REVIEW - Sample Stories







 இதுதான் பாசம் என்பதா.. 

- சிறுகதை நூல் ஆய்வு.


(ஆக்கம்- சிந்தனைப்பூக்கள் எஸ். பத்மநாதன்)

 ஈழநாடு பத்திரிகையில் ‘அணையாத தீபம்’ என்ற சிறு கதையினை எழுதி எழுத்துத் துறையில் நுழைந்த குரு அரவிந்தன் கனடிய மண்ணில் காலடி பதித்த பின் எழுதிய எழுத்துக்களே அவருக்கு மிகுந்த புகழைத் தேடித்தந்தது எனலாம்.

ஆனந்தவிகடன், கல்கி, குமுதம், கலைமகள், கணையாழி, நந்தவனம், உயிர்நிழல், ரோஜா, தமிழோசை போன்ற சஞ்சிகைகளிலும், உதயன், நம்நாடு, ஈழநாடு, வெற்றமணி, புதினம், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளிலும் எழுதிய ஒரு அனுபவம்மிக்க எழுத்தாளளரான இவர் இதுவரை நூறு சிறுகதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். சிறுகதை, நாவல் போட்டிகளில் பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கின்றார். 10 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகும் ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் இவருக்கு உலகளாவிய வாசகர்களைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.

வேற்று மொழிகளில் மொழி பெயர்ப்புப் பொற்று வரும் இவரது கதைகள் சர்வதேசரீதியாக லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துள்ளன.
ஏற்கனவே ‘என் காதலி ஒரு கண்ணகி’ என்ற சிறுகதைத் தொகுப்பையும், ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற நாவலையும் வெளியிட்ட இவர் தற்போது வெளியிட்டிருக்கும் ‘இதுதான் பாசம் என்பதா..’ வித்தியாசமான பல உணர்வுகளைக் கொண்ட சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுதியாகும்.
எப்போதும் மெல்லிய காதல் உணர்வுகளைத் தனது கதைகளினூடாக எடுத்துக் காட்டுபவர் குரு அரவிந்தன் என்று பலராலும் உணரப்பட்ட இவர் இந்தச் சிறுகதைத் தொகுதியில் பல கதைக் கருக்களைத் தன் கற்பனையில் கலந்து அழகாக எழுதியுள்ளார்.

மணிமேகலைப் பிரசுரத்தால் வெளியிடப்பட்ட இச் சிறுகதைத் தொகுப்பிற்குப் பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். குரு அரவிந்தன் கனடாவுக்கும் தமிழகத்திற்கும் இடையே இலக்கிய உறவுப்பாலம் அமைத்திருப்பதாக தனது அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறுகதை எழுதுவது சுலபம் என்றால் எல்லோரும் எழுதத் தொடங்கி விடுவார்கள். உண்மையில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிட்டது போல எழுத்து ஒரு வரமாகும். அந்த வரம் குரு அரவிந்தனுக்குக் கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமாகும்.

சிறந்த கதைக் கரு, பாத்திரத் தெரிவு, சூழ்நிலை, சிறந்த நடை என்பவற்றைத் தெரிவு செய்து சரியாகக் கதையை நகர்த்திச் செல்லும் கதைகளே வெற்றி பெறுகின்றன. எனவே சிறந்த எழுத்தாளர் என்பவர்  உண்மை வாழ்வை பாத்திரங்களில் வடிக்கும்போது வார்த்தைகளே மிகவும் முக்கியமானது. இந்த வார்த்தைகளே எமக்கும் கதைக்கும் இடையே ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த வகையில் குரு அரவிந்தனின் இச் சிறுகதைத் தொகுதி பல்வேறு சூழ்நிலையில், பல்வேறு பாத்திரப் படைப்புக்களால் உருவானது மட்டுமன்றி, எம்மைத் தம்முடன் நெருக்கமாகவும் வைத்திருக்கின்றது.

பதினைந்து சிறு கதைகளை உள்ளடக்கிய இச் சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் உரையில் ஆசிரியர் மிக முக்கியமான சில உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார். 

தினமும் தான் சந்திக்கும், தன்னைச் சுற்றி இருப்பவர்களால் பேசப்படும் சம்பவங்களைக் கற்பனை நயத்தோடு சிறந்த சிறு கதைகளாக உருவாக்க முடியும் என்பதைத் தனது எழுத்துலக அனுபவத்தால் உணர்ந்திருக்கிறேன் என்று கூறுவது யதார்த்தமானது. பல்வேறு வெளியீடுகளில் வெளிவந்த இச் சிறுகதைகள் ஒன்றாக கதம்ப மாலையாகத் தொடுக்கப்பட்டதால் முழுமை பெற்றிருக்கின்றன.

முதல் கதையானது இந்நூலின் பெயரான இதுதான் பாசம் என்பதா.. என்பதாகும். ஆனந்தவிகடன் சஞ்சிகையில் வெளிவந்தபோது ஆயிரக்கணக்கான நெஞ்சங்களைக் கவர்ந்ததோடு பல வாசகர் கடிதங்களையும் பெற்றுத்தந்த கதை இது. முதல் வரியைப் பார்க்கின்ற போது பச்சைக் கொடி காட்டி ரயில் புறப்படும் பொழுது அவள் அவசரமாக ஓடி வந்து உள்ளே ஏறினாள் என்று தொடங்குகிறது. நல்லதொரு ஆரம்பத்துடன் கதை தொடங்கி, உரையாடல் ஊடாகக் கதை நகர்கிறது. ஆவலுடன் தொடர்கிறோம். வியப்புடன் கதை முடியும் போது அப்பாவின் அப்பாவித்தனம் கண்களில் நீரைத் தருகிறது. கஷ்டம் வந்தால் ஒரு குடும்பம் எப்படி எல்லாம் ஆகிப்போகிறது என்பதற்கு உதாரணமான இக்கதை உண்மையில் தேர்ச்சி பெற்ற ஒருவரின் சிறந்த விருந்தாகிறது.

இரண்டாவது கதை ரோஷக்காரி. சுபத்ரா என்ற பாத்திரத்தைச் சுற்றிப் படர்கிறது. நன்றாகப் படித்த இன்ஜினியரான சுபத்ராவை ரோஷம் வரப்பண்ணியே வேலையில் சேர முயற்சிகள் நடக்கின்றன. உரையாடல் மூலம் அனைவரும் குடும்ப உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் விதம் மிகவும் ரம்மியமானது. ஆனந்தவிகடனில் வெளிவந்த இக்கதை பல உணர்வுகளை மீட்டியுள்ளது.

கல்கி சஞ்சிகையில் வெளிவந்த ஒரு அப்பா, ஒருமகள், ஒரு கடிதம் என்ற கதை நவீன விஞ்ஞான உலகில் உள்ள டீ. என். ஏ ஆய்வு பற்றியது. வெறும் சமூகக் கதைகளையே படித்து வந்த வாசகர்களுக்கு கல்கி வழங்கிய வித்தியாசமான கதை இது. திவ்யா தகப்பனுக்கு எழுதிய கடிதம் ஆசிரியரின் திறமையைக் காட்டுகிறது. பெற்றோருக்குள் ஏற்படும் பிரச்சனைகள் சில வேளைகளில் எவ்வளவு பூதாகரமாகி பிள்ளைகளைப்  பாதித்து விடுகின்றன என்பதற்கு இக்கதை மிகச் சிறந்த உதாரணம். இக்கதை கன்னட மொழியிலும் மொழிபெயர்க்கப் பட்டு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

கனடா உதயன் பத்திரிகையில் வெளிவந்த ராதை காத்திருக்கிறாள் ஒரு காதல் கதை. கண்ணன் ராதை இலக்கியத்தில் மட்டுமல்ல நிஜவாழ்க்கையிலும் வருகிறார்கள். கட்டிட இடிபாடுகளுக்குள் அவன் சிக்கித் தவித்து செல்போனில் அவன் உதவி கேட்பதும், அவள் அவனுக்கு உதவ முடியாமல் தவித்துப் போவதும் மிகவும் உருக்கமானது. உயிர் வலிக்கும் துயரத்தை சுமக்கப் போகும் ராதை இவள் என்ற கடைசி வார்த்தை நமக்குள் அனுதாப அலைகளை எழுப்பி விடுகிறது.

அவளா சொன்னாள்..? ஜேர்மனி வெற்றிமணியில் வெளிவந்த சிறுகதை. அவள் செல்லமாய்ச் சிணுங்கினாள் - இப்படிச் சிணுங்கிக் கொண்டே ஆரம்பிக்கிறது இக்கதை. ஏமாற்றம் அடையும் பெண்களின் மனசு எப்படி எல்லாம் மாறிப் போய்விடுகிறது என்பதற்கு மிகவும் உதாரணமான, யதார்த்தமான கதை இது.
கனடா ரோஜா இதழில் வெளிவந்த கதை சிலந்தி. புலம் பெயர்ந்த மண்ணில் வித்தியாசமான உணர்வுகள் சில வேளைகளில் எப்படி வெளிக்கிளம்புகின்றன என்பதனை ஆசிரியர் மிக அருமையாக எடுத்துக் கையாளுகின்றார். பலவீனங்கள் மனித மனங்களை எப்படி எல்லாம் அலைக்களிக்கும் என்பதை உணர்த்தும் கதை இது.

தொடாதே..! ஆனந்தவிகடனில் வெளிவந்த எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வுக் கதை இது. யதார்த்தத்தினை சற்று மீறி நின்றாலும், எதிர்காலத்தில் இந்நோய் எப்படி எல்லாம் மனித இனத்தைப் பாதிக்கப் போகிறது என்பதை எச்சரிக்கும் உதாரணமான கதை.

உன்னைப் போல் ஒருத்தி.. லண்டன் புதினம் சஞ்சிகையில் வெளிவந்த சுபா, விஜி என்ற இரண்டு பாத்திரங்களின் கதை இது. முளையாக்கல் என்ற நவீன விஞ்ஞானத்தைப் புகுத்தி, ஆண்துணை இல்லாமலே செயற்கை முறையில் ஒரு பெண்ணால் கருத்தரிக்க முடியும் என்ற உண்மையை இக் கதை புலப்படுத்துகிறது. எதிர்காலத்தில் இப்படி எல்லாம் நடக்கலாம் எனினும் இக்கதை பற்றிய ஆய்வுக்கு முன்னுரிமை உண்டு.

உதயன் பத்திரிகையில் வெளிவந்த நீ காற்று நான் மரம் என்ற கதையில் முக்கிய பாத்திரம் மாலதி. கான்ஸர் நோயால் பாதிக்கப்பட்ட மகனிடம் இருந்து, அவளது நன்மை கருதி மாலதியைப் பிரிக்கத் தகப்பன் எடுக்கும் முயற்சி பற்றிய கதை இது. மதனுடன் வாழத்துடிக்கும் அவளது வார்த்தைகளில் நியாயம் இருக்கிறது. பண்பும் அதுதான். ஆசிரியர் தனது முடிவில் சற்று அவசரப்பட்டுவிட்டாரோ என்னமோ? சர்ச்சைக்குரிய கதை இது என்பது படிக்கும் போது உங்களுக்கும் புரியும்!

'வாய்மையின் இடத்தில்' ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை. புரபெஸர் சிவராமனுக்கும் அவரது மாணவன் ரமேஸ_க்கும் தொலைபேசி மூலம் நடைபெறும் உரையாடல் கதையாகிறது. சந்தேகம் என்று வந்து விட்டால் வாழ்க்கையே பாழடைந்து விடும் என்பதே கதையின் கரு. மிகவும் அருமையான கதைக்கரு. மிகச்சுருக்கமாக மனதில் ஆழப்பதிந்து விட்ட கதை இதுவெனலாம்.

பாரிஸ் உயிர் நிழல் சஞ்சிகையில் வெளிவந்த கதை தீக்குளிக்கும் மனங்கள். மனித மனங்களைத் தீக்குளிக்க வைக்கும் முயற்சி இது. பிறந்த குழந்தையின் நிறத்தால் கணவன், மனைவிக்கிடையே ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கத்தை நாசூக்காக சொல்லும் கதை இது. முடிவு சிலருக்கு வியப்பூட்டலாம், ஆனால் பதிலில் தெளிவு உள்ளது.

கனடா நம்நாடு பத்திரிகையில் வெளி வந்த கண்ணீர்ப் பூக்கள் தீயணைக்கும் படையினரின் கடமை உணர்வு எவ்வளவு உறுதியானது என்பதை எடுத்துக் காட்டும் அற்புதமான கதை இது. மிக அழகாக நகர்த்தப் பட்டிருக்கும் இக்கதை அனைத்து மக்களுக்கும் பொருந்தக் கூடிய சர்வதேச உணர்வுக்கு நல்ல உதாரணமாகிறது.

காதல் என்பது.. ஆனந்தவிகடனில் வெளிவந்த மனோ, உஷாவின் கதை. தாயின்மீது மனோ பற்று வைத்திருப்பது மனைவி உஷாவிற்குப் பிடிக்கவில்லை. அதனால் மனைவிக்கு ஏற்படும் நியாயமான உணர்வை வெளிக்காட்டும் யதார்த்தம் அப்படியே உள்ள கதை இது. ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்ளுதலே உண்மையான காதல் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

என்ன சொல்லி அழைக்க.. கனடா தமிழோசை சஞ்சிகையில் வெளிவந்தது. தொலைபேசி உரையாடல் மூலம் கதை நகர்கிறது. மருத்துவத்துறை வளர்ச்சி, ரத்ததானம் செய்வது போல உயிரணுவையும் தானம் செய்யமுடியும் என்ற மருத்துவ முன்னேற்றம், அதனால் உறவு முறையில் ஏற்படும் பாதிப்பு, இறுதியில் கணவன் மனைவி ஒன்றுபட்டு எடுக்கும் முடிவு மிகவும் பண்புடன் கூடிய யதார்த்தமாகிறது.

ஆனந்தவிகடனில் வெளிவந்த கதை சார் ஐ லவ்யூ. நியூஜேர்ஸியில் வசிக்கும் கணவனை இழந்த ஒரு பெண்ணின் கதை. தன் மகளுக்கு ஒரு பாசம்மிக்க அப்பா வேண்டும் என்று தேடும் தாயைப்பற்றிய, அம்மாவிற்கு ஒரு வாழ்க்கைத் துணை வேண்டும் என்று தேடும் மகளைப் பற்றிய கதை இது. எல்லோரையும் கவரக்கூடிய மிகவும் அழகான சிறந்த ஒரு குடும்பக் கதை இது.

மீள மீள குரு அரவிந்தனின் கதைகளைத் தொடர்ந்து படித்தபோது ஏற்பட்ட பூரிப்பு, வார்தைகளால் சொல்ல முடியாதது.  தென்னிந்திய சஞ்சிகைகளிலும், சர்வதேச சஞ்சிகைகளிலும் தொடர்ந்து எழுதி, ஆயிரக்கணக்கான வாசகர்களைத் தனக்காக உருவாக்கிக் கொண்டிருக்கும் இவரது ஆற்றலை மதிப்பிட முடியவில்லை. 

சுருக்கமான வார்த்தையாடல்கள், யதார்த்தமான இடங்களில் ஆங்கிலப்பிரயோகம், விஞ்ஞானத்தின் பலவேறு வடிவங்கள், குடும்பங்களின் நெளிவு சுழிவுகள், காதலர்களின் மெல்லிய உணர்வுகள், பண்பு மாறியும் மாறாமலும் அரைகுறையான வாழ்வு முறைகள், அனைத்திலேயும் பல்வேறு உத்திமுறைகளைக் கையாண்டு, இச் சிறுகதைத் தொகுப்பு மூலம் எம்மை நெருக்கமாக்கி வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். தமிழக அரசால் தமிழக நூலகங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும், இதுதான் பாசம் என்பதா.. என்ற குரு அரவிந்தனின் இந்தச் சிறுகதைத் தொகுப்பு கனடிய தமிழ் இலக்கியத்தில் மட்டுமல்ல, சர்வதேச தமிழ் இலக்கியத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் என்பது நிச்சயம்.



Comments

Popular posts from this blog

Dolosbage Sri Murugan Temple

மூன்றாவது பெண்..! - Short Story