காலம் செய்த கோலம் - Story

 


காலம் செய்த கோலம்

 
 

பார்வையிட்டோர்: 34,174 
 


வள் மேடைக்கு வந்த போது அழகு மயில் ஒன்று உலா வருவது போலவே இருந்தது. அவள் ஒலி வாங்கியை வலது கையில் பிடித்தபடி மெல்ல மெல்ல அசைந்தாடியபடி அந்தப் பிரபலமான பாடலைப் பாடத்தொடங்கினாள். வெள்ளை நிறப்பட்டுத்துணியில் ஆடை அணிந்திருந்ததால், ‘ஆகா, வெண்மயில் ஒன்று மேடையில் மெல்ல அசைந்தாடுகின்றதே..!’ என்று இவன் மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.

ஆனால் அவள் பாடத்தொடங்கிய போது மயிலாகக்காட்சி தந்தவளின் குரலோ குயிலாக மாறியிருந்தது. அவனை அறியாமலே அவளது அழகிலும், இனிய குரலிசையிலும் தன்னை மறந்து அப்படியே சிறிது நேரம் உறைந்து போயிருந்தான்.

இவன் ஒரு இசை ரசிகன் என்பதால் இவனால் இசையை ரசிக்க முடிந்துது. நிகழ்ச்சி முடிந்து அவள் மேடையை விட்டு வெளியே வந்தபோது அவளுக்காகக் காத்திருந்து அவளைப் பாராட்டினான்.

‘உங்க பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?’

இவ்வளவு பிரபலமான தனது பெயரைக்கூடத் தெரிந்து கொள்ளாமல் இவன் இருக்கிறானே என்று அவள் நினைத்தாலும், நல்லதொரு ரசிகனின் மனம் நோகக்கூடாது என்பதால், சட்டென்று இறங்கிவந்து ‘நிலா’ என்று சொன்னாள்.
அவன் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

அவர்களுக்குள் ஒருவகை ஈர்ப்பு இருந்திருக்கலாம், அதன் பின் ஏதோவொரு காரணத்தை முன்வைத்து அவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். நேரம் கிடைத்த போதெல்லாம் இருவரும் உல்லாசமாகத் திரிந்தார்கள்.

ஒருநாள் உணவகத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது, அவன் திடீரெனச் சிந்தனையில் மூழ்கியிருப்பதை அவள் அவதானித்தாள்.

‘என்ன யோசிக்கிறீங்க?’ என்று கேட்டாள்.

‘ஒன்றுமில்லை, எங்க வீட்டிலே உங்க குரல் தினமும் கேட்டுக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கற்பனை பண்ணிப் பார்த்தேன்’ என்றான்.

‘இதுக்கா இவ்வளவு தயக்கம், என்னுடைய பிரபலமான பாடல்கள் சில இதில் பதிவாகி இருக்கின்றன, விரும்பினால் தினமும் போட்டுக் கேளுங்கள்’ என்று சொல்லிப் பாடல்கள் அடங்கிய சிறியதொரு எலக்ரோணிக் பொருளைக் கொடுத்தாள்.

இவன் சிரித்துவிட்டுச் சொன்னான், ‘நான் இதைச் சொல்லவில்லை, உங்கள் குரல் எங்கள் வீட்டில் ஒலிக்க வேண்டும் என்றால், நீங்களே எங்க வீட்டிற்கு நிரந்தரமாக வந்து விட்டால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றுதான் நான் சொல்லவந்தேன்.’

‘நானா, உங்க வீட்டிற்கா?’

‘ஆமாம், எங்க வீட்டிற்குத்தான்!.’

‘என்ன லிவ்விங் டுகெதரா? அதாவது இருவரும் ஒன்றாய் இருப்போம் என்று சொல்லப் போறீங்காளா?’

‘இல்லை அதற்கும் மேலே, உங்களை முறைப்படி சட்டபூர்வமாகத் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன்’ என்றான்.

அவள் ஒரு கணம் தயங்கினாள். அவன் திடீரென அப்படிக் கேட்டதால் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.

‘உங்களுக்கு நான் சொல்லப் போவது அதிர்ச்சியாக இருக்கலாம், ஆனால் ஒரு உண்மையை நான் மறைக்க விரும்பவில்லை. அதை முதலில் செல்லிர்றேன்’ என்றாள்.

‘உண்மையா? அது என்ன?’ என்றான்.

‘முதலில் உங்க மனசில தெரிந்தோ தெரியாமலோ நான் ஆசையை விதைத்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள்.’ என்றாள்.

இவள் என்ன பீடிகை போடுகின்றாள். தனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்றோ அல்லது தனக்குக் காதலன் ஒருத்தன் இருக்கிறான் என்றோ சொல்லி அதிர்ச்சி தரப்போகிறாளா?

எதுவாக இருந்தாலும் அவள் சொல்வதை முதலில் கேட்போம் என்று நினைத்தவன், முதலில் தன்னிலையை எடுத்துச் சொன்னான்.

‘ஜாதி, மதம் அது இது என்று எதையுமே நான் எதிர்பார்க்கவில்லை, நிலா, எனக்கு நீங்கதான் வேணும், வாழ்நாள் முழுவதும் நீங்க எனக்குத் துணையாகவும், நான் உங்களுக்குத் துணையாகவும் இருந்தால் அதுவே எனக்குப் போதும், அது மட்டும் நடந்தால் உண்மையாகவே நான் மகிழ்ச்சி அடைவேன்’ என்றான்.

‘நீங்கள் நல்லவர் என்று எனக்குத் தெரியும், எனக்கும் உங்களை நிரம்பவே பிடித்திருக்கு, ஆனால்..?’

‘அப்போ என்ன தயக்கம்? என்னில் ஏதாவது குறைபாடு இருக்கு என்று சொல்ல வர்றீங்களா?’

‘இல்லை அப்படி ஒன்றும் இல்லை’

‘அப்போ உங்களிடம் ஏதாவது..?’

‘இல்லையில்லை, நான் நல்ல ஆரோக்கியமாகத்தான் இருக்கின்றேன்.’

‘அப்புறம் என்ன தயக்கம், சொல்லுங்க?’

‘நீங்க கட்டாயப்படுத்திக் கேட்பதாலே சொல்லிர்றேன், நான் மானிடப் பிறப்பே அல்ல’ என்றாள்.

‘சரி, இப்ப என்ன சொல்ல வர்றீங்க’ என்றான்.

‘ஆமாம், நான் ‘ஏஐ’யால் உருவாக்கப்பட்டவள், அதாவது செயற்கை நுண்ணறிவு வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவள். ‘பி 30 எவ்’ வகுப்பைச் சேர்ந்தவள். அதைத்தான் சொல்ல வந்தேன்’ என்றாள்.

எதிர்பாராத இந்த வார்த்தைகளால் ஏற்பட்ட அதிர்ச்சியில் அவனுடைய முகத்தில் மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்த்த அவள் அவனது முகத்தையே உற்றுப்பார்த்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்தது போல, அவனது முகத்தில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை.

‘எனக்கு உங்களைப் பற்றி ஏற்கனவே தெரியும்..!’ என்றான்.

‘தெரியுமா, எப்படி?’

‘குற்றத் தடுப்புப் பிரிவில்தான் உயரதிகாரியாக இருக்கிறேன் என்பதை மறந்து விட்டீங்களா? அதனாலே உங்களைப் பற்றிய விபரங்களை இலகுவாகத் தெரிந்து கொண்டேன்.’

‘நான் யார் என்று தெரிந்துமா என்னோடு நெருக்கமாகப் பழகினீங்க?’ என்றாள்.

‘ஆமாம், ஆனால் நீயும் ஒரு உண்மையைக் கண்டு பிடித்திருப்பாய் என நினைத்தேன், ஆனால் நீ என்னைப்பற்றி எதையுமே இதுவரை கேட்காததால், நானும் ஒரு உண்மையை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன்’ என்றான்.

‘என்ன?’ என்பது போல, அவள் விழி உயர்த்தி ஆவலுடன் அவனது முகத்தைப் பார்த்தாள்.

‘நானும் ஒரு ‘ஏஐ’ மானிடன்தான், அதாவது செயற்கை நுண்ணறிவு மனிதன்தான், ‘எச் 29 எம்’ வகுப்பைச் சேர்ந்தவன்’ என்றவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் அதை நம்பமுடியாமல் ஆச்சரியம் தேங்கி நின்றது.

அவன் ‘இப்போது சம்மதமா’ என்பது போலத் தனது கையை நீட்ட, அவள் வெட்கப்பட்டுத் தனது கையை அவனது கையில் பதித்துக் கொண்டாள்.

இவர்களுக்குப் பின்னால், 2122 ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் நாட்காட்டி ஒன்று, இயற்கை, மற்றும் செயற்கை மனிதர்களால் நிறைந்திருந்த அந்த எல்லோருக்குமான உணவகத்துச் சுவரிலே மின்னிக்கொண்டிருந்தது.

.............................

(வட அமெரிக்க தமிழ் சங்க (FeTNA) அருவி இதழ் நடத்திய குறுங்கதைப் போட்டி – 2024 இல் முதற்பரிசு பெற்ற கதை)

Comments

Popular posts from this blog

Dolosbage Sri Murugan Temple

மூன்றாவது பெண்..! - Short Story