இழப்பு - Story.

 



 

சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக்கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது.

என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.

‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய்.

பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான்.

‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார்.

‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ என்றான் சிப்பாய்.

கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது. இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள்.

மரணத்தின் வாசலில் நின்று தவிப்பவன்போல, வேதனையில் முனகிக் கொண்டிருந்தான் அந்தநோயாளி. மரணபயம் குறித்த அவனது வேதனை காரணமாக அவனது முகம்; அப்படியே வெளிறிப்போய்;க் கிடந்தது. நிறைய இடங்களில் இரத்தம் வழிந்து இராணுவ சீருடையில் ஆங்காங்கே கறை படிந்திருந்ததிலிருந்து அந்த முனகலின் தேவை கருதிய வெளிப்பாடு என்னவாய் இருக்கும் என்பது அவருக்குப் புரிந்தது.

அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும் என்பதைத் தனது தொழில் அனுபவத்தில் தெரிந்து வைத்திருந்தார் டாக்டர். உதவியாளர்களிடம் அவனுடைய சீருடையை அகற்றி சத்திர சிகிச்சைக்குரிய உடையை அணிவிக்கச் சென்னார்.

போர்ச் சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு சீருடையின் துணிவில் நடமாடும் வெறிபிடித்த இந்தவக்கிரங்கள், அந்த சீருடை இல்லாவிட்டால் வெறும் பூஜ்யம்தான் என்பதில் அவருக்குச் சந்தேகமே இல்லை! ஒன்றா இரண்டா, துப்பாக்கி ரவைகள் துளைத்தது போல, உடம்பில் பட்ட இடமெல்லாம் சின்னச் சின்னக் காயங்கள். அவசரமாக எக்ஸ்றே எடுத்து, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்தார்கள்.

கையுறையை மாட்டும்போதுதான் கவனித்தார், துப்பாக்கியோடு உள்ளே நின்ற சிப்பாயை! அவனை வெளியே போகும்படி சைகையிலே காட்டினார். அவனும் வேறு வழியில்லாமல் விரோதிபோல அவரை முறைத்துப் பார்த்து விட்டு வெளியேறினான்.

சின்னஞ்சிறிய ஆணிகள், பிளேட்டுத் துண்டுகள், சைக்கிள் பால்சுகள் என்று அத்தனையும் காப்டனின் உடம்பைப் பதம் பார்த்திருந்தன. சத்திர சிகிச்சை மூலம் ஒவ்வொன்றாக அவற்றை வெளியே எடுக்க முயற்ச்சி செய்து கொண்டிருந்தவரின் மனதை அதிர்ச்சியும், ஆச்சரியமும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தன.

இதை வெடிக்க வைத்தவனின் மனதிலே எவ்வளவு கோபமும், வெறியும் இந்த ஆக்கிரமிப்பு ராணுவத்தின் மேல் இருந்திருக்க வேண்டும், இந்தத் தருணத்திற்காக எத்தனை நாள் ஊனுறக்கம் இல்லாமல் அவன் தவம் கிடந்திருப்பான் என்று உடலைக் கீறி வெளியே எடுத்த ஒவ்வொரு பொருளையும் பார்த்தபோது, தனக்குளே கணக்குப் போட்டுக் கொண்டார். எங்கேயாவது சைக்கிள் பால்சுகளைக் கண்டால் ஆக்கிரமிப்பு இராணுவம் ஏன் வெருண்டடித்துப் பயப்படுகிறது என்ற உண்மையும் அவருக்கு இப்போ புலனாகியது.

உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் அந்த அதிகாரி உயிர் தப்புவானா இல்லையா என்ற முடிவைக் காலன், இவரது கையிலே ஒப்படைத்திருந்ததை நினைத்துப் பார்க்க அவருக்கே வியப்பாக இருந்தது.

ஒரு இனத்தையே கூண்டோடு அழிக்கப் போவதாக சவால் விட்டு விட்டு வந்து, ஆயுதபலத்தால் அந்த இனத்தின் பாரம்பரிய மண்ணை ஆக்கிரமித்திருக்கும்; ராணுவ அதிகாரிதான் இவன் என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படியான ஒரு சூழ்நிலையில், வெறிபிடித்தலையும் அவனைக் காப்பாற்றுவதிலேயோ, அல்லது அவனை உயிர் தப்பவைப்பதிலேயோ அவருக்கு எந்தவித ஈடுபாடும் மனதார இருக்கவில்லை.

எங்கள் மண்ணை ஆக்கிரமித்து, எங்கள் இனத்தையே அழித்தொழிக்கும்; பரமஎதிரி இவன். இவனைப் போன்ற இனவாதிகள் எல்லாம் விபத்து நடந்த இடத்திலேயே இறந்து போயிருந்தால் எங்களுக்கு சற்று நிம்மதி யாவது இருந்திருக்கும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார்.

இப்போ நோயாளியாக அவன் தன்னிடம் வந்தபின், தனது கடமையில் இருந்து நழுவ அவருக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. தன்னை நம்பி வந்த ஒரு நோயாளி என்ற கடமை உணர்வோடு, இனமத பேதம் எல்லாவற்றையும் மறந்து, ஒரு டாக்டராய் விரைவாகச் செயற்பட்டார்.

கடினமான உழைப்பில், சத்திர சிகிட்சை நேரம் நீண்டு கொண்டு போனதே தெரியவில்லை. மகனின் நினைவு வரவே, கடிகாரத்தைப் பார்த்தார்.

மருத்துவபீடத்தில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை, வகுப்பு முடிந்ததும் அங்கு சென்று வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இப்போதைக்கு இந்த இடத்தை விட்டு நகரவேமுடியாது, எப்படியாவது அவன் சமாளித்துக் கொள்வான் என்ற நம்பிக்கையோடு மீண்டும் நோயாளி மேல் கவனம் செலுத்தினார்.

நேரகாலம் இல்லாமல் இப்போதெல்லாம் சத்திர சிகிட்சை ஒரு சாதாரண நிகழ்வாய்ப் போய்விட்டது. இராணுவம் வலிந்து ஆக்கிரமித்த மண்ணில் தினமும் இப்படி ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து கொண்டேதான் இருந்தன. முன்பெல்லாம் வாழ்ந்து, அனுபவித்த முதியோர்தான் தேவை கருதி அடிக்கடி வைத்திய சாலைக்கு வருவார்கள். இப்போ நிலைமை ரொம்பவும் மாறிவிட்டது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் பலதரப்பட்ட வைத்தியத்திற்காகவும் வருகிறார்கள்.

இந்த வைத்திய சாலையில் சத்திர சிகிச்சைக்குப் பொறுப்பாக இருந்த மற்றவைத்தியர் சமீபத்தில் மாற்றலாகிப் போய்விட்டபடியால் இவர் மட்டும்தன் அங்கே மிஞ்சியிருந்தார். எனவே இங்குவரும் எல்லா அவசரசத்திர சிகிச்சையையும் அவரே தனியே கவனிக்க வேண்டியிருந்தது. யுத்தப் பிரதேசத்தில் இந்த மருத்துவமனை இருந்ததால், தொழில் செய்ய யாருமே விருப்பப்படவில்லை.

இப்படியான நேரங்களில் ராணுவத்தையும் போராளிகளையும் சமாளிக் வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது. ‘ஏன் சிகிச்சை செய்தாய்’ என்று இரண்டு பக்கத்தில் இருந்தும்  மிரட்டல்கள் வரும்போதெல்லாம் ‘கடமையைத்தான் செய்தேன்’ என்று துணிந்து சொல்ல வேண்டும். இல்லாவிட்hல் இடமாற்றம் எடுத்துக் கொண்டு எங்கேயாவது கண்காணாத இடத்திற்குப் போகவேண்டும், அல்லது வேலையை இராஜினாமா செய்துவிட்டு வீட்டிலே சிவனே என்று உட்கார்ந்து இருக்க வேண்டும்.

இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும், மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டில் படிக்கும் மகனின் படிப்பு முடியட்டும் என்ற எண்ணத்தோடுதான் பல்லைக் கடித்துக் கொண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார். தன்னைப் போலவே அவனும் இந்த மண்ணில் படித்து ஒரு புகழ்பெற்ற மருத்துவராக வந்து, மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற படித்த சாதாரண பெற்றோருக்கு இருக்கும் ஆசைதான் அவருக்கும் இருந்தது.

சத்திர சிகிட்சை அறையைவிட்டு வெளியே வந்தபோது, தாதி அவரைநோக்கிப் பரபரப்பாக ஓடி வந்தாள். முகத்திலே கவலை தோய்ந்து இறுகிப்போயிருந்தது.

‘என்ன..?’ என்றார்.

‘சத்திர சிகிச்சை முடிஞ்சுதா டாக்டர்..?’

‘ஆமா, நோயாளி தப்பிப்பிழைச்சிட்டான்.’

‘பிழைச்சிட்டானா..? காப்பாற்றிவிட்டீங்களா..?’ இனம்புரியாத வெறுப்பு, அவளின்; பெருமூச்சில் கலந்திருந்ததை அவர் அவதானித்தார். அந்த வெறுப்பு நியாயமானதுதான், இது அவளின் தனிப்பட்ட வெறுப்பல்ல, ஒட்டு மொத்தமாக அங்கே உள்ள ஊழியர்களின் வெறுப்பையும் உள்வாங்கித்தான் அவள் பிரதிபலிக்கிறாள் என்பதையும் அவர் அறிவார். நாட்டு நடப்பு அப்படி இருந்தது.

‘ஓரு வைத்தியருக்குரிய என்னுடைய கடமையைத்தானே நான் செய்தேன். என்னுடைய கையில் எதுவுமில்லை, நான் ஒரு காரணி அவ்வளவுதான், எல்லாம் அவன் செயலே!’ என்றவரின் குரல் கம்மியது.

‘எது கடமை..?’ அவள் எதையோ சொல்லத் தயங்குவது தெரிந்தது.

‘என்ன ஒரே பதட்டமாய் இருக்கிறாய்?’ அசதியோடு கேட்டார்.

‘வந்து.., அவசர சிகிச்சைக்காக நோயாளர் காவுவண்டியிலே இரண்டு, மூன்று நோயாளியைக் கொண்டு வந்தாங்க, வாசலிலே காவலுக்கு நின்ற இராணுவசிப்பாய்கள் உள்ளே அனுமதிக்க மறுத்திட்டாங்க!’

‘அப்படியா..? இப்போ எங்கே அவங்க..?’ கடமை உணர்வோடு கேட்டார்.

‘ரொம்ப நேரம் காவுவண்டி வெளியே காத்திருந்திட்டு, வேற வழியில்லாமல் எங்கேயாவது வேறு வைத்தியசாலைக்கு கொண்டு போகமுடியமா என்று முயற்சி செய்யப்போவதாக சொல்லித் திரும்பிப் போயிட்டாங்க!’

‘ரொம்ப ஆபத்தான நிலையில் இருந்தாங்களா?’

‘ஆமா, டாக்டர் துப்பாக்கிச்சூட்டுக்காயம், இரத்தசேதமாம்! அவசர சத்திர சிகிச்சை செய்தால் எப்படியும் அவங்க தாப்பிவிடுவாங்க என்று சொன்னாங்க.’

‘எங்கே இருந்து கொண்டுவந்தாங்க? சத்திரசிகிச்சை செய்யக்கூடிய வேறு வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லையே!’

‘மருத்துவக்கல்லூரிக்கு முன்பாகத்தான் கிளைமோர் குண்டு வெடிச்சதாம். அதிலேதான் நீங்க சத்திர சிகிச்சை செய்து பிழைக்க வைத்த இராணுவகாப்டன் அகப்பட்டிருநநந்தான்.’

‘மருத்துவக் கல்லூரிக்கு முன்பாகவா? அங்கேயா நடந்தது?’ டாக்டரின் குரல் சட்டென்ற அடைத்துக் கொண்டது.

‘ஆமா, காயமடைந்த ஆத்திரத்தில் கூடவந்த இராணுவத்தினர் மருத்துவக் கல்லூரிக்குள்ளே புகுந்து கல்லூரி மண்டபத்திற்கு தீவைச்சது மட்டுமல்ல, அங்கே நின்ற மாணவர்களையும் நோக்கிச் சாரமாரியாகச் சுட்டிருக்கிறாங்க. அதிலேதான் இங்கே கொண்டுவந்த அந்த மாணவங்க காயப்பட்டாங்களாம்!’

‘மருததுவக் கல்லூரி மாணவங்களா..?’ வார்த்தைகள் அடைத்துக் கொண்டன.

‘ஆமா டாக்டர்..!’

‘எத்தனை பேரைக் கெண்டு வந்தாங்க? அவங்க முகத்தையாவது நீ பார்த்தியா?’ பதட்டத்தோடு கேட்டார் சிவகுமாரன்.

‘இல்லையே டாக்டர், உயிருக்குத் துடிச்சிட்டு இருப்பதாக கொண்டு வந்தவங்க சொல்லி மண்டாடினாங்க, ஆனால் அவங்களை உள்ளே கொண்டுவரக் காவலுக்கு நின்ற சிப்பாய்ங்க விடவேயில்லை!’

‘ஏன்..? ஏன் தடுத்தாங்க..?’ கடமையைச் செய்ய முடியாமல்போன ஏமாற்றமும் அது சார்ந்த இயலாமையும் அவரை வாட்டத் தொடங்கின.

‘காப்டனின் சத்திரசிகிச்சை முடியாமல் யாரையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லித் தடுத்திட்டாங்க. அதுமட்டுமல்ல காப்டனுக்கு ஏதாவது ஆச்சுதென்றால் எங்களையும் சுட்டுப் பொசுக்கி விடுவோம் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டினாங்க டாக்டர்.’

‘உண்மையாவா..? எனக்கு இதெல்லாம் தெரியாமல் போச்சே..!’ களைப்பும், குழப்பமும் ஒன்றாய் நிறைந்த நிலையில், மனம் உடைந்துபோன சிவகுமாரன், தலையில் கை வைத்தபடி அருகே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தார்.

இந்த நேரம் பார்த்து மேசையில் இருந்த தொலைபேசி அலறியது. இராணுவ மேலிடத்தின் அழைப்பாகத்தான் இருக்கும், எடுக்காவிட்டால் அது குறித்த பிரச்சனைகள் இன்னும் பூதாகரமாய் வெடித்துவிடும் என்ற நினைப்பில் வேண்டா வெறுப்பாய் எடுத்துக் காதில் வைத்தார்!

என்றுமில்லாதவாறு ஏதோ தவறு நடந்துவிட்டது போல, கத்திக் குழறியழும் மனைவியின் அவலக்குரல் மறுபக்கத்தில் கேட்டது!


.........................

Comments

Popular posts from this blog

Dolosbage Sri Murugan Temple

மூன்றாவது பெண்..! - Short Story