Story- பனிவிழும் கடலோரம்..!
பனிவிழும் கடலோரம்..!
( Courtesy- நந்தவனம் - சென்னை)
(குரு அரவிந்தன்)
நீலத் திமிங்கிலத்தின் எலும்புக்கூட்டைப் பார்ப்பதற்காகவே உல்லாசப் பயணிகள், பாடசாலைப் பிள்ளைகள் என்று பலர் அந்தக் கிராமத்திற்கு வந்து போய்கொண்டிருந்தனர். உணவு விடுதியின் யன்னலோரமாய் நின்று வெளியே பார்த்தாள் மேர்லின். திமிங்கிலத்தின் எழும்புக்கூட்டைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைக் கண்டதும் மேர்லினின் கண்கள் பனித்தன. இந்தக் கிராமத்திற்கு இத்தனை பேரையும் வலிந்திழுக்கும் இந்த எலும்புக்கூட்டிற்காக அவள் கொடுத்த விலையின் பெறுமதி என்னவென்று இவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை!
‘கிட்டப் போய்ப் பார்க்க முடியல்லை’ என்றபடி கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்த வாடிக்கையாளர் முகத்தைச் சுளித்தபோதே மேர்லின் புரிந்து கொண்டாள்.
‘ஏன், என்னாச்சு?’ சந்தேகத்தோடு கேட்டாள்.
மேர்லின் பயந்தது போலவே பிரச்சனை ஆரம்பமாகிறது என்பதை அவரது வார்த்தைகள் அவளுக்கு எச்சரிக்கை செய்தன.
எப்படியாவது யாராவது வருவார்களா என்ற ஆவலோடு மேர்லின் காத்திருந்த போதுதான் அந்த வாடிக்கையாளர் உள்ளே வந்தார். உல்லாசப் பயணிகளின் உல்லாசபுரியாக இருந்த அந்தக் கிராமத்தின் கடற்காற்று இந்தப் பக்கம் மாறி வீசத் தொடங்கினால் வியாபாரம் படுத்து விடும் என்பதை நினைக்கவே அவளது மனசு சஞ்சலப்பட்டது.
நியூபவுண்லாந்தில் உள்ள கடற்தொழில் கிராமமான றூட்றிவர் கிராமத்தின் கடலோரத்தில் தான் அவளது உணவு விடுதி இருந்தது. விடுதியின் உள்ளே யன்னலோரத்தில்; நின்ற அவளின் பார்வை எதிரே இருந்த கடற்கரையில் நின்ற கூட்டத்தின் மீது பதிந்திருந்தது.
உற்றுப் பார்த்தபோது ஒரு சிலர் மூக்கைக் கைகளால் மூடியபடி நிற்பதை அவதானித்தாள். என்னவாய் இருக்கும்? ஒருவேளை துர்நாற்றம் வீசத் தொடங்கி விட்டதோ? நிலைமை மோசமானால் வாடிக்கையாளர்கள் இனி இங்கே உணவருந்த வராமலே போய் விடுவார்களோ? கட்டுப்படுத்த முடியாமல் அவளது சிந்தனை சிதறி ஓடியது.
கடல் உணவுக்குப் பெயர்பெற்ற அந்தக் கடலோர உணவு விடுதியின் சொந்தக்காரி என்ற பெருமை அவளுக்கு நிறையவே உண்டு. மாலை நேரத்தில் களைகட்டிவிடும் அந்த உணவு விடுதியில் இரவு பன்னிரண்டு ஒருமணிவரை பாட்டும் கூத்துமாக இருக்கும். இவளுடைய மூதாதையர் 1800 களில் இந்தக் கிராமத்திற்கு வந்து குடியேறியிருந்தனர்.
உண்மையிலே அவளுடைய தகப்பன் பார்சன் தான் இந்த உணவு விடுதியை ஆரம்பித்து வைத்துச் சுமாரான வருமானத்துடன் நடத்திக் கொண்டிருந்தார். அவளுக்கு அப்போது இருபது வயதிருக்கும் ஒருநாள் அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு அவளைத் தனியே தவிக்க விட்டுத் திடீரென இறந்து விட்டார். அந்த எதிர்பாராத சோக சம்பவத்தைத் தொடர்ந்து சிறிது நாட்கள் உணவு விடுதி பூட்டிய படியே கிடந்தது. சுற்று வட்டாரத்தில் வேறு நல்ல உணவு விடுதிகளும் இருக்கவில்லை. அதனால் உல்லாசப் பயணிகள் மட்டுமல்ல உள்ளுர் வாசிகளும் பாதிப்படைந்தனர்.
‘எத்தனை நாளைக்குத்தான் இப்படியே அழுதுகொண்டு இருப்பாய், அப்பா செய்த தொழிலை நீ ஏன் எடுத்து நடத்தக் கூடாது?’ இவளது சினேகிதி ஆலோசனை சொன்ன போது, மேர்லின் சிந்தித்தாள்.
தொடக்கத்தில் விருப்பமே இல்லாமல் பிழைப்புக்காகத்தான் அதில் ஈடுபட்டாள். ஆனால் அதுவே அவளது எதிர்காலத்தை நிர்ணயிப்பதாக இருந்தபோது முழு மூச்சோடு தனது கவனத்தை அந்த உணவு விடுதியில் செலுத்தத் தொடங்கினாள்.
அவளிடம் இளமைத் துடிப்புடன் அபரிதமான அழகும் குடியிருந்ததால் அதுவே அவளது வியாபாரத்திற்கும் அழகு சேர்த்தது. முக்கியமாக அவளது சிரித்த முகமும் நீலக் கண்களும் அங்கே வரும் வாடிக்கையாளர் பலரையும் பரவசப் படுத்தியதென்னவோ உண்மைதான்.
அவளும் தனது கடின உழைப்பால் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கினாள். சுடச்சுடப் பரிமாறப்படும் பிஷ் அன்ட் சிப்ஸ், லொப்ஸர் தேமிடோர் போன்ற சமைத்த உணவு வகைகள் அந்த விடுதியின் வாடிக்கையாளர்களால் விரும்பி உண்ணப்படும் விசேட உணவுகளாக இருந்தன.
அலட்சியமான நடையிலும், பம்பரம்போல் சுழன்று சுழன்று அவள் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதிலும், பேசுவதிலும் ஒருவித கவர்ச்சி அவளிடம் இருந்தது. உணவுக்காக மட்டுமல்ல, இரவு நேர ஆட்டம் பாட்டத்திற்காகவும், அங்கே வாசிக்கும் இசைக் குழுவின் இசைக்காகவும் வாடிக்கையாளர்கள் அதிகமாக அங்கே வந்து சேரத் தொடங்கினர்.
அவ்வப்போது நடக்கும் அனிட்ரா, ஜெவ் போன்றவர்களின் இசைமழையில் நனைவதற்கென்றே ஒரு கூட்டம் வந்து சேரும். பொதுவாகவே களியாட்டத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக அந்த நகரத்தைச் சூழ்ந்த மக்கள் இருந்தனர்.
கடந்த மூன்று நாட்களாக உணவு விடுதிக்கு வருமானம் அமோகமாக இருந்தது. அவள் மட்டுமல்ல, யாருமே இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. காரணம் மூன்று நாட்களின் முன்தான் நீலத் திமிங்கிலம் ஒன்று அவளது உணவு விடுதிக்குச் சற்றுத் தூரத்தில் கரை ஒதுங்கியிருப்பதாக ஒரு செய்தி ஊரெல்லாம் பரவியிருந்தது.
அந்த ஊர்க் கிழவன் நிக்கலஸ் தான் முதலில் அதைக் கண்டிருந்தான். அவனுக்குக் குடும்பம் என்று எதுவும் கிடையாது. தினமும் விடுதியில் தொட்டாட்டு வேலை செய்வதும், கிடைக்கும் பணத்தில் இரவில் ஒன்றோ இரண்டு பெக் அடித்துவிட்டு ஓரமாய் படுத்துத் தூங்குவதும் அவனது நாளாந்த வேலையாக இருந்தது.
காலையில் எழுந்து கடற்கரைப் பக்கம் சென்றவனின் கண்ணில் அது பட்டது. இரவு தாமதித்துப் படுக்கைக்குச் சென்றதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மேர்லினை, கதவைத் தட்டி வலுக்கட்டாயமாக எழுப்பி அவளிடம் அந்தச் செய்தியை முதலில் சொன்னதும் அவன்தான். அறையைவிட்டு வெளியே வந்த அவள் தூக்கக் கலக்கத்தோடு இரவு ஆடையோடு இருந்ததால் கிழவன் தன் பார்வையைத் தணித்துக் கொண்டான்.
அவளோ எதையும் கண்டு கொள்ளாமல், மேலே குளிர் ஜாக்கட் ஒன்றைப் போட்டுக் கொண்டு அப்படி என்ன அதிசயம் என்ற ஆவலோடு கடற்கரை நோக்கி நடந்தாள். ஏற்கனவே பத்துப் பன்னிரண்டு பேர் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இது அந்த நீலத் திமிங்கிலங்களில் ஒன்றா என்ற சந்தேகம் அவளுக்கு எழுந்தது. இந்த உணவு விடுதிக்கு முன்னால் உள்ள ஆழ்கடலில் அவை துள்ளி விளையாடுவதைப் பார்ப்பதற்கு என்று வந்த உல்லாசப் பயணிகள் பலர் இவளது விடுதியில் உட்கார்ந்து ஏதாவது சாப்பிட்ட வண்ணம் அதைப்பற்றிப் பெருமையாகச் சொன்ன போதெல்லாம் அவளும் சேர்ந்து ரசித்திருக்கின்றாள். இங்குள்ள சிறிய இறங்கு துறையில் இருந்துதான் உல்லாசப் பயணிகள் படகில் ஆழ்கடலுக்குச் சென்று திமிங்கிலங்களைப் பார்த்து இரசிப்பது வழக்கம். ஆனாலும் ஆழ்கடலுக்குச் சென்று அந்தத் திமிங்கிலங்களைப் பார்க்க ஒருபோதும் அவளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
அவர்கள் கொண்டு வந்து காட்டும் படங்களைப் பார்த்துத் திருப்திப்பட்ட அவள், தானுண்டு தன் தொழில் உண்டு என்று இருந்தாளே தவிர இதைப்பற்றிச் சிறிதும் சிந்தித்துப் பார்க்கவில்லை. வீச்சுறால், கேப்பிலின் போன்ற கடல் வாழ் உயிரினங்களுக்கும் இந்தக் கடலோரக் கிராமம் பெயர்பெற்றதால் வெளியிடங்களில் இருந்து பலரும் வருவதுண்டு.
இப்போது நீலத்திமிங்கிலத்தை நேரே பார்த்த போது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. ‘மைகோட், என்னாலே நம்பவேமுடியலை, எந்தப் பெரிய மிருகம்...!’ அவள் கைகளை அகல விரித்து தனக்குள் ஆச்சரியப்பட்டாள். சுமார் எழுபதடிக்கு மேல் நீளமிருக்கலாம், அலைகளின் தாலாட்டில் மூழ்குவது போல அதன் வேகத்திற் கேற்ப நீரிலே அதன் உடல் உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடிக் கொண்டிருந்தது. ஒரு பலூனைப்போல உடம்பு ஊதிப் பருத்திருந்தது.
இது போன்ற நீலத்திமிங்கிலங்கள், டொல்பின்கள் சில சமீபகாலமாக இறந்து போன நிலையில் வெவ் வேறு இடங்களில் கரை ஒதுங்கியிருந்தன. றொக்கிஹாபர் பகுதியிலும் ஒரு திமிங்கிலம் ஒதுங்கியிருப்பதாக உள்ளுர் வாசிகள் பேசிக்கொண்டார்கள். பெரிய பனிப்பாறைகளுக்குள் சிக்குண்டு பனிபாறைகளால் நெரியுண்டு இறந்திருக்கலாம் என்ற ஊகம் இருந்தது. இது எல்லாம் இவர்களுக்கு வெறும் செய்தியாகவே இதுவரை இருந்தது, ஆனால் இன்று நிஜமாகவே அவர்களின் கடற்கரையில் நீலத் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கிய போது அவர்களால் நம்பமுடியாமல் இருந்தது.
அவள் சற்றும் எதிர்பார்க்காமல் பகல் நேரத்திலேயே விடுதியின் முன்னால் கூட்டம் கூடத் தொடங்கி விட்டது. வந்தவர்கள் எல்லோரும் குளிருடுப்பு அணிந்திருந்தாலும் அவ்வப்போது விடுதியின் உள்ளே சென்று ஏதாவது சுடச்சுட அருந்தி விட்டுத் தங்களை ஆசவாசப்படுத்திக் கொண்டிருந்தனர். உல்லாசப் பயணிகள், பத்திரிகை, தொலைக்காட்சிக் காரர்கள் என்று கூட்டம் பெருகத் தொடங்கியது. டியர்லேக் விமான நிலையத்திலிருந்து நெடுஞ்சாலை 431 வழியாக இது போன்ற பலர் அங்கே வந்துகூடத் தொடங்கினர்.
