The Odyssey - Movie

 


தி ஒடிஸி’ ஆங்கிலத் திரைப்படம் பார்த்த அனுபவப் பகிர்வு.

குரு அரவிந்தன்

 

 

கனடா ஒன்ராறியோவில் வோன் பகுதியில் உள்ள சினிப்ளெக்ஸ்  திரையரங்கில் ‘தி ஒடிஸி’ (The Odyssey’) முதல் நாள் முதல்காட்சி பார்ப்தற்கு எனது வாசகர் வட்ட நண்பர் ஒருவர் அழைத்திருந்ததால், அந்தப் படத்தைச் சென்று பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தக் காட்சிக்கான சீட்டுக்கள் விற்பனையாகி முடிந்திருந்தன. அவரும் கனடிய தமிழ் திரைப்படத்துறையில் அனுபவம் மிக்கவர். அவருக்காக அவர் தயாரித்த படங்களுக்குத் திரைக்கதை வசனமும் எழுதியிருக்கின்றேன். இப்படியான பிரபலமான பிரமாண்டமான படங்கள் வெளிவரும் போது சென்று பார்ப்பது வழக்கம். பொதுவாக எனக்கு நேரம் கிடைக்கும் போதுதான் படம் பார்ப்பேன், ஆனால் இம்முறை முதல் நாளே பார்க்க (17-7-2026) அவர் மூலம் சந்தர்பம் கிடைத்ததால் சென்று பார்த்தேன். பல்லின மக்களாலும் திரையரங்கம் நிறைந்து இருந்தது. படம் முடிந்தபின் அவர்களில் சிலருடன் இந்தத் திரைப்படம் பற்றி உரையாடவும் முடிந்தது.




இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்கள் பல காவியங்கள், காப்பியங்களைப் படித்திருப்பார்கள். இவற்றில் சில திரைப்படங்களாகவும் வெளிவந்திருந்ததையும் பார்த்திருப்பார்கள். வாசிப்பு அனுபவம் காட்சி மொழி அனுபவத்தைவிட முக்கியமானது என்பதையும் புரிந்து கொண்டிருப்பார்கள். மொழி மாற்றம் செய்யப்பட்ட கதை என்றால் அங்கேயும் பொதுவாகத் தளர்வுக்கு இடமுண்டு. வாசிப்பு அனுபவம் என்பது கதை ஓட்டத்தைப் பார்த்து மிகுதியை நாங்கள் கற்பனை செய்து பார்ப்பது. காட்சி மொழி என்பது நெறியாள்கை செய்பவரின் கற்பனையில் உதித்ததைக் காட்சி மொழியில் பார்ப்பது. சில நேரங்களில் நாங்கள் நினைத்ததைவிட வித்தியாசமாக இருக்கிறதே என்று பாராட்டுவோம், சில நேரங்களில் காட்சிகளில் கருத்து முரன்பாடு ஏற்படும் போது அலுத்துக் கொள்ளுவோம். ஆனால் சரியோ பிழையே ஒவ்வொருவருடைய திறமையும் கட்டாயம் பாராட்டப்பட வேண்டும். அந்த வகையில் இந்தப்படத்தின் சில சிறப்பு அம்சங்களைப் பாராட்டியே ஆகவேண்டும்.

 

திரைப்படத்துறையில் ஆர்வம் இருப்பதால், ரசிகர்களின் கருத்தையும் அவ்வப்போது கேட்டுத் தெரிந்து கொள்வேன். ஒரு திரைப்படத்தை எடுப்பது என்பது எவ்வளவு கடினமாகது என்பது இந்தத் துறை சார்ந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இத்துறையில் அனுபவமுள்ள நண்பருடன் லொஸ்ஏஞ்சலில் உள்ள வார்னர் பிறதேர்ஸ் திரைப்பட நிறுவனத்திற்குச் (டிஸ்கவரி.இங்) சென்ற போது பல விடயங்களை அங்கே அறிந்து கொள்ள முடிந்தது. படப்பிடிப்புகளைப் பார்க்கவும், அவர்கள் பயன்படுத்து நவீன கமெராக்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதனால்தான் நவீன கமெராக்களின் உதவியுடன் எடுக்கப்பட்ட இந்தப்படம் பற்றி எழுத முற்பட்டேன்.

இந்தத் திரைப்படம் ‘ஐமேக்ஸ்’ தரத்தில் (இமேஜ் மக்ஸிமம்) வெளிவந்திருக்கிறது. ‘இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரைப்பட வடிவங்களிலேயே ‘ஐமேக்ஸ்’ தரம்தான் மிகச் சிறந்தது, எந்தத் தொழில்நுட்பமும் இதுவரை இதற்கு ஈடாக இல்லை.’ என்று இந்தப் படத்தின் இயக்குனரான ஆஸ்கார் விருது பெற்ற கிறிஸ்டோபர் நோலன் குறிப்பிட்டிருந்தார். முதன் முதலாக 1970 களில் ‘ஐமேக்ஸ் கார்ப்பரேசன்’ என்ற கனடிய நிறுவனத்தால் இந்தத் தொழில் நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. ஐமேக்ஸ் வசதிகளில் சிலவற்றைக் கொண்ட திரையரங்கம் என்பதால் அதன் தரத்தை இன்று இந்தப் படத்தில் காணமுடிந்தது.

ஐமேக்ஸ் திரையரங்கிற்கும் 3டி திரையரங்கிற்கும் சில வித்தியாசங்கள் இருக்கின்றன. ஐமேக்ஸ், துல்லியமான ஒலி நிலைப்படுத்தல் மற்றும் சக்திவாய்ந்த அளவவிடக்கூடிய அமைப்பைக் கொண்ட, நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஒலி அமைப்பைப் பயன்படுத்துகிறது. வெடிப்புகள், இசை மற்றும் உரையாடல்கள் அனைத்தும் அதிக தாக்கத்தையும் ஆழ்ந்த அனுபவத்தையும் ரசிகர்களுக்குத் தருகின்றன. 3டி படம் முக்கியமாக ஆழப் பார்வையை மேம்படுத்துகிறது, இதனால் பொருள்கள் திரையில் இருந்து வெளியே வருவது போலவோ அல்லது திரைக்குள் நீண்டு வருவது போலவோ தோன்றும். இது அதிரடி, அனிமேசன் மற்றும் அறிவியல் புனைகதைத் திரைப்படங்களுக்கு மிகவும் சிறந்தது. 3டி படம் பார்க்கும் போது அணிந்து கொள்ள அதற்கான கண்ணாடியும் திரையரங்கில் தருவார்கள்.

தி ஒடிஸி’ திரைப்படம், ‘ஐமேக்ஸ் கெய்லி பிலிம் கமரா’ என்ற புதிய பதிப்பு உட்பட, முழுவதுமாக ஐமேக்ஸ் பிலிம் கமராக்களைக் கொண்டு படமாக்கப்பட்ட முதல் முழு நீளத் திரைப்படமாகும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஹோய்ட் வான் ஹோய்டெமா, ‘இந்தத் தயாரிப்பில் இந்தக் கமராவே மிக அத்தியாவசியமான உபகரணம்’ என்று குறிப்பிட்டிருந்தார். சுமார் 2.1 மில்லியன் அடி பிலிமில் படமாக்கப்பட்ட ‘தி ஒடிஸி’, என்ற இந்த திரைப்படம் கைவினைத்திறனின் ஒரு உண்மையான காவியக் கதையாகும். காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் படத்தின் பிலிமின் நீளம் ரொரன்ரோவிலிருந்து நியூயோர்க் நகரத்திற்குச் செல்லும் தூரத்தை விட நீளமானது என்று அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

பொதுவாக, ஐமேக்ஸ் கமராக்கள் அதிக சத்தம் எழுப்புபவை, பருமனானவை மற்றும் விலை உயர்ந்தவை. இந்தக் கமராக்கள் அதிக சத்தத்தை ஏற்படுத்துவதால், இந்த வடிவத்தில் உரையாடல்களைப் படமாக்குவது கடினமானது. இதனால்தான் பெரும்பாலான திரைப்படங்கள் பெரிய அதிரடிக் காட்சிகளுக்கு மட்டுமே ஐமேக்ஸ் கமராக்களைப் பயன்படுத்துகின்றன. அதனால்தான் இந்தத் திரைப்படத்தில், நோலன் சத்தத்தைக் குறைப்பதற்காக ‘பிளிம்ப்’ எனப்படும் ஒரு உறைக்குள் கேமராவை வைத்து இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டிருக்கின்றார். இன்றைய திரைப்படங்களில் நவீன தொழில் நுட்பமே முக்கிய இடம் வகிக்கின்றது.

ஹோமரின் இரு பெரும் கிரேக்க காப்பியங்களான ‘இலியட்’ மற்றும் ‘ஒடிஸி’ பற்றி அறிந்திருப்பீர்கள். இந்தப் படத்தில் வரும் சில காட்சிகள் சின்ன வயதில் மாணவப்பருவத்தில் நாங்கள் படித்த கதைகளின் காட்சிகாளாக இருந்தன. முக்கியமாக இத்தாக்காவின் அரசன் ஒடிசியசும் வீரர்களும் சைக்குளோப்ஸ் என்ற ஒரு தீவில் உள்ள பாலிபெமஸ் என்ற ஒற்றைக்கண் கொண்ட இராட்சதனின் குகைக்குள் அகப்பட்டுக் கொள்வார்கள். அவனது கண்ணைக் குருடாக்கிவிட்டு செம்மறி ஆடுகளுடன் சேர்ந்து மந்தைகள் போல அவர்கள் தப்பிப் போவார்கள். ‘முரட்டுத்தனத்தை அறிவு வெல்லும்’ என்பதை இது எடுத்துச் சொல்லும். இன்னுமொரு இடத்தில் ஒடிஸி காப்பியத்தில் வரும் பெரிய ட்ரோஜன் குதிரை ஒன்றை மரத்தில் செய்து தோல்வியடைந்த அவர்கள் அதற்குள் ஒளித்திருப்பார்கள். எதிரிப்படையினர் ஆச்சரியப்பட்டு அந்தப் பிரமாண்டமான குதிரையை அரண்மனைக்குள் இழுத்துச் செல்வார்கள். இரவு நேரத்தில் இவர்கள் வெளியே வந்து அரண்மனையைக் கைப்பற்றுவார்கள். இந்தக் கதை ஏனீட் காவியத்தில் தான் விரிவாக விவரிக்கப்பட்டிருக்கின்றது. இப்படியாக எமக்குத் தெரிந்த இது போன்ற சில குட்டிக் கதைகளும் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

ஒரு நாடக அரங்கில் கதை சொல்லியுடன் ஆரம்பித்த கதை இடைஇடையே கதை சொல்லி மூலம் காட்சிகளைக் காண்பித்தபடி நகருகின்றது. திரையரங்கின் ஒளி, ஒலி அமைப்பு முக்கியம் என்பதால், ஓரளவு அந்த வசதிகளைக் கொண்ட இந்தத் திரையரங்கில் அதை ரசிக்க முடிந்தது.

ஹோமரின் ஒடிஸியை அடிப்படையாகக் கொண்டு, இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி, படத்தை கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கின்றார். கிறிஸ்டோபர் நோலன், எம்மா தாமஸ் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கிறார்கள். லுட்விக் கோரன்சனின் இசையில் மேட் டேமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹேத்வே, ராபர்ட் பேட்டின்சன், லுபிடா நியாங்கோ, சமந்தா மார்டன், ஜெண்டாயா, சார்லிஸ் தெரான் ஆகியோர் முக்கிய பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். ஒளிப்பதிவு ஹோய்ட் வான் ஹோய்டெமாவும் படத்தொகுப்பை ஜெனிஃபர் லேமவும் ஏற்றிருக்கின்றனர்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு மொராக்கோ, கிரீஸ், இத்தாலி, ஸ்காட்லாந்து, ஐஸ்லாந்து, மேற்கு சஹாரா மற்றும் மால்டா ஆகிய இடங்களிலும், லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள யுனிவர்சல் ஸ்டுடியோஸ் வளாகத்திலும் நடைபெற்றது. சுமார் 250 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவான ‘தி ஒடிஸி’, நோலனின் திரைப்பயணத்தில் மிகவும் அதிக செலவில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஒன்றாகும்.

அதிக பணச் செலவில் எடுத்த படம் என்பதாலும், நவீன தொழில் நுட்பம் இடம் பெற்றிருப்பதாலும், ஒலி, ஒளி அமைப்புகள் திறம்பட இருந்ததாலும் படம் சிறப்பாக இருக்கின்றது. ஆனால் எடுத்த காட்சிகள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரே படத்தில் காட்ட வேண்டும் என்பதில்லை. இந்தப் படம் 173 நிமிடங்களுக்கானது. முன்பு எடுக்கப்பட்ட தமிழ்ப்படங்கள் போல சுமார் 3 மணித்தியாலங்கள் காட்சிப் படுத்தப் பெற்றது. இன்றைய காலகட்டத்தில் முன்னேறிய நாடுகளில் 3 மணித்தியாலங்களை யாரும் திரையரங்கில் செலவிட விரும்ப மாட்டார்கள். தேவையில்லாத உரையாடல்களைத் தவிர்த்து படத்தை இரண்டு மணித்தியாலமாக மாற்றியிருந்தால் இன்னும் ரசித்துப் பார்த்திருக்கலாம் என ஒரு ரசிகனாக நான் நினைக்கின்றேன். இதைத்தான் படம் பார்த்த சில ரசிகர்களும் குறிப்பிட்டார்கள். ஆனாலும் அனைவரின் கடின உழைப்பிற்கும் எனது பாராட்டுகள்.

 


Comments

Popular posts from this blog

Kankesanturai- Malini Aravinthan - Nov 2025

இரவில் தெரியும் சூரியன்