Canada Naatha Veena Mantdram Annual Program - 2025
கனடா நாதவீணா மன்றத்தின் ஆண்டுவிழா – 2025
சுலோச்சனா அருண்
கனடாவில் நாதவீணா மன்றத்தின் 19 வது ஆண்டு நிறைவுவிழா சென்ற வாரம் மிகச் சிறப்பாக ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலா மன்றத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான குரு அரவிந்தன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மங்கல விளக்கேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசியப் பண் இசைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
வீணை ஆசிரியர் திருமதி குகனேஸ்வரி சத்தியமூர்த்தி கனடாவில் கடந்த 19 வருடங்களாக நாதவீணா மன்றத்தின் அதிபராக இருந்து வீணை இசையைக் கற்பித்து வருகின்றார். இவர் இசைக்கலைமணி பட்டத்தையும், வடஇலங்கை சங்கீத சபையின் ஆசிரியர் தரத்தை முடித்து சங்கீதகலாவித்தகர் பட்டத்தையும் வீணையிசையில் பெற்றவர். இவரிடம் வீணை இசை கற்ற 8 மாணவர்கள் இதுவரை கனடாவில் அரங்கேற்றம் முடித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்வில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றித் தமது திறமையை வெளிக்காட்டியிருந்தனர். மொழிக்கலப்பில்லாமல் தமிழ் பாடல்களை வீணையில் இசை மீட்டமுடியும் என்பதை ஆசிரியர் தனது மாணவர்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். அது மட்டுமல்ல, முருகனைப் போற்றும் பக்திப் பாடல்களும் இந்த நிகழ்வில் இடம் பெற்றிருந்ததால், பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்திருந்தது. வீணை ஆசிரியர் திருமதி குகனேஸ்வரி, தமிழ்மிரர் ஆசிரியர் சாள்ஸ் தேவசகாயம் ஆகியோரது உரைகள் இடம் பெற்றன. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில்,
நாத வீணா மன்றத்தின் தாரக மந்திரமாக ‘ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து.’ என்ற திருக்குறள் இருக்கின்றது. குருவான ஆசிரியரிடம் இருந்து பெற்ற கல்வி தொடர்ந்து பல தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதைத்தான் திருவள்ளுவர் இங்கே அழகாகக் குறிப்பிடுகின்றார். ஆனால், இந்த மாணவர்களில் ஒருவருமே இனி வரும் காலங்களில் ஆசிரியர்களாக மாறாவிட்டால், என்ன நடக்கும்? மிகவும் கஸ்டப்பட்டுப் பயின்ற இந்தக் கலை இவர்களுடன் முடிந்துவிடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், எனவே உங்கள் பிள்ளைகளைத் தொடர்ந்தும் இத்துறையில் ஈடுபடுவதற்கு ஆதரியுங்கள், என்னிடம் கல்வி கற்ற சில மாணவர்களை மேடையில் பார்க்கும் போது எனக்குப் பெருமையாக இருக்கிறது என்று அங்கு கூடியிருந்த பெற்றோர்களுக்கு எடுத்துரைத்தார்.
அவர் மேலும் குறிப்பிடும் போது எங்கள் பாரம்பரிய இசைக்கருவி பற்றிப் பல படல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டினார். ஆரண்ய காண்டத்தில் ‘உற்றவன் காண் தகும் நீண்ட வீணைக்கொடிப் பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்’ என்று கம்பரும், சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்திற்காக மருதகாசி ‘ஆனந்தகான அமுத மழையே பொழிந்து, மனம் தனை உருக வழி செய்த வீணைக்கொடியுடைய வேந்தனே!’ என்று இராவணனைப் பாராட்டுவதையும், 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் ‘மாசில் வீணையும்’ என்றும், ‘எம்மிறை நல்வீணை வாசிக்குமே’ என்று சம்பந்தரும் பாடியிருப்பதையும் நினைவூட்டினார். மேலும் அவர் தனதுரையில்,
‘வெள்ளைத்தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்’ என்றும் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’ என்றும் புதுமைக்கவி பாரதியார் வீணை பற்றிக் குறிப்பிட்டதையும், புரட்சிக்கவி பாரதிதாசனோ ஒருபடி மேலே சென்று. ‘துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா?’ என்று கேட்டதையும் குறிப்பிட்டார்.
முற்காலத்தில் தமிழர்கள் பாவித்த ‘செங்கோட்டி யாழே’ பின்னாளில் வீணையாக மாறியதாக ‘பாணர் கைவழி’ என்ற ஆபிரகாம் பண்டிதரின் மூன்றாவது மகனான வரகுணபாண்டியன் எழுதிய நூலில் மிக விளக்கமாக சொல்லப்பட்டிருப்பதையும் எடுத்துக் காட்டினார். சங்க இலக்கியத்தில் திருக்குறள் காலம்வரை யாழ் பற்றியே குறிப்பிடப் பட்டிருந்ததையும், அதன் பின் சிலப்பதிகாரத்தில்தான் யாழ் என்ற சொல்லுக்குப் பதிலாக வீணை என்ற சொல் பாவிக்கப்பட்டதையும், யாழ் என்பதும் வீணை என்பது அடிப்படையில் ஒரே கருவியைக் குறிப்பதாகவும், எங்கள் விபுலானந்த சுவாமிகளும் யாழ் பற்றி ஆய்வு செய்து யாழ்நூலை எழுதியிருப்பதையும், இது போன்ற நிகழ்வுகள் எங்கள் மொழியும், பண்பாடும் இந்த மண்ணில் தொடர்ந்தும் நிலைத்து நிற்க வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
இசை மற்றும் நடன ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்ட நாதவீணா மன்றத்தின் இந்த நிகழ்வை ஆசிரியை சிவலோக நாயகி கெங்கேஸ்வரராஜா மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்.




Comments
Post a Comment