Story - சோதிடம் பொய்யாகுமா?
சோதிடம் பொய்யாகுமா?
குரு அரவிந்தன்
கைகளில் ஏந்திய குழந்தையின் சிரிப்பில் அவர் தன்னை மறந்தாலும், குழந்தையின் முகத்தை உற்றுப்பார்ப்பதில் அவரது கவனமெல்லாம் இருந்தது. இந்தப் பேரக்குழந்தைக்காகத்தானே இவ்வளவுகாலமும் அவர் காத்திருந்தார். தன்னுடைய இறுதிக்காலத்தில் கொஞ்சி விளையாட பேரப்பிள்ளைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பைவிட, குலம் தழைக்க ஒரு குழந்தை இல்லையே என்ற அவரது ஏக்கத்தை நிறைவேற்றி வைத்த குலக்கொழுந்தல்லவா இது. யாரைப்போல இருக்கிறான், அப்பாவைப் போலவா அல்லது அம்மாவைப் போலவா?
‘அப்படியே அம்மாவை உரிச்சு வெச்சிருக்கான்’ அவரது தேடலுக்குப் பதில் சொல்வதுபோல அம்மாவின் சாயல்தான் அதிகம் என்று அப்போது கடமையில் இருந்த தாதி தற்செயலாகச் சொன்னது அவரை மனதளவில் கொஞ்சம் பாதிக்கவே செய்திருந்தது.
‘இல்லை, இல்லை என்னோட மகன் போலத்தான் என்னோட பேரன் இருக்கிறான்’ என்று உடனடியாகவே எதிர்வார்த்தையை எடுத்து வீசினார். அதைச் சொல்லிக் காட்டுவதில் அவரது ஏக்கத்தில் வெளிவந்த ஆதங்கம் என்னவென்று புரிந்தது. அவருடைய எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்ட மருமகளும் ‘ஆமா அப்பா மாதியே இருக்கிறான்’ என்று சொல்லி உதட்டில் புன்னகை மலர, அவரது வாதத்தை ஆமோதித்தாள்.
அவருக்கு சுப்பையா சாஸ்திரி மேலே இனம்தெரியாத கோபம் இன்னமும் இருந்தது.
‘இந்த சாதகத்திற்குப் பிள்ளைப்பாக்கியமே கிடையாது’ என்று தயங்கித் தயங்கி முகத்திலே அடித்தற்போல் அன்று சொன்ன வார்த்தைகள் தழும்பாய் இன்றும் அவரது மனசிலே பதிந்திருக்கிறது. அன்று மகனுடைய ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடம் சொன்னவர் இப்போது உயிரோடு இல்லை என்பதும் அவருக்குத் தெரியும்.
ஆனால் இத்தனை வருடங்களாய் அவர் சொன்ன அந்த வார்த்தைகள் இவரைச் சுட்டெரித்த வண்ணமே இருந்திருக்கின்றன. இவருடைய பரம்பரையில் பிள்ளைகள் இல்லை என்ற குறைபாடே இதுவரை இருந்ததில்லை. குடும்பத்தில் எல்லோரும் ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள், வளர்ந்தார்கள். இடையிலே மகன் பிறந்தபோது அவனது சாதகத்தைக் குறிக்கக் போனபோதுதான் இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் குடும்பஜோதிடர்.
தனது மனைவிக்கு சாஸ்திரத்தில் எல்லாம் நம்பிக்கையில்லை என்பதால், ஜோதிடர் சொன்னதைப் பற்றி யாரிடமும் அவர் வாய்திறக்கவில்லை. மகன் வளர்ந்து, காதல் திருமணம் செய்தாலும் அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மனசுக்குள் ஜேதிடர் சொன்ன அந்த வார்த்தைகள் அரித்துக் கொண்டிருந்ததால், மகனுக்குத் திருமணமானபோது அவரை அறியாமலே அவருக்குள் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தம்பதிகள் ஆசீர்வாதம் வாங்கக் காலிலே பணிந்தபோது,
‘சீக்கிரம் பேரக்குழந்தை ஒன்றைப் பெத்துக் கொடுத்திடம்மா’ என்று வாய் நிறைய மருமகளை வாழ்த்தி, ஆசீர்வதித்தார்.
