Story - அவனுக்கு ஒரு கடிதம்
அவனுக்கு ஒரு கடிதம்
(குரு அரவிந்தன்)
அவளுக்கு நம்பமுடியாமல் இருந்தது. நிமிர்ந்து நாட்காட்டியைப் பார்த்தாள்.
பெப்ரவரி மாதம் பதின்னான்காம் திகதி. காதலர் தினம்.
காதலர் தினத்திலன்று யாராவது தங்கள் காதலைச் சொல்ல தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு காதற் கடிதமோ, அல்லது காதல்மடலோ தான் கொடுப்பார்கள், அல்லது தங்கள் காதலின் அடையாளமாய் ஒற்றை மலரையோ அல்லது மலர்க் கொத்தையோ கொடுப்பார்கள்.
இவன் மட்டும் வித்தியாசமாய் இதை அனுப்பி இருந்தான். இவளுக்கு எதிர்பாராத ஆச்சரியமாய் இருந்தது. ஆவலை அடக்க முடியாமல் மீண்டும் வாசித்துப் பார்த்தாள்.
'என்னை உனக்குப் பிடித்திருந்தால் உன்னை நான் ஸ்பொன்ஸர் செய்ய விரும்புகின்றேன். உன் விருப்பத்தை எனக்கு அறியத் தருவாயா?' - பிரசாந்.
கனடாவில் இருந்து சில நாட்களின்முன் பிரசாந் போட்ட கடிதம் இன்றுதான் இவளுக்குக் கிடைத்திருக்கிறது. பிரசாந்தை அவளுக்கு சில நாட்களாகத்தான் தெரியும். தாங்கள் கற்றதைத் தங்கள் உடன் பிறப்புக்களோடு பகிர்ந்து கொள்வதற்காகக் கனடாவில் இருந்து பல்கலைக்கழக மாணவர்கள் வன்னிக்கு வந்தபோது அவனும் அவர்களுடன் வந்திருந்தான்.
முல்லைத்தீவு பகுதியில் இருந்து வந்திருந்த அவளும் வன்னியில் கணினித்துறையில் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தாள். அங்கு நடந்த பயிற்சிப்பட்டறையில் அவன் கணனித் துறையில் அவர்களுக்குச் சில நாட்கள் பாடம் நடத்தினான். கணனித்துறையில் சிறந்த அறிவு பெற்றிருந்தது மட்டுமல்ல ஆங்கிலமும்இ தமிழும்கூட மிகவும் சரளமாகப் பேசினான்.
புதிதாய்ப் பூத்த மலர்போல எந்தச் செயற்கைத் தனமும் இல்லாத இவளுடைய அழகு அவனுக்குப் பிடித்துப் போய் இருந்தது. பேசும்போது எதையுமே மறைக்கத் தெரியாத அப்பாவித்தனமான, மனம் திறந்து பேசும் அவளுடைய வார்த்தைகள், அதிலே கலந்திருந்த அன்பு, பாசம் இவனை இன்னும் அவளுக்கு அருகே இழுத்தன.
‘மாலதிஇ நீங்க என்னோடு பேசும்போதெல்லாம் உங்களுடைய வாய் பேசுதா, இல்லை கண்கள் பேசுதா என்று எனக்கு ஒரே தடுமாற்றமாய் இருக்கு. பேசும்விழிகள் என்று சொல்லுவார்களே, அதை இப்பதான் நேரே பார்க்கிறேன்.’ பிரசாந் ஒருநாள் அவளோடு கதைத்துக் கொண்டிருந்த போது வேடிக்கையாகக் குறிப்பிட, அவள் அப்படியே குளிர்ந்து போய்விட்டாள்.
சூரியனைக் கண்டதும் மலரும் சூரியகாந்திப் பூப்போலத் தினமும் அவனைக் கண்டதும் இவள் முகம் மலரத் தொடங்கினாள். ஏதோ ஒன்று, விபரிக்க முடியாத ஒருவித கவர்ச்சி அவனிடம் இருப்பதை இவள் உணர்ந்தாள்.
