சோமாலியப் பூனைகள் - Short Story
சோமாலியப் பூனைகள்
குரு அரவிந்தன் - Kuru Aravinthanபக்கத்து வீட்டு பூனை மாலை நேரங்களில் எங்கள் வீட்டின் பின் வளவைக்கடந்து அடுத்த வீட்டிற்குச் செல்வதை அடிக்கடி நான் கண்டிருக்கின்றேன். எனது எல்லைக்குள் வந்ததாலோ என்னவோ ஒரு கணம் நின்று என்னைப் பார்த்துவிட்டு அப்புறம் விறைப்பாக வாலை நீட்டியபடி கடந்து செல்லும். அந்தப் பூனையைப் பார்ப்பதற்கு மெல்லிய மண்ணிறமாயும் கழுத்துப் பக்கம் சாடையான வெள்ளை நிறமாயும் இருக்கும்.
செல்லப்பிராணி என்பதால் அதை அரவணைப்பேன் என்று எதிர்பார்த்திருக்கலாம். பின் வளவில் ஒரு சிறிய வீட்டுத் தோட்டம் இருந்தது. தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற சில செடிகளைப் பயிரிட்ருந்தேன். யூன் தொடக்கம் ஆகஸ்ட் வரைதான் பலன் எடுக்கலாம். அப்புறம், குளிர், பனி என்று வந்துவிடும்.
என்னைப் பொறுத்தவரையில் ஊரிலே பார்த்தது போன்றதொரு பூனைதான் அது, ஆனால் எனது தங்கைதான் சொன்னாள், பார்ப்பதற்கு அபிஸீனியன் பூனைகள் போல இருந்தாலும், இது ‘சோமாலியன் காற்’ என்று. பத்து பன்னிரண்டு வருடங்கள் வரை வாழக்கூடிய இவை, ஏழு எட்டு இறாத்தல் நிறை இருக்கலாம், பெரிய கண்கள், பெரிய காது, கழுத்திலே நிறைய முடி இருக்கும், குட்டி நரியைப்போல தோற்றம் தரும், மனிதருடன் நேயத்துடன் நன்கு பழக்ககூடியது என்று சொன்னவள், சோமாலியன் பூனைகள் அழகானவை மட்டுமல்ல, அவற்றுக்கு ஒரு தனித்துவம் இருப்பதாகவும் அதைப் பற்றி நிறைய வர்ணித்தாள்.
சோமாலிய பூனைகளுக்குத் தனித்துவம் இருப்பதாக தங்கை சொன்னபோது, எனக்கு சிமொனின் ஞாபகம் சட்டென்று வந்தது. அவளும் அப்படித்தான் ஒரு தனித்துவம் கொண்டவளாக இருந்தாள். பொதுவாக ஆபிரிக்கப் பெண்களில் எதியோப்பிய பெண்களைத்தான் அழகானவர்கள் என்று வர்ணிப்பார்கள். இவளுடைய முகச்சாயலில் உள்ள அழகு எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். இவள் சோமாலியாவில் இருந்தாலும் எதியோப்பிய எல்லை பகுதியில் இருந்ததால், எதியோப்பியாவில் இருந்து இவளது மூதாதையர் சோமாலியாவுக்குக் குடிபெயர்ந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தேன். கறுப்பாக இல்லாமல், கொஞ்சம் பழுப்பு நிறமாக இருக்கும் சோமாலியர்கள் தாங்கள் அரேபியா பகுதியில் இருந்து வந்ததாகச் சொல்லிக் கொள்வார்கள்.
ரொறன்ரோவில் உள்ள பேரங்காடிக்குப் போயிருந்தபோது, எனக்கு எதிர்ப்பக்கத்தில் பொருட்களை எடுத்துக் கொண்டிருந்தவளைத் தற்செயலாகப் பார்த்த போது, எங்கோ பார்த்த ஞாபகம் வந்தது. முகச்சாயல் அவளைப் போல இருந்தாலும், களைத்து வாடிக் கறுத்துப் போனமுகத்துடன் அவள் இருந்தாள். நான் அவளை உற்று நோக்குவதை அவள் கவனித்திருக்க வேண்டும், சட்டென்று திரும்பிப் பார்த்தாள். என்னைச் சுதாரித்துக் கொண்டு,
‘மன்னிக்கணும், நீங்க சிமொன்தானே?’ என்றேன். ஆச்சரியமாய் என்னை ஒரு கணம் மேலும் கீழும் பார்த்தவள்,
‘ஆமாம், நீங்க?’ என்றவள் ‘வார்ஸமிதானே?’ என்றாள்.
என்னை அவள் இனங்கண்டதில் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
‘மா பியாந்தாய்..?’ எப்படி இருக்கிறாய் என்று எங்க சோமாலிய மொழியிலேயே கேட்டேன்.
‘நவத் வா பியானாய்’ நல்லாய் இருக்கேன் என்று பதில் சொன்னாள்.
‘எப்போ இங்கே கனடாவுக்கு வந்தாய்?’ என்று கேட்டேன்.
‘போன வருடம்தான், வந்து ஒரு வருடமாச்சு’ என்றாள்.
‘எங்கே இருக்கிறாய்?’ என்று கேட்டேன். அவள் ஒரு கணம் தயங்கினாலும், தனது செல்போன் இலக்கத்தையும், முகவரியையும் தந்தாள்.
சோமாலியாவில் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் காரணமாக ஆயுதப் போராட்டக் குழுக்கள் பல உதயமாகியிருந்தன. காலப்போக்கில் கொள்கைகளை மறந்து இயக்கங்கள் தங்களுக்குள் சண்டைபிடிக்கத் தொடங்கியிருந்தன. அவற்றால் ஏற்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள முடியாமல்தான் என்னைப் போன்ற பாதிக்கப்பட்ட பலர் கனடாவுக்குப் புலம் பெயர்ந்திருந்தோம். பாதிக்கப்பட்ட பல இனத்தவர்களுக்குத் தஞ்சம் கொடுத்தது போலவே கனடா நாடு எங்களுக்கும் தஞ்சம் கொடுத்திருந்தது.
சோமாலியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நகரமான கிஸ்மாயோவில், எங்களுடைய வீட்டிற்கு முன் வீட்டில்தான் சிமொனின் தாயாரின் வீடு இருந்தது. தாயார் மறுதிருமணம் செய்து அங்கே குடிவந்திருந்தாள். சிமோன் வடக்கே உள்ள வேறு ஒரு கிராமமான அபாலியில் தனது தந்தையுடன் தான் இருந்தாள். தாயாரின் வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அவளைக் கண்டு கதைப்பதுண்டு. எப்போதும் சிரித்த முகத்தோடு மனதிலே எதையும் வைத்திராமல் ரொம்ப சிநேகமாய் பழகக்கூடிய அவளிடம் எனக்கு ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. அவளது அந்த அப்பாவித்தனமான சிரித்த முகம்தான் என்னைக் கவர்ந்திருக்க வேண்டும். அங்கே வரும்போதெல்லம் அவளே எங்கவீடு தேடி ஓடிவந்து தனது குடும்பம் பற்றி, அல்லது ஏதாவது முக்கியமான நிகழ்வுகள் பற்றிச் சொல்வாள்.
ஆங்கில மொழி கற்பதற்காக மூன்றோ நான்கு மாதங்கள் விடுமுறையின் போது தாயாரின் வீட்டில் வந்து தங்கியிருந்தாள். நான் ஆங்கிலம் கற்ற இடத்திற்குத்தான் அவளும் வந்ததால் அவளுடன் நெருக்கமாகப் பழக எனக்கு அதிக வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின் மீண்டும் தந்தையின் வீட்டிற்குச் சென்று விட்டாள்.
மறுமுறை அவள் தாயார்வீட்டிற்கு வந்தபோது, அவள் வெளியே வரவே இல்லை. என்னுடன் கதைக்கவும் இல்லை. எனது தங்கைதான் அவள் வந்திருப்பதாகச் சொன்னாள். அவளைப் பார்ப்பதற்காக நானாகத்தான் தாயாரின் வீடு தேடிச் சென்றேன்.
உள்ளே இருந்தவளைத் தாயார்தான் கூப்பிட்டாள். வழமை போல கலகலப்பின்றி சோகமாக இருந்தவள், என்னைக் கண்டதும் சற்றுத் தயங்கினாள். அவளுக்கு என்ன நடந்தது என்று விசாரித்த போதுதான், அவள் நடந்ததைச் சொல்லத் தயங்கினாள்.
‘நல்ல நண்பன் என்ற முறையிலேதான் கேட்டேன் சிமொன், விருப்மில்லாவிட்டால் சொல்ல வேண்டாம்’ என்று சொல்லி விட்டு நான் இருக்கையை விட்டு எழுந்தேன். ‘அவள் தனது துயரத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லையே’ என்ற மனக்குறை ஏனோ எனக்குள் ஏற்பட்டது, ஆனால் அவளிடம் அதிக உரிமையை எதிர்பார்க்கிறேனோ என்ற நினைப்பில் நான் எழுந்திருந்தேன்.
சட்டென்று எழுந்தவள் கண்கலங்க என்னைப் பார்த்தாள்.
‘இருங்க வார்ஸமி சொல்றேன்’ என்றாள். ஏதோ ஒரு காரணம் சொல்லப் போகிறாள் என்ற எண்ணத்தில் நான் மீண்டும் அமர்ந்தேன். அவள் தனது துயரத்தை ஒவ்வொன்றாகக் கொட்டித் தீர்த்தபோது, நான் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்தேன்.
அவளது தந்தை வட்டிக்குப் பெரியதொகைப் பணம் வாங்கியிருந்தார். பணம் கொடுத்தவர் வீட்டுக்கு வந்தபோது சாக்குப் போக்குச் சொல்லி அவரை வேறு ஒருநாள் வரும்படி கேட்டிருந்தார். அவரைச் சமாளிப்பதற்காக, அவருக்கு தேனீர் பரிமாறும்படி தந்தை சொன்னதால் இவள் தேனீர் பரிமாறினாள். அப்போது, ‘இது உன்னுடைய மகளா’ என்று அவர் விசாரித்திருக்கிறார்.
மகளைத் தனக்குக் கட்டிவைத்தால், பணத்தைத் திருப்பித் தரவேண்டியதில்லை என்று சொல்லி ஆசை காட்டியிருக்கிறார். சோமாலியாவில் ஆண்கள் நான்கு மனைவிகளை வைத்திருக்க சட்டம் இடம் கொடுப்பதால், அதை நம்பிய தகப்பனின் சம்மதத்துடன் மூன்றாவது மனைவியாக, அவளது விருப்பம் இல்லாமலே அவளைப் பணம் கொடுத்தவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். ஆணாதிக வெறிகொண்ட கிராமம் என்பது மட்டுமல்ல, கிழவனாக இருந்தாலும் பணக்காரன் என்ற முத்திரை குத்தி இருந்ததால், அந்தச் சமூகத்தில் இது சாதாரணமாக நடக்கும் ஒரு நிகழ்வாகவே இருந்தது.
81 வயதுக் கிழவனுக்கு 18 வயதில் மனைவியா, அதுவும் மூன்றாவது மனைவியாக, அவளால் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முதலிரவன்றே அவளது கனவுகள் கலைந்து போயின. இரவு வயிறு நிறையச் சாப்பிட்டதும், குறட்டைவிட்டுத் தூக்கம் போடும் அவனால் வேறு என்னதான் செய்யமுடியும். ஒருநாள் இரண்டுநாள் என்று ஒரு மாதமே ஓடிவிட்டது. ஏதோ ஒரு வாழ்க்கை தனக்கு அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு வந்தவளுக்கு வெறும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தனக்குச் சமைத்துப் போடத்தான் இவன் என்னைத் திருமணம் செய்து கொண்டானா? உணர்ச்சிகள் அற்ற ஜடம் போல அவளை நடத்தும் அவனுடன் வாழப்போகும் மிகுதி நாட்களை நினைக்க அவளது உடம்பு நடுங்கியது. ‘வீட்டு வேலைகளைச் செய்விக்கத்தான் அவளைத் திருமணம் செய்கிறேன்’ என்ற உண்மையை மறைத்து, அவளை அங்கு அழைத்துக் கொண்டு வந்திருப்பது அவளுக்குப் புரிந்தது.
இளமைக் கனவுகள் சிதைந்ததால், அவள் மனம் குழம்பிப் போய் இருந்தாள். அவளுக்கு எதிலும் நாட்டம் இருக்கவில்லை. போதாக் குறைக்கு அன்று மாதவிலக்கு வலி வேறு, குளித்துவிட்டு வந்துதான் மதியச் சமையலைத் தொடங்கினாள். அதனால் அன்று சமையல் சற்றுச் சுணங்கிவிட்டது.