காத்திருப்புகளுக்கும் எல்லையுண்டு என்பதுபோல, ஒன்று இரண்டு மூன்று என்று மாதங்கள் விரைவாக ஓடிக்கொண்டிருந்ததே தவிர அவரது ஆசை நிறைவேற்றப் படுவதாய் தெரியவில்லை. தினமும் வேலை வேலை என்று ஓய்வில்லாமல் கணவன் மனைவி இருவருமே ஓடிக்கொண்டிருந்தார்கள்.
‘இந்தக்காலத்துப் பிள்ளைகள் எதையுமே தள்ளிப்போட்டுக் கொண்டே..!’ சம்பந்தி சொல்லிக்காட்டியபோது திடீரென இவர் விழித்துக் கொண்டார்.
ஜோதிடரின் வார்த்தைகள் பலித்துவிடுமோ என்ற அச்சம் அவரையறியாமலே அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது. நாட்கள் மாதங்களாய் விரைந்த போது, நல்ல செய்தி எதுவும் இல்லை என்ற அவரது கவலை அவரது மனைவியையும் தொத்திக் கொண்டது. மனைவி அவ்வப்போது முணுமுணுக்கும் போதெல்லதம் இவர் மனசுக்குள் பயந்து போனார். மனைவியைக் கொண்டு ஜாடைமாடையாக மருமகளிடம் கேட்டும் பார்த்தாகிவிட்டது.
ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த வழிமுறைகள் எல்லாவற்றையும் சொன்னார்கள். தொடக்கத்தில் தம்பதிகள் இதைப் பெரிது படுத்தா விட்டாலும், நாட்கள் செல்லச் செல்ல இதுவே பெரிய பிரச்சனைக்குரிய விடயமாய்ப் போய்விட்டது. குழந்தைச் செல்வம் இல்லாவிட்டால், ஆண் மலடாக இருந்தாலும் பெண்ணின்மேல் குற்றம் கண்டு பெண்ணையே ஒதுக்கி வைக்கும் இந்த சமுதாயம் தன்னையும் விட்டு வைக்காது என்பதை மருமகள் புரிந்து கொண்டாள். எனவே பிள்ளைப் பாக்கியம் வேண்டிப் புகுந்த மண்ணில் மருமகள் ஏறி இறங்காத கோயில்களே இல்லை எனலாம்.
கொஞ்சம் கொஞ்சமாக வேண்டுமென்றே அவள்மீது சுமத்தப்படும் வார்த்தைகள் சுடுவதை அவள் உணரத் தொடங்கினாள். படித்தவள் பண்பாடு தெரிந்தவள் என்பதால் வாய் மூடி மௌனமாக இருந்தாள். கணவனுடன் இது குறித்து மனம் விட்டுப் பேசினாள். குடும்பவைத்தியரின் உதவியுடன் இருவருமாகச் சென்று இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஸ்பெசலிஸ்டை சந்தித்தார்கள். அவளிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை என்பதை டாக்டர் உறுதிப்படுத்தியிருந்தார். இன்றைய நவீன மருத்துவத்துறை வளர்ச்சி மலடி என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் செய்து விட்டதில் பல குடும்பங்கள் பெருமைப்பட்டது மட்டுமல்ல அதில் நிறைவும் கண்டிருக்கிறார்கள் என்பதை அவள் அறிந்தே வைத்திருந்தாள்.
அரசமரத்தைச் சுற்றிவாரவேண்டும், பாம்புக்குப் பால் வார்க்கவேண்டும், ஈரத்துணியோடு வீதிப்பிரதிஷ்டை செய்யவேண்டும் என்றெல்லாம் ஒவ்வொருவரும் அவளிடம் சொன்னபோது வேறுவழியில்லாமல் எல்லாவற்றையும் சம்மதத்தோடு கேட்டுக் கொண்டாள். சொந்த பந்தம் எல்லோருடைய எதிர்பார்ப்பும் அவள் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விடவேண்டும் என்பதாகவே இருந்தது. மருமகளும் எதையும் மறுக்கவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சென்ற இடத்தில் கோயில் குளம் எல்லாம் சென்று வருவதாகக் கூறிவிட்டு கணவனும் மனைவியுமாய் தமிழ்நாட்டிற்குக் கிளம்பினார்கள்.