சென்ற வருடம் இப்படித்தான் யாரோ அவளைச் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்று அவளுக்கு காதலர் தினத்திலன்று வலன்டைன் கார்ட் போட்டிருந்தார்கள். அது எப்படியோ அம்மாவின் கண்ணில்பட்டு, அப்பா விற்குச் செய்திதெரிந்து அன்று முழுவதும் வீடே அமர்க்களப்பட்டு விட்டது.
‘யாரடி அவன்..?’ வாசலில் யாரோ ஒருத்தன் அவளுக்காகக் காத்து நிற்பதுபோல, அம்மாவின் அதட்டல் அவளை அதிரவைத்தது.
யாரென்றே தெரியாமல் யாரைச் சொல்வது? மௌனம் நல்லது என்று நினைத்துஇ பதில் பேசாமல் நின்றாள்.
‘ஊமாண்டி மாதிரி நின்றால் என்ன அர்த்தம், சொல்லேண்டி.’ பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அப்பாவிற்கும் கேட்கட்டுமே என்று சமையல் அறையில் இருந்து அம்மாவின் கீச்சிட்டகுரல் கேட்டது.
‘யாரென்று தெரியாதம்மா, ‘கெஸ்’ என்று மட்டும் கீழே எழுதியிருக்கு.’ அழுகைக்கிடையே வார்த்தைகள் விக்கி விக்கி வந்தன.
‘படிக்கிற பிள்ளைக்கு என்னடி காதல்..?’ குடும்ப மானமே போய்விட்டது போல அப்பா எழுந்து வந்து அவளது தலைமயிரைப் பிடித்து இழுத்து வெறிபிடித்ததுபோல காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு கன்னத்தில் அறைந்தது ஞாபகம் வந்தது.
என்றைக்குமே தொட்டு அடிக்காத அப்பா, ஏன் என்றுகூட விசாரிக்காமல் அன்று அவளை அடித்ததன் வலி இப்பவும் நெஞ்சில் முட்டி நின்றது.
எங்கேயோஇ எப்போவோ முளைவிட இருந்த மென்மையான உணர்வுகள் எல்லாம் அந்தக் கணமே கருக்கப்பட்டுவிட்டன.
காதல் என்றால் பெற்றோர்கள் ஏன் வெறுக்கிறார்கள் என்றுகூடப் புரிந்து கொள்ள முடியாத நிலையில் அன்று அவள் இருந்தாள். காதல் என்றால் என்ன என்றுகூட அவள் இதுவரை நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் நாவினால் சுட்ட அந்த வலி மட்டும் ஏனோ நிலைத்து நின்றது.
அவளுக்கு யார் மீதும் காதல் இல்லை. எனவே யாராய் இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்க்கவும் விரும்பவில்லை.
கண்ணாடியில் பருவமாற்றங்கள் தெரியும்போதெல்லாம் மனசுக்குள் மட்டும் மெல்லியதாய் இதமான ஒரு கிளுகிளுப்பு ஏற்படும், யாரோ ஒருத்தனின் பார்வை தன் மீது திரும்பியிருக்கிறதே என்று சின்னதாக ஒரு சந்தோஷம் முளைக்கும்.
ஆனாலும் பெயரைச் சொல்ல விரும்பாத, முகவரி இல்லாத, ‘கெஸ்’ என்று கையெழுத்துப்போட்டு எழுதுகின்ற ஒரு கோழையை அவள் ஒருபொழுதும் ஏறெடுத்துப் பார்க்கவும் தயாராக இல்லை.
அந்தச் சம்பவம் அன்றோடு முடிந்தாலும் அது தந்த வலி அவளது நெஞ்சை விட்டு அகலவில்லை.
ஒரு வருடம் கழித்து இன்று இந்தக் கடிதம். இவன் பெயரைப் போட்டு, முகவரி போட்டு ‘இது நான்தான்’ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொளரவமாகக் கேட்டிருந்தான்.
இந்தக் கடிதத்திற்கு அம்மா, அப்பாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்.
இந்தக் கடிதத்தை அவர்கள் படித்திருந்தால் வெகுண்டு எழுந்திருப்பார்களா? அதை அவள் தெரிந்து கொள்வதற்கும் வழியில்லை, ஏனென்றால் அவர்கள் இன்று உயிரோடு இல்லை.
அடிப்பதற்கோ, அணைப்பதற்கோ இன்று அவளுக்கென்று உறவு சொல்ல யாரும் இல்லை. கடற்கோள் அனர்த்தத்தில் அவள் தனது பெற்றோர்களையும், நெருங்கிய உறவுகளையும் இழந்து விட்டாள். போரின் கொடூரத்தில் இருந்து மீண்டு எழும்புமுன் அவளது கிராமமும் சுனாமி என்று சொல்லப்படுகின்ற பேரலைகளால் கொள்ளை அடிக்கப்பட்டு விட்டிருந்தது.
எல்லாவற்றையும் இழந்து தப்பிப் பிழைத்தவர்கள் அகதிகளாய் ஒரு பாடசாலையில் தங்கவேண்டி வந்தது. உண்ண உணவில்லை, மாற்றி உடுக்க உடையில்லை, ஏன் குடிப்பதற்குக்கூட நல்ல தண்ணீர் இல்லை. அவர்கள் அப்படி அவதிப்பட்டுக் கொண்டிருந்த போதுதான் பிரசாந்தும் நண்பர்களும் தங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் சேர்த்து இவர்களுக்கு உண்ண உணவும்இ மாற்றுடையும் வாங்கிக் கொடுத்தார்கள். பசியால் துடித்த குழந்தைகளுக்குப் பால்மா வாங்கிக் கொடுத்தார்கள். அது தற்காலிக நிவாரணமே தவிர நிரந்தரம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.
‘அண்ணா, அண்ணா’ என்று அகதி முகாமில் அந்தக் குழந்தைகள் இவனை அழைத்தபோது இவன் உண்மையிலே உடைந்து போய்விட்டான். அங்கே மாலதியோடு பேசும்போதெல்லாம் உறவுகளை இழந்த சோகத்தில் மூழ்கி இருந்த அவள் விழிகளில் ஒருவித ஏக்கமும் எதிர்பார்ப்பும் படர்ந்திருப்பதை அவதானித்தான்.
வந்த இடத்தில் நடந்த சம்பவங்கள் எல்லாம் பிரசாந்திற்கு நினைத்தும் பார்த்திராத, சற்றும் எதிர்பாராத அனுபவமாய் இருந்தது. பயிற்சிப் பட்டறையில் தொடங்கிய அவர்களின் நட்பு அகதி முகாமிலும் தொடர்ந்தது. நாட்கள் வேகமாக ஓடிப்போக, திரும்பிச் செல்லவேண்டிய சூழ்நிலை காரணமாக பிரசாந்தால் நீண்ட நாட்கள் அங்கே தங்க முடியவில்லை.
கனடாவிற்குப்போய் அங்கே உள்ளவர்களையும் கலந்து ஆலோசித்து தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக வாக்குக் கொடுத்து விட்டு அவன் பிரிய மனமில்லாமல் அவர்களை விட்டுப் பிரிந்தான்.
சொன்னது போலவே கனடாவில் உள்ள செய்தித் தொடர்பு சாதனங்களைச் சந்தித்து, வடக்குக் கிழக்கில் நடந்த அனர்த்தங்களை விளக்கிச் செல்லி, உண்மையில் யார் எல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதையும் ஆதார பூர்வமாக அவர்களுக்கு எடுத்துச் சொன்னான்.
