அதிபர் பொ. கனகசபாபதி
அதிபர் பொ. கனகசபாபதி கனடாவில் நினைவுகூரப்பட்டார்.
குரு அரவிந்தன்
மகாஜனக் கல்லூரி முன்நாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் எம்மைவிட்டுப் பிரிந்த 10 வது ஆண்டு நினைவுநாள் கனடாவில் ரொறன்ரோவில் உள்ள மல்வேன் பூங்காவில் 4-9- 2024 அன்று நினைவு கூரப்பட்டது. பொதுவாக ஒருவர் மறைந்த தினம் என்றால் அது ஒரு சோகசம்பவமாக இருக்கும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான், அவர் புகுந்த மண்ணில் தமிழ் இனத்திற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி அதிபரின் பிறந்த தினத்திலன்று ஒவ்வொரு வருடமும் இங்குள்ள நண்பர்கள், பழைய மாணவர்கள், மற்றும் குடும்பத்தினரால் நினைவு கூரப்படுகின்றது.
இங்குள்ள நண்பர்களும், பழைய மாணவர்களும் இணைந்து அவரது நினைவாக, உள்ளுராட்சி மன்றத்தின் உதவியுடன் மல்வேன் பொதுப் பூங்காவில் ஒரு மரத்தை நட்டு, அதன் கீழ் ஒரு இருக்கையையும் வைத்திருக்கிறார்கள். இருக்கையிலும், நினைவு மரத்தின் கீழும் அவரைப் பற்றிய விபரங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. பூங்காவுக்கு வரும் அத்தனை பேரும் அதை வாசித்துச் செல்லும்போது, நினைவுத்தூபி போல, தமிழர்கள் கனடாவில் வாழ்ந்த அடையாளத்தையும், அவர்கள் ஆற்றிய சேவையையும் அது காட்டி நிற்கின்றது. புலம் பெயர்ந்த தமிழர் ஒருவருக்குக் கிடைத்த பெருமையாக இது கருதப்படுகின்றது.
மகாஜனக்கல்லூரிக் கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. முதலில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஆசிரியர் திரு. புவனச்சந்திரன் அவர்களின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில் பழைய மாணவர் சங்கத்தை கனடாவில் ஆரம்பித்து வைக்கக் காரணமாக இருந்த பெருமை மதிப்புக்குரிய திரு. பொ. கனகசபாபதி அவர்களையே சேரும். அவர் மகாஜனாவில் கற்பித்த காலத்தில் நானும் அங்கு ஆசிரியராக இருந்தேன். கனடாவில் ‘அதிபர்’ என்று அழைத்தால், தனது சிறந்த பண்புகளால் எல்லோரையும் கவர்ந்த இவரைத்தான் குறிப்பிடுவதாக எல்லோரும் புரிந்து கொள்வார்கள். இவர் புலம்பெயர்ந்த எங்களுக்கு வழிகாட்டியாக இருந்து ஆற்றிய சேவையால், தமிழ் இனம் இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றது’ என்று தனது உரையில் குறிப்பிட்டார்.
அடுத்து முன்னாள் மகாஜனக் கல்லூரி ஆசிரியர் செ. சந்திரசேகரி, திரு. குமார் புனிதவேல், திரு. செல்வரத்தினம், திரு முருகையா, திரு முத்துலிங்கம், திரு ரவீந்திரன், குரு அரவிந்தன் ஆகியோர் நினைவுரை ஆற்றினர்.
குரு அரவிந்தன் தனது நினைவுரையில் அதிபரின் வாழ்க்கையின் முக்கிய கட்டங்களை எடுத்துரைத்தார். ‘1935 ஆம் ஆண்டு சண்டிலிப்பாயில் பிறந்த இவர், 1952 ஆண்டு ஸ்கந்தாவில் படித்து அதன்பின் உயர்கல்வியை திருச்சியிலும், சென்னையிலும் பெற்றார். அங்கு இவருக்குக் ஹோனேஸ் தங்கப்பதக்கம் கிடைத்தது. 1957 ஆம் ஆண்டு மகாஜனாவில் ஆசிரியராக இணைந்தார். 1970 ஏழாலை மகாவித்தியாலய அதிபராகவும், 1971 சோமஸ்கந்தா அதிபராகவும் பொறுப்பேற்றார் 1976 மகாஜனா அதிபராகப் பொறுப்பேற்றார். 1980 நைஜீரியாவுக்குப் பயணமானார். 1987 நைஜீரியாவில் இருந்து கனடா வந்தார். 1990 ஆம் ஆண்டு முதல் தமிழ் வகுப்பை நோர்த்யோக்கிலும், 1991 ஆம் ஆண்டு கிரடிட்கோஸ் வகுப்புகளையும் ஆரம்பித்து வைத்தார். 1992 ஆம் அ+ண்டு நோத்யோர்க்கில் 13 தமிழ் வகுப்புகளை ஆரம்பித்தார். 1994 நோத்யோர்க் கல்விச் சபைக்கான தமிழ் பாட நூல்களைத் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றார். 1995 மணிவிழா கொண்டாடப்பட்டது. 1998 ரொறன்ரோ கல்விச் சபையில் தெற்காசிய பல்கலாச்சார பிரிவின் பொறுப்பை ஏற்றார். 2010 ஆம் அ+ண்டு செம்மொழி மகாநாட்டில் கலந்து கொண்டு ஆய்வுக்கட்டுரையைச் சமர்ப்பித்தார். 2012 தனது ஐந்து நூல்களைச் சர்வதேச நாடுகளில் வெளியிட்டார். 2013 அதிபரைக் கௌரவிக்கும் முகமாக லான்ஸ்டவுனில் உள்ள தமிழ் கூட்டுறவு இல்லத்தினர் அங்குள்ள படிப்பகத்திற்கு அதிபரின் பெயரைச் சூட்டியிருந்தனர். 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் 24 ஆம் திகதி அவர் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். 2015 ஆம் ஆண்டு மொன்றியல் மக்கள் நினைவஞ்சல் செலுத்திய போது மகாஜனாவின் சார்பில் இங்கிருந்து பலர் சென்று கலந்து கொண்டோம். தமிழர் தகவல், உதயன் விருது பெற்ற இவருக்கு, 2015 ஆம் ஆண்டு கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து மதிப்பளித்திருந்தது.’
குரு அரவிந்தனின் உரையைத் தொடர்ந்து ரதி சாம்பவலிங்கத்தின் நன்றி உரையுடன் நிகழ்வு சிறப்பாக முடிவுற்றது.
Comments
Post a Comment