Short Story - Eliyaana - by Kuru aravinthan
எலியானாவின் கடைசிப் பயணம்
திடீரெனக் கேட்ட அந்தப் பெண்ணின் அவலக்குரல் அவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது?
காரணம் புரியாமல் அதிர்ச்சி அடைந்த தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஒருவரை ஒருவர் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டனர்.
அந்தப் பெண்ணின் அவலக்குரல் எதைக் குறிக்கிறது?
அந்த அவலக் குரல் எலியானாவுடையதாக இருக்குமோ? அப்படியானால் அவளுக்கு என்ன நடந்திருக்கும்?
எதுவும் புரியாமல் அவர்கள் அதிர்ந்து போயிருந்தனர், காரணம் அவர்களுடனான தொலைத்தொடர்பு திடீரெனத் துண்டிக்கப்பட்டிருந்தது.
ஆஜன்ரைனாவின் ‘சான்யுவான்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அந்தப் பெண்ணின் அவலக்குரல் கேட்டதற்குக் காரணம் அந்த நீர்மூழ்கியில் பயணித்த 44 பணியாட்களில் ஒரே ஒரு பெண் பணியாளர் எலியானாவாகத்தான் இருந்தாள்.
ஏன் திடீரென நீர்மூழ்கிக் கப்பலுடன் தொடர்பு கொள்ள முடியாமற் போனது? பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் சான்யுவான் என்ற நீர்மூழ்கியில் இருந்த பணியாட்களின் குடும்பத்தினரும் விடை தெரியாத கேள்விக்குப் பரபரப்பாக விடையைத் தேடிக் கொண்டிருந்தனர்.
ஆழ்கடலில் தண்ணீருக்கடியில் பயணித்த நீர்மூழ்கிக்கு என்ன நடந்திருக்கும், விபத்தா?, அல்லது எதிரிகள் தாக்கினார்களா?
திடீரெனக் காணாமல் போன நீர்மூழ்கியில் இருந்த 44 பணியாட்களும் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா?
செய்தியைக் கேள்விப்பட்டு காலையில் பணியாட்களின் குடும்பத்தினர் கடற்படைத் தலைமையகத்திற்கு முன்னால் கூடத்தொடங்கியிருந்தனர்.
அவர்களின் கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கும் வரை அந்தப் பணியாட்களின் குடும்பத்தினரின் அந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என்பதைக் கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் புரிந்து கொண்டனர்.
ஞாயிற்றுக் கிழமை திரும்பியிருக்க வேண்டிய நீர்மூழ்கிக் கப்பல் இதுவரை ஏன் திரும்பவில்லை என்பதுதான் அவர்களின் யோசனையாக இருந்தது.
இந்த நீர்மூழ்கியில் அஜன்ரைனாவின் முதலாவது நீர்மூழ்கிப் பெண் பணியாளரும் பயணித்திருந்தார். இளம் இரத்தம் எதையாவது சாதிக்க வேண்டும் என்று துடிப்பது இயல்பானதே, அதனால்தான் சிறுமியாக இருக்கும் போது பிரமாண்டமான கடற்படைக் கப்பலைப் பார்த்ததால் கவரப்பட்டு தான் அதில் சேர்ந்ததாக எலியானா மரியா என்ற அந்தப் பெண்மணி முன்பு ஒருமுறை குறிப்பிட்டிருந்தார். 35 வயதான இவர் அந்த நீர்மூழ்கிக் கப்பலில் மூன்றாவது உயர் பதவியில் இருந்தார்.
நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் வேறு ஏதாவது தகவல் அகப்படுமா என்று இணையத்திலும், முகநூலிலும் மற்றும் தொடர்பு சாதனங்களிலும் தேடிப் பார்த்தார்கள்.
அப்போதுதான் அந்த செய்தி அவர்கள் கண்ணில் பட்டது. அட்லாண்டக் சமுத்திரத்தில் தண்ணீருக்கு அடியில் ஏதோ வெடித்தது போன்ற சத்தத்தை தங்கள் நிலையம் பதிவு செய்ததாக வீயன்னாவில் இயங்கும் செய்தியகம் ஒன்று தங்கள் இணையத்தில் பதிவு செய்திருந்தது.
கடற்படையுடன் தொடர்பு கொண்ட போது. அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு அருகேதான் இந்த நீர்மூழ்கிக் கப்பல் இருந்ததாக அஜன்ரைனா கடற்படையினர் தெரிவித்திருந்தார்கள்.
நீர்மூழ்கிக் கப்பலில் ஏதாவது விபத்து நடந்ததா அல்லது கப்பல் தாக்கப்பட்டதா என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. நவம்பர்மாதம் 15 ஆம் திகதி 268 மைல்களுக்கப்பால் இருந்த நீர்மூழ்கியுடனான கடைசித் தொடர்பு இருந்தது.
அந்த அவலக்குரல் கேட்ட சம்பவத்தின் பின் வேறு எந்தவிதமான தொடர்பும் நீர்மூழ்கியுடன் கிடைக்கவில்லை. சுமார் 10 நாட்களுக்குப் போதுமான சுவாசிக்கக் கூடிய காற்று மட்டுமே அதில் இருந்ததாகப் பதிவுகள் தெரிவித்தன.
ஆஜன்ரைனாவின் கடற்படையிடம் இருந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றுதான் சான்யுவான். இந்த நீர்மூழ்கிக் கப்பல் தண்ணீரின் மேல் மட்டத்திற்கு வந்திருந்தால், அதில் பயணித்தவர்கள் இயற்கையாகச் சுவாசிக்கக்கூடிய வசதிகள் கிடைத்திருக்கும். அப்படி மேல்மட்டத்திற்கு வந்திருந்தால், அதில் பயணித்தவர்கள் உயிர் தப்பவும் வழிவகுத்திருக்கும்.
தகவல் அறிந்ததும், உதவி செய்யும் நோக்கத்தோடு நட்பு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இரண்டு விமானங்களும் அட்லான்டிக் சமுத்திரத்தில் இந்த நீர்மூழ்கியைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டன.
அப்பகுதியில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று அடித்துக் கொண்டிருந்ததால், சுமார் 24அடி உயரமான அலைகளால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்புக்கு மத்தியிலும், தேடுதல் வேட்டை தொடர்ந்தும் நடைபெற்றது. மனிதாபிமானத்தோடு சில நாட்களாகத் தொடர்ந்து தேடுதல் நடத்தினாலும் மர்மமாய் மறைந்த நீர்மூழ்கி பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
ஜெர்மனி நாட்டில் 1980 ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட இந்த சான்யுவான் என்ற நீர்மூழ்கி இந்தப் பயணத்தைத் தொடரும்போது, அதில் மின் ஒழுக்கு இருந்ததாகவும், அதில் உள்ள சில மின்கலன்களும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் பதிவுகளில் இருந்து தெரிய வந்தது. 213 அடி நீளமான இந்த நீர்மூழ்கியில் மின்சாரத்தில் இயங்கும் ஒரு யந்திரமும், டீசல் எண்ணெய்யில் இயங்கும் நான்கு யந்திரங்களும் உண்டு. 2014 ஆம் ஆண்டு இதில் சில திருத்தங்களும் செய்யப்பட்டிருந்தன.
அமெரிக்காவின் நவீன தானியங்கி நீர்மூழ்கியைக் கொண்ட ஸ்கான்டி பற்ரகோணியா என்ற கடற்படைக் கப்பல் ஒன்றும் தேடுதலுக்காக அனுப்பப் பட்டிருந்தது. இந்தக் கப்பல் ஆஜன்ரைனாவின் தென்கரையில் இருந்து 430 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள விபத்து நடந்த இடத்தைத் திங்கட்கிழமை சென்றடைந்தது.
பிரான்ஸ் நாட்டு எரிடிஸ் என்ற நீர்மூழ்கி ஒன்றும் இப்படித்தான் 1970 ஆம் ஆண்டு தொலைந்தபோது 53 நாட்களின் பின்புதான் கண்டு பிடிக்கப்பட்டது. அதில் பயணித்த 57 பணியாளர்களும் இறந்து போயிருந்தனர்.
சான்யுவான் தொலைந்து பத்து நாட்களாகிவிட்டதால் அதில் பயணித்தவர்களின் இருப்பும் சந்தேகத்திற்கு இடமாகிறது.
கனடாவும் சிசி144 சலஞ்சர் வகை தேடுதல் விமானத்தை அனுப்பியிருந்தது. நவீன வசதிகளைக் கொண்ட ரஸ்யாவின் விமானம் ஒன்றும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. தண்ணீருக்கடியில் சுமார் 20,000 அடி வரை இதில் பொருத்தியுள்ள கருவிகளால் தேடுதல் செய்ய பட்டது. சுமார் 4000 படையினரும் இத்துறை நிபுணர்களும் இந்தத் தேடுதலில் ஈடுபட்டிருந்தார்கள்.
இனி வரும் காலங்களில் வசதிகள் இருப்பதால், அதிநவீன தொழில் நுட்பத்தைப் பாவிப்பதன் மூலம் இப்படியான விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ள முடியும் என்று அறிவியலாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
இந்த நீர்மூழ்கியில் பயணித்தவர்கள் ஆரோக்கியமாகத் திரும்பி வரவேண்டும் உறவுகள் நண்பர்கள் என்று எல்லோரும் என்று பிரார்த்தித்தார்கள்.
ஆனால் விதி சதி செய்திருந்ததை பின்பு தான் அறிந்து கொள்ள முடிந்தது.
ஆமாம், தேடுதல் வேட்டை நடத்தி போது, 2018 நவெம்பர் மாதம் 16 ஆம் திகதி சுமார் 3000 அடி ஆழ்கடலில் சுழியோடிகள் நீர்மூழ்கியின் சில பாகங்களைக் கண்டெடுத்தனர்.
அந்த விபத்து நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
எலியானாவின் கடைசிப் பயணமாக மட்டுமல்ல, அவளுடன் சென்றவர்களுக்கும் அது தான் இறுதி யாத்திரையாக அமைந்து விட்டது.
பெற்றோரைப் பிரிந்து, ஒரு பெண்ணாய்ப் பணி நிமித்தம் ஆழ்கடல் சென்ற எலியானாவின் கடைசி நிமிட சிந்தனையோட்டம் என்னவாக இருந்திருக்கும்?
Comments
Post a Comment