Story - வெற்றிலைக் கொடி
வெற்றிலைக் கொடி
குரு அரவிந்தன்
இது அவர்களது தோட்டம்தானா என்பதில் அவளுக்குச் சந்தேகம் இருந்தது. எப்படி இருந்த அந்த விவசாய நிலம் இப்படி பாழ்பட்டுப் போயிருக்கும் என்று அவள் சற்றும் எதிர் பார்க்கவில்லை. பச்சைப் பசேலென்றிருந்த அந்த நிலம் இப்படிக் காய்ந்து வரண்டு போயிருந்ததைப் பார்த்ததும், அதிர்ச்சியைத் தாங்கமுடியாமல், அப்படியே வரம்பில் உட்கார்ந்தாள். எஞ்சி நின்ற ஓரிரு மரஞ்செடிகளும் வெள்ளை பூத்ததுபோல இன்றோ நாளையே கருகிவிடும் நிலையில் இருந்தன. கண்கள் பனிக்க விம்மலும் கேவலுமாய் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. பெற்ற தாயைப்போல கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த இந்த நிலத்திற்கு என்ன நடந்தது?
சில வருடங்களுக்கு முன்புதான் உள்நாட்டு யுத்தம் காரணமாக அவளது குடும்பம் புலம் பெயர்ந்து தெற்கே வன்னிக்குச் சென்றிருந்தது. இனி இங்கே தங்க முடியாது என்ற நிலையில், அப்பா அம்மா அவள் மூவரும் கையில் அகப்பட்ட பெட்டியைத் சுமந்து கொண்டு இடம் பெயர்ந்தார்கள். ஏனைய குடும்பங்கள் எல்லாம் உறவுகளைப் பறிகொடுத்தது போலவே அவளும் இடம் பெயர்ந்த வன்னிமண்ணில்; தாயைப் பறிகொடுத்திருந்தாள். தகனக் கிரிகைகூடச் செய்ய முடியாத நிலையில் பெற்ற தாயை அந்த மண்ணிலே புதைத்துவிட்டு வந்தாள். யுத்தம் காரணமாய் அந்த மண்ணில் இழப்பு என்பது ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போயிருந்தது. பிறந்த மண்ணுக்குத் திரும்பி வருவோமா என்ற ஏக்கம் அவளுக்கு எப்போதும் இருந்ததால், இப்போது யுத்தம் ஓய்ந்து விட்டதால், சொந்த மண்ணுக்கே திரும்பிப் போகவேண்டும் என்று ஒரே பிடிவாதமாக இருந்தாள். சில பகுதிகளில் மட்டும் மீள்குடியேற்றம் அனுமதிக்கப் பட்டபோது, எவ்வளவோ கஷ்டங்களுக்கு மத்தியில்; தகப்பனும் மகளும் திரும்பி வந்திருந்தனர்.
அவள் திரும்பி வரவேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததற்குக் காரணம், ஒன்று பரம்பரை பரம்பரையாக அவளது மூதாதையர் வாழ்ந்த மண் என்பது, மற்றையது அவள் பிறந்து தவழ்ந்து ஓடிவிளையாடிய மறக்கமுடியாத மண்ணது. உயர்பாதுகாப்பு வலையம் என்று சொல்லிக் கொண்டு இராணுவம் தனிப்பட்டவர்களின் நிலங்களை ஆக்கிரமித்திருந்தது. இது விவசாய நிலம் என்பதால் மீளக் குடியேற்றம் நடந்தது. விவசாய நிலத்தின் ஒரு பக்கத்தில்தான் அவர்களின் வீடும், அதற்கு அருகே கிணறும் இருந்தது. வீடு இடிந்து போன நிலையிலும் கிணறு தூர்ந்தும் போயிருந்தன. சுவர்களில் கோலம் போட்டது போல அங்குமிங்குமாய் சிறுசிறு துளைகளாய்த் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்திருந்தன. யுத்தம் தின்று ஏப்பம் விட்ட எச்சங்கள் மட்டும் அங்கே மிஞ்சியிருந்தன. கவனிப்பாரற்றுக் கிடந்த வீட்டைச் சுற்றி செடிகள், கொடிகள் எல்லாம் பற்றைகளாகப் படர்ந்திருந்தன. வீட்டைத் திருத்த, கிணற்றை வற்ற இறைக்கப்;; பணம் வேண்டும், அல்லது உடல் உழைப்பாவது வேண்டும். அம்மாவை இழந்த துயரத்தில் அப்பாவோ நோய்வாய்ப்பட்டு மனசளவில் உடைந்து போயிருந்தார். பணத்திற்கு எங்கே போவது?
சிறுபயிர்களிலும், வெற்றிலையிலும்தான் அவர்கள் வருமானம் இதுவரை காலமும் தங்கியிருந்தது. வெற்றிலைக் கொடி படர்வதற்கு கொழுகொம்பாய் இருந்த அனேகமான முள்முருக்கம் மரங்கள் கவனிப்பாரற்றுப் பட்டுப் போயிருந்தன. படரவழியில்லாமல் சில கொடிகள் தரையில் சரிந்து கிடந்தன. யுத்தத்தின் போது குண்டுகளுக்குப் பாவிக்கப்பட்ட கெந்தகப் புகைதான் செடி கொடிகள் அழிந்து போவதற்கக் காரணம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டிருந்தனர். சமாதானம் வந்து விட்டதால் இனி வளிமண்டலம் மாசடையச் சந்தர்ப்பம் இல்லை எனவே விவசாயத்தை திரும்பவும் தொடங்கலாம் என்று விவசாயிகளுக்கு அவர்கள் அறிவுரை செய்தார்கள். வெற்றிலை செழிப்பாக வளரும் மண் என்பதால் அனேகமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான வெற்றிலைக் கொடியை நம்பியே மீண்டும் திரும்பியிருந்தார்கள்.
வெற்றிலைக் கொடிதான்; அந்தப் பகுதி மக்களின்; பிரதான விவசாயப் பயிராக இருந்தது. அகத்தி மரத்திற்குப் பதிலாக, முள்முருக்கம் மரத்தை நட்டு அதிலே இந்தக் கொடிகளைப் படரவிடுவார்கள். வாழை நாரெடுத்து கொடிக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் கவனமாக நீண்டு உயர்ந்து நிற்கும் முருக்கை மரத்தோடு சேர்துக் கட்டி விடுவார்கள். அது மேல்நோக்கி மெல்லப் படரத் தொடங்கும். வெற்றிலைக் கொடிக்கு நாணம் அதிகம் என்பதால் மிகவும் அவதானமாக நடந்து கொள்வார்கள்.
பாதவணியுடன் தோட்டத்திற்குள் யாருமே கால் வைக்க விடமாட்டார்கள். பெண்கள் மாதாந்த சுகவீனமாக இருந்தால் உள்ளே போக அனுமதி இல்லை. சுற்று வட்டத்தில் உள்ள எல்லோருக்கும் இது தெரியுமாகையால் யாரும் தீட்டோடு வெற்றிலைத் தோட்டத்திற்குள் செல்வதில்லை. அப்படி ஒரு கட்டுப்பாட்டோடுதான் வெற்றிலைத் தோட்டங்களை அங்கே அந்த விவசாயிகள் கவனமாகப் பராமரித்தனர்.
அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்த அந்தக் கிராமத்து மக்களின் வாழ்க்கையில் சில வருடங்களுக்கு முன் எங்கிருந்தோ வந்த யுத்தம் என்ற பிசாசு திடீரெனப் புகுந்து கொண்டது. நிம்மதியாக இருந்த அந்தக் கிராமத்து மக்களையும் அது வாழவிடவில்லை. தொடக்கத்தில் யுத்தத்தின் பாதிப்பு எப்படியிருக்கும் என்பது அந்தக் கிராமத்து மக்களுக்குப் புரியவில்லை. நடுநிசியில் நாய்களின் திடீர் ஓலம் சிப்பாய்களின் நடமாட்டத்தைக் காட்டிக் கொடுத்தது. அந்நியரின் வருகையால் அநியாயமும், அட்டூழியங்களும் தினந்தினம் அதிகரித்ததால், மாலையானதும் தாழ்ப்பாள்களைப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளே அடைந்து கிடக்கவேண்டிய நிலை அங்கேயும் ஏற்பட்டது. அந்தக் கிராமத்திலும் சில போராளிகள் இருப்பதாகக் கதைகள் அடிபடவே, இராணுவத்தின் தேடுதல் வேட்டை அந்தப் பகுதியில் அதிகரிக்கத் தொடங்கியது. இரவிலும் தேடுதல் வேட்டை செய்வதாகச் சொல்லி இந்த வெற்றிலைத் தோட்டங்களில் இராணுவம பதுங்கியிருந்தது மட்டுமல்ல, சப்பாத்துக் காலோடு தோட்டமெங்கும் நடமாடினார்கள்.
காலையில் எழுந்து பார்த்தால் ஆங்காங்கே சாப்பாத்துக் காலடையாளங்கள் தெரியும். ஆனால் அதுவல்ல முக்கியம், வெற்றிலைத் தோட்டம் பாழ்பட்டுப் போகுமே என்ற வேதனைதான் அந்தப்பகுதி விவசாயிகளுக்கு இருந்தது. அதுவே வெளியே சொல்ல முடியாத தவிப்பாயுமிருந்தது.
‘அனியாயப் படுவாங்கள் சப்பாத்துக் காலாலை லட்சுமியை மிதிச்சிட்டாங்கள், உருப்பட மாட்டாங்கள்’ நிலத்தில் மிதிபட்டுக் கிடந்த வெற்றிலைக் கொடிகளைப் பார்த்த ஒரு விவசாயியான அப்பாவிற்கு ஆவேசம் வந்ததில் வியப்பில்லை. எதுவுமே செய்ய முடியாத நிலையில், இயலாமையின் வெளிப்பாடாய், ஆத்திரத்தில் பிடி மண்ணள்ளித் தூற்றி முடிந்தவரை அவங்களைத் திட்டித் தீர்த்தவரின் கண்களில் கண்ணீர் மல்கியது. கண்போலப் பாதுகாத்த நிலம் இப்படிப் பாழ்பட்டுப் போனதை நினைத்து ஓவென்று அவர் அழுததைப் பார்த்தபோது அவளுக்கும் கண் கலங்கியது. யாருக்கும் தலை வணங்காத அப்பா இப்படி அழுததை ஒரு நாளும் அவள் பார்த்ததில்லை.
மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற நினைப்போடு, காலத்தைக் கடத்த விரும்பாமல் உடனேயே அவள் முயற்சியில் இறங்கினாள். தோட்டத்தைப் பண்படுத்திப் புதிய முள்முருக்க மரங்களைச் சரியான இடைவெளிவிட்டு நட்டு, வெற்றிலைப் பதிகளை வாங்கிக் கொண்டு வந்து அப்பாவும் மகளுமாக அங்கே நட்டார்கள். விவசாயத்திற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் தண்ணீர் பாய்ச்சுவதில் சிரமமேற்பட்டது. முன்பு மின்சார வசதிகள் இருந்ததால் பம்பு வைத்து கிணற்றில் இருந்து நீர்ப்பாய்ச்ச முடிந்தது. இப்போது யுத்தம் நடந்த இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் நீர்ப்பாய்ச்சுவது கடினமான காரியமாகத் தெரிந்தது. யாரிடமாவது வாடகைக்கு பம்பு எடுத்தாலும் அதற்குப் பணம் தேவைப்பட்டது. கிணற்றிலே இருந்து பட்டை மூலம் தண்ணீர் இறைக்கலாம், அதற்கு ஒருவர் துலா மிதிக்க வேண்டும். பட்டைக் கயிற்றைப் பிடித்து தண்ணீர் இறைக்க அவளால் முடியும். ஆனால் அப்பாவால் துலா மிதிக்க முடியவில்லை. வயது போய்விட்டது மட்டுமல்ல, பொல்லாத இருமல் நோயும் அவரைப் பிடித்திருந்தது. மனைவியை இழந்த நிலையில், வயதிற்கு வந்த மகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், எதிலும் பிடிப்பில்லாதவராக அவர் மாறியிருந்தார்.
வெற்றிலைக் கொடியையும், சிறு பயிர்களையும் வைத்து முன்புபோலப் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் இருந்த அவளுக்கு இடி விழுந்ததபோல அந்த அறிவித்தல் வந்திருந்தது. இதுவரைகாலமும் மூடப்பட்டிருந்த அவர்களது கிராமத்திற்கு அருகே இருந்த சீமெந்துத் தொழிற்சாலையை மீண்டும் திறக்கப் போவதாக அந்தச் செய்தி குறிப்பிட்டது. சீமெந்துப் புகையால் வளிமண்டலம் மாசடையும் என்பதால், அந்தப் பகுதியில் தொழிற்சாலை வேண்டாம் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. வாடைக்காற்றுக் காலத்தில் வெற்றிலைக் கொடிகள் சீமெந்துப் புகையில் வெளிவரும் சாம்பல் நிறத் தூசியினால் முடப்பட்டு விடும்.
இது கொடிகளின் வளர்ச்சியைப் பாதிப்பது மட்டுமல்ல, சுவாசத்தில் தூசு கலப்பதால் மார்பு புற்றுநோயும் வரலாம் என்ற பயமிருந்தது. அதனால் தான் விவசாயிகள் ஒன்று திரண்டு சாத்வீக முறையில் போராட முற்பட்டனர். தொழிற்சாலையை மீண்டும் திறக்கக்கூடாது என்ற போராட்டத்தில் அவன்தான் முன்னின்று நடத்தினான். கையிலே ஒரு பதாதையைத் தாங்கியபடி காலை ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு அவன் நொண்டியபடி துணிச்சலோடு கூட்டத்தின் முன்னால் சென்றதை அவள் அவதானித்தாள். அவன் யார் என்று விசாரித்தபோதுதான் அவனொரு முன்நாள் போராளி என்பது அவளுக்குத் தெரிய வந்தது. போர் முடிவுக்கு வந்தபோது, புனர்வாழ்வு என்று சொல்லி உடலால் பாதிக்கப்பட்ட போராளிகளைத் தடுப்பு முகாமில் வைத்திருந்துவிட்டு விடுதலை செய்திருந்தார்கள். இனி இவனால் எந்தப் பலனும் இல்லை என்பதால் அவனது ஊருக்கே திரும்பிவந்தான். நொண்டிக் கொண்டே நடந்த அவனை யாரென்று தெரியாமல் சின்னஞ்சிறுசுகள் ‘நொண்டிமாமா’ என்று கேலி செய்தார்கள்.
உதவிக்கு யாருமற்ற நிலையில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று புரியாத வெறுமையில் அவள் தவித்த பொழுதுதான், சற்றும் எதிர்பாராத நிகழ்வொன்று நடந்தது. அவனே ஒருநாள் அவளது தோட்டத்திற்கு வந்து கூலி வேலை ஏதாவது செய்யலாமா என்று கேட்டான். அன்று ஊர்வலமாய் முன்னின்று பதாதை பிடித்துச் சென்ற அவன்தான் இவன் என்று அறிந்ததில் அவளுக்கு அவன்மேல் இரக்கம் வந்தது.
நொண்டிக் காலோடு இவனால் என்ன செய்ய முடியம் என்று மனசுக்குள் நினைத்தாலும், ஏதாவது தொட்டாட்டு வேலைகளாவது செய்விக்கலாம் என்று அவனை மறுநாள் வரச்சொன்னாள். ஆனால் அவளது முடிவு தப்பானது என்பதை வேலைக்கு வந்த அன்றே அவன் நிரூபித்தான். ஒருகாலைச் சவண்டிக் கொண்டு நடந்தாலும் துலா மிதிப்பதில் அவன் வல்லவனாக இருந்தான். எப்படி இவனால் முடிகிறது என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது, அவள் பட்டைக் கயிற்றைப் பிடிக்க அவன் துலாவின் நெம்பில் கால் வைத்து மேலும் கீழும் ஒரு ரிதத்தோடு நடந்தான். அவனது வேகம் அவளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் இருந்தது. மூச்சிரைக, அவனிடம் தோற்றுப் போய்விடுவோமோ என்ற பயத்தில் துலாவில் நின்ற அவனைக் கடைக்கண்ணால் மெல்லப் பார்த்தாள்.
மெல்லிய உருவம் என்றாலும், துப்பாக்கி தூக்கிய கையாகையால் உடம்பு முறுக்கேறியிருந்தது. அவன் எதையும் பொருட்படுத்தாமல் பாடல் எதையோ வாய்க்குள் முணுமுணுத்தபடி துலாவில் நடைபயின்று கொண்டிருந்தான். இறைக்கத் தொடங்கிய ஒருமணி நேரத்தில் முழுத் தோட்டமும் குளிர்ந்து போயிருந்தது. இவ்வளவு சீக்கிரம் தண்ணீர் இறைத்து முடிக்கலாம் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
அவன் கீழே இறங்கி வந்தபோது அவள் இன்னமும் மூச்சு வாங்கிக்கொண்டிருந்தாள்.
‘என்ன களைச்சுப்போனீங்களா?’ என்றான்.
‘இல்லையே’ என்றாள் சட்டென்று.
‘சொறி, நான் உங்களைக் கவனிக்கவேயில்லை, இனிமேல் இறைக்கும்போது ஒரு பிறேக் எடுப்போம், சரியா?’ என்றான்.
‘எப்படியோ இறைச்சு முடிச்சிட்டோம், அதுவே திருப்தி..!’ என்றாள். அவனுடைய புரிந்துணர்வு அவளுக்கு இதமாக இருந்தது.
‘உங்களுக்குத் தெரியுமா, அந்த நாட்களில் வாயிலிருந்து துர்நாற்றம் வருவதைத் தடுப்பதற்காகவே நம்மவர்கள் வெற்றிலை பாக்கைப் பாவித்தனர். பாக்கு மரமான கமுகமரம் இங்கே அனேகமாக எல்லா வீடுகளிலும் இருந்தாலும், வெற்றிலை எல்லாத் தோட்டங்களிலும் வளருவது கடினம். இதை வெறும் வெற்றிலை என்று அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. தமிழர்களின் பண்பாட்டோடு ஒன்றாகக் கலந்து விட்டதொன்று. புனித காரியங்களுக்கும், நாட்டு வைத்தியத்திற்கும் முக்கியமான மருந்தாகவே இதைப் பார்த்தனர்.’ என்று அவன் தனக்கு வெற்றிலையைப் பற்றித் தெரிந்ததை அவளிடம் சொன்னான்.
‘உண்மைதான், வயிற்றுவலி என்று வந்துவிட்டால் பாட்டியின் வைத்தியமே இந்த வெற்றிலைதான். இரண்டு மிளகை எடுத்துப் பக்குவமாய் வெற்றிலையில் மடித்துத் தருவாள். வயிற்றுவலி எங்கே என்று தெரியாமல் பறந்துவிடும். பாட்டி வைத்தியம் பார்க்கும்போது இந்த வெற்றிலையில் வைத்துத்தான் சூரணத்தைத் தேனில் குழைத்துக் கொடுப்பாள். வெற்றிலைச் சாற்றுடன் கஸ்தூரி, கோரோசனை போன்றவற்றைக் கலந்து கொடுத்தால் சளி, இருமல், மாந்தம், போன்ற நோய்களைக் குணமாகிவிடும் என்பதைப் பாட்டி அறிந்து வைத்திருந்தாள். அதனாலே எடுத்ததற்கெல்லாம் வைத்தியரிடம் ஓடவேண்டிய அவசியம் எங்களுக்கு ஏற்படவில்லை.’ அவன் சொல்வதை ஆமோதிப்பது போல அவளது பதில் இருந்தது.
அவளுக்கு உதவியாக அவன் தினமும் வந்து தோட்டத்தில் வேலை செய்தான். அவள் தேனீர் தயாரித்து, தேனீருக்குத் தொட்டுக் கொள்ளப் பனங்கட்டி உடைத்துக் கொடுப்பாள். சர்க்கரைபோல அவனும் பனங்கட்டியோடு ருசித்துக் குடிப்பான். வேலை அதிகமிருந்தால் மதிய உணவும் அவளே தயாரித்துப் பரிமாறுவாள். அவள் உணவு கொண்டு வரும்வரை கிணற்றடியில் இருந்த வேப்பமர நிழலில் அவன் உட்கார்ந்து வேப்ங்காற்றின் சுகத்தைக் கண்மூடி அனுபவிப்பான். அந்த நேரத்தில் மட்டும்தான் அவர்கள் பேசிக்கொள்வார்கள். அவள் துருவித் துருவிக் கேட்டால், அவன் தனது கதையைச் சொல்லுவான்.
தொடக்கத்தில் காவலரனில் நின்ற கதையையும், அதன்பின் எங்கொல்லாம் தாக்குதலுக்குச் சென்றான் என்பதையும், காலில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்தோடு, காயப்பட்ட தனது நண்பனை எப்படிச் சுமந்து சென்றான் என்பதையும் சுவாரஸ்யமாகச் சொல்வான். அவளுக்கும் இப்படியான வீரதீரச் செயல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். சின்ன வயதில் பாட்டி சொன்ன கற்பனைக் கதைகளுக்கும் இவன் சொல்லும் நிஜக் கதைகளுக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்த்து ரசிப்பாள். கதை கேட்கும் ஆர்வத்தில் அவள் தன்னைமறந்து இருந்தாலும், அவன் நேரம் வந்ததும், வேலையில் கவனம் உள்ளவனாய் சட்டென்று எழுந்து தோட்டத்திற்குப் போய்விடுவான்.
வன்னி முகாமில் அகப்பட்டு இருந்தபோது, இளமைத் துடிப்போடு அழகாகவும் அவள் இருந்ததால், இராணுவச் சிப்பாய்களின் வெறித்த பார்வையில் தினந்தினம் தீக்குளித்தவள் அவள். இவன் தினமும் வந்து போனாலும், ஒருநாள்கூட அவளை வெறித்துப் பார்த்ததில்லை. உடலால் ஊனமுற்றாலும் மனதால் உயர்ந்து நின்ற அவனுக்குப் பெண்மையை மதிக்கத் தெரிந்திருந்தது. ஒழுக்கம் கட்டுப்பாட்டோடு நல்ல முறையில்தான் முகாமில் அவன் பயிற்சி எடுத்திருக்கிறான் என்று அவள் நினைத்துக் கொள்வாள். ஏனோ தெரியாது அப்பாவிற்கு அவனை ரொம்பவே பிடித்துப் போயிருந்தது. இந்தக் காலத்தில் இப்படி ஒரு பையனா என்று அவர் அடிக்கடி தன்னை மறந்து வியந்து அவளிடம் புகழ்ந்து கொண்டேயிருப்பார்.
அவர்களது விவசாய நிலம் வண்டல்மண் கலந்த களிமண்ணாக இருந்ததால் வெற்றிலைக்குச் சிறப்பாக அமைந்திருந்தது. அகத்தி மரத்திற்குப் பதிலாக முள்முருக்கம் மரத்தையே அவர்கள் கொழுகொம்பாகப் பாவித்தனர். முள்முருக்கம் மரத்தைப் பூச்சிகள் தாக்குவது குறைவாக இருப்பதல், பூச்சிகளிடம் இருந்து வெற்றிலைக் கொடிகளை இந்த மரங்கள் பாதுகாத்தன. முள்முருக்க மரங்கள் பற்றாக் குறை இருந்ததால், பரீட்சார்த்தமாக சீமைக்கிளுவைக் கொம்புகளையும் அவன் கொண்டு வந்து இடையிடையே நட்டான். தாய் கொடியின் நுனியில் இருந்து முதல் மூன்று அடிவரை நறுக்கி அதை மூன்று துண்டுகளாக்கி நட்டார்கள். ஒவ்வொரு துண்டிலும் குறைந்தது மூன்று கணுக்களாவது இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள். கொடி அழுகல் நோய், இலைக்கருகல் நோய், தீச்சல்நோய், வேர் அழுகல் நோய் போன்ற நோய்கள் வெற்றிலைக் கொடிகளைத் தாக்காமல் பாதுகாக்க அவ்வப்போது என்னென்ன மருந்துகள் வேண்டுமோ அதை அவளிடம் பணத்தைப் பெற்று அதற்குரிய மருந்துகளை வாங்கி வருவான்.
‘எப்படி இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாய்?’ ஆர்வத்தை அடக்க முடியாமல் ஒருநாள் அவள் கேட்டாள்.
‘அதுவா, நாங்கள் சமாதான காலத்திலும் சும்மா இருக்காமல் விவசாயம்தானே செய்தோம். யாருக்கும் பாரமாக இருக்கக்கூடாது என்பது எங்கள் தலைவரின் கொள்கை!’ என்று பதிலளித்தான்.
கொடிகளின் வளர்ச்சிக்காக அவ்வப்போது கால்நடைகளின் எருவுடன் இரசாயண உரத்தையும் கலந்து பாவித்தார்கள். தேவையான நேரம் நீர்ப்பாய்ச்சி, சிறந்த முறையில் கொடிகளைப் பராமரித்தனர். கொடிகள் நட்டு ஐந்து மாதங்களாகியிருந்ததால், நன்றாகச் செழித்து வளர்ந்திருந்தன. இலைகள் அறுவடைக்குத் தயாராகிவிட்டதால், அவன் ஒருநாள் காலையில் வந்து இலைகளைக் கிள்ளி எடுத்து வாழை மடலில் அழகாக அடுக்கிக் கவுளியாகக் கட்டிக் கொடுத்தான். எதிர்பார்த்ததைவிட விளைச்சல் அதிகமாகவே இருந்தது. சுண்ணாகம் சந்தை வெற்றிலைக்குப் பெயர் பெற்றதாக இருந்ததால், அருகே இருந்த சுண்ணாகம் சந்தைக்கே இருவரும் வெற்றிலையைக் கொண்டு சென்றார்கள். நல்ல கொழுந்து வெற்றிலையாக இருந்ததால், அவர்களுக்கு நல்ல விலை கிடைத்தது. வியாபாரி அவளின் கைகளில் பணத்தை எண்ணிக் கொடுத்தபோது, அவளின் கண்கள் பூரித்துப் போயின. இவ்வளவு காலமும் பிரயாசைப்பட்டதன் பலன் கைமேல் கிடைத்த போது, கண்கள் பனிக்க நன்றியோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள். வீட்டிற்கு வந்து படுக்கையில் கிடந்த தகப்பனிடம் பணத்தைக் கொடுத்தபோது, அவர் அப்படியே அவளது கைகளைப் பற்றிக் கொண்டார்.
‘ரொம்ப சந்தோஷமாயிருக்கம்மா, இந்த உழைப்புக்குப் பின்னால் இன்னுமொருவனும் இருக்கிறான், தெரியுமாம்மா?’ என்றார்.
அவர் சொன்னதை ஏற்றுக் கொள்வதுபோல மெல்லிய புன்னகையுடன் மௌனமாய் தலையசைத்தாள். சிந்தனைகள் வேறுபட்டதால் அவன் ஒரு போராளியாக மாறியிருந்தானே தவிர, அவனும் சாதாரண ஆசாபாசம் கொண்ட ஒரு மனிதன்தானே என்பது அவளது கணிப்பாக இருந்தது.
‘என்னம்மா சொல்கிறாய், உனக்கு அவனைப் பிடிச்சிருக்கா?’ அப்பாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல், எதுவும் பேசாது வேதனையோடு பார்வையை வெளியே படரவிட்டாள். அவளது கடந்த காலத்தை அவளால் மறக்கமுடியவில்லை. அவளுக்கு நிச்சயதார்தம் செய்திருந்த உறவு மாப்பிள்ளை ஒருநாள் இராணுவத்தின் செல்லடியில் அகப்பட்டு சிதறிப்போனபோது, அவள் அடைந்த வேதனை சொல்லில் அடங்காதது. ராசி இல்லாதவள் என்று அவளை மாமியார் திட்டித் தீர்த்த போதெல்லாம், அவனுடைய இறப்பிற்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியாமல் அவள் சின்னாபின்னமாய் உடைந்து போயிருக்கிறாள்.
யாருடையதோ சாவுக்காக எல்லாப் பழியையும் உறவுகள் சில, அவள் மீதே போட்டிருந்தனர். திருமணம் பற்றிப் பேசினாலே திருமணம் என்ற ஒரு பந்தம் தனக்கு இனிமேல் வேண்டாம் என்று வெறுக்குமளவிற்கு அப்படி ஒரு வேதனையை அவள் அனுபவித்திருந்தாள். பெற்றோருக்குரிய கடமையைச் செய்யமுடிய வில்லையே என்று அவரும் வேதனையில் உடைந்து போயிருந்தார். இப்போ அவளைக் குறைசொல்ல யாருமில்லை, யுத்தத்தால் சில நன்மைகளும் கிடைத்ததுபோல,அவள் மீது பழி சுமத்திய உறவுகள் எல்லாம் இடம் பெயர்ந்து ஆங்காங்கே சிதறிப்போயிருந்தன.
‘நான் இன்னும் எத்தனை நாள் உயிரோட இருப்பனோ தெரியாது, நல்ல பையனாய்த் தெரியிறான், அம்மா உயிரோட இருந்திருந்தால் உன்னை எப்பவோ கரைசேர்த்திருப்பாள், நான் தனிய என்ன செய்ய..?’ சில நாட்களாகப் படுக்கையில் இருந்த அப்பா இருமிக் கொண்டே, தனது இயலாமையின் வெளிப்பாடாய் மனதில் இருப்பதை விம்மலுக்கிடையே அவளிடம் கொட்டிவிட முனைந்தார்.
முள்முருக்க மரம் கிடைக்கவில்லை என்று அவன் கொண்டு வந்து தோட்டத்தில் நட்டுவைத்த சீமைக்கிளுவையிலும் வெற்றிலைக் கொடி நன்றாய்ப் படர்ந்திருப்பது அவள் கண்களில் பட்டு வியப்பைத் தந்தது. முள்முருக்கையில்தான் வெற்றிலைக் கொடி கொழுகொம்பாய்ப் பற்றிப்படரும் என்ற அவளது மனதில் இருந்த எண்ணத்தைத் தோட்டத்தில் நின்ற சீமைக்கிளுவை மாற்றியிருந்தது. மரம், செடி, கொடி, விலங்கு என்று பண்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு மனிதன் அவற்றிடம் இருந்துதானே எப்பொழுதும் பாடம் கற்றுக் கொள்கிறான்.
‘படருவதற்கு ஒரு கொழுகொம்பு இருந்தால், செடி கொடிகள்கூட இயற்கையோடு இணைந்து எவ்வளவு செழிப்பாக வளர்கின்றன, மனித இனத்திற்கும் இது பொருந்தும்தானே’ என்று இதுவரை மனதுக்குள் எங்கோ உறைந்திருந்த ஏக்கம் வெளிப்பட்டதை நினைத்து ஆச்சரியப்பட்டாள்.
சம்மதம் என்று வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும், வெட்கப் புன்னகையோடு அவள் தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். ‘மகள் இதற்குச் சம்மதித்து விட்டாளா?’ என்ற வாஞ்சையுடன் விழி உயர்த்திப் பார்த்த அப்பா, அவளது மந்திரப் புன்னகையில் கட்டுண்டவராய்த் தட்டுத்தடுமாறி எழுந்து ஏதோவொரு எதிர்பார்ப்போடு படுக்கையில் நிம்மதியாய் உட்கார்ந்திருந்தார்.
Comments
Post a Comment