Story - ரிலிக்கும் ஒரு கொலையாளியா?

 


ரிலிக்கும் ஒரு கொலையாளியா?

(குரு அரவிந்தன்)

ரிலிக்கும் (Tilikum) என்ற பெயரைப் பார்த்ததும் எந்த நாட்டவர் என்று நீங்கள் யோசிக்கலாம். கொலைகாரன் என்ற தீராப்பழியைச் சுமந்து கொண்டுதான் ரிலிக்கும் தனது இறுதி மூச்சை விடவேண்டி வந்தது. 36 வயதான ரிலிக்கும் மீது ஒன்றல்ல, இரண்டல்ல மூன்று கொலைகளுக்காகக் குற்றம் சாட்டியிருந்தார்கள். 

ஒரு வெறிபிடித்த மிருகம் போல ரிலிக்கும் நடந்து கொண்டதாகக் கண்ணால் பார்த்த பலர் குற்றம் சாட்டியிருந்தனர். ஆனால் உண்மையில் நடந்ததென்ன, இதற்கெல்லாம் ‘தண்ணி’ தான் காரணம் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஆனால் உண்மை அதுதான்!

யார் இந்த ரிலிக்கும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம், அது வேறுயாருமல்ல ‘ரில்லி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு திமிங்கிலம்தான் இந்த ரிலிக்கும். 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிளாக்பிஷ்’ படத்தில் நடித்ததால் பலராலும் அறியப்பட்ட திமிங்கிலமாக இருந்தது அது. 

ரிலிக்கும்மின் இனத்தை ‘கில்லவேல்’ என்று ஆங்கிலத்தில் அழைப்பர். ஐஸ்லாந்து பகுதியில் உள்ள கடலில் தன் குடும்பத்துடன் சந்தோஷமாக நீந்தி விளையாடிக் கொண்டிருந்த மூன்றே வயதான ரில்லியை ஒரு நாள் வலை போட்டு பிடித்துக் கொண்டு வந்தார்கள் மானிடர்கள். 

இத்தகைய திமிங்கிலங்களை நல்ல விலைக்கு விற்க முடியும் என்பதால் சிறிய சீமெந்து தொட்டியில் விட்டு வளர்த்தார்கள். ஆழ்கடலில் நீந்தி விளையாடிய ரில்லியின் நடமாட்டம் ஒடுங்கிய தொட்டிக்குள் அந்தக் கணமே அடங்கிப் போனது. சுதந்திரமாக ஆழ்கடலில் நீந்தி விளையாடிய ரிலிக்கும் அதனால் மனதளவில் பாதிக்கப்பட்டது.

தனது குடும்பத்தைப் பிரிந்தது மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான மைல்கள் நீந்தி விளையாடிய அதன் சுதந்திரமும் திடீரென மானிடர்களால் பறிக்கப் பட்டதால் ரில்லி மனதளவில் பாதிப்புக்குள்ளானது. 

நீருயிர்வளர்ப்பகத்தில் இருந்த ரில்லியைக் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் சீலான்ட் நிறுவனத்தினர் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு விலை கொடுத்து வாங்கினார்கள். 100 அடி நீளமும், 50 அடி அகலமும், 35 அடி ஆழமும் கொண்ட தண்ணித் தொட்டிக்குள் ரிலிக்கும் விடப்பட்டது. 

அதற்குப் பயிற்சி கொடுத்துத் தினமும் வருகைதரும் பார்வையாளர்களுக்காக ஒவ்வொரு மணித்தியாலமும் அதனிடம் வேலை வாங்கினார்கள். ஆழ்கடலில் சுதந்திரமாய் மூழ்கி எழுந்த ரிலிக்கும் என்ற அந்தத் திமிங்கிலம் ஒரு அடிமைத் தொழிலாளியாக அங்குதான் மாற்றப்பட்டது.

தனது சுதந்திரம் பறிக்கப்பட்டதால், ரிலிக்கும் தனது விரக்தியை வெளிக்காட்ட தொட்டியின் நடுவே போடப்பட்டிருந்த இரும்புக் கதவைக்கூட பற்களால் கடித்துப் பலமுறை நெளித்தது. தண்ணீர்த் தொட்டியின் விளிம்பில் இருந்த சீமெந்து துண்டுகளை பற்களால் கடித்து உடைத்தது. 

இதனால் அதன் அனேகமான பற்கள் உடைந்த போயின. வாய் பேசமுடியாத அந்த ஜீவனின் மனக்குமுறலை வெளிக்காட்டக் கூடிய எதிர்பாராத சம்பவம் ஒன்று அப்போதுதான் நடந்தது. 

அதாவது 1991 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி ரிலிக்கும்மின் தண்ணித் தொட்டிக்குள் கெல்ரிபைனி (Keltie Byrne) என்ற பயிற்சி மாணவியின் உடல் மிதந்த போதுதான் எல்லோரும் விழி;த்துக் கொண்டார்கள். பயிற்சி மாணவி தவறுதலாக தொட்டியில் விழுந்த போது ரிலிக்கும் அந்தப் பெண்ணைத் தண்ணீருக்கு அடியில் மேலும் கீழும் இழுத்துச் சென்றதாகத் தெரிகின்றது. 

தனக்கு விளையாடுவதற்கு ஒரு பொருள் கிடைத்திருப்பதாக ரிலிக்கும் நினைத்திருக்கலாம் அல்லது தண்ணீருக்குள் மூழ்கினால் மனிதன் மூச்சுத் திணறுவான் என்பது ரிலிக்கும்மிற்குத் தெரியாமற் போயிருக்கலாம். 

எப்படியோ 21 வயதான அந்தப் பயிற்சிப் பெண்ணின் மரணத்திற்கான காரணம் ரிலிக்கும்தான் என்று பேசப்பட்டது. முதலாவது கொலைப் பழி 12,000 இறாத்தல் நிறையும், 22 அடி நீளமுமான ரிலிக்கும் மீது அப்போதுதான் சுமத்தப்பட்டது. தன் மீது பழி சுமத்தப்பட்டதுகூடத் தெரியாத ரிலிக்கும் தினந்தினம் அங்கு வரும் பார்வையாளர்களைத் தண்ணீரில் மூழ்கி எழுந்து மகிழ்வித்துக் கொண்டிருந்தது.

ரிலிக்கும் மீது சுமத்தப்பட்ட பழி காரணமாக சீலான்ட் நிறுவனத்தினர் அதை விற்பனை செய்ய முயன்றபோது, அமெரிக்காவின் ஒலாண்டாவில் உள்ள சீவேள்ட் நிறுவனத்தினர் அதை விலை கொடுத்து வாங்க முன் வந்தனர். 

நன்றாகப் பயிற்சி பெற்ற ரிலிக்கும் பார்வையாளர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்த போது மீண்டும் சோதனை ஏற்பட்டது. 1999 ஆம் ஆண்டு 27 வயது நிறைந்த பார்வையாளர் ஒருவர் எவருக்கும் தெரியாமல் அங்கே மறைந்திருந்துவிட்டு இரவு நேரம் தனிமையில் இருந்த ரிலிக்கும்மின் தொட்டிக்குள் குதித்து நீந்தியிருக்கின்றார். மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், காலையில் அவர் பிணமாக மிதந்த போதுதான் என்ன நடந்தது என்பதை நிர்வாகிகள் அறிந்து கொண்டார்கள். 

தானாகவே சென்று தொட்டிக்குள் குதித்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட 27 வயதான டானியல் டுயூக்ஸின் (Daniel Dukes)  கொலைப் பழியும் ரிலிக்கும் மீதே சுமத்தப்பட்டது.

ஒலாண்டா சென்றபோது, அங்கேதான் முதன் முதலாக ரிலிக்கும்மை சீவேள்டில் அருகே சென்று பார்க்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. பார்வையாளர் மண்டபத்தில் சிறுவர் சிறுமிகள் எல்லாம் பாய்ந்து விழுந்து தண்ணீர்த் தொட்டிக்கு அருகே இடம் பிடித்த போதுதான் அவர்கள் எவ்வளவு தூரம் ரிலிக்கும்மை விரும்புகிறார்கள் என்பது புரிந்தது. 

அவர்களுடன் சேர்ந்து நானும் வேடிக்கை பார்த்தேன். ஒரு கட்டத்தில் ரிலிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் மூன்று தடவைகள் வட்டமடித்து வந்தது, மறுகணம் சிறுவர் கூட்டத்திற்கு அருகே சென்று மறுபக்கம் திரும்பித் தனது துடுப்பால் தண்ணீரில் பலமாக ஓங்கி அடிக்கவே, குற்றாலத்தில் குளித்தது போல சிறுவர் சிறுமிகள் தண்ணீரில் தோய்ந்து போயிருந்தனர். 

இதற்காகவே காத்திருந்த சிறுவர் கூட்டம் ‘வன்ஸ்மோர்’ என்று கூக்குரலிடவே திரும்பவும் சுற்றி வந்த ரிலிக்கும் ஒரு போடு போட்டது. ஒவ்வொரு காட்சியிலும் இப்படி வேடிக்கை நடப்பதால், டவலோடு தயாராக நின்ற பெற்றோர்கள் ஓடிச் சென்று பிள்ளைகளைத் துவட்டி விட்டனர். 

இதுபோன்ற பல வேடிக்கைகளைக் காட்டி ரிலிக்கும் தினமும் பலரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தது. இதுவரை கோடிக்கணக்கான மக்கள் ரிலிக்கும்மின் வேடிக்கைகளை பார்த்து ரசித்திருக்கின்றார்கள். ஆனாலும் சுதந்திரமாகத் திரிந்த ரிலிக்கும்மைச் சிறியதொரு தொட்டியில் அடைத்து வைத்திருந்தது மனதுக்குத் தீராத வேதனையைத் தந்தது.

ரிலிக்கும்மின் வாழ்க்கையில் இன்னுமொரு சோதனை ஏற்பட்டது. பார்வையாளர்களுக்காக நிகழ்ச்சியைச் செய்து கொண்டிருந்த ரிலிகும் மனதில் திடீரென விரக்தி ஏற்பட்டது. ரிலிக்கும் வேடிக்கை நிகழ்ச்சியைச் செய்யும்போது தினமும் ஒருகட்டத்தில் கரையில் நிற்கும் தனது பயிற்சியாளருக்கு அருகே வந்து எட்டி முத்தம் கொடுக்கும். 

அன்று ஏதோ ஒரு காரணத்தால் அப்படி எட்டி முத்தம் கொடுக்கும்போது 40 வயது பயிற்சியாளரான டோன் பிறஞ்சியுவாவின் (Dawn Brancheau) பின்னிக் கட்டியிருந்த கூந்தல் அதன் வாயில் சிக்கிக் கொண்டது. அதனால் தண்ணீருக்குள் ரிலிக்கொம் மூழ்கியபோது பயிற்ச்சியாளரும் அதனுடன் சேர்ந்து மூழ்க வேண்டிவந்தது. இதையறியாத ரிலிக்கும் பலதடவை இப்படித் தண்ணீரில் மூழ்கி எழுந்ததால் பயிற்ச்சியாளர் மூச்சுத் திணறி மரணிக்க நேர்ந்தது. 

2010 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி நடந்த இந்த மரணத்திற்கும் காரணம் ரிலிக்கும்தான் என்று குற்றம் சாட்டப்பட்டதால், சில மாதங்களுக்கு ரிலிகும் தனிமைப் படுத்தப்பட்டது. ஆக மொத்தமாக முப்பது வருடங்களுக்குள் நடந்த மூன்று மரணங்களுக்கு ரிலிக்குமதான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டதால் அதற்குத் தண்டனையாக மிகச் சிறிய தொட்டிக்குள் ரிலிக்கும் அடைக்கப்பட்டது. 

மீண்டும் 2011 ஆம் ஆண்டு பயிற்சியில் ஈடுபட்ட ரிலிக்கும்மின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் 2017 ஆம் ஆண்டு ஜனவரிமாதம் 6 ஆம் திகதி தனது 36வது வயதில் எம்மைவிட்டுப் பிரிந்தது. 

2013 ஆம் ஆண்டு சன்டான்ஸ் திரைப்பட விழவில் ரிலிகும்மின் பரிதாப நிலை பற்றிய விவரணப்படம் வெளிவந்த பின்புதான் பலர் ரிலிக்கும் எப்படியான சூழலில் வாழ்ந்தது என்பதையும், அதனால் ஏற்பட்ட விரக்தியுமே இதற்குக் காரணம் என்பதையும் புரிந்து கொண்டனர். சுமார் 25 வருடங்கள் வரை சீவேள்டில் வாழ்ந்த ரிலிக்கும்மின் இழப்பைப்பற்றிக் குறிப்பிடும் போது, ‘ரிலிக்கும்மிற்கு அதன் வேதனைகளில் இருந்து விடுதலை கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி’ என்று பிரபல திரைப்பட நடிகை கேற் மாறா (Kate Mara) குறிப்பிட்டிருந்தார். 

இவரைப் போல பல பிரபலங்கள் தங்கள் கருத்தைத் தெரிவித்திருந்தனர். சுதந்திரமாகத் திரிய வேண்டிய விலங்குகள், பறவை இனங்களை அடைத்து வைப்பது மட்டுமல்ல அவற்றின் மீது பழி சுமத்துவதும் ஆறறிவு படைத்த மனிதனின் குணமாகி விட்டது. 

விலங்குகளுக்குப் பேசத் தெரியாதே தவிர, அவைகளால் புரிந்து கொள்ள முடியும் என்பது பலருக்குப் புரிவதில்லை. 

கடந்த 33 வருடங்களாக மானிடர்களை மகிழ்விப்பதற்காகவே தனது வாழ்நாளைத் தண்ணீர்த் தொட்டிக்குள் செலவிட்ட ரிலிக்கும் எல்லோர் மனதிலும் காலமெல்லாம் இடம் பிடித்திருக்கும். 



Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper