Kumudini - குமுதினி
Hello,
I would like to express my heartfelt gratitude to the following publications and media friends who have stood by me in sharing the suffering and sorrow of the Tamil people:
-
Vikatan Deepavali Malar (Nangoori)
-
Kalaimagal (Thayumanavar)
-
Kalki (Bodhi Maram)
-
Kumudham (Even if you forget, your heart will not forget)
-
Canada Udhayan (Kumudini)
-
Yugamayini (Mother's Children)
-
Thinnai (With the Dream of the Motherland)
-
Pathivukal, Iniya Nandavanam, and all other supporting media outlets
Since justice has not been served even after 40 years, I am sharing this sorrowful story so that the younger generation will understand and remember.
வணக்கம். தமிழ் மக்கள் பட்ட அவலங்களை, சோகத்தை எடுத்துச் சொல்ல என்னோடு துணைநின்ற விகடன் தீபாவளி மலர் (நங்கூரி) கலைமகள் (தாயமானவர்) கல்கி (போதிமரம்) குமுதம் (மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா) கனடா உதயன் (குமுதினி ) யுகமாயினி (அம்மாவின் பிள்ளைகள்) திண்ணை (தாயகக் கனவுடன்) பதிவுகள் இனிய நந்தவனம் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
40 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காததால்,இளையதலைமுறையினர் அறிந்து கொள்ள இச்சோகக் கதையைத் தருகின்றேன்.
குமுதினி
குரு அரவிந்தன்
பார்வையிட்டோர்: 75,562
|
பகுதி-1
செம்பைக் கையில்
எடுத்தபோது கை நடுங்கியது. நெஞ்சின் படபடப்புத்தான் கையில் இறங்கியிருந்தது.
நெற்றி வியர்வையைச் சால்வைத் துண்டால் துடைத்துக் கொண்டேன். கொஞ்ச நாட்களாக
இப்படியான அதிகாலைக் கனவுகள் என்னை அடிக்கடி பலவீனப் படுத்திக் கொண்டே இருக்கின்றன.
‘நைட்மெயர்’ என்பதன் அர்த்தம் என்வென்று அனுபவப் பட்டபோது புரிந்தது.
இவளுக்காகவாவது
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டும் என்ற அற்ப ஆசையில்
கொஞ்சம் கூடக் குறையவில்லை. கொஞ்சக் காலத்தை ஓட்டிவிட்டால், எப்படியாவது இவளை
யாருடைய கையிலாவது ஒப்படைத்து விட்டு நிம்மதியாகப் போய்விடலாம் என்ற நப்பாசைதான்
இன்றுவரை என்னை நடைபிணமாக வாழவைத்துக் கொண்டிருக்கின்றது.
அதிகாலைத்
தூக்கம் கெட்டுப் போனதால் சாய்மனைக் கதிரையில் சரிந்தேன்.
இரவு முழுவதும்
இரைச்சலோடு கொட்டிக் கொண்டிருந்த மழை சற்று ஓய்ந்திருப்பது போலத் தெரிந்தது.
இப்பொழுதெல்லாம் மழையில் நனையவே பிடிப்பதில்லை. படுத்துக் கிடந்தால் பார்ப்பதற்கு
யாருமில்லையே என்ற தனிமையின் விரக்தி வேறு. பிடிப்பே இல்லாத வாழ்க்கையாய் எதுவும்
நிச்சயமாய்ச் சொல்வதற்கில்லை என்றாகி விட்டது.
சாய்மனைக் கதிரையைவிட்டு, மெல்ல எழுந்து
யன்னலைத் திறந்து வெளியே பார்வையைப் படரவிட்டேன். கீழ்வானம் கறுத்தே இருந்ததால்
மழை இன்னமும் ஒரு பாட்டம் அடிக்கலாம் என்பதுபோல தூரத்து மின்னல் பயம் காட்டிக்
கொண்டிருந்தது. முற்றத்தில் விழுந்த தாழ்வாரத் தண்ணீர், பள்ளக்காணி
நோக்கி மெல்லிய நீரோடையாய் நெளிந்து கொண்டிருந்தது.
‘மழைவா வெய்யில்
போ’ சின்னவயதில் சிறுவர்களாக இருந்த காலத்தில் கூட்டமாக ஒன்று சேர்ந்து வகுப்பறை
வாசலில் நின்று பாடிய பாடல்கள் மழையைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தன. வாடைக்
காற்று வந்தால் அந்த வெட்டை வெளியெல்லாம் ஓடியோடிப் பட்டம் பறக்கவிடுவதும், புழுதியில்
புரளுவதும், மழை பெய்தால்
மழையில் நனைந்து வெள்ளம் அலம்புவதும் சிறுவர்களாய் இருந்த எங்களின் அன்றாட
நிகழ்வாய்ப் போய்விடும்.
சில சமயம்
சிறுமிகளும் எங்களுடன் இணைந்து கும்மாளம் போடுவதுண்டு. அந்தநாள் ஞாபகம் அடிக்கடி
வரும்போது, பல இனிய
நினைவுகளும் கூடவே பின்னிப் பிணைந்து வரும். தைப்பொங்கல், வருடப்பிறப்பு, தீபாவளி, கார்த்திகை
விளக்கீடு என்று பண்டிகைகள் வந்தால் சிறுவர்களாக இருந்த எங்களுக்குத்தான்
கொண்டாட்டம். புத்தாடை அணிவது, பட்டாசு வெடிப்பதும், உறவினர்
வீடுகளுக்குச் செல்வதும், ஊஞ்சல் ஆடுவது, போர்த்தேங்காய்
அடிப்பதும் எங்களுக்குப் பிடித்த முக்கிய நிகழ்வாக இருக்கும். அந்த நாட்கள் இனி
வருமா என்ற ஏக்கம் அடிமனதில் இன்னமும் ஒளிந்து கொண்டுதான் இருக்கின்றது.
யாராலுமே மறக்க
முடியாத பள்ளிப் பருவத்து இனிய வசந்த காலங்கள் ஒருபக்கம், யுத்தம் வந்து
எங்களிடம் பறித்தெடுத்த எங்கள் இளமைப் பருவத்தின் நினைவுகள் மறுபக்கம் என்று
வெறும் நினைவுகளை மட்டுமே சுமந்து கொண்டு இன்று இந்த வாழ்க்கையை வாழப்பழகிக்
கொண்டாகி விட்டது.
இங்கே எல்லாமே
தலைகீழாக மாறிவிட்டது. மரக்கிளைகளில் கூடு கட்டிக் குதூகலமாய் வாழ்ந்து வந்த
குருவிகளின் கூடுகள் எல்லாம் புயல் வந்து அடித்து உடைத்துக் கலைக்கப்பட்டது போல
இனக்கலவரம் என்ற போர்வையில் ஈழத்தமிழர்களின் கூடுகள் எல்லாம் சிதைக்கப்பட்டதால், அமைதியான இந்த
மண் இப்போது பிணம் தின்னிக் கழுகுகளின் சுடுகாடாய் போய்விட்டது. கடந்த காலத்தை
இரைமீட்டிப் பார்த்தால், பள்ளிப் பருவத்து
இனிய நினைவுகளைத்தவிர, அதன்பின் வேறு
எதுவுமே மனம்விட்டுச் சொல்லிச் சந்தோஷப்படும் படியாக இதுவரை அமையவில்லை. மனதில்
ஏதோ இனம்புரியாத பயம் குடிகொண்டதால் எதையுமே மகிழ்வோடு பார்க்க முடிவதில்லை.
காலவோட்டத்தில்
எல்லோருமே அமைதியாகிவிட்ட பிரமை எனக்குள் ஏற்பட்டிருந்தது. ஆட்சியாளர்களைத் தவிர
வேறுயாரும் வாயைத் திறக்கப் பயப்பட்டார்கள். அமைதியாய் வாழ்ந்த எங்கள் இனிய
குடும்பங்களை சின்னாபின்னமாகச் சிதைத்தவர்கள் யார் என்பதைக் கூட அறிந்து கொள்ள
இடம் தராத நிலையில் இந்த நாட்டு ஜனநாயகம் தூங்கிக் கொண்டிருந்தது. இல்லை, இல்லை
தூங்குவதுபோல, இங்கே எதுவுமே
நடக்காதது போல, உலக நாடுகளுக்கு
நடித்துக் கொண்டிருந்தது.
‘தாத்தா எனக்கொரு
கப்பல் செஞ்சுதாங்கோ’ சிந்தனை கலைந்து திரும்பிப் பார்த்தேன். கையிலே ஒரு
காகிதத்தைப் பிடித்தபடி அருகே வந்து நின்றாள் எனது பேர்த்தி தரணி.
‘மேசையிலே
சாப்பாடு எடுத்து வைச்சேனே சாப்பிட்டியாம்மா?’
‘சாப்பிட்டேன்
தாத்தா, இப்ப எனக்கு ஒரு
கப்பல் செஞ்சு தாங்கோ’ கையிவே இருந்த காகிதத்தை மீண்டும் நீட்டினாள்.
காகிதத்தை வாங்கி
இரண்டாக மடிக்கத் தொடங்கினேன். காகிதத்தில் கப்பல் கட்டும் கலையைச் சின்ன வயதில்
பள்ளியில் கற்றுக் கொண்டது இப்போது பயன்பட்டது. காகிதத்தை வாங்கி அதை இரண்டாக
மடிக்கும் போதுதான் மங்கிய பார்வையில் அந்த வரிகள் கண்ணில் பட்டது, அதில் இருந்த
எழுத்துக்கள், அதை நிச்சயம்
செய்வதற்காகக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு மீண்டும் பார்த்தேன். அதேதான்..!
‘என்னூர்க் கொண்டைச் சேவலும்
காக்கையும் கூட
மார்பில்
அடித்து மரண ஓலமிட்ட
நாளது…!’
இந்த வரிகளை
ஒவ்வொரு தடவை வாசிக்கும் போதும் மயிர்க்கூச்செறியும், பழைய நினைவுகளை
மீட்டு, இதயத்தை உறைய
வைக்கும். எப்படி மறக்க முடியும் என் வாழ்வில் வாழ்நாள் எல்லாம் வலியைப் புதைத்த
அந்த நாளை எப்படி மறக்க முடியும்?
‘எங்கை எடுத்தனி
இந்தப் புத்தகத்தை’ பதட்டத்தோடு குரலை உயர்த்தி நான் கேட்கவே தரணி பயந்து போனாள்.
முகத்தைப்
பயந்தது போல வைத்துக் கொண்டு, புத்தகம் அடுக்கியிருந்த அலுமாரியை நோக்கிக் கையை மட்டும் நீட்டிக்
காட்டினாள். புத்தக அடுக்குக் குலைந்து சில புத்தகங்கள் நிலத்தில் விழுந்து
கிடந்தன.
‘என்னம்மா இது
நான் பத்திரமாய் எடுத்து வைச்ச புத்தகமெல்லே, அதை எடுத்துக் கிழிக்கலாமா?’ என் குரலில்
சற்று கடுமை இருந்தது.
அவள் மிரண்டுபோய்
என்னைப் பார்த்தாள். தவறு செய்து விட்ட உணர்வில், அழப்போவதற்கான அறிகுறிகள் அவள் முகத்தில் தெரிந்தன.
‘சொறி தாத்தா’
விம்மலூடாக வார்த்தைகள் உதிர்ந்தன. தாயில்லாப் பிள்ளை என்று இவளுக்கு அதிகம்
செல்லம் கொடுத்து விட்டேனோ?
‘இனிமேல் என்னைக்
கேட்காமல் அதில இருந்து ஒண்டும் எடுக்கவேண்டாம்’
கொஞ்சம்
கண்டிப்போடு கூறவே, சரி என்று தலையை
மட்டும் அசைத்தாள் தரணி.
நான் புத்தக
அலுமாரியில் கவனமாக அடுக்கி வைத்த புத்தகங்களைப் பார்த்தேன். நாட்டார் பாடல் இடம்
பெற்றிருந்த வடஅமெரிக்க தமிழ் சங்கத்தின் ஆண்டு மலர் ஒன்று கீழே விழுந்து கிடந்;தது. அதை
எடுத்துப் பிரித்துப் பார்த்தேன்.
நாங்கள் இருந்த
இடம் நாலு பக்கத்தாலும் தண்ணீர் சூழ்ந்திருந்ததால் படகுகளுக்கும் எங்களுக்கும்
நிறையவே தொடர்பு இருந்தது. வல்வெட்டித்துறை பாய்மரக் கப்பல்கள் அந்த நாட்களில்
இங்கே வந்து போவது பற்றி அந்த நாட்டார் பாடல் குறிப்பிட்டிருந்தது. அதுமட்டுமல்ல, காற்று மாறும்
நாட்களில் பாதுகாப்பிற்காக இங்கே கொண்டு வந்து படகுகளைக் கரையில் கட்டுவாதாகவும்
குறிப்புகள் அதில் இருந்தன. முக்கியமான நாட்டார் பாடல் என்பதால் ஆவணமாக இருக்க
வேண்டும் என்று இப்படியான புத்தகங்களைச் சேகரித்து வைத்திருந்தேன். அந்தப் பாடலை
மீண்டும் படித்துப் பார்த்தேன்.
வல்வெட்டித்துறைப் பாய்மரக்கப்பலில்
வந்து குவியுது பண்டமடி
வாய் நிறையத் திண்டு வெத்திலை போடலாம்
வாருங்கோ கும்மி அடியுங்கடி
வத்தை சலங்கு கட்டுமரம் தோணி
வள்ளங்கள் வந்து குவியுதடி
எத்தனை பண்டங்கள் ஏந்தி வருகுது
எல்லாமே கொள்ளை லாபமடி!
கோலாட்டம், காவடி, கும்மி, கரகாட்டம் என்று
எங்கள் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் நடனங்கள் பற்றியும், அந்த நாட்களில
அனேகமாக முதியோர்கள் வெற்றிலை, பாக்குப் போடுவது வழக்கமாக இருந்ததைப் பற்றியும் இந்த நாட்டார் பாடல்
எடுத்துச் சொன்னது.
அக்காலத்தில்
சிகரட் பாவனையில் இல்லாததால் முதியவர்கள் சிலர் புகையிலையில் செய்யப்பட்ட கருப்பு
நிறமான சுருட்டைப் புகைத்தார்கள். புகையிலை, வெற்றிலை யாழ்ப்பாணத்தில் நன்றாக விளைந்தது. வத்தை, சலங்கு, தோணி, வள்ளம், கட்டுமரம், டிங்கி, மச்சுவா
என்றெல்லாம்
படகுகளைச்
செல்லமாகப் பெயர் சொல்லி அழைப்பர். அதிலிருந்த ‘அன்னபூரணி’ கப்பலின் படம் கப்பல்
கட்டிய தமிழர்களையும், கப்பலோட்டிய
தமிழர்களையும் அவர்கள் படைத்த சாதனைகளையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.
கட்டுமரம், அணைக்கட்டு போன்ற
பல சொற்கள் தமிழில் இருந்துதான் ஆங்கில் மொழிக்குச் சென்றன என்பதை அகராதியில் உள்ள
குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது.
இலங்கையின்
வடபகுதியில் இருக்கும் மிகப்பழமை வாய்ந்த மாவிட்டபுரம் கோயில் மிகவும் பிரபலமானது.
சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லி யாழ்ப்பாணம் வந்து வழிபட்ட இடம் மட்டுமல்ல
வெற்றிலைக்குப் பெயர்போனதாகவும் இருந்தது. குதிரைமுகநோய் காரணமாக குதிரையின்
முகவடிவம் போல முகக்கட்டிகளால் நீண்டு இருந்த முகத்தை மூலிகை மருந்தின் உதவியோடு
நகுலேஸ்வரத் தீர்த்தத்தில் தினமும் குளித்து அழகிய முகத்தைப் பெற்றது போன்ற ஐதீகக்
கதைகள் நிறையவே உண்டு. அதனால்தான் மா என்றால் குதிரை என்று பொருள் படும் என்பதால், ‘மா – விட்ட –
புரம்’ என்ற பெயர் இந்தத் தலத்திற்குக் கிடைத்தது. சோழநாட்டில் இருந்து மாவை
முருகக்கடவுளின் ஊருவச் சிலை வந்து இறங்கிய கசாத்துறை என்ற துறைமுகப் பட்டினம்
காங்கேயன் துறையானது. தமிழர்கள் இப்படியான உண்மைச் சம்பவங்களை ஆவணப்படுத்தத்
தவறியதால்தான் இவை எல்லாம் ஆய்வுகளுக்கு எடுபடாமல் ஐதீகக் கதை வடிவிலேயே விடுபட்டு
விட்டன.
நான் கவனமாகச்
சேகரித்து வைத்திருந்த இன்னுமொரு நூலான அந்த மாவிலிமலரில் இருந்துதான் அந்தக்
காகிதத்தை அவள் கிழித்து எடுத்திருக்கிறாள். அந்த மலரின் அருமை இந்தக்
குழந்தைக்குத் தெரிந்திருக்கவில்லை. ஈழத்தமிழரின் சோகவரலாறு ஒன்றை, வாழ்நாள் எல்லாம்
மறக்க முடியாத துயரத்தை ஆவணமாக்கிய புத்தகமது. அதைக் கவனமாகப் பாதுகாத்து அடுத்த
தலை முறையிடம் ஒப்படைக்க வேண்டியது எங்கள் கடமையல்லவா. அதற்காகத்தான்
அதைப்பத்திரமாகப் பாதுகாத்து வைத்தேன். ஆனாலும் குழந்தை மேல் கோபப்படுவதில்
அர்தமில்லை என்பதால், அவளைச் சமாதானப்
படுத்தி வேறு ஒரு காகிதத்தை எடுத்து அவள் கேட்டபடியே கப்பல் செய்து கொடுத்தேன்.
