2021 Review Contest - 2nd Prize Winner
(குரு அரவிந்தன் வாசகர் வட்டம் நடத்திய சிறுகதை, நாவல் திறனாய்வுப் போட்டி – 2021 இல் 14 நாடுகளில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பல திறனாய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவாகி இரண்டாவது பரிசு பெற்ற திறனாய்வுக்கட்டுரை.)
பகுப்புமுறைத் திறனாய்வு அடிப்படையில் குரு அரவிந்தனின் சிறுகதைகள் - ஒரு விமர்சன நோக்கு
சிவனேஸ் ரஞ்சிதா, கெக்கிராவ, இலங்கை.
அறிமுகம் –
ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் வரிசையில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்கும் கணிசமான பங்களிப்பு உள்ளது. மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்தாலும் தமிழ் இலக்கியப் பரப்பை குறிப்பாக புனைகதைத் துறையை தனது பேனாவால் அலங்கரித்தவர். சிறுகதை, நாவல், ஒலிப்புத்தகங்கள், திரைப்படம், மேடை நாடகம், சிறுவர் இலக்கியம் என பன்முக ஆளுமையுடன் தனக்கென ஒரு அடையாளத்தை தமிழ்பேசும் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி வைத்துள்ளார்.
இவருடைய புனைகதை இலக்கியங்களை தமிழ்த்திறனாய்வுத் துறைக்குள் கொண்டுவந்து பேசவேண்டிய தேவை தமிழ்த்திறனாய்வாளர்களுக்கு உள்ளது. அவ்வகையில் குரு அரவிந்தன் அவர்களினால் படைப்புவெளிக்குள் அழைத்துவரப்பட்ட 'இதுதான் பாசம் என்பதா', 'சிந்து மனவெளி', 'ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்', 'தாயாய் தாதியாய்' ஆகிய நான்கு சிறுகதைகளும் பகுப்புமுறைத் திறனாய்வின் அடிப்படையில் இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.
குறிப்பிட்ட இலக்கியத்தின் பண்புகள் அல்லது கூறுகளை யாதாயினும் ஓர் அளவுகோல் அல்லது நோக்கம் கொண்டு பகுத்துக்காண்பது பகுப்புமுறைத்திறனாய்வு எனப்படும். இத்தகையத் திறனாய்வு 'அலசல் முறைத் திறனாய்வு' என அன்றைய திறனாய்வாளர்களால் அழைக்கப்பட்டது. இத்திறனாய்வு முறையினூடாக குரு அரவிந்தன் அவர்களின் தெரிவுசெய்யப்பட்ட சிறுகதைகளில் வரும் கதைக்கரு, தலைப்பு, பாத்திரப்படைப்பு, பின்னோக்கு, கடித உத்தி, தொடக்கமும் முடிவும் ஆகிய கூறுகளின் வழி ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன.
கதைக்கரு –
குரு அரவிந்தனின் சிறுகதைகளில் அவர் கையாண்டுள்ள கரு சமூக யதார்த்தம் கொண்டதாக படைக்கப்பட்டுள்ளது. சான்றாக 'தாயாய் தாதியாய்' என்ற சிறுகதையிலும் ‘என் செல்லக்குட்டி கண்ணணுக்கு’ என்னும் சிறுகதையிலும் தற்போது உலகை உலுக்கி வரும் கொரோனாவின் பாதிப்புகள் சமூகத்தில் வாழும் பாத்திரங்களினூடாக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளன. கொரோனாவினால் பொதுமக்கள் மட்டுமல்ல வைத்தியத்துறையில் பணிபுரியும் வைத்தியர்களும், தாதியரும் தமது பொதுவாழ்விற்காக குடும்ப வாழ்வை அர்ப்பணித்து கடமையாற்றுவதை இவ் இரு சிறுகதைகளும் தெளிவுறுத்தியுள்ளன.
'சிந்து மனவெளி' என்னும் சிறுகதை ஆண் - பெண் உறவுநிலையில் எழும் சந்தேகக்கோடுகளை மனப்போராட்டமாகவே சித்திரிக்கின்றது. 'இதுதான் பாசம் என்பதா', 'ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்' - சற்று வித்தியாசமான சிறுகதைகள். 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதை திருமணம் நிச்சயிக்கப்பட்ட தன் மகள் திருமணம்செய்து சென்றுவிட்டால் குடும்ப பொருளாதாரத்தை யார் சுமப்பது என்ற பயத்தில் திருட்டுத்தனமாக திருமணத்தை நிறுத்திவிடும் தந்தையொருவரையும் பின்னர் அதனை அறிந்து திருமணமே செய்யாமல் வாழத்துடிக்கும் மகளைப்பற்றியும் தீட்டப்பட்டுள்ளது. 'ஒரு அப்பா ஒரு மகள் ஒரு கடிதம்' என்னும் சிறுகதை ஒரு பெண் விருப்பமின்றி தனது கணவனுடன் வாழ்ந்து பின் முரண்பாடு உச்சக்கட்டத்தை எட்டி தனது மகள் அவருக்கு பிறக்கவில்லை என கூறி வைத்திய பரிசோதனை வரைக்கும் செல்கின்றாள். இதையறிந்த மகள் தனது அப்பாவிற்கு எழுதும் உணர்வுபூர்வமான கடிதத்தில் மனமுறுகிய அந்த தந்தை வைத்திய பரிசோதனை 'ரிப்போர்ட்'டை பார்க்காமல் தனது மகளை ஏற்றுக்கொள்கிறார். அந்த ரிப்போர்ட்டில் என்ன இருந்தது என்பது யாருக்கும் தெரியாது என்பது போலவே இறுதியில் கதை முடிகிறது. குரு அரவிந்தன் இவ்வாறு கையாண்டுள்ள சிறுகதையின் கரு வித்தியாசமானதாகவும் எவரும் சிந்தித்து பார்க்காத ஒன்றாகவும் வெளிப்படுகின்றது.
தலைப்பு –
எந்தவொரு படைப்பும் தாம் கொண்டிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமாகவே அமையும். சில தலைப்புகள் குறியீடாகவும் சில தலைப்புகள் பாத்திரங்களின் பெயரையும் கொண்டு அமைக்கப்படும். ஆனால் ஒரு சிறுகதையின் தலைப்பு தாம் எடுத்துக்கொண்ட கதையின் கருவிற்கு மிக பொருத்தமாகவே அமையவேண்டும். குரு அரவிந்தனின் சிறுகதைகளில் குறியீடான தலைப்புக்கள் எவற்றையும் காணமுடியவில்லை. இருப்பினும் கதையின் கருவிற்கேற்ற பொருத்தமானத் தலைப்புக்கள் அவரது சிறுகதைகளில் இழையோடியுள்ளன. உதாரணமாக 'தாயாய் தாதியாய்' என்ற சிறுகதையை நோக்கும்போது ஒரு தாதி தனது இரண்டு பெண்பிள்ளைகளையும் வீட்டில் விட்டுவிட்டு தாதியர் சேவைக்கு பயணமாகின்றாள். கொரோனா சூழ்நிலையில் பணியாற்றும் அந்த தாதி தனிமைப்படுத்தல் காலகட்டத்தில் தனது சிறிய மகள் வயதிற்கு வந்து தனியே தவிக்கும்போது வைத்தியசாலையிலிருந்து வரமுடியாமல் தவிக்கிறாள். தனது மூத்த மகளிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என தொலைபேசியில் அறிவுறுத்துகின்றாள். அயலவர் இந்த பிள்ளைகளுக்கு உதவிபுரிய முடியாத சூழலை தனிமைப்படுத்தல் சட்டங்கள் ஏற்படுத்திவிடுகின்றன. ஒரு தாயாய் உரிய வேளையில் கடமைகளைப் பூர்த்திசெய்யமுடியாமல் அதே தருணம் தாதியாய் சேவையாற்ற வேண்டிய கட்டாயத்திலும் வாழும் ஒரு பெண்ணின் வாழ்வை கருவாக்கிய இச்சிறுகதையின் தலைப்பு 'தாயாய் தாதியாய்' என்பது மிகப் பொருத்தமாகவே அமைந்துள்ளது.
பாத்திரப்படைப்பு –
ஒரு சிறுகதைக்கு அதன் மொழி உயிரோட்டம் தருவது எவ்வளவு உண்மையோ அதுபோல கதையில் வரும் பாத்திரங்கள் அந்த மொழிநடையை காவிச்சென்று மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றன. சிறுகதைகள் பொதுவாக தனிமனித உணர்வுகளை அல்லது ஒரு பிரச்சினையை கணநேரத்தில் சொல்லி முடிக்கவேண்டும். பாத்திரங்களும் வளர்க்கப்படாது வார்க்கப்பட வேண்டும். குரு அரவிந்தனின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்களும் அப்படியானவையே வார்க்கப்பட்டள்ளன. உதாரணமாக 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதையில் வரும் சீதா, ஸ்ரீராம், அப்பா ஆகிய பாத்திரங்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளன. அளவான பாத்திரங்களையும் இச்சிறுகதையில் குரு அரவிந்தன் கொண்டுவந்துள்ளார். ஏனைய சிறுகதைகளும் அவ்வாறே அளவான பாத்திரங்களுடன் முடிந்துள்ளன. இச்சிறுகதையில் உலா வரும் சீதா என்னும் பாத்திரம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளாள். தனது குடும்பத்திற்காக தனது உணர்ச்சிகளை, ஆசைகளைத் துறந்து திருமணம் செய்யாது போராடத் துணிகின்றாள். இதனை '...என்னோட உணர்ச்சிகளை எப்படியாவது பல்கலைக் கடித்துக் கொண்டு என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால் இந்தக் குடும்பத்தால் வயிற்றுப்பசியை பொறுக்க முடியுமா? இவங்க என்னோடு உழைப்பை நம்பி இருக்கும் வரை நான் கல்யாணமே செய்துக்கப்போறதில்லை பயப்படாதீங்க அப்பா' என்று சீதா கூறுவது இப்பாத்திரத்தின் மீது ஒரு பரிதாப உணர்வை ஏற்படுத்துகின்றது. பொதுவாக ஒரு சிறுகதையில் இரண்டொரு பாத்திரங்கள் நடமாடினாலும் மனதை உடைத்துச் செல்வது ஒரு பாத்திரமாகவே இருக்கும். அவ்வாறே 'இதுதான் பாசம் என்பதா' என்ற சிறுகதையில் பல பாத்திரங்கள் நகர்ந்தாலும் சீதா என்னும் பெண் பாத்திரமே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னோக்கு –
பின்னோக்கு உத்தியைப் பாத்திரங்கள் நினைத்துப் பார்ப்பது போலவும் ஆசிரியரே கதைகூறுவது போலவும் அமைக்கலாம். நனவோடை உத்தியும் இதில் அடங்கும். கடந்த காலத்தைக்காட்டவும் பின்னோக்கு உத்தி பயன்படுகின்றது. இவ்வாறான பின்னோக்கு உத்திமுறையை 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதையில் வெளிப்படுகின்றது. ரயிலில் சந்தித்துக்கொள்ளும் சீதா - ஸ்ரீராம் ஆகிய இரு பாத்திரங்களும் தாம் பெண்பார்க்கும் படலத்தில் சந்தித்துக்கொண்டமை பின்னோக்குநிலையில் ஆசிரியரால் காட்டப்பட்டுள்ளன. 'அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் ஒரு கணம் அதிர்ந்துபோனாள். அவனைநேருக்கு நேர் சந்திப்போம் என்று அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. கண்களில் சட்டென ஈரம் படர்ந்தது. தலை லேசாக வலிப்பது போலிருந்தது...' என இச்சிறுகதையின் ஆரம்பம் முன்னர் இவர்களின் வாழ்வில் கசப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளதை பின்னோக்கி கூறவிழைகின்றது. சிந்து மனவெளியும் இத்தகைய பின்னோக்கு உத்தியை ஒரு ஆண் பாத்திரத்தின் மூலம் கூறுகின்றது. ' மனம் குழம்பிப்போய் சஞ்சலப்பட்டது. இந்தத் திரைப்படத்தைப் பார்த்திருக்கக் கூடாதோ என்று எண்ணத்தோன்றியது. சஞ்சலம் என்பது எப்போதும் எவருக்கும் வரலாம்... கண்முன்னால் நடப்பதைப் பார்த்துக்கொண்டு எப்பொழுதும் இளிச்சவாயாக இருந்துவிடமுடியுமா?...' என ஒரு திரைப்படத்தை பார்த்து தனது மனப்போராட்டத்தை வெளிப்படுத்தும் ஒரு ஆணின் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பின்னோக்கி நகர்வதை கதையின் ஆரம்பத்தில் குரு அரவிந்தன் காட்டியுள்ளார். ஏனைய சிறுகதைகள் அடுத்தடுத்த சம்பவங்களை தொடர்ச்சியாக கூறுகின்றன.
கடித உத்தி -
சிறுகதைகளில் கதையைக் கூறிச்செல்லும்போது இடையில் கடிதங்களை கொண்டு வந்தும் கதையை கூறிச் செல்வதை காணலாம். கரு அரவிந்தன் தனதுசிறுகதைகளில் கடிதங்களை கொண்டு வந்துள்ளமையையும் காணமுடிகின்றது. சிறப்பாக ஒரு அப்பா ஒருமகள் ஒரு கடிதம் என்னும் சிறுகதை தலைப்பே கடித உத்திக்கு சான்றுகாட்டுகின்றது. தந்தை – மகள் உறவின் ஆழத்தை அற்புதமாக படம்பிடிக்கும் இச்சிறுகதையின் ஆரம்பத்தில் ஒரு மகள் அவளது தந்தைக்கு,
'அன்புள்ள அப்பா,
அப்பா இனிமேல் உங்களை உரிமையோடு அப்பா என்று என்னால் அழைக்கமுடியுமோ தெரியவில்லை. ஆனாலும் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'டி.என்.ஏ.ரிப்போர்ட்' உங்கள் கையிற்கு வருமுன் எனக்கும் உங்களுக்கும் இடையே இருந்த உறவைப்பற்றி மனம் விட்டுப் பேசவிரும்புகின்றேன்...'
என கடிதம் ஆரம்பமாவதோடு பின்னோக்கு நிலையைக் கடித உத்தியைக் கொண்டு வந்து நனவோடையாக கதையை நகர்த்தியுள்ளார் குரு அரவிந்தன். 'இதுதான் பாசம் என்பதா' சிறுகதையில் கடிதம் பற்றிய பதிவுகள் விரிவாக அலசப்படவில்லை. எனினும் ஒரு கடிதத்தினால் சீதா என்னும் பெண்ணின் திருமணம் தடைபடுவதை இச்சிறுகதையாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே குரு அரவிந்தன் தமது சிறுகதைகளில் கடித உத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளமையை நன்கு அறியமுடிகின்றது.
தொடக்கமும் முடிவும் –
சிறுகதைகள் இயற்கை வர்ணணைகளுடனும், உரையாடலுடனும், ஆசிரியரின் கூற்றாகவும் அமைவதுண்டு. அவ்வாறு அமையும் சிறுகதையின் தொடக்கம் வாசகரை வாசிக்கத்தூண்டுவதாக அமைதல் சிறந்தது. குரு அரவிந்தனின் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு சிறுகதைகளிலும் கதையின் தொடக்கம் வாசிக்கத்தூண்டுவதாகவே அமைந்துள்ளது. அடுத்து சிறுகதையின் முடிவு சிந்திக்கவைப்பதாகவும் முடிவை அவர்களிடமே ஒப்படைதாகவும் படைக்கப்பட வேண்டும். முடிவு முடிந்துவிடாமல் மீண்டும் தொடர்வதாகவும் திருப்புமுனையுடன் கூடியதாகவும் படைப்பது சாலச்சிறந்தது. 'இதுதான் பாசம் என்பதா' என்னும் சிறுகதை தொடக்கம் முதல் முடிவு வரை உணர்வோட்டத்துடன் ஓடி முடிகின்றது. ஒரு பெண் தனது தந்தையாலே வஞ்சிக்கப்பட்டு திருமணவாழ்வை இழக்கும் துன்பத்தை பதிவுசெய்யும் இச்சிறுகதை இறுதியில் ' 'அப்பா நீங்களா அப்பா இப்படிச் செய்தீங்க? என்னுடைய பிரிவால், என்னையே நம்பி இருக்கும் இந்தக் குடும்பம் நடுத்தெருவிலே நிற்கவேண்டி வந்துவிடுமோ என்று பயந்துட்டீங்களாப்பா? என்னோட உணர்ச்சிகளை எப்படியாவது பல்கலைக் கடித்துக் கொண்டு என்னால் பொறுத்துக்க முடியும். ஆனால் இந்தக் குடும்பத்தால் வயிற்றுப்பசியை பொறுக்க முடியுமா? இவங்க என்னோடு உழைப்பை நம்பி இருக்கும் வரை நான் கல்யாணமே செய்துக்கப்போறதில்லை பயப்படாதீங்க அப்பா.' கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக்கொண்டு கடிதத்தை கிழித்துப் போட்டாள். மனதில் இருந்த சுமை குறைந்தது போல இருந்தது.' என இச்சிறுகதையில் வரும் சீதா என்னும் பாத்திரத்தின் உரையாடலுடன் கதையின் முடிவு முடிந்தாலும் இனி அவள் திருமணம் செய்வாளா? அவளது வாழ்க்கையின் அர்த்தம் என்ன? அவளது தந்தை ஏன் இப்படிச் செய்தார்? மகளின் வாழ்விற்கு என்ன பதில் கூறபோகிறார் என முடியும் சிறுகதையின் முடிவு பல முடிவுகளை எடுக்கவைக்கின்றது. இவ்வாறு குரு அரவிந்தனின் சிறுகதைகளில் முடிவுகள் சிறப்பாக சிந்திக்கத்தூண்டும் வகையில் அமைந்துள்ளன.
முடிவுரை –
எனவே குரு அரவிந்தனின் சிறுகதைகளை பகுப்புமுறைத் திறனாய்வின் வழி ஆராயும்போது அவர் கையாண்டுள்ள சிறுகதையின் கூறுகள் ஒரு சிறுகதைக்கு வடிவம் தந்து உயிருடன் நடமாட வைப்பதை அறியமுடிகின்றது. பொருத்தமான தலைப்பு, தலைப்பிற்கேற்ற கரு, கதையின் ஆரம்பம், வாசகரை சிந்திக்கத்தூண்டும் முடிவு, பின்னோக்கு உத்தி என அனைத்துஅம்சங்களும் சிறப்பாக பொருந்தி நிற்கின்றன. பொதுவாக குரு அரவிந்தனின் சிறுகதைகளில் உணர்ச்சிகளோடு, பாசத்தோடு, சந்தேகத்தோடு போராடும் பாத்திர வார்ப்புகளே எல்லை விரிந்துகிடக்கின்றன. சற்று போராட்டத்துடன் புரட்சிகரமாக சிந்தித்து செயலாற்றும் பாத்திரங்களையும் கதைக்கருவையும் அமைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். சூழல் தொடர்பான வருணணைகளையும் சற்று கையாண்டிருந்தால் புலம்பெயர்வாழ் மக்களின் பண்பாட்டையும் தெளிவாக அறியும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். எது எவ்வாறு இருப்பினும் கலையம்சத்துடன் இவரது சிறுகதைகள் சிறப்பாக வடிவம் பெற்று தமிழ் உலகில் நடைபயில்வதையும் தனக்கான ஒரு இடத்தைக் குரு அரவிந்தன் நிலைநாட்டியுள்ளமையையும் மறுதளிக்கமுடியாது.
உசாத்துணை:
1.https://canadiantamilsliterature.blogspot.com/
2.நடராசன், தி.சு., திறனாய்வுக்கலை, நிவ் சென்ஜரி புக்ஹவுஸ், சென்னை, 2003.
3.புயல் ஸ்ரீகந்தநேசன், போர்க்காலச் சிறுகதைகள், தாய்மொழிக் கலை மன்றம் வெளியீடு, வடக்கு மாகாணம், யாழ்ப்பாணம்.
Comments
Post a Comment