மதியநேரம் அவன் வந்தான், பசியகோரம் அவனைத் தாண்டவமாடவைத்தது. அவனைப் பார்த்ததும் மது அருந்தி இருப்பானோ என்று இவள் சந்தேகப்பட்டாள். சமையல் முடியவில்லை என்ற ஆத்திரத்தில் பொருட்களை எடுத்து வீசி எறிந்தது மட்டுமல்ல, அவளைக் கைநீட்டி அடித்துமிருந்தான்.
அவள் அழுதபடி பயந்து போய் மூலையில் உட்கார்ந்திருந்தாள். இதுவரை யாருமே அவளைக் கைநீட்டி அடித்ததில்லை. அவனது மற்ற மனைவிகளுக்கு முன்பாக அடிபட்டதில் அவளது தன்மான உணர்வுகாரணமாக அவமானமாக இருந்தது. கன்னம் வீங்கி வலித்தது. இப்படி ஒரு நிலை தனக்கு ஏற்படும் என்று அவள் எதிர்பார்க்கவும் இல்லை.
இனியும் பொறுக்க முடியாது என்ற கோபத்தில் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தாள். அவளுக்குத் தெரிந்த ஒரே வழி, அதைத் தான் தேர்ந்தெடுத்தாள். சமய முறைப்படி அவர்களது திருமணம் இன்னும் நடக்காததால், மறுநாள் அதிகாலையில் எழுந்து சொல்லிக் கொள்ளாமல், களவாகப் புறப்பட்டுத் தாயாரின் வீட்டுக்கு ஓடிவந்து விட்டாள். அவர்கள் தகப்பனின் வீட்டுக்குத் தேடிப்போகலாம், அங்கே இல்லை என்று அறிந்ததும் இங்கே தேடிவரலாம் என்பதால்தான் அவள் வீட்டை விட்டு வெளியே வராமல் மறைந்திருந்தாள்.
அவள் தனது கதையைச் சொன்ன போது அவன் உறைந்து போயிருந்தான். உள் மனசு அவளை விரும்பியதால் அவளுக்காகப் பரிதாபப்பட்டது. தாயார் அங்கே இருந்ததால் மனசில் உள்ளதை வெளியே சொல்ல முடியாமல் தவித்தான். சமூகக் கட்டமைப்பு காரணமாக அவனால் அவளுக்காக உடனடியாக எதுவும் செய்ய முடியவில்லை.
வருவது வரட்டும், எப்படியாவது அவளைத் தனியே சந்தித்து தனது விருப்பத்தை முதலில் வெளிப்படுத்த அவன் விரும்பினான். ஆனால் ‘சொல்லாத காதல் என்றுமே ஒருதலைக் காதலாய் போய்விடும்’ என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை. அன்று இரவு அவனது வாழ்க்கையில் அதுதான் நடந்தது.
அன்றிரவு முன்வீட்டில் நடக்கக்கூடாத சம்பவம் நடந்துபோயிருந்தது. ஆரவாரம் கேட்டு எழுந்து என்ன நடக்கிறது என்று எட்டிப் பார்த்தான். அவளது கணவன் தான் வந்து முன்வீட்டில் கலாட்டா பண்ணுவதாக அவன் முதலில் நினைத்தான். ஆனால் பிக்கப் வண்டியின் வெளிச்சத்தில் இரண்டு மூன்று இளைஞர்கள் துப்பாக்கியோடு நடமாடுவதைக் கண்டதும், போராளிகள்தான் வந்திருக்கிறார்கள் என்பது புரிந்து போயிற்று. குறுக்கே யார் வந்தாலும் நீதிநியாயமின்றி கண்ணை மூடிக்கொண்டு சுட்டுத் தள்ளக்கூடியவர்கள் அவர்கள் என்பதால், அந்தப் பக்கம் போகவே அவனுக்குப் பயமாக இருந்தது.
காலையில் தான் என்ன நடந்தது என்பதை அறிய முடிந்தது. யார் வந்தார்கள், யார் அவளைக் கடத்திச் சென்றார்கள் என்ற விபரம் எதுவுமே தெரியவில்லை. தாயாரின் ஓலம் மட்டும் இரவிரவாகக் கேட்டுக் கொண்டிருந்தது. தங்களுக்குள் சண்டைபிடித்துக் கொண்டிருந்த போராளிகளின் இயக்கங்களில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். துப்பாக்கிக் கலாச்சாரம் காரணமாக யாருமே வாய்திறக்கவில்லை. அவள் தொலைந்து போனாலும், அவளது அந்தச் சிரித்த முகம் மட்டும் அவனது மனசுக்குள் பொதிந்து கிடந்தது.
அன்று சோமாலிய கிஸ்மாயோவில் தொலைந்து போயிருந்தவளைப் பல வருடங்கள் கழித்து ரொறன்ரோவில் உள்ள பேரங்காடி ஒன்றில் சந்தித்தான். அப்போதுதான் அவளது செல்போன் இலக்கத்தைப் பெற்றிருந்தான். அவளுக்குச் செல்போனில் செய்தியைத் தெரிவித்துவிட்டு, அவள் தந்த முகவரியைத் தேடிச் சென்றான்.
வாசல் கதவை அவள்தான் திறந்தாள்.
‘தனியவா தங்கியிருக்கிறாய்?’ என்று கேட்டான்.
‘இல்லை இன்னுமொரு ரூம்மேட்டோட, அவள் வேலைக்குப் போய்விட்டாள். சாயந்தரம்தான் வருவாள்.’ என்றாள்.
நீண்ட நேரம் அவளுடன் கதைத்துக் கொண்டிருந்தான். அவள் கடந்த காலக்கதையைச் சொல்லி விம்மினாள். தங்களைக் கடத்தி வைத்திருந்த போராளிகளிடையே சண்டை நடந்தபோது, தப்பி வந்து கனடிய அமைதிப்படையிடம் சரணடைந்ததால், அவர்கள் தங்கள் முகாமில் வைத்திருந்த பின் அகதிகளாகக் கனடாவுக்கு அனுப்பி வைத்ததாகக் குறிப்பிட்டாள்.
தங்களைக் கடத்திச் சென்ற போராளிகள் தங்களுடைய பாலியல் தேவைகளுக்காகப் பல நாட்களாகத் தேவைப்பட்ட போதெல்லாம் தங்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகச் சொல்லி அழுதாள்.
அவளைத் தேற்றி, அவள் அணிந்திருந்த ‘ஹிஜாப்பால்’ அவளது கண்ணீரை அவன் துடைத்துவிட்ட போது, அவள் அதைத் தடுக்கவில்லை. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று அவனுடைய மனசில் உள்ளதை அவளிடம் சொல்லிவிட நினைத்து வாய்திறக்க முனைந்த போது, அடுத்து அவள் சொன்ன வசனம் அனது ஆசைகளைக் குழிதோண்டிப் புதைத்திருந்தது.
‘ஏனோ தெரியவில்லை, ஆண்கள் மேல் நான் வைத்திருந்த மதிப்பு, மரியாதை எல்லாவற்ரையும் நான் இழந்துவிட்டேன். என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட்ட ஆண்கள் எல்லோரையுமே, ஒரு பெண்ணின் மனதைப் புரிந்து கொள்ள முடியாத சுயநலம் மிக்க சந்தர்ப்ப வாதிகளாகவே என்னால் பார்க்க முடிகின்றது, சந்தர்ப்ப சூழ்நிலை அப்படித்தான் என்னை நினைக்க வைத்திருக்கின்றது.’ என்றாள்.
ஒரு ஆணைப்பற்றி அவளது மனதில் ஏற்பட்டிருந்த எண்ணத்தை வெளிப்படுத்திய போது அவன் உடைந்து போனான். தன்னையும் சேர்த்துத்தான் அவள் அப்படிச் சொல்லியிருக்கிறாள் என்ற நினைப்பில், குற்றம் உள்ள நெஞ்சம் குறுகுறுப்பது போல, சொல்ல நினைத்ததையும் சொல்ல முடியாது அவன் மீண்டும் ஒரு கோழையாய் மாறி, மௌனமாகவே வீடு திரும்பினான்.
பின்வளவில் சிந்தனையோடு உட்கார்ந்திருந்த அவனது கண்ணில் அந்தப்பூனை கடந்து போவது தெரிந்தது. சோமாலியப் பூனைகளை அழகான பூனைகள் என்று வியப்போடு வர்ணிப்பவர்கள், அந்த அழகிய பூனைகளும் அன்பு, பாசம், நேசத்திற்காக ஏங்குவதை ஏனோ பலர் புரிந்து கொள்வதில்லை.
Comments
Post a Comment