இப்படி எப்போதாவது வியாபாரம் களைகட்டினால் நிக்கலஸ் கிழவனுக்கு அவ்வப்போது எக்ஸ்ரா ஏதாவது கிடைப்பது வழக்கம். கரை ஒதுங்கிய திமிங்கிலத்தைப் பார்ப்பதற்காக அக்கம் பக்கத்து நகரங்களில் இருந்து கூட்டம் சேருவதைக் கண்ட கிழவனுக்கு திடீரென ஒரு யோசனை தோன்றியது. அதனாலே ‘இங்கே இலவசமாக வண்டியை நிறுத்தலாம்’ என்று பெரிதாக எழுதி ஒரு அட்டையையைத் தெரு முனையில் தொங்க விட்டிருந்தான். அட்டையின் கீழே ஒரு அம்புக்குறி போட்டு இந்த உணவு விடுதிப் பக்கம் காட்டியிருந்தான்.
நகரப் பகுதிகளில் இருந்து வந்தவர்களுக்கு எங்கே வண்டியை நிறுத்துவது என்பதில் சந்தேகம் இருந்ததால் உணவு விடுதிக்கு முன்னால் இருந்த இலவச வண்டித் தரிப்பிடத்திலேயே வண்டியை நிறுத்தினர். அதனால் உணவு விடுதியின் வருமானம் அதிகரித்ததில் நிக்கலஸ் கிழவனுக்குப் பெரிய சந்தோஷம். ‘எப்படி நம்ம ஐடியா?’ என்று அடிக்கடி மேர்லினுக்குச் சொல்லி நினைவு படுத்திக் கொண்டிருந்தான்.
நீலத் திமிங்கிலம் இறந்து போனதில் அந்தக் கிராமத்து மக்களுக்கு வேதனையாகத்தான் இருந்தது. இவ்வளவு காலமும் எந்த ஒரு பலனும் எதிர்பாராமல் கடலில் சர்க்கஸ் வித்தைகள் காட்டிப் பல உல்லாசப் பயணிகளை மகிழ்வித்திருந்தது. இந்தத் திமிங்கிலத்தை ஆழ்கடலில் சென்று பார்ப்பதற்காக அங்கு வந்து சென்ற உல்லாசப் பயணிகளால் அந்தக் கிராமத்து மக்களுக்கு இதுவரை காலமும் நிறையப் பலனும் கிடைத்திருந்தது.
ஏதோ ஒரு விதத்தில் சிறு தொழில் செய்யும் ஒவ்வொருவரும் அதனால் பலனடைந்திருந்தனர். இதையெல்லாம் நினைத்துப் பார்த்தபோது நிக்கலஸ் கிழவனின் கண்கள் கலங்கின. அது உயிரோடு இருந்தபோது யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை, ஒரு தடவைகூட ஆழ் கடலுக்குச் சென்று அருகே பார்த்ததில்லை. இப்போது அதன் இழப்பில்தான் அதன் அருமை புரியத் தொடங்கியது.
ஆழ்கடலில் இந்த சம்பவம் இடம் பெறாததால் மத்திய அரசு ஊழியர்கள், தங்களுடைய எல்லைக்குள் இச்சம்பவம் நடக்கவில்லை எனவே அதைக் கையாளத் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தட்டிக் கழித்தனர். மாகாண அரசோ இப்படியான ஒரு சம்பவத்தை இதுவரை எதிர் கொள்ளாததால் என்ன செய்வது என்று தெரியாமல், முடிவெடுக்க முடியாமல் தவித்தனர். தங்களுடைய செல்லப் பிள்ளையாக இருந்த அந்த நீலத்திமிங்கிலத்தின் சுவடுகளையாவது அங்கே விட்டுச் செல்ல வேண்டும் என்று ஊர்மக்கள் எதிர்பார்த்ததால், அங்கே வந்த அதிகாரிகளிடம் அந்த வேண்டுகோளை விடுத்தனர்.
‘ஆபிஸர் ஜோன், இந்த திமிங்கிலங்க உயிரோட இருக்கும் வரையும் எங்களுக்கு நிறையவே சம்பாரிச்சுக் கொடுத்திச்சு. இப்போ இறந்து போய்விட்டதால இனி உல்லாசப் பயணிகள் யாருமே இந்தப்பக்கம் வரப்போவதில்லை. அதனாலே எங்களுக்கு வியாபாரம் படுத்திடும். நீங்க மனசு வெச்சா எங்களுக்கு உதவ முடியும்’ என்றான் நிக்கலஸ்.
‘நானா, இதிலே நான் என்னப்பா செய்ய இருக்கு?’ என்றார் ஆபிஸர்.
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சொல்லுவாங்க சார், அதுபோலத்தான் இந்தக் கடல் மிருகமும்..! எங்க எதிர்காலம் உங்க கையில்தான் இருக்கு.’
‘சரி, நான் என்ன செய்யணும்’
‘இந்த திமிங்கிலத்தை எரிச்சிடாதீங்க. என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ எப்படியாவது இந்த திமிங்கிலத்தோட எலும்புக் கூட்டை எங்களுக்குத் தந்திடுங்க. இங்கே ஒரு செட் போட்டு அங்கே அதைப் பார்வைக்கு வைச்சிடுறோம். இன்று உலகத்திலே அரிதாக உயிர் வாழும் மிகப் பெரிய விலங்குகளான நீலத்திமிங்கிலங்களின் மூதாதையரின் எலும்புக்கூடு என்று எழுதி வைத்தால், அதைப் பார்ப்பதற்கு என்றே உல்லாசப் பயணிங்க கட்டாயம் வருவாங்க. அதனாலே எங்களுக்கும் கொஞ்ச வருமானம் வரும். அதை வைச்சே நாங்க காலத்தை ஓட்டிடுவோம்.’
கிழவனின் யோசனைக்கு அவர் எடுபடவில்லை. பல சட்டப்பிரச்சனைகள் இருப்பதால் அவர் கிழவனின் யோசனையை அடியோடு நிராகரித்து விட்டார். சட்டதிட்டங்களுக்கு அடிபணிந்தவர் போலக் கடமையில் கவனமாக இருந்ததால், ஏதாவது கொடுத்தாலும் அதற்கெல்லாம் மசிய மாட்டார் போல இருந்தது.
‘எங்க மேர்லின் மேடம்தான் உங்ககிட்ட கேட்கச் சொன்னா..!’ கிழவன் கடைசி அஸ்திரத்தைப் பிரயோகித்துப் பார்த்தான்.
அந்த உணவு விடுதியில் அவர் சாப்பிட்ட பிஷ் அன்ட் சிப்ஸின் ருசியை விட, அதைப் பரிமாறிய அந்த இளம் பெண்ணின் நீலக்கண்கள் கண்முன்னால் நிழலாடியது. நீலக்கண் அழகு தேவதை..! அந்த நீலக்கண் அழகியின் நெளிவு சுளிவுகளை நினைத்த மாத்திரத்தில் அந்த நினைவே அவரைப் பரவசமடைய வைத்தது.
‘ஜோன் ஸார் நீங்க எங்க விடுதிக்கு கட்டாயம் டினருக்கு வரணும், நீங்க வந்தா மேர்லின் மேடம் உங்களுக்காக ருசியாய், ஸ்பேஷலாய் சமைச்சுப் போடுவா, வாங்க ஸார்.’ கிழவன் அவரைச் சம்மதிக்க வைத்துவிட்டுக் கிளம்பினான்.
இரவு நெடுநேரமாகியிருந்தது. உணவருந்த வந்தவர்கள் எல்லோரும் கிளம்பிப் போய்விட்டிருந்தினர். ஜோனுக்கு இன்னுமொரு பெக் உள்ளே தள்ளலாம் போல இருந்தது. ‘போதும்’ என்று சொல்லி, அவன் கையில் ஏந்தியிருந்த கிளாஸை மேர்லின் வாங்கி மேசையில் வைத்து விட்டு, எழுந்து நிற்க முயன்ற அவனைத் தாங்கிக் கொண்டாள்.
‘என்ன இது இப்படி யாராவது குடிப்பாங்களா? இப்ப எப்படி வீட்டுக்குப் போவீங்க, வாங்க..!’ செல்லச் சிணுங்களோடு மெதுவாக அவனை அணைத்துக் கொண்டாள்.
இதமான சூட்டைக் கம்பளிப் போர்வை உள்ளே தக்க வைத்திருந்தது. அதிகாலை ஆரவாரம் வெளியே கேட்கவே, ஜோன் எழுந்து சோம்பல் முறித்தான். இரவு அனுபவித்த சொர்க்கவாழ்க்கை அவனை ஒரு கணம் தயங்க வைத்தாலும், விடியுமுன் வெளியேற நினைத்து, ஆடையணிந்து, கதவைத் தள்ளித் திறந்து வெளியே வந்தான்.
வாசலில் அரைகுறைத் தூக்கத்தில் கிடந்த கிழவன், படுக்கையறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் கண்களை இறுக்க மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதுபோலப் பாசாங்கு செய்தபோது, ஜோன் அவனைக் கடந்து சென்றான்.
காரியத்தைச் சாதித்து விட்டாள் என்ற திருப்தியோடு கண்ணை மூடிய கிழவனின் வாய் மட்டும் முணுமுணுத்தது.
‘இவளும் ஒரு குட்டித் திமிங்கிலம்தான்!’
Comments
Post a Comment