குமுதினி
|
பகுதி-2
காகிதக் கப்பலைக்
கையிலே வாங்கிக் கொண்டு முற்றத்தில் ஓடும் வெள்ளத்தில் மிதக்கவிடுவதற்காகத்
துள்ளிக் கொண்டு வெளியே ஓடினாள் தரணி. மழையில் நனைந்து வருத்தத்தைத் தேடிக்
கொள்வாளோ என்ற பயத்தில் எட்டிப்பார்த்தேன். அவளோ படியில் இருந்தபடி ஓடும்
வெள்ளத்தில் எட்டிக் கப்பலை மிதக்க விட்டாள். அந்தக் காகிதக் கப்பல் மெல்ல
அசைந்தாடி வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் பார்த்து தரணி மகிழ்ச்சியில் கைதட்டிச்
சிரித்தாள். வெள்ளை மனசு படைத்த அந்தக் குழந்தை உள்ளத்தின் சோகம் அந்தச்
சிரிப்பில் கரைந்து போயிருந்தது.
கள்ளம் கபடமற்ற
அந்தக் குழந்தையால் எல்லாவற்றையும் மறந்து சிரிக்க முடிகின்றது, ஆனால் நடந்த
சம்பவங்களை என்னால் முடியவில்லையே!
காகிதக் கப்பல்
முற்றத்து வெள்ளத்தில் தத்தளிப்பதைப் பார்த்ததும் பழைய நினைவுகள் மீண்டும்
எரிமலைபோல் குமுறிக் கொண்டு வெளியே வந்தன. இதேபோலத்தான் தரணியின் அம்மா செல்வியும்
சின்னவயதிலே ஏதாவது செய்துவிட்டு ‘அப்பா இங்கே பாருங்களேன்’ என்று கைகெட்டிச்
சிரிப்பாள். அந்தச் சிரிப்பில் மயங்கிய அந்த நாட்கள் எங்கே?
அப்போது நான்
அரசாங்க உத்தியோகம் காரணமாக கொழும்பிலே இருந்தேன். எல்லா இனத்தவரும் வேற்றுமை
இன்றி ஒற்றுமையாகத்தான் இருந்தார்கள். அரசியல் வாதிகளால் பேரினவாதம் பேசினால்தான்
அரசாள முடியும் என்றதொரு நிலை நாட்டில் உருவாக்கப்பட்டது. அது உச்சக் கட்டத்தை
அடைந்த போது, 1958ம் ஆண்டு மே
மாதம் 23 ஆம் திகதி
எங்களால் மறக்க முடியாத ஒரு தினமாக இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பத்து
வருடங்கள் கூட முடியாத நிலையில் பேரினவாதம் நாட்டில் தலை தூக்கியிருந்தது.
பேரினவாதிகளால் தமிழ் இன ஒழிப்பு நடவடிக்கை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, உத்தியோக
நிமிர்த்தம் வெளி மாகாணங்களில் தங்கி இருந்த நிராயுத பாணியான தமிழர்கள் பலர்
பாதிக்கப்பட்டது போல, நானும் எனது
மனைவியும் நிறையவே பாதிக்கப்பட்டோம். உயிருக்குப் பயந்து உயிரைக் கையில்
பிடித்துக் கொண்டு ஒளித்து ஓடினோம்.
ஓளிவதற்கு இடம்
கிடைக்காததால், அகதி முகாமில்
தஞ்சம் புகுந்தோம். சற்றுக் கலவரம் ஓய்ந்ததும் வடக்கே இருந்த எங்கள் சொந்த
மண்ணுக்கு எங்களை அனுப்பி வைத்தார்கள். அன்று எல்லாவற்றையும் இழந்து அகதிகளாய்
வெறுங்கையோடு சொந்த மண்ணுக்கு வந்த நினைவுகள் இன்னமும் எங்கள் மனதை விட்டு
அகலவில்லை. நிம்மதியாய்க் குடியிருக்க வடக்குக், கிழக்கில் நாங்கள் பரம்பரையாய் வாழ்ந்த சொந்த
மண்ணாவது இருக்கிறதே என்ற ஒரே ஒரு ஆறுதல்தான் அப்போது எங்களுக்கு மிஞ்சி இருந்தது.
வேலையை இழந்து
வடக்கில் இருந்த சொந்த மண்ணில் வந்து குடியிருந்தோம். இத்தனை இன்னல்களுக்கு
மத்தியிலும், கொஞ்சம் ஆறுதல்
தருவதுபோல அந்த நிகழ்வு அமைந்தது. ஆமாம், எத்தனையோ பாதிப்புகளுக்கு மத்தியில் நகர்ந்து
கொண்டிருந்த
எங்கள் குடும்ப வாழ்க்கையின் வசந்தமாய் ஆசை மகள் செல்வி வந்து பிறந்தாள்.
எங்கள் குடும்பம், எங்கள் வாழ்க்கை, எங்கள் இனம், எங்கள் மொழி
என்று நாங்கள் சொந்த மண்ணில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தோம். காலம் கனிந்ததும் மகள்
செல்விக்குத் திருமணம் செய்து வைத்தோம். அவர்களும் அரச உத்தியோகம் என்பதால்
கொழும்பில் குடியேறினர். காலம் மெல்ல நகர்ந்தது, ஆனால் பேரின வாதிகளால் அதைப் பொறுத்துக் கொள்ள
முடியவில்லை. தொடர்கதைபோல 1958; ஆம் ஆண்டு
எங்களுக்குக் கொழும்பில் என்ன நடந்ததோ, 1977 ஆம் ஆண்டு எங்கள் நண்பர்களுக்கு என்ன நடந்ததோ, அதே கதைதான் எனது
மகளுக்கும் 1983 ஆம் ஆண்டு யூலை
மாதம் மீண்டும் நடந்தது. அதனால்தான் அந்த மாதத்தைக் ‘கறுப்பு யூலை’ என்று உலகமே
சொல்கிறது. தொடக்கத்தில் தமிழர்களின் உடமைகளைக் கொள்ளை அடித்தவர்கள் 1983 ஆம் ஆண்டு
கலவரத்தில் உயிர்க் கொலைகளிலும் ஈடுபட்டனர்.
தாய்மை அடைந்த
நிலையில் இருந்த செல்வியும், அவளது கணவனும் மீண்டும் அடைக்கலம் தேடி ஓடவேண்டி வந்தது. இறுதியில் அகதி
முகாமிற்குச் சென்று தஞ்சமடைந்தார்கள். தரைவழிப்பாதை ஆபத்து நிறைந்தது என்பதால், இந்தியாவில்
இருந்து உதவிக்கு வந்த ‘நங்கூரி’ என்ற கப்பலில் கொழும்பில் இருந்து வடமாகாணத்தில்
இருந்த துறைமுகப்பட்டினமான காங்கேயன்துறைக்கு அகதிகளாக வந்து சேர்ந்தனர். அழகன்
முருகனுக்கு காங்கேயன் என்றொரு பெயரும் இருக்கின்றது. மாவையில் குடிகொண்டிருக்கும்
மாவைக்கந்தன் இங்கே வந்து கரை இறங்கியதால், இந்த இறங்குதுறை காங்கேசந்துறை என்று பெயர் பெற்றது.
நாட்டில் அமைதி
திரும்பி மருமகன் மீண்டும் உத்தியோக நிமிர்த்தம் கொழும்பு சென்றார். செல்வியோ
கொழும்பு செல்ல மறுத்து விட்டாள். 1983 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் அவள் நேரடியாகப்
பாதிக்கப் பட்டதால், அது அவளை நிறையவே
மனரீதியாகப் பாதித்திருந்தது. மகள் செல்வியும், பேர்த்தி தரணியும் எங்களோடு ஊரில் இருந்ததால்
எங்களுக்கும் பொழுது நன்றாகவே சென்றது. விடுமுறைகள் கிடைக்கும் போதெல்லாம் மருமகன்
கொழும்பில் இருந்து ஓடியோடி வருவார்.
சொந்த மண்ணிலே
எந்தப் பயமும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்த போதுதான் மீண்டும் ஆக்கிரமிப்பு
இராணுவம், கேட்பார் யாருமில்லை
என்ற துணிவில் தமிழரின் சொந்த, பாரம்பரிய மண்ணில் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது. விரும்பிய
இடமெல்லாம் முகாம்களை அமைத்து, ஜனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டாலும், இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் தமிழர் வாழ்ந்த
நிலங்கள் எல்லாம் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு அரசும் ஆட்சி மாறும் போதெல்லாம்
சிறுபான்மையினரான தமிழர்கள் தான் பெரிதாகப் பழி வாங்கப் பட்டார்கள்.
கொழும்பிலே
தனித்துப் போயிருந்த கணவனை நினைத்து செல்வி கவலைப் பட்டுக் கொண்டிருந்தாள்.
இப்படித்தான் அன்று இரண்டாவது குழந்தையை வயிற்றிலே சுமந்து கொண்டிருந்த செல்வியின்
மனசும் உடம்பும் சோர்ந்து போயிருந்தது. தாய்மை என்பது ஒரு பெண்ணுக்கு ஆயிரமாயிரம்
கனவுகள், கற்பனைகளோடு
வாழ்ந்து சாதிக்கும் ஒரு மகிழ்ச்சியான காலம். அதைக்கூட நிம்மதியாய் அனுபவிக்
முடியாமல் எத்தனை பெண்கள் இந்த மண்ணில் அல்லற்பட்டார்கள் என்பதைக் காலம்தான்
எடுத்துச் சொல்லும்.
‘என்னம்மா செல்வி, ஏன்
படுத்திருக்கிறாய், சுகமில்லையா?’
‘இல்லையப்பா
ஒன்றுமில்லை!’ செல்வி மெல்ல எழுந்து உட்கார்ந்தபடி பதிலளித்தாள். செல்வி ஒருநாளும்
இப்படிச் சோர்ந்து போய்ப் படுத்திருந்ததில்லை. அவள் முகம் வாடிப்போயிருந்தது.
‘கொண்டுபோய்
வைத்தியரிடம் காட்டு என்று சொன்னால் கொஞ்சமும் கேட்கிறாள் இல்லை, நான் சொல்லி
அலுத்துப்போச்சு. நீங்களாவது
சொல்லுங்கோ..!’ மனைவி சமையலறையில் இருந்தபடி முணுமுணுத்தாள்.
செல்வியின் வேதனை
எனக்குப் புரியும். தாய்மைக் காலத்தில் கணவன் அருகே இருக்க வேண்டும் என்று
எதிர்பார்ப்பதில் எவ்வித தப்பும் இல்லை. ஆனாலும் என்ன செய்வது பொருளாதார நிலை
காரணமாக அவ்வப்போது கணவனைப் பிரிந்தே இருக்க வேண்டிவந்தது.
மனைவியிடம்
தரணியைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு செல்வியை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்
சென்றேன். எவ்வளவோ கஷ்டப்பட்டு விருப்பம் இல்லாமல்த்தான் அவள் வெளிக்கிட்டு
என்னோடு வந்தாள். எங்கள் வீடு இருந்த இடம் வசதி குறைந்த சிறிய தீவு என்பதால், வைத்திய சாலைக்கு
நீண்ட தூரம் படகு மூலம் செல்ல வேண்டும். எங்கள் தீவு ஒடுங்கிய நீண்ட தீவாக
இருந்ததால், நெடுந்தீவு என்ற
காரணப் பெயர் வந்தது. வீட்டிற்கு அருகே உள்ள மாவிலித்துறையில்தான் நாங்கள்
படகேறினோம்.
படகுச் சவாரி
என்றால் செல்விக்கு கொள்ளை ஆசை. படகுச் சவாரி என்றதும் தான் தாய்மைக் கோலத்தில்
இருப்பதைக்கூட மறந்து ஒரு துள்ளல் துள்ளிக் கொண்டு வந்தாளே அன்று, அந்தக்
காட்சிதான் இன்றும் என் கண்ணுக்குள் நிற்கிறது. மகிழ்ச்சியின் எல்லை தொட்ட அவளை
நான் பார்த்த கடைசிப் பார்வை அதுதான் என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
‘ஐயா வாங்க’ என்று
வரவேற்ற படகோட்டி வழிவிட்டு விலகி நின்றான். ஊரிலே எங்கள் குடும்பத்திற்கு
மதிப்பிருந்ததால் எங்கு சென்றாலும் இப்படியான
மரியாதைகள்
அடிக்கடி கிடைப்பது வழக்கம். நாங்கள் படகில் ஏறி உட்கார்ந்தோம். தெரிந்த பல
முகங்கள் எங்களைப் பார்த்து குசலம் விசாரித்தன. செல்வியின் சிரித்த முகத்தைவிட
தாய்மையின் வெளிப்பாடுதான் அங்கே அதிகம் தெரிந்தது.
‘என்ன பிள்ளையாம்?’
‘தெரியாது!’
‘வயிற்றைப்
பார்க்க ஆம்பிளைப் பிள்ளை போலதான் இருக்கு, ஆசைக்கு ஒரு பெண் பெத்திட்டாய், இனியென்ன
ஆஸ்திக்கு ஒரு ஆண் கிடைத்தால் போதும்தானே?’
செல்வியின் முகம்
வெட்கத்தால் சிவந்தது. இரண்டு தலை முறையாக ஆண் குழந்தைகளே பிறக்கவில்லை என்பதால்
அதை நினைத்து, செல்வி
வெட்கப்பட்டுச் சிரித்தாள்.
குமுதினி என்ற
பெயரைக் கொண்ட இந்தப் படகைத்தான் தினசரி போக்குவரத்திற்குப் பயன்படுத்தினார்கள்.
சாதாரண ஒரு படகின் பெயர் இன்று எல்லோராலும் அறியப்பட்ட பெயராக இருப்பதற்கு அன்று
நடந்த ஒரு சம்பவம்தான் காரணமாக இருந்தது. நிறையப்பேர் உட்கார்ந்து பயணம்
செய்யக்கூடிய வசதி படைத்ததாகப் படகு இருந்தது. காற்றிலே பறக்கும் விமானம் போல
தண்ணீரைக் கிழித்துக் கொண்டு குமுதினி மிதந்து செல்லும் அழகே அழகுதான் என்று இதில்
பயணம் செய்தவர்கள் சொல்வதுண்டு. ஒரு தாயைப்போல எங்களைத் தினமும் சுமந்து
செல்வதால்தான் குமுதினி என்று பெண்ணின் பெயரை அந்தப் படகிற்கு வைத்தார்களோ
தெரியாது.
அலைகளின்
தாலாட்டில் குமுதினி மெல்ல ஆடி அசைந்து தண்ணீரைக் கிழித்துக் கொண்டு அருகே இருந்த
நயினாதீவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. நயினாதீவில்தான் புகழ்பெற்ற நாகபுசணி
அம்பாள் குடியிருந்தாள். கடல் காற்று இதமாக முகத்தைத் தழுவ, செல்வியின்
கூந்தல் முன் நெற்றியில் விழுந்து முகத்தை மறைக்க, அதை லாவகமாக அவள் பின்தள்ளி விட்டாள். காலை நேரத்து
தெளிந்த வானம்போல, தாய்மையின்
பூரிப்பு அவளது முகத்தில் பளீச்சென்று தெரிந்தது. அதைவிட அவளது புன்னகை, என்ன விலை
கொடுத்தாலும் வாங்க முடியாதது, அப்படி ஒரு வசீகரம்.
வசதிகளோடு கூடிய
வைத்தியசாலை ஒன்றும் அருகே இல்லாததால்தான் நீண்ட தூரம் படகில் பயணம் செய்துதான்
யாழ்ப்பாண நகரத்தில் இருந்த பெரிய ஆஸ்பத்திரிக்குச் செல்ல வேண்டிய நிலை இந்த ஊர்
மக்களுக்கு ஏற்பட்டிருந்தது. சிரித்த முகங்களோடு கலகலப்பாய்ப் படகில் பயணம் செய்த
அவர்களுக்கு நடுக்கடலில் விதி என்ற மாயை காத்திருந்தது அப்போது தெரியாது.
குமுதினி
பகுதி-3
நெடுந்தீவு
என்றதும் எல்லோருக்கும் மட்டக்குதிரைதான் ஞாபகம் வரும். இங்குள்ள ஏழு தீவுகளில்
ஒன்றான நெடுந்தீவு தென்னிந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து சற்றுத் தூரத்தில்
அதாவது 38 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள அழகான தீவு என்பதால் தென்னிந்திய மன்னராட்சிக் காலத்தில் அடிக்கடி
சேர, சோழ, பாண்டியர்களின்
படைஎடுப்புக்கள் நடந்தபோது இந்தத் தீவுதான் முக்கிய போக்குவரத்து மையமாகவும், தளமாகவும்
இருந்தது. முற்காலத்தில் இங்கு மேற்குக் கரையில் இருந்த பெரியதுறை என்ற இடத்தில்
இருந்து இந்தியாவிற்குக் கடல் வழிப்பாதை இருந்தது. ஆனால் ஓல்லாந்தர் காலத்தில்
அவர்களால் இது தடைசெய்யப்பட்டது.
வசதிகள் அதிகம்
இல்லாததால், படகு மூலம்
பயணித்துத்தான் வெளியுலகோடு தொடர்பு கொள்ள வேண்டியதாக இருந்தது. சுமார் 18. 3 சதுர மைல்
பரப்பளவைக் கொண்ட இந்தத் தீவில் இருந்து, யாழ்ப்பாண பட்டணத்திற்குச் செல்வதென்றால்
புங்குடுதீவில் உள்ள குறிக்கட்டுவானுக்குப் படகில் சென்று அங்கிருந்து பண்ணைப்
பாலம் வழியாகச் செல்ல வேண்டியிருந்தது.
செல்விக்குக் கதை
கேட்பதென்றால் நிறையவே ஆர்வம் இருந்தது. சரித்திரமா, அரசியலா, சினிமாவா, விளையாட்டா எல்லாத் துறையிலும் அறிவை
வளர்த்திருந்தாள். அவளது சின்ன வயதில் இருந்தே அவளுக்கு ஆவணப் படுத்தப்படாத எங்கள்
சரித்திரத்தைச் சொல்லிக் கொடுத்திருக்கின்றேன். கேள்வி மேல் கேள்வி கேட்பாள், நானும்
சலிக்காமல் பதில் சொல்வேன்.
நாகர் என்றால்
யார்? நாகவழிபாட்டுக்கும்
இவர்களுக்கும் என்ன தொடர்பு ? எல்லாளன் எங்கேயிருந்து ஆட்சி செய்தான்? பொலநறுவைக்காலம் என்றால் என்ன? பொலநறுவையில்
உள்ள இந்துக் கோயில்கள் ஏன் கவனிக்கப்படாமல் அழிந்த நிலையில் இருக்கின்றன? மன்னராட்சியில்
இருந்து, போத்துக்கேயரின்
ஆக்கிரமிப்பு தொடக்கம், சங்கிலியன், பண்டாரவன்னியன், எல்லாளன் என்று
இன்றுவரை அவள் எங்கள் சரித்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்தாள்.
இலங்கையை ஆண்ட
தமிழ் அரசர்களிடம் இருந்து போத்துக்கேயரால் கைப்பற்றப்பட்ட தமிழர் வாழ்ந்த
பிரதேசங்கள் எல்லாம் எப்படி ஒல்லாந்தரின் கைகளுக்குச் சென்றடைந்தன, அதன்பின்
ஒல்லாந்தரிடம் இருந்து ஆங்கிலேயரிடம் எப்படி சென்றடைந்தன என்பதை எல்லாம் படித்தும்
கேட்டும் அறிந்திருந்தாள்.
பஞ்சஈஸ்வரங்களில்
ஒன்றான இந்துக்களின் தொண்டீஸ்வரம் எப்படி போத்துக்கேயரால் அழிக்கப்பட்டு
கத்தோலிக்கரின் கைவசமாகிப் பின் பௌத்தர்களிடம் சென்றது என்பதை எல்லாம் சொல்லி
இருக்கின்றேன். ஆங்கிலேயர் தங்களின் நிர்வாக வசதிக்காக இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின்
கீழ் எதற்காகக் கொண்டுவந்தனர்,
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திர
மடைந்தபோது தமிழர்களின் நிர்வாகப் பகுதிகளைத் தமிழரிடம் பிரித்துக் கொடுக்காமல்
ஜனநாயகம் என்ற பெயரில் சிங்களவரிடமே கொடுத்து விட்டுச் சென்றதனால் எப்படிச்
சிறுபான்மை இனத்தவர் பாதிக்கப்பட்டனர், இதனால்தான் ஜனநாயக நாடு என்று சொன்னாலும், காலப்போக்கில்
சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்கள் பெரும்பான்மை இனமான சிங்களவர்களால்
வஞ்சிக்கப்பட்டு எப்படி ஓரம் கட்டப்பட்டனர் என்பதை எல்லாம் செல்வி அறிந்து
வைத்திருந்தாள்.
1983ம் ஆண்டு
நடைபெற்ற தமிழின ஒழிப்பில் பாதிப்படைந்து நொந்துபோயிருந்த தமிழ் மக்களுக்கு
மீண்டும் ஒரு சோதனை காத்திருந்தது. 1985ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி ஈழத் தமிழர்களால் மறக்க முடியாத ஒரு
சோகதினம். என்ன நடக்கப் போகிறது, மானிடர்கள் எதுவும் செய்யத் துணிந்தவர்கள் என்பது கூடத் தெரியாமல், ஆதவனின் இதமான
அணைப்பில் கடலன்னை அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
அன்று காலைதான்
நானும் எனது மகள் செல்வியும் குமுதினி என்று பெயர் சூட்டப்பட்ட படகில்
நெடுந்தீவில் உள்ள மாவிலித்துறையில் இருந்து காலை நேரம் நயினாதீவு நோக்கிப் பயணம்
செய்தோம். வழமைபோல படகு தண்ணீரைக் கிழித்துக் கொண்டு ஆடியசைந்து சென்றது. உல்லாசப்
படகுப் பயணம் போல செல்வி வெண்நுரையாய்ப் பிரிந்து செல்லும் கடலலையின் அழகை
இரசித்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
திடீரென எங்கள்
படகின் வேகம் குறைந்தது. ஏன் படகின் வேகம் குறைக்கப் பட்டது என்பதை அறியும் ஆவலோடு
வெளியே எட்டிப் பார்த்தேன். கடற்படைக்குச் சொந்தமான கண்ணாடிப் படகு ஒன்று எங்கள்
படகைச் சுற்றித் தண்ணீரில் வட்டமடித்தது. சாதாரணமாக கடற்படையின் கண்காணிப்புக்குள்
உட்பட்ட கடலாகையால் வழமைபோல அவர்கள் சுற்றிப் பார்க்கிறார்கள் என்று எல்லோரும்
அசட்டையாக இருந்தார்கள். பொதுவாக அவர்கள் கையசைத்துக் காட்டிவிட்டுப்
போய்விடுவார்கள். இன்று ஒருநாளும் இல்லாத அதிசயமாய் எங்கள் படகு நடுக்கடலில்
முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டது. என்ன நடந்திருக்கும் என்ற ஆவலில் வெளியே எட்டிப்
பார்த்தேன்.
கண்ணாடிப் படகில்
கடற்படைச் சிப்பாய்கள் சிலர் சிரித்துக் கும்மாளம் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒருவனின் கையிலே மதுப்புட்டி ஒன்று இருந்தது. சிலர்
நீல நிறத்தில் நீண்ட காற்சட்டை அணிந்திருந்தார்கள். வேறு சிலர் நீலநிறத்தில்
கட்டைக் காற்சட்டை அணிந்திருந்தார்கள். கடற்படையினர் சாதாரணமாக கடமையில் இல்லாத
ஓய்வு நேரத்தில் அணிந்திருக்கும் ரீசாட்டை அவர்கள் எல்லோரும் அணிந்திருந்தார்கள்.
சுத்தமான சிங்கள மொழியில் பேசிக்கொண்டு ஒவ்வொருவராகப் படகிலே ஏறி உள்ளே
வந்தார்கள்.
அந்தச்
சிறுமிக்கு எட்டு வயதிருக்கும், ஒன்று இரண்டு மூன்று என்று உள்ளே வந்தவர்களை ஒவ்வொருவராக தமிழில் எண்ணிக்
கொண்டிருந்தாள். எட்டிப் பார்த்தேன், கண்ணாடிப் படகில் இருவர் தங்கி இருந்தார்கள். நான்
மனசுக்குள் எண்ணி, ஆறும் இரண்டும்
‘எட்டு’ என்றேன். மொத்தம் எட்டுப்பேர் அந்தப் படகில் வந்திருந்தார்கள்.
மேலே ஏறிவந்த
சிப்பாய் ஒருத்தன் எல்லோரையும் நோட்டம் விட்டான். பெண்கள் அதிகம் உட்கார்ந்திருந்த
பக்கம்தான் அவனது பார்வை அடிக்கடி சென்று திரும்பியது. நல்ல நோக்கத்தோடு அவர்கள்
உள்ளே வரவில்லை என்பதை அவனது கண்களே காட்டிக் கொடுத்தது.
‘பாப்பா எங்கே
போறது?’ என்று அந்தச்
சிப்பாய் கொச்சைத் தமிழில் அந்த சிறுமிக்கு முன்னால் மண்டியிட்டுக் கேட்டான். பதும
வயதைத் தொடப்போகும் பூரிப்போடு அந்தச் சிறுமி இருந்தாள்.
சிறுமிக்கு அருகே
உட்கார்ந்திருந்த சிறுமியின்தாய், சற்று நிறமாய் இளமையாய் எடுப்பான நாசியோடு அழகாக இருந்தாள். தாயின் அழகு
மகளிடமும் குடியிருந்தது.
‘பாப்பா என்னோட
வாறதா?’ என்று கையை
நீட்டினான்.
சிறுமி மறுத்து
தலை அசைத்தபடி தாயின் பக்கம் திரும்பிக் கொண்டாள்.
சிறுமியின்
தாயைத் தன்பக்கம் கவருவதற்கு என்ன செய்யலாம் என்று அவன் ஒரு கணம் யோசித்தான். அவன்
குடித்திருந்ததால் சுவாசத்தில் கலந்த மது வாடை குப்பென்று வீசியது. இக்கட்டான அந்த
சூழ்நிலையில், எப்படிச்
சமாளிப்பது என்ற தாயின் தவிப்பு முகத்தில் தெரிந்தது.
‘பாப்பா என்னோட
கீழே வாறது நான் சுவீட் தாறது’ என்று சொல்லிக் சிறுமியின் விருப்பமில்லாமலே
கையைப்பிடித்து இழுத்துக் கொண்டு கீழ்த் தட்டிற்கு படிவழியே இறங்கிச் சென்றான்
அந்தச் சிப்பாய். அவனது மறு கையில் ஏகே 47 ஒன்று சிறகொடிந்த பறவைபோல, சிறைப்பட்டிருந்தது..
சிறுமி வேறுவழியில்லாமல் தாயைப் பரிதாபமாகப் பார்த்தபடி அவனுடன் சென்றாள். அவன்
தள்ளாடியதில் இருந்து குடித்திருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்தது.
கட்டாயப்
படுத்திச் சிறுமியைக் கீழ்த் தட்டிற்குக் கொண்டு சென்றதால் சிறுமியின் தாயார்
பதட்டமடைந்தாள். தாய்மையின் பரிதவிப்பை சுற்றியிருந்தவர்களால் புரிந்து கொள்ள
முடிந்தது. துப்பாக்கியும் கையுமாக இருக்கும் அவனிடம் யாரால் யாசிக்முடியும்?
‘போம்மா போய்க்
கூட்டிக் கொண்டுவா’ தாயாரின் பதட்டத்தைப் பார்த்த யாரோ தாயாரிடம் மெதுவாகச்
சொன்னார்கள்.
‘சின்னப்பிள்ளை
எண்டும் பாக்கமாட்டாங்கள், இவங்கள் என்னவும்
செய்வாங்கள். போவம்மா, கெதியாய்ப்
போய்க் கூட்டிக் கொண்டுவா.’ அவர்கள் சொன்னதைக் கேட்டு, மகளைத் தேடிப்
பதட்டத்தோடு கீழே சென்றாள் அந்த இளம் தாய்.
கீழே சென்றவள்
நீண்ட நேரமாய் திரும்பி மேலே வரவில்லை. உபதேசம் செய்தவர்களின் வார்த்தைகளே
அவளுக்குப் பொறியாப் போனது. ஏன் இன்னும் அந்தச் சிறுமியின் தாய் திரும்பி வரவில்லை
என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கீழேயிருந்து அந்தப் பெண்ணின் அவலச்சத்தம் கேட்டது.
எல்லோரும் ஒரு கணம் அப்படியே உறைந்து போயிருந்தனர். கீழே சென்று பார்க்க அந்த
நேரம் யாருக்கும் துணிவு வரவில்லை.
நடக்கக் கூடாதது
ஏதோ நடந்து விட்டது போல, மனசு பதட்டத்தோடு
எதையோ கணக்குப் போட்டது. படகில் ஏறி உள்ளே வந்த கடற்படையினரைப் பார்த்தபோதே யாருமே
நல்லவர்கள் போலத் தோன்றவில்லை.
சிறுமியைக் கீழே
இழுத்துச் சென்றது தாய்க்குப் பொறி வைக்கத்தான் என்பது சட்டென்று புரிந்தது.
இதற்கிடையில் ஒவ்வொருவரையும் விசாரிக்க வேண்டும், அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு ஒவ்வொருவராகக் கீழே
வாருங்கள் என்று கொச்சைத் தமிழில் படிகளில் நின்றபடி ஒரு சிப்பாய் மேலே
இருந்தவர்களை கீழே வரும்படி அழைத்தான்.
‘இருங்க, இருங்க நாங்க
போய்க் கதைக்கிறோம்’ என்றபடி முதலில் படகோட்டிகள்தான் கீழே சென்றார்கள். அப்படி
அவசரப்பட்டு கீழே சென்ற படகோட்டிகளை முழங்காலில் இருத்தி வைத்திருந்தார்கள்.
அவர்களைத்
தொடர்ந்து ஆண்களையும் ஒவ்வொருவராகக் கீழே வரச்சொன்னார்கள். அவர்களுடைய பெயரையும், அவர்கள்
எங்கிருந்து வருகிறார்கள் என்பதையும் அவர்கள் இப்போ எங்கே போகிறார்கள் என்பதையும்
உரக்கக் கத்திச் சொல்லும்படி சிப்பாய்கள் வற்புறுத்தினார்கள்.
அவர்கள் கத்திச்
சொன்னது எங்கள் செவிகளில் விழுந்தது. ஏன் அப்படிக் கத்திச் சொல்லச் சொல்கிறார்கள்
என்பது முதலில் யாருக்கும் புரியவில்லை. இவர்கள் ஒவ்வொருவராகச் சொல்லச் சொல்ல
அவர்கள் வேடிக்கையாகப் பெரிதாகச் சிரித்தார்கள்.
எனக்குள் ஏதோ
பொறி தட்டியது. மேல் தட்டில் வைத்தே வழமைபோல அடையாள அட்டையைப் பார்த்திருக்கலாமே, ஏன் இன்று
வழமைக்கு மாறாகக் கீழே வரச்சொல்கிறார்கள். நான் கவனமாகக் கீழேயிருந்து அவர்கள்
உரக்கக் கத்திச் சொல்வதை கிரகித்தேன்.
அந்தச்
சத்தத்திற்குள் ஏதோ வலி மிகுந்த இனம்புரியாத அவலம் ஒளிந்திருப்பதை அந்தக் கணத்தில்
என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அப்படி உரக்கச் சொன்ன ஒவ்வொருவரையும்
தனித்தனியே படகின் பின் பகுதிக்கு அழைத்துச் செல்வதையும் அவதானித்தேன்.
அப்படிச்
சென்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. சென்றவர்கள்
யாரும் திரும்பி வந்ததாகவும் தெரியவில்லை. முதலில் ஆண்கள் தான் ஒவ்வொருவராக முன்
சென்றதால், எனது முறை
வந்தபோது நான் மகளைப் பார்த்தேன். போகவேண்டாம் என்பதுபோல அவள்
எனது கையை இறுகப்
பற்றியிருந்தாள். பற்றிய அவளது கைகள் மெல்ல நடுங்குவதை உணர்ந்தேன்.
துப்பாக்கியோடு
மேலே நின்ற கடற்படைச் சிப்பாய் என்னை முறைத்துப் பார்த்து ‘யண்டக்கோ’ என்று தனது
மொழியில் கத்தினான். எனக்கு அவனது மொழி தெரியும், என்னை அவமதிப்பது போல இருந்தாலும், குடிகாரனோடு
முரண்பட விரும்பவில்லை. எனது தயக்கத்தை அவதானித்த அவன் ஏதேதோ சொல்லக்கூடாத
வார்த்தைகளால் கடுமையாகத் தனது மொழியில் திட்டினான்.
வேட்கையில்
கிடந்த சிங்கம் ஒன்று எழுந்து நின்று தலையை உசுப்பி உறுமுவது போல அந்தக் காட்சி
இருந்தது. நான் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனது மகளுக்கு ஆபத்து வரலாம்
என்பதால், பற்றியிருந்த என்
மகளின் கையை மெல்ல விடுவிக்க முனைந்தேன். சஞ்சலப்பட்ட அவளோ மேலும் இறுகப்
பற்றினாள்.
‘பயப்படாதே, இந்தக் கிழவனை
என்ன செய்யப் போகிறார்கள்’ என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி விட்டு, கைகளை விலக்கிக்
கொண்டு மெல்ல எழுந்தேன்.
‘அப்பா, பிளீஸ் கீழே
போகதீங்கப்பா’ செல்வி மெல்ல விம்மினாள். அவளது தவிப்பை என்னால் புரிந்து கொள்ள
முடிந்தது. நிராயுதபாணியான என்னால் என்ன செய்ய முடியும்?
‘ஒண்டும் ஆகாதம்மா, அடையாள அட்டையைப்
பாத்திட்டு விட்டு விடுவாங்கம்மா’ என்று சொல்லி அவளைச் சமாதானப் படுத்தி விட்டு
நான் கீழே இறங்கிச் சென்றேன். விதி என்னைத் துரத்துவது எனக்கு அப்போது
தெரியவில்லை.
குமுதினி
|
பகுதி-4
மகளைச் சமாதானப்
படுத்தி விட்டு படிக்கட்டில் இறங்கிச் செல்லும்போது கீழேயிருந்து குப்பென்று ஏதோ
துர்நாற்றம் வீசியது. மது வாடையோடு சேர்ந்த உப்புக் காற்றோ அல்லது இரத்தவாடையாகவோ
இருக்கலாம் என நினைத்தேன்.
கீழே ஏதோ தப்பு நடக்கிறது, ‘கவனமாயிரு’ என்று
உள்மனம் என்னை எச்சரித்தது. காலம் கடந்த எச்சரிக்கை என்றாலும் கால்கள் மேற்கொண்டு
நகராமல் தன்னிச்சையாய்த் தயங்கின. படிக்கட்டில் நின்றபடி உள்ளே எட்டிப்
பார்த்தேன்.
கீழே நின்ற
சிப்பாய் ‘என்டக்கோ’ என்று உள்ளே வரும்படி உரத்த குரலில் என்னை அழைத்தான். அவனைப்
பார்த்ததும்; ‘இவனா’ என்று ஒரு
நிமிடம் தயங்கினேன். எங்கேயோ அடிக்கடி பார்த்த ஞாபகம் சட்டென்று வந்தது.
ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாத ஒரு முகம் என்பதால் அவனை நான் ஞபகத்தில்
வைத்திருக்க விரும்பவில்லை.
இவனை நயினாதீவு
நாகபூசணி அம்பாள் தரிசனத்திற்குப் போகும்போதெல்லாம் அருகே இருந்த கடற்படை முகாமில்
கண்டிருக்கிறேன். பொழுது போகாவிட்டால் கோயில் வாசலிலேயே இவனது கூட்டாளிகளோடு
எப்பொழுதும் நிற்பான். நிற்பது மட்டுமல்ல, எப்பொழுதும் கோயிலுக்குத் தரிசனத்திற்காக வரும்
பெண்கள் மீதே அவனது வெறித்த பார்வை பதிந்திருக்கும். வக்கிரப்பார்வை பார்த்தபடி, சீருடை இல்லாமல்
சிகரட் புகைத்தபடி நிற்பதைக் கண்டிருக்கின்றேன்.
கீழே நின்ற அவனது
சிவந்த முழியைப் பார்த்ததும், திட்டமிட்டுத்தான் இவர்கள் வந்திருக்கிறார்கள், கீழே ஏதோ தப்பான காரியம் நடக்கிறது என்பதை உடனே
ஊகித்துக் கொண்டேன். அவனிடம் ஏனோ துப்பாக்கி இருக்கவில்லை. ஏன் இவன் துப்பாக்கி
ஏந்தவில்லை என்பதே என்னைச் சிந்திக்க வைத்தது.
‘நம மொகத்த?’ என்று
தயக்கத்தோடு நின்ற என்னைப் பார்த்து எனது பெயரை அவன் கேட்டான். அவனது மொழி
புரிந்தாலும், புரியாதது போல
நான் மௌனமாக நின்றேன். இவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று உள்மனம்
கணக்குப் போட்டது.
‘சிங்களம் தெரியமா?’ என்றான்.
‘இல்லை!’ என்று
தலையசைத்தேன்.
‘பேரு என்ன?’
‘தில்லைநாதன்.’
‘எங்க போறது?’ என்றான்.
‘கோயிலுக்கு!’
என்றேன்.
‘கோயிலுக்கா, இங்கினய போயிடு’
என்று கத்திக்
கொண்டு, திடீரென பின்னால்
மறைத்து வைத்திருந்த சிறிய கோடரியை உயர்த்தி எனது தலையிலே ஓங்கி வெட்டினான். ஏதோ
நடக்கப் போகிறது என்ற எச்சரிக்கையோடு நான் இருந்ததால் சட்டென்று கையை உயர்த்தித்
தடுத்தேன். வெட்டுப் பலமாக தலையிலே விழவில்லை ஆனாலும் வெட்டுக் காயத்தில் இருந்து
இரத்தம் நெற்றியில் வழிந்தது. இந்த நேரம் பார்த்து இன்னுமொருவன் அருகே வந்தான்.
அவனது கையிலே பாளைக் கத்தி பளபளத்தது. ‘அம்மட்ட…!’ சொல்லக்கூடாத வார்த்தையால்
திட்டிக் கொண்டே சதக் கென்று வயிற்றிலே கத்தியைப் பாய்ச்சி உருவினான். தலையில்
பட்ட வெட்டுக் காயம் காரணமாகத் தலையிலே கையை வைத்திருந்த என்னால் வயிற்றிலே
குத்திய போது மற்றவனைத் தடுக்க முடியாமல் போய்விட்டது. நான் வயிற்றைப் பிடித்துக்
கொண்டு அம்மா என்று கத்திக் கொண்டு கீழே விழுந்தேன். அவன் எட்டிக் காலால் என்னை
உதைத்தான். அப்படியே உருண்டு படகின் அடியில் சுருண்டு போய் விழுந்தேன். கண்கள்
இருட்டி, மயக்கம் வருவது
போல இருந்தது.
மேலே தனித்து
விடப்பட்ட செல்வியின் ஞாபகம் உடனே வந்தது. அவளை எப்படியும் இந்தக் கொடியவர்களிடம்
இருந்து காப்பாற்றியே ஆகவேண்டும் என்று மனம் துடித்தது. வயிற்றிலே குழந்தையோடு
அவளால் இங்கிருந்து தப்பி ஓடமுடியுமா? அப்படி ஓடுவதானால் எங்கே ஓடுவது, சுற்றியிருக்கும்
கடலில் தானே குதிக்க வேண்டும்? செல்வியால் முடியுமா? குதித்தால்
மட்டும் விட்டு விடுவார்களா?
‘செல்வி தப்பி
ஓடிவிடு, உன்னைக் கொல்லப்
போறாங்கள்’ என்று உரத்துக்கத்த வாய்திறந்தேன். வார்த்தைகள் வெளியே வரவில்லை.
கண்கள் செருகிக் கொண்டு வந்தன. மேலேயிருந்த பெண்களின் அழுகுரல் ஓலம் காதில்
விழுந்தது. தடுப்பதற்கு ஆண்கள் இல்லை என்ற துணிவில் இவர்கள் தயக்கமின்றி எதுவும்
செய்வார்கள். வேட்டை நாய்களிடம் சிக்கிய முயல்கள போல பரிதாபக் குரல்கள் மரண
ஓலமாய்க் கேட்டது.
யாருடையதோ
தெரியவில்லை, ஓலத்தைத்
தொடர்ந்து துண்டிக்கப்பட்ட கையொன்று எனக்கருகே கீழே வந்து விழுந்து துடித்தது.
அந்தத் துண்டிக்கப்பட்ட கையில் இருந்து சீறிய இரத்தம் என் முகத்தில் பட்டுத் தெறித்தது.
அவர்களால்
வெட்டித் தாக்கப்பட்டு மேலேயிருந்து தள்ளிவிடப்பட்ட, யாரோ ஒருவரின் உடம்பு எனக்குமேலே வந்து விழுந்து
என்னை மூச்சுத் திணற வைத்தது. கையில் ஏதோ பிசுபிசுத்தது, இரத்தமாய்
இருக்கலாம். படகின் அடியில் விழுந்து கிடந்ததால் இருட்டுக்குள் எதுவும் எனக்குத்
தெரியவில்லை. இயலாமையின் உணர்வில் நினைவு தப்புவதும் திரும்பி வருவதுமாய் ஒரே
மயக்கமாக இருந்தது.
நினைவு
திரும்பும் போதெல்லாம், ‘மகளே.. செல்வி..
ஓடு.. ஓடு..!’ வார்த்தைகள் வராமல் வாய் மட்டும் திரும்பத் திரும்ப முணுமுணுப்பதை
உணர்ந்தேன். இரத்தம் பெருகியதில் எதுவுமே செய்ய முடியாமல் அனுங்கிக் கொண்டே
மயங்கிப்போனேன். அப்புறம் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. கண் விழித்தபோது
ஆஸ்பத்திரியில் இயக்கமின்றிக் கிடந்தேன். தலையில் வயிற்றில் கையில் காலில் என்று
கட்டுப் போடாத இடமேயில்லை. திரும்பிக்கூடப் படுக்கமுடியாமல், டாக்டர் தொட்ட
இடமெல்லாம் வலி தாங்க முடியாமல் உயிர் போய் வந்தது.
‘செல்வி…!’
என்னையறியாமலே எனது வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது.
கண் விழித்த போது, எதிரே சில
மாணவர்கள் நின்றார்கள். யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த
இறுதியாண்டு மாணவர்கள்தான் அவர்கள். இதுவரை என்னைக் கவனமாகப் பார்த்துக் கொண்டது
அவர்கள்தான். அத்தனை மருத்துவக் கல்லூரி மாணவர்களும் வலியவந்து எனக்கு வேண்டிய
சிகிட்சை எல்லாம் செய்தார்கள்.
‘ஒருவராவது
கட்டாயம் உயிரோடு தப்பவேண்டும் என்பதற்காக நாங்கள் கடவுளை வேண்டிக் கொண்டோம், எங்கள்
பிரார்த்தனை வீண் போகவில்லை, பலித்து விட்டது!’ என்றார்கள்.
‘நல்லது, என்னைக்
காப்பாற்றுவதில் உங்களுக்கு அப்படி என்ன அக்கறை?’ மெல்ல முணுமுணுத்தேன்.
‘ஒரு உயிரைக்
காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமை, ஆனால் ஒருவராவது உயிரோடு இருந்தால்தானே படகில் என்ன நடந்தது என்ற உண்மையை
உலகிற்குத் தெரியப்படுத்தலாம், அதற்காகத்தான் கஷ்டப்பட்டு நம்பிக்கையை
இழக்காமல்
உங்களைக் காப்பாற்ற மணிக்கணக்கில் கடைசிவரை போராடினோம்!’ என்றார்கள்.
‘அப்படி என்றால்
என் மகள் செல்வி…?’
நான்கு நாட்களாக
நினைவில்லாமல் நான் வைத்திய சாலையில் மயங்கிக் கிடந்ததாகச் சொன்னார்கள். எனது மகள்
செல்வியைப் பற்றி விசாரித்தேன்.
எனது மகள்
செல்விக்கு என்ன நடந்தது என்பதை முதலில் சொல்ல மறுத்தவர்கள், நான் பிடிவாதமாக
வேண்டிக் கொண்டதைப் பொறுக்க முடியாது மெல்ல மெல்ல நடந்ததைச் சொன்னார்கள்.
கேள்விப்பட்டதும், ஒரு கணம் என்
இயக்கமே நின்று விட்டதை உணர்ந்தேன். எல்லாவற்றையும் இழந்துவிட்ட விரக்தி என்னைச்
சூழ்ந்து கொண்டது. என்னை அறியாமலே மயங்கிவிட்டேன்.
‘என்னை மட்டும்
ஏன் காப்பாற்றினீர்கள்.’ மீண்டும் கண் விழித்தபோது, விரக்தியோடு கேட்டேன்.
ஒன்றா இரண்டா
எத்தனை உடல்கள். எண்ணிக் கணக்குச் சொல்லி ஊரைக்கூட்டி விடுவோமோ என்ற பயத்தில்
துண்டு துண்டாக வெட்டிப் பேட்டிருந்தார்களாம்.
தூக்கிவர
முடியவில்லை, அள்ளிக் கொண்டு
வரத்தான் முடிந்தது என்றார்கள். எப்படி மனம் வந்து இவர்களால் இப்படிக் கொலை செய்ய
முடிந்தது. இன்று பணத்திற்கு ஆசைப்பட்டு, எல்லாவற்றையும் மறந்து விட்டு சாத்தான் வேதம்
ஓதுபவர்கள் எல்லாம் அன்று நடந்த இந்தக் காட்சியைப் பார்த்திருக்க வேண்டும்.
‘என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி
இன்னமும் அவர்கள்
வாழவிரும்பிய வாழ்க்கை பற்றி
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே
சிதையில் எரிந்த என் நண்பனின்
மனைவி பற்றி…!’
எழுதுவதற்கே
வார்த்தைகள் வரவில்லை என்று அதிர்ந்துபோன, என் மருமகனின் அருமை நண்பன் கவிஞன் சித்திவினாயகம்
அந்தக் கொடூரக் காட்சியைச் சகிக்கமுடியாமல் அழுதழுது கவிதையாய் அந்த மலரில்
வரைந்திருந்தான்.
பட்டப்பகலில்
இந்தக் கொடூரக் கொலைகளை யார் செய்தார்கள் என்று நிரூபிக்கப் போதிய சாட்சியங்கள்
இல்லாததால், எந்தவித
நடவடிக்கையும் எடுக்கமுடியவில்லை என்று, ஒரு ஜனநாயக நாட்டில் பெருந்தன்மையோடு அறிவித்து
அதற்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்கள்.
நடந்ததை எல்லாம்
வெளியே சொன்னால் அதை இனத்துவேஷம் என்று முத்திரையும் குத்தி விடுகின்றார்கள்.
அதனால் மௌனமாக வாய் மூடி இருக்க வேண்டி வந்தது. மொழியின் பெயரால், மதத்தின் பெயரால்
எவ்வளவு காலத்திற்குத்தான் அரசியல் நடத்தப் போகிறார்களோ யாரறிவார்?
மனமுடைந்துபோன
மருமகன் வேலைக்குத் திரும்பிச் செல்லவில்லை. உயிருக்குயிரான மனைவியை, முகங்காணாக்
குழந்தையை இழந்த சோகத்தில் மருமகன் உடைந்து போய்விட்டான். பாதி உயிர் போனதுபோல, ஒவ்வொரு கணமும்
அவனது இழப்பின் அந்த வலி அவன் முகத்தில் தெரிந்தது. அவனது வேதனையைப் புரிந்து
கொள்ள யாரும் இருக்கவில்லை. புரிந்து கொண்டாலும் அதற்குப் பரிகாரம் இருக்கவில்லை.
அந்த இழப்பை ஈடுசெய்ய யாரால் முடியும்? என்ன செய்ய முடியும், யாரை நோக முடியும்?
கேள்விகள்
எல்லாவற்றுக்கும் ஒரு ஜனநாயக நாட்டில் துப்பாக்கிகளே பதில் சொல்லின. திறந்த
வாய்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன.
வீட்டை விட்டு
வெளியே போன மருமகன் திரும்பி வரவில்லை. முதலில் காணாமற் போய்விட்டான் என்று
சொன்னார்கள். சோகத்தைச் சுமந்து
கொண்டு
மணலாற்றுக் களமுனையில் போராளியாக நிற்பதாகவும் கேள்விப்பட்டேன். அதன்பின்
மருமகனுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, எந்தத் தொடர்பும் எங்களுடன் இல்லை. இன்று இருக்கிறானா
இல்லையா என்பது கூட எனக்குத் தெரியவில்லை.
மகளையும், பேரப்பிள்ளையையும்
இழந்த துயரம் தாங்க முடியாமல் நோயாளியாக மாறிப்போன என் மனைவியும், தீராத
நோய்வாய்ப்பட்டு எங்களை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து விட்டாள். அவளது தீராத
துயரத்திற்கு மரணம் ஒன்றுதான் அவளுக்கு அருமருந்தாக இருந்தது.
சிட்டுக்
குருவிகளாய், சுதந்திரப்
பறவைகளாய் வானத்தில் சிறகடித்துத் திரிந்த இது போன்ற அழகிய குடும்பங்களைச்
சிதைத்தது யார்? தானும்
தன்பாடுமாய் இருந்த மருமகனைப் போராளியாக மாற்றியது யார்? ஆயுதம் ஏந்த
வைத்தது யார்?
பேரினவாதிகள்
இந்த நாட்டில் உள்ளவரை இப்படியான இனப்படுகொலைகள் காலாகாலமாய் தொடரத்தான் செய்யும்.
அது அவர்களின் அரசியல் தந்திரம் ஒருவகைச் சூதாட்டம், இது இவர்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்த வாழ்க்கைப்
போராட்டம்! இந்தச் சுழிக்குள் அகப்பட்டுக் கொள்வதும் தப்பிக் கொள்வதும் அவரவரின்
கெட்டித்தனத்தைப் பொறுத்தது. ஆனாலும் அப்பாவிகளே எப்பொழுதும் நிரந்தரமாக மாட்டிக்
கொள்கிறார்கள். யாரையே நம்பிச் சரணடைந்தவர்கள் எங்கே என்று இதுவரை
தெரியவில்லை, இனியும் தெரியப்
போவதில்லை. மௌனமே பதிலாகிவிடுகிறது.
பேர்த்தியைக்
கவனமாக வளர்த்து யாருடைய கையிலாவது ஒப்படைக்க வேண்டும். அதுவரை உயிரைக் கையிலே
பிடித்துக் கொண்டு நடைபிணமாகவேனும் வாழவேண்டும். இதுதான் என்னுடைய கடைசி ஆசை.
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதால் எப்படியோ வாழ்கிறோம்.
ஏன் என்ற கேள்வி
எப்போதும் எழாவிட்டால், எல்லோரும்
ஒற்றுமையாய் அநீதியைத் தட்டிக் கேட்காவிட்டால், இது போன்ற அர்த்தமில்லாத அநியாய மரணங்கள் பெரிய
அளவில் எங்கள் மண்ணில் இன்னும் தொடரத்தான் செய்யும்!
அகிம்சை எங்கள்
வாழ்வில் பின்னிப் பிணைந்ததுதான் ஆனாலும், ஒரு இனமே அழிந்து போவதைவிட, ஒரு சிலரின்
அளப்பரிய தியாகங்கள், விலை மதிக்க
முடியாததாய் கையெடுத்துக் கும்பிடவைப்பதாய் மீண்டும் மாறிவிடலாம்!
மொழியும், மதமும்
ஒவ்வொருவருடைய தனிச் சுதந்திரம், அதை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. இதற்கெல்லாம் காலம்தான் பதில்
சொல்லும்!
(முற்றும்)
Comments
Post a Comment