பனிச் சறுக்கல் - Story
பனிச் சறுக்கல் குரு அரவிந்தன் விஜி எழுந்து யன்னலுக்கால் பார்வையை வெளியே படரவிட்டாள். இலை கொட்டிய மரங்கள் மொட்டையாய்ப் பனித் தூறலில் குளித்துக் கொண்டிருந்தன. வீதி ஓரங்களில் பனியகற்றும் வண்டிகளால் தள்ளி ஒதுக்கி விடப்பட்ட பனி குவிந்து கிடந்தது. அந்த வித்தியாசமான காலநிலை அவளை வியப்பில் ஆழ்த்தினாலும் அதை ரசிக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை. பனிச்சறுக்கல் என்பது இந்தநாட்டின் புகழ்பெற்ற விளையாட்டாக இருப்பதால், பனிக்காலம் எப்போது வரும் என்று இதற்காகவே பலர் காத்திருப்பார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது தங்கள் திறமையைக் காட்டுவார்கள். பல விதமான விபத்துக்களுக்கும் இந்தப் பனிக்காலம் காரணமாயிருக்கும். பனிப் பொழிவு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தொலைக் காட்சியில் பனிச்சறுக்கலால் ஏற்பட்ட பெருந்தெரு விபத்தொன்று பயணிகளை எச்சரிக்கை செய்வதற்காகக் காட்டப்பட்டது. சாதாரண பனிப் பொழிவென்றால் அதிக விபத்துகள் ஏற்படுவதில்லை, அதுவே உறை நிலைக்குப் போகும்போது வண்டிகள் சறுக்குவதற்கு அதிக சந்தர்ப்பம் உண்டு. கவலையீனமாக ஓட்டப்படும் ஒரு வண்டி சறுக்கும்போது அருகே வரும் ஏனைய வண்...