AananthaVikatan- தொடாதே..!

 





தொடாதே..!


நன்றி: விகடன் 


(குரு அரவிந்தன்)


வெற்றிக் களிப்போடு அவன் முகத்தைத் துடைத்து விட்டு அந்த டவலை பெண்கள் கூட்டத்தை நோக்கி எறிந்தான். அந்த டவலை எடுப்பதற்கு இளம் ரசிகைகள் போட்டி போட, அவன் டென்னிஸ் கோட்டை விட்டு அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தான்.இளமையின் துடிப்பும், ஆண்மையின் அகங்காரமும் அவன் நடையில் தெரிந்தது. அவன் மிக அருகே வந்து தனது இளம் ரசிகைகளுக்கு ஆட்டோகிராப்பில் கையேழுத்துப் போட்டான். 

விரிந்த தோள்களும், பரந்த மார்பும், முகத்திலே அந்த வசீகரமும் நிச்சயமாக எந்த ஒரு பெண்ணையும் ஒருமுறை நிமிர்ந்து பார்க்க வைக்கும். ஏன் சில பெண்கள் அவனது பார்வை பட்டாலே அது தான் சொர்க்கமோ என்று நினைத்தார்கள்.

அவள், அவன் அருகே வரும் வரையும் காத்திருந்தாள். செல்லமாக ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு "ஹாய்" என்றாள். அவனும் பதிலுக்குக் "ஹாய்" என்றான். ரொம்ப 'மாடேனாக'  அவள் உடை அணிந்து இருந்தாள். தனது ஆட்டோகிராப்பை அவனிடம் நீட்டினாள். அவன் அதை வாங்கி விரித்துப் பக்கங்களில் பார்வையை ஓடவிட்டான்.

"யுவர் சுவீற் நேம் ப்ளீஸ்!"

"ஜாஸ்மின்" என்றாள் சலங்கை ஒலியில்.

"சுவீட் நேம்...ஐ லைக் இட்" அவளின் கண்ணுக்குள் எதையோ தேடிப் பார்த்தான். கண்ணோடு கண்கலக்க,

நாணத்தால் அவள் முகம் குப்பென்று சிவக்க, அவனது காந்த விழிகளைத் தவிர்த்து எங்கேயோ தொலைவில் பார்வையை ஓடவிட்டாள். அவளது மௌனம் அவனை மேலும் பேச வைத்தது.

"ஜாஸ்மின்! வெள்ளையாய், மென்மையாய், சுகந்தமாய் நறு மணம் வீசுமே! அந்த மலர்தானே? ஐ லைக் தட் ஃபிளவர்!"

"பூவை மட்டும் தானா?" என்றாள்  ஒரு ரசிகையின் ஏக்கத்தோடு.

அவன் எதுவுமே பேசாமல் உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே ஆட்டோகிராப்பில் கையெழுத்தைப் பதித்து அவளிடம் திரும்பவும் நீட்டினான்.

"இன்று உங்க ஆட்டம் ரொம்ப நன்றாய் இருந்தது. றியலி ஐ என்ஜோயிட்!".

"தாங்யூ ஃபோர் யுவர் கொமன்ஸ்! ஜாஸ்மின், நீங்க தினமும் இங்கே வருவீங்களா?"

"ஆமா! உங்க ஆட்டமென்றால் எனக்கு உயிர். நீங்க விளையாடும் டெனிஸ் மாட்ச் ஒன்றுமே தப்ப விட மாட்டேன்."

"அப்போ நீங்கள் எனது நம்பர் 'ஒண்' ரசிகை! அப்படித்தானே? ஆமா நீங்க பேரன்ஸ்ஸோடதான் வந்தீங்களா?"

"இல்லை!" என்று தலையசைத்தாள்.

"ஃப்ரன்ஸ்ஸோடையா?"

அதற்கும் இல்லை என்று தலையசைத்தாள்.

"அப்போ தனியாகவா?"

"ஆமா" என்றாள் மெல்ல வாயைத் திறந்து.

"எப்படிப் போவீங்க?"

"பஸ்ல" ஒற்றைச் சொல்லில் பதில் சொன்னாள்.

"இவ்யூ டோன் மைன்ட்  ஸால்ஐ ட்ராப் யூ"

'வேண்டாம்! உங்களுக்கு ஏன் வீண்சிரமம்"

"இதிலே என்ன சிரமம்? என்னுடைய ரசிகைக்கு இந்த உதவி கூடச் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறீங்களா? இருங்க ஒரு நிமிடம், வந்திர்றேன்" சேஞ்சிங் ரூமுக்குள் அவசரமாய்ப் போனான்.

காரின் முன்ஸீட்டிலே அவனுக்குப் பக்கத்தில் இருந்து போவது அவளுக்குப் பெருமையாக இருந்தது. அவனது ரசிகைகள் எல்லாம் பொறாமையோடு அவளைப் பார்ப்பதாக உள்ளுணர்வு சொல்லிற்று. அந்தப் ஃபைவ்ஸ்டார் ஹோட்டலுக்குள் கார் நுழைந்த போது அவன், அவளைப் பார்த்துக் கேட்டான்,

"இந்த ஹோட்டலிலே தான் டூர்ணமெண்ட் முடியும் வரை தங்கியிருக்கப் போகிறேன். உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ரூமுக்குப் போய் றெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரட்டுமா?"

அவள் வேறு வழியில்லாமல் ஆமென்று தலையசைத்தாள்.

காரை வாசலிலே நிறுத்தி விட்டு,

"காருக்குள்ளே எவ்வளவு நேரம் உட்காந்திருப்பீங்க, வாங்க மேலே ரூமிலே இருக்கலாம்!"

எலிவேற்றர் நெரிச்சலாய் இருந்தது. மேலே போகும் போது அவளுக்கு பின்னால் நின்ற அவன், அவள் மேல் அடிக்கடி பட்டுக் கொண்டான். அவனது மூச்சுக் காற்று அவளது பின் கழுத்தில் நெருப்பாய்ச் சுட உடம்பு அடிக்கடி சிலிர்த்து அடங்கியது.

ரூம் சர்வீசைக் கூப்பிட்டு இரண்டு ஐஸ்கிறீம் கொண்டு வரச்சொன்னான்.

அவன் வா~; எடுத்து விட்டு பாத்ட்ரவலை இடுப்பில் கட்டிக் கொண்டு வெளியே வந்த போது அவள் ஐஸ்கிறீமைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். அவன், அவளுக்கு அருகே வந்து,

"ஃபீட் மீ எ ஸ்பூண்" என்றான் வாயைத் திறந்தபடி.

"நோ...இது..நான் சாப்பிட்டது...எச்சி..." திடீரென அவன் வந்து நின்ற கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போய் மறுத்தாள்.

"பரவாயில்லே.....இவ் இற்ரிஸ் யுவேர்ஸ்!" அவள் கையைப் பிடித்து ஸ்பூனோடு தனது வாய்க்குள் வைத்தான். 

"சுவீட்.......!"

பேசாமல் காரிலேயே இருந்திருக்கலாம், தெரியாமல் ரூமுக்கள் வந்து விட்டேன் என்பது போல் அவள் சங்கடப் பட்டாள். 

நிமிர்ந்து அவனைப் பார்க்கக் கூச்சப்பட்டுத் தலை குனிந்த படி அவசரமாக ஐஸ்கிறீமைச் சாப்பிட்டாள். 

அவள் உதட்டிலே ஐஸ்கிறீம் உருகி வழிய, அவன் திடீரெனக் குனிந்து அவள் கன்னங்களைக் கையிலேந்தித் தன் உதட்டோடு அவள் உதடுகளைப் பொருத்தி உதட்டிலே வழிந்த ஐஸ்கிறீமைச் சுவைத்தான். எதிர் பாராத அவனது இந்தச் செய்கையால் அவள் நிலை குலைந்து குழம்பிப் போய் அவனிடம் இருந்து தன்னை விடுவிக்க முயற்சி செய்தாள்,

"விடுங்க!.....ப்ளீஸ்"

"ஐ வாண்ட் திஸ்" என்றான் உதட்டைக் கௌவியபடி.

"வேண்டாம்....ம்....ம்"

"ஐ லைக் தீஸ் லிப்ஸ்"

"இருங்க, உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்!"

"பேசலாமே.....அப்புறம்!....ஜாஸ்மின் இந்த உதடுகள் பேசுவதற்கல்ல, சுவைப்பதற்கே!" அவன் அவளது உணர்ச்சிகளைப் பொருட்படுத்தாமல் தன் காரியத்தில் இறங்கினான். 

அந்த ஆண்மையின் வேகத்தில், சுழியில் அகப்பட்ட துரும்பாய், எதிர் நீச்சல் போட முடியாமல் அவள், அவனுக்குள் அடங்கிப் போனாள்.

அவன் கண் விழித்த போது அவள் விசும்பிக் கொண்டிருந்தாள். அவனிடம் குற்ற உணர்வு இருக்கும் என்று அவள் எதிர் பார்த்தாள். ஆனால் அவனோ கசக்கிப் போட்ட மலரைப் பார்ப்பது போல அவளைப் பார்த்தான். "இப்படி எத்தனை பெண்களை நான் அனுபவித்திருக்கிறேன்" என்கிற அகம்பாவம் அவன் பார்வையில் தெரிந்தது. 

அவள் உடைந்து போய் வாய் விட்டு அழக்கூட முடியாமல் வேட்டை நாயிடம் அகப்பட்ட முயல் போல நெஞ்சுக்குள் விசும்பினாள். நடந்ததை யாரிடமாவது சொல்லி ஓவென்று வாய்விட்டு அழ வேண்டும் போல் மனசு குமுறியது. அடி வயிற்றில் குமட்டிக் கொண்டு வர, மெல்ல எழுந்து உடைகளைச் சரி செய்தபடி யன்னலுக்கு அருகே சென்று வெளியே எட்டிப் பார்த்தாள். 

வானம் கறுத்து இருண்டு போயிருக்க, பொட்டுப் பொட்டாய் நிலம் நனைந்து கொண்டிருந்தது. மங்கிய இருட்டில் கொக்கு ஒன்று குட்டையில் மூழ்கி வெளியே வந்து உடம்பைச் சிலுப்பிக் கொண்டிருந்தது. 

"வாழ்க்கையே இருண்ட பின் வானம் இருண்டாலென்ன, வெளுத்தாலென்ன?" விரக்தியில் மனசு மௌனமாய் ஓலமிட்டது.

அவன் எழுந்து அருகே வந்து இயல்பாக அவளின் தோளில் கையைப் போட்டான். அவள் சட்டென்று தன்னிச்சையாய் அவனிடமிருந்து விலகிப் போனாள்.

"ஐ லைக் ரு சீயூ எகெயின்" என்றான் ஆவலோடு.

அவள் எதுவும் பேசாமல் வெளியே வெறித்துப் பார்த்தாள். விட்டில் பூச்சிகள் தெரு விளக்கில் போட்டி போட்டு முட்டி மோதிக் கொண்டிருந்தன.

"வில் யூ கம் எகெயின்?" என்றான் தாபத்தோடு.;

"கட்டாயம் சந்திக்கணுமா?"

"ஆமாம்! உனது விலாசத்தைச் சொன்னால் நானே வந்து சந்திப்பேன்"

அவள் சொன்னாள். அவன் ஒரு கணம் திகைத்துப் போய் அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

"அது நான் பிறந்த ஊராச்சே!"

"ஆமா.....ஊராவது ஞாபகமிருக்கிறதே! உங்க வீட்டிற்கு அடுத்த வீட்டிலே இருந்த மலரை ஞாபகமிருக்கா?

அவன் சிறிது நேரம் சிந்தனையை ஓடவிட்டான்.

"அந்த மலரா நீ?"

"ஆமாம்! அதே மலர் தான்! பட்டிக்காட்டு மலர் எப்படி ஜாஸ்மீனாய் மாறினாள் என்று பார்க்கிறாயா? பன்னிரண்டு வருடங்கள் உனக்காகத் தான் காத்திருந்தேன். ஒன்றும் அறியாப் பருவத்தில் ஆசை வார்த்தைகள் பேசி என்னை ஏமாற்றி உன் வலைக்குள் சிக்க வைத்து உன் பசியைத் தீர்த்துக் கொண்டாய். நியாயம் கேட்ட போது ஊரை விட்டு மெல்லத் தப்பி; ஓடிவிட்டாய். எங்கோ எல்லாம் தேடினேன். நீயோ அகப்படவில்லை. என்றாவது ஒரு நாள் உன்னைச் சந்திப்பேன் என்ற நம்பிக்கையில் தான் இத்தனை காலமும் உயிரோடு இருந்தேன். சென்ற மாதம்  பத்திரிகைகளில் எல்லாம் உனது படத்தைப் போட்டு டென்னிஸ் டூர்ணமெண்டுக்கு அமெரிக்காவில் இருந்து வரப்போவதாக எழுதி இருந்ததைப் பார்த்தேன். அமெரிக்காவில் டென்னிஸ் அக்கடமியில் பயிற்சி பெற்ற தலை சிறந்த ஆட்டக்காரர்  என்று புகழாரம் வேறு சூடியிருந்தார்கள். எப்படியாவது உன்னைச் சந்திக்க வேண்டும் என்று தான் இவ்வளவு தூரம் உன்னைத் தேடி வந்தேன். எப்படியோ இன்று என் வலையில் சிக்கிக் கொண்டாய்!"

யார் வலையில் யார் சிக்கியது? கூனிக் குறுகி நிற்கும் அவளைப் பார்க்க அவனுக்குச் சிரிப்புத் தான் வந்தது. 

"ஸ்போட்ஸில் உள்ள ஆர்வம் காரணமாய் உன்னைத் தேடி வந்த எத்தனையோ அப்பாவிப் பெண்களை நீ ஏமாற்றி இருக்கின்றாய்? தயவு செய்து இனி மேலும் தப்பான வழியில் போகாதே, இப்படி ஆசை காட்டி அவர்களை ஏமாற்றாதே, என்று சொல்லத் தான் உன்னை இன்று சந்தித்து உன்னோடு இங்கு வந்தேன்."

"பெண் பாவம் பொல்லாதது என்று என்னிடம் சொல்லப் போகிறாயா? நானாக யாரையும் தேடிப் போகவில்லை, அவங்களாகத் தான் வர்றாங்க!" என்றான் கிண்டலாக.

"வந்தா கெடுத்திடுவியா?" அவளுக்குக் கோபத்தில் முகம் சிவந்தது.

"அவங்க யாரும் இதுவரை அப்படிச் சொல்லலையே, தே ரூ என்ஜோயிட்!"

"யூ ஆர் ரூ மச். இரிற்ரேற்ரிங் மீ" என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு. அவள் பார்வையில் வெறுப்புக் குடியிருந்தது.

"இப்போ நான் நல்ல பெயரோடும், புகழோடும் இருக்கிறேன். அதைக் கெடுத்திடாதே! இப்ப உனக்கு என்ன வேணும்? என்னை பிளாக் மெயில் பண்ணப் போறியா? உனக்குப் பணம் தேவையா?"

அவன் தேவையில்லாமல் பதட்டப் படுவதைப் பார்த்து அவள் மனதுக்குள் சிரித்தாள்.

"பெயர், புகழ், பணம் இவையெல்லாம் என்ன செய்யும்? எவ்வளவு காலத்திற்கு இவை உன்னோடு நிலைத்து நிற்கும்?"

"ஏன்? என்னாலே பணத்தைக் கொண்டு எதையும் சாதிக்க முடியும்!"

"அப்படித்தான் நானும் நினைத்தேன். ஆனால் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கார் விபத்தில் பலமாக அடிபட்டு ஆபத்தான நிலையில் நானிருந்தேன். எனக்கு ப்ளட் அதிகம் சேதமாகிவிட்டது. அப்போது எனக்கு ப்ளட் கொடுத்துத் தான் என்னைக் காப்பாற்றினார்கள். அப்புறம் தான் தெரிய வந்தது அந்த ப்ளட்டில் ஒரு எயிட்ஸ் நோயாளியின் ப்ளட்டும் கலந்திருந்தது என்று. காலம் கடந்தபின் எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை! தற்செயலாக நடந்த இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கேட்டுப் பணம் கொடுத்தார்கள். இந்தப் பணத்தால் என்ன செய்ய முடியும்? மரணத்தை நிறுத்த முடியுமா? உனக்குத் தெரியுமா, செய்யாத தவறுக்காகத் தண்டனை அனுபவிப்பவர்களில் நானும் ஒருத்தி;!" சொல்லும் போது அவள் குரல் நெகிழ்வடைந்து கண்கள் பனித்தன.

அவன் திகைத்துப் போய் அவள் சொல்வதை நம்ப முடியாமல் அவளை வெறித்துப் பார்த்தான். கண்களில் மரணப் பயம் தெரிந்தது! 

"என்னைத் தொடாதே! என்று சொல்லத்தான் வாயைத் திறந்தேன். ஆனால் நீயோ என்னைப் பேசவே விடவில்லை. "இந்த உதடுகள் சுவைப்பதற்கே" என்று நீ சொன்ன போது தான் எனக்கு ஞாபகம் வந்தது, பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பும் இப்படித்தான் என்னிடம் ஆசை வார்த்தைகள் பேசி உனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொண்டாய்! பணத்தால் எதையும் வாங்கலாம் என்று ஆணவத்தோடு சொன்னாயே, இப்போ நீயே தேடிக் கொண்ட எயிட்சுக்கு மாற்று மருந்து உன்னால் வாங்க முடியுமா? "முடியாது" என்று உனக்கே தெரியும், ஏனென்றால் இன்னமும் எயிட்சுக்கு மருந்து கண்டு பிடிக்கவே இல்லை!"

அவன்  என்ன செய்வது என்று தெரியாமல், அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போய் நிற்க, அவள்  கண்களைத் துடைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேறினாள். 


Comments

Popular posts from this blog

இரவில் தெரியும் சூரியன்

Story Review Contest -2025 - Web site

Story- Creeper