர வேறு வழியே எனக்குத் தெரிய வில்லை. நடந்தது எல்லாவற் றையும் ஒரு கனவாய் நினைத்து மறந்து விடுவது தான் உனக்கும் நல்லது!"'
மேகமூட்டம் கலைந்து வானம் வெளித்தது போல அவர் சொன்னதின் அர்த்தம் இப்போ அவளுக்கு மெல்ல மெல்லப் புரிந்தது. அதில் யதார்த்தமும் காலத்திற்கேற்ற புதிய சிந்த னையும் தெரிந்தன. பழமையில் ஊறிப்போன இந்த சமுதாயத்தில் இப்படியும் ஒருவரா? தங்க ளுடைய குடும்ப நலன்தான் முக்கியம் என்று வாழும் சுயநலவாதிகளின் மத்தியிலே அவளது நல்வாழ்விற்காக அவர், அவள் மீது காட்டிய அந்த அக்கறை அவளைக் கை யெடுத்துக் கும்பிடவைத்தது.
மகுடிக்குக் கட்டுப் பட்ட நாகம் போல அவர் சொல்வதை தலை குனிந்தபடிஅக்கறையோடு அவள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
தனது உள்ளங்கையை விரித்து ரேகை பார்த்தாள். ஆயுள்ரேகை நீண்டு கொண்டே போனது. விரலிலே மின்னிய அந்த "எங்கேச்மென்ற்" மோதிரம் சட்டெ ன்று கண்ணில் பட்டதும் மனசுக் குள் ஏதோ குடைந்தது. ஒருவே ளை என்னுடைய பிடிவாதத்தால் நான் தப்புப்பண்ணி விட்டேனோ? என்ற குற்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது.
"'எனக்கு இந்த வைரமோதிரம் தான் வேணும்!""
""இது "என்கேய்ச்மெனற்" மோதிரம். முதலில் இது உமக்குப் பொருந் துமா? என்று பார்க்கணும். சிலநேரம் வைரமேதிரம் எல்லோரு க்கும் பொருந்தாது. ஆனபடியால் விசாரித்து விட்டு வாங்குவோமே!"'
"மதன் எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை! பொருந்தா ட்டிப் பரவாயில்லை! அப்படி ஏதேனும் நடந்தால் அந்த நேரம் நான் கழட்டி வைக்கிறேன். இப்ப எனக்கு இந்த வைரமோதிரம் தான் வேணும்""
"'கழற்றி வைக்கக்கூடிய பொருளா இது மாலதி? இதிலை கூடப் பிடிவாதமா?"
"'கடைசிப்பிள்ளை என்று செல்லம் கொடுத்திட்டன்"" என்று அம்மா அடிக்கடி சொல்வது அவளுக்கு ஞாபகம் வந்தது. தனது பிடி வாதத்தில் அவள் தான் அன்று வென்றாள். ஏன் இந்த வைர மோதிரத்தைப் பிடிவாதமாய் வாங் கினாள் என்பது இது வரைகும் அவளுக்கே புரியவில்லை!
விழியோரம் நீர்கசிந்து பட்டென்று உள்ளங்கையில் சிதறியது. ஒரு வேளை மதன் சொன்னது போல இந்த வைரம் எனக்கு ஒத்துப் போகாதோ?
உறவுக்கு அர்த்தம் சொன்னஅந்த மோதிரத்தை மெல்லக் கழற்றி தயக்கத்தோடுஅவரிடம் நீட்டினாள்.
"'மாமா நீங்க இதைக் கொண்டு போங்கோ"'
அவர் அவளை ஆச்சரியமாய்ப் பார்த்தார். இந்தக் காலத்துப் பெண்களைத் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று நினைத்தாரோ?அல்லதுஇளமைக்கு எதிலுமே இப்படித்தான் ஒரு வேகம் இருக்கும் என்று நினைத்தாரோ தெரியவில்லை!
எதுவுமே பேசாமல் இரண்டு கைகளையும் நீட்டி அதை வாங்கிக்கொண்டார்.
"'நல்ல முடிவுதான் எடுத்திருக் கிறாய்!அவனிடமிருக்கும் உன்னு டைய மோதிரத்தை யாரிட மாவது கொடுத்து அனுப்பு கின்றேன். நல்லாயிரம்மா!"' நம்பிக் கையோடு கைகளை உயர்த்தி ஆசீர்வகித்து விட்டு எழுந்தார்.
"'மாமா உங்களிட்ட நான் ஒன்று கேட்கலாமா?""
""என்னம்மா?""
""உங்களை நான் இனிமேலும் மாமா என்று கூப்பிடலாமா?"" தன் எதிர்காலமே இருண்டு கிடப்பதை அறியாமல், ஒரு குழந்தை போல அந்தச் சோகத்திலும் அவள் அவரிடம் ஆறுதல் தேடினாள்.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அவரது நெஞ்சு விம்மி வெடித்தது. நெஞ்சைப் பிடித்துக் கொண்டு "'ஓவென்று" கத்தி அழவேண்டும் போலவும் இருந்தது.
""நான் என்ன செய்வேன்? எனக்கு வேறு மகன் இல்லையே அம்......மா!""
வார்த்தைகள் விக்கிக் கொள்ள அவர் கண்களைத் துடைத்தபடி மௌனமாய் வெளியேறினார்.
அவர் சென்ற பின்பும் அவர் விட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மனம் உடைந்துபோன அவள்;கட்டிலில் குப்புறப்படுத்து தலையணையில் முகம் புதைத்து நெடுநேரம் விம்மி விம்மி அழுதாள்.
தலை நிமிர்ந்த போது ஆடாமல் அசையாமல் இலை உதிர்த்து விட்டு வாசலில் நின்ற அந்த மரம் யன்னலுக்கால் தெரிந்தது. "பட்டமரம்"' என்று யாரோ புதிதாக வந்த ஒரு மூதாட்டி வெளியே சொல்லிக் கொண்டு போவதும் அவளது காதில் விழுந்தது. எட்டிப் பார்த்தாள். தன் உணர்வுகளை இழந்துவிட்ட பட்டமரம் ஒன்று உள்ளேயும் இருப்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்று அவள் நினைத்தாள். ஆனால் யாரோ அதற்கு பதில் சொல்லிக் கொண்டு போவதும் அவளுக்குத் தெளிவாய்க் கேட்டது.
""இல்லையம்மா, இந்த நாட்டு மரங்கள் இப்படித்தான். குளிருக் காகத்தான் இவை இலை உதிர்த்து விட்டு நிற்கின்றன. பார்ப்பதற்குப் பட்ட மரங்கள் போல இருந்தாலும் மறுபடியும் வசந்தம் வரும்போது அவை நிச்சயம் துளிர்க்கும்! அது தான் காலத்தின் நியதியும் கூட...!""
Comments
Post a Comment