சம்பவத்தை நேரில் பார்த்த பல்கலைக்கழக மாணவன் என்பதாலும். அவனிடம் ஆங்கில மொழித் திறமை இருந்ததாலும், செய்தித் தொடர்புச்சாதனங்கள் அவனது நேர்காணலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன.
இதன் காரணமாக மறைக்கப்பட்ட பலஉண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டு, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கும் நிவாரணங்கள் கிடைக்க வழிஏற்பட்டன.
பிரசாந் அத்துடன் நின்றுவிடாமல் தனிப்பட்ட முறையில் மாலதிக்குக் கடிதமும் போட்டிருந்தான். அவள் விரும்பினால், அவளை தான் ஸ்பொன்சர் செய்து கனடாவிற்கு வரவழைக்க விரும்புவதாகத் தெரிவித்திரு ந்தான். அந்தக் கடிதம்தான் அவள் கையில் இன்று கிடைத்திருக்கிறது.
கடிதத்தை வைத்துக் கொண்டு சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தவள், அவனுக்குப் பதில் எழுதினாள்.
பிரசாந், உனக்கு என்ன பதில் எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. நீ பயிற்சிப் பட்டறையில் பாடம் நடத்தும் போது உன் திறமையை எண்ணி வியந்திருக்கிறேன். கனடாவில் பிறந்து வளர்ந்த நீ தமிழில் சரளமாய்ப் பேசும்போது அதைவிட வியப்பும், தாய் மண்ணைத் தரிசிக்க நீ இங்கே வந்ததை எண்ணிப் பெருமையும் அடைந்திருக்கிறேன். மொழி அழிந்தால் இனம் அழிந்துவிடும் என்ற உண்மையை உணர்ந்து புலம்பெயர்ந்த மண்ணிலே உன்னை ஒரு தமிழனாய் வளர்த்தெடுத்த உன் பெற்றோருக்கு உண்மையிலேயே நான் தலை வணங்குகின்றேன். உனது பெற்றோர்களைப் போன்ற, தாய்மொழி மீது பற்றுக் கொண்டவர்கள் இருக்கும்வரை எங்கள் மொழியும், இனமும் என்றுமே அழியாது என்ற நம்பிக்கை, உன்னைப் போன்றவர்களை இந்த மண்ணிலே பார்த்த பின்பு என் மனதிலே நன்கு வேர் ஊன்றிவிட்டது.
இந்த கடற்கோள் அனர்த்தம் என்னைப் போன்றவர்களின் மனதில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. என்னைப்போல பெற்றோரை இழந்த ஏராளம் குழந்தைகள் இங்கே அனாதைகளாகத் துணையின்றிப் பரிதவித்து நிற்கிறார்கள். அவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது. அவர்களுக்கு நிம்மதியான வசிப்பிடமும் பாதுகாப்பும் அவசரம் தேவை. எங்கள் மண்ணின் சுபீட்சம் இந்தக் குழந்தைகளின் கைகளில்தான் தங்கியிருக்கிறது. இந்தக் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தால்தான் எங்கள் மண்ணும் வளமாய் இருக்கும். எனவே என்னால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவிசெய்ய நினைக்கின்றேன். உன்விருப்பப்படி இந்த மண்ணை விட்டு, புலம் பெயர்ந்து அங்கே வர முடியாமைக்கு என்னை மன்னிக்கவும்.
உன்னைப் போன்றவர்களின் சேவை இந்த மண்ணுக்கு அவசரம் தேவைப்படுகிறது. என் மீது நீ வைத்த காதல் இரக்க உணர்வில் பிறந்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை, எதுவாக இருந்தாலும் நான் அதை மதிக்கிறேன். என்மீது நீ கொண்ட காதலை இந்த மண்மீதும் வைப்பாயேயானால் அந்த நாளுக்காக நானும் காத்திருப்பேன். அந்த நாள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கிருக்கிறது. அதுவரை உன்னிடம் விடைபெறும் - மாலதி.
Comments
Post a Comment