தினமும் காலையில் எழுந்து போகவேண்டிய கோயில் குளம் எல்லாம் சுற்றியாகிவிட்டது. இதுவரை எதுவுமே வயிற்றில் தங்கியதாகத் தெரியவில்லை. குழந்தை இல்லை என்பதன் பாதிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். எந்தக் காரணம் கொண்டும் மலடி என்ற சொல்லை அவள் ஏற்கத் தயாராக இல்லை. சொந்த பந்தத்தில் மட்டுமல்ல வீட்டிலும் குழந்தை இல்லை என்ற பிரச்சனை தீராத தலையிடியை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொண்டாள். கணவனோடு கலந்து ஆலோசித்தாள். ஏற்கனவே அவளது சினேகிதி கொடுத்த முகவரியில் உள்ள வைத்தியசாலைக்கு அவர்கள் இருவரும் சென்று வைத்தியரைச் சந்தித்தார்கள்.
எல்லாமே ஏற்கனவே திட்டமிட்டபடி ஒழுங்குமுறையாக நடந்தன. டாக்டரின் ஆலோசனைப்படி அங்கேயே தங்கியிருந்து சிறிது நாட்கள் ஓய்வெடுத்தார்கள். இனி விமானப்பயணம் செய்யலாம் என்ற டாக்டரின் அறிவுறுத்தலின்படி திரும்பி வந்து சேர்ந்தார்கள். தமிழ்நாட்டு யாத்திரை சிறப்பாக முடிந்ததில் எல்லோரும் மகிழ்ந்தார்கள். அவ்வப்போது அவள் வாந்தி எடுத்தாலும் ஆரோக்கியமாகவே இருந்தாள். பிரசவவலி எடுத்தபோது மருத்துவ மனைக்கு வந்து சேர்ந்தார்கள்.
பேரன் பிறந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியில் அவருக்குத் தலைகால் தெரியவில்லை. ஜோதிடம் பார்த்துப் பழகிப்போன அவருக்கு மீண்டும் ஜோதிடரிடம் செல்ல வேண்டும் என்ற அவா ஏற்பட்டது. இம்முறை அவர் எடுத்துச் சென்றது பேரப்பிள்ளையின் ஜாதகத்தை. இந்தக் குழந்தையின் ஜாதகப்படி குழந்தையின் அப்பாவிற்கு ஆயுசு குறைவென்றார் புதிய ஜோதிடர். குழந்தையைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்வார் என்று எதிர்பார்த்துச் சென்ற அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. பிறந்த பேரப்பிள்ளையால் தனது மகனின் உயிருக்கு ஆபத்து என்று ஜாதகம் சொன்னதால் மகனைப் பற்றிப் பயந்த வண்ணமேயிருந்தார். எங்கேயாவது பயணம் செய்யும் போதெல்லாம் கவனம் என்று மகனை எச்சரிக்கை செய்த வண்ணமே இருந்தார். மகனைப் பற்றி சுப்பையா சாஸ்த்திரிகள் சொன்னது பலிக்கவில்லை என்பதில் திருப்திப்பட்டாலும், புதிய ஜோதிடர் சொன்னது ஒருவேளை பலித்திடுமோ என்ற பயமும் ஒருபுறம் அவருக்கு இருந்தது. எனவே ஜோதிடம் எல்லாம் பொய் என்று அடிக்கடி தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டார்.
தினம் தினம் எங்கேயாவது விபத்து நடந்தபடிதான் இருக்கிறது. எங்கேயோ ஒரு மூலையில் நடந்த அந்த விபத்து, இவர்களது குடும்பத்தில் யாரையும் நேரடியாகப் பாதித்தாகத் தெரியவில்லை. அந்த விபத்தைப்பற்றி இவர்களில் யாரும் கவலைப்படவுமில்லை. ஏனென்றால் அந்த விபத்தில், தன்னார்வத் தொண்டனாய் வலிய வந்து இவர்களுக்கு விந்து தானம் செய்தவனும் அன்று இறந்து போயிருந்தான் என்பது இவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. சோதிடம் எல்லாம் பொய், வெறும் பம்மாத்து என்றே இன்றுவரை அவர் சொல்லிக் கொண்டிருக்கின்றார். புரியாத புதிர்கள் யாருக்குப் புரியும். சோதிடம் பொய்யாகுமா?

 
 
 
Comments
Post a Comment