Story - பரியாரி மாமி

 




பரியாரி மாமி  


குரு அரவிந்தன்


(ஞானம் இதழ் சிறுகதைப் போட்டியில் 2013 சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை)


யுத்தம் முடிஞ்சு போச்சு என்ற அறிவிப்பு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் எங்களை மீள்குடியேற்றுவதில் அவர்களுக்குத் தயக்கமிருந்தது. கண்ணிவெடி என்று சொல்லிக் காலங்கடத்திக் கொண்டிருந்தவர்கள் ஒருவிதமாக எங்களை கொண்டு வந்து இங்கே இறக்கிவிட்டார்கள். தேர்தலுக்காகத்தான் இங்கே கொண்டு வந்து விடுவதாக எங்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்ட உத்தியோகத்தர்மார் தங்களுக்கை கதைச்சுக் கொண்டதும் என்ரை காதிலை விழுந்தது. எது எப்படியோ ஊருக்கு வந்து சேந்தாச்சு எண்ட நிம்மதியே இப்போதைக்குப் போதுமானதாக இருந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவுகள் மட்டும் மனதில் ஆழமாயப் பதிந்து உறைந்து போயிருந்தன.

வண்டியில இருந்து வெளியே இறங்கும்போது, இது நாங்கள் வாழ்ந்த ஊர்தானா என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது. ஆனாலும் பிறந்து வளர்ந்த மண் எண்டபடியால் அந்த மண் வாசைன ‘இதுதான் நீ தவழ்ந்த மண்’ எண்டதை உறுதி செய்தது. மரம் செடி கொடிகளாய் கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் பற்றிக் கிடந்தன. தெருவோரத்து அரசமரத்து வயிரவரைக் காணவில்லை. மரம்மட்டும் அடியில் கறையான் புற்றெடுத்தபடி நின்றது. தார்றோட்டு உருக்குலைஞ்சு ஒற்றயடிப் பாதையாப் போயிருந்தது. இராணுவ கனரக வாகனங்கள் அடிக்கடி சென்றதற்கான அடையாளங்கள் மண்ணில் பதிந்திருந்தன. வீடுகள் தரைமட்டமான நிலையில் கிணறுகள் எல்லாம் தூர்ந்து போயிருந்தன. எல்லைகள் இல்லாத, வேலியற்ற காணிகளைப் பார்த்தபோது கடந்த காலம் நினைவில் வந்தது. இந்த காணிகளின் எல்லைக்காகவே எத்தனையோ நெருங்கிய சொந்தங்கள் வேலிச் சண்டையால் நிரந்தரமாகவே பகைத்துக் கொண்டன. அந்தக் காலமெல்லாம் போய், யுத்தம் எல்லாவற்றையும் தின்று ஏப்பம் விட்டிருந்ததால், இப்போ குடியிருக்க ஒரு குடிசையிருந்தால் போதுமென்ற நிலை உருவாகியிருந்தது.

அயல் சனம் உறவு எண்டு பத்துப் பன்னிரண்டு குடும்பங்களுக்குக் கிட்டக் கொண்டு வந்து இங்கே இறக்கிவிட்டார்கள். வந்தவர்கள் தங்களின் காணிகளைத் தேடிப்போக, எங்கட காணியைக் கண்டு பிடிச்சு பற்றைகள் செடி கொடிகளை மற்றவர்களின் உதவியோடு வெட்டித் துப்பரவாக்கினோம். அவர்கள் குடிசை அமைக்கத் தந்த மரம், கிடுகு, சீட் எண்டு ஆளுக்காள் பிரித்து எடுத்துக் கொண்டோம். அவர்கள் தந்த அரிசி, பருப்பு உப்பு போன்றவை ஒரு கிழமைக்குப் போதுமானதாக இருந்தது. உணவுப் பஞ்சம் மட்டுமல்ல, அடிப்படை வசதிகளோ, குடிதண்ணீரோ கிடைப்பது அரிதாக இருந்தது. மருத்துவ வசதிகள் எதுவும் கிடைக்கவில்லை. நல்ல தண்ணீர் உள்ள கிணறு ஒன்று பெரிய மாமாவின் வளவிற்குள் இருந்ததால், அதைத் தேடிப்பிடித்துக் குடிவந்த எல்லோரும் சேர்ந்து வத்த இறைச்சு துப்பரவாக்கிக் குடிதண்ணீருக்குப் பாவித்தோம். பெரியமாமாவும் அவர் மகள் சுந்தரியும் அந்த வளவிற்குள் ஒரு குடிசை அமைத்துக் குடியிருந்தார்கள். பெரும்பாலும் பெரியமாமா படுக்கையிலேயே இருந்தார். இயக்கத்திற்குப் போன என்னுடைய மகள் செல்வியின் வயதையொத்த மாமாவின் மகள் சுந்தரியோ வேலைதேடிக் கொண்டிருந்தாள். எங்களிடம் இருந்த சொற்ப மண்ணெண்ணையை இரவில கைவிளக்குக் கொளுத்தப் பாவிச்சோம். இருட்டுக்கை இருக்கப் பழகிக்கொண்டு கஷ்டங்களை அனுபவித்தாலும், சொந்த மண்ணுக்கு வந்து விட்டோம் என்ற மகிழ்ச்சி மட்டும் மனசுக்கு இதமாய் இருந்தது. 

எங்க அம்மா ஆயுள்வேத வைத்தியம் படிச்ச ஒரு வைத்தியராக இருந்தாள். அம்மாவின்ர பெயரை மறந்து விட்டதுபோல, ஊரவை எல்லோரும் அம்மாவைப் ‘பரியாரிமாமி’ எண்டுதான் கூப்பிடுவார்கள். உண்மையிலேயே தாத்தாதான் இந்த வைத்தியத்தை படித்திருந்தார். பரம்பரை பரம்பரையாகத் தாத்தாவிடம் இருந்து இது அம்மாவிடம் வந்திருந்தது. அம்மா வற்புறுத்தினாலும், எனக்கு அதில் நாட்மில்லாததால் நான் அந்த வைத்தியத்தைக் கற்றுக் கொள்ளவில்லை. இப்படியான ஒரு யுத்தகால சூழ்நிலையில் அம்மாவிடம் வந்து வைத்திய பலன் பெற்றவர்கள் அதிகம். அம்மாவும் நேரம்காலம் பார்க்காமல் அவர்களுக்கு உதவி செய்ததால் ஊருக்குள்ள மதிப்போடு இருந்தா. அம்மாவிற்கு வயதாகிவிட்டாலும் ஞாபக சக்தி அப்படியே இருந்தது. அம்மா பார்த்து வந்த ஆயுள்வேத வைத்தியத்தை எங்கள் குடு;பத்தில் யாரும் தொடரவில்லை. என்னுடைய மகள் செல்வி அதைத் தொடருவாள் டாக்டராக வருவாள் என்ற நம்பிக்கை அம்மாவிற்கு இருந்தது. ‘பேர்த்தி நல்ல சூரி, அவளும் தன்னைப்போல ஒரு இங்கிலீஸ் வைத்தியராய் வருவாள்’ எண்டுதான் அம்மா எதிர்பார்த்தாள். 

‘கல்விச் செல்வம்தான் எங்கட பெரிய செல்வம், எங்க போனாலும் எங்களோட எடுத்துச் செல்லக்கூடிய செல்வம் நிறையப்படிச்சு டாக்டராக வரவேணும்’ என்று அம்மா செல்விக்கு அடிக்கடி அறிவுரை வழங்குவாள். 

ஆனால் விதி யாரை விட்டது, போராட்டம் எண்டு வந்ததால ஒருநாள் செல்வியும் சொல்லிக் கொள்ளாமல் கூட்டாளிகளோடு சேர்ந்து இயக்கத்திற்குப் போய்விட்டாள். பெத்த தாயிட்டக்கூட சொல்லாமல் போய்விட்டாளே எண்ட கோபம் எனக்குச் செல்விமீது இருந்தாலும் எங்க அம்மா அதைப் பெரிதுபடுத்திக் காட்டிக் கொள்ளவில்லை. 

‘என்ன செய்யிறது என்ர மகள் டாக்டராய் வெள்ளைச் சீருடையில் வைத்தியசாலையில் நிற்பாள் என்று கனவு கண்டால், அவள் துப்பாக்கியும் கையுமா எல்லே நிற்கிறள் எண்டு அவளுடைய தோழி வீட்டிலே இருந்த அவளுடைய படத்தைப் பார்த்தபோது, மனம் நொந்துதான் போச்சு.’ 

காயமடைந்த போராளிகள் விரும்பினால் வீட்டுக்குப் போகலாம் என்று அறிவித்தபோது, அவையோட கதைச்சு செல்வியைக் கூட்டிக் கொண்டு வரப்போறனெண்டு அம்மாதான் முதல்ல துள்ளிக் கொண்டு போனா. பாட்டி எண்டால் செல்விக்கும் நல்ல விருப்பம், அதனால என்னைவிடப் பாட்டி என்ன சொன்னாலும் கேட்பாள். பாட்டியிட்டை சொல்லிப் போட்டுத்தான் அவள் இயக்கத்துக்குப் போனாள் எண்டு பிறகுதான் எனக்குத் தெரியவந்தது. 

ஊரெல்லாம் நாங்கள் அலைஞ்சு கடைசியாக இங்கை வந்து சேர்ந்தாலும் செல்வியைப் பற்றி ஒரே யோசனையாக இருந்தது. தானுண்டு தன்பாடுண்டு என்று ஒரு மூலைக்குள் எப்போதும் முடங்கிக் கிடப்பதுதான் அவள் வழக்கம். எங்களுக்குப் பாரமாய் இருப்பதாக நினைத்தாளோ என்னவோ ஏதாவது கேட்டாலும் பேசமாட்டாள். அவளது மௌனத்திற்கு தங்கள் இலட்சியம் நிறைவேறாமல் போய்விட்டதே என்ற விரக்தியும் காரணமாய் இருக்கலாம். மற்றும்படி அவளாக எதுவும் மனம் விட்டுக் கேட்டதில்லை. அவள் மனசில் என்ன இருக்கிறது என்பதைக்கூட எங்களால தெரிந்து கொள்ள முடியவில்லை.

உடுத்துப் படுத்திக் கொண்டு திரிந்த சுந்தரியின் கையில் காசு புழங்குவது தெரிந்தது. வேலை தேடிவிட்டாள் என்றுதான் முதலில் நினைத்தோம் ஆனால் வேலைக்கு ஒழுங்காகச் செல்வதாகத் தெரியவில்லை. ஒரு நாள் ஜீப் வண்டி ஒன்று மங்கல் பொழுதில் எங்கட குடிசையைக் கடந்து பெரியமாமா வீட்டு வாசல்ல நின்றது. முன்னாள் போராளிகளைத் தேடுகிறார்களோ என்ற பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. செல்வியை நினைச்சுப் பயந்து போயிருந்த எனக்கு அம்மாதான் ஆறுதல் சொன்னாள். இரவு முழுதும் என்னவோ ஏதோவென்று பொல்லாத மனசு படபடத்துக் கொண்டேயிருந்தது. 

இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு பூட்ச்காலடிச் சத்தம் ஏதாவது கேட்கிறதா எண்டு நான் வீதிப்பக்கம் காதைக் குடுத்தபடியே இருந்தேன். அதிகாலையில் ஜீப்வண்டி வந்த வழியே திரும்பிச் செல்லும் சத்தம் கேட்டது. ஏன் வந்தார்கள், எங்கே போயிருப்பார்கள் என்பது எதுவும் புரியவில்லை. அடுத்தவாரமும் ஒருநாள் ஜீப்வண்டி வந்தது. பெரியமாமா வீட்டில் பாட்டும் சிரிப்புமாக சத்தம் கேட்டது. மாமாவிற்குப் போதைப் பழக்கமுண்டு. காய்ந்து போய்க் கிடந்தவருக்கு இவர்களின் புதியசினேகிதம் அவரது தேவையைப் பூர்த்தி செய்ய உதவியது. சுந்தரியின் நடத்தையைப் பார்க்கும்போது, தன் வயிற்றுப்பசியைத் தீர்க்க சிப்பாய்களின் பசியைப் போக்குகிறாளோ என்ற சந்தேகம் அடிக்கடி அக்கம் பக்கத்தில் எழுந்தது. கேள்விப்பட்டால் பெரியமாமா குடித்துவிட்டுச் சத்தம் போட்டு மானத்தை வாங்கிவிடுவாரே என்ற பயத்தில் அதைப்பற்றி வெளியே சொல்ல முடியாமல் ஊரார் எல்லோரது வாயும் இறுகக் கட்டிப் போடப்பட்டிருந்தது. 


 

என்ன நடக்கிறது என்பதை அம்மா புரிந்து கொண்டாலும், அம்மா எதுவுமே பேசவில்லை. பெரிய மாமாவோடான தொடர்புகளைக் குறைத்துக் கொண்டாள். சுந்தரியைப் பகைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. இது முன்னாள் போராளியின் குடிசை எண்டு தெரிந்து கொண்டும் நாங்கள் அவர்களைப் பகைக்கமுடியுமா? கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் எறிந்த கதையாகிவிடாதா? இப்போதெல்லாம் ஜீப்வண்டி அடிக்கடி அங்கே வந்து போவதால் என்னுடைய கவனமெல்லாம் அதிலேயே இருந்தது. இரவு படுக்கைக்குப் போகுமுன் வழமைபோல அம்மா விளக்கை எடுத்துக் கொண்டு இயற்கைக் கடன் கழிக்கப் பின்வளவிற்குப் போய்விட்டு வந்தாள்.

‘பிள்ளை இஞ்சை ஒருக்காவாறியே?’ என்று கூப்பிட்டாள்

‘என்னம்மா?’ என்று கேட்டேன்

‘உந்த சுண்ணாம்புப் போத்தலைக் கொண்டுவா’ என்றாள், கொண்டுபோய்க் கொடுத்தேன்.

‘ஏனம்மா, இப்ப வெத்திலை போடப்போறியே?’ 

‘இல்லை பின் வளவில் ஏதோ கடிச்சுப்போட்டுது அதுதான் சுண்ணாம்பு பூசிவிட்டால் சரியாப் போயிடும்’

சற்றுமுன் ஜீப்வண்டி வந்த சத்தம் கேட்டதால், எந்த நேரமும் எங்கட வீட்டு வாசலிலை வந்து நின்றாலும் நிற்கலாம் எண்ட பயத்தில நான் இருந்ததால அம்மா சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. காலமை எழும்பி அம்மாவைத் தேடினால், வழமையாக முற்றம் கூட்டிப்பெருக்கும் அம்மாவைக் காணவில்லை. அம்மாவின் படுக்கையைச் சென்று பார்த்தால் படுத்த படுக்கையிலேயே அம்மா கிடந்தாள். 

‘என்னணை, இன்னும் எழும்பேல்லையே?’ யோசனையோடு அம்மாவைத் தட்டி எழுப்பினேன். அம்மாவின் உடம்பு விறைத்துப் போய்க் கிடந்தது. சரிந்து கிடந்த அம்மாவைத் திருப்பிப் பார்த்தால் வாயில் வெள்ளையாய் நுரைதள்ளியிருந்தது. காலில் ஏதோ கடித்ததாக அம்மா சொன்னது ஞாபகம் வரவே காலைப் பார்த்தேன். சுண்ணாம்பு பூசப்பட்ட இடத்தில் இரண்டு பல்லுப்பட்ட அடையாளம் நீலம் பாரிச்சுக் கிடந்தது. இரவு அம்மாவை பாம்புதான் கடிச்சிட்டுது என்பது தெரிய வந்தது.

‘அம்மா போயிட்டியே?’ என்று நான் அலறிய சத்தத்தில் பக்கத்துக் குடிசையிலிருந்த பையன் பிரகாசுதான் முதலில் பதறிப்போய் ஓடிவந்தான்.

‘என்ன ஆன்ரி என்னாச்சு பாட்டிக்கு?’ என்று பதறினான்.

‘இராத்திரி பாட்டிக்கு பாம்பு கடிச்சிருக்க வேணும், விஷமேறிச் செத்துப் போயிட்டா.’ 

 ‘பரியாரிப்பாட்டியம்மா செத்துப் போயிட்டா.’ என்று சேதியை எல்லா வீடுகளுக்கும் பீபீ என்று ஹோண் அடித்துக் கொண்டே ஓடியோடிச் சொல்லித் தெரியப்படுத்தினான் சிறுவன் பிரகாசு. 

‘பட்டமரம் நானிருக்க பால்மரமே முறிஞ்சதென்ன

காவோலை நானிருக்க குருத்தோலை விழுந்ததென்ன

நீயில்லா இடமெல்லாம் நீறில்லா நெற்றியம்மா

உலகாளப் பிறந்தவளை ஊருக்கு உழைச்சவளை

கரியால கோலமிட்டுப் பாவி நான் கட்டையில அனுப்புறனே..!’

பூபதிப் பாட்டி வந்து மாரிலும் தலையிலும் அடிச்சு ஒப்பாரி வைச்சு, பழைய சாவுகளையும் நினைவில் வைத்து அழுதபோது நானும் எனது மனதிலிருந்த சோகத்தைக் கொட்டிக் கொண்டேன். அங்கே கூடியிருந்த சில பெண்களும் எங்களோடு சேர்ந்து கட்டிப்பிடித்து ஓவென்று கதறி அழுதுவிட்டனர். தன்னைவிட வயதில் குறைந்த எங்கட அம்மா மீது எப்பவுமே பூபதிப் பாட்டிக்குப் பாசம் அதிகம். அதனால்தான் அம்மாவின் பிரிவைப் பூபதிப்பாட்டியும் தாங்கமுடியாமல் ஒப்பாரி வைத்தழுதாள். ஊருக்கு உதவியாய் எல்லோரோடும் பாசமாய் இருந்த பரியாரி மாமியும் போய்விட்டாவே என்ற சோகம் அயலவருக்கும் இருந்தது. 

‘பிள்ளை கையோட நாகதம்பிரானுக்கும் ஒரு நேர்த்திக்கடன் வெச்சிடு’ என்று மூக்கைச் சீறிக்கொண்டு மறக்காமல் எனக்கு நினைவூட்டினாள் பூபதி அன்ரி. செத்தவீட்டுக் காரியங்களை முன்னின்று நடத்தக்கூடிய இளந்தாரி ஆண்களே இல்லாத நிலையில், இப்போது பாட்டியை என்ன செய்வது என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது. எல்லோரும் என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றபோது எப்போதும்போல செல்வி தந்த ஊக்கம்தான் என்னையும் உற்சாகப்படுத்தியது.

‘பாத்துக் கொண்டிருந்தால் ஒண்டுமே நடக்காது, பெரியக்கா பின் வளவுக்கை நிக்கிற அந்தப் பட்ட பூவரசைத் தறித்துக் கொண்டு வாங்கோ, பூரணி கிணத்தடியில நிக்கிற கமுக மரத்தில ஒன்றை வெட்டிக் கொண்டு வந்தியெண்டால் பாடைகட்டலாம், பிரகாசு நீ கிளியக்காவைக் கூட்டிக் கொண்டுபோய் வல்லிபுரமாமா வீட்டில கேட்டிட்டு தள்ளு வண்டியைத் தள்ளிக் கொண்டு வா..!’.; கடகடவெண்டு ஒரு பயிற்றப்பட்ட கட்டளைஅதிகாரிபோல கட்டளை பிறப்பிக்க, புத்துயிர் வந்ததுபோல எல்லோரும் ஓடியாடித் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளைச் செய்யத் தொடங்கினர்.

தள்ளுவண்டியில் விறகுகளை அடுக்கிக் கொண்டு சென்று சற்றுத் தள்ளியிருந்த மயானத்தில் சிதை மூட்டுவதற்காக அடுக்கினார்கள். கமுகைப் பிளந்து பாடைபோலக் கட்டி, பாட்டியைக் குளிப்பாட்டிப் பாடையில் கிடத்தினார்கள். ஆளுக்கு இரண்டு பேராய்; ஒவ்வொரு பக்கமும் தோள் கொடுக்க, குடிசையில் இருந்து வண்டிப் பாதைவரையும் பெண்களே பாட்டியைச் சுமந்து சென்றார்கள். பாட்டியைச் சிதை மூட்டி எரித்து, பின் அந்திப் பொழுதில் சென்று காடாத்திவிட்டு வீடு வந்த போதுதான் பெண்களே தனிய நின்று எந்தப் பெரியதொரு காரியத்தைச் சாதித்துவிட்ட உணர்வு எல்லோர் மனதிலும் ஏற்பட்டது. ‘செல்வி இல்லாவிட்டால் அம்மாவின்ர பிணம் நாறிப்போயிருக்கும்’ என்று நான் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி அழுதபோது போது எல்லோரும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள். 

‘இனியார் இருக்கினம், பாட்டியம்மாவோட இந்த ஊரில ஆயள்வேத மருத்துவமும் முடிஞ்சு போச்சு.’ பாட்டியம்மாவின் கடந்த காலத்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்த பெடிச்சிகள் சொல்லிக் காட்டினாலும் வாய்வழி வந்த எங்கட பாரம்பரிய மருத்துவம் மெல்ல மெல்ல அழிஞ்சு கொண்டு போவதை அவர்கள் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு நினைவூட்டின. முக்கியமான மூலிகைகளும் கவனிப்பார் அற்றதால அழிச்சு கொண்டு போவது பற்றி அம்மா அடிக்கடி புலம்பியதும் ஞாபகத்திற்கு வந்தது. நொச்சி, பாவட்டை, எருக்கல, கத்தாளை, பனங்கத்தாளை, இஞ்சி, மிளகு, வேர்க்கொம்பு, வேம்பு, இலுப்பை, நெல்லி, முருங்கை, அகத்தி, பொன்னாங்காணி, வல்லாரை, கருவேப்பிலை, தூதுவளை, தேங்காய்பூகீரை, வாதமடக்கி, துளசி, கற்பூரவள்ளி, வெற்றிலை, நல்லெண்ணை, வேப்பெண்ணை, தேன், எண்டு கண்முன்னாலே வளவுகளில் இருந்த எத்தனையோ ஆயுள்வேத மூலிகை மரங்களும், அவை தரும் பலன்களும் இன்று இல்லாமல் போய்விட்டன. இத்தகைய தாவரங்களின் இலை, பட்டை, வேர் போன்றவற்றைக் கொண்டே அனேக மூலிகை மருந்துகள் செய்யப்பட்டன.


 

யுத்தம் எல்லாவற்றையும் தின்று விட்டது என்று சிலர் குறைப்பட்டுக் கொண்டாலும், சமையலறையில் அடைந்து கிடந்த தமிழ் பெண்கள், எதையும் துணிந்து சாதிக்க முடியம் என்ற உணர்வோடு இன்று வெளியே வந்திருக்கும் உண்மையை உலகறியச் செய்ததும் இந்த யுத்தம்தான் என்பதை மறக்க முடியாது. ஓன்றின் இழப்பில் ஒன்று பிறப்பதுபோல, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு கிராமத்திலும் செல்வியைப் போன்றவர்கள் பிறக்கத்தான் செய்கிறார்கள், பெண்கள் என்றால் அடிமையல்ல, இனிவருங் காலங்களில் பின்னடைவு ஏற்படும்போது அவர்கள் துணிவோடு முன்வந்து எதையும் சாதித்துக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை இன்று எல்லோர் மனதிலும் பசுமையாப் படர்ந்திருக்கின்றது. அதனால்தான் காலம் கனியும், அடுத்த தலைமுறையும் எங்கள் சமூக நலன் கருதி எதையாவது அமைதியான முறையில் சாதிக்கும் என்ற எதிர்பார்ப்போடு தமிழினம் காத்திருக்கின்றது.

எட்டுச்செலவு முடிந்து பூபதி அன்ரி திரும்பிப் போகும்போது எனது கையைப்பிடிச்சு கொண்டு அனுதாபப் பெருமூச்சோடு, ‘பிள்ளை நீயும் ஒரு வருத்தக்காரி, இப்ப தனிச்சுப் போனியே!’ என்று ஆறதல் சொன்னாள்.

‘சீ..சீ..எனக்கொரு குறையுமில்லை, செல்விதான் என்னோட இருக்கிறாளே..!’ என்றேன் அவசரமாக.

‘என்னவோ, உனக்கும் அடுத்தடுத்து இரண்டு சாவாய்ப் போச்சு, இதையெல்லாம் எப்படித்தான் தாங்கப் போறியோ?’ கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டு பூபதி அன்ரி மெல்ல நகர்ந்தாள்.

நான் மட்டும் தனித்துப்போய் நின்றேன்.


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper