Story - வித்தாரம்

 


வித்தாரம்   

(குரு அரவிந்தன்)

நீதிபதியின் தீர்ப்பு என்னைப் பாதித்திருந்தது. ஏனோ தெரியவில்லை, சிறிது நேரம் என்னை உறைந்து போகவும் வைத்திருந்தது அந்தச் சம்பவம். 

எனக்கும் அந்த சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றாலும் ஏதோ ஒரு விதத்தில் அது என்னைப் பாதித்திருந்தது. காரண காரியம்; தெரியாவிட்டாலும் வாசித்த நேரத்தில் இருந்து அந்தச் செய்தி என் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. அந்தச் செய்தி தந்த பாதிப்பில் மனதை ஒரு நிலைப்படுத்த முடியாத பதட்டத்தில் என்னையறியாலே கையில் இருந்த பத்திரிகை நழுவிக் கீழே விழுந்தது. மனம் கேட்காமல், பத்திரிகையைக் குனிந்து எடுத்து மீண்டும் அந்தச் செய்தியைக் கவனமாக வாசித்துப் பார்த்தேன்.

‘Jury found him guilty of drugging a close friend with the GHB but acquitted him of sexual assault.’

GHB என்றால் என்னவென்று எனக்கு முதலில் புரியவில்லை. ஒருவேளை மயக்க மருந்தாக இருக்குமோ என்ற எண்ணத்தில் கூகுள் தளத்திற்குச் சென்று தேடிப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. இப்படியும் நடக்குமா?

‘Victims become incapacitated and they are unable to resist…?’

நல்ல நட்பிலும் இப்படி எல்லாம் நடக்குமா என்று நினைத்துப் பார்த்தேன். எங்கள் இனத்தில் இப்படி எல்லாம் நடந்ததாக ஊரிலே நான் கேள்விப்பட்தில்லை. அப்படி நடந்தாலும் எனக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். 

ஒருவேளை இதுபோலத்தான் நானும் பாதிக்கப்பட்டிருப்பேனோ என்ற சந்தேகம் அப்போதுதான் எனக்குள் எழுந்தது. கொஞ்ச நாட்களாக ஏமாற்றப் பட்டுவிட்டது போன்ற ஏதேதோ உணர்வுகள் எனக்குள் எழுந்து தினமும் என்னைச் சித்திவதை செய்வதை என்னால் உணரமுடிந்தாலும் குடும்பத்திற்கு, சமுதாயத்திற்குப் பயந்து நான் எதையும் காட்டிக் கொள்ளாமல், சற்று ஒதுங்கி இருக்கவே விரும்பினேன். 

கனடாவிற்குப் புலம் பெயர்ந்த நாட்களில் பல்கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஊரிலே பல இன்னல்களைக் கடந்துதான் இந்த மண்ணுக்கு வந்திருந்தோம். அங்கே பட்ட அவலம் உயிரோடு வாழ்வதற்கான போராட்டமாக இருந்தது. இங்கே வந்த போது அதையெல்லாம் மறக்கச் செய்வது போன்ற சூழ்நிலை உருவாக்கப் பட்டிருப்பதை ஓரளவு உணரமுடிந்தது. உண்மைதான், பொருளாதார வசதி இருந்ததால் ஒவ்வொருவரும் கடந்த காலத்தை மறந்து தமக்குக் கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் களிப்பதிலேயே தங்கள் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். தாங்களாகவே ஒரு குறுகிய வட்டத்தைப் போட்டு அதுதான் தங்கள் உலகம் என்று அதற்குள் வாழப் பழகிக் கொண்டிருந்தார்கள்.

கல்லூரி வாழ்க்கையில் தொடங்கிய எனது இலக்கிய ஆர்வம் இங்கேயும் தொடர்ந்தது. எதையாவது எழுத வேண்டும் என்ற ஆர்வம் என்னையும் எழுதத் தூண்டியது. அப்படி எழுதியதில் என்னுடைய கட்டுரை ஒன்று கனடிய தமிழ் பத்திரிகையில் வெளிவந்த போது பலரும் பாராட்டினார்கள். அவர்களில் ஒருவராக இவரும் இருந்தார். இலக்கிய ஒன்று கூடலில் தான் அவரை முதலில் சந்தித்தேன். 

அவரை எனது நண்பர் ஒருவர் தான் அறிமுகம் செய்து வைத்தார். இலக்கியத்தில் அவருக்கு ஆர்வம் இருந்ததால், என்னுடைய கட்:டுரையை வாசித்துவிட்டு அவரும் தனது கருத்தைச் சொன்னார்,

‘நந்தினி உங்களுடைய கட்டுரை நன்றாக இருக்கின்றது. சாதாரணமாக எங்கள் பெண்கள் எழுதத் துணியாததை நீங்கள் துணிந்து எழுதியிருக்கிறீங்கள். நான் தனிப்பட்ட முறையில் அதைப் பாராட்டுகின்றேன். ஆனாலும்..!’

‘ஆனாலும் என்ன சேர், இப்படி எழுதியிருக்கக் கூடாதா?’

‘இல்லையில்லை, நான் அதைச் சொல்லவில்லை, இன்னும் கொஞ்சம் காரசாரமாய் எழுதியிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறுது.’

‘ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன்.’ என்றேன்.

‘இப்படி ஒரு கட்டுரையைத்தான் நான் எதிர்பார்த்தேன். இன்னும் பல வழிகளில் அந்தக் கட்டுரையை மெருக்கூட்டியிருக்கலாம்.’ 

‘எப்பிடி சேர்..?’ ஆர்வ மிகுதியால் கேட்டேன்.

‘நேரமிருந்தால் வீட்டை வாங்கோ, ஆறதலாய் இருந்து கதைக்கலாம்’

அவருடைய அழைப்பை, அன்புக் கட்டளையாக ஏற்றுத்தான் நான் அங்கு சென்றேன். கோப்பி தந்து உபசரித்தார். ஹோலில் இருந்த செற்ரியில் உட்கார்ந்து கட்டுரைகள் பற்றி விவாதித்தோம். அவர் எழுதிய சில கட்டுரைகளை வாசித்துக் காட்டி இப்படித்தான் கட்டுரை அமைய வேண்டும் என்று விளக்கம் தந்தார். அவரிடம் இருந்து நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன். நேரம் போனதே தெரியவில்லை, அன்றைய சந்திப்பு சிறந்ததொரு இலக்கியச் சந்திப்பாக அமைந்தது.

‘நேரமாச்சு, நான் போகவேணும்’ என்று சொல்லி எழுந்தேன்.

‘உங்களாலே முடியும் நந்தினி, எங்களுடைய சிந்தனைகள் ஒன்றாகவே இருக்கின்றன. நேரம் இருந்தால் இந்தப் பக்கம் வாங்கோவன்’ என்ற அவரது வேண்டுகோளுக்குத் தலை அசைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன். இப்படியும் ஒருவரா, உள்ளத்தை வருடி விடுவது போல எவ்வளவு இதமாக அன்பாக அவரால் பேசமுடிகின்றது. இப்படி ஒரு அன்புக்காகத்தான் நான் ஏங்குகிறேனா?

என்னுடைய அந்தக் கட்டுரையை வாசித்த சிலர் என்னைப் பற்றி அவதூறாகப் பேசியதும் எனக்குத் தெரியும். ‘சின்னவயசில இவளோட யாரே பாலியல் சேட்டை விட்டிருக்கினம், அதுதான் இவள் இப்படி எல்லாம் எழுதுறாள்’ என்று தன்னுடைய புருஷன் சொன்னதாக எனது தோழி என்னிடம் சொன்னபோது என்முகம் ஏன் மாறியதோ தெரியவில்லை. ஆனாலும் அவளுக்குத் தெரியாமல் என் முகமாற்றத்தை மறைத்துக் கொண்டேன்.

‘ஆழ் மனதில் உறைந்திருந்ததை அவளது கணவனால் எப்படி கண்டுபிடிக்க முடிந்தது. ஒருவேளை என் எழுத்தே என்னைக் காட்டிக் கொடுத்து விட்டதோ?’

அழகாக இருப்பவளுக்கு எல்லாத் திசையிலும் ஆபத்து என்பார்கள். சின்ன வயதில் எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. பதும வயதின் தொடக்க காலத்தில் ஒரு நாள் உறவினர்களின் திருமண வீட்டிற்குச் சென்றபோது ஒன்றுவிட்ட சகோதரங்கள் எல்லோரும் கதைத்துச் சிரித்து மகிழ்ந்தோம். அன்றிரவு ஹோலில் எல்லோரும் பாய்விரித்துப் படுத்துக் கொண்டோம். திடீரென உறக்கம் கலையவே கண் விழித்துப் பார்த்தேன். 

யாருடைய கையோ தெரியவில்லை, என் மார்பில் படுவதை உணர்ந்தேன். தற்செயலாக நடந்திருக்கலாம் என்ற எண்ணத்தில், நித்திரைத் தூக்கத்தில் கையைத் தட்டிவிட்டுத் திரும்பிப் படுத்தேன். ஆனால் சற்று நேரத்தில் மீண்டும் அந்தக் கை மெதுவாக அங்கே பதிந்தபோது யாரோ விஷமத்தனம் செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். இருட்டில் யார் என்று தெரியவில்லை. இப்படியான ஒரு சூழ்நிலையில் முதன்முதலாக நான் மாட்டிக் கொண்டதால் என்ன செய்வது என்று புரியாமல் தவித்த போது, எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. 

அங்கே கத்திக் கூக்குரலிட்டாலும் என்மீதுதான் பழி விழும் என்பதால், மெதுவாக எழுந்து அறைக்குள் படுத்திருந்த அம்மாவுடன் சென்று படுத்துக் கொண்டேன். காலையில் அம்மாவின் பார்வையே கேள்வியாய் என் மீது விழுந்த போது, ‘கனவு கண்டு பயந்து போனேன் அதுதான்’ என்று அம்மாவிடம் சொல்லிச் சமாளித்துக் கொண்டேன். இரவு நடந்ததை எப்படிச் சொல்வது,  சொன்னாலும் யாருமே நம்பமாட்டார்கள் என்ற பயம் இருந்தது. 

அன்று பாலியல் நோக்கோடு என்வயதை ஒத்த உறவுகளில் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முற்பட்ட போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நான் பட்ட அவஸ்தையை என்னால் இன்றுவரை மறக்கமுடியவில்லை. அன்று நடந்த அந்தச் சம்பவம் எப்பொழுதும் என்னை எச்சரித்துக் கொண்டே இருந்தது.

உண்மையிலே, நல்லதொரு நட்பின் அடையாளமாகத்தான் நான் அவருடைய அழைப்பை ஏற்று அன்று அவரைச் சந்திக்க அவருடைய வீட்டிற்குச் சென்றேன். வீடு அமைதியாய் இருந்தாலும் ஏதோ குறை இருப்பது போலவும் தெரிந்தது.

‘எங்கே உங்க இல்லத்தரசியைக் காணோம்’ என்று உரையாடிக் கொண்டிருந்தபோது தற்செயலாக அவரிடம் கேட்டேன்.

‘ஊருக்குப் போய்விட்டா’ என்றார் ஒரு பெருமூச்சுடன்.

‘ஏன் இந்தப் பெருமூச்சு, பிரிவுத் துயரைத் தாங்க முடியவில்லையா’ என்றேன் அவரிடம் வேடிக்கையாக.

கண்ணை மூடி ஒரு கணம் இருந்தவர், ‘உண்மைதான் கல்யாணம் கட்டியும் பிரமச்சாரி வாழ்க்கைதான்’ என்றார் விரக்தியுடன்.

‘பாவம், தனிமை அவரை வாட்டுகிறதாக்கும்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். நட்பில் தொடங்கிய எங்கள் இலக்கிய உரையாடல், சில சமயம் அதையும் கடந்து வேறு பல விடயங்களைப் பற்றியதாயும் இருந்தது. ஆனால் ஒருமுறை நான் அங்கு சென்ற போது நடந்த ஒரு சம்பவம் எனக்குள் பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. 

நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டது போல எனக்குத் தரப்பட்ட குளிர்பானத்திலே ஏதாவது கலக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் அப்போதுதான் எனக்கு உதித்தது. எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்வது போல அந்தக் குளிர்பானத்தைக் குடித்த போது, சற்றுக் கச்சலாக இருந்ததையும் நினைத்துப் பார்த்தேன். நான் கோப்பி கேட்ட போது, கோப்பியைத் தராமல் குளிர்பானம்தான் இருக்கிறது என்று வேண்டும் என்றே குளிர்பானம் எனக்குத் தரப்பட்டதா? இப்படி எல்லாம் இந்த மண்ணில் நடக்குமா என்று கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாமல் இருந்தது 

அப்படியானால், என்னுடைய விருப்பம் இல்லாமலே குளிர்பானத்தைத் தந்து பாலியல் வன்முறைக்கு என்னை உட்படுத்தியிருப்பாரோ? என்றும் எண்ணத் தோன்றியது.

பேசிக் கொண்டிருக்கும் போதே நான் கண்ணயர்ந்து விட்டேனா? என்று துடித்துப் பதைத்து எழுந்திருந்தபோது அவர் சொன்னது நினைவில் வந்தது.

‘இல்லை, நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோமல்லவா, அதுதான் நீங்கள் கண்ணயர்ந்து விட்டீங்க, நானும் உங்களை ‘டிஸ்ரேப்’ பண்ணவில்லை.’ என்றார்.

‘நேரம் போனதே தெரியவில்லை.’ என்றபடி கைப்பையைத் தேடி எடுத்துக் கொண்டு அவசரமாக வெளியேறினேன்.

அன்று என்ன நடந்திருக்கும் என்பது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது. நான் ஏன் கண்ணயர்ந்தேன்? எனக்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள முடியாத போது, இலக்கியம் என்றாலே என்ன என்று புரியாத, புரிந்துணர்வே இல்லாத என் கணவனிடம் இதை எப்படி எடுத்துச் சொல்வது. 

யாரைத்தான் நம்புவது என்று தெரியாத ஒரு குழப்பமான சூழ்நிலைக்குள் என்னை நானே அகப்படுத்திக் கொண்டு தவித்தேன். குடும்ப வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டுவிடலாம் என்ற பயத்தில் எனக்குள் ஏற்பட்ட சந்தேகம் பற்றியோ, அல்லது அங்கு சென்றது பற்றியோ எதுவும் பேசாது மௌனம் காத்தேன்.

உடம்பெல்லாம் கரப்பான் பூச்சி ஊர்வது போன்ற உணர்வில் அடிவயிற்றில் இருந்து குமட்டிக் கொண்டு வந்தது. வாந்தி வருவது போன்ற உணர்வு ஏற்படவே எழுந்து ‘வாஷ்றூம்’ நோக்கி ஓடினேன். எனக்கென்னாச்சு, ஓங்காளித்த போதுதான் திக்கென்றது, டாக்டரிடம் கூடப் போகாமல், இத்தனை நாட்கள் மௌனமாய்க் கழிந்ததை நான் ஏன் கவனிக்காமல் போனேன்?


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper