Story -- மூன்றாவது பெண்..!

 





மூன்றாவது பெண்..!


குரு அரவிந்தன்


அந்தச் சிறுமி சட்டென்று எனது கவனத்தைத் தன் பக்கம் திருப்பினாள், காரணம் அவளது அந்தக் குரலில் பாசம் இழையோடியிருந்தது.

மூத்த மகளாக இருக்க வேண்டும் இவர்களைவிடச் சற்றுப் பெரியவளாகத் தெரிந்தாள். ஒன்பது அல்லது பத்து வயதிருக்கலாம். ‘டாட் எனக்கு ஒரு ஸ்சுமூதி’ என்று இங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

அந்தச் சிறுமியின் குரலில் இருந்த கவர்ச்சி போலவே அவளிலும் அப்படி ஒரு கவர்ச்சி இருந்தது. நன்றாக உடை அணிந்து அழகாக இருந்தாள்.

அந்தக் குடும்பத்தினர் எனக்கு அருகே இருந்த மேசையில் தான் சுற்றிவர அமர்ந்திருந்தார்கள். தாய் தகப்பன் மூன்று பிள்ளைகள்.  

தகப்பன் பிள்ளைகளிடம் ‘என்ன சாப்பிடப் போறீங்க..?’ என்று அவர்களது விருப்பத்தைக் கேட்டார். 

அவர்கள் ஆளுக்கொரு உணவைக் குறிப்பிட, பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார். யாருக்கு என்ன தோவை என்பது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டபின், மனைவியின் விருப்பத்தையும் அறிந்து, அவர்களுக்கு உணவு எடுப்பதற்காக ‘மக்டொனால்ட்’ வரிசையில் சென்று நின்றார். 

வரிசையில் நின்று உணவைப் பெற்றுக் கொண்ட தந்தை அவர்களுக்கான உணவைக் கொண்டு வந்து மேசையில் வைத்தார். தாயார் அவற்றை எடுத்த அவரவர் விருப்பப்படி உணவைப் பங்கிட்டுக் கொடுத்தார். மூத்த மகள் ‘தாங்ஸ் டாட்’ என்று சொல்ல, அவர் அவளை அணைத்து முத்தம் கொடுத்தார். 

எப்பொழுதுமே மூத்த மகள் தகப்பனின் செல்லப் பிள்ளையாக இருப்பது வழக்கம் என்பதால் அதை நினைத்து நான் மனதுக்குள் சிரித்தேன். ஊரிலே இதெல்லாம் சகஜம், ஆனால் புலம்பெயர்ந்த இந்த நாட்டில் பொது இடத்தில் இப்படிச் செய்தால் என்ன நடக்கும் என்பதையும் நானறிவேன்.

எனது நண்பர் ஒருவரின் மகள் பாடசாலையில் நல்ல பெறுபேறு எடுத்து சித்தியடைந்திருந்தாள். தனது தேர்ச்சி அறிக்கையை தந்தையிடம் காட்டிய போது அவர் மகிழ்ச்சி பொங்க மகளைப் பாசத்தோடு அணைத்து ‘இன்னும் நன்றாய் படிக்கணும்’ என்று சொல்லி ஒரு முத்தம் ஒன்று கொடுத்திருந்தார். 

மறுநாள் தோழிகள் பாடசாலையில் சந்தித்த போது ஒவ்வொரு பெண்ணும் தங்களுக்குப் பெற்றோரிடம் இருந்து என்ன பரிசு கிடைத்தது என்று பீற்றிக் கொண்டார்கள். இவளைக் கேட்ட போது, அப்பா சந்தோஷத்தில் அணைத்து முத்தம் தந்தார் என்றாள் அவள் சாதாரணமாக. 

‘முத்தமா?’ 

எல்லோரும் அவளை ஆச்சரியத்தோடு பார்க்க அவள் பெருமையோடு தலையைக் குனிந்து கொண்டாள். 

எங்கே, எப்போ, எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக்கூடாது என்பதைக்கூட அவள் அப்போது தெரிந்து வைத்திருக்கவில்லை.

இந்த நாட்டுச் சட்ட திட்டங்கள் புலம் பெயர்ந்த அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் தெரிந்திருக்கவில்லை.

எப்படியோ இந்தச் செய்தி வகுப்பு ஆசிரியையிடம் சென்றடைந்தது. இப்படி ஒரு செய்தியைக் கேள்விப்பட்டபின் சிறுவர் பாதுகாப்புச் சட்டப்படி ஆசிரியை மௌனம் காக்க முடியாது. எனவே அதிபரிடம் அவர் சென்று முறையிட்டார். அதிபரிடம் இருந்து தகவல் உயர் மட்டத்திற்குச் சென்றது. அன்று சற்று நேரம் கழித்து தந்தையின் லேலைத் தளத்திற்குச் சென்ற  பொலிஸார் அவரிடம் இதுபற்றி விசாரனை செய்தனர். 

ஒரு சின்ன விடையம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள், அனால் அது சிறுவர் பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகையால் இவ்வளவும் நடந்து முடிந்தது மட்டுமல்ல அந்தப் பெண்ணும் தந்தையிடம் இருந்து தனிமைப் படுத்தப்பட்டார். மேலைத் தேசத்து சட்ட திட்டங்கள் காரணமாக, அந்தக் குடும்பமே உடைந்து போய்விட்டது.

உண்மைதான், அனேகமான குடும்பத்தில் மூத்த மகள் மீது தகப்பனுக்குப் பாசம் இருப்பது பொதுவான அனுபவத்தில் தெரிந்ததே! பாசத்தைக் கொட்டுவதற்கு மகனைவிட மகள்தான் எப்பொழுதும் முதலில் நிற்பதும் தெரிந்ததுதானே. 

அருகே உட்கார்ந்திருந்த அந்தக் குடும்பத்தினர் சந்தோஷமாக உணவருந்தினார்கள். தகப்பன் யாருடனோ செல்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். உணவருந்தி முடிந்ததும், மிகுதி எல்லாவற்றையும் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு அங்கிருந்து எல்லோரும் கிளம்பினார்கள்.

வெளியே உள்ள வண்டிகளின்; தரிப்பிடத்திற்குச் சென்றார்கள். நானும் உணவருந்தி முடித்து விட்டதால், வெற்றுப் பெட்டிகளை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு அங்கே நின்ற எனது வண்டியை நோக்கி நடந்தேன். 

கறுப்பு நிறத்திலான பிஎம்டபிள்யூ வண்டி ஒன்று அவர்களுக்கு அருகே வந்து நின்றது.

‘டாட் பாய்..!’ என்று சொல்லிக் கையை அசைத்துக் காட்டி விட்டு அந்தச் சிறுமி அருகே வந்து நின்ற அந்தக் காரில் ஏறி அமர்ந்தாள். அந்த வண்டி என்னைக் கடந்து சென்ற போது, இதுவரை இருந்த புன்னகை மறைந்து, அவளது முகம் வாடிப்போயிருப்பதை அவதானித்தேன். 

எனக்கு என்ன நடக்கிறது என்று ஒரு கணம் புரியவில்லை. தரிப்பிடத்தில் எனது வண்டிக்கு அருகே அவர்களது வண்டியும் நின்றதால், அருகே முன் கதவைப் பிடித்தபடி நின்ற அந்தத் தாயைப் பார்த்து புன்னகை உதிர்த்தேன். அவரும் சினேகிதமாகப் பதிலுக்குப் புன்னகைத்தார். 

கேட்பதா விடுவதா என்று ஒரு கணம் யோசித்தேன். முதலில் தயங்கினாலும் ஆர்வம் காரணமாகத் தாயிடம் கேட்டேன்.

‘எங்கே அவா போகிறா, அவுட்டிங்கா?’ என்று கேட்டேன்.

‘இல்லை, இப்போ அவளை அழைத்துச் செல்வது அவளுடைய ஸ்டெப்பாதர். இன்னிக்கு அப்பாவும் மகளும் மாசத்தில் ஒருக்கால் சந்திக்கிற தினம். அதுதான் எங்க கூட வந்தாள்’ என்றாள் அந்தத் தாய்.

‘அப்படியா?’ என்றேன்.

‘அதனாலதான் காலையிலே கூட்டிக் கொண்டு வந்து விட்டாங்க, இங்கே சாப்பிட வந்தோம். இப்ப நேரம் முடிஞ்சு போச்சு, அதுதான் வந்து கூட்டிட்டுப் போறாங்க..!’

‘போ அந்தப் பெண்ணு..?’

‘அதுவா.. அது இவருடைய மூத்த பெண்ணு..! இது என்னுடைய மூத்த பெண்ணு..!!’ என்று சொல்லிக் கொண்டே அருகே நின்ற தன் மகளுக்கு உச்சி முகர்ந்தாள் அந்தத் தாய்!

சற்றுத் தள்ளி நின்ற அந்த மூன்றாவது சிறிய பெண்ணை யார் என்று கேட்க எனக்குத் தோன்றவில்லை, மனசு தாங்காது!


Comments

Popular posts from this blog

Kankesanturai- Malini Aravinthan - Nov 2025

இரவில் தெரியும் சூரியன்